கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அகநக நட்பது நட்பு - நட்பு 1

கல்வியாண்டு தொடங்கி இரண்டு மாதமான நிலையில் அன்று காலை வேண்டாவெறுப்பாக தன் பாட்டியிடம் வசை வாங்கிக்கொண்டு புது பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்தாள் அவள்.
தன் ஸ்கூல் பையை நெஞ்சோடு அணைத்த வண்ணம் அந்த அரசு பள்ளியில் நுழைந்தாள். முதல் நாள் ஆதலால் தலைமை ஆசிரியர் அறைக்கு சென்று விவரம் கேட்டுக்கொண்டு செல்ல எத்தனிக்கையில்

" கொஞ்சம் இருங்க .."

" சரிங்க மேடம் " என்றார் பாட்டி கற்பகம்.

க்ளர்க்கை அழைத்த தலைமை ஆசிரியர் ,

" வனஜா .ரெண்டாவது எ க்ளாஸ் டீச்சர வர சொல்லுங்க "

" ஓகே மேடம் " என கூறி ஆசிரியரை அழைத்து வர சென்றார் உதவியாளர். அவர் சென்றவுடன் , பாட்டியிடம்
" நீங்க கெளம்புங்க. நா பாத்துக்கறேன் "

" சரிங்க மேடம் " என்றவர் வீட்டை நோக்கி நடையை கட்டினார்.

" கூப்பிட்டீங்களா மேடம் " என அங்கு வந்தார் அந்த வகுப்பு ஆசிரியை.

" ஆமா மிஸ். வாங்க . இந்த பொண்ணு இன்னைக்கு தான் சேர்ந்துருக்கா. அவள க்ளாஸ்ல விட்டுடு நீங்க என் ரூமுக்கு வாங்க "

" சரிங்க மேடம் " என அந்த ஆசிரியை வித்யா அச்சிறுமியை அழைத்துக்கொண்டு வகுப்பை நோக்கி நடந்தார்.

" எலெய் வானரங்களா . அஞ்சு நிமிஷம் சும்மா இருக்கீங்களா. இங்க போய்டு வரத்துக்குள்ள என்னடா ஆட்டம் வேண்டி கிடக்கு." என திட்டினார்.

வித்யாவின் தலை தெரிய ஆரம்பித்த உடனேயே வகுப்பு அடங்கியிருந்தாலும் வரும்போதே வகுப்பை பார்த்து விட்டாள்.

" எல்லாரும் கவனிங்க. இந்த பொண்ணு உங்க க்ளாசுக்கு புதுசா வந்துருக்கு. "

அங்கே பலத்த அமைதி நிலவியது.

" சரி .நீ போய் உக்காரு மா " என கூறிவிட்டு தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றார் வித்யா .தலைமை ஆசிரியர் அவரிடம் சில விவரங்களை கூறி அனுப்பினார்.

அதற்குள் இங்கு வகுப்பில் அங்கேயே நின்றிருந்த அவள் பார்வையை அங்கும் இங்கும் சுழலவிட்டாள். அனைத்து இடமும் நிரம்பியிருக்க , ஒரே ஒரு இடம் மட்டுமே காலியாக இருந்தது. அதில் அமர்ந்திருந்த சிறுவன்
" இங்கு வா " என சைகை காட்ட , அங்கு செல்லாமல் அப்படியே நின்றிருந்தாள். அதற்குள் வித்யா வகுப்பிற்கு வர , அப்போதும் அவள் அங்கேயே நின்றிருக்க

" என்ன மா .. உக்காரலயா "

இல்லை என்பது போல் மண்டையை மட்டும் ஆட்டினாள்.

" சரி அந்த மூணாவது பென்சுல உக்காந்துக்கோ "

சரி என்பது போல் தலை ஆட்டிவிட்டு சென்றாள்.

" நா கூப்டப்போவே வர மாட்டீங்களோ " என கேட்டான் அந்த சிறுவன். ஒரு பதிலும் இல்லை.

நேரம் கடக்க அவள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மதிய உணவு இடைவேளையில் அந்த நசுங்கிய டப்பாவில் இருந்த தயிர் சாதத்தை வெங்காயத்தை தொட்டு சாப்பிட்டாள். அப்போது அங்கு மரநிழலில் சாப்பிட்டு முடித்து வந்த அந்த சிறுவன் அவள் தனியே அமர்ந்திருப்பதை பார்த்து வகுப்பிற்குள் நுழைந்தான்.

டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... என வண்டி ஓட்டுவது போல் வந்து அவளருகில் நிறுத்தியவன்

" என்ன வாய்ல கொழுக்கட்டயா.. எதும் பேசமாட்டியா "
ஒன்றும் பதில் இல்லை. மணி அடிக்க அனைவரும் வகுப்பில் நுழைய மதிய வகுப்புகள் ஆரம்பமானது.மதியம் விளையாட்டு வகுப்பு இருக்க,அப்போதும் அவள் தனியாக எதையோ யோசித்தவண்ணம் அமர்ந்திருக்க அங்கு வந்தவன்

" வா விளையாடலாம் " பதில் இல்லை. பக்கத்தில் அமர்ந்து
" என் பேரு ராகவ்.. ராகவ் க்ருஷ்னா . உன் பேர் என்ன? " என கேட்டது தான் தாமதம் , " அம்மா........." என ராகவ் கத்தும் சத்தத்தில் அனைத்து மாணவர்களும் அங்கு கூடி விட்டனர். ராகவ் கத்தியதன் காரணம் , தன் சீருடையில் வைத்திருந்த பென்சிலை எடுத்து ராகவ் தொடையில் அவள் குத்தியதே என அனைவரும் தெரிந்து கொண்டனர்.


(வளரும்...)
 
Top