கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அகநக நட்பது நட்பு - 8

சற்று நேரத்தில் அனைத்தும் அடங்கிவிட, அனைவரும் ஆடித்தான் போனார்கள். ஆம்புலன்ஸுக்கு கால் செய்ய சென்ற ராஜன் வந்து பார்க்கையில் நடந்தது புரிய

" சுமதி.. எழுந்துரு. ஆக வேண்டியத பாரு." சுமதிக்குமே ஒன்றும் புரியவில்லை. இத்தனைக்கும் நடுவில் நடப்பது முழுதாய் புரியாவிட்டாலும் மஹியின் கையை விடாமல் பற்றியிருந்தான் ராகவ்.

ராஜனின் பேச்சில் சற்று நிதானத்திற்கு வந்த சுமதி

" ரஞ்சுமா.. ராகவ் , மஹியகூட்டிட்டு ரூமுக்குபோ மா "

" பாட்டி...." என அழக தொடங்கிய மஹியை என்ன சொல்லி சமாதானம் செய்வது என தெரியாமல் தவித்தனர். ராகவ் தான்

" மஹி.. பாட்டிய சாமி கூப்பிட்டிருக்கும். நீ அழுவாத. வா நா ரஞ்சு , அம்மா அப்பா எல்லாரும் இருக்கோம் " என கையை பிடித்து அழைத்து சென்றான்.

" ரஞ்சு. மூணு பேரும் சாப்டுங்க "

" சரி மா "

" சுமதி.. அடுத்து என்ன பண்றதுன்னு பாரு . நா டாக்டர்கு மறுபடியும் கால் பண்றேன்."
ராஜன் வெளியே செல்ல சுமதி பையை திறந்து பார்க்க ,அது தான் நினைத்தது போலவே , சுகன்யா கற்பகத்திடம் கொடுத்த பைதானென உறுதியானது.மனது வலித்தாலும் இனி மஹி தங்கள் பொருப்பு என மனம் கூறியது.
ராஜன் வர, அந்த இரவு நீண்டது. அடுத்த நாள் அனைவரும் தத்தம் பள்ளி அலுவலகத்திற்கு விடுப்பு எடுக்க, கற்பகத்தின் இறுதிச்சடங்குகளை நிறைவேற்றினார் ராஜன். அது வரை மஹியும் அவள் வயதுக்கு என்ன புரிந்ததோ அதை புரிந்து கொண்டாள். தன்னை விட்டு தன் அன்னை , இப்போது பாட்டி என அனைவரும் பிரிவது ஏன் என மனம் கேட்க அக்கேள்விக்கு அவளிடம் பதில் இல்லாமல் போனது. நாட்கள் இப்படியே நகர , மஹி அந்த வீட்டில் ஒரு அங்கமாகிப்போயிருந்தாள். அனைவரும் அவளிடம் பாகுபாடு காட்டாமல் நடத்தினர். ராகவ் அவளை விட்டு நகருவதே இல்லை என்ற அளவு இருவரும் நெருங்கி இருந்தனர். இருப்பினும் மஹி ஏதோ ஒரு இறுக்கத்துடனேயே இருந்தாள்.

வருடங்கள் ஓட, ராகவ் மஹி அப்போது ஐந்தாம் வகுப்பில் இருந்தனர். சைக்கிள் ஓட்ட இருவரும் கற்றுக்கொண்டிருந்த சமயம்

" மஹி .."

" என்ன ராகவ் "

" இப்போ தான் சைக்கிள் தனியா ஓட்ட வருதுல்ல , அடுத்து டபுள்ஸ் அடிக்க கத்துக்கலாமா "

" சரி டா "

" சரி ஏறு "

" பயமா இருக்கு டா "

" சும்மா எல்லாத்துக்கும் பயப்படாத. அப்போ எப்போ தான் கத்துகுறது "

" ம்ம்ம்ம்.இருந்தாலும் "

" சரி நா உன்ன ஃபோர்ஸ் பண்ணல உன் இஷ்டம் "

" சரி ஏறு " என அவள் பின்னால் ஏறப்போனாள்

" ஒரு சைடா , ரெண்டு சைடா "

" இப்போ ரெண்டு பக்கம் கால் போட்டுகறியா.. பேலன்ஸ் பண்ண வசதியா இருக்கும் "

" சரி டா " என அமர்ந்தாள். ராகவ் பெடலை மிதிக்க முதலில் ஆடினாலும் , சற்றுநேரத்தில் ஓரளவு பேலன்ஸ் வர , ராகவ் வேகமாக பெடல் செய்தான். இவளும் பின்னால் அமர்ந்திருக்கும் ஜோரில் சக்கரத்திற்கு பக்கத்தில் சென்ற காலை கவனிக்காமல் போக , சரியாக மாட்டிக்கொண்டது..

" அம்மா "

" என்ன டி "

" நிறுத்து நிறுத்து ..கால்ல ரத்தம் வருது " சைக்கிளை நிறுத்தியவன்

" லூசு. வீல்கிட்ட ஏன்டி கால கொண்டு போன "

" ஏய். செய்யுரத செஞ்சிட்டு இப்போ என்னை குறை சொல்றியா. திமிர் புடுச்சவனே "

இப்படியே ஆச்சா போச்சா என சண்டை போட்டுக்கொண்டே வீடு வந்தனர். மஹி காலில் ரத்தம் வருவதை பார்த்த சுமதி

" என்ன ஆச்சு மஹி "

" ஒன்னும் இல்ல மா "

" கால்ல ரத்தம் வருது , ஒன்னும் இல்லன்னு சொல்ற "

" அம்மா நா தான் அப்டி செஞ்சிட்டேன். டபுள்ஸ் அடிக்குறேன்னு "

" அதெல்லாம் இல்லம்மா . நா தெரியாம கால விட்டுடேன் வீல்ல "

" சரி தான். உங்ககிட்ட கேட்டது என் தப்பு தான் . என்னைக்கு நீங்க உங்கள விட்டு குடுத்துருக்கீங்க . மருந்து போடு மஹி " என தன் வேலையை பார்க்க சென்றார்.

இதான் ராகவ் மஹி.. இருவரும் குழாய் அடி சண்டை போடுவர். ஆனால் தங்களுக்கு நடுவில் யாரும் வரக்கூடாது. ஒருவரும் ஒருவரையும் விட்டுத்தர மாட்டார்கள். ராகவ்க்கு மஹி தான் முதல் ப்ரதானம். மஹிக்கு ராகவ் தான். அந்த பிணைப்பு அப்படி இருந்தது. இருவரின் பிணைப்பை பார்த்து அதிசயித்தவர்களும் உண்டு , அதை உடைக்க பார்த்தவர்களும் உண்டு. அதற்கெல்லாம் மசியாத விருட்சமாய் மாறியிருந்தது அவர்களின் நட்பு.

பள்ளியிலும் முன்பைப்போல் ஒரே பெஞ்சில் தான் அமர்வர். மஹி படிப்பில் சுட்டியா இருக்க , ராகவ் பாஸ் செய்தால் போதும் என்ற அளவு தான் படிப்பான். படிக்க முடியாது என்பது இல்லை, அவ்வளவு போதும் என்ற எண்ணம் அவனுக்கு. வீட்டிலும் டாக்டர் ஆகவேண்டும் , இஞ்சினியர் ஆக வேண்டும் என்ற அழுத்தம் இல்லை.

இந்த அழுத்தம் தான் பல பிள்ளைகள் இன்று மார்க்கை கொட்டும் இயந்திரமாக ஆகிவிட்டதன் காரணம்.வெளியில் விளையாடுவதை மறந்து அனைத்தையும் கையில் இருக்கும் கேட்ஜேட்டில் தேடும் நிலை. இன்றைய பிள்ளைகள் மிக சாமர்த்தியம். பெற்றோராகிய நம் விருப்பத்தை அவர்களிடம் திணிக்காமல் இருந்தாலே போதும். நான் தான் டாக்டர் ஆக முடியல, என் பையனாவது ஆகட்டும் என்ற நினைப்பை தூக்கி குப்பையில் போடுங்கள். இந்த திணிப்பால் ஒரு நயா பைசாவிற்கு ப்ரயோஜனம் இல்லை. பிள்ளைக்கு என்ன விருப்பம் என கேளுங்கள் என மனநல நிபுணர்கள் கூறுகின்றனர். அவர் விருப்பத்திற்கு நம்மால் முடிந்த வழிகாட்டுதலை தருவதே சிறந்தது. அதே போல் ராகவிற்கு ஏனோ கேமரா மீது ஒரு அலாதி பிரியம். சுமதியும் ராஜனும் அவனை அவனுக்கு பிடித்ததை செய்யட்டும் என விட்டுவிட்டனர். மஹியும் சரி , ராகவும் சரி ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்துவதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த பிணைப்பை சோதிக்க நடந்தது ஒரு சம்பவம்..

ஒருமுறை பள்ளியில் சுற்றுலா அழைத்து சென்றனர் ஒரு தீம் பார்க்கிற்கு. ஆண் பிள்ளைகள் தனியாகவும், பெண்பிள்ளைகள் தனியாகவும் குழுக்களாக பிரிந்து விளையாட துவங்கினர். மாலை திரும்புவதற்கு முன் பெயர் பட்டியல் வாசிக்க இரு பிள்ளைகளை மட்டும் காணவில்லை. மஹியும் அவளுடன் இருந்த இன்னொரு பெண்னையும். ஒரு ஆசிரியரை அங்கு நிறுத்தி வைத்துவிட்டு, மற்றவர்கள் தேடிச்செல்ல, ராகவிற்கு அப்போது தான் விஷயம் தெரிந்தது. அலைந்து திரிந்து அந்த இன்னொரு பெண்ணை பிடித்த ஆசிரியர்கள்

" ஏய் கமலா.. மஹல்சா எங்க டி "

" தெரில மிஸ் "

" தெரிலயா. ரெண்டு பேரையும் சேர்ந்து தான இருக்க சொன்னோம் "

" ஆமா மிஸ். நா இந்த பஞ்சு மிட்டாய பாத்துகிட்டு அப்டியே வந்துட்டேன் "

" போ போய் ஒக்காந்து தொல.."

" இப்போ என்ன பண்றது" என அனைவரும் பேசிக்கொண்டிருக்க

" ராகவ் ... ராகவ் " என பிள்ளைகள் அனைவரும் கூக்குரலிடும் சத்தத்தில் ஆசிரியர்கள் திரும்ப ராகவ் தலை தெரிக்க , கண்களை துடைத்த படி ஓடினான் ரெஸ்ட் ரூம் நோக்கி ..

" எலேய் எங்க டா போறான் அவன் "

" மிஸ் அவ கிட்ட எங்க மஹிய விட்டு பஞ்சு மிட்டாய பாத்துட்டே வந்தன்னு கேட்டான். அவ ரெஸ்ட் ரூம்ன்னு சொன்னதும் ஓடிட்டான் மிஸ் "

" என்ன தல வலிடா.. இவன் எதுக்கு ஓடுறான் " என அவன் பின்னால் இரு ஆசிரியர்கள் சென்றனர். வேகமாக ஓடிய ராகவ் ரெஸ்ட் ரூமில் நுழைய எல்லா கழிவறையும் வெளியே பூட்டி இருக்க, " எங்கடீ இருக்க மஹி " என மனம் அடித்துக்கொண்டது .

" மஹி.... மஹி.... " என கத்தினான்.
கடைசி அறையில் மெல்லியாத விசும்பல் சத்தமும், மூச்சிற்கு சிரமப்படும் சத்தமும் கேட்க மறுபடியும்

" மஹி..." என கத்தினான். மெலிதாக கதவு தட்டப்படும் சத்தம் கேட்க , கடைசி கதவை திறக்க , அதிலிருந்து முகமெல்லாம் வேர்த்து , விதிர்த்து போய் வெளியே வந்த மஹி
" ராகவ் ..." என அவனை கழுத்தோடு கட்டிக்கொண்டாள். அவனும் அவள் தலையை தடவி விட்டு

" நீ மொதல்ல வெளிய வா "

" ம்ம்ம்ம்"

வெளியே வந்தவள் அப்போதும் பதற்றம் குறையாமல் அழ

" மஹி.. மஹி.. ஒன்னும் இல்ல. இங்க பாரு.." என கூறும் போதே மயங்கி சரிந்தாள்..

" மஹி... மஹி... இங்க பாரு டீ.. " என கன்னத்தை தட்டினான்.

' மிஸ் தண்ணி குடுங்க..கொஞ்சம் காத்து வரட்டும் , விலகிக்கோங்க " என கூறினான் , கண்ணில் வழிந்த நீரை துடைத்தபடி. முகத்தில் தண்னீரை தெளித்து அவள் விழிக்கும் வரை ராகவின் கண்கள் நீரை சுரந்துகொண்டே இருந்தது.
சற்று அவள் தெளிவானதும்
" ராகவ் .. " என மீண்டும் கட்டிக்கொண்டாள்.

" மஹி... நீ என்ன லூசா.. உனக்கு க்ளாஸ்ட்ரோஃபோபியா இருக்குன்னு தெரியும்ல. நீ எதுக்கு அங்க அவ்ளோ நேரம் இருந்த "

" இல்ல ராகவ்.. அங்க லாக் சரி இல்ல. நா உள்ள இருக்குறது தெரியாம யாரோ வெளிய பூட்டிடாங்க. எனக்கு எப்பொவும் போல தல சுத்த ஆரம்பிச்சிடுச்சு " இவர்களின் நட்பை பார்த்து பலருக்கும் கண்கள் கலங்கின.
அதற்குள் ஆசிரியர்

" என்ன இந்த மாறி அடிக்கடி வருமா "

" ஆமா மிஸ். நாங்க ஒரு வாட்டி விளையாடும் போது ரூம்ல மாட்டிகிட்டா. அப்போ பாத்து கரென்ட் வேற போய்டுச்சு. அப்போலேந்து இப்டி ஆகும். திடீர்னு பயத்துல தனியா மூடின எடத்துல இருந்தா இப்டி ஆகும் "

அவளை தேற்றி பேருந்தில் அனைவரையும் ஏற்றி பள்ளி நோக்கி புறப்பட்டது பேருந்து.
மஹி அமைதியாய் வர

" இங்க பாரு மஹி. நா எப்போவும் உங்கிட்ட சொல்றது தா. நீ டாக்டர் சொன்ன மாறி இதுலேந்து வெளிவர முயற்சி நீ தா செய்யனும். நா எப்போமே உன் கூடவே இருப்பேன் இப்போ மாறின்னு கியாரன்டி இல்லல. "

" அப்போ நீ என்ன விட்டு போவியா ராகவ் "

" லூசு.. அதுக்கு அது அர்த்தம் இல்ல. நீ லூசுன்னு அடிக்கடி நிரூபிக்குற .. "

" ஏன் "

" நா பக்கத்துல கடைக்கு கூட போயிருக்கலாம். அப்போ என்ன செய்வ. இப்போ ஒக்காத்துருந்தியே அப்டியே இருப்பியா "

" ..."

" சரி. இந்த பயத்த போக்க முயற்சி பண்ணு என்ன. நா எப்போவும் உனக்கு இருப்பேன் "

வீட்டிற்கு வந்து கூறியதும் பதறிவிட்டார் சுமதி.

" ஏன் தங்கோ..."

" எப்டியோ ஆகிடுச்சு மா "

" சரி விடு. இனி கவனமா இரு. அத போக்க முயற்சி பண்ணு. டாக்டர் சொன்னது நியாபகம் இருக்குல்ல "

" ம்ம்ம்ம்" என அந்நாளை நினைவிற்கு கொணர்ந்தாள். கற்பகம் இறந்து மஹி ஓரளவு சகஜமாகி இருந்தாள். ரஞ்சு , ராகவ் , மஹி அன்று இரவு விளையாடிக்கொண்டு இருக்கையில் , மஹி அவர்கள் ரூமில் அடைபட , சரியாக அப்போது கரண்ட் கட்டாக , மஹி பயந்து கத்தி மயங்கி விழுந்தாள். இவர்களும் இருட்டில் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்க , சுமதி மெழுகுவத்தியுடன் வந்து கதவை திறக்க, அவர் அங்கு பார்த்தது மயங்கிக்கிடந்த மஹியைத்தான். எவ்வளவு எழுப்பியும் எழாமல் போக டாக்டரிடம் தூக்கிக்கொண்டு ஓடினர். அவளை பரிசோத்தித்த டாக்டர்

" இங்க பாருங்க. ஒன்னும் பயப்பட. இல்ல. பாப்பா ஏற்கனவே ரொம்ப பயந்து இருக்கா. அனேகமா இவங்களுக்கு க்ளாஸ்ட்ரோஃபோபியா இருக்கும்னு நினைக்கறேன். அதாவது அடைபட்ட இடங்கள பாத்தா பயம். இது மாறி திரும்பவும் நடக்காம பாத்துக்கோங்க. இதுலேந்து வெளிவர்ரது முக்கால் வாசி அவங்க கைல தா இருக்கு . ஓகே .டேக்கேர் " என கூறி அனுப்பினார்.

க்ளாஸ்ட்ரோஃபோபியா - தமிழில் மூட்ட மருட்சி , தனிமையச்சம் என பல பெயர்களை கொண்ட இது ஒரு வியாதி அல்ல. இது மனநிலை சம்பந்தமான ஒரு நிலை. மூடிய புதிய இடத்திற்கான பயம் . சிலருக்கு கூட்டமான லிவ்ஃப்டில் போக தயங்குவதும் இதனால் தான் என உளவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். இப்படி அடைபட்ட நேரங்களில் , அவர்களுக்கு அதிகமாக வேர்க்கும், மூச்சு வாங்கும் , ரத்த அழுத்தம் அதிகரித்து தலை சுற்றும், சிலருக்கும் உமட்டல் வரும் , தலைவலி , நாவறட்சி, யாரோ தன் கழுத்தை நெறிப்பது போன்ற உணர்வு கூட ஏற்படலாம். இதற்கு தீர்வு என்ன என ஆராந்தால் , அப்பயத்தை எதிர்கொண்டு அதை கடந்து வருவது தான் என்கிறார்கள் நிபுணர்கள். மஹி இப்போது தன் பயத்தை போக்கவேண்டும் என்ற நிலைமையில் உள்ளாள்...


( வளரும் ....)
 
Top