Annapurani Dhandapani
Active member
2.
ஷிவன்யாவின் மனம் தவிப்பிலிருந்து கோபத்துக்கு மாறியிருந்தது.
ஒரு மகளாய் தன் தந்தைக்கு அருகிருந்து பணிவிடை செய்ய முடியாமல் ஏதோ சொந்த நாட்டிலிருந்து விரட்டப்பட்ட அகதி போல யார் வீட்டிலோ வந்து இருக்க வேண்டுமென்று நிர்பந்திக்கப்பட்டால், அதுவும் தன் தந்தையாலேயே விரட்டப்பட்டால், ஒருத்திக்கு கோபம் வராதா என்ன?
தேர்வுகள் முடிந்ததும் முடியாததுமாக அவசர அவசரமாக அலறியடித்துக் கொண்டு ஓடி வந்த செல்ல மகள், என்ன மாதிரி மனநிலையிலிருப்பாள் என்று கூட புரியாத நிலையிலா ஒரு அப்பா இருப்பார் என்று பார்ப்பவர் அனைவருக்குமே தோன்றுமளவுக்கு நடந்து கொண்டார் தேவராஜ், ஷிவன்யாவின் தந்தை.
தன்னை நினைத்து வருந்திய மனநிலையில் கண்ணீரும் கம்பலையுமாக வந்த மகளை ஏன் வந்தாய் என்பது போலவே நடத்தினார்.
"அப்பா! உங்களுக்கு என்னப்பா ஆச்சு? ஏன்ப்பா எனக்கு சொல்லவேயில்ல.. நா உங்க கூட இருந்திருந்தா இப்டி ஆகவே விட்டிருக்க மாட்டேன்ப்பா.." என்று வரிசையாகச் சொன்ன ஷிவன்யாவை ஒரே வார்த்தையில் ஆஃப் செய்தார்.
"எக்சாம் எப்டி பண்ணின? யூனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட்டா வருவேன்னு ப்ராமிஸ் பண்ணியிருக்க! ஞாபகம் இருக்கா?" என்றார் கரகரத்த குரலில்.
"அதெல்லாம் நல்லாவே செய்திருக்கேன்ப்பா.. கண்டிப்பா கோல்ட் மெடல் வரும்.. இல்லன்னாலும் யூனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டாராதான் இருப்பேன்.."
"எனக்கு நீ ஏழாவது ரேங்க் வாங்கறதுல பெருமையில்ல.. கோல்ட் மெடல் வாங்கினாதான் பெருமை.. கௌரவம்.." என்றார்.
ஷிவன்யாவுக்கு மனம் சுணங்கியது.
"இப்ப அதுவாப்பா முக்கியம்? நீங்க எப்டி இருக்கீங்க? டாக்டர் என்ன சொன்னார்? எப்ப வீட்டுக்கு போகலாம்?" என்று கேட்டாள்.
"ம்.. ம்.. ஆபரேஷன்தான் நேத்திக்கே முடிஞ்சிருச்சே.. ஆனா வீட்டுக்கு இப்ப அனுப்ப மாட்டாங்களாம்.. இன்னும் பத்து நாள் ஆப்சர்வேஷன்ல இருக்கணும்னு சொல்லிருக்காங்க.." என்று விட்டேத்தியாகக் கூறியவர்,
"எல்லாம் பணம் பிடுங்கற டெக்னிக்தான்.. வேறென்ன சொல்ல.." என்றும் கூறினார்.
"உங்க நல்லதுக்காகதானே சொல்லிருக்காங்க.. இப்பவே வீட்டுக்கு அனுப்பிட்டா நீங்க ப்ராப்பரா ரெஸ்ட் எடுக்காம ஆஃபீஸ் போக ஆரம்பிச்சிடுவீங்கன்னுதான் பத்து நாள் ரெஸ்ட் எடுக்க சொல்லிருக்காங்க.." என்றாள்.
"ஆமாம்மா.. சரியா சொன்ன.." என்று ஷிவன்யாவுக்கு ஒத்துப் பேசிய ராகவனை முறைத்தார் தேவராஜ்.
"கவலப்படாதீங்கப்பா! நா உங்க கூடவே இருந்து நல்லா கவனிச்சிக்கறேன்.. என் செல்ல அப்பாவுக்கு சீக்கிரம் சரியாகிடும்.." என்று பாசத்தைப் பொழிந்த மகளை விநோதமாகப் பார்த்த தேவராஜ்,
"எதுக்கு? நீ என்ன என்னை கவனிக்கறது.. அதுக்குதானே இந்த ஹாஸ்பிடலுக்கு தண்டம் அழறேன்.. அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.. நீ என்ன பண்ணனும்னு ராகவன் கிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன்.. அதுபடி செய்.. நா வீட்டுக்கு வரதுக்குள்ள நா சொன்னத செய்து முடி.. நா நெனச்ச மாதிரி இல்லன்னா அப்றம் என்ன செய்வேன்னு உனக்கே தெரியும்.. ம்.. கிளம்பு.. கிளம்பு.." என்று வெடுக்கென்று கூறினார்.
"அப்பா.. இல்லப்பா.." என்று ஷிவன்யா ஆரம்பிக்க, தன் வலது கையை தூக்கி அவள் முகத்தை நோக்கி நிறுத்து என்பது போல சைகை காட்டி அவளை அங்கிருந்து போகச் சொன்னார்.
ஷிவன்யாவுக்கு அழுகை வந்தது.
"இங்க நின்னு அழுதுட்டிருந்தா எல்லாம் சரியாகாது.. சொல்றத செய்.. போ!" என்று கடுமையான குரலில் கூறி எச்சரித்தார்.
"சார்.. ரொம்ப சத்தமா பேசாதீங்க சார்.. உங்க இதயத்தில இப்பதான் ஆபரேஷன் ஆகியிருக்கு!" என்று அக்கரையுடன் கூறிய செவிலியைப் பார்த்து, எல்லாம் எனக்குத் தெரியும்! நீ ஒண்ணும் சொல்ல வேணாம் என்பது போல,
"ம்.. ம்.." என்று முனகிவிட்டு கண்களை மூடிக் கொண்டார்.
அதற்கு மேல் அங்கு நின்றிருந்தால் மேலும் திட்டு விழும் என்று நன்றாகவே புரிந்திருந்தாலும் நகர மனமின்றி நின்றிருந்த ஷிவன்யாவை ராகவன் மெதுவாக அழைத்துக் கொண்டு வெளியில் வந்தார்.
"என்ன அங்கிள், அப்பா இப்டி பண்றார்?" என்று வெடித்து அழுத் தொடங்கினாள் ஷிவன்யா.
"அவனோட பிடிவாத குணம்தான் உனக்கு தெரியுமேம்மா! விடு! அவன இங்க இருக்கற டாக்டர் நர்ஸ் எல்லாம் நல்லா பாத்துக்குவாங்க! அதப்பத்தி நீ வொரி பண்ணிக்காத!" என்றார் ராகவன்.
அடுத்து அவள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அவளுடைய அப்பா இட்ட கட்டளையை ராகவன் ஒப்பித்ததும் அவளுக்கு தலையே சுற்றியது.
"என்ன? நா எங்க வீட்டுக்கு போகக் கூடாதா? அப்றம் என்ன சொன்னீங்க? நா உங்க தம்பி வீட்ல இருக்கணுமா? அங்க உங்களோட தம்பி மகன் கிட்ட நா கம்பெனி விவகாரங்கள் பற்றி கத்துக்கணுமா? என்ன அங்கிள் இதெல்லாம்? நா என்ன படிக்கணும்? என்ன செய்யணும்னு எல்லாம் இவரே முடிவெடுப்பாரா? எனக்கு என்ன ஆசைன்னு எல்லாம் காது குடுத்து கூட கேக்க மாட்டாரா? இதெல்லாம் டூ மச்! உங்க தம்பி மகன்.. யாரு.. இப்ப என்னை கோய்ம்புத்தூர்லேர்ந்து கூட்டிட்டு வந்துச்சே.. அந்த முசுடா.. ஹூம்.. அப்பா ஒரு ஹிட்லர்ன்னா இந்த முசுடு அவரோட ஜூனியர் ஹிட்லர்.." என்று படபடவென்று பொரிந்தாள்.
"உங்கப்பா எது செஞ்சாலும் சொன்னாலும்.." என்று ராகவன் ஆரம்பிக்கும்போதே,
"என் நல்லதுக்குதான்.. அததானே சொல்லப் போறீங்க! சந்தோஷம்.. ரொம்ப சந்தோஷம்.. போறேன்.. போய்த் தொலையறேன்.. உங்க தம்பி வீட்டுக்கே போய் அந்த முசுடு கிட்ட கம்பெனி விவகாரங்களை கத்துகிட்டு நாசமாப் போறேன்.." என்று ஒரு மூச்சு கத்தியவள்,
"ஆனா ஒண்ணு மட்டும் எனக்கு புரியல.. இவரோ ஒரு சின்ன கம்பெனில சாதாரண க்ளார்க் வேல பண்றவர்.. நீங்க அந்த கம்பெனில லீகல் அட்வைசர்.. இப்ப நா கம்பெனி விவகாரங்கள தெரிஞ்சிகிட்டு எந்த கம்பெனிய எடுத்து நடத்த போறேன்னு கொஞ்சம் வௌக்கறீங்களா?" என்று நக்கலாகக் கேட்டாள்.
"கம்பெனிய எடுத்து நடத்தினாதான் இதெல்லாம் கத்துக்கணும்னு இல்லையேம்மா.. நீ நாலு விஷயம் தெரிஞ்சிக்கணும்னு உங்கப்பா நெனக்கிறது ஒண்ணும் தப்பில்லையே.." என்று ராகவன் சொல்ல,
"அதானே! நீங்க உங்க ஃப்ரண்டை என்னிக்கு விட்டுக் குடுத்திருக்கீங்க!?" என்று கோபமாகக் கேட்கும்போதே அவளால் முசுடு என்று விளிக்கப்பட்டவன் அங்கு வந்தான்.
"பெரிப்பா.. போலாமா?" என்று பவ்யமாய் ராகவனைப் பார்த்துக் கேட்க,
"ஆமாம்ப்பா.. வா!" என்று அவனிடம் கூறிவிட்டு ஷிவன்யாவை அழைத்துக் கொண்டு நடக்கத் தொடங்க, அவன் அவர்களுக்கு முன்னால் நடந்தான்.
- தொடரும்....