கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

இன்று முதல் நந்தவனம்...அத்தியாயம் 15

Status
Not open for further replies.

sankariappan

Moderator
Staff member
அத்தியாயம்—15





மனம் எங்கெங்கோ பறக்கிறது. இருந்த இடத்தில இருந்து கொண்டே உலகத்ததை சுற்றி வரும் வித்தை இந்த மனதுக்குத் தான் தெரியும். அது மட்டுமா ஊஞ்சல் போல் கடந்த காலத்துக்கு ஓடும். சடாரென்று நிகழ காலத்துக்கு வரும். இந்த மனதின் செயல் பாட்டை அழகாக வெளிக் கொண்டு வந்த பாடல்





“ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்


இதயச் சுரங்கத்துக்குள் எத்தனை கேள்வி..”





இவ்வளவு தாண்டா வாழ்க்கை என்று சொல்லிவிடுகிற தாத்பரியம் நிறைந்த வரிகளை கண்ணதாசன் தவிர வேறு யாரால் கொடுக்க முடியும்? இந்தப் பாடலுக்கு ஆடலாமா என்று சுமதி சொன்னபோது சைந்தவி சிரித்தாள்.


“இதுக்கெல்லாம் எப்படி அட முடியும் சுமதி.? நாம என்ன கிளாசிக்கல்


டான்ஸரா என்ன? அவங்களுக்கு கூட இது ஒரு சவால் தான்.”


“சைந்தவி...நாம் கிளாசிக்கல் டான்ஸ்சர் இல்லை என்பது தான் நம்ம பிளஸ் பாயிண்ட். எனக்கு ஒரு பரதநாட்டிய கலைஞரைத் தெரியும். நாட்டிய பள்ளி நடத்தறாங்க. பத்மினிப்ரியை...நாட்டிய பேரொளி பத்மினியின் தீவிர ரசிகை. அதான் அப்படி பெயர் வச்சிருக்காங்க. அவங்ககிட்டே கேப்போம். அவங்க ஒ.கே சொன்னா ஆடலாம்.”





இருவரும் அந்த நாட்டிய தாரகையைப் போய் பார்த்தார்கள். வணங்கினார்கள். தட்டில் பூ பழம் குங்குமம் வெத்திலை பாக்கு எல்லாம் வச்சு கொடுத்தார்கள். புன்னகையுடன் வாங்கி கொண்டார் அவர். வயது முப்பதுக்கு மேல் இருக்கலாம். முகத்தில் பரவி இருந்த சாந்தமும் தெய்வீகமும் அவர் நாட்டியத்தின் மேல் உள்ள ஈடுபாட்டை காட்டியது. சுமதி தாங்கள் வந்த நோக்கத்தை சொன்னாள். அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.


“வேட்டு சத்தத்துக்கும் ஆடலாம் இடி மின்னலுக்கும் ஆடலாம் என்று பத்மினி சொல்லியது உங்களுக்கு தெரிந்திருக்கும். அப்படி இருக்கும் போது கண்ணதாசனின் அருமையான இந்தப் பாடலுக்கு அட முடியாதா என்ன?” என்று உற்சாகத்துடன் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். “உங்களுக்கு எளிமையான முத்திரைகளை கொண்டு சொல்லிக் கொடுக்கிறேன். அப்ப தான் சிறப்பாக நாட்டியம் அமையும்.” என்றார். தினமும் வேலை முடிந்ததும் இருவரும் அங்கு சென்று பயிற்சி பெற்றார்கள். ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் சொல்லி அவர் அபிநயம் பிடிப்பது எப்படி என்று செய்து காட்டிய போது அந்தப் பாடலின் மகத்துவம் தெரிந்தது.





சைந்தவி நினைத்தாள் இதய சுரங்கத்துள் எவ்வளவு கேள்வி என்ற வரி வைர வரி. எல்லா மனுஷங்களுக்கும் இது பொருந்தும். நிஜம் போல் தோன்றிய அசோக்கின் காதல் எப்படி பொய்யாகப் போயிற்று என்ற கேள்வி அவளுள் எழுந்து கொண்டே இருக்கிறது. அவனை அவள் காதலிக்கக் கூட இல்லை. நான் உனக்கு என்ன துரோகம் செய்தேன்? உன்னைக் காதலிக்க கூட இல்லை. அதை ஏன் நீ புரிந்து கொள்ளவேயில்லை? என் பாதையை நான் வகுத்துக் கொள்ள போராடும் போது நீ உதவி செய்ததா நினச்சேன் ஆனால் என்னை அவமானப்படுத்த அந்த உதவியை பயன்படுத்திக் கொண்டது எந்த விதத்தில் நியாயம்? இப்படி கெடுதல் செய்ய சொல்லியதா உன் காதல்? அப்போ அது எப்படி காதலாகும்? நமக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்கக்கூடாது...அவளுக்கு எந்த நன்மையும் ஏற்படக்கூடாதுன்னு சபையில் அவமானப்படுத்திய உனக்கு ஏன் இந்த பழி தீர்க்கும் எண்ணம்? இப்படி ஆயிரம் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருக்கிறாள். அவரவர் வாழ்விலும் அவரவருக்கு இப்படி கேள்விகள் எழுந்து கொண்டே தான் இருக்கும்.


“மனிதனின் இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்.” ஆகா...பட்டை தீட்டிய வைரம் மாதிரி ஜொலிக்கிறது இந்த வரி. கேள்விகளைக் கேட்டுக் கொண்டு பதில் கிடைக்காமல் போவது தானே எல்லோருடைய துன்பத்துக்கும் காரணம்? மனசிடம் எந்த ஜம்பமும் பலிக்காது. படிக்காதவன் படித்தவன். அழகன், அழகில்லாதவன்...ஞானி அங்ஞானி...இப்படி பலதரப்பட்ட மனிதனின் உள்ளும் கேள்விகள் தானே பிறந்து பிறந்து தவிர்க்க முடியாமல் மடிந்து போகிறது.. எதற்காகவாவது விடை கிடைக்கிறதா? பதிலுக்காக மனசை அலைபாய விடாமல் நாம் என்ன செய்ய வேண்டும் என்று கவிஞர் சொல்லும் இரட்டை வரி தான் வாழ்க்கையின் தத்துவம். இது கண்ணதாசனின் திருக்குறள். எல்லோருக்கும் புரியும் எளிய வாழ்க்கை முறை. அப்படி செய்யும் போது பதில் தேடி அலைய மாட்டோம். மனம் அமைதி அடைந்துவிடும். கவிஞரை அதனால் தான் குழந்தை உள்ளம் படைத்தவர் என்று சொல்கிறார்களோ! தான் உணராததை அவர் எழுதியது இல்லை...





“நமக்கென்று பூமியில் கடமைகள் உண்டு


அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று.”





ஒரே வாரத்தில் இந்தப் பாடலுக்கான அபிநயங்களை கற்பித்துக் கொடுத்தார் பத்மினிப்ரியை.


“ரொம்ப நன்றி மேடம். நீங்க எங்களைப் போன்ற நடனக் கலை பற்றி அதிகம் தெரியாதவங்களுக்கு பொறுமையா சிறப்பா கற்றுக் கொடுத்ததுக்கு நாங்க கொடுத்து வச்சிருக்கணும்.”


சுமதி சொல்லி முடித்தபோது அவர் புன்னகையுடன் சொன்னது அவர்களுக்கு மறக்க முடியாத ஆஸ்கார் அவார்ட் போல் இருந்தது.


“உங்க ரெண்டு பேரின் கண்களும் பேசும் வித்தை தெரிந்த நளினக் கண்கள். ஆழ்கடலில் இருந்து புறப்படும் அலை மாதிரி இதமான கண்கள். அது உங்களுக்கு கடவுள் தந்த வரம். அதனால் கவரப்பட்டு தான் நான் சொல்லிக் கொடுக்க சம்மதித்தேன். பொதுவா இப்படி அடிப்படை நடனமே தெரியாவங்களுக்கு நான் சொல்லிக் கொடுப்பதில்லை...நீங்க வித்தியாசமானவங்க.” என்று பாராட்டினார்.


சுமதியும் சைந்தவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர் காலில் விழுந்து ஆசி வாங்கினர்.


“கேள்வியின் நாயகனே..இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா?...


இந்தப் பாடலுக்கும் நீங்க ஆடலாமே. என்ன சொல்றீங்க?”





அந்தப் பாடலுக்கும் அபிநயம் பிடித்து கற்றுக் கொடுக்க, இருவரும் உயிர்ப்புடன் ஆடிக் காட்டினர். என்ன வரிகள்! கண்ணதாசனுக்கு சாவு இல்லை என்பது எவ்வளவு உண்மை! சுமதிக்கு இந்தப் பாடல் அவ்வளவு நன்றாக மனதில் பதிந்தது. புது புது அர்த்தங்கள் தெரிந்தது. அவள் ப்ரதாப்பிடம் கேட்க நினைத்த கேள்விகள் முழுவதும் இந்தப் பாடலில் வந்திருப்பத்தை அவள் இப்பொழுது தான் கவனித்தாள். என் காதல் நிஜமென்று ஏன் உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை பிரதாப்? என் வாழ்க்கையின் பாதையை நான் வகுத்துக் கொண்டிருக்கும் போது நீ உதவ முன் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. இப்படி கெடுதல் பண்ணிவிட்டுப் போய்யிட்டியே...என் கேள்வியின் நாயகன் நீதான் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.





“சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம்—கொஞ்சம்


சிந்தனை செய்தால் உனக்கு பிறக்கும் வெட்கம்..”


அவன் சிந்தித்தால் தானே அவனுக்கு வெட்கம் பிறக்கும்?





“இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தை


எல்லோரும் நடிக்கின்றோம் நாமே


எல்லோரும் பார்கின்றோம்..”





அவள் நடிக்கவில்லை. ஆனால் அவன்..அவன் நடித்திருக்கிறானா? அவனைச் சுற்றி எல்லோரையும் நடிக்க வைத்தானா? இந்தக் கதை எப்படி? அதன் முடிவெப்படி? அப்போ கேள்வியின் நாயகனே அவன் தானே? ஒரே பாடலின் மூலம் ஒரு முழு நீள திரைப்படத்தின் கதை முழுவதும் கவிஞர் கண்ணதாசன் ஒருவரால் மட்டும் தான் கொடுக்க முடியும். இந்தப் பாடலின் இசைக்கேற்ப அபிநயங்கள் ரொம்ப நல்ல வந்திருந்தது. சுமதியும் சைந்தவியும் நன்கு ஆடக் கற்றுக் கொண்டார்கள். மேடையில் ஆட தயாராகிவிட்டார்கள்.





கல்லூரி விழா மேடை களை கட்டியது. பட்டாம் பூச்சி போல் மாணவிகள் குழுமி விட்டார்கள். கலகலப்பாக பேசி சிரித்து நிகழ்சிகளைக் காண தயாராகிவிட்டார்கள். சுமதி தன் வகுப்பில் படிக்கும் சில மாணவிகளிடம் விழாவிற்கு வருபவரை வரவேற்க சொல்லியிருந்தாள். தலைமை தாங்க வந்திருந்த இலக்கிய மேடை பேச்சாளர் வந்தவுடன் விழா ஆரம்பமாகிவிட்டது.


பல நிகழ்சிகள் நடந்து முடிந்ததும் சுமதி—சைந்தவி நிகழ்ச்சி நடக்கும் நேரம் வந்துவிட்டது. நாட்டிய உடை உடுத்திக் கொண்டு அவர்கள் தயாராக இருந்தார்கள்.


“சுமதி...என் கம்பனி பாஸ் ரவிச்சந்திரனை இந்த விழாவிற்கு இன்வைட் பண்ணியிருக்கேன். உனக்கு அவரை நிகழ்ச்சி முடிந்ததும் அறிமுகப்படுதறேன்..” என்றாள்.


“என் கரஸ்பான்டென்ட் தேவராஜனை உனக்கு அறிமுகப்படுத்த நான் தயாரா இல்லை. ஏனென்றால் அவரைப் பற்றி எனக்கு எந்த நல்ல அபிப்பிராயமும் இல்லை..”


கிரீன் ரூமில் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது தேவராஜனே வந்துவிட்டான்.


“ஹாய் சுமதி...உங்க டான்ஸ் ப்ரோக்ராம் பார்க்க ஆவலாயிருக்கேன்.”


அவன் சொல்லி முடித்ததும் அவனைப் பார்த்த சைந்தவி திடுக்கிட்டாள். சடாரென்று வெளியே சென்றுவிட்டாள். அவனும் மௌனம் சாதித்தான். அவன் முகமே வித்தியாசமாக காணப்பட்டது. புருவம் நெரித்து அவன் சிந்தனையுடன் அங்கிருந்து சென்றான். அவன் போனதும் சைந்தவி உள்ளே வந்தாள்.


“இவன் தான் உன் கரஸ்பான்டென்ட்டா சுமதி?”


“ஆமாடி...ஏன் அவனைப் பார்த்ததும் வெளியே போயிட்டே.?”


“அவன் தான் என்னை அவமானப்படுத்திய அசோக்...”


“என்னது?...நிஜமாவா? அந்த ராஸ்கல் இவன்தானா?”


அவர்கள் மேற்கொண்டு பேசும் முன். பெல் அடித்து விட..அவர்கள் ஆட மேடைக்கு போகவேண்டியதாகப் போயிற்று. அந்த சமயம் ரவிச்சந்திரன் அங்கு வந்தான்.


“சுமதி இது தான் என் பாஸ் ரவிச்சந்திரன்..” என்று அறிமுகப்படுத்தினாள் சைந்தவி. நிமிர்ந்து பார்த்த சுமதி திடுக்கிட்டாள். அவள் கேள்வியின் நாயகனான அந்த பிரதாப் அல்லவா இது?. அடக் கடவுளே...இவளைப் பார்த்ததும் அவன் வேகமாக வெளியேறிவிட்டான்.


“சுமதி இவரை உனக்குத் தெரியுமா?”


“அவன் தான் என்னைக் காதலிப்பதாகச் சொல்லி என்னை அவமானப்படுத்திய பிரதாப்...”


இருவரும் ஆடிப் போய்விட்டார்கள். சைந்தவியின் பாஸ் தான் சுமதியின் காதலன். சுமதியின் கரஸ்பான்டென்ட் தான் சைந்தவிக்கு அவமானத்தை தேடிக் கொடுத்த ஒரு தலையாக காதலித்த அசோக்.


“என்ன..நின்னுக்கிட்டு இருக்கீங்க? சீக்கிரம் மேடை ஏறுங்க...எல்லோரும் காத்திட்டிருக்காங்க.” யாரோ வந்து சொல்ல,


சைந்தவியும் சுமதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு


“அப்புறம் பேசிக் கொள்ளலாம்..” என்று சொல்லி நாட்டியம் ஆடச் சென்றனர். அரங்கம் நிரம்பி வழிந்தது.





“ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல்..” என்ற பாட்டுக்கு நடனம் ஆட ஆரம்பித்தனர்.





“காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்- வெறும்


கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்..”


இந்த வரிகளுக்கு ஆடும்போது சுமதி பிரதாப்பை பார்த்தாள். அவனுக்கென்றே அமைந்த வரிகள் என்று தோன்றியது அவளுக்கு.





“ஆரம்பத்திலே பிறப்பும் உன் கையில் இல்லை – என்றும்


அடுத்தடுத்து நடப்பும் உன் கையில் இல்லை


பாதை வகுத்த பின்னே பயந்தென்ன லாபம்


அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்.”


இந்த வரிகளுக்கு உணர்ந்து ஆடினாள் சுமதி. அவள் தன் பாதையை வகுத்துவிட்டாள், இனி யாருக்காகவும் பயப்பட மாட்டாள்.





“வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க


வேதனையும் மாறும் மேகத்தைப் போல.”
இந்த வரிகளோடு அந்த ஆடல் முடிந்தது. அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது. சுமதியின் மாணவிகள் உற்சாக கூக்குரலிட்டு கை தட்டினார்கள். “வெல் டன் மேம்..” என்ற வாழ்த்துடன் கரகோஷம் நின்று நிலைத்தது. அடுத்து கேள்வியின் நாயகனே பாடலுக்கு ஆட


ஆரம்பித்தார்கள். சைந்தவிக்கு பொருத்தமான வரிகள் வந்தது.





“ஒரு கண்ணும் மறுகண்ணும் பார்த்துக் கொண்டால்


அவை ஒன்றோடு ஒன்று சொல்லும் செய்தி என்ன?


இரு கண்ணும் ஒன்றாக சேர்ந்துவிட்டால்...


அவை இரண்டுக்கும் பார்வையில் பேதமென்ன?


கேள்வியின் நாயகனே...”





ஆட்டம் முடிந்ததும் மீண்டும் கரகோஷம் அரங்கை அதிர வைத்தது.


இரு கண்ணும் ஒன்றாக சேர்ந்துவிட்டால்..அவை இரண்டுக்கும் பார்வையில் பேதமென்ன?---அப்படி நடக்க வேண்டும் என்று அஷோக் விரும்பினான். அப்படி நடக்கூடாது என்று சைந்தவி விரும்பினாள்.





அணைத்து நிகழ்சிகளும் முடிந்தது. பரிசுகள் வழங்கப்பட்டன. பிறகு நடந்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை. விலாசினி என்ற பெண் மேடைக்கு வந்தாள். அவள் லேபில் வேலை பார்க்கும் பெண். அவள் மைக்கை பிடித்துக் கொண்டு சொன்ன செய்தி கேட்டு ஆடியன்ஸ் அதிர்ந்தனர். பள்ளி நிர்வாகம் அதிர்ந்தது.


“மதிப்பிற்குரிய மாணவிகளே, பெற்றோர்களே.கல்லூரி நிர்வாகிகளே, என் அன்புக்குரிய சக ஆசிரியைகளே வணக்கம். உங்களுக்கெல்லாம் ஒரு முக்கிய அநௌன்ஸ்மென்ட் பண்ணப் போறேன். பெண்களின் சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிலர் சில்மிஷம் செய்கின்றனர். அந்த மாதிரி மென்டல் டார்ச்சர் பண்ணும் ஒருவருக்கு இந்த அரங்கின் மூலம் ஒரு முடிவு கட்ட ஆசைப்படறேன்...” கூட்டத்தில் சலசலப்பு. ஏய்..உக்காரு என்று விலாசினியை பலரும் அடக்கப் பார்த்தனர். அவள் விடவில்லை.


“நான் லேபில் வேலைக்கு சேர்ந்து மூணு மாதம் தான் ஆகிறது. இது பெண்கள் கல்லூரி ஆதலால் பாதுகாப்பு இருக்கும் என்று நம்பி தான் வேலைக்கு வந்தேன். என் கணவர் சிக்காக உள்ளார். அதனால் நான் வேலைக்கு வரவேண்டிய கட்டாயம். இதை பயன்படுத்திக் கொண்டு


ப்ரோபசர் தேவராஜன் என்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றார். சம்மதிக்கவில்லை என்றால் என்னை வேலையை விட்டு தூக்கி விடுவாராம். யாரிடம் போய் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு நீதி வேண்டும்..” அவள் மேடையிலேயே அழ ஆரம்பித்தாள். முன் வரிசையில் உட்கார்ந்திருந்த தேவராஜன் அதிர்ச்சி அடைந்தான். அவன் வேகமாக எழுந்து மேடைக்கு வந்து மைக்கை பிடித்து சொன்னான்.


“இந்த சகோதரி பொய் சொல்கிறார். நான் இவரிடம் அப்படி நடந்து கொண்டதே இல்லை. இது அபாண்டம்...நான் தக்க நடவடிக்கை எடுக்கப் போறேன். அப்படி நடக்கவேயில்லை..”


வேறு இரண்டு பெண்களும் ஆமாம் இவர் அப்படித்தான் நடந்து கொண்டார் என்று சொல்ல பிரின்சிபால் ரமணி சக்கரவர்த்தி கோபத்தில் அவனை அறைந்திவிட்டார். “இவ்வளவு பெரிய மேடையில் ஒரு பெண் பொய் சொல்வாளா? மேலும் இரண்டு பெண்களும் அப்படி சொல்கிறார்கள். நீங்க அவளிடம் மன்னிப்பு கேளுங்கள் இந்த மேடையில்..பெண்கள் என்றால் உங்களுக்கு கிள்ளு கீரையாக போச்சா?” என்றார் கோபாவேசமாக. மைக்கில் சொல்லப்பட்டதால் அரங்கமே அவனை ஏளனமாகப் பார்த்தது. தேவராஜன் என்ற அசோக் கூனிக் குறுகி நின்றான். சுமதி சைந்தவியின் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னாள்.


“கடவுள் இருக்கார் சைந்தவி. உன்னை மேடையில் அன்று அவமானப்படுத்தினானே...இப்ப பாரு அவமானப்பட்டு நிக்கிறான். முற்பகல் செய்யின் பிற்பகல் தண்டனை கிடைக்கும் என்பது சரியாகிவிட்டது. அந்த வலி அவனுக்கு இப்ப புரியும்.”


கூட்டத்தில் பலரும் மன்னிப்புக் கேள் என்று கத்தினர்.


“நான் மன்னிப்பு கேக்கப் போவதில்லை. ஏனென்றால் அப்படிப் பட்ட தவறு நான் செய்யவில்லை..” என்று அவன் சொன்ன போது யாரும் நம்பவில்லை. செய்வதையும் செய்திட்டு மன்னிப்பு கேக்க மறுக்கிறான் என்று மாணவிகள் கோஷம் போட்டனர். “மன்னிப்புக் கேள் மன்னிப்புக் கேள்..”


சைந்தவி எழுந்து மேடைக்குச் சென்றாள். சுமதிக்குப் புரிந்தது. அவனின் வண்டவாளத்தை அவள் சொல்லப் போகிறாள். இதை விட நல்ல சந்தர்ப்பம் வேறு எப்பொழுது கிடைக்கும்?


சைந்தவி சொன்னதை கேட்டு சுமதி திடுக்கிட்டாள்.
 
Status
Not open for further replies.
Top