கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தீராநதி 29

Jeyalakshmi Karthik

Moderator
Staff member
ஸ்கிவிட்( squid) என்றும் தமிழில் கணவாய் என்றும் அழைக்கப்படும் இது மெல்லிய உடலமைப்பைக் கொண்டது. இவை கடல் உணவில் முக்கிய உணவு வகையாகக் கருதப்படுகிறது. கணவாய் மீன்களை கடல்வாழ் பச்சோந்தி என்று அழைக்கிறார்கள். அதற்கான காரணம் இவை எதிரிகளிடம் இருந்து தப்பிக்க தங்கள் உடல் மீதுள்ள புள்ளி மற்றும் வடிவங்களை கடல்சுற்றுப்புறத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளும். கணவாய்களை அதன் எதிரிகள் துரத்தும் போது அது தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நிறம் கொண்ட திரவத்தினை பீய்ச்சி அடிக்கிறது. பெரிய கணவாய் கருப்பு நிற திரவத்தயும், ஊசிக் கணவாய் நீல நிற திரவத்தயும். மற்றவை பழுப்பு நிற திரவத்தயும் பீய்ச்சி தப்பித்து செல்கிறது.

- தீராவின் தகவல் பலகையில்

தேடல் 29

"என்ன? எதுக்கு கத்துறீங்க? நான் இப்போ என்ன கேட்டுட்டேன்.. உங்க கப்பலை தானே? அதுக்கு ஏன் இப்படி கத்தனும்? என் வாழ்க்கையை காலி பண்ணினதுக்கு நான் கூட இவ்ளோ கத்தலை மாமா. அப்படி என்ன இருக்கு அந்த கப்பல்ல?" என்று புருவம் உயர்த்தி தன் சூழல் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கேட்ட அவனை எரிக்கும் பார்வை பார்த்தார் அறிவுடைநம்பி.

"என்ன விளையாடுறியா இந்திரா அந்த கப்பல் என்னோட உழைப்பு, என் கனவு." என்று கத்தியவரை கை நீட்டித் தடுத்தவன்,

"நிறுத்துங்க நிறுத்துங்க. மாமா, நீங்க விளையாடுனது என் வாழ்க்கையில, நான் கேக்குறது வெறும் கப்பல் மட்டும் தானே. இப்போ நான் என்ன கப்பல் எனக்கே வேணும்ன்னா கேட்டேன். பத்து நாள் வேணும். அதே போல நீங்க இனி ஒழுங்கா இருக்கணும். இந்த திமிரெல்லாம் காட்டக் கூடாது. அவ்ளோ தான். நான் சொல்றவரை அமைதியா இருந்தா இதோ இந்த கம்பெனி பழையபடி உங்க கைக்கு வரும்" என்று நிதானமாக சொல்லி கைகளை மடக்கி தலைக்கு அணைவாக வைத்தபடி தன் சூழல் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கண் மூடினான்.

"இப்போ முடிவா நீ என்ன சொல்ற? நான் கப்பலை கொடுத்தா நீ கம்பெனியை தருவியா?" என்று அவருக்கு ஏற்றவாறு பேசினார்.

"மாமா, நான் என் பொண்ணு சொன்ன ஒரு வார்த்தைக்காகப் பொறுமையா பேசுறேன். என் உத்ராவை என்னை விட்டு பிரிச்சதுக்கே நான் உங்களை பிரிச்சு போட்டிருக்கணும்." என்று எச்சரிக்க,

"ஹாஹா.. போட வேண்டியது தானே டா எதுக்கு கூப்பிட்டு டீல் பேசிட்டு இருக்க?" என்றதும்,

"மாமா உங்க கிட்ட பொறுமையா பேசுனதும் தப்பா நினைச்சுட்டீங்க பார்த்தீங்களா? உங்க நல்லவன் வேஷத்தைக் கலைக்க ஒரு நிமிஷம் ஆகுமா? இருங்க என் அக்கா கிட்ட நீங்க செஞ்சதெல்லாம் சொல்லிடுறேன். அவளுக்கு என் மேல நிஜமாவே நிறைய பாசம் இருக்கு. நான் சொன்னா உங்களை வெளில போய்யான்னு சொல்லிடுவா.. பரவால்லயா?" என்று தன் செல்போனை எடுத்தவன் கல்பனாவுக்கு அழைத்து ஸ்பீக்கரில் போட்டான்.

அவள் எடுத்ததும், "அக்கா உனக்கு என்னை பிடிக்குமா?" என்று ஓரக்கண்ணால் மாமனைப் பார்க்க, அவர் பெருமிதமாக தன் மனைவி தன்னை விட்டுத்தர மாட்டாள் என்று நினைத்தார்.

"இதென்ன இந்திரா கேள்வி. நீ என் தம்பி டா. உன்னை பிடிக்காம போகுமா?" என்று கேட்டுவிட்டு "இப்போ எதுக்கு இது?" என்றாள்.

"அக்கா எனக்கு கல்யாணம் ஆய்டுச்சுன்னு சொன்னா என்ன பண்ணுவ? " என்று அமைதியாக தீரேந்திரன் கேட்டதும்,

"சந்தோசம் தாண்டா படுவேன். எவ்ளோ வருஷமா காத்திருக்கேன்" என்று அங்கலாய்ப்பாக அவள் சொன்னதும்,

"எனக்கு வளர்ந்த பொண்ணு ஒன்னு இருக்குன்னு சொன்னா?" என்றான்.

"இந்திரா நீ விளையாயாடுறியா இல்ல நிஜமா?" என்று அவள் குரலில் பதட்டத்தை ஏற்றிக்கொண்டு பேச,

"என் வாழ்க்கையை யாருக்கும் தெரியப்படுத்த முடியாத அளவுக்கு ஒருத்தர் கலைச்சு விட்டுட்டார்ன்னு சொன்னா என்ன பண்ணுவ அக்கா?" என்று கேட்ட நொடி பொரிந்து தள்ளி விட்டாள் கல்பனா,

"யாரு டா அந்த வீணா போனவன்? உன் வாழ்க்கையை கெடுத்து அவன் என்ன கோட்டையா கட்டப்போறான்? வர்ற கடுப்புக்கு என்ன செய்வேன்னு தெரியல இந்திரா. நீ நிஜமா தான் சொல்றியா டா? விளையாட்டுக்கு இல்லையே. உனக்கு பொண்ணு இருக்கா இந்திரா? உன் மனைவி எங்க டா?" என்று கேட்கும்போதே கல்பனா உடைந்து அழ ஆரம்பித்தாள்.

"அவ... அவ இல்ல அக்கா. நான் சொன்னேன்ல ஒரு ஆள் என் வாழ்க்கையை கலைச்சான்னு அவன் பண்ணுன வேலையால அவ மனசு வெறுத்து, என்னை மறக்க முடியாம, கொஞ்சம் கொஞ்சமா வருந்தி கடைசில இறந்து போயிட்டா அக்கா." என்று சொல்லும்போது இந்திரனுமே அழுது விட, இது அறிவுடைநம்பிக்குமே புதிய செய்தி. அவர் ஏதோ அவளைத் துரத்தி விட்டால் அவள் போய் விடுவாள், சொத்து உள்ள பெண்ணைக் கட்டி வைத்தால் அவன் பெண் வீட்டுச் சொத்துக்குப் போய் விடுவான், இங்குள்ள சொத்தை தான் அனுபவிக்கலாம் என்று ஆரம்பத்தில் நினைத்தார்.

ஆனால் அவள் தொடர்ந்து தொடர்புகொள்ள முயன்றதும் அவரே முன்னின்று முற்றிலும் அவளைக் கலைத்துவிட்டார். அவரே நினைக்காமல் நடந்தது என்றால் அது தீரேந்திரனின் திருமண மறுதலிப்பு. அதிலும் அவருக்கு நன்மையே அதிகமானது. மொத்த சொத்தும் அவருக்கும் மகனுக்கும் என்றதும் பெரும் மகிழ்ச்சியில் இருந்தார்.

இப்படி திடீரென்று தீரேந்திரன் மகள் வந்து நிற்பாள் என்றோ அவனும் மகளைக் கண்டு பிடிப்பான் என்றோ அவர் நினைக்கவில்லை. தன் சிந்தனையை விடுத்து மனைவியின் பதிலை கவனிக்க ஆரம்பித்தார்.

"என்ன டா சொல்ற? நீ வாழறத பாக்கற பாக்கியமே எங்களுக்கு இல்லையா டா?" என்று அழுதாள்.

"ஏன் அக்கா எனக்கு இப்படியெல்லாம் நடக்க காரணமானவரை உன் முன்னாடி நிறுத்தினா நீ என்ன பண்ணுவ?" என்று பேச்சு அங்கு இருந்தாலும் கண்கள் முழுவதும் அறிவுடைநம்பி மேலே இருக்க, அவளோ ஆங்காரம் கொண்டு,

"கையில கிடைச்சா வெட்டிப் போட்டுடுவேன் இந்திரா." என்று சொல்ல நம்பி ஸ்தம்பித்தார்.

"அது யாரா இருந்தாலுமா அக்கா?" என்று கேள்வி எழுப்ப, "அது நம்ம அப்பா அம்மா ன்னு யாரா இருந்தாலும் அதே தான் இந்திரா" என்று இன்னும் உணர்ச்சியின் பிடியில் இருந்தாள் கல்பனா.

"அது உன் கணவரா இருந்தா?" என்ற கேள்வியோடு அழைப்பைத் துண்டித்தான் தீரேந்திரன்.

இதை முற்றிலும் எதிர்பார்க்காதவர் "என்ன டா செஞ்சு வச்சிருக்க, அவ அவ்ளோ கோபமா பேசும்போது நீ இப்படி சொல்லிட்ட ?"என்று அவர் தீரேந்திரனிடம் படப்படத்தார்.

அதற்குள் அறிவுடைநம்பி போனுக்கு கல்பனா அழைத்துவிட, "டேய் அவ எனக்கு கூப்பிடுறா டா" என்று அவர் பதறினார்.

அவர் பதற்றத்தை ரசித்த தீரேந்திரன், "என்ன என்ன மாமா.. பயமா? எதுக்கு? நீங்க என்ன பொய்யா சொன்னிங்க? இங்க இருந்ததும் என் குடும்பம் தான? இந்த பதிலை தானே என் பொண்ணு கிட்ட சொன்னிங்க? அதையே உங்க மனைவி கிட்ட சொல்லுங்க. என்ன வலிக்கிதா? உங்களுக்கு மட்டும் வாழ்க்கைன்னா வெல்லம், எனக்கு என் வாழ்க்கை களிமண்ணா? என்ன ஒரு ஓரவஞ்சனை!" என்று எகத்தாளமாகக் கேட்டான்.

"ஐயோ இந்திரா நான் இப்படியெல்லாம் நடக்கும்ன்னு நினைக்கல." என்று சமாளிக்க,

"எப்படி பதினேழு வருஷத்துக்கு அப்பறமும் என்னை பாலோ பண்ண ஆள் போட்ட உங்களுக்கு இப்படியெல்லாம் நடக்கும்ன்னு தெரியாதா? எவனாவது ஏமாந்தவன் இருப்பான் அங்க சொல்லுங்க" என்று காலாட்டிக்கொண்டு அமர்ந்தான்.

அதற்குள் கல்பனா இம்முறை அழைத்துவிட்டு, வாட்ஸாப் வாய்ஸ் நோட்டில், "போன் எடுக்கப் போறீங்களா இல்லையா?" என்று அனுப்பி இருக்க, அவள் குரலில் ஆத்திரம் அப்பட்டமாகத் தெரிந்தது.

"ப்ளீஸ் இந்திரா. எனக்கு கல்பனான்னா உயிர். அவ இல்லாமலோ, இல்ல அவ வெறுப்போடவோ என்னால வாழ முடியாது. நீ என்ன சொன்னாலும் கேட்குறேன் இந்திரா ப்ளீஸ்". என்று அவனிடம் சரணடைந்தார்.

அவரை ஒரு கசந்த முறுவலோடு பார்த்தவன், "உங்களுக்கு மட்டும் உங்க மனைவி முக்கியம் ஆனா நான் என் மனைவி இல்லாமலே வாழ்ந்திடணும். எவ்ளோ உயர்ந்த உள்ளம் மாமா உங்களுக்கு? நம்ம டீல் நினைவுல இருக்கட்டும். இனி நீங்க அடங்கி இருந்தா எல்லாம் சரியா இருக்கும்." என்று சொல்லி கல்பனாவை அழைத்தவன்,

"சாரி அக்கா நெட்வர்க் சரில்லாம கட் ஆகிடுச்சு. என் மேல உனக்கு எவ்ளோ பாசம் அக்கா. நான் சொன்னது எல்லாமே உண்மை தான் அக்கா. ஆனா என் வாழ்க்கையை அப்படி செஞ்சவங்களை நான் சும்மா விடுவேனா? நான் பார்த்துக்கறேன். மாமா வா? நானா அப்படியா பேசினேன். தெரியல அக்கா. ஆனா இன்னும் அது யாருன்னு தெளிவா தெரியல அக்கா." என்று சொல்லி அந்த விஷயத்தை திசை திருப்பியவன்,

"அம்மாகிட்ட பொறுமையா எல்லாத்தையும் சொல்லி வை கல்பனா. நான் என் பொண்ணைக் கூட்டிட்டு வர்றேன்" என்று போனை அணைத்தான்.

நம்பியை பார்த்தபடி, "இப்பவும் நான் உங்க பேரைச் சொல்லல. என்கிட்ட ஆதாரம் இல்லன்னு நினைக்க வேண்டாம். எல்லாமே பக்காவா இருக்கு. எப்போ உங்க ஆட்டம் ஆரம்பிக்குதோ அப்போ அது தானே முடியறது போல செஞ்சுடுவேன்." என்று பொறுமையாக ஆனால் அழுத்தமாக உரைத்தான்.

நம்பிக்கு உள்ளே காந்தியது. அவரின் கனவுக் கப்பலை எதற்கு கேட்கிறார்கள் என்று யோசித்தபடி அவன் சொன்னதற்கெல்லாம் தலையாட்டினார்.

அவரிடம் வீட்டில் எதுவும் பேசக்கூடாது என்று அழுத்தமாக உரைத்தவன், அவரை வெளியேறுமாறு கையசைத்தான்.

அவன் செய்கையில் அவமானமாக உணர்ந்த நம்பி, 'உனக்கு இருக்கு டா. ஒரு சின்ன பிள்ளையை வச்சு என்னை அசிங்கப்படுத்திட்டல்ல.. இதுக்கான பலனை நீ கண்டிப்பா அனுபவிப்ப டா' என்று கருவியபடி வெளியேறினார்.

வாசலில் தன் பென்சுக்கு அருகில் வர, அதன் சாவியை சட்டென்று பறித்த வருண், "இது என் மாமா காசுல வாங்கினது தானே, அதோ அங்க உங்களுக்காக கேப் புக் பண்ணி வச்சது காத்திருக்கு அதுல போங்க, இனிமே எதுவுமே உங்களுக்கு சொந்தமில்ல. நானும் அம்மாவும் கூட." என்று திரும்ப, அவன் தோளில் அழுத்தமாக கரம் பதித்த நதியா,

"ப்ளீஸ் ரெயின், இவ்ளோ கோபப்படாத" என்று அவன் கரத்தோடு கரம் சேர்த்து நகர, அதை ஒரு வித வில்லத்தனத்துடன் நோக்கினார்.

அவருக்கு தீரேந்திரனை பழி வாங்கும் வழி கிட்டிவிட்டதாகவே தோன்றியது. மகனை இகழ்ச்சியாகப் பார்த்து நகைத்தவர், 'போடா, என்னையா அவனோட சேர்ந்து அவமானப்படுத்துற? அவன் மகளை வச்சே, அவன் ஆசையா வளர்த்த உன்னை வச்சே அவன் கண்ணை நான் குத்திக்காட்டுறேன் டா' என்று நினைத்தபடி மகன் புக் செய்திருந்த கேப்பில் ஏறி வீடு நோக்கிப் புறப்பட்டார்.

இப்படி நடக்குமென்று அவர் நினைத்ததே இல்லை. என்ன அவரது தொழில் சாம்ராஜ்யம் மீண்டும் அவர் கைகளில் சேர இன்னும் சில காலம் ஆகும். அதுவரை பல்லைக் கடித்தப்படி பொறுமை காத்துவிட்டால், பதவி வந்ததும் அதை வைத்தே தீரேந்திரனை பழி வாங்கும் சிறு சிறு முயற்சிகளை ஆரம்பித்து விடலாம் என்று நினைத்தவர் வீட்டு வாசலில் இறங்க வீடே விழாக்கோலம் பூண்டிருந்ததைக் கண்டு திகைத்தார்.

வேகமாக வீட்டிற்குள் நுழைந்தவர் என்னவென்று மனைவியை வினவ, முகத்தில் மகிழ்ச்சி இருந்தாலும், அவரை சந்தேகமாக ஒரு பார்வை பார்த்து, "என் தம்பி அவனோட பொண்ணை கூட்டிட்டு வர்றானாம்" என்று சொல்லி வேலையாட்களை அதை அலங்கரி, இதை செய் என்று ஏவிக்கொண்டிருந்தாள்.

"என்ன கல்பனா ஏதோ டப்பால வச்ச மிட்டாயை எடுத்துக் காட்டுறது போல அவன் திடீர்னு இன்ஸ்டன்ட் குடும்பம், பொண்ணுன்னு சொன்னா நீங்க நம்பிடுவீங்களா? அது யாரோ எவரோ? கொஞ்சமாவது உங்களுக்கெல்லாம் மூளை ஒரு மூலைல கூட கிடையாதா?" என்று தன் மைத்துனன் மேல் உள்ள கோபத்தில் பொரிய,

ஏற்கனவே கணவன் பெயர் சொல்லி பின் இல்லை என்ற தம்பியின் கூற்றில் குழப்பத்திலும் சந்தேகத்திலும் இருந்தவள், "என் தம்பி பொய் சொல்ல மாட்டான். எனக்குத் தெரியும். அவன் வாழ்க்கையை கெடுத்தது யாருன்னு சொல்ல மாட்டேங்கறான். சொல்லட்டும். யாரா இருந்தாலும் அதுக்கப்பறம் ஏன்டா வாழறோம்னு அழுதே சாகற மாதிரி பண்ணிடுவேன்" என்று பல்லைக் கடித்தாள்.

மனைவியின் பேச்சில் திடுக்கிட்டவர் அவள் முகம் காண, 'சொன்னதைச் செய்வேன் அது நீயே என்றாலும்' என்னும் விதமாக முகம் அத்தனை தீவிரத்தன்மையோடு இருந்தது.

தன்னைத் தானே காட்டிக் கொடுத்துக்கொள்ள விரும்பாது வேகவேகமாக அறைக்குள் சென்று அடைந்தார்.

சிறிது நேரத்தில் வீட்டை அடைந்தனர் தீராவும் நதியாவும். வருண் பென்ஸில் வர மூவரும் ஒன்றாக வீட்டின் வாயிலை அடைந்தனர்.

கல்பனாவும் வாணியும் அவர்கள் மூவரின் பின்னே யாரையோ எதிர்பார்த்துத் தேட, நதியா சத்தமாகச் சிரிக்கத் துவங்கினாள்.

"நதிம்மா" என்று கையில் இடித்து அவளை சிரிப்பதை நிறுத்த முயன்றான் தீரேந்திரன். அப்பொழுதும் அவள் நிறுத்தாமல் சிரிக்க, "தியா கண்ட்ரோல்.. பப்ளிக்" என்று விரல் நுனியில் வருண் கிள்ளி வைக்க,

அவளோ சிரிப்பதை நிறுத்தாமல், "நான் தான் சொன்னேன்ல அவங்க நம்ப மாட்டாங்கன்னு.. பாருங்க நமக்கு பின்னால ஏதோ சின்ன குழந்தையைத் தேடுறாங்க" என்று சொல்லி கடைசி வார்த்தையில் உடைந்து அழுதாள்.

மகளின் அழுகையை பொறுக்க முடியாமல், "கண்ணம்மா ஏன் அழற?" என்று அருகே அழைத்து, "அம்மா இவ தான் என் பொண்ணு நதியா" என்று சொன்னதும் வாணியும் கல்பனாவும் கலக்கமும் குழப்பமுமாக அவனைக் கண்டனர்.

"நிஜம் தான் என்னோட 22 வயசுல படிச்சு முடிச்சதும் என் காலேஜ் ஜூனியரை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். சிலர் பண்ணின வேலையால ஏன் பிரிஞ்சோம்னு தெரியாமலே பிரிஞ்சு போயிட்டோம். எனக்கு நதியா இருக்கறதே தெரியாது. இப்ப மியாமி போனப்ப தான் இவ என் மகள்ன்னு தெரியும். உடனே இவகிட்டயே சொல்ல முடியாம தவிச்சு தான் இந்தியா வந்தேன். ஆனா என் மகள் என்னைத்தேடி வந்துட்டா" என்று சொல்லி மகளை தூக்கி சுற்றினான்.

ஐந்து வயதுக் குழந்தை தந்தை சுற்றி இறக்கும் போது எப்படி மகிழ்ந்து குதிக்குமோ அதே மனநிலையில் இருந்தாள் நதியா.

"ஏம்மா ஏதோ படிப்பு ரிசர்ச்ன்னு சொன்ன? எல்லாமே புருடாவா? நீயும் உங்க அப்பா மாதிரி எங்க காதுல பூ சுத்தினியா?' என்று வாணி அவள் காதைப் பிடிக்க,

"இல்ல பாட்டி நாங்க இன்னும் ரெண்டு நாள்ல என்னோட ஆராய்ச்சிக்காக கடலுக்குப் போகப்போறோம்.. இல்ல தீரா?" என்று தந்தையை கொஞ்சி மகள் கேட்க புன்னகை மாறா முகத்துடன் ஆமென்று தலையசைத்தான்.

பாட்டி, அத்தை, அப்பா, அத்தை மகன் என்று நதியா அடுத்து வந்த இரண்டு நாட்களும் மகிழ்ச்சிக்கடலில் முக்குளித்தாள்.

இருவரும் போட்ட கணக்குப்படி அவளின் ஆராய்ச்சிக்காக நம்பியின் கப்பலில் இருவரும் பயணம் செய்து அவளுக்குத் தேவையான பவளப்பாறைகள் பற்றிய ஆராய்ச்சியோடு முதல் முறையாக இருவரும் இணைந்து செல்லும் பயணமாகவும், கடல் சார்ந்த உணவுகளைப் பற்றி தீரேந்திரன் மகளுக்குக்குச் சொல்லக் கிடைத்த வாய்ப்பாகவும் நினைத்தனர்.

இருவரும் கிளம்ப நினைக்கும் நேரம், "நீங்க நெனச்சா கப்பல்ல ஏறி போயிட முடியுமா? அது ஒன்னும் சுற்றுலா கப்பல் இல்ல, அது மீன் பிடி இயந்திரம் தாங்கிய சின்ன கப்பல். எவ்ளோ ரூல்ஸ் இருக்கு தெரியுமா?" என்று நம்பி திடீரென்று நடுவில் வந்து பேசினார்.

அவரை இகழ்ச்சியாகப் பார்த்த தீரேந்திரன் அவர் முகத்துக்கு நேராக ஒரு தாளை நீட்டினார். அதில் அந்த கப்பலில் பயணிக்க தேவையான அவணங்களும், கடற்படை அதிகாரிகள் வந்தால் காட்ட தேவையான அனைத்து சட்ட நகல்களும் வரிசைப்படுத்தபட்டிருந்தது.

"எல்லாம் தெரிஞ்சு தான் போறோம்" என்று தன் பையுடன் முன்னே வந்தான் வருணேஷ்.

"டேய் நீ எங்கே போற?" என்று பதட்டப்பட்ட தந்தையிடம் மெதுவாக காதருகில் சென்று,

"அவ்ளோ ஈஸியா என் மாமாவையும் அவர் பெண்ணையும் உங்க கையில் தனியா மாட்ட விடுவேனா அப்பா?" என்று கேட்டு அவன் முன்னே செல்ல, வாணியும் கல்பனாவும் ஆயிரம் பத்திரம் சொல்லி மூவரையும் வழி அனுப்பி வைத்தனர்.

நதி பாயும்...

நாளை கடல் பயணத்தில் சந்திப்போம். நாளையோடு கதை நிறைவடைகிறது.
நன்றி.

 
Top