Annapurani Dhandapani
Active member
காதல் மொழி – 4
கிரிதரனும் மங்கையும் வீட்டை அழகாக அலங்கரித்திருந்தனர். மங்கை தடபுடலாக விருந்து தயார் செய்து கொண்டிருந்தாள். தமிழ்ச்செல்வியும் அம்மாவுக்கு ஓடி ஓடி உதவி செய்தாள்.
"போதும் செல்வி! முகம் கழுவி ரெடியாகு! அவங்கல்லாம் வந்துடுவாங்க!" மங்கை சொன்னாள்.
"சரிம்மா!" உள்ளே போனாள்.
லட்சுமி அம்மாள் எப்போதும் போல் பளிச்சென்று ரெடியாகி வந்து அமர்ந்து கொண்டார்.
சூரஜ் சரியாக பத்து மணிக்கு தமிழ்ச்செல்வியின் வீட்டுக்கு, தன் பெற்றோருடனும் தங்கையுடனும் வந்தான்.
வந்தவர்களை "வாங்க! வாங்க!" என்று வாய் நிறைய தமிழில் கூறி அன்பாய் வரவேற்று அமர வைத்தனர் கிரிதரன் மங்கையர்க்கரசி தம்பதியர். கிரிதரன் வேட்டியணிந்து முழுக்கை சட்டை அணிந்திருந்தார். மங்கையர்க்கரசி கத்தரிக் கலரில் கல்யாணி காட்டன் புடவை கட்டியிருந்தாள்.
மங்கை சூரஜைப் பார்த்து பிரமித்து விட்டாள். தன் மகளுக்கு ஒரு ராஜகுமாரனே மணாளனாய் கிடைக்க அந்த இறையருள்தான் காரணம் என மனம் நிறைந்து போனாள்.
சூரஜ் வெண்சங்கு (Cream) நிறத்தில் முழுக்கை சட்டை அணித்து அடர் நீல நிறத்தில் கால் சட்டை அணிந்திருந்தான். கறுப்பு ஷூ சாக்ஸை கழற்றிவிட்டு வரும்போது அவன் கால்கள் கூட ஒரு குழந்தையின் பாதங்கள் போன்று சிவந்து இருந்தது. பார்ப்பதற்கு மஃப்டியில் வந்த மகாராஜா போலவே இருந்தான். அவன் கண்களில் தெரியும் துறுதுறுப்பும் இதழ்களில் இருக்கும் குறுநகையும் அவன் அழகுக்கு அழகு சேர்ப்பது போல இருந்தது. எப்போதுமே அழகாய் இருப்பவன் இன்று கூடுதல் அழகாய் தெரிந்தான்.
கிரிதரனையும் மங்கையையும் பார்த்து கரம் குவித்து "வண்க்கம் மாமா! வண்க்கம் மாமி!" என்று வணங்கினான். குனிந்து லட்சுமி அம்மாளின் பாதம் தொட்டு "வண்க்கம் பாட்டி!" என்று வணங்கினான்.
மங்கை, "யூ மஸ்ட் கால் மீ அத்தை!" என்று திருத்தினாள்.
"ஓ! சாரி! வண்க்கம் அத்தை!" என்றான். லட்சுமியும் மங்கையும் சிரித்துக் கொண்டனர்.
அவர்கள் அனைவருமே நல்ல உயரமாய் இருந்தனர். சிவந்த நிறத்தில் இருந்தனர். சூரஜின் அம்மா கௌரி அமர்த்தலான அழகுடன் இருந்தாள். வடகத்தி முறைப்படி புடவை அணிந்து புடவையின் தலைப்பை தலையில் முக்காடு போல போட்டிருந்தாள். கைகுவித்து "ராம்! ராம்!" என்று கூறினாள். குனிந்து லட்சுமி அம்மாளின் பாதம் தொட்டு வணங்கினாள். எல்லாரிடமும் மிக மிக அன்பாகப் பழகினாள். அவள் பேசுவதை சூரஜ் தமிழில் விளக்கினான்.
சூரஜின் அப்பா சௌக்கார்பேட்டை சேட்டு போல வெள்ளை குர்த்தா வெள்ளை வேட்டி கட்டி டர்பன் அணிந்திருந்தார். அவரும் கைகுவித்து வணங்கி செய்கையால் வணக்கம் சொன்னார். அவரும் குனிந்து லட்சுமி அம்மாளின் பாதம் தொட்டு வணங்கினார். அவரால் எதுவும் பேச கேட்க முடியாவிட்டாலும் அவருக்கு சொல்லி விளக்கி அவரைக் கேட்டே எல்லாரும் பேசினார்கள்.
அனைவரிடமும் தன்னையும் தன் குடும்பத்தாரையும் அறிமுகம் செய்துகொண்டு, "எங்க ரெண்டாவது பையன் ஐ பி எஸ் பாஸ் பண்ணிட்டான். இப்ப ட்ரெய்னிங் போயிருக்கான். கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்திடுவான்!" என்றாள் கௌரி. சூரஜ் இதை தமிழில் சொன்னான்.
சூரஜின் தங்கை பால் நிறத்தில் வெள்ளையாக அவனுக்கு இணையான உயரத்துடன் அப்பழுக்கற்ற அழகுடன் மலர்ந்த தாமரை போன்று சிரித்த முகமாய் இருந்தாள். அழகான சிவப்பு நிற டிசைனர் சுடிதாரில் தேவதை போல இருந்தாள். அவளும் அனைவரையும் பார்த்து கரம் குவித்து "ராம்! ராம்!" என்று கூறி வணங்கிவிட்டு குனிந்து லட்சுமி அம்மாளின் பாதம் தொட்டு வணங்கினாள். மங்கையும் லட்சுமி அம்மாளும் தீபிகாவின் அழகைக் கண்டு அசந்து விட்டனர்.
கௌரி இந்தியில் சொன்னாள், "சூரஜ் உங்க பொண்ண பிடிச்சிருக்குன்னு சொன்னான். அவனுடைய விருப்பம்தான் என்னுடைய விருப்பம். அவனுக்கு எது சந்தோஷமோ அதுதான் எனக்கும் சந்தோஷம். அதனாலதான் அவன் விருப்பத்த நிறைவேற்ற உடனே கிளம்பி வந்துட்டோம்." சூரஜ் இதை தமிழில் கூறினான்.
கிரிதரன் கூறினார், "எங்களுக்கும் அப்படிதான். ஒரே பொண்ணுதான். அவ விருப்பம் தான் எங்க விருப்பம். படிப்பு முடிச்சி இந்த ஸ்கூல் வேலைக்குப் போறேம்பான்னு சொன்னா! சரின்னு சொன்னோம். இப்ப கூட உங்க பையன பிடிச்சிருக்குன்னா! சரின்னு சொல்லிட்டோம்."
செல்வி காராத்தே ப்ளாக் பல்ட் ஹோல்டர்! காலேஜில் வாலிபால் டீம் கேப்டன். தினமும் விடாமல் யோகா செய்து வருகிறாள் என்று கிரிதரன் சொன்னதும் சூரஜும் அவன் குடும்பத்தாரும் ஆச்சரியமானார்கள்.
அதுவும் அவள் இந்த பள்ளி வேலைக்குப் போவது கௌரிக்கும் தீன்தயாளுக்கும் உண்மையாகவே நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
டமில் இஸ் ரியலி மல்ட்டி டேலன்டட் என்று சூரஜ் நினைத்தான்.
தீபிகா ஆங்கிலத்தில் கேட்டாள், "நான் போய் அண்ணிய பாக்கலாமா?"
"யெஸ்!" உள்ளே பார்த்து, "அரசி!" என்று அழைத்தார்.
கிரிதரன் மனைவியிடம் சொல்லி தீபிகாவை தமிழ்ச்செல்வியிடம் அழைத்துச் செல்லச் சொன்னார்.
"ஷீ இஸ் இன்சைட்! யூ கோ அன் டாக் டு ஹர்!" என்று தீபிகாவை தமிழ்ச்செல்வியின் அறைக்குள் அனுப்பிவிட்டு பழச்சாறு பரிமாற சென்றாள் மங்கை.
"ஹலோ! பாபி! ஐ ஆம் தீபிகா!" என்று உள்ளே நுழைந்தாள்.
தமிழ்ச்செல்வியைப் பார்த்ததும் அசந்தே போனாள் தீபிகா. அவளால் தன் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. தன் இரு கைகளால் தமிழ்ச்செல்வியின் கன்னங்களைக் மென்மையாய் கிள்ளி முத்தமிட்டாள்.
"பாபி! ஆப் பஹுத் கூப்சூரத் ஹைன்!" என்று தன்னைப் பார்த்து சொன்ன அந்த பால் நிறத்து அழகியை கண்கொட்டாமல் பார்த்தாள் தமிழ்ச்செல்வி.
"......."
"பாபி! பாபி!" தமிழ்ச்செல்வியின் முகத்தின் முன்னே விரலைச் சொடுக்கி அவளை நிகழ்வுக்குக் கொண்டுவந்தாள்.
ஆங்கிலத்தில் சொன்னாள், "ஓ! அதுக்குள்ள அண்ணனோட ட்யூயட் பாடப் போயிட்டீங்களா!"
வெட்கத்தில் தமிழ்ச்செல்வியின் முகம் குங்குமம் போலச் சிவந்தது கண்டு தீபிகா ஆச்சரியப்பட்டாள்.
"நீங்க ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க அண்ணி!"
"நீங்கதான் அழகா இருக்கீங்க!" தமிழ்ச்செல்வியும் சொன்னாள்.
இருவரும் சில நிமிடங்களிலேயே நட்பாகிவிட்டனர்.
"பாபி மீன்ஸ்?"
"வீ கால் அவர் எல்டர் ப்ரதர்'ஸ் வைஃப் ஆஸ் பாபி!"
ஓ! அண்ணி என்கிறாள் என்று புரிந்துகொண்டாள் செல்வி.
மங்கை தீபிகாவுக்கும் தமிழ்ச்செல்விக்கும் பழச்சாறு எடுத்து வந்தாள்.
பழச்சாறு அருந்திவிட்டு தமிழ்ச்செல்வியை அழைத்துப் போகலாம் என்றாள்.
அவ்வாறே தமிழ்ச்செல்வியை அழைத்துக் கொண்டு தீபிகாவும் மங்கையும் ஹாலுக்கு வந்தனர்.
தமிழ்ச்செல்வியைக் கண்டு கௌரி மனம் நிறைந்தாள். தீன்தயாள் மகனைப் பார்த்து கண்களால் மருமகள் பிரமாதம் என்றார். சூரஜ் இமை கொட்ட மறந்தவனாய் அவளையே பார்த்தான்.
தமிழ்ச்செல்வி மாம்பழ நிறத்தில் சிவப்பு பார்டர் கொண்ட காஞ்சிபுரம் பட்டுப்புடவை கட்டி பட்டில் சிவப்பு டிசைனர் ப்ளவுஸ் அணிந்து அதற்கு மேட்சாக தங்கத்தில் மெல்லிய செயின் ஒன்றும் சிவப்பு கற்கள் அங்கங்கே பதிக்கப்பட்ட தங்க நெக்லஸும் அணிந்திருந்தாள். காதில் குடைபோன்ற ஜிமிக்கி போட்டிருந்தாள். நெற்றியில் டிசைனர் பிந்தி இட்டிருந்தாள். தலை பின்னி மல்லிகைப் பூவைச் சூடியிருந்தாள். இடுப்புக்கு கீழே நீண்டிருந்த அடர்த்தியான சாட்டை போன்ற பின்னல் அவள் நடக்கும்போது அழகாய் அசைந்தது. கைகளில் சிவப்பு நிற கண்ணாடி வளையல்களை அணிந்து அதன் இரு பக்கமும் தங்க வளையலை பார்டர் போல அணிந்திருந்தாள். காலில் மெல்லிய கொலுசு அவள் நடக்க நடக்க செல்லமாய் சிணுங்கியது.
மெதுவாய் அன்னநடை நடந்து வந்து பெரியவர்களை நமஸ்காரம் செய்தாள்.
சூரஜுக்கு மனம் துள்ளியது. இவள்தான் எவ்வளவு அழகு என்று நினைத்தான்.
கௌரி தமிழ்ச்செல்வியை தன்னருகில் அமர்த்திக் கொண்டாள். அவளுடைய தலையை மென்மையாய் தடவினாள். இந்தியில் சொன்னாள்,
"உன் முடி ரொம்ப அழகா பட்டு மாதிரி இருக்கு. நீ தேவதை மாதிரியே இருக்கம்மா! என் மகனுக்கு உன்னப் பிடிச்சதில எந்த ஆச்சரியமும் இல்ல!" என்று கூறி கையால் அவள் முகத்தை வழித்து த்ருஷ்டி கழித்தாள்.
அவள் என்ன சொன்னாள் என்று புரியாமல் அனைவரும் சூரஜைப் பார்க்க அவனோ தமிழ்ச்செல்வியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அதே நேரத்தில் தமிழ்ச்செல்வியும் சூரஜை பார்த்து கண்களால் அவன் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள்.
தீபிகா அவனருகில் வந்து அவனை நிகழ்வுக்கு கொண்டு வந்தாள்.
"பையா! நீங்களும் அண்ணிகூட ட்யூயட் பாடப் போயிட்டீங்களா?" என்று கிண்டலடித்துவிட்டு,
"அம்மா என்ன சொன்னாங்கன்னு சொல்லுங்க!" என்று ஹிந்தியில் அண்ணனுக்கு செல்லமாகக் கட்டளையிட்டாள்.
"சுட்கி! சுப் ரஹோ!" என்று செல்லமாய் கோபித்தான் அண்ணன். பிறகு அன்னை சொன்னதை ஆங்கிலத்தில் கூறினான்.
தமிழ்செல்விக்கும் அவள் குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சியாய் இருந்தது.
கௌரி, தமிழ்ச்செல்வியைப் பாடச்சொன்னாள். தமிழ்ச்செல்வி தயங்கி சூரஜின் முகத்தைப் பார்க்க அவனும் ப்ளீஸ் எனக்காகப் பாடு! என்று கண்ஜாடை செய்தான்.
தமிழ்ச்செல்வி பாடத் தொடங்கினாள்.
"
குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா
..
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
"
இசைக்கு மொழி கிடையாதல்லவா! தமிழ் புரியாவிட்டாலும் சூரஜும் அவன் குடும்பத்தாரும் அவளுடைய பாடலில் கரைந்தேவிட்டனர். கைதட்டி மனமாறப் பாராட்டினர்.
இரு குடும்பத்தாருக்கும் மனம் மகிழ்ந்தது. திருமணத்தை உறுதி செய்து கொண்டனர். பாக்கு வெற்றிலை மாற்றிக் கொண்டு விடலாம். இரு வீட்டு முறைப்படி திருமணத்தை சென்னையில் நடத்தி திருமண வரவேற்பை மும்பையில் நடத்தி விடலாம் என்று முடிவு செய்து கொண்டனர்.
ஏற்பாடு செய்திருந்த ஐயர் வந்து லக்னப் பத்திரிகை எழுதிக் கொடுத்தார். பாக்கு வெற்றிலை மாற்றிக் கொண்டனர்.
கௌரி தன்னுடைய கழுத்தில் இருந்து ஒரு தங்க செயினை கழற்றி தமிழ்ச்செல்வியின் கழுத்தில் போட்டுவிட்டாள். கிரிதரனும் சூரஜுக்கு புதிய தங்க மோதிரம் அணிவித்தார். தமிழ்ச்செல்வியும் சூரஜும் அருகருகே நின்று பெற்றோர் பெரியோர் கால்களில் விழுந்து வணங்கினர்.
மணமக்கள் இருவரும் அருகருகே அமர்ந்தனர். அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அழகு சேர்ப்பது போல இருந்தனர். பொருத்தமான ஜோடி என்றால் இதுதான் என்று எல்லாருமே நினைத்தார்கள். மங்கையும் கௌரியும் ஆரத்தி சுற்றினர். லட்சுமி அம்மாள் இருவருக்கும் திருஷ்டி சுற்றிப் போட்டார்.
மங்கை அனைவரையும் அமர்த்தி தலைவாழை இலை போட்டு விருந்து பரிமாறினாள். விருந்துபசாரத்தில் மங்கையர்க்கரசி நிஜமாகவே அரசிதான் என்று லட்சுமி அம்மாள் நினைத்தார். தமிழ்ச்செல்வியும் புடவையை இழுத்துச் சொருகிக் கொண்டு அன்னைக்கு உதவி செய்தாள்.
தமிழ்ச்செல்வியையும் அவள் குடும்பத்தாரையும் கௌரிக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. அருகில் அமர்ந்து தமிழ்ச்செல்வியை சைட் அடித்துக் கொண்டே சாப்பிடும் மகனிடம் மெல்லிய குரலில் கூறினாள்.
"ரொம்ப நல்ல பொண்ணு. நல்ல குடும்பம். நான் உனக்கு எப்படி மனைவி வரணும்னு நெனச்சேனோ அதே மாதிரி இருக்கா! மனசு நெறஞ்சுடுச்சுடா!" கண்கள் குளமாகியது.
"ம்மா! என்னம்மா இது! கண்ணத் தொடங்க! யாராச்சும் பாக்கப் போறாங்க!"
அப்போது தமிழ்ச்செல்வி பார்த்துவிட்டாள்.
"ஏங்க! சாம்பார் ரொம்ப காரமா இருக்கா? கொஞ்சம் நெய் விடவா?" என்று கேட்டுத் திரும்ப,
"இல்ல! டமில்! அது இல்ல! ஷீ இஸ் மூவ்டு பை யூ!" என்றான்.
தமிழ்ச்செல்விக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஒன்றும் பேசாமல் வேலையைப் பார்த்தாள். அனைவரும் உணவு உண்டபின் தமிழ்ச்செல்வி தன்னுடைய அறைக்குச் சென்றுவிட்டாள்.
நல்ல நாள் பார்த்து அழைப்பதாய் கிரிதரன் கூறினார். கௌரி தீபிகாவுடன் தமிழ்ச்செல்வியிடம் வந்தாள்.
"நீ எங்க வீட்டுக்கு வரப்போற மகாலக்ஷ்மி! என் மகனையும் என் குடும்பத்தையும் உன் கைல ஒப்படைக்கப் போறேன். நீதான் எல்லாரையும் பாத்துக்கணும். சீக்கிரமா வாம்மா!"
அவள் ஹிந்தியில் சொன்னதை தீபிகா ஆங்கிலத்தில் சொல்ல, தமிழ்ச்செல்வி கண்களில் கண்ணீருடன் கௌரியின் பாதம் தொட்டு வணங்கினாள்.
கௌரி மருமகளின் நெற்றியில் முத்தமிட்டாள்.
"நிச்சயமா அத்தை! நீங்கான் எனக்கு எப்பவுமே துணையா இருக்கணும்!" என்றாள். தீபிகா இதை ஹிந்தியில் அம்மாவிடம் சொன்னாள்.
"அண்ணி, மொதல்ல ஹிந்தி கத்துக்கோங்க! ட்ரான்ஸ்லேட் பண்ண கஷ்டமா இருக்கு!" ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு சிரித்தாள். இவளும் சிரித்தாள்.
அனைவரும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். சூரஜ் அம்மாவிடமும் கிரிதரனிடமும் சொல்லிவிட்டு தமிழ்ச்செல்வியின் அறைக்கு வந்தான். அவளைப் பார்த்து
"வரட்டுமா!"
"ம்!"
"ஒண்ணும் பேச மாட்யா!"
கண்கள் படபடக்க அவனைப் பார்ததாள். அவன் அவளருகில் வந்து அவள் கைகளைப் பற்றி அவள் உள்ளங்கைகளில் அழுத்தமாக முத்தம் பதித்தான். அவளுக்கு மின்சாரம் பாய்ந்தது போல இருக்க கைகளை இழுத்துக் கொண்டாள். இருவரும் சிரித்துக் கொண்டனர்.
"பை! டமில்!"
"சூரஜ்!" அருகில் வந்து அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
"ம்! என்ன டமில்!" ஆவலாய்க் கேட்டான்.
"வில் யூ டீச் மீ ஹிந்தி!" மெல்லிய குரலில் கேட்டாள்.
"டெஃபனிட்ல்லி!"
"எப்போ?"
"ம். டெய்லி டமில் க்ளாஸ் எட்பியே! அதே மாத்ரி?"
"தேங்க்ஸ்!" அவனுடைய உள்ளங்கைகளில் அவள் முத்தமிட்டாள். பதிலுக்கு அவனும் முத்தமிட்டான்.
"பை டமில்!"
சிரித்தபடி "பை சூரஜ்!" என்றாள்.
சிரித்துக் கொண்டே கையாட்டி டாட்டா காட்டிவிட்டு கிளம்பினான். மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் கிளம்பினர்.
மாப்பிள்ளை வீட்டாரை வழியனுப்பிவிட்டு கிரிதரன் மங்கை இருவரும் உள்ளே வந்தனர். லட்சுமி அம்மாள் தன் பேத்திக்கு த்ருஷ்ட்டி கழித்தார். கிரிதரனும் மங்கையும் உள்ளமெல்லாம் பூரிக்க மகளைக் கொஞ்சி மகிழ்ந்தனர்.
தமிழ்ச்செல்வி சூரஜ் திருமணம் நிச்சயமாகிவிட்டது. கிரிதரன் திருமணத்துக்கு நாள் குறித்து வந்தார். சூரஜ் வீட்டாருக்கும் அந்த நாள் சரியாக இருப்பதாக தெரிவித்துவிட்டனர். சென்னையில் திருமணத்தை நடத்த ஒப்புக் கொண்டனர். திருமணத்துக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருந்தது.
சிறியவர்களுக்கு இன்னும் மூன்று மாதங்களா? அதுவரை காத்திருக்க வேண்டுமா என்று இருந்தது.
பெரியவர்களுக்கோ இன்னும் மூன்றே மூன்று மாதங்கள் தான் இருக்கிறது. அதற்குள் எப்படி எல்லா வேலையையும் செய்து முடிப்பது என்று இருந்தது.
நாட்கள் யாருக்காகவும் நிற்கவேயில்லை. என்னதான் நாம் கல்யாண வேலையை கேட்டரிங் செய்பவர்களிடம் ஒப்படைத்தாலும் நமக்கும் ஏராளமான வேலைகள் இருக்கத்தான் செய்கிறது. மண்டபம் தேடுதல், பத்திரிகை அச்சிடல், திருமாங்கல்யம், நகை நட்டு, புத்தாடை எடுத்தல், கூரப்புடவை வேட்டி, மாப்பிள்ளை வீட்டு வழக்கப்படி முகூர்த்த புடவை, குர்த்தா, உறவினர்களை நேரில் சென்று அழைத்தல், அப்பப்பா! எவ்வளவு வேலைகள்? இதற்கு நடுவே மும்பை சென்று மாப்பிள்ளை வீட்டில் கைநனைத்தல் என்று அத்தனையும் வெகு ஜோராக நடந்தேறியது.
இங்கே சூரஜ் தினமும் செல்விக்கு ஹிந்தி கற்றுத் தந்தான். கற்றுக் கொடுக்கும் போது அவன் கவனம் ஒருநாளும் பிசகியதேயில்லை. அவளும் கவனமாக கற்றாள். புதிதாகப் பார்ப்பவர்களுக்கு இவ்வளவு நாள் இவள் தமிழ் சொல்லித் தந்தாள். இப்போது பதிலுக்கு இவன் ஹிந்தி சொல்லித் தருகிறான் என்றுதான் நினைத்துக் கொள்வார்கள். அப்படித்தான் இவர்கள் பழகினார்கள்.
இருவரும் சேர்ந்து வெளியில் சுற்றுதல் கடலை போடுதல் எல்லாம் கிடையவே கிடையாது. வேலை, வேலை விட்டால் ஹிந்தி வகுப்பு, வகுப்பு முடிந்தால் வீடு என்றுதான் இருந்தனர். நிச்சயமான அன்று மாலையே போனில் பேசும் போது இருவருமே இப்படி ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அதே போல திருமணமான பின்பும் சூரஜின் வேலை சென்னையில்தான் என்பதால் செல்வி வேலையை விடவேண்டாம். அப்படியே தொடரலாம் என்றும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
தினமும் வீட்டுக்கு போன பின்னர் ஏழு மணியளவில் போன் செய்து பேசிக் கொள்வார்கள். அதுவும் சில நிமிடங்கள்தான். மணிக்கணக்கில் பேசினால், அப்புறம் திருமணமான பின்னர் பேச எதுவும் மிச்சமில்லாமல் போய்விடும் என்பான் அவன். அவளுக்கும் அப்படித்தான் தோன்றும். அப்புறமாக சுவாரசியம் இல்லாது போய்விடும் என்பாள். இருவரும் தங்களுடைய ஆசைகளை அப்படியே மனதுக்குள் பூட்டி வைத்திருந்தார்கள். தங்கள் திருமணத்துக்குப் பின்புதான் அதைத் திறந்து விடவேண்டும் என்று ஆவலாகக் காத்திருந்தார்கள்.
செல்வியும் ஓரளவு ஹிந்தியை கற்றுக் கொண்டுவிட்டாள். சூரஜ் தமிழை எப்படி கடித்து துப்புவானோ அதே போல செல்வியும் ஹிந்தியை படாத பாடு படுத்துவாள். அவனுடைய தமிழைக்கேட்டு இவள் சிரிப்பாள். இவளுடைய ஹிந்தியைக் கேட்டு அவன் சிரிப்பான். இருவரும் மற்றவர் பேசுவதை கிண்டல் செய்வார்கள். அதில் இருவருக்கும் ஒரு மாதிரி அலாதி சந்தோஷமும் கூட ஏற்படும். ஆனால் மொழிக்காக ஒருநாளும் இருவரும் சண்டையிட்டதேயில்லை. அவன் பேசியதில் தவறு இருந்தால் இவள் திருத்துவாள். அவனும் திருத்திக் கொள்வான். அதேபோல இவள் பேசியதில் தவறு இருந்தால் அவன் திருத்துவான். இவளும் திருத்திக் கொள்வாள். அந்தப் புரிதல் எப்போதுமே இருவருக்கும் இருந்தது.
இருவரும் தங்களுடைய திருமண நாளை மிக ஆவலாய் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர்.
மன்னவனும் அன்று
மழலைத் தமிழ் பேசியே
மங்கையவள் உள்ளம் தனை
மாயம் செய்து சிறை பிடித்தான்!
தன்னவளின் கரம் வேண்டித்
தாய் தந்தை முன் வந்தான்!
உள்ளம் கவர் கள்வன்
உறவையுமே வேண்டி நின்றான்!
இரு வீட்டு உறவுகளும்
இனிதாகப் பேசிக் கொண்டு
திருமணமும் நிச்சயிக்கக்
காதலுக்கு இங்கு வெற்றிவிழா!
நாயகியும் நாயகனும்
மாலை சூடி மனமகிழும்
மணநாளை எதிர்நோக்கி
மனங் கனிந்து நின்றனரே!
நாயகனின் மொழி பயில
நாயகியும் துணிந்து விட்டாள்!
புகுந்த வீட்டு உறவுகளைப்
புரிந்து கொள்ளப் புதுமுயற்சி!
காதலுக்கு மொழியில்லை!
அன்பை அடைக்கத் தாழில்லை!
உள்ளங்கள் கலந்த பின்னே
உறவுகள் இங்கு எம்மாத்திரம்?
- C. Puvana
- காதலின் மொழி என்ன?