கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தீராநதி 28

Jeyalakshmi Karthik

Moderator
Staff member
பவளப்பாறைகள் செழிக்க சுத்தமான நீர் தேவை. குப்பை முதல் கழிவு எண்ணெய் வரை, மாசுபாடு உலகெங்கிலும் உள்ள திட்டுகளை சேதப்படுத்துகிறது. உள்நாட்டிலுள்ள மனித நடவடிக்கைகளின் காரணமாக அவை ஆறுகள் மூலமாக கடலில் கலப்பதோடு, கடற்கரையை ஒட்டி இருக்கும் ஹோட்டல்கள் ரிசார்ட்கள் என்று அவர்கள் செய்யும் மாசுபாடும் கடலோர பாறைத் திட்டுக்களை சேதப்படுத்துகிறது.

- நதியின் குறிப்பேட்டிலிருந்து

தேடல் 28

"இப்போ நான் சொல்றதை கேட்க போறியா இல்லையா வருண். ப்ளீஸ் வண்டியை நிறுத்து." என்று உச்சப்பட்சமாக நதியா கோபம் கொள்ள,

ஓ.எம்.ஆர் சர்வீஸ் ரோடில் ஜாகுவார் சத்தமின்றி ஓரமாய் நின்றது.

"இப்போ எதுக்கு நீ இவ்ளோ கோபப்படுற ரெயின்?" என்று பின்னிருகையில் இருந்து அவன் தோளில் கரம் பதித்தாள்.

சட்டென்று அவள் கரத்தைத் தட்டி விட்டவன், "உனக்கு நான் எப்படி டி சொல்லி புரிய வைப்பேன்? என் மாமா வாழ்க்கையை அவரே கலைச்சு விட்டுட்டு அவரே என் அம்மாவோட சேர்ந்து மாமாவுக்கு பொண்ணு தேடினார் தெரியுமா? இதெல்லாம் பச்சை துரோகம் டி." என்று முகத்தை ஸ்டியரிங்கில் கவிழ்த்திக்கொண்டான்.

அவனை ஆதரவாக தட்டிக்கொடுத்தான் தீரேந்திரன்.

"என்ன செய்யறது வரு கண்ணா. அவருக்கு என் மேல என்ன கோபமோ?" என்று பெருமூச்சு விட்ட மாமாவை முறைத்தவன்,

"இன்னும் அந்த ஆளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்கீங்க மாமா நீங்க. இந்நேரம் மீனு தலையை வெட்டுறது போல அவரை வெட்டிப் போட்டிருக்க வேண்டாமா?" என்று ஆத்திர மிகுதியில் அவன் கத்த,

"ஏய் ரெயின் என்ன பேசுற? அவர் உன் அப்பா டா." என்று அவன் தோளில் பலமாக அடித்தாள் நதியா.

"என்ன டி அப்பா. அப்பான்னா வெறும் உறவு இல்ல டி. அது ஒரு உணர்வு. என் அப்பாவுக்கு நான் ஒரு சோசியல் ஸ்டேட்டஸ் எலெமெண்ட் அவ்ளோ தான். ஊருக்குள்ள நானும் ஆம்பளை தான்னு சொல்லிக்க நான் ஒரு ஐடென்டிட்டி. என்னை வளர்த்தது முழுக்க முழுக்க என் மாமா டி. ஒரு அப்பாவா எனக்கு டீனேஜ்ல வர்ற ஒவ்வொரு விஷயத்தையும் முகம் சுளிக்காமல் சொல்லிக்கொடுத்து அவர் தான். நீ சொல்ற என் சோ கால்ட் அப்பா இல்ல. எனக்கு உடம்பு சரி இல்லன்னா டாக்டர் கிட்ட போக சொல்லிட்டு அவர் கிளம்பி போய்டுவார், எனக்கு உடம்பு சரி இல்லன்னு அதுக்கப்பறம் அவர் நினைப்புக்குக் கூட வராது. ஆனா மாமா தான் ராத்திரியெல்லாம் முழிச்சு பார்த்துக்குவார். அம்மா அப்பப்போ வந்து எட்டிப் பார்க்கறதோட சரி. அம்மா கூட இருன்னு கேட்டா, மாமா இருக்கான்ல.. பார்த்துப்பான். நான் அப்பாவை ஆபிஸ் அனுப்பிட்டு வர்றேன்னு சொல்லுவாங்க. எனக்கு எல்லாமே மாமாவும் பியூட்டியும் தான். இப்போ சொல்லு டி. நீ சொல்ற என் அப்பாவை நான் எப்படி சும்மா விடுவேன்னு நினைக்கிற?" என்று அவன் கேட்டதற்கு பதில் நதியாவிடன் இல்லை.

"பதில் சொல்ல முடியல தானே. அப்போ பேசாம வந்து வேடிக்கையை மட்டும் பாரு. இன்னிக்கு இருக்கு அந்த ஆளுக்கு." என்று அவன் கர்ஜிக்க,

"கண்ணா அவரசப்படாத டா. பார்த்துக்கலாம்" என்று தீரேந்திரன் சொன்னான்.

"மாமா அன்னைக்கு கம்பெனியை அவர் கிட்ட இருந்து வாங்கினதுக்கே என்னவோ உன்னை என்ன பண்றேன் பாருன்னு தனியா பேசிட்டு இருந்தார் மாமா. உன்னை அத்தை கிட்ட இருந்து பிரிச்சு, அவங்க பேச முயற்சி பண்ணின போதெல்லாம் தடுத்து, வந்து விசாரிக்கும்போதும் பொய் சொல்லி, இத்தனை வருஷமா நீங்க உங்க மனைவியை தேடித்தான் போறீங்கன்னு தெரிஞ்சும், உங்களை கண்காணிக்க ஆள் வச்சு, இவ்ளோ செஞ்ச அவரை இன்னுமே சும்மா விடணுமா? இன்னிக்கு நான் ரெண்டுல ஒன்னு பார்க்காம ஓயமாட்டேன்" என்று வண்டியை ஸ்டார்ட் செய்யப் போனான்.

"நீ சொல்றதெல்லாம் சரி. ஆனா இதெல்லாம் பாட்டி முன்னாடி பேசினா பாட்டியோட உடம்பு என்ன ஆகும்? தன்னோட மாப்பிள்ளையே தன் மகன் வாழ்க்கையை கெடுத்துட்டார்னு தெரிஞ்சா.. ஏற்கனவே உடம்பு முடியாதவங்க ரெயின். நாம அவங்களையும் கணக்குல வைக்கணும். நம்ம கோபம் மட்டுமே இங்க முக்கியம் இல்ல. உன் அப்பாவையும் சும்மா விடக்கூடாது. அதே நேரம் பாட்டிக்கும் அவரோட தில்லாலங்கடி வேலை தெரியக் கூடாது. யோசி ரெயின். இத்தனை நாள் பேமிலின்னு ஒரு ஸ்ட்ரக்ச்சர்ல இருந்ததே இல்ல. இனியாவது இருக்கணும். இதே மாமா தன்னோட தப்பை உணர்ந்து அப்பாகிட்ட மன்னிப்பு கேட்டுட்டா, எனக்கு முழுசா ஒரு குடும்பம் கிடைக்கும் டா. அதை விட்டு அவரோட மல்லுகட்டி என்ன ஆகப்போகுது? பாட்டிக்கு உடம்பு சரி இல்லாம போகும், அத்தைக்கு குற்றவுணர்வு வரும், நீ இறுக்கமா இருப்ப.. நானும் தீராவும் என்ன பண்றது?" என்று கண்ணீரோடு கேட்டவளை அதிர்ச்சியும் அதே நேரம் யோசனையுமாகக் கண்டான் வருணேஷ்.

"நீ சொல்றது புரியுது டி. ஆனா அவரெல்லாம் திருந்தற ஜென்மமா? அவரை என்னால டாலரேட் பண்ணவே முடியாது டி" என்று தான் கோபத்தை ஸ்டியரிங்கில் அடித்துக் காட்டினான்.

"அவசரப்படாத டா ரெயின். அவரை திருத்தியே தான் ஆகணும்ன்னு எந்த கட்டாயமும் இல்ல. பாட்டிக்கும் அத்தைக்கும் அவரைப் பத்தி தெரியக்கூடாது. ஆனா அவரோட குடுமி நம்ம கையில் இருக்கணும். அதாவது நம்ம கட்டுப்பாட்டுக்கு அவரை எப்படி கொண்டு வர்றதுன்னு பாரு" என்று பொறுமையாகக் கூறினாள்.

அதுவரை இளையவர்கள் பேச்சை மௌனமாகக் கேட்ட தீரேந்திரன். "அவருக்கு நம்ம குடும்பத் தொழில் மேல ரொம்ப இஷ்டம். அது தெரிஞ்சு தான் அன்னைக்கு நான் எல்லாத்தையும் அவர் கிட்ட இருந்து பிடுங்கி வச்சேன்." என்று நெற்றியை கீறிக்கொண்டே தீரன் சொல்ல,

"வாவ் தீரா செம ஐடியா. அவரை எதாவது சொல்லி மடக்கலாம். அதுக்கு விலை அந்த பிசினஸ். ஆனா அவரை நம்பி கொடுக்கலாமான்னு நீங்க தான் முடிவு பண்ணனும்." என்று சுருதி இறங்கிச் சொன்னவளை ஆதுரமாகப் பார்த்தவன், "உன்னை விட எனக்கு எதுவுமே பெரிசில்ல டா கண்ணம்மா. அவர் நம்ம வாழ்க்கையை தொந்தரவு பண்ண மாட்டார்னா, அந்த தொழிலை அப்படியே அவர் கிட்ட கொடுக்க எனக்கு ஓகே தான்." என்று வேகமாகக் கூறினான்.

"என்ன விளையாடுறீங்களா மாமா? அந்த ஆளுக்கு இனி பத்து பைசா கூட கொடுக்கக் கூடாது. பார்க்கும் போது கொடுக்கறா மாதிரி இருக்கணும் ஆனா சல்லிப் பைசா அவருக்கு போகக்கூடாது." என்று காய்ந்தான் வருணேஷ்.

"சரி அதை அப்பறமா யோசிக்கலாம். இப்போ வீட்டுக்குப் போய் அம்மா கிட்ட கல்பனா கிட்ட நதியை பத்தி சொல்லலாம்" என்று தீரேந்திரன் படபடத்தான்.

"மாமா அங்க நான் அந்த ஆளைப் பார்த்தா கண்டிப்பா கத்திடுவேன்" என்று கண்களை இறுக மூடிக்கொண்டான் வருண்.

"என்ன தீரா இவனோட ஒரே ரோதனையா இருக்கு. என்ன தான் பண்றது?" என்று நதியா புரியாமல் கேட்டபடி அவன் தோள்களில் தஞ்சமானாள்.

சற்று நேரம் அந்த காரில் நிசப்தம் மட்டுமே நிலவியது. அதை உடைத்தான் தீரேந்திரன்.

"பேசாம அவரை நம்ம ஹார்பர் பக்கத்துல உள்ள கம்பெனிக்கு வர சொல்லி முதல்ல பேசிடலாம். டீல் முடிஞ்சா கண்டிப்பா எல்லாமே சரியா நடக்கும்" என்று சொல்லி அவனே அறிவுடைநம்பிக்கு கால் செய்தான்.

போனை எடுத்தும் அமைதியாக இருந்தவரிடம், "ஹார்பர் ஆபிசுக்கு வாங்க கொஞ்சம் பேசணும்." என்று தீரேந்திரன் சொல்ல,

"எனக்கும் உன்கூட கொஞ்சம் பேசணும்" என்று சொன்னார் அறிவுடைநம்பி.

"ம்ம் வாங்க" என்று வைத்தவன், "அவரும் ஏதோ பேசணும்ன்னு சொல்றாரு. நீங்க கார்லயே இருங்க. நான் போய் பேசிட்டு வர்றேன்." என்றதும் நதியாவும், வருணும் சேர்ந்தே அவனை முறைத்தனர்.

சட்டென்று சிரித்துவிட்ட தீரேந்திரன் "டேய் அப்படியெல்லாம் அவரை சும்மா விட்டுட்ட மாட்டேன் டா. நம்புங்க. என் வாழ்க்கையை தான் அவர் கெடுத்திருக்கார். சும்மா விடுவேனா? உங்களை விட எனக்கு கோபம் இருக்கும்ல?" என்று கேட்டு புருவம் உயர்த்திய தீரேந்திரன் கண் குளிர்க்கண்ணாடியை எடுத்து கண்களில் பொருத்திக்கொண்டு," வரு கண்ணா வண்டியை ஹார்பர் ஆபிசுக்கு விடு" என்றதும் வருண் அவன் சொன்ன தொணிக்கு சிரித்துவிட்டான்.

சலுகையாய் தீரன் தோளில் சாய்ந்த நதி, "உங்களுக்கு கோபம் எல்லாம் வருமா அப்பா?" என்று அவன் கன்னத்தில் உரச, அவன் கண்ணீரே அவள் தலையை நனைத்தது.

"அப்பா.. என்னாச்சு.. ஏன்.. ஏன்.. அழறீங்க?" என்று பதறியவள் கரம் பற்றி,

"இன்னொரு தரம் கூப்பிடு கண்ணம்மா" என்று கேட்டதும் அப்போது தான் அவரை "அப்பா" என்று அழைத்தது நினைவுக்கு வந்தது. அவளும் கண்ணீரோடு அப்பா என்று அழைக்க,

"அட இதென்ன அப்பாவும் பொண்ணும் லேட் ரியாக்ஷனா இருக்கீங்க?" என்று நிலையை சரி செய்யப் பேசினான் வருணேஷ்.

வண்டியை விட்டு தீரேந்திரன் மட்டும் இறங்கிக்கொள்ள, முன் இருக்கைக்கு தாவினாள் நதியா.

"அட மியாமி குரங்கே" என்று கிண்டல் செய்தான் வருண் அதைக் காதில் வாங்காதவள், "பக்கத்துல பீச் இருக்குல்ல அங்க போ டா" என்று தலை சாய்த்து அமர்ந்தாள்.

திடீரென்று தெரிந்த அவளின் ஓய்ந்த தோற்றம் வருணேஷை தாக்கியது. வண்டியை ஓரமாக நிறுத்தியவன், "ஏய் பொன்வண்டு என்ன டி ஆச்சு உனக்கு? ஏன் திடீர்னு டல்லா ஆயிட்ட?" என்று வலது கரத்தைப் பற்றவும்,

"நான் இவ்ளோ பேசியதே இல்ல ரெயின், ரொம்ப அமைதியா நான் உண்டு என வேலை உண்டுனு இருப்பேன். அம்மா கூட அதிகம் பேச மாட்டாங்க. ஆனா தீராவை பார்த்த பின்னாடி மனசுல அடைச்சு வச்சிருந்த எல்லாத்தையும் தீரா கிட்ட கொட்டணும் போல தோணுது. ஆனா அதுக்குள்ள எவ்ளோ பிரச்சனை, குழப்பம்." என்றவள்,

"ப்ளீஸ் ரெயின் வண்டியை பீச்சுக்கு விடு, எனக்கு இங்க மூச்சு முட்டுறது போல இருக்கு. கடல் தான் அம்மா மாதிரி இதமா இருக்கும்" என்று மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.

அவள் வலியும் நிலையும் புரிந்தவனாக காரை கடற்கரை நோக்கி செலுத்தினான்.

தன் அக்கா கணவரின் வருகைக்காக கேபினில் அமர்ந்து காத்திருந்தான் தீரேந்திரன். மனதை எவ்வளவோ ஒருநிலைப்படுத்த முயன்றும் அது முரண்டிக்கொண்டே இருந்தது.

கை முஷ்டி இறுக நம்பியின் வருகைக்காக வாசலை வெறித்திருந்தான். அவர் சாவகாசாக நடந்து வருவதைப் பார்த்ததும் அவனுள் சற்றே தணிந்திருந்த கோபம் மீண்டும் ஜ்வாலை கொண்டது.

கதவை அலட்சியமாக திறந்து உள்ளே வந்து அமர்ந்தார் நம்பி, அவரைக் கண்டதும் உடல் முழுவதும் அனலாய் தகித்தது தீரேந்திரனுக்கு. ஆனால் மகளின் வார்த்தைகளை மனதில் வைத்து அமைதி காத்தார். எந்த சூழ்நிலையிலும் இவரை மன்னிக்க தயாராக இருப்பதோ, வீட்டுக்குத் தெரியாமல் காக்க நினைப்பதோ அவருக்கு தெரிந்து விடக்கூடாது. ஏனென்றால் அதை துருப்புச் சீட்டாக்கி விளையாடுவார் என்று உணர்ந்தவனாக எழுந்து வேட்டியை மடித்துக் கட்டினான்.

அவனை ஏற இறங்கப் பார்த்த நம்பி, "என்ன உன் பொண்ணு எல்லாத்தையும் சொல்லிட்டாளா? வேட்டியை மடிச்சுக் கட்டுறதைப் பார்த்தா அடி வெளுத்துடுவ போல இருக்கு" என்று பயந்தவர் போல நக்கலாக பேசினார்.

"நான் ஏன் மாமா உங்களை அடிக்கப் போறேன்?" என்று பல்லைக் கடித்துக் கொண்டு சிரித்தான் தீரேந்திரன்.

"ஆமா என்னவோ பேசணும்னு சொன்னிங்களே என்ன மாமா?" என்று தான் அழைத்த அவரிடம் முதலில் என்ன விஷயம் என்று வினவினான்.

"இங்க பாரு இந்திரா, இந்த பிசினஸ் உங்க அப்பா ஆரம்பிச்சதா இருக்கலாம். இந்த கம்பெனி நீ தொடங்கினதா இருக்கலாம். ஆனா பதினஞ்சு வருஷம் நான் உழைச்சிருக்கேன். அந்த கப்பல் முழுக்க முழுக்க என் ஐடியா. எல்லாம் ஒரே குடும்பம் தானேன்னு நம்பி தான் அதைக்கூட இந்த கம்பெனி பேர்ல தொழிலா தொடங்கினேன். ஆனா கப்பல் மட்டும் என் பேர்ல தான் வாங்கினேன். இப்போ அது கரைக்கு வர்ற நாள் ஆச்சு. இந்த ஒருமுறை வர்ற எல்லாத்தையும் இங்கேயே செஞ்சுக்கறேன். மத்தபடி இனிமே கப்பலை வச்சு நானே பிசினஸ் பண்ணிக்கிறேன். இன்னொரு முக்கியமான விஷயம் தனியா போகவெல்லாம் முடியாது. உன் பொண்ணு வேணா போனா போகுதுன்னு இங்கேயே இருக்கட்டும்" என்று பெரிய மனம் படைத்தவராகச் சொல்ல, வந்த எரிச்சலை அடக்க வழி தெரியாது ஓங்கி மேஜையில் குத்தினான்.

இவர்கள் பேச ஆரம்பிக்கும் போதே செல்போன் மூலமாக அந்த பக்கம் அவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த வருண், நதி எவ்வளவு தடுத்தும் கேட்காமல் கிளம்பி வந்து விட்டான்.

"யோவ் நீயெல்லாம் என்னய்யா மனுஷன்? அவர் வாழ்க்கையை கெடுத்துட்டு, அவர் மகளை அவர் வீட்டுல தங்கறதுக்கு நீ யாரு யா அனுமதி கொடுக்க, அவர் பொறுமையா போனா நீ ஏறி மிதிப்பியா?" என்று கூச்சலிட ஆரம்பித்தான்.

நதியா பின்னொடு வந்து,"டேய் ரெயின் பேசாம இரு டா. அப்பா பார்த்துப்பார்" என்று இழுத்தவள்,

"ஆயிரம் இருந்தாலும் அவருக்கு இங்க ஒரு குடும்பம் இருக்குன்னு கடைசி வரை என் அம்மாவை நம்ப வச்சுட்டிங்க இல்லையா? "என்று கசப்பாய் உரைத்தவளிடம்,

"நானென்ன பொய்யா சொன்னேன். நாங்கெல்லாம் அவன் குடும்பம் தானே? அப்ப அவனுக்கு இங்க ஒரு குடும்பம் இருக்கு தானே. அதை தான் நான் சொன்னேன். உன் அம்மா அதை வேற மாதிரி புரிஞ்சுகிட்டா அதுக்கு நான் என்ன செய்வேன்? போயும் போயும் ஒரு மீனவ குப்பத்து பொண்ணு எங்க வீட்டு மருமகளா?" என்று கடுகடுத்தார்.

"ஓ.. என் அத்தை மீனவப் பொண்ணுன்னா, ஐயா யாரு அர்னால்டுக்கு அக்கா பையனா? இல்ல அரண்மனையில் பிறந்து வளர்ந்த ராஜ பரம்பரையா? ஏதோ என் தாத்தா போனா போகுதுன்னு என் அம்மாவை கல்யாணம் பண்ணி கொடுத்தார். அதை மறந்துட்டு பேச்சைப் பாரு." என்று நக்கலாக ஆரம்பித்து கடித்துக் குதறினான் வருண்.

"டேய் உன் அப்பா டா அவரு. அமைதியா இரு" என்று அவனை இழுத்துக்கொண்டு நதியா வெளியேற, அவர்கள் நெருக்கத்தை புருவ முடிச்சுடன் ஏறிட்டார் அறிவுடைநம்பி.

மீண்டும் உள்ளே வந்த நதியா தீரேந்திரன் அருகில் சென்று ஏதோ சொல்லியவள், நம்பி என்று ஒரு மனிதன் அங்கே இருப்பதை சட்டையும் செய்யாமல் வெளியேறினாள்.

இவ்வளவு நேரம் முகத்தில் இருந்த கலக்கமும் குழப்பமும் விலக, தீரேந்திரன் தொண்டையை செருமி நம்பியுடன் பேச, அவன் பேசியதைக் கேட்ட நம்பி, "நோ" என்ற அலறலுடன் எழுந்து கொண்டார்.

நதி பாயும்..

 
Top