கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அன்புவலி----+அது- அத்தியாயம் 11

sanchumahen

New member
அன்று

வெற்றுக்கூடையுடனும் பயந்த முகத்துடனும் வந்தவளை பார்த்த காத்தாயி இவள் மாணிக்கராசனிடம் சிக்கி போய் வந்திருக்கிறாள் போல அது தான் இப்படிப் பேய் அறைந்ததைப்போல நிற்கிறாள் என்று எண்ணியவள்

“ ஏய் புள்ள என்னடி வீசின கையும் வெறுங்கையுமாக வந்திருக்கிறாய்? வழியில் உன் சித்தப்பனைக் கண்டாயோ ” என்று வினாவ-----

என்ன பதிலைச் சொல்வது என்று அறியாத பூரணி தலையை எல்லாபக்கமும் ஆட்டியது மட்டுமன்றி

“ அக்கா இனிமேல் நான் பொன்னாங்காணி பறிக்க தென்னந்தோட்டத்திற்கு போகமாட்டேன்” என்று அறிவித்தவள் அந்த இடத்தில் நில்லாது விடு விடு என்று நகர்ந்து யாரினதும் கண்களில் படாதவாறு ஓரமாக மறைந்து நின்று கொண்டாள்.

“என்னடி ஆச்சு உனக்கு?” என்று கேட்டவளுக்கு பதில் சொல்ல பயம் இவளை விடவில்லை. அடிக்கடி வாசலைப் பார்த்துக்கொண்டு இவள் நிற்க ----

“என்ன இழவோ போ”---என்றபடி காத்தாயி அவ்விடத்தைவிட்டு நகரவும் அழகன் ஜெட் வேகத்தில் வந்து பைக்கை நிறுத்தவும் சரியாக இருந்தது.

பைக் ஓட்டுவதில் நிதானமானவன் இன்று பதட்டமாக வந்ததுமன்றி பார்வையால் எங்காவது பூரணி தென்படுகிறாளா என்று பார்க்க அவனது பார்வையில் படாதவாறு ஒளித்துக்கொண்டாள் இவள்.

இவனிடமிருந்து பூரணியைக் காக்க வந்தது போல வடிவேல் அழகரது கார் வீட்டின் வாசலில் வந்து நிற்க இந்த திருப்பத்தை எதிர்பாராத அழகன் தனது தாத்தனுக்கு தனது அழகர்புர விஜயத்திற்கான காரணத்தைத் தேடிக்கொண்டிருக்க-----

இவனது நடவடிக்கையின் காரணத்தை சந்தேகமறப் புரிந்துகொண்டவர் அனைத்தும் இந்த கிழமையுடன் முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில் சிந்தையை மறைத்து இவனுடன் பேசத்தொடங்கியது மட்டுமன்றி அவன் காரணம் எதையும் சொல்ல முன்பே -----

“என்ன தம்பி தாத்தாவை பார்க்காது ஊருக்கு போகப்பிடிக்கயில்லை போல”------என்று கேட்டபடி இவனுக்கு அருகே வந்தவர் உதிர்த்த சொற்கள் நக்கலாக கேட்கிறாரா? இல்லை என்பாசத்தைப் பற்றி சிலாகிக்கின்றாரா? என்ற குழப்பத்தை இவனுக்குள் தோற்றுவிக்க வெகுகூர்மையாக அவரது உணர்வுகளை அவரது முகத்திலிருந்து படிக்க முற்பட்டான்.

“என்னதான் இருந்தாலும் தாத்தனைவிட ஊர்மீது இருக்கும் பாசம் பெரிசில்லையா பேராண்டி?”

“இந்த தாத்தன் எத்தனை நாளைக்கோ----நீதான் அழகர்புரத்தை மறக்கமாட்டியே”----என்றபடி அர்த்தம் நிறைந்த பார்வையை அவன்மீது வீசியவர் ஸ்லோ மோஷனில் தலையைத் திருப்பி சின்னானையும் பார்த்து வைக்க அவனோ இவரது கூற்றினை ஆமோதிப்பது போல தலையை மெதுவாக அசைக்க -----இருவரதும் உடல்மொழிமீதும் கவனத்தை வைத்திருந்தவன் பார்வையில் இவைஅனைத்தும் பட

ஆக---- இருவருக்கும் எனது வரவிற்கான காரணம் தெரிந்திருக்கிறது என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றிப் புரிந்து கொண்டவன் தாத்தன் தொடுக்கும் உளவியல் யுத்தத்தை எதிர்கொள்ள தன்னைத் தயார்படுத்த தொடங்கினான்.

தன்னைச் சங்கடப்படுத்தி காதலில் பின்வாங்க வைப்பதற்காகவே வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுகின்றார் என்பதைப் புரிந்து கொண்டவனுக்கு தாத்தாமீது அளவுகடந்த சீற்றம் தோன்றியிருந்தது.

இதுவரை வாஞ்சையாக மட்டுமே தாத்தாவைப் பார்த்திருந்தவன் தன் காதலுக்கு எதிரியாக அவரை உணர்ந்த கணம் எரிச்சல் மண்டியபடி அவரைப் பார்த்து வைக்க அவனது வெறுப்பு நிரம்பிய பார்வை வடிவேல் அழகரைத் தைத்த போதும் அவரும் சளைக்காது இவன் முகத்தைப் பார்த்து வைக்க அங்கொரு சபதகாட்சி அரங்கேறிக் கொண்டிருந்தது.

அத்துடன் திரையை மூட விரும்பாதவர் சொல்லால் அவனைப் பந்தாடி தனது நிதானத்தின் மூலம் அவன் நினைப்பதை நடக்கவிடமாட்டேன் என்பதை தெளிவாக்கியதுடன்

“சரி நீ கிளம்பு பேராண்டி ---- அம்மா சொன்னாள் நீ நாளை ஊருக்கு புறப்படுகிறாய் என்று----வீட்டில் போய் ஓய்வெடு” என்று தொடர்ந்தவர் அவனை அழகர்புரத்தில் நிற்கவிடாது அனுப்பி வைக்க----வாழ்க்கையில் முதற்தடவையாக மோதிப் பார்த்துவிடுவது என்ற முடிவிற்கு வந்திருந்தான் அழகன்.

ஓஹ்! என்னை ஊரிலேயே நிற்க விடமாட்டீங்களோ-------

மகா கனம் கொருந்திய தாத்தா அவர்களே! என் உடம்பில் ஓடுவதும் உங்கள் இரத்தம்தான். உங்களுக்கு எப்படி பணமும் அந்தஸ்தும் முக்கியமோ அதைவிட மிக அதிகமாக என் காதலும் என்பவதியும் எனக்கு முக்கியம் என்று தனக்குள் பேசிக்கொண்டவன் இன்னமும் அழகர்புரத்தில் அவரது வீட்டில் நின்று தனது சுயமரியாதை கெடுக்க விரும்பாது வெறும் தலையாட்டலுடன் சென்று பைக்கை எடுத்தான்.

“வர்றேன் தாத்தா” என்ற அவனது விடைபெறல் காணாமல் போனதில் வருத்தம் கொண்டவர் கடைசி காலத்தில் என்னை இவன்கூட மல்லுக்கட்ட அந்த கந்தசுவாமி எழுதிவிட்டானே என்று தெய்வத்தை நொந்துகொண்டார். இருப்பினும் பவதி தங்களது குடும்பத்திற்கு பொருத்தமானவள் அல்ல என்ற அவரது அபிப்பிராயத்தில் எந்த மாற்றுக் கருத்தும் எற்பட்டிருக்கவில்லை.

தன் காதலுக்கு தாத்தா காட்டிய எதிர்ப்பு நெஞ்சைத் தகிக்க அந்த தகிப்பை ஆற்றும் சக்தி பைக்கிலிருந்த ஆக்சிலேட்டருக்கு இருக்கவில்லை. வேகம் ----வேகம்---அப்படியொரு வேகம் புயல் வேகத்தில் இவன் பறந்து கொண்டிருக்க-------

பவதியோ மூர்த்தியிடம் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள். தாயினது கர்ப்பம் பற்றிக் கேள்விப்பட்ட மூர்த்திக்கு பயம் தொற்றிக் கொண்டது.

தனது வீட்டின் பொருளாதார நிலைபற்றி அறிந்தவன் என்பதால் அம்மா எப்படி இதைக்கடக்கப் போகிறாள் என்ற பயம் அவனை பயிற்சி பெறும் ஊரில் நிற்கவிடவில்லை.

உடனடியாக தாயைப் பார்க்க வேண்டும் என்று மனது கிடந்து அடிக்க பயிற்சிக்கு ஊதியமாகக் கிடைத்த பணத்தை சேர்த்து வைத்திருந்தவன் அந்த சொற்ப பணத்தில் கொஞ்சம் பழங்களையும் சத்து மாவுடன் சொற்பவிலையில் ஒரு சில சேலைகளையும் தாய்க்கென்று வாங்கிக்கொண்டு ஊர்வந்து சேர அவனுக்கு வந்த கடிதம்பற்றி தபால்காரர் சொன்ன செய்தி அதிர்ச்சியைத் தந்ததென்றால் கடிதம் அழகன்தான் அனுப்பியிருக்கிறான் என்பதை அனுப்பியவர் பெயரில் பார்த்ததாக தபால்காரர் சொன்னது யோசிக்க வைக்க ஏதோ சரியில்லை என்றமட்டில் உணர்ந்து கொண்டவன் தகிக்கும் வெய்யிலில் வீடு வந்து சேர -----

மசக்கையாலும் சோகையாலும் சோர்ந்து போய் நடுக்கூடத்தில் சுருண்டு படுத்திருந்த காவேரியைத் தவிர வீட்டில் யாரும் இருக்கவில்லை. “அம்மா!” என்று வாஞ்சையாக அழைத்தபடி மூர்த்தி அவளருகில் சென்று அமர அவமானத்தில் சுருண்டு போனாள் தாய்.

அவ்வளவு தூரத்திற்கு சொற்களாலும் செயல்களாலும் அவளின் மகள் வதைத்து வைத்திருக்க வயது வந்த மகன் முன் கூனிக்குறுகி நின்றவளைப் பார்க்க பரிதாபம் மேலிட தாயை அன்புடன் அணைத்துக் கொண்டான் மகன்.

அவன் பார்வையில் தாயின் கர்ப்பம் தப்பான ஒன்றாக தெரியவில்லை.

“அம்மா நீ சாப்பிடுறதே இல்லையா? ஏன் இப்படி எலும்பும் தோலுமாக இருக்கிறாய்?” என்று கேட்டவன் தான் வாங்கிவந்த ஆரஞ்சை உரித்து சாப்பிடு அம்மா என்று கொடுக்க தேடுவாரற்று இருந்தவளுக்கு மகனின் பாசம் வெப்பிசாரத்தை பொங்க வைக்க கண்கள் தண்ணீரைத் தாரளமாகவே உற்பத்தி செய்தன.

இந்த கர்ப்பத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல நடந்து கொண்ட நாகராசனும் எக்கேடாவது கெட்டுப்போ காசை மட்டும் கேட்டுவிடாதே என்பது போல நடந்துகொள்ளும் சின்ன மகனும் குத்திக் குத்தி பேசியே அவமானப்படுத்தும் மகளுமாக அனைவராலும் துன்புறுத்தப்பட்டிருந்தவளுக்கு மூர்த்தியின் ஆறுதல் வார்த்தைகள் தகிக்கும் வெய்யிலில் நடப்பவனுக்கு நிழல் கிடைத்ததைப்போல இருக்க

“நான் என்ன பண்ணட்டும் தம்பி!! கலைச்சிடலாம் என்றுதான் பார்த்தேன் முடியலியே” என்று விசும்ப அவளது இயலாமையும் அவமானமும் அவனை வருத்த ---

“என்னம்மா நீ எதுக்கு கலைக்கணும் அப்படி ஏதும் செஞ்சிடாதை ஆபத்தாக போயிடும்-- நான் இருக்கிறேன் இல்ல---- பயப்படாத----“ என்று தாயிடம் தைரியத்தை வரவழைக்கவென்றே அவன் பேசப் பேச

கண்களில் இருந்து பொல பொலவென நீர் வழிய “என்னம்மா இந்த நேரத்தில் நீ அழலாமா?” என்றபடி தாயின் கண்ணீரை துடைத்துவிட அவனது அன்பான சொற்கள் அவளுக்குள் இருந்த துயரத்தை மேலும் தூண்டிவிட அவளது கண்களிலிருந்து வற்றாது கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

தாயை தன்மடி சாய்ந்து அவளைச் சேயாக்கியவன் அவளது முதுகைத்தடவியபடி வீட்டு நிலவரத்தை எடைபோட மனம் சலித்துத்தான் போனது. முன்பு சரியில்லை என்றிருந்தது இப்போ எதுவுமே சரியில்லை என்ற நிலையில் வந்து நின்றிருப்பது தெரியவர



“அம்மா காலையில என்ன சாப்பிட்டே?” என்றபடி அடுக்களையைப் பார்க்க அன்று சமையல் எதுவும் இல்லை என்பதை அதன் நிலவரம் காட்ட காலை உணவாக உண்ட நீராகாரத்திற்காக உரித்த வெங்காயத்தோல் அங்கங்கே இருக்க தங்கை எங்கே என்ற கேள்வியும் அசந்தர்ப்பவசமாக அழகனின் நினைவும் வர தாயை நகர்த்திவிட்டு பதறி எழுந்தவன் -----

“எங்கேம்மா தங்கைச்சி??? வயசுப்புள்ள வீட்டில் இல்லாமல் எங்கே போயிட்டாள்???” என்று கேட்க

“பொன்னாங்காணி பறிச்சிட்டு வர அழகரய்யா தென்னந்தோப்பு வரைக்கும் போயிருக்கிறாள்” என்ற பதிலில் அதிர்ச்சியடைந்தவன்-

“என்னது அழகர் ஐயா தோப்புக்கா?” என்றான் அதிர்ச்சியை மறைத்த குரலில்----

ஏதோ தப்பு பண்ணிட்டேனோ என்ற பயத்தில் “ஏன் தம்பி அங்க பறிக்கக்கூடாதா?” என்றவளை-----

அதிருப்தி நிரம்பிய விழிகளால் ஏறிட்டவன். “யார் அவங்க தோப்புக்குள்ள போக அனுமதி கொடுத்தது?? உன் வீட்டுக்காரனுக்கும் சின்னமகனுக்கும் நடந்தது மறந்து போச்சா------அவங்க தோப்புக்குள்ள காலை வைக்கலாமா?? “ ஏன்றவனை பரிதாபமாகப் பார்த்தவளை மீண்டும் கேள்விக்கணைகளால் துழைக்கத் தொடங்கினான் மகன்.

“எனக்கு ஒரு கடுதாசி வந்திச்சாமே எங்கே அது?” என்று கேட்ட மகனுக்கு அது அவனது தங்கையிடம் தான் இருக்கின்றது என்றதும் அவள் அதைப்பிரித்துப் படித்திருக்கிறாள் என்பதும் தெரிந்தபின்னர் பல சந்தேகங்கள் மனதில் வந்து போயின.

அழகனும் அவனும் வெவ்வேறு ஊர்களில் பயிற்சியில் இருந்தாலும் தான் இருக்கும் இடம் அவனுக்கும் அவன் இருக்கும் இடம் தனக்கும் தெரிந்திருக்கயில் தனது வீட்டிற்கு கடிதம் எழுதவேண்டிய தேவை என்ன என்பது புரியவில்லை.

இதற்குள் வேறு ஏதோ விசயம் இருக்கிறது என்பதை யூகித்தவன் தனது சந்தேகங்களை கடிதத்தைப் பார்த்தால் அன்றி தெளிவுபடுத்த முடியாது என்பதால் தங்கைக்காக் காத்திருக்கத் தொடங்கினான்.

அழகன் வந்தாலும் வராது விட்டாலும் அவர்களது தென்னந்தோப்புக்கு வந்து போவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்த பவதி எசமானிபோல தோப்பு முழுவதையும் சுத்திவந்தாள்.

இன்றும் அதேபோல வந்தவள் அன்று நடந்த சம்பவத்தை நினைத்துக் கொண்டாள். எல்லாம் கைகூடி வரும் வேளையில் பூரணியால் ஏற்பட்ட இடையூறை நினைக்க நினைக்க அவளைக் கொன்றுவிடும் அளவிற்கு ஆத்திரம் மேலிட்டது. இங்கே இவள் பல்லைக் கடித்து ஆத்திரத்தை அடக்க -----அங்கே இவள் அண்ணன் விசாரணைக் கமிஷன் வைப்பதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தான்.

இன்று

கோயிலுக்கு அவளை அழைத்து வந்தவன் வெளியிலேயே நின்று கொண்டான். அவன் கூட வருகின்றான் என்ற நினைப்பில் சில அடிகள் வைத்தவள் அவன் தன்னுடன் வரவில்லை என்று உணர்ந்த நொடி அவன் முன் நின்றிருந்தாள்.

“கோயிலுக்கு உள்ளே வரலையா?” என்றவளுக்கு

“நான் இங்கேயே நிற்கிறேன். நீ கும்பிட்டுட்டு வா” என்றவன் அங்கிருந்த வேப்பமரத்தின் கீழ் போடப்பட்டிருந்த சீமெந்து கட்டில் அமர்ந்து கொண்டான்.

அவனுக்கு இவை எதிலும் பிடித்தம் இல்லை----- இருந்ததில்லை. சிவானந்தா ஆச்சிரமத்திலிருக்கும் வரை தேவாரம்,பஜனை கோயில், எல்லாம் கட்டாய கடமை. அப்போதுகூட பக்தி வெள்ளம் கரைபுரண்டு ஓடியதில்லை. ஜெயானந்தம் ஐயாவின் நிகழ்சிநிரலிற்கு பணிந்து போனான் அவ்வளவே தான்.

இவர்கள் வந்த நாள் வைகாசி விசாகமாக இருக்க அந்த கோயிலில் குடி கொண்டிருக்கும் வரமுத்துமாரிக்கு ஊரே திரண்டு பொங்கல் வைத்துக் கொண்டிருந்தது. பம்பை ஒலி ஒரு புறமும் பறையொலி மறுபுறமாகவும்; உடுக்கைச் சத்தமும் சாமிவந்து ஆடும் பெண்களும் என கோயில் அமர்க்களமாக இருக்க ----- இவனுக்கோ இந்த சத்தங்களில் தலைவலி வரும்போலிந்தது. கோயிலுக்குள் சென்றவள் அரை மணித்தியாலம் ஆகியும் வராது போக இவனுக்கோ பொறுமை காற்றில் கரையும் கற்பூரம் போல தேயத் தொடங்கியிருந்தது.

இவள் வருகின்றாளா என்று அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தவன் முன்னே சாமி ஆடியபடி வந்த பெண் ஒருத்தி “என்னடா ஒளிஞ்சு கொண்டிருக்கே?” என்று ஆவேசமாக கத்தியபடி இவனது கையைப் பிடித்து இழுக்க பதறியடித்துக் கொண்டு எழுந்தவன் மேல் சில பல அடிகள் விழ அவனோ அந்த பெண்மணியிடமிருந்து விலக தன்னால் ஆனமட்டும் முயன்று கொண்டிருந்தான். ஆனால் அப்பெண்மணியின் பிடி உடும்புப்பிடியாக இருக்க இந்த காட்சியைப் பார்க்க அவ்விடத்தில் கூட்டம் கூடத் தொடங்கியிருந்தது.

தன்னைச் சூழ நின்றவர்களின் பார்வையில் இருந்த சுவாரஸ்யம் இவனுள் வெட்கம் என்ற உணர்வைத் தோற்றுவிக்க செய்வதறியாது தவித்துப் போனான்.

எவ்வளவோ முயன்றும் அவனால் தன்னை விடுவிக்க முடியாமலிருந்தது ஒருபுறம் என்றால் அங்கிருந்தவர்களில் ஐம்பது வயதினைத் கடந்தவர்களிடையே சல சலப்பு ஏற்பட்டது மட்டுமன்றி பெரியவீட்டுப் பையன் வந்திருக்கார் என்ற பேச்சுக்களும் இவன் காதில் விழ யாரை இவர்கள் பெரியவீட்;டுப் பையன் என்கிறார்கள் என்று புரியாத போதும் சாமியாடும் பெண்மணி சொன்னவைகளை கவனிக்கத் தொடங்கினான்

“டேய்!! ஏன்டா என்னைய காக்க வைச்சீங்க-------காப்பாத்த வந்தேனேடா------வேண்டாம் வேண்டாம் என்று சொன்னேன் கேட்டீங்களாடா------நெருப்பில இருந்து இழுத்து வந்தேனேடா-----ஏன்டா வரல------இந்த ஆத்தா வேண்டாதவளாடா------இந்த ஆத்தா வேண்டாதவளாடா--------“

இவனுக்கு எதுவும் புரியவில்லை. யாரை நெருப்பில் இருந்து இந்த அம்மா மீட்டாங்க? இது யாரோடை கதை?

இவனைக் இழுத்துக் கொண்டு கோயிலினுள் சென்றவர் பட்டையாக இவனது நெற்றியில் விபூதியை இட்டுவிட குரவைச் சத்தம் காதைக் கிழித்தது. எதுவும் புரியாது விழித்தவன் முன்னே எழுபது வயதுகளில் இருந்த ஒருவர் “ஏஞ்சாமி ஊர் ஞாபகம் இப்போதான் வந்ததா? அட எல்லார் வாழ்க்கையிலும் கஷ்டகாலம் வாறதுதான் அதுக்கு குலதெய்வத்தை கைவிடலாமா?” என்று தொடர இவன் மௌனமாக நின்று கொண்டான்.

நெருப்பில எரிந்ததென்று எதை இந்தம்மா சொல்லுது------- மாமா இறந்ததைத்தான் சொல்லுறாங்க போல இருக்கு------- இல்லை----- அம்மா இறந்ததைத்தான் சொல்லுறாங்களா-----அது எப்போதோ நடந்த சம்பவம் ஆச்சுதே -----இல்லை -----இல்லை ----இப்போ கிட்டடியில் இறந்தது மாமா தான்-----அப்போ இது மாமாவைப்பற்றியதா? முதலில் மாமாவைப் பற்றியதோ என்ற சந்தேகம் கொண்டாலும் நேரம் கடக்க கடக்க அது மாமாவைத்தான் சொல்லுறாங்க என்ற முடிவுக்கு வந்திருந்தான். இதைத் தவிர அவனுக்கு வேறெதுவும் புரியவில்லை.

தனக்குத் தெரிந்த வகையில் அந்த பெண்மணியின் பேச்சுக்கு நியாயம் கற்பித்தவனுக்குத் தெரியவில்லை தான்அறிந்து கொள்ள வேண்டிய விசயங்களின் ஆழத்தை.

அவனையறியாத ஒரு படபடப்பு நெஞ்சின் ஆழம்வரை ஊடுருவி அதிர்வலைகளைத் தோற்றுவிக்க இந்த கோயிலைவிட்டு வெளியே ஓடிப்போனால் இந்த படபடப்பு குறையுமோ என்று சிந்தித்தவன் லயாவை அந்த கூட்டத்தில் தேட அவளோ அம்மன் சந்நிதியில் விளக்குப் போட்டுக் கொண்டிருக்க ---------

தேர்விற்கு படிக்கிறதை விட்டுட்டு தேசிக்காய் விளக்குப் போடுது பன்னாடை------- என்று மனதில் அவளை வைதபடி அவ்விடத்திலிருந்து நீங்கியவன் பைக்கை விட்ட இடத்தில் வந்து நின்று கொண்டான். நெற்றியில் இருந்த விபூதியை அழித்தால் பரவாயில்லை என்று தோன்ற அதனைக் கைகளால் தேய்த்து அழித்தவனுக்கு அவளுக்காக காத்திருப்பது கசந்தது.

நல்ல கோயிலைக் கண்டாள் சாமி கும்பிட. தூணிலையும் துரும்பிலையும் இருக்கிறவரை நூறு கிலோமீற்றர் பயணம் செய்து வந்துதான் பார்க்க வேண்டுமா?

இவனது அவஸ்த்தை எதையும் தெரியாதவள் பொறுமையாக தரிசனம் முடித்து இவனருகில் வர பொறுமை தீர்ந்த நிலையில் இருந்தவன் ஒருவாய் தண்ணீர்கூட அவளை அருந்தவிடாது பைக்கில் ஏற்றியிருந்தான்.

அவனது முகபாவத்திலிருந்து எதையும் அறிய முடியாதவள் ஒரு நிமிஷம் இந்தா பிரசாதத்தை வெச்சுக்கோ என்று சொல்லி கையைவிரித்து விபூதியை கொடுக்க முற்பட அதைக்கண்டு கொள்ளாதவன் பைக்கை ஸ்ராட் செய்து--

ம்----ஏறு---- ஏறு என்று சொல்ல இறுகியிருந்த அவனது முகம் இவனுக்குள் ஏதோ சரியில்லை என்று தெரிவிக்க மௌனமாக அவளும் பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டதுடன் கவனமாக அவனது தோளைப் பிடிமானத்திற்காகப் பற்றி தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டாள்.

வரும்போதிருந்ததைவிட நிலைமை இருவரிடையேயும் சுமுகமாக இருக்காத போதும் பசி மற்றும் தாகத்தினால் சோர்ந்து போயிருந்த லயா மெல்ல அவனது முதுகைச் சுரண்டி இவ்வுலக சிந்தனைக்கு அவனை மீட்டிருந்தாள்.

பசியால் உயிரே போகுது டீ ஆவது வாங்கித்தாயேன் என்றவளை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றவனுக்கு அவள் ஆடர் கொடுத்த உணவு வகைகளைப் பார்க்க அத்தனை சங்கடங்களையும் மீறி அடக்கமுடியாத சிரிப்பு வந்திருந்தது.

இரண்டு செட் பூரி என்று தொடங்கிய அவளது மெனு பொங்கல்--- வடை---- என்று நீண்டு கொண்டு போக

தனக்கு டீ மட்டும் போதும் என்று நினைத்தவன் அவளை உண்ணவிட்டு பார்த்திருந்தான்.

பசியின் கொடுமை தெரிந்தவன் என்பதால் யாருக்கும் உணவு என்ற விசயத்தில் சங்கடம் வரும்படி எதுவும் செய்யமாட்டான். அவள் உண்பதைப் பார்க்க அவள்பால் இரக்கம் மேலிட பார்த்திருந்தவனுக்கு இந்த இரக்கத்தை எல்லாம் சில மணித்துளிகளில் இவள் தன் செயல்களால் இல்லாமல் செய்யப்போகின்றாள் என்பதோ----- அவள் அவனை எங்கே கொண்டுபோய் நிறுத்தப்போகிறாள் என்பதோ அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதுமட்டுமன்றி அவன்பால் குருவப்பா கொண்டிருந்த பாசத்தையும் பார்ப்பதற்கு அவனுக்குச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்திருந்தாள் அவனது மாமா பெற்ற மாணிக்கம்.
 
Top