கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

1. நதியிலே புதுப்புனல்

Annapurani Dhandapani

Active member
குவிகம் குறும்புதினம் 2021 - 22 போட்டிக்காக நான் எழுதி Final வரை சென்ற என்னுடைய குறும்புதினம், நதியிலே புதுப்புனல், உங்களுக்காக. சின்ன கதைதான்.. படிச்சுப்பார்த்து உங்க கருத்துக்களை சொல்லுங்க நண்பர்களே!


1.



ஷிவன்யாவுக்கு மனது கிடந்து தவித்தது.

அப்பாவுக்கு ஒரு வாரமா உடம்பு சரியில்லையாம். இப்போதான் எனக்கு விஷயமே தெரியும்; ஏன் எனக்கு சொல்லலன்னு கேள்வி கேட்டா, என் எக்ஸாம் டைமாம்; காரணம் சொல்றார் இந்த ராகவன் அங்கிள்! எவ்ளோ கடுப்பாயிருக்கும்?

அப்பாவுக்கு உடம்பு சரியில்லன்னு தெரிஞ்சா நா எக்சாம் சரியா செய்ய மாட்டேனாம்; அதனால வெய்ட் பண்ணி, இன்னிக்கு என் எக்சாம் முடிஞ்சதும் விஷயத்தை தெரியப்படுத்த ஆள் அனுப்பறார்! அதுவும் நான் சாப்பிட்டப்றம்! எங்க போய் முட்டிக்கறது?

ஆனா பாவம்! அவர குத்தம் சொல்லி என்ன பயன்? எல்லாத்துக்கும் காரணம் இந்த அப்பாதானே? அவர் என்ன சொல்றாரோ அததான் இந்த ராகவன் அங்கிள் செய்யணும்! ராகவன் அங்கிள் மட்டுமில்ல; அப்பா கூட இருக்கற எல்லாரும்.. ஏன்? நான் உட்பட, எல்லாரும் அவர் சொல்றத மட்டும்தான் செய்யணும்! மாத்தி எதும் செய்துட்டா அவ்ளோதான்! பெரிசா ஒண்ணும் பண்ண மாட்டார்! ரெண்டு நாள் பேச மாட்டார்; சாப்பிட மாட்டார்; கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்ய ட்ரை பண்ணிட்டா ஆஃபீஸ்லயே இருந்துடுவார்; வீட்டுக்கே வர மாட்டார்.

அவர் சொன்ன வேலை அவர் சொன்ன மாதிரியே முடிஞ்சிதுன்னு தெரிஞ்சாலொழிய மனுஷன் வீட்டுக்கு திரும்பி வர மாட்டார்!

இது இன்னிக்கு நேத்திக்கா நடக்கறது? எனக்கு நெனவு தெரிஞ்ச நாள்லேர்ந்து இப்டிதான் நடக்கறது!

தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தாள்.

அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது. அதைத் துடைக்கக் கூடத் தோன்றவில்லை. அது இப்போது அவளுக்கு முக்கியமாகவும் படவில்லை.

பரபரப்பாக தன்னுடைய பொருட்களையெல்லாம் ஒன்று திரட்டி அந்த தோல் பைக்குள் சொருகினாள்.

அவளுடைய அறைத் தோழிகள் இருவரும் எதுவும் பேசாமல் அவளுக்கு உதவிக் கொண்டிருந்தார்கள்.

ஹூம்! இதான் கடைசி வருஷம்! இப்ப கிளம்பிட்டா அப்றம் வாழ்க்கையில எப்ப எங்க பாத்துப்போம்; அதனால எக்சாம் முடிஞ்சதும் ரெண்டு நாள் ஜாலியா அரட்டை அடிச்சிட்டு அப்றம் ஊருக்கு போகலாம்னு எல்லாரும் ப்ளான் பண்ணினோம்! எல்லாம் வேஸ்ட்!

ஷிவன்யாவே கிளம்பிட்டா அப்றம் நமக்கெல்லாம் என்ன இருக்கு இங்க? என்று சத்தமேயில்லாமல் தனக்குள் முணுமுணுத்தபடியே ஒருத்தி சார்ஜரில் சொருகியிருந்த ஷிவன்யாவின் கைப்பேசியை எடுத்து அவளுடைய கைப்பைக்குள் வைத்து ஜிப்பை இழுத்து மூடினாள்.

மற்றொருத்தி அவளுடைய துணிமணிகளை மடித்து எடுத்துக் கொடுத்தாள்.

ஷிவன்யா தன்னுடைய புத்தகங்களையெல்லாம் திரட்டி எடுத்து பத்திரமாக பெட்டிக்குள் வைத்து மூடினாள்.

எல்லாவற்றையும் இரண்டு பெரிய பைகளிலும் ஒரு பெட்டியிலுமாக அடைத்துக் கொண்டுவிட்டு ஒரு முறை அறையைக் கண்களால் துழாவினாள்.

எதுவுமில்லை என்று புரிந்தாலும் எதையோ விட்டுப் போவது போலவே தோன்றிக் கொண்டிருந்ததை அவளால் தவிர்க்க முடியவில்லை.

தோழிகளின் முகத்தைப் பார்த்தாள்.

"பரவால்ல ஷிவா! உன்னோட பொருள் எதாவது இங்க இருந்ததுன்னா, நாங்க பேக் பண்ணும் போது கிடைக்கும்; நாங்க அத பத்திரமா உனக்கு குரியர் பண்ணிடறோம்டீ! நீ டென்ஷனாகாம கிளம்பு!" என்றாள் முதலாமவள்!

"ஆமா ஷிவா! டோன் வொரி! அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது! நாங்கல்லாம் ப்ரே பண்ணிக்கறோம்! நீ அழுத கண்ணோட கிளம்பாத!" என்று ஆறுதலாய்ப் பேசினாள் இரண்டாமவள்.

ஷிவன்யா அவர்கள் இருவரையும் ஒரு முறை ஆறத் தழுவி, பிரியா விடை பெற்றுக்கொண்டு, தன் பையைத் தூக்கிக் கொண்டு வெளியே வர, அங்கே தயாராக நின்றிருந்த ஒரு நெடியவன் அவளுடைய பைகளையும் பெட்டியையும் தூக்கிக் கொண்டு போய் அங்கு நின்றிருந்த கால் டேக்சியில் வைத்தான்.

அவள் சென்று தன்னுடைய விடுதிக் காப்பாளரிடம் சொல்லிக் கொண்டு வந்தாள்.

அவள் ஏறிக் கொள்ள வண்டியின் கதவைத் திறந்து விட்டவன், அவள் ஏறியதும் விடுதிக் காப்பாளரிடம் நன்றியுரைத்துவிட்டு வந்து தானும் வண்டியில் ஏறினான். வண்டி கிளம்பியது.

அவளுடைய அறைத் தோழிகளும் மற்ற அறைகளின் தோழிகளும் அவளைப் பார்த்தபடியே கனத்த நெஞ்சத்துடன் அவளுக்கு விடை கொடுக்க, அவள் கண்ணீருடன் தன் கைகளை அசைத்து அவர்களிடம் விடை பெற்றாள்.

அரை மணி நேரப் பயணத்தில் கோவை விமான நிலையத்தை அடைந்தவர்கள், தாங்கள் காத்திருக்க வேண்டிய சென்னை செல்லும் விமானத்தின் பயணியர் காத்திருக்கும் இடத்துக்கு வந்து அமர்ந்தனர்.

அவர்கள் செல்லும் விமானம் புறப்படத் தயாராக இருப்பதாக அறிவிப்பு வந்ததும் விமான நிலையப் பணியாளர்களின் வழிகாட்டுதலின்படி விமானத்தில் ஏறி தங்களுடைய இருக்கையைத் தேடி அமர்ந்தனர்.

அவர்கள் இருவருக்கும் அருகருகே இருக்கை இருந்தது, அவளுக்கு சற்று எரிச்சலூட்டினாலும் அவளால் எதையும் சொல்லிக் கொள்ள முடியவில்லை.

ஜன்னலோர இருக்கையில் வேறு அவன் அமர்ந்து கொண்டது அவளுக்கு கடுப்பாக இருந்தது.

இவனப் போய் அனுப்பினார் பாரு.. இந்த அப்பாவ சொல்லணும்.. என்று தன் தந்தையையே இதற்கும் திட்டிக் கொண்டாள்.

அவன் அமைதியாகவே காட்சியளித்தாலும் ரொம்பவே தீவிரமான சிந்தனையில் இருக்கிறான் என்பது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

"ம்.. அப்பா.. ரொம்ப சீரியசா இருக்காரா? டாக்டர் ஏதாவது க்ரிடிக்கல்ன்னு சொல்லியிருக்காரா?" என்று தயங்கித் தயங்கி கேட்டாள்.

"அங்க போனதும் உனக்கே தெரியும்!" என்றான் வெடுக்கென்று.

இவன் எதுக்கு இப்ப என்கிட்ட எரிஞ்சி விழறான்? நா என்ன தப்பு பண்ணினேன்? என்று மனதுக்குள் நினைத்தவள்,

"எனக்கு கவலையா இருக்கு! அவர்தான் என் எக்சாமை காரணம் காட்டி விஷயத்தை சொல்லக் கூடாதுன்னு சொல்லிருக்கார்ன்னா.. ராகவன் அங்கிளும் அவர் சொல்றத அப்டியே கேக்கணுமா? சரி! இப்பதான் என் எக்சாம் முடிஞ்சிருச்சில்ல.. நானும் கிளம்பியாச்சி.. இப்பவாவது அப்பா எப்டி இருக்கார்ன்னு சொல்லலாம்ல.." என்று அவனைப் போலவே வெடுக்கென்று கேட்டாள்.

"ஹேங்.. அத உங்கப்பாகிட்டயே போய்க் கேட்டுக்க! அவரு சொல்றததான் நா செய்யணும்னு எங்கப்பா எனக்கு சொல்லிருக்கார்!" என்றான் இன்னும் மறையாத கோபத்துடன்.

ஹூம்.. இததான் சொல்வான்னு தெரிஞ்சும் போயும் போயும் இவன்கிட்ட போய் கேட்டேனே.. என்ன எதால அடிச்சிக்கறது.. என்று தனக்குள் நினைத்துக் கொண்டவள் அதற்கு மேல் எதையும் கேட்கவில்லை.

அந்த விமானப் பயணம், ஷிவன்யாவுக்கு, மனம் முழுக்க தவிப்புடனேயே கழிந்தது.


- தொடரும்....

 
Top