கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

KSK-7 இமைகள் இரண்டும் சேர்ந்திடுமா? அத்தியாயம் -3

ksk2022-writer

Well-known member
KSK-7 இமைகள் இரண்டும் சேர்ந்திடுமா? அத்தியாயம் -3

மறுநாள் காலையில் ஆஸ்மின் தன்னையையும் தன் குழந்தை ஸஹானாவையும் தயார் செய்துக் கொண்டு வாசலில் கிளம்ப நிற்கும் பொழுது அவளருகில் வந்த பானு

"ஆஸ்மின் ஸஹானாவை ஸ்கூல்ல விட்டுட்டு திரும்ப சீக்கிரமா வந்திடு இன்னைக்கு உன் அக்கா நஸீரா அவ மாப்பிள்ளையோடு வரப் போற வேலை நிறைய இருக்கு" என்றதும்


"மைனி இன்னைக்கு எனக்கு இன்டர்வியூ இருக்கு அதனால நான் ஸஹானாவை விட்டுட்டு அப்படியே இன்டர்வியூக்கு கிளம்பிடுவேன்"

"ஆஸ்மின் என்ன மைனியவே எதிர்த்து பேசுறியோ?"

"இல்லை மைனி என்னோட பதிலைத் தான் சொன்னேன்"

"ம்ம்… தினமும் தான் இன்டர்வியூக்கு போற ஒரு வேலையும் கிடைக்கலை அதனால அடுத்த இன்டர்வியூக்கு போம்மா"

"முடியாது மைனி இன்னைக்கு கம்பெனில திரும்ப வரச் சொல்லி இருக்காங்க"


"ஓ… வரச் சொன்னால் உடனே வேலையை கையில் தூக்கி கொடுக்கிற மாதிரி பேசிட்டு இருக்கே"


"மைனி நீங்க சொன்னது போலவே எல்லாம் நடக்கனும்னு தான் நினைக்கிறேன். உங்க வாக்கு பலிக்கட்டும்" என்று சொல்லி விட்டு நேராக நடக்க ஆரம்பித்து விட்டாள்.

ஆஸ்மினின் துணிச்சலைக் கண்ட பானு 'உன் அண்ணண் காரங்க கொடுக்கிற தைரியத்துல தானே இவ்வளவு தூரம் திமிரா நடந்துக்கிறே! இரு கூடிய சீக்கிரமே உன்னை இந்த வீட்டை விட்டு துரத்துறேன்.இன்னைக்கு எப்படியும் வேலைக் கிடைக்காமல் தானே வருவே அப்போ வைச்சிருக்கேன் கச்சேரி' என்று மனதில் பொருமிக் கொண்டே உள்ளே வந்தாள்.


ஆஸ்மின் ஏற்கனவே இங்கே எல்லா சமையல் வேலைகளையும் முடித்து வைத்து சென்றிருப்பதால் நேராக தன் அறையில் போய் நுழைந்துக் கொண்டாள் பானு.


இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆமினாவிற்கு வேதனையாக இருந்தது.'இங்கே இப்படி சம்பளம் வாங்காத வேலைக்காரியா இருப்பேனே தவிர இந்த பொண்ணு வேறு யாரையும் கல்யாணம் செய்ய மாட்டேன்னு அடம் பிடிக்குறாளே?இறைவா நான் என்னத் தான் செய்வேன்?' என்று புலம்பியபடி இருந்தார்.

குழந்தையை பள்ளியில் விட்டு பேருந்தில் தன் பயணத்தைத் தொடர்ந்தாள்.மனம் முழுவதும் பாரத்தை சுமந்துக் கொண்டு நேற்று நடந்தவைகளை எல்லாம் நினைத்துக் கொண்டே புது நிறுவனம் இருக்கும் இடத்திற்கு வந்தாள்.


அவர்கள் சொன்ன நேரத்திற்கு முன்னதாகவே வந்து வரவேற்பறையில் உட்கார்ந்தாள் ஆஸ்மின்.

அவளோடு சேர்த்து வரச் சொன்ன மற்ற ஆட்களும் அங்கே வரத் தொடங்கினர்.ஆனால் ஆஸ்மினின் கண்களோ கயலைத் தேடியது.அவளை அலைபேசியில் அழைக்கலாம் என்று நினைத்து கைப்பேசியை எடுத்தவள் தயக்கமாக இருக்க கைப்பேசியை திரும்ப வைத்தாள்.

நிறுவனம் சொன்ன நேரம் முடியும் தருவாயில் வந்து நின்றாள் கயல்.

ஓடி வந்திருக்கிறாள் போல உள்ளே வந்ததும் மூச்சிரைக்க நின்றான்.ஆஸ்மின் எழுந்து வந்து தன் பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தாள்.


அதை வாங்கி மடமடக்கென்று குடித்தவள் முகத்தில் வழிந்த வியர்வை தன் கைக்குட்டையால் துடைத்தாள்.

ஆஸ்மின் அவளைப் பார்த்துக் கொண்டே "என்னாச்சு கயல் ஏன் இப்படி ஓடி வர்றீங்க?"


நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டபடி "அ...து வழியில் ஒருத்தருக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிருச்சு அவரைக் கொண்டு போய் ஆஸ்பிட்டல்ல சேர்த்துட்டு வரேனா அதான் லேட்டாயிடுச்சு"

அதைக் கேட்ட ஆஸ்மின் பதறிப்போய் "ஐய்யய்யோ அப்புறம் என்னாச்சு? அவங்க நல்லாகிட்டாங்களா?"

அதுவரை சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தவள் வாயைப் பொத்தி சிரிக்க ஆரம்பித்தாள்.

அவளின் சிரிப்பின் அர்த்தம் புரியாத ஆஸ்மின் "கயல் எதுக்கு சிரிக்கிறீங்க?"

"சிரிக்காம என்னச் செய்ய சொல்லுறே ஆஸ்மின்? சரியான அப்பாவியாக இருக்கே நான் சொல்றதை அப்படியே நம்புறே?"

"அப்போ நீங்க சொல்றது உண்மையில்லையா?" ஏமாற்றமாய் கேட்டாள்.

"பத்தியா உடனே நம்ப மாட்டேங்கிற?"

"ஐயோ எனக்கு ஒன்னுமே புரியலை கயல் என்ன தான் நடந்துச்சு?"

அவளின் கன்னத்தை உரிமையாய் பிடித்து செல்லம் கொஞ்சியவள் "ஐயோ என் ப்ரெண்ட்டுக்கு முகமே மாறிப் போச்சே நீ பயப்படுற அளவுக்கு ஒன்னுமே நடக்கலை"

ஆஸ்மின் அவளைப் பார்த்தாள்."பஸ்ஸை விட்டு இறங்கி நடந்து வந்துட்டு இருக்கும் போது அங்கே விளையாடிக் கொண்டிருந்த சின்னப் பசங்க எல்லோருமா சேர்ந்து ரன்னிங் ரேஸ் வைச்சாங்க அதைப் பார்த்து எனக்கும் விளையாடனும்னு ஆசையா இருந்துச்சு அதான் அந்தப் பசங்ககிட்ட நானும் உங்க கூட விளையாட வரவான்னு கேட்டேன். அவங்களும் ஓகேன்னு சொன்னாங்களா உடனே எல்லோரும் ஒன்னா நின்னு ரேஸ் வைச்சிட்டோம் அந்த ரேஸ்ல இரண்டாவதாகத் தான்பா என்னால வர முடிஞ்சது ஒரே ஷேமா போச்சு ஏன்னு தெரியுமா? சின்னப் பசங்க தானேன்னு என்னைப் பற்றி கொஞ்சம் பில்டப்பா பேசிட்டேன் அதுக்கு எல்லோருமா சேர்ந்து ஒரே கிண்டல் அப்போத் தான் டைம் என்னன்னு பார்த்தா செம ஷாக் இன்டர்வியூக்கு வர லேட்டாயிடுச்சுன்னு திரும்ப எனக்கு நானே ரேஸ் வைச்சு அங்கிருந்து ஓடி வந்தேன்னா அதான் மூச்சிரைச்சுகிட்டே உள்ளே வந்தேன்" என்று சிரித்தாள்.


அவள் சொல்வதைக் கேட்டு ஆஸ்மினுக்கு என்னச் சொல்வதென்றே தெரியவில்லை.இந்த வயதிலும் அவளின் சிறுபிள்ளைத்தனத்தை நினைத்து வியந்துப் போய் நின்றாள் என்பதே உண்மை.அவளோ மனம் முழுவதும் கவலைகளைச் சுமந்துக் கொண்டு வந்திருந்தாள்.

ஆனால் கயலோ மனம் முழுவதும் மகிழ்ச்சியோடு வந்திருக்க… அந்த மகிழ்ச்சியை தன்னுள்ளே அவளும் நிரப்பிக் கொண்டாள்.

"சரி வாங்க கயல் இங்கே வந்து உட்காருங்க" என்று தனக்கு அருகில் உள்ள இடத்தில் அமர வைத்தாள் ஆஸ்மின்.

"என்ன ஆஸ்மின் நீ என்னைப் பார்த்து வாங்க போங்கன்னு ஒரே மரியாதை கொடுக்கிற நானும் உன் வயசு தான் என்னை பார்த்து வாட்டி உட்காருட்டின்னு சொல்லு அப்போத் தான் அந்நியம் இல்லாமல் இருக்கும்"


ஆஸ்மினோ சொல்வது புரியாமல் "வாட்டின்னா என்ன?"

"ஐயோ" என்று தலையில் அடித்துக் கொண்டவள் "வா போன்னு சொல்லுறது அர்த்தம். ஏன் ஆஸ்மின் உனக்கு இப்போ டிரெண்டிங் என்னன்னே தெரியாதா?"

அவள் அதுக்கும் சேர்ந்து விழிக்க…

"எம்மா ஆஸ்மினு டிரெண்டிங்னா என்னன்னு மட்டும் கேட்டுறதா? அப்புறம் இந்த சின்ன இதயம் தாங்காதும்மா தாங்காது" என்று அவள் தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டுச் சொல்ல....

அவளின் செய்கையைப் பார்த்து ஆஸ்மினுக்கும் சிரிப்பு வந்து தொற்றிக் கொண்டது.உடனே அவள் கயலிடம் "நீங்க இங்கே வந்ததிற்கு பதிலா நடிக்கிறதுக்கு ஆடிஷன் போயிருக்கலாம் உங்க நடிப்பை பார்த்து எல்லோரும் அசந்துப் போய் இருந்திருப்பாங்க"


"பத்தியா என் திறமை என்னன்னு எனக்கு தெரியலை.ஆனால் உனக்கு தெரிஞ்சி இருக்கு,அதே மாதிரி மத்தவங்களுக்கும் சீக்கிரம் தெரியும்னு நம்புறேன் பார்ப்போம்" என்று அசால்ட்டாய் சொல்லி முடிக்கவும் இருவரும் ஒன்றாய் சிரித்தனர்.

இவர்கள் இருவரின் அரட்டையையும் பக்கத்தில் இருந்த பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்களும் இருவரையும் வித்தியாசமாக பார்த்தனர்.

வந்திருப்பவர்கள் எல்லோரும் வேலை கிடைக்குமா? கிடைக்காதா? என்று ஒருவித கலக்கத்தில் அமர்ந்திருக்க இவர்கள் இருவர் மட்டும் மகிழ்ச்சியாய் பேசிக் கொண்டிருந்தனர்.கயலோடு இருப்பதால் ஆஸ்மினும் அந்த நிலைமையை மறந்திருந்தால் என்பதே உண்மை.


அரை மணிநேரத்திற்குப் பின் எல்லோரையும் உள்ளே உள்ள ஒரு பெரிய அறையில் உட்கார வைத்து அவர்களுக்கு ஒரு காகிதம் கொடுக்கப்பட்டது.அதில் அவர்களைப் பற்றி சுயமதிப்பீடும்,வேலையில் அவர்களிள் பங்களிப்பு போன்ற சில முக்கியமான கேள்விகளும் அதில் இருந்தன.

அதை எழுதிக் கொடுத்த பின் திரும்பவும் எல்லோரும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர்.

கயல் ஆஸ்மினிடம் "என்ன ஆஸ்மின் அவங்க கேட்ட கேள்விக்கு எல்லாம் ரொம்ப விஸ்வாசமா வேலை பார்ப்பேன்னு பதில் எழுதி இருந்தியா?"

"இல்லை கயல் அப்படி எல்லாம் பொய் சொல்ல என் மனசு இடம் கொடுக்கலை,என்னால எந்தளவுக்கு பெஸ்ட்டை கொடுக்க முடியுமோ அந்தளவுக்கு தான் பதிலை கொடுத்திருக்கிறேன்" என்றாள்.

"பார்டா பிள்ளை உண்மைய் பேசுது"

"கயல்"

"ஆமாம் நான் தான் கயல்"

"ஐயோஓ"

"என்ன ஐயோஓ"

அதோடு ஆஸ்மின் வாயை மூடிக் கொண்டாள்.அதைப் பார்த்த கயல்

"இதுக்கே வாயை மூடி விட்டால் எப்படி?" என்றதற்கும் அவள் அமைதியாக இருந்தாள்.

கயல் அவளை உற்றுப் பார்க்க ஆஸ்மின் சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தாள்.

"எனக்கே ரீப்பிட்டா? இருக்கட்டும் இருக்கட்டும் பார்த்துக்கிறேன்" என்றதும் ஆஸ்மின் சிரித்தாள்.

அதைப் பார்த்த கயல் "ஆஸ்மின் நீ சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழும் பொழுது ரொம்ப அழகா இருக்கே.அதனால எப்பவும் சிரிச்சிகிட்டே சந்தோஷமா இரு" என்று அவளின் கன்னக்குழியை தொட்டுப் பார்த்தாள்.

கயல் அப்படிச் சொன்னதும் ஆஸ்மினின் முகம் அப்படியே வாடிப் போய் கண்கள் முழுவதும் கண்ணீரை நிரப்பிக் கொண்டது.அன்று நடந்தது அவள் நினைவில் வந்தது.

ஆஸ்மின் திருமணம் ஆன பிறகு ஒருதடவை அவள் கணவரின் சின்னம்மா (சித்தி) மகன் வீட்டிற்கு வந்திருந்தான்.

அவளுடைய மாமியார் சாப்பாடு செய்து பரிமாறச் சொல்லியிருந்தார்.
அதனால் ஆஸ்மின் சாப்பாடு சமைத்து அவனுக்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தாள்.

ஆஸ்மினின் சிரிப்பைப் பார்த்த அவளது கொழுந்தன் "மைனி நீங்க சிரிக்கும் பொழுது ரொம்ப அழகா இருக்கீங்க, ஏன்னு தெரியுமா? உங்க கன்னத்தில் குழி விழுறதுனாலத் தான்" என்றான்.

உடனே ஆஸ்மின் "அட சும்மா எதாவது பேசிகிட்டு ஒழுங்கா சாப்பிடு" என்று பரிமாறினாள்.


இதை எல்லாம் சரியாக காதில் வாங்கிக் கொண்டே உள்ளே நுழைந்தான் ஆஸ்மினின் கணவன்.அவனுடைய சித்தி மகன் பத்தாம் வகுப்பு படிக்கும் சின்ன பையன் அதனால் வெளிப்படையாய் ஆஸ்மினிடம் நேரிடையாகச் சொன்னான்.

இதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டிருந்த ஆஸ்மினின் கணவன் அவளும் அறையில் நுழைந்ததும் நெருப்பில் எரிந்துக் கொண்டிருந்த மெழுகுவர்த்தியின் மெழுகினை எடுத்து சூடாய் அவள் கன்னத்தில் அவளே எதிர்பாராத நேரத்தில் ஊற்றி விட்டு அந்த தோலின் மீதே நெருப்பை அணைத்தான்.

இதை சற்றும் எதிர்பாராத இந்த தாக்குதலில் துடிதுடித்துப் போனாள் ஆஸ்மின்.அவள் வலியோடு இருக்கும் பொழுது "இனிமேல் சிரிக்கும் போது இந்த விஷயம ஞாபகம் வரும் இல்ல, அப்போ சிரிப்பு எப்படி வரும்னு நான் பார்க்கிறேன்" என்றான்.

அதைக் கேட்ட ஆஸ்மின் இன்னும் மனதாலும் உடலாலும் வேதனையடைந்தாள்.அதிலிருந்து அவள் மனம் திறந்து சிரிப்பதே என்பது இல்லை.

நடந்தது எல்லாம் நினைவு வந்து போனது.சட்டென்று மாறிய முகத்தை கண்ட கயல் "என்னாச்சு ஆஸ்மின் நான் எதாவது தப்பா சொல்லிட்டேனா? ஏன் முகமே மாறிப் போச்சு"

"ஒன்னுமில்லை கயல் நீ சொன்னதை நினைத்து இது நடக்குமான்னு யோசிச்சேன்"

"உனக்கு எப்படியோ எனக்குத் தெரியாது.ஆனால் என் மனசு சொல்லுது இனிமேல் உன் வாழ்க்கையில் சந்தோஷம் மட்டும் தான் நிலையாக இருக்க போகுதுன்னு படுது ஆஸ்மின் வேணும்னா நீயே வந்து என்கிட்ட இந்த விஷயத்தை சந்தோஷமா சொல்லுவ பாரேன்" என்று உறுதியாய் கூறினாள் கயல்.

அதைக் கேட்ட ஆஸ்மின் "ம்ம்… எல்லாம் நடக்கும் போது பார்க்கலாம்" என்று விரக்தியாய் சொன்னாள்.

அதைப் பற்றி அடுத்து எதாவது பேசலாம் என்று நினைக்கும் பொழுது வரவேற்பறையில் இருந்த பெண் "இங்கே இருப்பவர்களில் நான்கு பேரை வரச் சொல்லி இருக்காங்க மற்றவங்க கிளம்பலாம்" என்றதும் ஆஸ்மினுக்கு பக்கென்று இருந்தது.இதில் தன்னுடைய பெயரும்,கயல் பெயரும் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டே அந்தப் பெண்ணை பார்க்க கடைசியாக இருவரின் பெயரையும் சொன்னதும் ஆஸ்மின் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டாள்.


இருவரும் ஒருவரையொருவர் பார்க்கவும் கயல் ஆஸ்மினைப் பார்த்து கையைத் தூக்கிக் காட்ட இருவரும் கிடைத்த வெற்றிக்காக ஒரே மாதிரியாக கைத்தட்டி உற்சாகப்படுத்திக் கொண்டனர்.

மற்ற நபர்கள் சென்று விட
இவர்கள் இருவரோடு சேர்ந்து மற்ற இரு ஆண்களும் காத்திருந்தனர்.

அப்பொழுது கயல் "ஆஸ்மின் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு,நம்ம ரெண்டுபேரும் ஆரம்பிச்ச நட்பு தொடரும்னு நினைச்சேன் இனிமேல் அதுக்கு எந்த தடையும் இல்லை தானே" என்றதற்கு அதற்கு ஆஸ்மினும் தலையசைத்தாள்.

இருவரும் தங்கள் கைகளைக் கோர்த்துக் கொண்டனர்.சிறிது நேரத்தில் நால்வரையும் உள்ளே உள்ள அறையில் அழைத்தனர்.

அவர்கள் சென்றதும் அந்த நிறுவனத்தின் மேலாளர் நால்வரிடமும் நியமன உத்தரவிற்கான காகிதத்தைக் கொடுத்தார்.

கொடுத்து விட்டு தன்னைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்."நான் தான் இந்த கம்பெனியுடைய மேனஜர்.நாளையிலிருந்து உங்க வேலைகளை ஆரம்பிக்கலாம்,யார்யார்க்கு என்ன பொறுப்பு? என்பதை நாளைக்கு விளக்கமாக சொல்றேன்" என்றார்.

நால்வரும் சரியென்று ஒத்துக் கொண்டு அங்கிருந்துச் சென்றனர்.வெளியே வந்ததும் கயல் ஆஸ்மினைக் கட்டிக் கொண்டு "கங்கிராட்ஸ் ஆஸ்மின்" என்றதும்

"தாங்க்யூ அப்புறம் உங்களுக்கும்" என்றதும் கயல் முறைக்க… "கயல் உனக்கும் கங்கிராட்ஸ்" என்றாள்.

இருவரும் சிரித்துக் கொண்டே மற்ற இருவருக்கும் வாழ்த்துச் சொல்லி அங்கிருந்து சென்றனர்.

கயல் ஆஸ்மினிடம் "இனிமேல் நம்ம ரெண்டுபேரைப் பற்றி நல்ல தெரிஞ்சுக்கலாம்" என்றதும் ஆஸ்மினோ கொஞ்சம் கலக்கமாய் "கண்டிப்பா தெரிஞ்சுக்கலாம்"
என்றாள்.


இருவரும் விடைப்பெற்று தங்கள் வீடுகளுக்குச் சென்றனர்.ஆஸ்மின் உள்ளே நுழையும் பொழுது வாசலில் கிடந்த செருப்புகளை வைத்தே புரிந்துக் கொண்டாள் நஸிரா வந்து இருக்கிறாள் என்று.


மனதினுள் 'அடுத்து என்னப் பிரச்சினை நடக்கப் போகுதோ? இந்த மச்சான் (மாமா) என்ன பேசப்போறாங்களோ?' என நினைத்துகொண்டே உள்ளே நுழைந்தாள்.

(தொடரும்)
 

Shailaputri R

Well-known member
ஆஸ்மின்க்கு வேலை கிடைச்சிருச்சி வாழ்த்துக்கள்.. அவ ஹஸ்பண்ட் ஒரு சட்டிஸ்ட் நீ அதுக்காக எல்லாம் feel பண்ணாத.. ஜாலியா இரு..

உங்க முஸ்லீம் slang அந்த communication நல்லா இருக்கு..
 

Aathisakthi

Well-known member
வேலை பளூவாகவும் இருக்கும்... பலமாகவும் இருக்கும்... ஆஸ்மினின் வாழ்க்கை யில் எப்படியோ என்று அறிய ஆவலுடன்🌹🌹🌹🌹
 
Top