கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அனு Vs மனு...கதை திரி

Poornima Karthic

Moderator
Staff member
வணக்கம் நண்பர்களே,

நம்ம சிறுவர் கதைகளில் என்னோட அடுத்த முயற்சியாக அனு Vs மனு என்ற தொடர் வரப் போகிறது.

அனு என்கிற குட்டி பெண்ணும், மனு என்கிற சுட்டி ரோபோட்டும் சேர்ந்து அசத்தும் கதைகள். கதைகளோடு கொஞ்சம் குழந்தைகளுக்கு ஏற்ற கருத்தும் சொல்லப் போகிறேன். இதை படிக்கும் குழந்தைகளுக்கு நிச்சயம் ஏதோ ஒரு வகையில் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அனுவிற்கு அவளின் விஞ்ஞானி தந்தை ஒரு மஞ்சள் நிற டெடி பொம்மை போன்று இருக்கும் ரோபோவை பிறந்தநாள் பரிசாகத் தருகிறார். அவர்கள் செய்யும் கலாட்டாக்களை பார்க்கப் போகிறோம். இணைந்திருங்கள் என்னோடு இத்தளத்தில்.
 

Poornima Karthic

Moderator
Staff member
அனு Vs மனு பாகம் - 1

அன்று அனுக்குட்டியின்‌ எட்டாவது பிறந்தநாள். மகிழ்ச்சியுடனும், ஆவலுடனும் எப்போதும் எழுந்திருக்கும் நேரத்திற்கு முன்பாகவே விடியற்காலையிலேயே எழுந்துவிட்டாள்.

கண்ணாடியில் தன்னை பார்த்து கொண்டு ," ஹேப்பி பர்த்டே அனு" என்று தனக்கு தானே சொல்லி கொண்டாள். "ஹைய்யா! நம்ம வருஷம் முழுதும் இந்த நாளுக்காக தானே காத்திருந்தோம், அம்மா அப்பா என்ன‌ சர்ப்ரைஸ் தரப்போறாங்களோ " என ஓட்டமும் நடையுமாக அவள் அன்னையை நோக்கி அடுக்களைக்குள் விரைந்தாள்.

" வா அனு பாப்பா என்ன இன்னும் மணி ஆறே ஆகவில்லை அதற்குள்ளே எழுந்து விட்டாய். அவ்ளோ ஆவலா?. பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லக்குட்டி. உன்னை கூடை கூடையாய் மகிழ்ச்சியோடும் அன்போடும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்" என்றாள் அவள் அம்மா நிறைமதி.

"தாங்க்யூ மா உம்மா", என அன்னையின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு, ஆவலுடன் அவள் முகத்தை பார்த்து கொண்டிருந்தாள் அனு.

" என்னடா கண்ணா! உன் ஆர்வம் புரிகிறது. இந்தா உன் எட்டாவது பிறந்தாளுக்காக, எட்டு குட்டி குட்டி பரிசுகள்" என்று நிறைமதி அனுவிற்கு எடுத்து கொடுத்தாள்.

அதை ஆவலுடன் வாங்கி பிரித்து பார்த்த அனு மிகவும் மகிழ்ந்தாள். குட்டி பூனை போன்ற இரவு விளக்கு, அவள் மனம் கவர்ந்த சாக்லேட், சின்ன பொம்மை சாவிக்கொத்து என்று அவளுக்குப் பிடித்தமான பரிசுகள் இருந்தன. இதையெல்லாம் பார்த்துவிட்டு, "அம்மா அப்பா எங்க அம்மா காணும்" என்று அனு கேட்டாள்.

அப்பா காலையிலேயே ஆராய்ச்சிக் கூடத்திற்கு கிளம்பி விட்டார் எனவும், உனக்கு இந்த பரிசை தரச் சொன்னார் என்று அவள் தாய் நிறைமதி அனுவிற்கு ஒரு குட்டி பார்சலை கொடுத்தாள்.

"போம்மா எனக்கு பரிசெல்லாம் வேண்டாம், அப்பா தான் வேணும். எனக்கு இன்னைக்கு பிறந்தநாள் நான் அவரை பார்த்து ஆசிர்வாதம் வாங்கணும்" என்று அனு மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டாள்.

அவளின் அம்மா அவளை சமாதானப்படுத்தி அப்பா மாலையில் சீக்கிரமாகவே வந்துவிடுவார் செல்லம். நாம் மாலை உன் நண்பர்கள் அனைவரையும் அழைத்து கேக் வெட்டலாம் என்று தேற்றினாள்.

அனுவும் மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டிவிட்டு, அந்த பார்சலை பிரித்து பார்க்க அதில் ஒரு குட்டி டெடிபியர் பொம்மை இருந்தது. சிறிய கண்கள் சிறிய மூக்கு மற்றும் இளம் மஞ்சள் நிறம் என்று அந்த டெடிபியர் பொம்மை பார்க்க மிகவும் அழகாக இருந்தது. அதை அனுவிற்கு மிகவும் பிடித்துப் போனது.

"ஆமா உனக்கு ஒரு பெயர் வைக்கலாமா? என்ன பெயர் வைக்கலாம். ஹாங் உன் பெயர் இனிமேல் மனு" என்று அதற்கு அழகாக பெயர் சூட்டினாள்.

அதை கட்டிப்பிடித்து அன்று முழுவதும், அதை கூடவே வைத்திருந்தாள். பள்ளிக்கு செல்லும் போதும், தன்னுடைய புத்தகப்பையில் மனுவை வைத்து எடுத்துக் கொண்டாள்.

மாலையும் வந்து விட்டது. அனுவும் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்துவிட்டாள். ஆனால் அவள் அப்பா வரும் வழியை காணவில்லை.

" அம்மா, அப்பா எப்பம்மா வருவாங்க. போன் பண்ணி கேளு மா!" என்றாள் அனு.

" இல்லம்மா, அப்பாவிற்கு ஏதோ முக்கியமான மீட்டிங்காம். அதனால் வர முடியவில்லை இரவு வருகிறேன் என்று கூறி விட்டார். நீ வீட்டில் சமத்தாக இரு நான் போய் உன் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக கேக் மற்றும் நொறுக்குத்தீனி வகைகளை வாங்கி வருகிறேன்" என்று கூறிவிட்டு சென்றாள் நிறை.

"போகும்பொழுது யார் வந்து அழைப்பு மணியை அமுக்கினாலும், கதவை திறக்க வேண்டாம். நான் வெளியில் பூட்டி விட்டு செல்கிறேன். ஒரு அரை மணி நேரத்தில் வந்து விடுவேன்" என்று கூறிவிட்டு சென்றாள்.

அனுவிற்கு மிகவும் அழுகை அழுகையாக வந்தது. அவள் குட்டி டெடி பியரை கட்டிப்பிடித்துக்கொண்டு அதனிடம் புலம்பிக்கொண்டிருந்தாள். "பார்ட்டிக்கு அப்பா வரவே இல்ல மனு. எனக்கு கஷ்டமா இருக்கு"

இங்கே அனு புலம்பிக் கொண்டு இருக்க, அங்கே அனுவின் அப்பா வினோத்தின் அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. " உங்கள் மகள் இருட்டான குழிக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறாள். உடனே விரைந்து சென்றால் காப்பாற்றலாம்" என்ற செய்தி வந்திருந்தது.

அதைப்பார்த்த அனுவின் தந்தைக்கு படபடப்பு அதிகமானது. உடனே நிறைமதியின் அலைபேசிக்கு போன் செய்ய, அது அடித்துக்கொண்டே இருந்தது அவள் அழைப்பை ஏற்கவில்லை.

என்ன செய்வது என்று தெரியாத வினோத், தன்னுடைய எதிர் வீட்டிற்குப் போன் செய்து, "கொஞ்சம் என் வீட்டிற்கு சென்று, யாராவது இருக்கிறார்களா என்று பார்க்கிறீர்களா! போய் காலிங் பெல் அடித்து கூப்பிடுங்களேன்" என்று வேண்டுகோள் விடுத்தான்.

எதிர் வீட்டுகாரர் வந்து காலிங் பெல் அடிக்க, யாருமே கதவை திறக்கவில்லை. இந்த செய்தி வினோத்தை மேலும் கவலைக்குள்ளாக்கியது. பதற்றத்துடன் அவசர அவசரமாக ஆபீஸில் இருந்து கிளம்பி வீட்டிற்கு வந்து விட்டான்.

வீடு பூட்டி இருந்தது என்ன செய்வது என்று தெரியாமல் கார் பார்க்கிங்கில் தலை பிடித்து கொண்டு உட்கார்ந்து விட்டான்.

ஒரு இரண்டு நிமிடங்கள் கடந்ததும், நிறைமதி கேக் மற்றும் நொறுக் தீனிகள் அடங்கிய பெரிய பையை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு வந்தாள்.

"என்ன நிறை, எங்க போயிருந்த? நம்ம அனு எங்க? அவளுக்கு என்ன ஆச்சு?" என்று வினோத் அவள் வந்ததும் வராததுமாய் கேள்விக் கணைகளைத் தொடுத்தாள்.

"ஏங்க என்ன ஆச்சு? மீட்டிங் இருக்குன்னு சொன்னீங்களே? நைட் லேட்டா தான் வருவேன்னு சொன்னீங்க என்ன ஆச்சு? ஏன் பதட்டத்துடன் வந்தீங்க? என்று நிறைமதி கேட்டாள்.

"முதலில் அனு எங்கே என்று சொல்லு? என் அலைபேசியில் அனுவிற்கு ஆபத்து" என்று குறுஞ்செய்தி வந்துள்ளது.

"என்னங்க அபத்தமா பேசுறீங்க! அனு நம்ம வீட்லதான் இருக்கா. அவளை உள்ள வச்சு நான் தானே பூட்டிட்டு போனேன்".

"கொஞ்சமாவது அறிவு இருக்கா? குழந்தையை தனியே விட்டுவிட்டு யாராவது வெளியில் போவாங்களா? அவளையும் அழைத்துக்கொண்டு போக வேண்டியதுதானே" என்று வினோத் கடிந்து கொண்டான்.

" சரி சரி சீக்கிரம் கதவைத் திற அனுவிற்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது" என்றான் வினோத்.

அவசர அவசரமாக வீட்டிற்குள் நுழைந்து அனுவை தேட அவள் எங்கேயுமே அகப்படவில்லை. இதைக்கண்ட வினோத்திற்கு மிகவும் படபடப்பு வந்தது

"இருங்க வினோ, டென்சன் ஆகாதீங்க நான் அவளை தேடுகிறேன்" என்று எல்லா அறையிலும் சென்று நிறைமதி தேடிப்பார்த்தாள்.

எங்கேயும் அனுவைக் காணவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் படுக்கையறையின் கட்டிலின் மேல் அமர்ந்துகொண்டு அழ ஆரம்பித்தாள் நிறைமதி.

அப்பொழுது அவளின் அழுகையின். கூடவே, ஒரு விசும்பல் சத்தம் கேட்டது என்னடா சத்தம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால் நமது அனு குட்டிதான் கட்டிலுக்கு அடியில் இருட்டில் டெடி பியர் உடன் உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தாள்.

"என்னங்க இங்க வாங்க, நம்ம குட்டி இங்கதான் கட்டிலுக்கு அடியில் இருக்கிறாள். வாங்க!"

உடனே பாய்ந்து ஓடி வந்த வினோத், "அனு பாப்பா, உனக்கு எதுவும் பிரச்சனை இல்லையே. நல்லாதான இருக்க" அப்படி என்று கேட்டுவிட்டு கொஞ்சத் தொடங்கினான்.

இது எதுவும் நிறைமதிக்கு புரியவே இல்லை."நீங்க முதல்ல என்னாச்சுனு சொல்லுங்க. எதற்காக இப்படி பரபரப்போடு அலுவலகத்திலிருந்து வந்தீர்கள்? யார் உங்களிற்கு அனு ஆபத்தான நிலையில் இருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பியது" என்று கேள்வி கேட்டு துளைத்தெடுத்தாள்.

"பொறுமை பொறுமை, இரு நான் சொல்கிறேன் " என்றான் வினோத்.

"அனு ஒரு இருட்டான குகைக்குள் மாட்டிக்கொண்டதாக எனக்கு குறுஞ்செய்தி வந்தது. அந்த குறுஞ்செய்தி அனுப்பியது வேறு யாருமில்லை, நம்ம குட்டி டெடி தான்" என்றான் வினோத்.

"என்னது குட்டி டெடியா? என்ன சொல்றீங்க? ஒன்னுமே புரியலையே."

"நிறை, இது நீ நினைக்கிற மாதிரி சாதாரண பொம்மை இல்லை. இது ஒரு குட்டி டெடி பியர் போல் இருக்கும் ரோபோட். இதற்கு எல்லாம் தெரியும். இது அனுவிற்கு ஒரு உற்ற தோழியாய் பாதுகாப்பாய் இருக்கும் என்பதற்காகவே நான் இதை உருவாக்கி அவளுக்கு கொடுத்து இருக்கிறேன்".

"அந்த டெடி தான் அனு அழுவதை தாங்க முடியாமல், வில்லங்கமாக என்னை வர வைக்க வேண்டுமென்று கட்டிலுக்கு அடியில் இருந்ததை, குழிக்குள் இருட்டில் இருப்பதாக எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டது" என்றான் வினோத்.

வினோத்தின் பேச்சைக்கேட்டு, டெடி கலகலவென்று சிரித்து ஆரம்பித்தது. "என்ன குருவே, நீங்கள் தானே சொல்வீர்கள். அலுவலகத்தில் நீங்கள் இல்லை என்றால் வேறு ஒருவரை வைத்து அந்த காலி இடத்தை நிரப்பி விடுவார்கள். ஆனால் குடும்பத்தில் நீங்கள் மிகவும் முக்கியம், உங்களை தவிர அந்த இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்று அனைவருக்கும் அறிவுரை கூறுவீர்கள். இப்பொழுது நீங்களே உங்கள் செல்ல மகளின் பிறந்த நாளை மிஸ் செய்யலாமா? அதனால் தான் உங்களுக்கு அப்படி ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்" என்று கூறி கண்ணடித்து சிரித்தது மனு.

இது எல்லாவற்றையும் கேட்ட அனுவிற்கு மிகவும் ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது இது வெறும் பொம்மை என்று நினைத்தால் இது ஒரு குட்டி பேசும் ரோபோட் ஆக இருக்கிறது .நமக்கு தங்கை இல்லை என்ற குறை இந்த மனுவால் தீர்ந்தது என்று அவள் எண்ணிக்கொண்டாள்.

"அனு ஹாப்பி குருவே! ஸோ இந்த மனுவும் ஹாப்பி" என்று இல்லாத சட்டை காலரை தூக்கி விட்டு சிரித்தது மனு.

அனு மற்றும் மனுவின் சேட்டைகள் தொடரும்..............

 
Top