கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அன்புள்ள அன்பே!!! அத்தியாயம் - 5

வாசலில் பைக் சத்தத்தைக் கேட்டதும் ஆசையாசையாய் அவன் முகம் பார்க்க ஓடிய ரதீமா அவனை தூரத்தில் கண்டதுமே சிலையாய் சமைந்து நின்றாள்.

ஆறடியில் பால் வண்ணத்தில் எதிரில் வந்தவனை இமைக்க மறந்துப் பார்த்துக் கொண்டிருந்தவள் சட்டென ஷாக் அடித்தது போல் வெட்கம் கவ்விக் கொள்ள அருகிலிருந்த அறை கதவுக்கு பின் சென்று ஒளிந்து கொண்டாள்.

பைக்கை விட்டு இறங்கியவனை "வாடா இப்போதான் மாமினு ஒருத்தி இருக்கான்ற நியாபகம் வந்துச்சா" என்றபடி கைப்பிடித்து வீட்டுக்குள் இழுத்துச் சென்றார் வகீதா.

"மாமி என்ன மாமி இப்டி சொல்லிட்ட. அதெப்படி என் ஸ்வீட்ஹார்ட்ட எனக்கு நியாபகம் இல்லாம இருக்கும். கொஞ்சம் பிஸி பேபி அதான் உங்கள பாக்க வரமுடியல." என்று கொஞ்சியவனின் காதைப் பிடித்துத் திருகிய அத்தம்மா

"ஓகோ ஐயாக்கு வேல இருந்தா எங்கள பாக்க வரமாட்டிங்களா." என்றார்.

"ஸ்.. ஆஆஆ.... சாரி அத்தம்மா... இனிமே கண்டிப்பா வரேன்" என்றவன் இருவரையும் தோளோடு அணைத்துக் கொண்டான்.

அவனை அன்போடு அணைத்துக் கொண்ட அத்தம்மாவும் "சரிடா தங்கம். முதல்ல வந்து சாப்பிடு" என்க

"இல்ல அத்தம்மா நான் ஃப்ரெஷ் ஆகனும்" என்றவனிடம் வகீதா

"சரி நீ அந்த ரூம்க்கு போடா. போய் ப்ரெஷ் ஆய்ட்டு வா. உனக்கு ரகீமோட ட்ரெஸ் எடுத்துட்டு வரேன்." என்றார் வகீதா.

அவ்வளவு நேரம் தன்னவனை அறையின் கதவிடுக்கிலிருந்து ரசித்துக் கொண்டிருந்த ரதீமா அவன் அவள் ஒளிந்திருக்கும் அறையை நோக்கி வரவும் வெலவெலத்துப் போனாள்.

'போச்சு போச்சு நல்லா மாட்டிக்கிட்டேன் இப்போ நான் வெளில போனா நான் ஏன் சம்பந்தமில்லாம இந்த ரூம்க்கு வந்தேன்னு அம்மாவும் அத்தம்மாவும் கேப்பாங்க. அம்மாவ சமாளிச்சிரலாம் இந்த அத்தம்மாவ சமாளிக்கவே முடியாதே. வரானே வரானே.... யா அல்லாஹ்! காப்பாத்து ப்ளீஸ்..'

தீவிரமாக யோசித்தவள் அறையில் ஆளுயர ஜன்னலுக்கு போடப்பட்டிருந்த திரைச்சீலையின் பின்னால் போய் ஒளிந்துகொள்ளும் அறிய யோசனையைக் கண்டுபிடித்தாள்.

உள்ளே நுழைந்த சலீம் நிதானமாக தன்
மொபைலையும் வாட்சையும் ட்ரெஸிங் டேபிளில் வைத்துவிட்டு நிமிர்ந்து கண்ணாடியைப் பார்க்க அவன் கண்களில் முதலில் பட்டது ஜன்னல் திரைச்சீலைதான்.

அவனிதழோரம் அவன் அனுமதியின்றி உதித்த மென்னகையை ஒரு நொடிக்குள் மறைத்து கல்லாய் சமைந்த முகத்துடன் ஜன்னலின் அருகில் சென்றவன் இறுகிய குரலில் "ஏய் வெளில வா " என்றான்.

அவன் காலடி ஓசையிலேயே அவன் அருகில் வருவதை அறிந்து கொண்ட ரதீமாவிற்கு பயத்தில் மயக்கம் வருவது போலிருந்தது. போதாக்குறைக்கு அவன் தான் அங்கிருப்பது தெரிந்து வெளியே வா என்றதும் அவன் குரலில் இருந்த கடுமையும் சேர்ந்து கொள்ள அவள் கண்களிலிலிருந்து அவளையறியாமலேயே விழுந்தது ஒரு துளி கண்ணீர்.

சடாரென திரைச்சீலையை விலக்கி அவள் கைப்பிடித்து வெளியே இழுத்தான் சலீம். அவன் இழுத்த வேகத்தில் நிலைதடுமாறி கீழே விழப்போனவளின் தோல்களை பிடித்து நிற்க வைத்தான்.

பயமும் வெட்கமும் சேர்ந்து கொண்டு அவனை நிமிர்ந்து பார்க்கமுடியாமல் தலைகுனிந்து நின்றாள் ரதீமா.

"ஏய் இங்க என்ன பண்ற நீ."

"அது... வந்து.." என்று இழுத்தவளை

"ம்.. வந்து. என்ன" என்றான்.

"ஸ்க்ரீன் கரெக்டா மாட்டி இருக்கானு பாக்க வந்தேன் " என்று உளறியவளைப் பார்த்து பொங்கி வந்த சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டவன் சற்று கடுமையான குரலில்

"பாத்தாச்சா"

'ஙே' என்று விழித்தவளைப் பார்த்து மீண்டும் சிரிப்பை அடக்கிக் கொண்டவன் "ஸ்க்ரீன பாத்தாச்சுல" என்று மறுமுறை கேட்க

"ம்" என்று தலையாட்டினாள் அவள்.

"அப்ப கிளம்பு"

தயங்கி தயங்கி தரையை பார்த்தபடி திரும்பியவளை "ரதி" என்றழைத்தான்.

நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவளின் இடது கன்னத்தில் நின்ற ஒரு சொட்டு கண்ணீரை ஒற்றை விரலால் துடைத்து விட்டவன் "போ" என்றான் இளகிய குரலில்.

ஏனோ அவளுக்கு அந்த நொடி அப்படியே உறைந்திடாதா என்றிருந்தது. மெதுவாய் அந்த அறையிலிருந்து வெளியே வந்தாள். சுற்றி எதுவும் அவள் கருத்தில் பதியவில்லை. தன்னிச்சையாய் சென்று தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

ரதீமா சலீமின் அறையிலிருந்து வந்ததையும் அவளறைக்குள் போய் கதவடைத்துக் கொண்டதையும் கிச்சனிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த சமீராவுக்குத் தான் பயத்தில் கைகள் நடுங்கியது.

'தான் பார்த்ததை வேறு யாராவது பார்த்திருந்தால்' என்ற எண்ணமே அவள் வயிற்றில் புளியைக் கரைத்தது. மனதிற்குள் 'யா அல்லாஹ்! வீட்ல இவங்க விஷயம் தெரிஞ்சு எந்த ப்ரச்சனையும் வந்துர கூடாது.' என்று மிகத்தீவிரமாக கேட்டாள். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

தன் அறையிலிருந்து வெளியே சென்றவளை பார்த்தபடி நின்றிருந்த சலீமின் முகத்தில் ஒரே ஒரு நொடி ஏக்கமா வருத்தமா தாபமா என்று அவனாலேயே பகுத்தறிய முடியாத உணர்வொன்று தோன்றியது. ஆனால் மறுநொடி நிச்சலனமான கண்களுடன் அவனின் ட்ரேட் மார்க் புன்னகையை உதடுகளில் ஒட்ட வைத்துக் கொண்டான்.

அதுதான் சலீம். அவனாக விரும்பினாலேயன்றி அவன் மனதைப் படிக்க அவனைப் படைத்த இறைவனை தவிர வேறு யாராலும் முடியாது.


"அண்ணன் இந்தா ட்ரஸ்" என்றபடி அறைக்குள் வந்தாள் சமீரா. அவனுக்கு மாற்றுடையை அவளிடம் கொடுத்தனுப்பியிருந்தார் வகீதா.

"தேங்கஸ் டா" என்று வாங்கிக்கொண்டவன் குளியலரைக்குள் சென்று அடைந்துகொண்டான்.

சமீரா அறையை விட்டு வெளியேற எத்தனிக்கையில் சலீமின் மொபைல் சினுங்க அதை எடுத்துப் பார்த்தவளுக்கு மனதிற்குள்ளே மழையடித்தது. தன் மகிழ்ச்சி குரலில் தெரிந்திராமல் மறைத்துக் கொண்டவள் (மறைத்ததாய் நினைத்து கொண்டவள்)

"அண்ணா ஃபோன்" என்று குரல் கொடுத்தாள்.

"யாருடா" என்றான் சலீம் உள்ளிருந்து.

"இம்ரான்" என்றாள். அவள் குரலில் சட்டென ஏறிக்கொண்டது பெண்மையின் மென்மை.

"நான் லேட்டா கால் பண்றேன்னு சொல்லுமா" என்றவனின் இதழோரம் பூத்தது ஒரு கள்ளநகை.

"ஹலோ" என்றாள் சமீரா.

"ஹலோ நான் எதுவும் தப்பான நம்பர்க்கு கால் பண்ணிடலயே. இது என் நண்பன் சலீம் நம்பர் தான" என்றான் எதிர்புறமிருந்த குறும்பன்.

"டேய் என்னடா ரொம்ப பண்ற நான் போன வக்கிறேன்" என்று கட் பண்ண போனாள்.

"சமீ சமீ வச்சிராதடி. சும்மா வெறுப்பேத்தலாம்னா உடனே கோவம் வந்துருமே" என்றவனின் கொஞ்சலில் இளகியவள்

"பின்ன என்னடா. என்ன நினைச்சுட்ருக்க உன் மனசுல. எத்தனை நாளாச்சு உன்ன பாத்து. வீட்டுக்கு கூட வர்றதில்ல. போடா நாந்தான் உன்னையே நெனச்சுட்ருக்கேன். உனக்கு எம்மேல கொஞ்சம் கூட பாசமேயில்ல. என்கிட்ட பேசாத போ"

"ஏய் என்னடி நீ. எனக்கு மட்டும் உன்ன பாக்கணும்னு ஆசையில்லயா. புரிஞ்சுகோடி. ஃபைனல் இயர்னால ரொம்ப பிஸியா போகுதுடா" என்றான் இம்ரான்.

"ஹ்ம் உனக்கு என்னவிட படிப்பு தான முக்கியம்."

"ஹேய் என்னடி இப்டி பேசுற. எனக்கு எல்லாத்தையும் விட நீதான் முக்கியம். ஆனா எல்லாரோட சம்மதத்தோட சந்தோஷமா நமக்கு கல்யாணம் நடக்கனும்ல அதுக்கு நான் நல்லா படிச்சு என் தகுதிய வளத்துக்கனும். அப்பதான தைரியமா மாமாகிட்ட வந்து பொண்ணு கேக்க முடியும்"

"ம்ம்... நல்லா பேசி பேசி ஏமாத்து" என்று சிணுங்கினாள்.

"அதுசரி பேசினாலாம் ஏமார்ற ஆளாடி நீ" என்றான் குறும்பாக.

"டேய்.." என்று ஏதோ செல்லமாக மிரட்ட போனவள்" குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்டு "அண்ணன் வரான் நான் வச்சிடுரேன். பை" என்று சடாரென வைத்துவிட்டாள்.

"ஏய் ஒரு நிமிஷ... ம் வச்சிட்டாளா. இவன் ஒருத்தன் இப்பதான் வரணுமா எனக்கு இம்ச குடுக்கறதுக்குனே பொறந்தியாடா" என்று தன் ஸ்டடி டேபிள் ஓரத்தில் இருந்த போட்டோ ஃப்ரேமிற்குள் தன் தோள்மேல் கைப்போட்டபடி சிரித்துக் கொண்டிருந்த தன் நண்பனை செல்லமாய் திட்டிவிட்டு தன் காதலியின் குரல் தந்த புத்துணர்ச்சியுடன் படிக்க துவங்கிய நேரம்

"டேய் என்னாடா தனியா பொலம்பிகிட்ருக்க" என்றபடி அறைக்குள் வந்தான் அவன் தம்பி இர்ஃபான்.

"வாடா.. எப்டியும் கதவுக்கு பின்னாடி நின்னு ஒட்டுகேட்டுட்டு தான் உள்ள வந்துருப்ப அப்பறம் ஏன்டா ஒன்னும் தெரியாதவன் மாதிரி என் வாய புடுங்க பாக்குற"

"ஹலோ ப்ரதர் நான் ஒன்னும் ஒட்டுலாம் கேக்கல. அதுவா காத்துவாக்குல வந்து என் காதுல விழுந்துச்சு அவ்ளோதான். ஐம் எ வெரி டீசன்ட் கை யூ நோ..."

"மானம் ரோஷமே கிடையாதாடா உனக்கு"

"ஓய் அதப்பத்திலாம் நீ பேச கூடாது. இவ்ளோ நேரம் வெக்கமே இல்லாம பொம்பள புள்ளகிட்ட கெஞ்சிகிட்ருந்திவன் தான நீ"

இதற்கு மேல் இவனிடம் வாயைக் கொடுத்தால் தனக்கு தான் ஆபத்து என்றுணர்ந்தவன் அவனை கவனிக்காதது போல புத்தகத்தில் முகத்தை மறைத்துக் கொண்டான்.

அதேநேரம் அங்கு சலீமிற்கு வகீதாவின் கையால் ராஜ உபசாரம் நடந்து கொண்டிருந்தது. அவனுக்கு பிடித்தவற்றை பார்த்து பார்த்து சமைத்திருந்தார் வகீதா. அவனை அமர வைத்து இடதுபுறம் அத்தம்மாவும் வலதுபுறம் வகீதாவுமாய் பறிமாறுகிறோம் என்ற பெயரில் அவன் தட்டில் மில்லிமீட்டர் அளவுகூட இடமின்றி நிறைத்திருந்தனர்.

"ஏன் மாமி இதல்லாம் உங்களுக்கே நியாயமா இருக்கா" என்று கச்சேரியை துவக்கினாள் சமீரா.

"ஏன்டி. இப்ப என்ன அநியாயம் பண்ணிட்டாங்க"

"பின்ன இங்க நாங்க மூணு பேர் உக்காந்துருக்கோம்ல எங்களுக்கு ஏதாவது வக்கணும்னு தோணுதா"

"ஏய் அதான் இத்தன இருக்குதுல எடுத்து வச்சு சாப்புட வேண்டியதான. இதுக்கு ஒரு ஆளு வேறயா. புள்ள இத்தன நாள் கழிச்சு வந்துருக்கான் அவன பாக்கறத விட்டுட்டு உங்களுக்கு ஊட்டுவாங்களா " என்ற அத்தம்மா தன் மகன் புறம் திரும்பி

"என்னடா ஒனக்கு வேற தனியா சொல்லனுமா எடுத்து போட்டு சாப்புடு" என்று செல்லமாய் ஒரு அதட்டு அதட்டினார்.

"மாமா என்ன மாமா நீங்களும் சும்மா இருக்கீங்க." என்று ரதீமாவின் தந்தையையும் ஆட்டத்திற்குள் இழுத்துவிட்டாள் சமீரா.

"வேற என்னடா பண்ண சொல்ற ஏதோ இன்னிக்கு சலீம் புண்ணியத்துல நல்ல சாப்பாடு கெடச்சுருக்கு. உங்க மாமிக்கு இதெல்லாம் செய்ய தெரியும்னு இன்னிக்கு தான்டா எனக்கே தெரியுது." என்று தன் மனைவியை வாரி அவரின் முறைப்பையும் "ம்ம்ம்..." என்ற உறுமலையும் பெற்றுக் கொண்டார்.

"ஹாஹாஹா மாமா இதெல்லாம் உங்களுக்கு தேவையா. ஏன் மாமா மாமிய டென்ஷன் பண்றீங்க" என்றான் சலீம்.

"அரசியல் வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா" என்றவர் அதே மாடுலேஷனில் சொல்ல அத்தனைப் பேரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

அவ்வளவு நேரம் ஒரு வார்த்தை கூட பேசாமல் சாப்பிட்ட ரதீமாவும் தன்னைமறந்து கலகலவென சிரிக்க மூச்சுவிட மறந்து அவளை பார்த்திருந்தான் சலீம். சில நொடிகளில் தன்னிலை அடைந்தவன் யாரும் கவனிக்கும் முன் வேறு பக்கம் பார்வையை செலுத்தினான்.

உணவையும் அரட்டைக் கச்சேரியையும் முடித்துக்கொண்டு அனைவரும் அவரவர் அறைக்கு சென்றனர்.

தன்னந்தனியாய் காய்ந்த நிலவிற்கு துணையாய் அதனுடன் உரையாட மொட்டை மாடிக்குச் சென்றாள் ரதீமா. தன்னவனின் நினைவுகளால் அவள் தூக்கம் தொலைத்து வெகு நாட்கள் ஆயினும் இன்று அவன் தன் அருகில் ஒரு சுவர் தூரத்தில் இருக்கிறான் என்னும் நினைவில் நிலை கொள்ளாமல் தவித்தாள்.

அவன் அருகாமையில் இருந்த அந்த சில நொடிகளும் அவனின் ஸ்பரிசமும் திரும்ப திரும்ப அவள் மனதில் தோன்றி பாடாய்ப் படுத்தியது.

அருகில் சமீரா உறங்கிக் கொண்டிருந்தாள். ரதீமாவால் அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் மெதுவாக எழுந்து மொட்டை மாடிக்குச் சென்றாள்.

எங்கு சென்றாலும் அவன் நினைவுகளிலிருந்து அவளுக்கு விடுதலை ஏது. தன் பின்னால் அவன் நிற்பதாக அவளின் உள்ளுணர்வு சொல்ல ஆசையாக திரும்பி பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அவனின் "ரதி" என்ற அழைப்பு அவள் காதில் கேட்டுக் கொண்டேயிருந்தது.
"இன்னொரு முறை என்ன ரதி ன்னு கூப்பிடு சலீம்" என்று வெண்ணிலவின் கண்ட தன்னவனின் முகத்தைப் பார்த்து வாய்விட்டு புலம்பினாள்.

"ரதி"

தனக்கு மட்டும் கேட்கும் குரலில் மிக மெதுவாக அழைத்துக் கொண்டான் மறைவில் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்த அவளின் இதயம் கவர் கள்வன்...


கால் தடமே பதியாத
கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில்
பூச்செடியாக நினைத்தேன்!

கேட்டதுமே மறக்காத
மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்தும்
மௌனத்தில் நின்றேன்!

ஒரு கரையாக அவளிருக்க
மறு கரையாக நானிருக்க
இடையில் தனிமை ததும்புதே
நதியாய்...!
 
Top