கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

About Us

ஓம் ஸ்ரீ விக்னேஷ்வரர் துணை

ஸ்ரீலக்ஷ்மி என்கிற புனைப்பெயரில் இணைந்து எழுதும் லதா, உஷா சகோதரிகள் நாங்கள் என்று எங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதில் முதலில் பெருமையடைகிறோம்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்த எங்களின் எழுத்துப்பணி, இன்றுவரை தடங்கலில்லாமல் வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது எல்லாம் வல்ல இறைவன் அருளால்..

சென்னையைச் சேர்ந்த நாங்கள் தற்போது வசிப்பது பெங்களூரூவிலும், பூனேயிலும்.

இதுவரை 24 நெடுங்கதைகளும், 13 குறுநாவல்களும் அச்சேறி, புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கின்றன.

எங்கள் நெடுநாவல்களை ‘பிரியா நிலையம்’ மூலம் முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் திரு.ராஜசேகர் அவர்கள். எங்கள் வளர்ச்சிக்கு அன்றும், இன்றும், என்றும் பக்கபலமாக இருப்பவருக்கு நிச்சயம் எங்கள் முதற்கண் நன்றிகள்.

அடுத்து முக்கியமாய்ப் பக்கபலமாய் எங்களை ஆதரித்து, மென்மேலும் வளர ஏதுவாய் இருப்பவர் எங்கள் அன்புத் தோழி திருமதி.முத்துலட்சுமி ராகவன் அம்மா அவர்கள்தான். ‘லட்சுமி பாலாஜி பதிப்பகம்’ எங்கள் குறுநாவல்களை அச்சிட்டு எங்களுக்கு ஓர் கௌரவமான அடையாளத்தை எழுத்துலகில் தந்தது. திரு.ராகவன் ஐயாவுக்கும், திருமதி.முத்துலட்சுமி அம்மாவுக்கும் எங்கள் பலகோடி நன்றிகள் உரித்தாகுக..

எங்களின் ஒவ்வொரு கதைக்களமும் புது விதம்! ஒவ்வொன்றும் ஒரு புதிய பார்வையில் வித்தியாசமான கோணத்தில் கதை பேசும். புதிய சிந்தனைகள், நல்ல கருத்துக்கள், படிப்பவர்களைப் பண்படுத்தும் விதமாய்க் கதைகள், மனதை வருடும் மயிலிறகாய் இருக்கும் எங்கள் படைப்புக்கள். அவ்வகையில், எங்களின் புத்தகங்களைப் படித்திருப்பவர்கள் நிச்சயம் அதை உணர்ந்திருப்பார்கள்.

எழுத்துப்பணி ஆரம்பிப்பதற்கு முன், நாங்களும் நல்லதொரு வாசகிகள்தான். எங்கள் அன்னை திருமதி.சுபத்திரா அவர்கள்தான் எங்களுக்கு சிறு வயதிலேயே புத்தகம் படிக்கும் பழக்கத்தைத் தொடங்கி வைத்தார். அன்று தொடங்கிய எங்கள் படிக்கும் ஆர்வம் தொய்வடையாமல் இன்றுவரை பயணித்துக்கொண்டிருக்கிறது.

கதை, கவிதை, இலக்கியம் தரமான எதுவும் எங்கள் கண்களில் படாமல் சென்றதில்லை. அழுத்தமான கதைகளைப் படிப்பதில் அதிகஆர்வம் உள்ளவர்கள் நாங்கள்.

இன்றும் எழுத்தாளர்கள் என்று சொல்லுவதைவிட, நாங்களும் உங்களில் ஒருவராய் நல்ல வாசகிகள் என்று சொல்லத்தான் பிரியப்படுகிறோம்.

எழுத்தாளர்கள் என்ற அடையாளத்துடன் மட்டும் நில்லாமல், அடுத்த முயற்சியாய் பதிப்பகத்துறையிலும், தரமான புத்தங்கங்களை ஸ்ரீ பதிப்பகம் மூலம் பதிப்பித்து வழங்குகிறோம். பல தரமான எழுத்தாளர்களை இந்த தமிழுலகுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களின் புதினங்களைத் தொடர்ந்து அச்சிட்டு வருகிறோம்.

ஏற்கனவே இங்கே பலருடன் எங்களுக்கு அறிமுகமாகியிருந்தாலும், இங்கே உங்களுடன் மீண்டும் இணையதளம் மூலம் இணைய வந்துள்ளோம்.

எங்களுக்காகவும், எங்களைப் போன்ற பல எழுத்தாளர்களுக்காவும், பிரத்யேகமாக ஒரு தனித்தளத்தை இப்பொழுது தொடங்குகிறோம். இது எங்களின் மற்றொரு புதுமுயற்சி எனலாம்.

‘சங்கமம்நாவல்ஸ்’

இது ஒரு கூட்டு முயற்சியே.. எழுத்தாளர்களும், அவர்களை என்றும் ஆதரித்து வளர்க்கும் வாசகதோழமைகளும் ஒன்றாய்க் கைகோர்த்து வலம் வரப்போகும் ஒரு புதிய முயற்சிதான்.. இச் ‘சங்கமத்தின்’ பிறப்பு. தளிர் நடை போட்டு ஒற்றுமையாய் நடக்கப் போகிறோம் தோழமைகளே..

இது உங்களுக்கான தளம். உங்கள் எண்ணங்களின் வண்ணங்களை சித்திரமாய்த் தீட்டத் தயாராகுங்கள். உங்கள் கற்பனை சிறகை பறக்கவிடுங்கள்.

எழுத்துலகம் மட்டுமல்ல நம் நோக்கம்..

கதை, கவிதை, சமையல், ஆன்மீகம், பெரியோர்களின் நல்கருத்துக்கள், மருத்துவம், விஞ்ஞானம், இப்படி பலபல துறைகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

எல்லாமே உங்கள் கைத்தூரிகையில்தான்..

வாருங்கள் தோழமைகளே.. ‘சங்கமம்நாவல்சில்’ சங்கமித்து ஒன்றாய் நடை பயின்று வளருவோம்.. வெற்றிக்கனியைப் பறித்து ருசிப்போம்.

வாழ்வோம் என்றும் வளமுடன்..

Top