Annapurani Dhandapani
Active member
காதல் மொழி - 5
திருமணநாள் நெருங்கியது. சூரஜும் செல்வியும் வேலைக்கு இருபது நாட்கள் விடுப்பு எடுத்தனர். திருமணம் பெண் வீட்டில் நடப்பதால் திருமணமான மறுநாள் மாலை மருமகளை அழைத்துக் கொண்டு மும்பை கிளம்ப வேண்டும். அங்கு வரவேற்பு. அது முடிந்து தீன்தயாள் பிறந்த கிராமத்திற்குச் சென்று அங்கு கோவிலில் நேர்த்திக்கடனை செலுத்திவிட்டு மணமக்கள் இருவரும் தேன்நிலவுக்கு செல்ல திட்டமிட்டு எல்லா ஏற்பாடும் செய்யப் பட்டுவிட்டது.
தேன்நிலவு முடித்துக் கொண்டு சென்னை திரும்பி வந்த பின் தனி வீடு பார்த்து குடித்தனம் நடத்தவும் அவரவர் வேலையில் சேரவும் எண்ணியிருந்தனர். இப்போது கல்யாண வேலை இருப்பதால் திருமணத்துக்குப் பின் வீடு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டனர்.
மும்பையிலிருந்து சூரஜின் குடும்பத்தார் சென்னை வந்தனர்.
தீன்தயாள், கௌரி, சூரஜ், விராட், தீபிகா இந்த ஐவர் மட்டுமில்லாமல் கௌரியின் பிறந்தவீட்டுச் சொந்தம், தீன்தயாளின் உறவினர்கள், என கிட்டதட்ட முப்பது முப்பத்தைந்து பேர் வந்திருந்தனர். அவர்கள் வசதியாக தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் கிரிதரன் எல்லா ஏற்பாடும் செய்திருந்தார்.
கிரிதரன் வீட்டில் உறவினர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள்.
கிரிதரனுக்கு உடன் பிறந்தவர்கள் என்று யாரும் கிடையாது. உறவினர்களும் வெகு சிலரே! லட்சுமி அம்மாளின் தாய் வீட்டுச் சொந்தம் என்று ஓரிருவர் நேராக திருமணத்துக்கு வருவார்கள்.
மங்கையின் தாய் தந்தை தஞ்சை அருகே கிராமத்தில் வசிக்கிறார்கள். அவர்கள் ஒரு வாரத்திற்கு முன்னாலேயே கிராமத்திலிருந்து வந்துவிட்டனர். மங்கைக்கு உடன் பிறந்த சகோதரன் யாரும் இல்லை. ஒரு இளைய சகோதரி பூங்குழலி மட்டுமே. திருச்சியில் இருக்கிறாள். அவளும் தன் கணவன் மற்றும் குழந்தைகளுடன் வந்துவிட்டாள்.
பூங்குழலி ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறாள். அவள் கணவன் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று இப்போது பிரபல நாட்டுடமையாக்கப்பட்ட வங்கியில் மேலாளராகப் பணியாற்றுகிறார். பூங்குழலியின் பிள்ளைகளான ஆனந்தியும் ஆனந்தனும் இரட்டைப் பிறவிகள். ஒரே பிரசவத்தில் தனக்கு ஆனந்தத்தை அள்ளித் தந்ததால் குழந்தைகளுக்கு ஆனந்தன், ஆனந்தி என்று மங்கையின் சகோதரி பூங்குழலியும் அவள் கணவன் கீர்த்திவாசனும் பெயரிட்டார்கள். ஆனந்தன் பி ஈ முடித்துவிட்டான். நல்ல கம்பெனியில் ப்லேஸ்மென்ட் கிடைத்துவிட்டது. செல்வியின் திருமணம் முடிந்ததும் பெங்களூரு செல்லவிருக்கிறான். அவன் தங்கை ஆனந்தி எம் காம் முதலாண்டு முடித்திருக்கிறாள். இருவரும் செல்வியைப் போன்றே சிவந்த நிறத்தில் வசீகரிக்கும் அழகுடன் இருந்தார்கள்.
அன்று சூரஜின் குடும்பத்தார் செல்வியைப் பார்க்க வருவதாக இருந்தது. அதனால் அன்று செல்வி தன் சகோதரி ஆனந்தியுடன் அழகு நிலையம் சென்றிருந்தாள். சகோதரிகளின் துணைக்கு ஆனந்தனும் வந்திருந்தான். அங்கு சென்று மணப்பெண் அலங்காரத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு ஃபேசியல் செய்து கொண்டு வரும் போது வழியில் இருந்த ஐஸ்க்ரீம் பார்லரில் ஐஸ்க்ரீம் சாப்பிட சென்றனர்.
இளையவர்கள் இருவரும் செல்வியைக் கிண்டல் செய்தபடி ஐஸ்க்ரீமை சாப்பிட்டனர். செல்வி வெட்கத்தில் சிரித்தபடி சாப்பிட்டாள். பேச்சும் சிரிப்புமாக இருந்தவர்களை மற்றவர்கள் ஒருமாதிரி பார்க்கவும் கொஞ்சம் அடக்கி வாசித்தனர். சாப்பிட்டு முடித்து கிளம்பினார்கள்.
இவர்கள் பேச்சும் சிரிப்புமாக இருந்ததை ஒரு ஜோடி விழிகள் வியப்பாகப் பார்த்துவிட்டுத் திரும்பிக்கொண்டது.
ஆனந்தன் பில்லுக்கு பணம் செலுத்திவிட்டு காரை எடுக்கச் சென்றான். சகோதரிகள் இருவரும் கொஞ்சம் பின்னால் வந்தனர். அப்போது ஒரு இளைஞன் வந்து செல்வியின் மேல் இடித்தான். அருகில் ஒரு பேரரும் இருந்தான். அவள் மேல் தப்பில்லையென்றாலும் செல்வி ஸாரி சொல்லி நகர அவன் அவளுக்கு மிக அருகில் வந்து ஏதோ கேட்டான். பேரர் செல்வியை ஒரு மாதிரி பார்த்தான். ஆனந்தி பயந்துவிட்டாள். செல்வி இருவரையும் கனல் கக்கும் பார்வை பார்த்து கேள்வி கேட்டவன் கன்னத்தில் பளார் என்று அறைந்தாள். ஆள்காட்டி விரலைக் காட்டி எச்சரித்துவிட்டு தங்கையின் கையைப் பிடித்து ஏறக்குறைய இழுத்துக் கொண்டு காருக்குச் சென்றாள்.
அந்த ஒரு ஜோடி விழிகள் இப்போது அதிர்ச்சியைக் காட்டியது.
என்னவென்று கேட்ட தம்பியிடம்,
"ஒண்ணுமில்ல. ரொம்ப அசிங்கமா பேசினான். அதான் அறஞ்சேன்!" என்று அவன் கூறிய வார்த்தையைக் கூறினாள் செல்வி.
கோபமாக ஓடிப்போய் தன் பங்குக்கு அந்த இளைஞனை ஒரு அறைவிட்டு எச்சரித்துவிட்டு வந்தான் ஆனந்தன். சிறிது நேரம் கோபமாய் இருந்தனர். திரும்பவும் இளையவர்கள் இருவரும் தங்கள் கிண்டலை தொடங்கவும் மூவருமே இந்த நிகழ்ச்சியை சுத்தமாக மறந்தே போனார்கள்.
ஆனால் இந்த ஒரு நிகழ்வு இவர்கள் மூவரின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை மூவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
மாலை சூரஜின் குடும்பத்தார் வரும்போது செல்வி எளிமையாய் ஆனால் அழகாய் அலங்காரம் செய்து கொண்டாள்.
மங்கையும் பூங்குழலியும் வந்திருந்த விருந்தினர்களை வரவேற்று டிபன் பரிமாறினார்கள். சாப்பிட்ட பின் செல்வியை பார்க்க வந்தனர். ஆனால் தீபிகா வந்தவுடனேயே செல்வியின் அறைக்குப் போய்விட்டாள். ஆனந்தியைப் பார்த்ததும் அவளை தன் தோழியாக்கிக் கொண்டும் விட்டாள். ஆனந்திக்கும் தீபிகாவை மிகவும் பிடித்துவிட்டது. ஆனந்தியும் தீபிகாவும் ஹிந்தியில் பேசிக் கொண்டனர்.
கிரிதரன் சூரஜுக்கு ஆனந்தனையும் கீர்த்திவாசனையும் அறிமுகம் செய்து வைத்தார். கீர்த்திவாசன் சூரஜிடம் ஹிந்தில் பேசினார். சூரஜும் அவரிடம் ஹிந்தியில் பேசினான்.
ஆனந்தன் சூரஜைப் பார்த்து, "நிஜமாவே ஹீரோன்னா இவர்தான் ஹீரோ!" என்று நினைத்தான்.
சூரஜ் தன்னைப் போலவே கம்பீரமாக முறுக்கு மீசையுடன் இருக்கும் தன் தம்பி விராட்டை அறிமுகப்டுத்தினான். விராட் ஆனந்தனைப் பார்த்ததும் ஏதோ கேட்க வந்தான். ஆனால் ஒன்றும் கேட்காமல் விட்டுவிட்டான்.
சூரஜ் கிரிதரனிடம் சொல்லிவிட்டு விராட்டை கூட்டிக்கொண்டு செல்வியைக் காண வந்தான். செல்வி விராட்டைப் பார்த்து, இவரும் முறுக்கு மீசைக்காரர்தானா என்று நினைத்தாள்.
விராட் செல்வியைப் பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்தாலும் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. ஆனந்தியைப் பார்த்ததும் அவனுக்கு ஏனோ கொஞ்சம் மனம் அமைதி அடைந்தது போல இருந்தது.
ஆனந்தன் உள்ளே இருக்கும் அனைவருக்கும் டிபன் மற்றும் ஜூஸ் எடுத்துக் கொண்டு உள்ளே வந்தான். ஆனந்தி தீபிகாவுக்கு ஆனந்தனை அறிமுகம் செய்து வைத்தாள். ஆனந்தன் தீபிகாவைப் பார்த்து மயங்கியே விட்டான்.
சூரஜ், விராட், தீபிகா மூவருமே ஆனந்தனையும் ஆனந்தியையும் மாறி மாறிப் பார்த்து அதிசயப்பட்டுப் போனார்கள். மூவருக்கும் செல்வி மட்டும் அழகல்ல, அவள் சகோதரன் சகோதரியும் கூட அழகுதான் என்று தோன்றியது.
அதே போலவே செல்விக்கும் அவளுடைய இளையவர்கள் இருவருக்கும் சூரஜும் அவனுடைய தம்பியும் தங்கையும் அழகுதான் என்று தோன்றியது.
ஆனால் விராட்டிற்கு செல்வியை மட்டும் பிடிக்கவில்லை. ஆனால் நாளை மறுநாள் திருமணம். எல்லா ஏற்பாடும் செய்தாயிற்று. அப்படியே திருமணத்தை நிறுத்திவிடலாம் என்றாலும், என்னவென்று காரணம் சொல்வது? மாப்பிள்ளையின் தம்பிக்கு மணப்பெண்ணை பிடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா? எப்படியும் இந்தப் பெண் மும்பையில் தன் கண் முன்னே வரப்போவதில்லை. அப்புறம் என்ன? ஆனால் அண்ணன் பாவம்! அவன் தலையெழுத்து இப்படித்தான் என்றால், யாரால் என்ன செய்ய முடியும். தமிழ்ப் பெண் வேண்டாம் என்றேனே! கேட்டானா? இவளால் குடும்பத்தில் என்னென்ன குழப்பம் வரப்போகிறதோ? கடவுளே! ஆனால் நான் இந்தக் குடும்பத்துக்கு எந்தக் கெடுதலும் வரவிட மாட்டேன்! என்று மனதில் நினைத்துக் கொண்டான்.
கௌரிக்கும் பூங்குழலியை பிடித்துவிட்டது. அக்கா தங்கை இருவரும் ஒரே மாதிரி உருவத்தில் மட்டுமல்ல, குணத்திலும் ஒரே மாதிரி இருக்கிறார்கள் என்று நினைத்தாள். இவர்களின் பெற்றோரையும் குனிந்து பாதம் தொட்டு வணங்கினாள். மங்கையின் தாயும் மாமியாரும் நெருங்கிய தோழிகள் போல பழகுவதைப் பார்த்து கெளரி மங்கையிடம் நானும் நீங்களும் இப்படிதான் எப்போதும் இருக்க வேண்டும் என்று கூறினாள். கீர்த்திவாசன் இதை மொழி பெயர்த்து விளக்க, மங்கைக்கு கண்கள் பனித்தது. பூங்குழலி வந்து தமக்கையை அணைத்துக் கொண்டாள்.
"நம்ம செல்வி குடுத்து வெச்சவ! ரொம்ப சந்தோஷமா இருக்குக்கா! அவ மாமியார் எவ்ளோ அன்பா இருக்காங்கல்ல! முதல்ல பொண்ணையும் மாப்ளையையும் உக்கார வெச்சி உம்மாமியார வெச்சி சுத்தி போடச் சொல்லுக்கா!" என்றாள்.
சொன்னது மட்டிமில்லாமல் லட்சுமி அம்மாளிடம் சென்று தானே சொல்லவும் செய்தாள். அவரும் மணமக்கள் இருவரையும் அமர்த்தி சுற்றிப் போட்டார்.
மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் பெண் வீட்டாரிடம் விடைபெற்றுக் கொண்டு தாங்கள் தங்கியிருக்கும் இடத்துக்குச் சென்றனர்.
ஆனந்தனும் ஆனந்தியும், செல்வியிடம், "அக்கா! மாமா செம்ம ஸ்மார்ட்!" என்று ஒரே குரலில் கூற செல்வி வானில் பறந்தாள்.
மறுநாள் அனைவரும் திருமண மண்டபத்தில் குழுமியிருந்தனர். இரு வீட்டாரின் முறைப்படியும் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூட்டம் ஜே ஜே என்று இருந்தது.
செல்வியுடன் வேலை செய்பவர்கள், நாராயணி, சூரஜுடன் வேலை செய்பவர்கள், கிரிதரனுடன் வேலை செய்பவர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் என அனைவரும் வந்திருந்தனர்.
ஒருபக்கம் அலங்காரங்கள் தோரணங்கள் கண்ணைப் பறித்தன. இசை தட்டு இனிய இசையை அரங்கம் முழுவதும் நிறைத்தது. விதவிதமான தென்னிந்திய வடஇந்திய உணவு வகைகள் வந்தவர்கள் வயிற்றை மட்டுமல்ல நெஞ்சையும் நிறைத்துக் கொண்டிருந்தது.
மணப்பெண்ணுக்கு அழகு நிலையத்திலிருந்து அழகு நிபுணர்கள் வந்து அலங்காரம் செய்தனர்.
பெண்கள் எல்லாம் பட்டுப் புடவையில் மின்னிக் கொண்டு இருந்தார்கள். கிரிதரனும் கீர்த்திவாசனும் ஏற்பாடுகளை கவனித்து கொண்டிருந்தார்கள். பூங்குழலியும் மங்கையும் இவர்களுக்கு உதவினார்கள். ஆனந்தனும் விராட்டும் நண்பர்களாகி வந்தவர்களை கவனிக்க ஆனந்தியும் தீபிகாவும் செல்விக்கு தோழிகளாய் மாறிப் போனார்கள்.
பாட்டன் பாட்டி மூவரும் இந்த கோலாகலத்தைக் கண்டு மனம் மகிழ்ந்தார்கள்.
மாலை மெஹந்தி நிகழ்ச்சி முடிந்து பிறகு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
தீபிகா செல்விக்கு சந்தனம் பூசி பொட்டு வைத்து பூ வைத்து மாலை போட்டு புதிய தங்கச்செயினை அணிவித்துவிட்டாள். ஆனந்தன் சூரஜுக்கு சந்தனம் பூசி பொட்டு வைத்து மாலை போட்டு மோதிரம் போட்டுவிட்டான். ஐயர் லக்னப் பத்திரிகை வாசித்தார்.
மறுநாள் கல்யாணம். இருவீட்டு முறைப்படியும் சடங்குகள் நடைபெற்று அடுத்த அரைமணியில் மாங்கல்ய தாரணம் என்பதால் அனைவருக்கும் பரபரவென்று இருந்தது.
மணமக்கள் முதலில் மாலை மாற்றி அக்கினி குண்டத்தைச் சுற்றி வந்தனர். பின்னர் மங்கல இசை முழங்க சூரஜ் தமிழ்ச்செல்வியின் கழுத்தில் மங்கல நாண் பூட்டினான். தீபிகா செல்வியின் கழுத்தில் சூரஜ் கட்டிய தாலிக்கு மங்கையும் பூங்குழலியும் கற்றுக் கொடுக்க மூன்றாவது முடிச்சை அழுத்தமாகப் போட்டுவிட்டாள். அனைவரும் அக்ஷதை தூவி மணமக்களை வாழ்த்தினர். சப்தபதி முடிந்தது. சூரஜும் செல்வியும் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அக்கினியை மூன்று முறை வலம் வந்தனர். ஆனந்தன் தமக்கைக்காக அக்கினியில் பொறியிட்டான். திருமண வைபவம் இனிதே முடிந்தது.
மணமக்கள் இருவரும் முதலில் மூத்தவர்களில் தம்பதியாய் இருக்கும் மங்கையின் பெற்றோருக்கு நமஸ்காரம் செய்துவிட்டு லட்சுமி அம்மாளின் கால்களில் விழுந்து வணங்கினர். பின்னர் தீன்தயாள் கௌரி தம்பதியின் கால்களில் விழுந்து வணங்கினர். தீன்தயாள் கண்ணீருடன் வாழ்த்த கௌரி செல்வியை அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள். கிரிதரனும் மங்கையும் ஆனந்தக் கண்ணீர் மல்க தன் காலில் விழுந்து வணங்கும் மணமக்களை நெஞ்சம் நிறைந்து வாழ்த்தினர். பூங்குழலியும் கீர்த்திவாசனும் மனமகிழ்ச்சியுடன் வாழ்த்தினர்.
வந்தவர்கள் அனைவரும் மனம் மகிழும்படி கல்யாண விருந்து தடபுடலாய் இருந்தது. கிரிதரனும் கீர்த்திவாசனும் ஆனந்தனும் ஓடி ஓடி கவனித்தனர்.
மணமக்கள் இருவரும் விருந்து சாப்பிடும்போது ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டுக் கொண்டனர். அருகில் விராட், தீபிகா, ஆனந்தன், ஆனந்தி என இளையவர்களும் கௌரி, தீன்தயாள், மங்கை, பூங்குழலி, கிரிதரன், கீர்த்திவாசன் மற்றும் பாட்டன் பாட்டிகள் என அனைத்து பெரியவர்களும் கிண்டல் செய்து சிரிக்க மணமக்கள் வெட்கத்தில் நெளிய அதற்கும் உறவினர் பட்டாளம் சிரிக்க அரங்கமே கோலாகலம் அடைந்தது.
திருமணமான முதல் நாள் இரவு. கௌரியும் தீன்தயாளும் மண்டபம் ஹோட்டலில் எல்லாம் கூடவே கூடாது. பெண் வீடோ பிள்ளை வீடோ! வீட்டில்தான் சாந்தி முகூர்த்தத்தை நடத்த வேண்டும் என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்கள். அதனால் கிரிதரனின் வீட்டிலேயே சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மணமக்கள் இருவரையும் வீட்டில் விட்டுவிட்டு பெரியவர்கள் அனைவரும் காலையில் வருவதாகக் கூறிவிட்டு மண்டபத்திற்குச் சென்றுவிட்டனர்.
சூரஜும் தமிழ்ச்செல்வியும் அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் அழகாக அலங்காரம் செய்து கொண்டு அருகருகே அமர்ந்திருந்தனர். இருவரும் ஒரு மாதிரி படபடப்பாய் உணர்ந்தனர்.
"டமில்!"
"ம்."
"ஒரு மாத்ரி நெர்வஸா இருக்குல்ல!"
"ம்."
அவன் மெதுவாக பேச ஆரம்பித்தான்.
"எல்லாத்துக்கும் முன்னாடி நம்ம கொஞ்சம் பேச வேண்டியிருக்கு டமில்! ஏன்னா அதுக்கப்புறம் நம்ம கவனம் வேற மாதிரி போயிடும். நான் பேச வேண்டியத சுத்தமா மறந்திடுவேன்!"
"என்ன சூரஜ்?"
"ம். நம் லைஃப் பத்திதான்! நா ஒரு ப்ரமோஷன்காக வெய்ட் பண்றேன்! அது கிடைச்சுத்ன்னா கொஞ்சம் ஈஸி. ஏன்னா, தீபிகா ஸ்டடீஸ், அவ கல்யாணம், விராட் லைஃப்ல செட்டில் ஆகணும். இத்னையும் இந்தப் ப்ரமோஷன நம்பிதான் இர்க்கு. எப்டியும் அது வர ஒரு வருஷம் ஆகலாம். ப்ராமோஷன் கிடக்கலன்னா பெர்ய ப்ராப்ளம் இல்ல. மாப்ள வீட்ல டென் பவுன் கேட்டா நம்ளால ஃபைவ்தான் போடமுடியும். அவ்ளவுதான். அவ மேல படிக்ணும்னா கொஞ்சம் கஷ்டப்பட்டு ஃபீஸ் கட்டுவோம். அத்னால அந்த ப்ரமோஷன் என்க்கு ரொம்ப முக்யம். ஆனா அந்த ப்ரமோஷன் கிட்க்க நா ஒரு ட்ரெயினிங் அட்டெண்ட் பண்ணனும். அத்க்கு என்ன யூஎஸ் அனுப்வாங்க! ஸிக்ஸ் மன்த்ஸ்க்கு! ஆனா உன்ன கூட்டிட்டு போக முட்யாது! நீ புரிஞ்சுப்பியா டமில்?"
"இப்ப என்ன சொல்ல வரீங்க?"
"ம். அது வந்து?!?"
"கடவுளே! ஏங்க? உங்களுக்கு ப்ரமோஷன் முக்யம்! அது கிடைக்கணும்னா யூஎஸ் போவீங்க! ஓகே! ட்ரெய்னிங்க்றதுனால என்ன கூட்டிட்டு போக முடியாது! ஓகே! இதுனால நம்ம குடும்பம்தானே நல்லாருக்கும்! அது நல்லதுதானே! அப்றம் என்ன?"
"ம்.... வந்து டமில்!......நீ.." சொல்ல முடியாமல் தவித்தான்.
"நானும் வேலைக்குப் போய்கிட்டிருக்கேன்! அந்த சம்பளம் முழுசா உங்க கிட்ட தந்துடறேன்! ஓகேயா?"
"ம்ஹூம்! அதில்ல!" அவசரமாக மறுத்தான்.
"பின்ன என்னங்க! உங்களுக்கு சுத்தி வளச்சி பேசத் தெரியாதுன்னு எனக்கு தெரியும். சொல்லுங்க!"
"அத்னால...."
"சரி விடுங்க! நீங்க என்ன நெனக்கறீங்களோ அதுதான் நடக்கும். நான் எப்பவுமே உங்க விருப்பத்துக்கு மாறா நெனக்கவும் மாட்டேன். நடக்கவும் மாட்டேன்!"
"இல்ல.... வந்து... டமில்.... அது.....!"
"விட்ருங்க சூரஜ்! தவிக்காதீங்க! நான்தான் சொல்லிட்டேன்ல! உங்க விருப்பத்துக்கு மாறா நெனக்கவும் மாட்டேன். நடக்கவும் மாட்டேன்னு! அப்றம் என்ன!"
"நா என்ன சொல்ல வரேன்னு புர்யுதா?"
"புரியாமதான் இவ்வளவு பேசறேனா?"
"உன்க்கு பரவால்யா?"
"கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு! ஆனா பெரிய வருத்தம்னு சொல்ல முடியாது. நம்ம ஃபேமிலிக்காக சில தியாகங்கள் செய்யதான் வேணும்! ஆனா நம்ம ஒண்ணும் ஒரேடியா வேணாம்னு வெக்கலியே! கொஞ்சம் தள்ளிதான போட்டிருக்கோம்! பரவால்ல! உங்க விருப்பம்தான் என் விருப்பம். உங்க சந்தோஷம் என் சந்தோஷம்."
சூரஜ் கண்கலங்கிவிட்டான்.
"ஸாரி டமில்! நான் ரொம்ப செல்ஃபிஷ்ஷா நடந்துக்றேன்ல! ஸாரியா! பட் ஐ ஆம் ஹெல்ப்லெஸ்!"
"ஹேய்! கமான் சூரஜ்! இதுல செல்ஃபிஷ்னெஸ் எங்க வந்தது? முதல்ல கண்ண தொடைங்க! ஐயைய! என்ன இது சின்ன குழந்தை மாதிரி! நான் என்னமோ ராத்தோட் ஃபேமிலின்னா ராஜ்புட்ஸ்ன்னு நெனச்சேன்! அப்ப நீங்க பெரிய வீர பரம்பரை இல்லையா! நான்தான் ஏமாந்துட்டேனா! ஹையோ!"
அவன் கண்ணைத் துடைத்துக் கொண்டு அவள் கைகளை கண்ணில் ஒற்றிக் கொண்டான்.
குடும்பத்திற்காக ஏதோ பெரிய தியாகம் செய்வதாய் நினைத்துக்கொண்டு இருவரும் ஒரு தப்பான முடிவை எடுத்தனர். அதனால் வருங்காலத்தில் வரப்போகும் சூறாவளியைப் பற்றி சிறிய குறிப்பு கிடைத்திருந்தால் கூட இருவரும் சுதாரித்திருப்பர். ஆனால் விதி வலியதன்றோ?
"சரி! நான் அந்த ரூம்ல போய் தூங்கறேன். நீங்க இங்க தூங்குங்க!" என்று எழுந்தாள்.
"இல்ல. குழந்தைதான் வேண்டாம்னு சொன்னேன். மத்தபடி.." அவள் கையைப் பிடித்து தன்னருகில் அமர வைத்தான்.
"ஆனா எப்டி?"
"ம்.. சேஃப்டி மெஷர்ஸ் எடுத்தா.."
"ம்...இது வொர்க் அவுட் ஆகுமா? பின்னாடி நம்ம ஹெல்த்துக்கு எதும் ப்ராப்ளம்.."
"இல்ல. நான் எல்லாத்தையும் கன்ஃபர்ம் பண்ணிட்டேன்!"
"ம்..!
சிறிது நேரம் அங்கே மௌனம் நிலவியது. செல்விக்கு பயமாகவும் வெட்கமாகவும் இருந்ததென்றால், சூரஜுக்கு படபடப்பாக இருந்தது. அவனே முதலில் பேசட்டும் என்று அவளும், அவளே முதலில் பேசட்டும் என்று அவனும் மௌனமாய் இருந்தனர். ஆனால் எவ்வளவு நேரம்? ஒரு வழியாக சூரஜே பேசத் தொடங்கினான்.
"டமில்!"
"ம்!"
"என்ன ஒண்ணும் பேச மாட்ற? என் மேல கோவமா?"
"ம்ஹூம்..
சூரஜ் மெதுவாய் அவள் கைகளைப் பிடித்து தன் கையோடு கோர்த்துக் கொண்டான். இருவரும் தங்களுடைய திருமண வாழ்வின் காதல் அத்தியாயத்தை இனிதே தொடங்கினர்.
காலை எப்போதுமே சீக்கிரம் எழுந்து பழக்கமுடையதால் செல்விக்கு சீக்கிரமே முழிப்பு வந்தது. வெளியில் வெளிச்சம் வந்திருக்கவில்லை. அறைக்குள் நைட்லேம்ப் வெளிச்சம் பரவியிருந்தது. தன்னை அணைத்தபடி உறங்கும் தன் காதல் கணவனை அன்புடன் பார்த்தாள். அவன் என்றைக்கும் விட இன்று மிகமிக அழகாக இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அவனுடைய நெற்றியில் முத்தமிட்டு அவனுடைய மீசையை ஆசையாய் தடவினாள். அவன் அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான். செல்லில் மணி பார்த்தாள். நாலேமுக்கால் என்று காட்டியது. எழுந்து கொள்ள முயன்றாள். அவன் அவளை விடாமல்,
"மணி என்ன?" என்று ஹிந்தியில் கேட்டான். அவள் நாலே முக்கால் என்று தமிழில் கூறினாள்.
"வாட்?"
"ஃபோர் ஃபாட்டி ஃபைவ்!"
"அத்க்குல் எதுக் எல்ந்த்க்ர?"
"அம்மா வந்துடப் போறாங்க!"
"அம்மால்லாம் ஏழ் மணிக்தான் வர்வாங்க!"
"ஏழு மணிக்கா? அப்ப அதுவரைக்கும் என்ன பண்றது?"
"என்ன பண்றதா? ந்யூலி மேரீட் ஹஸ்பண்ட் பக்கத்ல இர்க்கும்போத் இப்டி கேக்லாமா? நம்ம ரெண்ட் பேர்ம் பண்றத்கு நெற்ய இர்க்கு! நா சொல்றேன் வா!" என்று இறுக்கினான்.
"இல்ல! நான் போய் யோகா பண்றேன்!" என்று சொல்லி எழ முயன்றாள்.
"யோகாதானே! நா ஒரு புது யோகா சொல்லித்தரேன்!" என்று ஹந்தியில் கொஞ்சிக் கொண்டே அவளை இன்னும் இறுக்கிக் கொண்டான். சிரித்துக் கொண்டே அவள் அவனுடைய அணைப்பில் அடங்கிப் போனாள்.
பெற்றவரும் பெரியோரும்
உற்றவரும் நண்பர்களும்
கூடியே வாழ்த்தி நிற்க
இருமனங்கள் இணைந்தனவே!
மங்கையவள் மன்னவன் கையால்
மங்கலநாண் சூட்டிக் கொண்டாள்!
மன்னவனும் தன்னவளின்
பேரெழிலில் மயங்கி நின்றான்!
திருமணத்தில் வாழ்த்திடவே
வந்த சில உற்றாரின் கண்கள்
கரம் கோர்த்துக் காதல் செய்யத்
துணையொன்றைத் தேடினவே!
புதிதாக எரிமலை ஒன்று
உள்ளுக்குள் கொதித்திருக்கத்
தணலும் நாளை தணிந்திடுமோ?
வெறுப்பையும் உமிழ்ந்திடுமோ!
காலம் தான் பதில் சொல்லும்!
தலைவியும் தன்னவன் உறவுகளை
அன்பால் வென்றிடுவாள்!
அகிலத்தை ஆட்சி செய்வாள்!
- C. புவனா.
- காதலின் மொழி என்ன?