கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அன்புவலி-----+அது -அத்தியாயம் 1

sanchumahen

New member
அவன் - விஷ்ணு
அவள் - லயா


மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணில் நல்ல கதிக்கு யாதமோர் குறைவிலை

கண்ணில் நல்லஃதுறும் கழுமலர் வளநகர்

பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

தமிழ் மரபுப்படி அந்த திருமணம் செல்வ சந்நிதி முருகன் ஆலயத்தில் நடந்து கொண்டிருந்தது. ஒருபுறம் அவனது கடையின் கணக்கர் சோமு அண்ணா தேவார பதிகங்களைப் பாடிக்கொண்டிருக்க தமிழ் நவம் என்று அழைக்கப்படும் அவனது தமிழ் வாத்தியார் திருக்குறளில் இல்வாழ்க்கை மற்றும் அன்புடமை அதிகாரங்களை பாடலாகப் பாட பூசகர் என்று அழைக்கபடும் ஐயர் தாலியை அவனது கரத்தில் தந்து நிலத்தில் விரிக்கப்பட்டிருந்த ஜமுக்காளத்தில் சம்மணம் கொட்டி அமர்ந்திருந்த அவனின் மனங்கவர்ந்தவள் கழுத்தில் கட்டும்படி தர அவனும் எந்தவித தயக்கமும் இன்றி நிறைந்த மகிழ்வுடனேயே தாலியைக் கட்டி முடித்தும் விட்டான்.

அதிஸ்டம் கூரையைப் பிச்சுக்கொண்டு இவனுக்கு கொடுத்துக்கொண்டிருக்குது. இப்படித்தான் இவனுடன் முற்பிறவி என்று சொல்லக்கூடிய மூன்று மாதங்களுக்கு முன்பு அந்த கராஜ்ஜில் வேலை செய்த மணி தொடக்கம் நாதன் அண்ணாவரை சொல்லுகினம்.

அதிஸ்டமா? அதுவும் எனது வாழ்விலா இவனுக்கு நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. காசாக கொட்டினால் சரியென்று சொல்லலாம் பெண்டாட்டியையும் கொண்டு வருமா?

ம்-----

வந்திருக்கே!!! என்ன சொல்ல-------- இது அதிஸ்டமா? இல்லை எதேஷ்டமா? இல்லை இவன்ரை மாமாவின்ரை இஸ்டமா? இவன் அனுபவித்த கஸ்டங்களுக்கு விடிவா? இல்லை இனிமேல் வரப்போகும் நஷ்டங்களுக்கான ஆரம்பமா??------என்னவாக இருக்கும்??? இவனது வாழ்வில் புகுந்திருப்பவள் அஷ்டலட்சுமியா இல்லை துஷ்ட தேவதையா???

யாராலும் விடை சொல்ல முடியாத ஒரு எதிர்பாரத நிகழ்வு இந்த திருமணம் அது --அது மட்டும்தான் உண்மை.

இந்த திருமணத்தில் சந்தோசப்பட்டது இருவர் மட்டுமே ஒன்று விஷ்ணு மற்றது சுப்பிரமணியன் என்ற பெரும் தொழிலதிபர் இவனது மாமா.

மாமாவிற்கு என் மேல் இருந்தபாசம் தான் எனக்கு தெரியவில்லையே. இவ்வளவு பாசத்தை என்மேல் வைச்சுக்கொண்டு விறைச்சுக் கொண்டு திரிஞ்சிருக்கிறார் மனிசன்.

இது நாள் வரை இருந்த ஒதுக்கம் மறைந்து இப்ப மூன்று மாதங்களாகத்தான் இவன் மாமாவுக்கு பக்கத்திலை நின்று அவரை பார்க்கிறான்.

மாமாவின் உயரம் இவனுக்கு ஏணி வைத்தால் கூட எட்டாதது. அதுவும் தி கிறேற் இன்டஸ்ரியலிஸ்ட் சுப்ரமணியன் என்றால் சும்மாவா?

சேம்பர் ஆஃப் கொமர்ஷில் ஒரு பெருந்தலை. அப்படிப் பட்டவருக்குப் பக்கத்தில் நிற்பதென்றால் சாதாரணமான விசயமா?

ஆனால் மாமாவுக்கு சொந்த பந்தம் ரத்தபாசம் எல்லாம் அந்தஸ்த்து, கௌரவம் இவைகளைவிட பெரிதாக இருந்திருக்கின்றது.

அதுமட்டுமல்ல இந்த மூன்று மாதமாக அடிக்கடி அவனது கண்ணில்படும் அவனவள்மீது அவன் கொண்ட நேசமும் கண்ணில் பட்டிருக்கின்றது போலும் அதுதான் இந்த முடிவை எடுத்திருக்கின்றார். மனம் அவன்மேல் மாமா கொண்ட பாசத்தில் நெக்குருகி நிற்க யதார்த்தம் அவனை அழைக்க-----

மெல்ல பத்து நிமிசத்துக்கு முதல் அவனுடைய கையால் தாலி வாங்கி அதற்கு முன்பே மனைவியாக றெஜிஸ்டார் ஆபிசில் ஒப்புதல் ஒப்பம் இட்ட அவள் என்னவள் என்ன நினைக்கிறாள் என்பதை அறிய மெல்ல அவள் புறம் தலையை திருப்பினான்

இங்கே நடக்கும் எந்த கூத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னவாவது நடந்து விட்டுப் போகட்டும் என்பது போல இலக்கற்று பார்த்துக் கொண்டிருந்தது வேறுயாருமல்ல லயா அவனது மனைவி.

இவள் இப்படியென்றால் இந்த கல்யாணத்தை வெளிப்படையாகவே வெறுத்து இது சரிவராது எதற்கு உண்மையான அந்தஸ்த்து இல்லை என்றாலும் பரவாயில்லை அடுத்தவன்ரை சொத்துக்கு ஆலாய்பறக்கின்ற குடும்பத்தில் எதுவும் வேண்டாம் என்று ஏதோ இவன் மாமாவின் சொத்தை ஆட்டையைப்போட அவரை வளைத்துப் போட்டதாக அர்த்தம் வருகின்ற மாதிரி குற்றம் சொன்னது மட்டுமல்லாது மாமாவை பலவழியிலும் தடுத்து இன்று வேறு எதுவும் செய்யமுடியாது என்பதால் தனது பொறுப்பில் மூஞ்சியை கடுகடுப்பாக வைச்சுக்கொண்டு கல்யாணத்தை நடத்தி முடிச்சிருக்கும் குரு அண்ணா என்று அறியப்படும் கனடா றிற்ரேண் ------- மாமாவின் வெல்விஷ்சர் ----ஆலோசகர் அவரும் அலுத்துப்போய் நின்றிருந்தார்.

என்ன செய்ய இந்த பிள்ளையின்ரை தலையெழுத்தை ஈசன் இப்படியா எழுதவேண்டும் என்று அவர் அந்த வக்கீல் சுதாகரிடம் சொல்லிக் கொண்டிருப்பதையும் கேட்டவன் உச்சக்கட்ட எரிச்சலுக்கு ஆளானான்.

ஓஹ்!! நான் அவ்வளவு தகுதியில்லாதவனா? என மனம் ஒருபக்கம் சிலுப்ப உனக்கு என்ன தகுதி இவளை கல்யாணம் செய்ய இருக்கிறது? என்று மறுபக்கம் கேள்விகேட்டுக் குடைந்துகொண்டிருந்தது.

தகுதியைப் பற்றி என்ன சொல்ல ----ஒற்றுமை இருக்கு--- நான் மெக்கானிக் அவள் மெக்கானிக்கல் இன்ஜினியர். என் மாமா மகள் தானே-----

“பொருத்தம் உடலிலும் வேண்டும் புரிந்து அவன் துணையாக வேண்டும்” என்று கண்ணதாசன் அநியாயத்திற்கு இவனுக்கு ஞாபகப்படுத்தினார்.

தோற்றத்தில் அவள் தேவதை போல் இருந்தாள் கருத்தடர்ந்த அலைபோலமுடி இடுப்புவரை புரள சாதாரணமாகப் பின்னலிட்டு ஒரு மல்லிகைச் சரம் சூடியிருந்தாள். நல்ல சிவப்பு நிறம் என்று சொல்லுகிற மாதிரி ஒரு நிறம் சாதாரண பெண்களைவிட சற்று உயரம்.

இவனது ஆறடி உயரத்திற்கு அவள் அரையடி குறைவாக இருந்தாள். கூரான நாசி மெல்லிய உதடு சாயம் பூசாமலே சிவந்திருந்தது. மெல்லிய நீண்டவிரல்களில் அவளது சேலைக்குப் பொருத்தமில்லாத நிறத்திலிருந்த நகச்சாயம் இது அவள் எதிர்பாராத திருமணம் என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

இவன் மெல்ல தனது கைவிரல்களைப் பார்த்தான் காய்ச்சுப் போய் கரடு முரடாக மென்மை என்றால் என்ன என்று தெரியாத விதத்தில் இருந்ததுடன் எப்போதும் வெவ்வேறுபட்ட வகையான உலோக உபகரணங்களைக் கையாளும் கை அது என்பதைக் கட்டியம் கூறியது.

இந்த கையால் அடித்தால் அவ்வளவுதான் வாங்கும் நபர் நேராகவே ஹாஸ்பிட்டலில் போய் படுக்க வேண்டியது தான். அணைத்தால் அதிலும் எங்கே மென்மை வரப்போகிறது?

கழிவு ஆயில், கறள் கட்டிய உலோகங்களைக் கையாளுவதால் நகம் முழுவதும் கறுப்பு மண்டியபடியே இருக்கும். இன்றும் அப்படியே. பாவம் அவனுக்கு எங்கே தெரியப்போகிறது இவற்றையெல்லாம் திருத்தும் கலை இருக்கிறதென்று.

வழக்கமாக அவன் வேலை நேரத்தில் போட்டிருக்கும் காற்சட்டை மற்றும் சேட் அதை வர்ணிக்க இன்னும் வார்த்தைகள் தமிழில் வரவில்லை.

அவளும்தான் அவனது யூனிபோமில் அவனைப் பார்த்திருக்கின்றாளே----

அவனென்ன பெரிய கார் கம்பனியிலா வேலை செய்கின்றான் சாதாரண மெக்கானிக்கல் வேர்க் ஷாப்

சாதாரண பொது நிறம்கூட அவன் இல்லை. கறுப்பு தான். உதடு சிகரெட் சுவையை அறிந்தது என்பதை அதன் கருநிறமே சொன்னது. தண்ணி அதுவும் பழக்கம்தான் ஆனால் அதிகம் இல்லை. மற்றப்படி சிறீராமனாக இருக்க வேண்டும் என்ற கொள்கை எல்லாம் இல்லை ஆனால் இருக்கிறான். அம்மாவை நினைத்து----அப்பாவை நினைத்து அவ்வளவுதான். எல்லாம் நிழல்போலதான் இருக்கின்றது.

அம்மா அவனது பத்தாவது வயதில் அவனைத் தனியனாக இந்த உலகில்விட்டு போகும் வரைக்கும் அவனது அப்பாவைப் பற்றிப் பேசாத நேரமில்லை.

அவரது அன்பான சுபாவம். மனைவியின் மீதும் மகன் மீதும் அவர் கொண்டிருந்த உயிர் நேசம். தவமாய் தவமிருந்து அவனைப் பெற்றது முதல் ஆயிரம் நினைவுகளைப் பகிர்ந்தவள் வாழ்க்கையின் முக்கிய பகுதியைப் பற்றி சொல்லாமல் விட்டுவிட்டாள்.

அவளது முதல் மகன் சுயன். இதுதான் அவள் அவனுக்கு வைத்திருந்த பெயர். அவளுடைய செல்லமகன் அவன் என்ன செய்தாலும் அவளுக்குப் பிடிக்கும். அவனைப் பற்றி விஷ்ணுவுக்கு எதுவும் சொன்னாளில்லை. காரணம் அவள் மனம் அவ்வளவு தூரம் விண்டுபோயிருந்தது அவன் செய்கைகளால்.

அதனால் இவனுக்கு அவனது தாயின் பிற்பாதி அதுவும் அப்பாவிற்குப் பிந்திய வாழ்க்கை தெரியாமலே போய்விட்டது. அப்பாவையே அவனுக்குப் பெரிதாக நினைவில்லை. ஆனால் அவரது வயிற்றில் ஏறி கால்களை இருபுறமும் போட்டுக் கொண்டு அவரது நெஞ்சில் படுப்பது ஞாபகத்தில் வந்து போனது. அப்பாவிற்கு நல்ல குரல் வளம்.

சின்னம் சிறுகிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே--- என்று அப்பா இவனை நினைத்து உருகினாரா? இல்லை அவரின் உயிரினும் மேலான அபூர்வாவை நினைத்து உருகினாரா? இவனுக்குப் புரியவில்லை. ஆனால் அந்தப் பாடல்மட்டும் கணீரென்ற குரலில் அவர்பாடுவது நிழலாக வந்து போனது.

அவர் கண்முன்னேயே எப்போதும் விஷ்ணு இருக்க வேண்டும். அப்பா சாப்பிடும் போது இவனுக்கு ஊட்டியபின்பே சாப்பிடுவார். இவனுக்கு ஒருவாய் என்றால் அம்மாவிற்கு மறுவாய் உணவு ஊட்டப்படும்.

அப்பாவிற்குப் பின்பு அம்மா கறிவகையறாக்களுடன் சோறு உண்ட நாட்களைவிட கண்ணீருடன் உண்ட நாட்களே அதிகம். ஏன் அம்மா அழுதுகொண்டே இருந்தாள் என்பது அப்போதும் சரி இப்போதும் சரி இவனுக்குப் புரியவில்லை.

இவன் முதலாம் ஆண்டு படிக்கும் போது இவனைக் குளிப்பாட்டி பள்ளிக்குத் தயார்படுத்த அம்மாவிடம் கொடுத்து விட்ட அப்பா மீண்டும் வீட்டுக்குள் வரவில்லை--------ஏனென்ற காரணத்தைப் புரிந்து கொள்ளும் வயதும் இவனுக்கு இல்லை.

விஷ்ணு! அந்த குருதான் அழைத்தார். தனது முகபாவங்களைக் கட்டுப்படுத்தியவன் என்ன என்பது போல் நிமிர்ந்து அவரை பார்க்க கோயிலை ஒரு தடவை சுத்தி வாங்கோ----

நேராக ஹாஸ்பிட்டலுக்குத்தான் போக வேணும்.------உங்களைப் பார்த்த பிறகுதான் சுப்பிரமணியன் ஆப்பிரேசனுக்கு சம்மதம் என்று கையெழுத்துப் போடுவான். நேரத்தை தாமதமாக்காமல் வாங்கோ என்று சொல்ல

தலையைச் சம்மதமாக அசைத்தவன் தனது மனைவியின் கையைப் பற்றினான் முதல் தடவையாக.

அவன் எதிர்பார்த்த மென்மையின்றி அது இறுகிக்கிடந்தது. தன் கரத்தை அவனுடன் பிணைக்க மறுத்து விரல்களைப் பொத்தியபடி அவள் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. ஆனால்----

தன்னைச் சூழ நடப்பவைகளால் இறுகிப்போயிந்தாள் அவள் என்பதே உண்மை. அவளது அம்மாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது என்றால் இரு அக்காக்களினதும் அவர்களது கணவன்மார்களினதும் உதடுகளோ ஏளனத்தில் சுழித்திருந்தன.

மாயவலை அறுபட நடப்பவைகளை அவதானித்த விஷ்ணு அவனவளது மணிக்கட்டைப் பற்றியபடி நடக்க சாவி கொடுத்த பொம்மை ஒன்று நடப்பது போல அவனுடன் நடந்தாள் லயா.

இதோ மாமா தங்கியிருக்கும் தனியறைக்கும் வந்தாகிவிட்டது. இவர்களை மாலையும் கழுத்துமாகப் பார்த்த மாமாவின் கண்கள் ஆனந்தத்தில் நிறைந்திருந்தன.

நான் தோத்திடுவேனோ என்ற பயம் இந்தநிமிஷம் வரை இருந்ததம்மா. ஆனால் அதையெல்லாம் நீ பொய்யாக்கியிட்டாய் என்று மகளைப் பார்த்துக்கூறியவர். குரு அண்ணா என்று அவரது வெல்விஷரை அழைத்து பாத்தீங்களா என் மகளை என்பது போல பார்த்து வைத்தார்.

நான் இவையள் இரண்டு பேரோடையும் கொஞ்சம் கதைக்க வேணும் என்று கேட்க------இங்கை பார்டா சுப்பு ------நீ நினைச்சதை முடிச்சுப்போட்டாய். இவ்வளவும் போதும்------நீ அதிகம் கதைக்கக்கூடாது என்று மாமாவின் ஆசைக்கு முட்டுக்கட்டை போட-----இல்லை குரு அண்ணா நான் லயாவோடை என்றாலும் பேசியே ஆகவேணும் என்று வற்புறுத்த மாமனுக்கும் மனைவிக்கும் தனிமை கொடுத்து வெளியே வந்த விஷ்ணுவை இகழ்ச்சியாகப் பார்த்து வைத்தார் குரு.

லயாம்மா என்று நலிந்த குரலில் அழைத்த தந்தையின் முகத்தை வெறுமையாகப் பார்த்து வைத்தாள் மகள். அந்தப் பார்வை அவரைக் கொன்றாலும் அவளுக்கு தான் நன்மை செய்திருப்பதாகவே உறுதியாக நம்பியதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவர் பேசத்தொடங்க அவருக்கு மூச்சு இரைக்க ஆரம்பித்ததும் ‘அப்பா போதும்! நீங்கள் எதுவும் பேச வேண்டாம்----- உங்களுக்குத் தான் பேச கஸ்டமாக இருக்கே---

இல்லையம்மா எனக்கு உன்னோடை இனிமேல் பேசமுடியுமோ தெரியவில்லை-----

அப்பா என்று விம்மிய லயா ----அப்பா! உங்களின்ரை மனம் நோகுகிற மாதிரி என்னாலை நடக்க முடியாது. போதும் அப்பா கதைக்காதையுங்கோ எனக்கு நீங்கள் வேணுமப்பா ப்ளீஸ்-- என்று விம்ம---

நீ எனக்கு ஒரு சத்தியம் பண்ணித்தா லயாம்மா என்று தந்தை கேட்க-- அப்பா---- என்று விம்மியவள் எதுவும் பேசாது அவரது மனச்சாந்திக்காக சத்தியம் செய்வது போல தனது கரத்தை நலிந்து போயுள்ள அவரது கையின் மேல் வைக்க----

லயாம்மா எந்த சந்தர்ப்பத்திலையும் நீ விஷ்ணுவை விட்டுப் பிரியக்கூடாது-----

குரு அண்ணாவின்ரை சொல்லை இந்த விசயத்திலை நீ கேட்கக்கூடாது. அவருக்கு இந்த கல்யாணத்திலை விருப்பம் இல்லை. உங்களை எப்படியும் பிரிக்கத்தான் பார்ப்பார்--- இனி நீ அவன் இருக்கிற இடத்திலைதான் இருக்க வேணும் என்று தொடர

விரக்தியாகச் சரி சொன்னவள் டாக்டரின் அறிவுறுத்தலை மறுக்கமுடியாது வெளியில் வந்தாள்.

ஓ.கே சுப்பிரமணியன் ஐயா இனி என்ன நீங்கள் நினைச்ச மாதிரியே உங்களின்ரை மகளுக்கு நீங்கள் ஆசைப்பட்ட பையனோடை கல்யாணம் முடிஞ்சுது-----ஆப்பிரேசனுக்குச் சம்மதம் என்று கையொழுத்தைப் போடலாமே என்று டாக்டர் சொல்ல

சரி டாக்டர் டாக்குமென்ட்ஸ்ஸைக் கொண்டு வாங்கோ என்றவர் திருப்பதியாகக் கையொழுத்தையிட்டது மட்டுமல்லாது அருகில் நின்ற குருவையும் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டார்.

அத்துடன் நில்லாது குரு அண்ணா பிள்ளைகளை வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போய் பால்பழம் கொடுங்கோ என்று சொல்ல----
சரி சுப்பு நீ அமைதியாக இரு. நாளைக்கு ஆப்பிரேஷனை வைத்துக்கொண்டு மனசைக் குழப்பிக்கொண்டு இருக்காதை என்றபடி இவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு காரை நோக்கி வந்தார்.

காலையில் கல்யாணத்தின் போது இருந்த மன அமைதி இப்போது காணாமல் போய் ஏதோ சஸ்பென்ஸ் படம் பார்ப்பது போல மனநிலை மாறியிருந்தது விஷ்ணுவுக்கு.

அதுவும் மாமாவினதும் குருவினதும் பார்வைப் பரிமாற்றங்கள் அவ்வளவு உவப்பான செய்தியை அவனுக்குச் சொல்லவில்லை.

அவன் சுயம்புவாக தன்னைச் செதுக்கிக் கொண்டவன். அதுவும் அவனது பத்தாவது வயதிலிருந்தே. முன்பு தானிருந்த சிவானந்தா ஆசிரமம் என்றாலும் சரி பின்னர் வேலை செய்த கராஜ் என்றாலும் சரி தனக்கான முடிவுகளைத் தானே எடுத்துத்தான் பழக்கம்.

கோபம் உடன்பிறந்த சொத்து. தப்பான எந்த விசயத்தையும் எதற்காகவும்---- இல்லை---- யாருக்காகவும் பொறுத்துப் போனதில்லை. எச்சரிக்கை உணர்வு தோன்றும் எந்த ஒரு செயலையும் அவதானிக்காமல் இருந்ததில்லை.

அநாதையாக இருந்தாலும் சுயமரியாதை அதிகம். பதினெட்டு வயது வரையும் ஜெயானந்தம் ஐயாவின் நிழல். அதன்பிறகு அம்மாவுடன் வாழ்ந்த தோட்டத்தில் இருக்கும் ஒற்றை அறையும் கிணறும் கழிப்பறையும் மட்டுமே கொண்ட அந்த ஓட்டுவீட்டு வாசம்.

யாரும் கேள்வி கேட்க இல்லாத நிலை. தன்னைத்தானே தற்காத்துக்கொள்ள வேண்டியிருந்ததால் தனக்காக யோசித்து செயற்படும் பக்குவம் தன்னாலேயே வந்திருந்தது.

அதிலும் தனக்கு இது தேவையில்லை என்ற எண்ணம் தோன்றியபின் அதன் தேவையை உணரவதில்லை என்பது பல விசயங்களைப் புரட்டிப்போட்டிருந்தது. அதில் ஒன்று பள்ளியை விட்டு பத்தாம் வகுப்புடன் விலகியது.

நாதன் அண்ணா அடிக்கடி சொல்லும் “இவன் குளத்தோடை கோவிச்சுக்கொண்டு ----கழுவமாட்டான்ரா” என்ற பழமொழியை அவர் சொல்லும் அந்த நேரத்தில் சிரித்து மழுப்பினாலும் அதுதான் உண்மை.

சுமாராகப் படிப்பான். பள்ளியில் உடன்படித்த மாணவர்களது அநாதை என்ற கேலி கிண்டல் பொறுக்க மாட்டாதவன் பள்ளியைவிட்டு விலகி தொழிற்கல்வி கற்று, கற்றதைப் பயன்படுத்த கராஜில் வேலைக்குச் சேர்ந்திருந்தான்.

அம்மா போனபின் வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டதில்லை. அந்த மாதிரி சாப்பாடு எப்படி இருக்கும் என்பதுகூட நினைவில் இல்லை.

மனதில் ஒரு உறுதியிருந்தது. எனக்கான உறவு வரட்டும் அவள் கையாலை வாங்கிச் சாப்பிடுவோம் என்று. பலதடவைகள் கராஜ்ஜில் உடன் வேலை செய்வோர் சாப்பிட அழைத்தும் சென்றதில்லை. அவர்கள் கட்டிவரும் பார்சலைக்கூட அவர்களுடன் பகிர்ந்து உண்டதுமில்லை.

இவனது நிலையைப் புரிந்து கொண்டவர்கள் சிலர். அதில் இவன் வேலை செய்யும் கராஜ்க்குப் பக்கத்தில் மெஸ் வைத்து நடத்தும் தவம் அண்ணாவும் ஒருவர்.

நாளைக்குக் கதவடைப்பாம் சாப்பாட்டிற்கு என்ன செய்யப்போறானோ என்று கவலையாக அவனது முதலாளி நினைத்தாலும் இவனுக்குக் கவலைப்பட எதுவும் இருக்காது.

காரணம் தவம் அண்ணா மட்டும்தான். அவரது மெஸ் வெளியில் பூட்டப்பட்டிருந்தாலும் இவனைப் போல அவரை மட்டுமே நம்பியிருப்பவர்களுக்காக அவர் தானே சமைத்து பார்சல் தருவார்.

காலை டீ கூட அவரது மெஸ்ஸில் தான். அவனது வீடு இரவில் உறங்குவதற்கும் ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பொழுதை நெட்டித்தள்ளவுமே பயன்படும்.

வேலையைப் பொறுத்தவரை அவன் பக்கா ஜென்டில்மேன். எந்தவகையான சோம்பேறித்தனமும் கிடையாது. மிக நேர்மையான தொழிலாளி. கோடி ரூபாவைக்கூட நம்பிக் கொடுத்துவிடலாம் அப்படியெரு நாணயஸ்தன்.

ரிங்கரிங்(Tinkering) வர்ணம் பூசுதல்(Painting) இஜ்ஜினை இறக்கி வேலை செய்கிறது இப்படி பல கராஜ் வேலைகளில் அவன் விற்பன்னன். அவன் பெயின்ட் அடிக்கவேண்டும் என்றே கஸ்டமர் விரும்பிக்கேட்பர்.

இன்ஜின் வேலை செய்யவருவோரும் அவனையே விரும்பிக் கேட்பர். “விஷ்ணு ஒருக்கா பாத்துவிடு தம்பி”----என்று இன்னொருவர் செய்யும் வேலையில் கஸ்டமர் இவனைக் கோர்த்துவிட்டுப் போனாலும் இவன் சரியென்று தலையாட்டுவானே தவிர பக்கத்தில்போய் அடுத்தவர் வேலையில் அதிகப்பிரசங்கித்தனம் எல்லாம் காட்டமாட்டான்.

ஏமாளியாக எல்லோருடைய வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்யும் பேர்வழியெல்லாம் கிடையாது. இவனைக் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் இல்லை ஃபெர்ருஷியோ லம்போர்னி ரேஞ்சுக்கு வர்ணித்து தனது வேலை எல்லாவற்றையும் இவனது தலையில் கட்டிவிட சகபாடி சுதன் பல தந்திரோபாயங்களைப் பயன்படுத்தினாலும் புன்சிரிப்புடன் அதை இவன் கடந்து போகும்போது சுதன் சிரிக்கும் கேனைத்தனமான சிரிப்பைப் பார்த்தால் ‘தேங்காய் சிரட்டைக்குள் தண்ணீரைவிட்டு அதற்குள் குதிச்சு தற்கொலை செய்யலாம்’ போல இருக்கும்.

காரிலிருந்தபடியே வெளிப்புறத்தைப் பார்ததுக் கொண்டிருந்த விஷ்ணு கார் அவளது மாளிகையின் வாசலில் வந்து நின்றதும் பல வருடங்களுக்குப் பின் அதனை அன்றுதான் மீண்டும் பார்க்கின்றான். அது வீடில்லை பெரிய பலஸ்.

ஷா----என்ன ஒரு திட்டமிடல் அந்தமாடியிலிருக்கும் ஊஞ்சலில் இருந்தால் அந்த ஊரின் மிக முக்கியமான இடம் எல்லாம் தெரியும்.

இவனுக்கு சின்ன வயதில் ஒரு ஆறு அல்லது ஏழு வயதிருக்கும் அதில் இருந்து ஆடிய ஞாபகம் வந்து போனது. பின்பு ஏனென்று தெரியவில்லை அம்மா இவனையும் கூட்டிக்கொண்டு அந்த தோட்டத்து ஓட்டு வீட்டிற்கு வந்துவிட்டா.

லயா காரிலிருந்து இறங்க காத்திருந்தவர் போல பார்வதி -அவளினது பெரியம்மா ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டு கதறி அழுதார்.

ஐயோ! என்ரை ராசாத்தி உன் தலையிலை இப்படியா இடி விழவேணும் என்று தலையில் அடித்து அழுதவரை என்ன இது? என்பது போல பார்த்திருந்தான் விஷ்ணு.

அதற்குள் தனது அழுகையை பாதியில் விட்டவர் ஆவேசமாக விஷ்ணுவின் பக்கம் திரும்பினார். அதன்பின் அவர் வாயிலிருந்து விழுந்த எந்தவொரு வார்த்தையையும் தன்மானம் உள்ள எந்த ஒரு மனிதனும் சகிக்க மாட்டான்.

ஏன்டா அனாதை நாயே! உனக்குக் கோடீஸ்வரன்ரை படிச்ச மகள் கேட்குதோ. அவளின்ரை கால்தூசுக்கு நீ சமமாவியாடா? அந்த மனிசன்தான் புத்தி கெட்டுப்போய் கல்யாணம் பண்ண கேட்டால் எங்கே சந்தர்ப்பம் கிடைக்கும் என்று பாத்திருந்து தலையாட்டினியோ?

சீ----எச்சக்கலை பிழைப்படா இது----காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போனகதையாக இருக்கடா----

அது சரி உனக்கு எங்கே நல்ல புத்தி வரப்போகுது. அடுத்தவள் புருஷனுக்கு அலைஞ்சவள் தானே உன்ரை அம்மா. யாருடைய சொத்தை யார் அனுபவிக்கிறது என்ற விவஸ்தையே இல்லையாடா?

இவர்களுடன் வந்த இவளினது குடும்பத்தினர் வெகுதிருப்தியாக பார்வதியின் பேச்சினை ஆமோதித்துக் கொண்டிருக்க குரலை செருமி சீர் செய்த குரு நீங்கள் சொல்லுறது ரொம்ப சரி நாட்டாமையம்மா, யாருடைய சொத்தை யார் அனுபவிக்கிறது? என்று பார்வதி சொன்ன வார்த்தையைத் திருப்பிச் சொல்ல குரல் வந்த திசையை பார்த்த பார்வதி ஒருகணம் நிலைகுலைந்து போனார்.


ல நாட்களின் பின் அவரைப் பார்ப்பதால் முதலில் யார் என்று தெரியாதபோதும் அவரது குரல் அவர் யார் என்று காட்டிக்கொடுக்க ஒரு விநாடி பின்வாங்கியவர்

அடடடா! நீ தானா அது? வா---வா—பெத்தவங்களை தலைகுனிய வைச்சிட்டு தனக்கு வாழ்க்கை தேடிக் கொண்டு ஓடிப்போன உத்தமராசா தானா இந்த கண்கெட்ட கல்யாணத்திற்கு காரணம் என்று அவர்மீது பாய்ச்சலைத் தொடர---

நான் இப்பவும் சொல்லுறன் இந்த கல்யாணம் வேண்டாம் என்ற குருவினது பேச்சில் ஆவேசமான பார்வதி அப்போ என்ன நாசத்துக்கடா இந்த தாலி என்று லயாவின் கழுத்திலிருந்த தாலியை அறுக்க முற்பட

இந்த நாடகங்களையெல்லாம் பார்த்துச் சலித்த விஷ்ணு விறுவிறு என அவர்களது வீட்டிலிருந்து வெளியேறி தனது வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

அவன் மனதில் “ காத்திருந்தவன் பெண்டாட்டியை-----தாயைப்போல அடுத்தவள் புருஷனுக்கு அலைபவன் என்ற வசவுகள் எல்லாம் வந்து போக பலவருடகாலமாக இந்த மாதிரியான வசவுகளைக் கேட்காதிருந்தவனுக்கு மனம் சுணங்க எனக்கு இவள் வேண்டாம்---- இவள் மட்டுமல்ல இவளது தகப்பன் தந்த சொத்துக்களும் வேண்டாம் என்ற எண்ணம் தோன்றியிருந்தது.

தொடரும்-----













 
Last edited:
Top