கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அத்தியாயம் 7

Rosie kajan

Moderator
Staff member
இரவும் பகலும் அதே மப்பும் மந்தாரமுமாகப் புரண்டோடிக்கொண்டிந்தன, அடிக்கடி சுள்ளென்று குத்தும் கடுங்குளிர் காற்றும் தான்; அதில் நாங்களும் சேர்ந்து கொண்டோம்.

வீட்டில் நேருக்கு நேராகச் சந்தித்துக்கொள்கையில் எல்லாமே, அம்மாவும் அப்பாவும் நாய் கடி பூனை கடிதான்.

அதுவரை, நானறிய, இல்லாமைகளில் கிடந்தது திண்டாடியபோதெல்லாம் அப்பப்போ அவர்களுள் சண்டைகள் வரும் தான். எங்களுக்கே ஒன்றைக் கேட்டு வாங்க முடியவில்லையே என்றதும் உருவாகும் ஏமாற்றமும் துக்கமும் கோபத்தைக் கிளப்புமே ! அநேகம் என்ன தேவையென்றாலும் அம்மாவிடம் தானே கேட்போம், அப்போதெல்லாம் எங்களிடம் சீறிவிடுவார். அதே இயலாமையை அப்பாவிலும் காட்டுவார்.

"ஒரு ஆமான வேலை செய்யத் துப்பில்லாத மனுசருக்கு பிள்ளைகுட்டி குடும்பம் எதுக்கு?" என்றளவில் சண்டை நடந்தாலும் எல்லாம் கொஞ்ச நேரம் தான்.

ஆனால், இப்போதோ "கையாளாகாத உங்களால தான் என்ர பிள்ள செத்துப் போனான்; துண்டு குடுத்திட்டு வா வா எண்டா லட்சக் கணக்கில காசு குடுத்து அவன வெளில எடுக்க வழியிருந்ததே? இல்லையே! பிறகு என்ன? அவனுக்கே அது தெரியும் எண்டதால தான் வரேல்ல; கொண்டிட்டீங்க; என்ர மகனக் கொண்டிட்டீங்க! இப்ப நிவாரண அரிசியும் வாடகைக்காசும் மிச்சம் எல்லா ?" என்று, அடிக்கடி ஏதோ ஒன்றில் ஆரம்பித்து அப்பாவில் பாய்ந்தார்.

அதுவும் அண்ணா போனபோது இயக்கத்துக்குப் போன சில பெடியள் வெளியில் வந்து வெளிநாடு போய்விட்டார்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டதில் அந்தக் கொதிப்பு அதிகரித்திருந்தது.

எனக்கும் கோபமே அதிகம் வந்தது. அம்மாவிலும் அப்பாவிலும் தான். வீட்டில் நிகழ்ந்த ஒரு இழப்பில் அம்மா அங்கிருக்கும் எங்களை மறந்தே விட்டாரோ என்று நினைக்க வைத்தார். அப்பாவோ, ஏதோ என்னால் முடிந்தது இதுதான் என்று காசு தருவதோடு கடமை முடிந்துவிட்டது போலவே நடக்கத் துணிந்தார். மொத்தத்தில், அதுவரை அவர்களிடையே இருந்த இணக்கத்தில் இடைவெளி விழ அண்ணாவின் இழப்பு ஆரம்பமாக இருந்து என்று சொல்லலாம்.

இதெல்லாம் போதாதென்று அன்று காலையிலேயே பெரியக்காவுக்கும் சின்னக்காவுக்கும் வேற சண்டை. பெரியக்கா எதையாவது சொன்னால் சின்னக்கா எதிர்த்து வாயாடுவாள் தான்; என்றாலும் அவள் சொன்னதைச் செய்வாள்; இப்போதோ, சின்னக்கா நிறைய மாறிட்டாள். அதைத்தான் பெரியக்கா சொல்லிக் கண்டித்தாள்.

"வீடிருக்கிற நிலை விளங்கேல்லையா உனக்கு? நமக்கு நல்லா வர இருக்கிற ஒரே ஒரு வழி படிப்பு மட்டும் தான் எண்டு தெரியாதா? தெரிஞ்சும் நீ இப்பிடி நடக்கிறயே! நீ இப்ப எல்லாம் படிக்கிறது நல்லாக் குறைஞ்சிட்டு. இப்பிடியே போனா என்னெண்டு சோதினை செய்யப் போற? டியூசன் காசுக்கே எவ்வளவு பாடுபட்டுத் தாறது எண்டு உனக்குத் தெரியும் தானே? சாப்பிடாட்டியும் உனக்குக் காசு தாறத மறக்காத!" என்று, நெரித்த புருவங்களும் கோபமுமாக ஆரம்பித்தாள்.

"எனக்கு இனி டியூசன் காசு வேணாம்; நான் டியூசனுக்குப் போகேல்ல; யாரும் எனக்கு ஒண்டும் சொல்ல வர வேணாம்; நான் என்ன செய்யோணும் எண்டு எனக்குத் தெரியும்." கதைபுத்தகத்தில் பார்வை இருக்கச் சீறினாள் சின்னக்கா.

"உனக்கு என்ன விசரா பிடிச்சிட்டு?" பெரியக்கா.

"எனக்கு மட்டுமா? இந்த வீட்டில உள்ளவை எல்லாருக்கும் தானே விசர் பிடிச்சிருக்கு? இதென்ன வீடா? இதில இருந்து படிச்சுக் கிழிச்சிட்டாலும்."

பொங்கித் தந்தும்பிய அழுகையை அடக்க முயன்றபடி சொன்னாள் சின்னக்கா.

"ஐயோடி! அம்மா கொஞ்ச நாளில பழையபடி ஆகிருவார் டி; அதப் பாத்து நீ படிப்ப விடுவியா? சயின்ஸ் செய்யப் போகேக்க என்ன சொன்னனீ? ஒரே தரத்தில மெடிஷினுக்குப் போவன் எண்டியே மறந்திட்டியா? நீ படிச்சாத் தானே இவளுக்கும் ஒரு ஆசை வரும்.” தன்மையாகச் சொன்னாள் பெரியக்கா. அவளின் கண்களும் கலங்கியிருந்தன.

“யாரு இல்ல எண்டது? இந்த வீட்டில எல்லாரும் எல்லா நேரமும் ஒரே மாதிரியா இருக்கீனம்?" சீறினாள் சின்னக்கா.

"ஆசையாத்தான் படிக்கத் தொடங்கினனான். ஆனா, இப்ப எனக்குப் படிக்கவே விருப்பம் இல்ல. என்ன செய்யவேணும் எண்டு சொல்ல வாற?" விழிகள் இடுங்க, பெரியக்காவைப் பார்த்துக் கேட்டாள்.

"இதெல்லாம் என்னடி விசர்க் கத ? படிக்க விருப்பம் இல்லையெண்டா என்ன செய்யப்போற?" கோபமும் இயலாமையுமாகக் கேட்டாள் பெரியக்கா.

"அதைப் பற்றி நீ ஒண்டும் கவலைப்படாமல் உன்ர சோலியைப் பார் அக்கா. நான் என்ன செய்யவேணும் எண்டெல்லாம் சொல்ல வராத சரியா? என்னப் பாத்து இங்க யாரும் நல்லாவும் வர வேணாம், கெட்டும் போக வேணாம்." என்று எரிச்சலோடு சொல்லிக்கொண்டு எழுந்த சின்னாக்கா, விருட்டென்று பெரிய அறைக்குள் புகுந்து கதவை அடித்துச் சாத்தினாள்.

அந்தச் சத்தத்தில் சின்ன அறைக்குள்ளிருந்து வெளியில் வந்த அம்மா, நெரித்த புருவங்களோடு என்ன என்பதாகப் பார்த்து நின்றாரேயொழிய வாய்திறக்கவில்லை. இதென்ன பெரிய மாளிகையா? இங்க கதைத்தவை கேட்டிருக்கும் தானே! அம்மாவைப் பார்க்க இவ்வளவு நாளும் இருந்த பாசத்துக்குப் பதிலாக எரிச்சல் முட்டிக்கொண்டு வந்தது. பெரியக்கா இப்படியெல்லாம் கோபம் கொள்ளவில்லை. அவள் அம்மாவைப் பார்த்த பார்வையில் கூட துளியும் கோபம் இல்லை.

"அவள் கதைக்கிறதப் பார்த்தீங்களாம்மா? நீங்களும் அப்பாவும் இப்பிடி இருந்தா இதுதான் மா நடக்கும். நல்லா நாலு வெருட்டுப் போடுங்க. எப்பப் பார்த்தாலும் கதைபுத்தகமும் கையுமாத் திரியிறாள். என்னோட படிக்கிற சுருதிட தங்கச்சியும் இவளும் ஒண்டா எல்லா படிக்கிறவை? டியூஷனுக்கு ஒழுங்கா வாறதில்லையாம் எண்டு சொன்னவள். என்னெண்டு ஒருக்காக் கேளுங்கம்மா!"

பெரியக்கா சொல்லி முடிக்கவில்லை, "நடத்துங்கடி நடத்துங்க. என்னவும் நடத்தி அழிஞ்சு போங்க. உங்களுக்கு என்ன விருப்பமோ செய்து துலையுங்க, என்னட்டஒண்ணுக்கும் வர வேணாம்." கத்தினார், அம்மா

"பெரியக்கா நீ விடு!" என்றேன் நான், சின்னக்குரலில்.

"அதுசரி, இப்பிடிச் சொல்லுறது உங்களுக்கு எவ்வளவு சுகம் என்ன ? தம்பியைச் சாட்டிக்கொண்டு உங்கட பொறுப்பு கடமையில இருந்து ரெண்டு பேரும் மெல்ல ஒதுங்குங்கோ. பிறகென்னத்துக்கு எங்களைப் பெத்தனீங்க?"

பெரியக்காவுக்கும் இருந்திட்டு இருந்திட்டு இப்பிடிக் கோபம் வரும். முட்டிய அழுகையோடு கேட்டாள்.

"ஆங்! நீயும் பெத்து இப்பிடிச் சாகக் குடுத்துப்பார், அப்பத் தெரியுமடி." என்றுவிட்டு, திரும்பவும் அறைக்குள் சென்ற அம்மாவை எந்தவகையில் சேர்ப்பது?

"திரும்ப திரும்ப இதையே சொன்னால் எப்பிடிம்மா? இப்ப இங்க உங்களிட பிள்ள மட்டுமாம்மா? எத்தின வீட்டில பிள்ளைகள் செத்திட்டு? இப்பிடியா எல்லா வீட்டிலும் நடக்குது?" பெரியக்கா சின்ன அறைக்குள் சென்றே கேட்க,

"ஐயோ! சனியங்கள் சனியங்கள் ஏண்டி உயிரை எடுக்கிறீங்க? உங்களுக்கு என்ன என்ன எல்லாம் செய்ய வேணுமோ உங்கட உங்கட விருப்பப்படி செய்து துலையுங்கடி! துலையுங்க!" என்றபடி, தலையில் அடித்துக்கொண்டு அம்மா அழவும் விசுக்கென்று வெளியில் வந்து நின்றுகொண்டு அம்மாவைச் சில கணங்கள் பார்த்து நின்ற பெரியக்காவின் முகத்தில் கவலை.

"அம்மாக்கு வருத்தம் எதுவுமோ!" அவள் வாய் முணுமுணுத்ததை நான் கேட்டேன்.

"விசர் பிடிச்சிட்டோக்கா?" நான்.

"ஏய் எரும! சும்மா அலட்டாத, அங்கால போ!" என்றுவிட்டு சென்ற அக்கா, மீண்டும் பெரிய அறையைத் தட்டினார். சின்னக்காவோ திறக்கவில்லை.

"இங்க பாரடி, என்ர புத்தகங்கள் எடுக்க வேணும் இப்பத் திறக்கப் போறியா இல்லையா?" என்றதும் கதவைத் திறந்தவள்,

" நான் டியூஷனுக்குப் போறன்." விசுக்கென்று வெளியேற, " இப்ப என்ன டியூஷன்? எங்க எண்டு சொல்லீட்டுப் போ!" பெரியக்கா பின்னால் போக, அந்த நேரம் பார்த்து ஒரு மோட்டார் சைக்கிள் வந்து எங்கள் வளவினுள் நுழைந்தது.

இந்தச் சிலவருடங்களாக இந்த மோட்டார் ஒலி எங்கள் வீட்டுக்கு மிக அருகில் கேட்டால் போதும் எல்லாரும் ஒரே ஓட்டமாக ஓடிப்போய்ப் பார்ப்போம், அண்ணா தான் வருகின்றார் என்ற ஆவலில். அண்ணா இல்லை என்றானதும் கனவில் விடாது துரத்தும் மோட்டார் சத்தம் இன்று எங்கள் வீட்டின் மிக அண்மையில்!

"தம்பியா?" என்றபடி பாய்ந்து சென்றார் பெரியக்கா

அண்ணா இன்னும் உயிரோடு தான் இருக்கிறான் என்று எங்கள் உள்ளங்களில் நப்பாசை இருக்கிறது என்றதற்குச் சான்றாக, அத்தனை வேகமாக அறைக்குள்ளிருந்து வெளிப்பட்டார் அம்மா. விரிந்து கிடந்த தலையோடு வாயில் நோக்கி ஓடியவரின் பின்னால் நானுமோடினேன்..

அங்கேயோ, வீட்டு முற்றத்தில் மோட்டாரை நிறுத்திவிட்டு இறங்காது தயக்கத்தோடு யோசித்துக் கொண்டிருந்தார் கதிரவன் அண்ணா; அண்ணாவின் நெருங்கிய நண்பர்; அண்ணாவோடு ஒரே முகாமில் இருப்பவர்; அநேகம் அண்ணா வீடு வருகையில் அவரும் வருவார்.

அவரின் சொந்த இடம் விசுவமடு; ஒரே அண்ணாவும் வீரமரணம் ; அம்மாவும் அப்பாவும் அங்குதான் இருக்கிறார்கள். எங்கள் வீட்டுக்கு எப்போது வந்தாலும் "நீயும் எங்கட பிள்ளதான் தம்பி!" என்று பாசமாக அம்மா உணவு கொடுக்கையில் கண்கலங்கிக் கொண்டே கேட்டு வாங்கிச் சாப்பிடுவார். அப்படிப்பட்டவர், அண்ணா வீரமரணம் என்று சொல்லி இத்தனை நாளில் இன்றுதான் வருகின்றார். அண்ணா வீரமரணமாகிச் சில தினங்களின் பின்னர் இவருக்கும் ஏதேனும் நடந்துவிட்டதோ என்றும் விசாரித்திருந்தோம். நலமாக இருக்கிறார் என்ற செய்தி மட்டும் கிடைத்து.

"இத்தின நாளுக்குப் பிறகு இப்ப என்னத்துக்கு இங்க வாறான்? அப்பிடியே போயிறச் சொல்லு!" சீறிவிட்டு வீட்டினுள் சென்றுவிட்டார் அம்மா.

அத்தனை அவதியோடு ஓடிவந்த பெரியக்கா முகம் இறுக அப்படியே நின்றுவிட்டார்.

நான் வாயில் ஓரமாக நின்றுவிட்டேன். எனக்கும் சரியான கோபமே வந்தது.

எங்களைப் பார்த்தபடி இறங்கிய கதிரவன் அண்ணா நிதானமாக முன்னேற நானும் விருட்டென்று உள்ளிட்டு விட்டேன். ஏனோ அவரின் முகம் பார்க்கவும் பிடிக்கவில்லை. பின்னால் சென்று நெல்லிமரத்தின் கீழ் கிடந்த கல்லில் அமர்ந்துவிட்டேன்.

'அண்ணாவே இல்லையாம், இனி என்னத்துக்கு இங்க எல்லாம் வருவான்?' என்று எண்ணிய கணமே, 'இந்த முறை தப்பிவிட்டார், இவரும் எப்ப ஒரு மூடின பெட்டிக்குள்ள போவாரோ!' என்ற எண்ணம் மனதில் எழுந்ததைத் தவிர்க்கவும் முடியவில்லை.

பெரியக்கா எதுவோ கதைப்பது கேட்டது. இருவர் குரல்களும் நெருங்கி வருவதிலிருந்து அவர்கள் வீட்டினுள் வந்துவிட்டதும் புரிந்தது.

அதுவும் அம்மாவைக் கேட்டபடி சின்ன அறைக்குள் வந்தார் போலும்.

"அம்மா" என்று அவர் கூப்பிட்டது காதுகளில் விழ, கண்ணீர் குபுக்கென்று வெளியேறியது. அம்மாவும் பெருங்குரலில் அழத் தொடங்கி இருந்தார் .

அம்மாவின் ஓவென்ற அழுகை சில நிமிடங்களில் முடிவுக்கு வந்தது .

அதுவும், "அம்மா! நானும் உங்கட மகன் தானே? எப்பவும் அப்பிடித்தானே சொல்வீங்க? பிறகு ஏன் 'என்ர ஒரே மகன் போய்ட்டான்' எண்டு திரும்ப திரும்பச் சொல்லி அழுறீங்க? அவன் இப்ப நம்மளோட இல்ல எண்டது ஆற்ற முடியாத சோகம் தான்மா! அதுக்காக? அவன் அநியாயமாக ஒண்டும் போகேல்ல! அவன் இந்த மண்ணுக்காக மரணித்தான் எண்டதை நினைச்சு நீங்க பெருமைப் படவேணும் மா! வீரமரணம் அடைஞ்ச ஒவ்வொருவரிண்ட மனசில இருந்த ஒரே கனவை நனவாக்க ஆயிரமாயிரம் பேர் உறுதியோடு நிக்கிறம். ஒவ்வொரு வீரமரணத்துக்கும் நியாயம் கிடைக்கும் மா! அந்த நாள் ஒன்றும் தூரத்தில இல்ல. அதனால அநியாயமாகப் போய்ட்டான் எண்டு மட்டும் சொல்லி அழாதீங்க!" படபடவென்று சொல்லி இருந்தார் கதிரவன் அண்ணா.

நானுமே விசுக்கென்று எழுந்தேன்.

'அம்மா இருக்கும் நிலையில் இவர் என்ன இதையெல்லாம் சொல்லுறார்? இங்க என்ன பிரச்சாரம் பண்ணுறாரோ!' உள்ளே நடக்கத் தொடங்குகையில், "நீ முதல் எழும்பி வெளில நட!" அம்மாவின் அதட்டல் காதுகளில் வந்து மோதியது.

"அம்மா!" கதிரவன் அண்ணாவின் குரலில் அதிர்ச்சி!

"வேணாம் ராசா! வேணாம்! நீ அம்மா எண்டு சொல்லவும் வேணாம், நான் உன்ன மகன் எண்டு நினைக்கவும் வேணாம். இந்த வியாக்கியானம் எல்லாம் கேட்டுக் கேட்டுக் காது புளிச்சுப் போச்சு! நீ முதல் கிளம்பு!" அம்மா சீற, "பச்! மா, சும்மா இருங்கோ, நீர் இங்கால வாரும் கதிர்." பெரியக்காவின் குரல் இடையிட்டது.

"பரவாயில்ல விடுங்க அக்கா! அம்மாதானே?" என்றவர், சுவரோரமாக அமர்ந்திருந்த அம்மாவினருகில் சென்று அமர்ந்து கொண்டார்.

"உங்களுக்கு என்னில கோவம் இருந்தா நான் ஏதாவது பிழையாச் சொல்லியிருந்தா ரெண்டு அடி போடுங்கம்மா, அதைவிட்டுட்டு வெளில போ எண்டு மட்டும் சொல்லாதீங்க!" என்று சொல்கையில் அவர் குரல் நடுங்கியது.

உருண்டோடிய கண்ணீரைத் துடைத்தபடி பெரியக்காவைப் பார்க்க அவளும் கண்களைத்தான் துடைத்துக்கொண்டு நின்றாள்.

"மூணு வருசங்கள் ஒண்டா இருந்தவன் இப்ப இல்ல, இனி ஒருநாளும் காண முடியாத இடத்துக்குப் போய்ட்டான் எண்டது...அந்த வலி...நான் எப்பிடி உணருறன் எண்டெல்லாம் வார்த்தையில சொல்ல முடியேல்ல அம்மா, அப்ப உங்களுக்கு எப்பிடி இருக்கும் எண்டு விளங்காமல் இருக்குமா?"

நடுங்கும் குரலில் சொல்லிக்கொண்டே தன் கண்களின் கசிவை அழுந்தது துடைத்துக் கொண்டவர் பார்வை வாயிலோரமாக நின்ற எங்களைத் தொட்டுவிட்டு அம்மாவிடம் திரும்பியது.

"நான்...நான் உயிரோட இருக்கிறவரைக்கும் நீங்க மகன் இல்ல எண்டு நினைக்கவே தேவையில்லம்மா! அவனாக இருக்க முடியாட்டியும் இதுவும் என்ர குடும்பம் எண்டு எப்பவும் நினைக்கிறவன் நான்; எப்பவும் துணையா இருப்பன் அழாதீங்கம்மா!"

பரிவோடு அம்மாவின் கண்களைத் துடைத்துவிட, அம்மாவோ மீண்டும் உடைந்தழுதார் .

அண்ணாவின் இழப்புக்கு பின் அம்மா உணவு பரிமாறியது கதிரவன் அண்ணாவுக்குத்தான். கண்ணீரோடு பரிமாறிய உணவைக் கண்ணீரோடு உண்டார் அவர். அன்று அவர் விடைபெறுகையில், "அவன் எந்த நேரமும் உங்களப் பற்றித்தான் கதச்சிக் கொண்டிருந்தவன்; அண்டைக்கு அக்காவையும் அப்பாவையும் சந்திச்சவன் உங்களைக் காணேல்ல எண்டு சரியாக் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தான். இந்த முறை நத்தாருக்கு நானும் அவனும் லீவில வர நினைச்சிருந்தம்; அது பார்த்தால்..." சொல்லி நிறுத்தியவர் முகத்தை மறுபுறம் திருப்பித் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார்.

அதன்பின்னர், சற்றுநேரம் முயன்று பொதுவாக உரையாட்டிவிட்டுப் புறப்பட்டவர், "என்னால முடிஞ்ச நேரம் கட்டாயம் வந்து பார்க்கிறன். நீங்களும் என்ன எண்டாலும் எனக்குச் சொல்ல வேணும். நான் எப்பவும் உங்களுக்கு இருக்கிறன்." என்றபடிதான் விடைபெற்றுச் சென்றிருந்தார்.
 
Top