கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அகநக நட்பது நட்பு - 7

அடுத்த நாள் புலர ராகவ் பள்ளி செல்லும் ரிக்ஷாவிலேயே மஹியையும் அனுப்பினார் சுமதி..
பள்ளியில் இருவருமாய் சேர்ந்து வருவதைப்பார்த்த ராகவின் கூட்டாளிகள்

" என்ன ராகவ் புது ஃப்ரெண்ட் வந்ததும் எங்களுக்கெல்லாம் கா விட்டுட்டியா "

" அப்டி எல்லாம் இல்லயே.. நா யாரையும் வேணான்னு சொல்ல மாட்டேன்னு தெரியும்ல.. "

" இத ஒன்னு சொல்லிடு "

" ம்ம்ம். வா மஹி " என நடையைகட்டினர். அந்நாள் இப்படியே நகர மாலை வீடு திரும்பி ரிஃப்ரெஷ் ஆகிவிட்டு மஹியையும் கூட்டிக்கொண்டு விளையாட சென்றான். நேரம் ஆக, அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினர் இருவரும்.வீட்டிற்கு திரும்பவும் , ராஜன் வரவும் சரியாக இருந்தது. ராஜனிடம் ராகவ் ஓட அந்த பிணைப்பை பார்த்து மஹிக்கும் தனக்கு இப்படி ஒரு அப்பா இருந்தால் என்ற ஆசை வந்தது என்னவோ உண்மைதான். ஆனால் அந்த ஆசை நீண்ட நேரம் நீடிக்க வில்லை. அவரருகில் வந்தவள் , திடீரென ஓட்டம் பிடித்தாள் தங்கள் வீட்டிற்கு. ஒன்றும் புரியாத ராகவ்

" ஏய்.. மஹி..மஹி " என கூப்பிட்டுக்கொண்டே பின்னால் ஓடினான், அவள் ஓடுவதின் காரணம் தெரியாததால். வீட்டிற்கு ஓடியவள் சென்று சுவரை பார்த்து அமர்ந்து கொண்டு அழத்தொடங்கினாள். ஒன்றும் புரியாத கற்பகமும் ராகவும்

" மஹி என்ன ஆச்சு. ஏன் இப்டி ஓடி வந்த "

" ஒன்னும் இல்ல. நீ போ .." என அழுதாள். கையை பிடித்து ராகவ் கூப்பிட , அவன் கையை கடித்தவள்

" நா தா வரலன்னு சொல்றேன் ல "

அவள் கையை கடித்ததில் கோவம் வந்தவன், வலியில் கண்கள் கலங்க
எழுந்து சென்றுவிட்டான் கோவமாக. நேரே சுமதியிடம் சென்றவன்

" அம்மா... மஹி என்ன கடிச்சிட்டா. நா அவள " நடந்ததை கூறி அழுதான். அவனை சமாதானம் செய்து சாப்பிட வைத்தாள்.

" வலிக்குது மா " என மீண்டும் கண்கள் குளமாகின

" இங்க பாரு ராகவ். நீ ஸ்மார்ட் பையன் . அம்மா சொல்றத புரிஞ்சிக்க முயற்சி செய் என்ன "

" ம்ம்ம்ம்" என மண்டை ஆட்டினான்.

" மஹி , என்னோட சின்ன வயசு ப்ரெண்ட் சுகன்யாவோட பொண்ணு. இப்போ ரஞ்சனி எனக்கு பொண்ணு மாறி "

" அவங்க பொண்ணுன்னா எனக்கு புரியுது "

" சரி ஓகே. இப்போ அவங்க இல்ல. சாமிகிட்ட போய்ட்டதா அவ சொன்னால்ல "

" ம்ம்ம்ம் "

" இப்போ நீ , நா , ரஞ்சனி , அப்பா எல்லாரும் ஒரு ஃபேமலி தானே "

" ம்ம்ம்ம்"

" அவளுக்கு அவங்க பாட்டி மட்டும் தானே இருக்காங்க "

" நம்மல்லாம் இருக்கோமே மா "

சிறிதாக புன்னகை செய்தவர்
" சரிதான். ஆனா நம்மல்லாம் புது ஆளுங்க இல்லையா "

" ம்ம்ம்ம் "

" அவளுக்கு நம்ம கூட சகஜமா பழக நேரம் குடுக்கனும்ல "

" ம்ம்ம். ஆனா அவ்ளோ நேரம் எங்கூட நல்லா தா விளையாடிட்டு இருந்தா. அப்பா வரவே தா ஓடிட்டா "

" அதான் சொன்னேன்ல தங்கோ. அப்பாவ அவ நேத்து தானே மொதமொதல்ல பாத்தா. அவளுக்கு நம்ம டைம் குடுக்கனும் ஓகே "

" சரி மா. அவள நா எப்போமே நல்ல ஃப்ரெண்டா பாத்துப்பேன் "

" அதான் என் தங்கோ " என உச்சி முகர்ந்தாள். அவனை தூங்க வைத்துவிட்டு தங்களறைக்கு வந்தவள் பார்த்ததோ ஆழ்ந்த யோசனையில் இருந்த ராஜனை தான்.

" என்ன தீவிர யோசனை "

" ஒன்னும் இல்லம்மா "

" சும்மா சொல்லுங்க "

" அந்த பொண்ணு இன்னிக்கு என்ன பாத்து அப்டி ஓடினது எனக்கு ஒரு மாறி இருக்கு "

" ஏன் "

" அது... " என தயங்கினார்.

" என்ன ஆச்சு.. "

" இல்ல. அவங்க அப்பாவ நா ந்யாபக படுத்திட்டேனோன்னு ஒரு எண்ணம் "

" எப்டி சொல்றீங்க. "

" தோணுது ."

" ம்ம்ம்ம்"

" அதுனால ஒரு முடிவு எடுத்து இருக்கேன் "

" என்ன முடிவு "

" இனி வாரத்துக்கு ஒரே ஒரு நாள் மட்டும் குடிக்கலாம்னு இருக்கேன் "

" ஓ... ரொம்ப சந்தோஷம்ங்க .. என்னைக்கு "

" ம்ம்ம??? கிண்டலா "

" ஐயயோ. தெரிஞ்சிடுச்சா "

" உன்ன... " என செல்லமாய் மிரட்டினார்.

" நா சொன்னப்போலாம் இது தோணல...பரவால்ல.. எப்படியோ கம்மியாச்சுன்னா சரிதான் "

" ஹ ஹ ஹ... " என சிரித்து முழுப்பினார்.

அடுத்த நாள் எப்போதும் போல் நகர , மாலை பள்ளியில் இருந்து வந்ததும் மஹியை கூப்பிட்ட சுமதி இன்று தன்னுடன் இருக்குமாறு கூறினார்.

" ராகவ் இன்னிக்கு நீ மட்டும் போய் விளையாடிட்டு வா என்ன "

" ஏன் மா "

" நா மஹிகிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கேன் "

" போம்மா.. "

' ராகவ் சொன்னா கேக்கனும் பா. இன்னிக்கி ஒரு நாள் தானே "

" சரி " என விளையாட சென்றான்.

" மஹி..."

" மா... நா இங்க இருக்கேன் என தோட்டத்திலிருந்து குரல் வந்தது.

" தோ வரேன்.."

" இங்க மா.. கொட்டாய் குள்ள இருக்கேன் பாருங்க... ஹா ஹா ஹா "

" எனக்கே தெரியல பாரு "

" ம்ம்ம்ம் " என வாயில் கை வைத்து சிரித்தாள்.

" மஹி.. அம்மா ஒன்னு கேப்பேன். இரு ரஞ்சனியையும் கூப்பிட்றேன் "

" ரஞ்சு மா .."

" என்ன மா "

" இங்க வா தோட்டத்துக்கு . மஹியும் இங்க இருக்காபாரு "

" தோ வரேன் " என தன் வீட்டுப்பாடத்தை எடுத்துக்கொண்டு வந்தாள்

" ஹாய் மஹி "

" ஹாய் கா "

" ராகவ் மாறியே உனக்கும் இந்த எடம் புடிச்சிடுச்சா.ராகவ் மாறி என ரஞ்சனி கூறியது ஏனோ மஹிக்கு சந்தோஷமாய் இருந்தது

" ம்ம்ம்ம் "

" சொல்லு மா. எதுக்கு வர சொன்ன "

" சும்மா தான் மஹிகிட்ட பேசிட்டு இருக்கலாம்னு "

" சரிமா "

" மஹி.. உனக்கு இங்க எல்லாம் பிடிச்சிருக்கா மா "

" ம்ம்ம். எல்லாம் ஒன்ன தவிர "

" என்ன அந்த ஒன்னு "

" அது..." என தயங்கினாள். கண்கள் சற்று பனித்தன.

" தயங்காம சொல்லு மஹி " - சுமதி

" எனக்கு ராகவ் அப்பாவ தான் பிடிக்கல " இது ரஞ்சனிக்கு அதிர்ச்சியாகவும் , சுமதிக்கு இதை தான் எதிர்பார்த்தேன் என்பது போன்ற மனநிலைமையை அளித்தது.

" ஏன் ஏன் .. எங்க அப்பாவ ஏன் பிடிக்கல உனக்கு. அவர் எவ்ளோ நல்லவரு தெரியுமா " என பாசமிகுதியில் சண்டையிட துவங்கினாள் ரஞ்சனி

" ரஞ்சு...."

" அம்மா அவ என்ன சொல்றா பாரு "

" நீ கொஞ்சம் அமைதியா இரு. அவள சொல்ல விடு மா. "

மஹியும் கற்பகமும் அங்கு வந்தது ரஞ்சனிக்கு முழு சந்தோஷம் இல்லை என்பதை சுமதி ஒருவாரு யூகித்து இருந்தார். இருவருக்கும் புரிய வைக்கும் எண்ணத்தில் தான் இருவரிடமும் ஒரே நேரத்தில் பேச முனைந்தார். பொதுவாக குழந்தைகள் தங்களுடையதை அவ்வளவு எளிதில் யாருடனும் பகிரமாட்டார்கள். என்ன தான் நாம் சிறு வயது முதல் பகிர்தலை சொல்லிக் கொடுத்தாலும் அந்த தனது என்கிற உணர்வு ஒரு குறிப்பிட்ட வயது வரை இருக்கத்தான் செய்யும். முக்கியமாக இது முதல் குழந்தைகளுக்கு சற்று அதிகமாகவே காணப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு காரணம், தன் தம்பியோ தங்கையோ இவ்வுலகிற்கு வரும் வரை அவர்கள் தான் அந்த வீட்டு இளவரசியாகவோ, இளவரசனாகவோ வலம் வருகிறார்கள். அதை பங்கிட, தன்னிடம் இருந்து அதை தட்டிப்பறிக்கத்தான் இன்னொரு ஆள் வருகிறார்கள் என்பது தான் அக்குழந்தையின் முதல் எண்ணம். அதை சரியான முறையில் கையாளுவது பெற்றோரின் கையில் உள்ளது. சுமதி இப்போது அதைத்தான் முயற்சிக்கிறார்.

" ரஞ்சு. உனக்கு அப்பாவ எவ்ளோ நாளா தெரியும்."

" நா பொறந்ததுலேந்து "

" மஹிக்கு எவ்ளோ நாளா தெரியும் "

" நேத்துலேந்து "

" அப்போ அவளுக்கு கம்மியா தானே தெரியும். புது ஆளுங்கள பாத்தா உனக்குமே மொதல்ல அப்டி இருக்கும் தானே "

" ம்ம்ம்ம் "

" அப்போ மஹி என்ன நினைக்குறான்னு சொல்ற வாய்ப்ப நம்ம தானே அவளுக்கு தரணும் "

" சரிமா.. நா புரிஞ்சிகிட்டேன் . நீ சொல்லு மஹி. ஏன் உனக்கு அப்பாவ புடிக்கல ?"

" அது .. " என தயங்கினாள்.

" தயங்காம சொல்லு மஹி. அம்மா கேக்குறேன் ல "

" அது எங்க அப்பாகிட்ட வர அதே ஒமட்டற ஸ்மெல் ராகவ் அப்பாகிட்டயும் வந்துது. அவரு எப்போமே ராத்திரி வரும் போது இந்த வாசனை தான் வரும். வந்து அம்மாவ ரொம்ப அடிப்பாரு. நானும் அடி வாங்கிருக்கேன். இல்லன்னா நா செவுத்த பாத்து உக்காந்துப்பேன். நேத்து இங்கயும் அதே மாறி ஸ்மெல் வர எனக்கு பயமாகிடுச்சு " என கண்ணீர் வடித்தாள்.

இது தான் குழந்தைகளின் மனம். அது ஒரு ஈர களி மண்ணை போன்றது. அதிலென்ன அச்சாக பதிக்கப்படுகிறதோ , அதன் பதிப்பு ஆழமாகிவிடுகிறது. நம்மை பார்த்துதான் பிள்ளைகள் வளருகிறார்கள். நம் செயல்களின் தாக்கம் நம் பிள்ளைகளின் மனநிலையில் ப்ரதிபலிக்கும். தினமும் குடித்து முழு போதையில் வீட்டிற்கு வந்து தன் தாயையும் தன்னையும் அடித்து துன்புறுத்தும் தன் தந்தையின் பிம்பம் தான் மஹி மனதில் ஆழமாய் பதிந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க , தினமும் குடித்தாலும் தன் அளவை மீறாத ராஜன், தன் குடும்பத்துடன் பேசி சிரித்து மகிழும் ராஜனின் பிம்பம் தான் ரஞ்சனியை பொருத்த வரையில் தன் பாசமான அப்பா. இந்த வித்தியாசத்தை உணர்த்தவே இந்த பேச்சை துவங்கிய சுமதி மஹியிடம்

" இங்க வாங்க ரெண்டு பேரும் " என கை நீட்ட , தாயின் இறக்கைக்குள் அடங்கிக்கொள்ளும் குஞ்சுகளைப்போல் இருவரும் தஞ்சம் புகுந்தனர். இருவரையும் தன் கைவளைவிற்குள் அவர் அணைக்கவும் , கற்பகம் வரவும் சரியாக இருந்தது. அங்கு நடப்பவைகளை பார்த்து மனம் நிம்மதி அடைந்தது. மதியம் முதல் இருந்த மூச்சுத்திணரல் கூட அப்போது நினைவு வரவில்லை.

" வாங்க மா "

" வரேன் மா.. "

" என்ன சோர்வா இருக்கீங்க "

" மூச்சி திணரல் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு மா. வேலை செய்ய முடியல .அதான் செத்த படுக்கலாம்னு வேலைலேந்து பாதில வந்துட்டேன் "

" ஓ. சரிங்க மா.. ரெஸ்ட் எடுங்க. நைட்டுக்கு நானே சேத்து செஞ்சிடறேன் "

" சரி மா " என நகர்ந்தார் ஓய்வெடுக்க

பிள்ளைகளிடன் திரும்பியவர்

" மஹி.. "

" ம்ம்ம்ம்"

" ராகவ் அப்பா நீ நினைக்குற மாறி இல்லம்மா.. என்னயெல்லாம் அவரு அடிச்சதே இல்ல தெரியுமா "

" அப்டியா.. ஆனா அம்மா தினம் அடி வாங்குவாங்க."

" ம்ம்ம். ஆனா ராகவ் அப்பா அப்டி இல்ல. பாரு ரஞ்சனி கூட சொல்றா "

" ம்ம்ம்ம் " என லேசாக ஒத்துக்கொண்டாள்.

" அப்றம் , அவரு இனிமே தினம் குடிக்கலன்னு சொல்லிட்டாரு தெரியுமா .. நமக்காக தான் "

" அப்டியா " என இரு ஜோடி கண்களும் விரிந்தன.

" ஆமா. ஆனா நம்ம உடனே யாரையும் வற்புறுத்த முடியாதுல்ல , அதுனால ஒரு நாள் மட்டும் போனா போகுதுன்னு நம்ம பர்மிஷன் குடுக்கலாமா.. நீங்க என்ன சொல்றீங்க "

" எனக்கு ஓகே " என ரஞ்சனி கூற

" அவர் அன்னைக்கு எங்க அப்பா மாறி பண்ணமாட்டாருன்னா ஓகே எனக்கும் "

" ஓகே. டீல் " என மூவரும் கையை தட்டிக்கொண்டனர். பொழுது சாய , ராகவ் வீடு திரும்பினான்.

" சரி போங்க .. மூணு பேரும் ஹோம்வர்க் முடிங்க " என கூறி செல்ல , ராகவும் ரஞ்சனியும் மஹியிடம் கூறிக்கொண்டு விடைபெற , மஹி மேலும் சில நிமிடங்கள் அங்கே இருந்து விட்டு வீட்டை நோக்கி நடந்தாள். முகம் கழுவி, தன் வீட்டுப்பாடத்தை முடித்தவள் , வயிற்றில் மணியடிக்கவே

" பாட்டி.... பாட்டி...பசிக்குது " பதில் இல்லை. அசந்து தூங்குகிறாள் என விட்டுவிட்டாள். சிறுமி தானே , பசி வயிற்றை கிள்ள மறுபடியும்

" பா.......ட்டி... எழுந்துரு . எனக்கு பசிக்குது " என கற்பகத்தை உலுக்கினாள். லேசாக அசைய, மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது. பயந்தவள் ஓடினாள் ராகவ் வீட்டிற்கு தலைதெறிக்க..

" மா......" என அவள் கத்தியதில் வீட்டிலிருந்து அனைவரும் வர,சுமதி

" என்ன மஹி "

" பா....பாட்டிக்கு என்னவோ ஆகுது..' என அழுதாள். அனைவரும் அங்கு விரைய மூச்சு விட சிரமப்பட்டு கொண்டிருந்தார் கற்பகம்.

" என்னங்க ஆம்புலன்ஸ்கு ஃபோன் பண்ணுங்க "

ராஜன் கால் செய்ய வெளியே செல்ல , கற்பகம் சுமதியை சைகை காட்டி அழைத்தார். அருகில் வந்த சுமதியிடம் தன் பெட்டியை காட்ட, அதை எடுத்து வந்தார். அதை திறந்து அதிலிருந்த ஒரே ஒரு பையை எடுக்க , அதை சுமதியின் கையில் கொடுத்துவிட்டு, தன் சிரமத்திற்கு விடை கொடுத்தார் கற்பகம் , தன் பேத்தியை அவரால் முடிந்தவரை கரையேற்றிய நிம்மதியில்....

( வளரும்...)
 
Top