கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அகநக நட்பது நட்பு - 11

வெவ்வேறு வகுப்பிற்கு சென்றதும் நட்பு வட்டம் அதிகமாகியது. மஹிக்கு வருத்தமாக இருந்தது.ராகவ் தன்னுடன் இல்லாதது அவளுக்கு ஏதோ செய்ய, அவனுடன் இருக்கும் நேரத்தை மிகவும் எதிர்பார்த்தாள். பள்ளி முடிந்து அந்நேரத்திற்காக தினம் காத்திருந்தாள். வள வள என பேசிக்கொண்டே இருப்பாள். ராகவ் ம்ம்ம்ம் என கேட்டுக்கொண்டே இருப்பான். ஒரு முறை

" நா முக்கியமா ஒன்னு படிச்சிட்டு இருக்கேன். கொஞ்சம் அமைதியா இருக்கியா " என முகத்தில் அடித்தாற்போல் சொன்னது அவளை வருத்தியது.

" இனி பேசினேன்னா பாரு " என கூறி சென்று விட்டாள். இது வாடிக்கை ஆனது. அப்படி கூறிச்செல்வாளே தவிர , அவள்தான் முதலில் வந்து பேசுவாள். ராகவ் தன்னை நிராகரிக்கவில்லை என்று அவள் நன்கு அறிவாள். இருப்பினும் அந்த நிமிடம் அவள் மனம் வலிப்பது என்னவோ உண்மை தான். ராகவும் வயதிற்கேற்ப மனநிலை முதிர்ச்சி கொண்டிருந்தான். அவன் படித்த , படிக்கும் புத்தகம் அனைத்தும் அவனின் அறிவை பட்டை தீட்டியது. மஹியும் சரி , ராகவும் சரி தன் தனித்துவத்தை நிலைநாட்ட பெரிதும் முயற்சி செய்தனர். மஹிக்கு வரைவது , வண்ணம் தீட்டுவது , கை வினை பொருட்கள் செய்வதில் மிகுந்த ஈடுபாடு காட்டினாள். அவளது ஓவியங்களில் ஒரு உயிரோட்டம் இருப்பதாக ராகவ் அடிக்கடி கூறுவான்.

" ஓய் மஹி "

"என்னடா.."

" எப்டி டீ இப்டி வரையுர "

" எப்டி "

" அப்டியே தத்ரூபமா இருக்கு டீ " என கை கொடுப்பான். இது அடிக்கடி நடப்பது என்பது தான் என்றாலும் மஹிக்கு அப்படி ஒரு சந்தோஷம் வரும், ஒவ்வொரு முறையும் புதிதாக கேட்பது போல். அவனிடம் இந்த பாராட்டை பெற ஒவ்வொரு முறையும் புதிதாக இன்னும் அழகாக , இன்னும் ஸ்ரத்தையுடன் செய்வாள். அவன் பாராட்டியதும் கை கொடுத்துவிட்டு எப்போதும் போல் கழுத்தோடு கட்டிக்கொள்வாள். இவ்வாறு இவர்களின் நட்பு பிணைப்பை எங்காவது பார்த்து எந்த கொண்டை போட்ட ஆன்டி அங்கிளாவது


" ஐயயோ .. என்ன மா நீ. என்ன தான் இருந்தாலும் அவனும் பையன். இப்படி பண்றியே " என கேட்டுவிட்டால் , அவ்வளவு தான். அரவணைப்பதில் ஒரு பி எச் டி செய்தது போல் ஒரு லெக்சர் கொடுத்து , அந்த ஆன்டி ஐயயோ ஏன் கேட்டோம் என நினைக்கும்படி செய்துவிடுவாள். சமீபத்தில் அவ்வாறு கேட்ட ஒரு ஆன்டியிடம்

" ஆன்டி , இந்த கட்டிபிடிக்குறது பத்தி உங்களுக்கு என்ன தெரியும் "

" என்ன ..." என அதிர்ந்தார்.

" உங்களுக்கு என்ன தெரியும்னு கேட்டேன் "அவர் என்ன பதில் சொல்வதென்று முழித்தார்.

" சரி நானே சொல்றேன் "

" இப்போ உங்க ஹஸ்பண்டும் அவர் ஃப்ரெண்டும் பாத்தா என்ன செய்வாங்க "

" கை குடுத்துப்பாங்க .."

" அப்றம்...??"

" அப்றம் என்ன .. தெரியலயே "

" அவங்களும் தோளை சுத்தி கை போட்டு முதுகு இல்ல தோள்பட்டைல தட்டி குடுப்பாங்க "

" ஆமா..."

" சரி.. நீங்களும் உங்க பெஸ்ட் ஃப்ரெண்டும் பாத்துகிட்டா என்ன செய்வீங்க "

" என்ன செய்வோம் " என யோசித்தார்.

" அவங்க இடுப்ப சுத்தி நீங்களும் , உங்க இடுப்ப சுத்தி அவங்களும் கை போட்டுபீங்க.. இல்லைன்ன , இந்த புடவை எங்க வாங்கின , இந்த நகை எங்க வாங்கினன்னு மொக்கையா எதாது பேசுவீங்க "

" ஈஈஈஈ " என இளித்து வைத்தார்.

" ஹாரி பாட்டர் தெரியுமா.. அதுல ஹெர்மாயினி தெரியுமா . அவங்க பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். இந்த கழுத்த கட்டிக்குறது நண்பர்களுக்குள்ளா அன்பை பரிமாரிக்குறதுக்கு "

அவர் ஆளை விட்டால் போதும் என ஓடி விட்டார். அதை நினைத்து அவ்வப்போது ராகவும் , மஹியும் சிரித்துக்கொள்வர்.

அதே போல் ராகவின் கேமரா மோகம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. சமூக நலன் மேல் அக்கரை கொண்ட செயல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க அதற்கு தன் அறிவை வளர்த்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் , மக்களிடம் அதை சேர்பதற்கான வழியையும் தேடத்துவங்கினான்.
இப்படியே இரண்டு வருடம் உருண்டோட , இறுதி பரிட்சை முடிந்து முடிவிற்காக காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் முடிவுகள் வர, அடுத்து என்ன செய்ய போகிறோம் என்ற முடிவை இருவரும் எடுத்திருந்தனர். ரஞ்சுவும் தனது இன்டர்ன்ஷிப்பில் இருந்தாள்.
எப்போதும் போல் சில்லி சிக்கன் வாங்கிக்கொண்டு ராஜன் வீடு திரும்ப , அவருக்காக அனைவரும் காத்திருந்தனர்.


" என்ன கண்ணுங்களா . எனக்கு தா வெய்ட்டிங்கா "

" ஆமா பா. "

" இந்தாங்க .." என முகம் கழுவி வர சென்றார். திரும்பி வந்ததும்

" அப்பா .." - ரஞ்சு

" சொல்லு ரஞ்சு "

" அடுத்த வருஷத்தோட இன்டர்ன்ஷிப் முடியுதுப்பா "

" ரொம்ப நல்லது கண்ணு. வருஷம் ஓடினதே தெரீல "

" ஆமா பா. நா மேல படிக்கலான்னு இருக்கேன் "

" படி மா.. எவ்ளோ வேணுமோ படி "

" தேங்க்ஸ் பா "

" பா.." - ராகவ்

" சொல்லு ராகவ் . நீ என்ன படிக்கற "

" ஜர்னலிஸம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன். மூணு வருஷம் பா . அதான் பண்ணலாம்னு இருக்கேன் "

" ரொம்ப நல்லது பா.. மஹியிடம் திரும்பியவர், நீ என்ன பண்ற மஹி "

" நா பி.ஏ. ஃபைன் ஆர்ட்ஸ் பண்ண முடிவு பண்ணிருக்கேன் " என சிரித்தாள்.

" சூப்பர் மஹி. உனக்கு எது பிடிக்குமோ அதே செலெக்ட் பண்ணிருக்க. வெரி குட் "

ராஜனுக்கு ரஞ்சு , ராகவை விட மஹி தான் செல்லப்பிள்ளை. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வார். அவளுக்கு எந்த நேரத்திலும் வேறுபாடு காட்டக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தது பின்னாளில் அது ஊறிப்போனது.

இப்படியாக அவரவர் தேர்ந்தெடுத்த பிரிவுகளை மிக ஆசையாக படிப்பை தொடங்கினர். இருவரும் அந்த அரசு கலைக்கல்லூரியில் நுழைய , வாழ்க்கை பல மாற்றங்களை கொண்டு வந்தது. மஹிக்கு புதிய நண்பர்கள் குழு கிடைத்தது. ராகவிற்கும், அதோடு சேர்த்து சிகரெட், மது போன்ற பழக்கங்களும் வந்து சேர்ந்தன. இன்னிலையில் ஒரு வருடம் முடிந்து , இரண்டாம் வருட ஆரம்பத்தில் மஹி ஒரு போட்டிக்கு தன் ஓவியத்தை அனுப்ப , ராகவிடம் அதை படம் பிடித்து தரச்சொல்லி கேட்க அவனறைக்கு வர ,அவளுக்கு இது தெரியவந்தது. அதை கேட்க பெரும் சண்டையாகி போனது. ஓவியத்தை அங்கேயே வைத்துவிட்டு அழுதபடி தனதறைக்கு சென்றுவிட்டாள் மஹி.

நான்கு நாள் இதே பனிப்போரில் கரைய, மஹியால் அதற்கு மேல் தாக்கு பிடிக்கமுடியபில்லை. கல்லூரி முடிந்ததும் இன்று பேசிவிட வேண்டும் என நினைத்தவள், பாட வேளை முடிந்ததும், ராகவை பார்க்க ஓட , நடுவே பலர் வர கால் தடுக்கி, புதிதாய் பூசப்பட்ட சுவரை உடைத்துக்கொண்டு மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்தாள் "ராகவ் " என கத்தியபடி..


( வளரும்...)
 
Top