கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அன்புவலி ----+அது -அத்தியாயம் 16

sanchumahen

New member
அன்று

குரோதமும் ஆத்திரமும் அழகன் மேல் பொங்கிவழிந்தாலும் அதற்கு சரிசமமாக பெரியண்ணன் சொன்னது உண்மையாக இருக்குமா? என்ற சந்தேகமும் இருக்கத்தான் செய்தது பவதிக்கு.

அது மட்டும் உண்மையா இருந்துச்சுது------ நினைத்த மாத்திரத்தில் மனம் காந்தியது அவளுக்கு. அவள் கண்ட பெரிய வீட்டு மருமகள் என்ற கனவுக்கு ஆயுள் அவ்ளோ தானா?

வள்ளியம்மைபோல பெரிய சாவிக்கொத்தை இடுப்பில் சொருகிக் கொண்டு இந்த தரித்திரம் பிடித்த சொந்த பந்தங்கள் ஆ---- என்று வாயைப் பிழக்க பெயருக்கேற்ற பேரழகனான அழகனுடன் காரில் வந்து இறங்கி கெத்தாக எல்லோர் முன்னும் போவது போல தினமும் கனவு காண்கிறாளே அதுகைகூடாமலே போகப் போகிறதா?-----

ஐயோ இத்தனையும் நான் ஆண்டு அனுபவிக்க வேண்டிய சொத்தாச்சே! எல்லாம் போச்சே! என்று மனதோடு அரற்றினாள்.

என்னமோ அவள் அப்பன் வீட்டுச் சொத்தை யாரோ கொள்ளையிட்டுப் போனது போல ஆவேசம் பெருக

விட மாட்டேன்டா அழகா----- உன்னை சும்மா விட மாட்டேன்டா ------என்னய கேனை கிறுக்கச்சின்னு நெனச்சியோ நீ-------

அவனை சும்மா விடப்போவதில்லை என்பதில் தெளிவாக இருந்தவள் அதனை வார்த்தைகளால் கணேசனுக்கும் மூர்த்திக்கும் வெளிப்படுத்திவிட மூர்த்திதான் குழம்பிப்போனான்.

ஒரு மணிநேரத்திற்கு முன் “அத்தான்” என்ற வாய் “என் மாமன் சொன்னது போல அவனை சும்மா விடுவேன் என்று மட்டும் நினைச்சிடாதை” என்று இவனைப் பார்த்து எச்சரித்தது ‘என்ன இழவோ இந்த காதல்’ என்றுதான் அவனை சிந்திக்கத் தூண்டியது.

அவன் கைக்குழந்தையுடன் தான் காதல் சொல்லித் தொட்டவளை கைவிட நினைச்சிருந்திருக்கிறான் அதுவும் காதலாம்! இவள் அழகன் மறுத்தால் கண்டம் பண்ணுவதாகச் சொல்றாள் இதுவும் காதலாம்!

உயிர் நேசம் இருந்திருந்தால் அவனை உடனடியாகவே எதிரியாக வரிக்க முடியுமா? நம்பிக்கை வேண்டாமா? நேசமும் இல்லாமல் நம்பிக்கையும் இல்லாமல் என்ன மாதிரியான காதல் இது? காதல் என்பது இவ்வளவு தானா?அவனுக்குக் குழப்பமாகத்தான் இருந்தது.

தங்கை ஆயிரம் கேள்வி கேட்பாள். விட்டுக் கொடுக்க மாட்டாள். பிடிவாதம் பிடிப்பாள். அழகனைக்கூட்டி வா அவன் தன் வாயால் சொல்லட்டும் அப்போது நம்புகிறேன் உன் பேச்சை என்ற வார்த்தைகளை எல்லாம் எதிர்பார்த்திருந்தவன்

கேள்விகளையும் அவனே நினைத்து அவைகளுக்கான பதிலையும் அவனே சிந்தித்து ----வீண் வேலைதான். ஆனால் அழகனின் அன்பை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை எவ்வளவு நம்பிக்கையாகச் சொன்னான் ‘உன் தங்கையும் என்னைப்போல தான்’ என்று பாவம் சின்னவர்---

என் தங்கையின் வாழ்வு பாழாகிப் போகும் என்று நான் வேண்டாம் என நினைத்த காதல்தான் இது. ஆனாலும் இப்போது யோசிக்க யோசிக்க தனது தங்கையை மணம் முடித்திருந்தால் அழகன்தான் பாவமாகிப் போயிருப்பான் என்பது புரிந்த நொடி வடிவேல் அழகரது தீர்மானம் நூற்றுக்கு நூறு வீதம் சரிதான் என்ற முடிவிற்கு வரவே அவனால் முடிந்திருந்தது.

குடும்பம் வசதி இவை எல்லாவற்றையும் பார்த்தாலும் ஏழைப் பெண்ணேயானாலும் குணவதி என்று அவர் மனதில் பட்டிருந்தால் தங்கையை மருமகளாக ஏற்றிருப்பாரோ என்ற எண்ணமும் வர என்னதான் இருந்தாலும் என் தங்கையை நான் விட்டுக் கொடுக்க முடியுமா?

அவனுக்கு வேலை வைக்காது தங்கை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட தான் ஒரே இடத்தில் தேங்கி நிற்க தேவையில்லை என்ற முடிவிற்கு வந்துமட்டுமன்றி அண்ணனாக அவளுக்கு சரியான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது தனது கடமைதானே என்று உணர்ந்ததால் மறுநாள் காலை புலர்வதற்கு முன்னரே தந்தையையும் அழைத்துக் கொண்டு அடுத்த ஊரில் இருக்கும் பெரியமாமன் இரத்தினம் வீட்டிற்கு அடுத்து ஆகவேண்டிய காரியங்களைப் பற்றி பேச சென்றிருந்தான்.

வீட்டிலிருந்து புறப்படுமுன்னரே கணேசனையும் அவனது மனைவி செந்தாமரையையும் அழைத்த மூர்த்தி தங்கையைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லித்தான் கிளம்பிச் சென்றிருந்தான்.

அழகனுக்குக் கடிதம் எழுதலாம் என்று இவள் நினைத்த போதும் அது கைகூடவில்லை. கணேசனின் மனைவி என்றால் அவளை வார்த்தைகளால் நோகடித்து தனிமையில் இருந்து காரியம் சாதித்திருப்பாள். ஆனால் இப்போது காவலுக்கிருப்பது கணேசன். எதுவுமே செய்ய முடியவில்லை.

கணேசன் மூர்த்தியைப் போலில்லை. மூர்க்கன் அடிக்கத் தயங்க மாட்டான். வாலைச்சுருட்டி வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு.

இருந்தாலும் அப்படியே எல்லாவற்றையும் விடமுடியாதே! ஏதாவது செய்து வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டுமே! என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தவள் வராத கண்ணீரை வரவழைத்துக் கொண்டு கணேசன் முன் வந்து நின்றாள்.

“சின்னண்ணே! நீ சொன்னபடியே எல்லாம் கேட்கிறேன். மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு. எனக்கு ஒருவாட்டி கோயிலுக்கு போகணும் போல இருக்கு போகட்டா?” என்று கேட்க-----

அப்டி போடடி அருவாள-----அடியே தங்கைச்சி நீ கேடி என்றால் நான் கேடிக்கெல்லாம் கேடியடி என்று நினைத்தவன்

“மனசுக்கு கஷ்டமாக இருந்தா சரக்கு அடிச்சாதான் சாந்தியாகும். துட்டு இருந்தா கொடேன் ஒரு அரை வாங்கியிட்டு வந்திர்றன். இரண்டு பேரும் சேர்ந்து அடிச்சு கவலையைப் பாதியாக்கிடலாம்" என்று சொல்ல அவனைத் தீ பார்வை பார்த்தவள் இந்த பார்வையெல்லாம் வேலைக்கு ஆகாது என்று உணர்ந்து தன் முகபாவத்தை சீராக்கிக் கொண்டு அவனை பரிதாபமாக பார்த்து வைக்க

நவரசங்களும் வந்து போகும் அவளது முகத்திலிருந்தே அவளது எண்ணத்தைப் படித்தவன் தன் நகைச்சுவையை எண்ணி இடி இடி என சிரிக்க ஒரே கன்றாவியாகத்தான் இருந்தது.

பீடை! இதெல்லாம் ஒரு பகடி? என்ட நேரம்டா என்று நினைத்தபடி அண்ணே எனக்கிருக்கிற வலி நீயும் அனுபவிச்சது தானே என்று சொல்ல

அட சீ கழுதை! என்ன வலி உன்ர அண்ணன் அனுபவிச்சிட்டான் பிரசவ வலியையா? அதையும் அனுபவச்சது நான்தான்டி! என்னமோ உன்ர அண்ணன் அம்பிகாபதி மாதிரியும் நான் அந்த அமராவதி மாதிரியும் என்று நினைத்த மாத்திரம் செந்தாமரையின் உதடுகள் ஏளனமாக வளைந்தன.

“ஏன் மதினி காதல் வலி----- கழுத்து வலின்னு தேவையில்லாத பேச்சு. இப்போ என்ன வருத்தத்தைப் போக்க வரமுத்துமாரியம்மனை பாக்கோணும் அம்புட்டு தானே! இந்தா கெழம்பு மச்சான் கோயிலுக்குத் தானே கேக்குது கூடப்போயிட்டு வந்திரு” என்று சொல்ல சரி என்றவன் “நீயும் கௌம்பு” என்று மனைவியையும் சேர்த்துக் கிளப்பி பவதியின் திட்டத்தில் ஒரு லாரி மண்ணை வாரிக் கொட்டி இவர்கள் இருவருடனும் கோயிலுக்கு வந்து சேர்ந்திருந்தான்.

அன்றைய நாள் ஒரு செவ்வாய்கிழமையாக இருக்க வழமைபோல பக்தர்கள் தமது நேர்த்திகளைச் செய்து கொண்டிருக்க கோயிலில் சிறப்பு வழிபாடுகள் இடம் பெற்றுக் கொண்டிருந்தன.

அழகனது வீடு விழாக்கோலம் பூண தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தது. புனிதா குடும்பத்தினர் சிங்கப்பூரிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கரைகாணாத மகிழ்ச்சியாக இருந்தது.

எங்கே தங்கள் தலைமுறையுடன் உறவு விட்டுப் போய்விடுமோ என்றிருந்தவர்களுக்கு வடிவேல் அழகர் பெண் கேட்டது பெருமையாகவும் நிறைவாகவும் இருந்தது.

ஆனால் என்ன மாப்பிள்ளைக்குத்தான் இன்னமும் அவனது நிச்சயதார்த்தம் பற்றித் தெரிவிக்கப்படவில்லை.

தனது மகன் ஆசைப்பட்ட பெண் என்பதால் வள்ளியம்மைக்குப் புனிதாவை அவ்வளவு பிடித்திருந்தது. புனிதாவும் வள்ளியம்மையுடன் ஆசையாக ஒட்டிக் கொண்டாள். வள்ளியம்மையின் குணம் அப்படிப்பட்டது.

வள்ளியம்மை புனிதாவையும் அழைத்துக் கொண்டு அன்று கோயிலுக்குப் பொங்கல் வைக்க வந்திருக்க அவரது கண்களில் அவருடைய பள்ளித் தோழியான மீனாட்சிபட அங்கே ஆரம்பமானது அவர்களது குடும்பத்துக்கான வினை.

“வள்ளீ----- என்று தன்னை மறந்து கூவியவர் அடியேய்! நீ தானாடி! எவ்ளோ நாளாச்சுடி உன்ன பார்த்து--- நான் கனவிலகூட நெனக்கலடி உன்னை இன்னிக்குப் பார்ப்பேன் என்று” தொடங்கியவரிடம்

“சரியா போச்சடி நீ வந்திருக்கிறது எங்க ஊருக்காக்கும்” என்று சிரித்துக் கொண்டு செல்ல---

“ஏய்! என்னய பரிகாசமா பண்ணுறாய்? நீ ஊரை வேணாம்ணு ஓடிப் போனவளாக்கும்! எங்கோ தனிக்குடித்தனம் பண்ணும் மகாராசி யின்ர பேச்சைப் பாரு பேச்சை" என்று வள்ளியம்மையின் கன்னத்தை நிமிண்ட

“நீ மாறவேயில்ல மீனா. என்ன திடீரென்று நம்மூருக்கு வந்திருக்கா ஏதாவது விசேஷமா புள்ள?” என்று கேட்டவரிடம்

“விசேஷம்தான் வரமாட்டேங்குதே வள்ளி. இங்க செவ்வாய்கிழமைகளில் சாமிவந்து குறி சொல்லுறாங்களாமே கேட்கலாம் என்று தான் மருமகளைக் கூட்டிக்கொண்டு வந்தேனாக்கும்” என்றவர்

“கல்யாணம் கட்டி அஞ்சாறு வருமாச்சு ஒரு புழு பூச்சியையும் காணோம் இந்த புள்ள தினமும் அழுது கரையுறா அதான்” என்றவர் கூட நின்ற புனிதாவைக் காட்டி “யாரு வள்ளி இது மகளா???” என்று கேட்டவரிடம் “இனிமே மகதான் இப்போ மருமகள்” என்றவர் தனது மகனைக் கட்டிக்கப்போற பெண் என்று புனிதாவை அறிமுகப்படுத்த

“எங்காத்தா நல்லா இருக்கணும் சாமி” என்று ஆசீர்வதித்த மீனாட்சி “உன் மகன் இன்ஜினியராமே மருமகள் எந்த ஊரு?” என்று வினாவ

“என்னோட ஒன்ணுவிட்ட அண்ணா பரமுவின்ரை மகள் தான்”. சிங்கப்பூரில் இருப்பதாகச் சொல்ல

“வெளிநாட்டு மருமகள் என்றதும் உனக்குப் பிடிச்சிட்டுது” என்று வாரியவரிடம்

“வெளிநாட்டு மருமகள் என்பதால் இல்லை மீனா மகனுக்குப் பிடிச்ச பெண் என்பதால் எனக்கும் என்ர மருமகளிலை அவ்வளவு பிடித்தம்” என்று வெள்ளந்தியாச் சொல்ல செந்தாமரையுடன் நின்று கொண்டு இவர்களது உரையாடல்களில் மட்டுமே காதைக் கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தவள் அதியுச்ச கொதிநிலைக்குச் சென்றிருந்தாள்.

அப்போ பெரியண்ணன் சொன்னதெல்லாம் உண்மைதான். ஆஸ்திக்கும் அந்தஸ்த்துக்கும் மாமன் மகளைக் கட்டிக்கொண்டு என்னத் தொடுப்பா வெச்சிருக்க தொட்டு விளையாடினீரோ மச்சான் என்று ஆத்திரம் கொண்டவளுக்கு அவள்மீது அவன் கொண்டிருந்த உண்மையான நேசத்தை புரிந்து கொள்ள தெரியவில்லை.

அழகா! உனக்கு என்னைப் பற்றித் தெரியல. நீ கட்டினால் என்னைத் தான் கட்டணும். இல்ல யாருக்கும் நீ கிடைக்கக்கூடாது. விடமாட்டேன் என்று மனதில் சூழ் உரைத்தவள் விடு விடுவென செந்தாமரையையும் இழுத்துக் கொண்டு கோயிலை விட்டு வெளியேறினாள்.

இப்போது மாமா சொன்ன பஞ்சாயத்து முதல் அத்தனை வழிகளும் சரியாகப்பட இவன் என்னை கட்டணும். இல்ல-- இவனுக்கு கருமாதி செய்யணும் -----யாருடைய உதவியை நாடலாம் என்றவள் மனதில் மாணிக்கராசன் முகம் வந்து போக வீட்டிற்கு வந்தவள் மாமன் வரவிற்காக காத்திருக்கத் தொடங்கினாள்.

அவள் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் வந்த தாய் மாமன் முன் நின்றவளுக்கு ஆத்திரத்தில் முகம் முழுதும் சிவந்திருக்க அவளது அழகு தோற்றம் மறைந்து அசுர தோற்றம் வந்திருக்க “என்னம்மா?” என்றான் மாமன்.

“மாமா நீ சொன்னது தான் சரி! அவனை சும்மா விடக்கூடாது. ஏதாவது பண்ணு மாமா” என்றவள் “இரண்டு அண்ணன்கள்கூட பிறந்தும் என்ன புண்ணியம்? ஒருத்தன் அடிமையாக கெடக்கிறான் மற்றவன் தொடை நடுங்கி. நான் உன்னத்தான் நம்பிக்கிட்டு இருக்கேன் மாமா”

“அவனை சும்மா விடக்கூடாது. அவன் என்னத்தான் கட்டணும் இல்ல ---இல்ல---“ என்றவளுக்கு ஆத்திரத்தில் குரல் நடுங்க அடுத்த வார்த்தை வாயினுள் இருந்து வெளிவரவில்லை. கோபத்தில் தேகம் நடுங்க நின்றவளை ஆதரவாக பார்த்த மாணிக்கராசன் அர்த்த புஷ்டியான பார்வையை கணேசன் மீது பாய்ச்ச அவன் சம்மதமாக தலையாட்ட இவர்களுக்கிடையிலான பார்வைப் பரிமாற்றங்களைப் பாத்திருந்த செந்தாமரைக்கு ஏதோ ஒரு முடிவிற்கு இவர்கள் வந்துவிட்டது புரிந்தாலும் என்ன என்பது தான் புரியவில்லை.

அவள் மீண்டும் தன் பார்வையை மாணிக்கராசன் பக்கம் திருப்ப “சரியா சொல்லும்மா அவனை உன்ன கட்ட வைக்கணுமா? இல்ல யாரையும் கட்டாம பண்ணணுமா?” என்று கேட்க வள்ளியம்மையின் பேச்சைக் கேட்டபின் அழகன் தன்னை திருமணம் செய்யமாட்டான் என்ற எண்ணம் நிலைபெற்றுவிட “அவன் யாரையும் கட்டக்கூடாது நான் வாழுற வாழ்க்கையைப் பார்த்து பார்த்து வெந்து சாகணும்” என்று கூற “உன் எண்ணப்படியே எல்லாம் நடத்திடலாம் கொஞ்சம் பொறுத்துக்கோம்மா” என்றான் அந்த நயவஞ்சகன்.

இங்கோ கோயிலில் பொங்கல் வைப்பதற்கான ஆயத்தங்களை காத்தாயியையும் பூரணியையும் பார்க்கச் சொல்லிவிட்டு புனிதாவை மேற்பார்வை செய்யும்படி சொல்லியவர் மீனாட்சியுடன் சாமியாடி இருக்கும் இடத்திற்கு வந்திருக்க வள்ளியின் கையைப்பிடித்த சாமியாடி

“பட்டத்துராசனை பட்டினப்பிரவேசம் செய்யவிடாதை ----------எரியுது--- எரியுது அர்ச்சுனர் காடு அப்புட்டும் எரியுது ஓடு ---ஓடு காப்பாத்து – காப்பாத்து----- வராதை என்று சொல்லு!

வந்தால் வம்சம் விழங்க வருஷக் கணக்காகும். மூடின கதவு திறக்க முப்பது வருஷம் போகும். நாற்சார வீடு திறக்க நாற்பது வருஷம் போகும்”
என்று சொல்லிக் கொண்டு வள்ளியம்மையைத் தள்ளிவிட ஏதும் புரியாதவருக்கு ஏதோ சரியில்லை என்பது மட்டும் புரிந்திருக்க மனக்கலக்கத்துடன் பொங்கல் பானையருகில் வந்து அமர்ந்து கொண்டார்.

சாமியாடி சொன்னதை யாரிடமும் பகிர அவர் முன்வரவில்லை. எதற்கு நல்ல விஷயம் நடக்கும் நேரத்தில் மனச்சுணக்கம் வர வைப்பான் என்பது அவர் எண்ணமாக ஒரு புறம் இருந்தாலும் மகன் ஆசைப்பட்ட புனிதாவை அவனுக்கு எப்படியாகிலும் கட்டிவைக்க வேண்டும் என்று நினைத்தவர் அதில் தடைகள் எதுவும் வரவிட விரும்பவில்லை என்பது மறுகாரணமாக இருந்தது.

வடிவேல் அழகரிடம் சொல்லியிருந்தால் நிச்சயம் வரவிருந்த அனர்த்தம் தவிர்க்கப்பட்டிருக்குமோ என்னமோ ஆனால் தலையெழுத்து வேறுவிதாமக இருந்ததே என்ன செய்வது?

மாமன் இரத்தினம் வீட்டிற்கு தந்தையுடன் வந்தவனை வாப்பா மூர்த்தி! வா மச்சான்! என்று வரவேற்ற இரத்தினம் அவர்களது சாதகமான முடிவைக் கேட்டதும் மகிழ்ந்து போனார்.

இருந்தாலும் செய்முறை என்று ஒன்று இருக்குதே என்று நினைத்தவர் மச்சான் தப்பா நெனைக்காத எங்க குடும்ப நெலமை உனக்கு தெரியும்.

உன்ர மருமவன் அரசாங்க உத்தியோகம் தான். அதுவும் ஆசுப்பத்திரியில கங்காணியா இருக்கான்----மக்கா மனுசா முன்னே மருவாதியா போகோணுமே -----உங்க நெலமையும் சரியில்லதான் தங்கதாலி மட்டும் வாங்க துட்டு கொடு----மிச்சம் மீதிய பிறகு பார்க்கலாம் -----

தம்பியும் பெரிய படிப்புத்தானே படிக்கான் தங்கைச்சிய விட்டிரவா போறான்? என்றவர் பேச்சுக்கு மறுவார்த்தை பேசாது ஒத்துக் கொண்ட மூர்த்தியிடம் இன்றே நல்ல நாள்தான் என்றவர் மனைவி மகனுடன் இவர்கள் இருவரையும் அருகில் உள்ள கோயிலுக்கு அழைத்து வந்து வெற்றிலை பாக்கு மாற்றி திருமண உறுதி செய்து கொண்டார்.

மாமனுக்கு ஒத்துக்கொண்ட தாலிக்கான பணத்தை எங்கேயாவது கடன் வாங்கிக் கொடுக்க எண்ணிய மூர்த்தி எந்த காரணம் கொண்டும் அழகர் குடும்பத்திடம் வாங்குவதில்லை என்ற முடிவில் அப்பா! நான் இப்டியே ஊருக்குப்போறேன். தங்கைச்சியைப் பார்த்துக்கோ. பணத்திற்கு ஏதாவது வழிபண்ணிட்டு வர்றேன் என்றபடி அங்கிருந்தே பஸ்ஸில் ஏறி தான் பயிற்சி பெறும் ஊருக்கு வந்து சேர்ந்தான்.

தனக்கு யார் கடன் கொடுக்கப் போகிறார்கள்? என்ற கவலை இருந்தபோதும் உடன் வேலை செய்யும் வெள்ளைக்கார பெண்ணான எமிலியிடம் கேட்டுப் பார்ப்போம் என்று நினைத்தவன் எமிலி தங்கியிருக்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தான்.

எமிலி இவனுக்கு பயிற்சி கொடுக்கும் மேலதிகாரி மிகவும் இரக்கமானவள் நட்புடன் பழகுபவள். மூர்த்தியின் ஒழுக்கம், நேர்மை அவளுக்குப் பிடிக்கும்.

அவளும் பலதடவைகள் இவனிடம் தனது குடும்பத்தைப்பற்றி பேசும் தருணங்களில் இவனும் தனது நிலைமைகள் அனைத்தையும் அவளிடம் பகிர்ந்திருந்தான்.

இப்போது அவளை மட்டும் நம்பி வந்திருக்க அவனுக்கு உதவ முன்வந்தவள் அன்று அரச விடுமுறை தினமாகவும் அதற்கு அடுத்து வரும் தினங்கள் வார இறுதியாக இருக்க வங்கியில் பணம் எடுத்து தருவதாகச் சொல்ல மூர்த்திக்கு அது பெரும் ஆறுதலாக இருந்தது.

இம்முறை அழகர்புரம் கந்தசுவாமி கோயில் கும்பாபிஷேக தினத்திற்கு முன்னர் அழகனின் பிறந்தநாளும் அவனது தாய் தந்தையரது திருமணநாளும் வருவதால் அவனை ஊருக்கு வரும்படி தொலைபேசியில் தந்தை அழைத்திருக்க தான் வருவதைப்பற்றி மூர்த்திக்கு எழுதுவது போல கடிதம் ஒன்றை எழுதி பவதிக்கு அனுப்பிவிட்டு தனக்கு காலம் எதனைத்தர காத்திருக்கின்றது என்பதை அறியாமலே ஊர்வந்து சேர்ந்தான் அழகன்.

இன்று

மெஸ்ஸிலிருந்து புறப்பட்டு நேராக ஹாட்வெயர் ஸ்டோருக்கு வந்து சேர்ந்தவன் வழமைக்கு மாறாக காலை 7.30 மணிக்கே கதவைத் திறந்து வியாபாரத்தை தொடக்கி வைக்க வழமையாக 9 மணிக்கு திறக்கும் கடை இன்று நேரத்துடன் திறக்கும் எனக் கண்டானா விமல் - அந்த கடையில் எடுபிடியாக இருக்கும் பையன்.

கடை பொருட்களை எடுத்து வெளியில் வைப்பது, கடையில் வேலை பார்ப்பவர்களுக்கு காப்பி, டீ வாங்கித்தருவது, தேவையான போது பொருட்களை கஸ்டமருக்கு எடுத்துக் காட்டுவது அவனது வேலை.

வழமையாக மனேஜர் என்று பெயர் எழுதப்பட்டுள்ள கண்ணாடிகளால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும் அறையில் இருப்பவன் இன்று கேஷ் கவுண்டரில் அமர்ந்திருந்தான்.

ஃபோனுக்குப் போடப்பட்டிருந்த கவரையே ஸ்ராண்டாக்கி அதனை டேபிளில் வைத்து CCTV கமராவிற்கான ஆப்பை செயற்படுத்திக் கொண்டு கவனம் முழுவதையும் அதிலேயே வைத்துக் கொண்டு இருந்தவன் விமல் உள்ளே வர நிமிர்ந்து பார்த்துவிட்டு

“ஏன்டா வேலைக்கு வர்ற நேரமாடா இது?” என்று கேட்டு வைக்க கடவுளே! லேட் பண்ணிட்டேனா? என்று தன்னைத்தானே கேட்டவன் கடைச் சுவரில் இருந்த மணிக்கூட்டைப் பார்க்க அது 8.15 என்றது.

வழமையாக 8.30 க்கு வரும் பையன் இன்று 15 நிமிஷம் முதல் வந்திருந்தான். இவன் மணிக்கூட்டைப் பார்க்கும் போது இவனுடன் உள்ளே வந்த கணக்கர் சோமுவும் நேரத்தைப் பார்த்தவர் இவன் எதுக்கு ஊருக்கு முன்னே வந்து கடையைத் தொறந்து வெச்சிட்டு இருக்கான்?

நித்திரையால எழும்பி இங்க வந்திட்டான் போல கெடக்கு. அதுதான் சரியான நேரத்திற்கு வர்றவன் எல்லாம் லேட்டாக வர்றது போல இருக்கு என்று நினைத்தபடி

ஆமா என்ன பிரச்சினை இவனுக்கு? ஊரில இருக்கிற எல்லா வேலையும் முடிச்சு 10 மணிக்குத்தானே வருவான்------ஏதோ நடந்திருக்கு என்ற முடிவிற்கு வந்தவர் தனது இருக்கையில் அமர்ந்து லெட்ஜரைப் புரட்டியபடி அடிக்கடி இவனை பார்த்துக் கொண்டிருக்க இவனோ மொபைலை விட்டு தலையை நிமிர்த்திப் பார்த்தான் இல்லை.

கடைப் பையன்கள்கூட தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர். அடேய்! என்னடா நடக்குது இங்க?? அண்ணா காலையிலேயே ஃபோனில மூழ்கி கிடக்கார். ஆர்வம் தாங்காதவர்கள்

“டேய் விமல்! இங்க வா” என்று அவனை அழைத்து கஸ்டமர் கவுண்டரில் அண்ணாக்கு பின்னாடி இருக்கிற சாமி படங்களுக்கு பூ வெச்சிட்டு அப்டியே அண்ணாவின்ர மொபைலில் என்ன படம் ஓடுது என்று பாத்துவா ஜல்தி ---ஜல்தி என்று துரத்திவிட சரியென்றபடி போனவன் வந்து சொன்ன பதிலில் அனைவரும் “ஙே” என்றே முழித்தனர்.

“அண்ணா கமெராவில வீட்டை பார்த்துக் கொண்டிருக்கிறார். அண்ணியைத்தான் பார்க்கிறார் போல” என்று அவனே முடிவுரையும் எழுதிவிட கடைப் பையன்களுடன் சேர்ந்து கணக்கர் சோமுவும் ஆச்சரியமாகப் பார்த்து வைத்தார். அவருக்கு இன்றைய என்டர்டெயின்மன்ட்க்கு நியூஸ் கிடைத்துவிட ஃபோனை எடுத்து குரு டீவீக்கு ஸ்டேசனுக்கு றிப்போர்ட் பண்ணிவிட ---

போன கிழமைதான் போலீஸில் கோர்த்து விட்டிருந்தா---- வாங்கோ வாங்கொன்று வாங்கிக் கட்டிக்கொண்டு வந்தவனைப் பார்த்து நாங்க நொந்து போயிருக்க இவன் அவளுக்கு நூல்விட்டுக் கொண்டிருக்கிறானா?” என்று பதிலுக்கு சோமுவைக் கேட்டவர் “எல்லாம் வயசுக் கோளாறு தான்” என்றுவிட

“சரிதான்” என்று ஒத்துக் கொண்டவர் மீண்டும் இவனைப் பார்க்க இவன் ஃபோனிலிரு;நது மீண்டிருக்கவில்லை.

இப்போது நேரம் 10.30 ஐக் காட்ட இவன் முகம் யோசனையைக் காட்டியது. சாப்பிட்டிருப்பாளா? இல்லை பசியோடை தான் இருப்பாளா? கோபம் வந்தால் சாப்பிடாமல் இருப்பது அவளது ஸ்டைல் என்பது அவனுக்குத் தெரியும். திருமணமான தினத்தன்றும் அதைத்தானே செய்தாள்.

அவன்தான் யாரும் பசியுடன் இருந்தால் பொறுக்க மாட்டானே! அதனால் இவளை வீட்டுக்காவலில் வைப்பது என்று முடிவு செய்தவுடனேயே ஒரு மினரல் வாட்டர் பாட்டில், பிஸ்கட் பைக்கட்டுகள், மிக்சர் பைக்கட்டுகள் எல்லாம் வாங்கி வந்து அறையினுள் இருந்த சிலப் இல் கண்ணுக்குத் தெரியும்படி வைத்திருந்தான்

இவன் அவளது சாப்பாட்டைப் பற்றி நினைக்க அவளோ முழுமையாக இவனை பற்றி மட்டுமே நினைத்துப் பயந்து போயிருந்தாள்.

திருமணம் முடித்த நாள் முதல் அவள் சொல்லாலும் செயலாலும் எவ்வளவோ அவனை வைச்சு செய்திருக்கிறாள் தான். இவள் செய்த எதற்குமே உடனடியாக அவன் எதிர்வினை காட்டியதில்லை.

ஆனால் இன்று--------???

தான் இதுவரை செய்த அத்தனைக்கும் சேர்த்து அவன் பிரதிபலிப்பு காட்டிய விதம் அவளைக் கிலி கொள்ளச் செய்திருந்தது. காலையிலிருந்து அழுது கொண்டிருந்தவளுக்கு நேரம் செல்லச் செல்ல நேர்முக தேர்விற்கு செல்லலாம் என்ற நம்பிக்கை மெல்ல மெல்ல குறையத் தொடங்க தவறிப்போய் கொண்டிருக்கும் பொன்னான வாய்ப்பை எண்ணி மனம் வருந்திக்கொண்டிருந்தாள்.

அவளும் சின்னப் பெண்தானே! உலக அனுபவம் அற்றவள். அம்மா அப்பாவின் நிழலில் வளர்ந்தவள் என்ன செய்வாள் பாவம்.

அவனை வெல்வது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை என்பதை கச்சிதமாகத் திட்டம் போட்டு அவன் தன்னை சிறைவைத்த விதம் சொன்னது.

அவனது கனகச்சிதமான திட்டத்தை அவள் அறிந்து கொண்ட அந்த நொடி அப்பா--- பாருங்கப்பா என்ன பண்ணியிருக்கிறான் என்று இல்லாத தந்தையிடம் சொல்லி அழத்தான் முடிந்திருந்தது.

தந்தை மனதில் நினைத்து வருந்தியபடி அப்படியே மடங்கி சுவரில் சாய்ந்து இருந்தவள் கண்களுக்கு அறையின் உள்ளே இருந்த சிலப்பில் உடைக்கப்படாதிருந்த மினரல் வாட்டர் பாட்டிலும் பிஸ்கட் பைக்கட்டுகளும் வேறுசில நொறுக்குத் தீனிகளும்பட்டுவிட ------

இது திடீரென போட்ட திட்டம் இல்லை என்பது புரிந்து போனது. அப்போ பக்காவாத்தான் திட்டம் போட்டுத்தான் இருக்கிறான். சரி இதையெல்லாம் சாப்பிடலாம் ஆனால் பாத்றூம் எப்படிப் போவது அதற்கு என்ன செய்திருக்கிறான்----என்ற யோசனையுடன் எழுந்து சென்று பார்க்க கட்டிலின் கீழ் வயது வந்தவர்கள் அணியும் டயபர் பைக்கட் ஒன்றிருக்கக் கண்டவள் கடவுளே! என்று அலறினாள்.

தான் அழுவதால் அங்கு எதுவும் ஆகப்போவதில்லை என்பது அவளுக்குப் புரிந்து போனது. எப்படியாவது சற்று நேரத்திற்கெல்லாம் வருவான் ஏதாவது கால் டக்ஸியை அழைத்தாவது போய்விடலாம் என்று தோன்றிய கடைசி நம்பிக்கையும் டயபரை பார்த்தவுடன் பொசுங்கிப்போக நெருங்கிப் போனவளது கட்டுப்பாட்டை மீறி கண்கள் நீரைச் சொரிந்தன.

அவன் தன்மீது கொண்ட சினம் தெரிந்த போது இருந்ததை விட நிலைமை இன்னும் பயங்கரமாகத்தான் அவளுக்குத் தோன்றியது.

இவ்வளவு கோபத்தையும் மனதில் வைத்துக் கொண்டு எதனையும் முகபாவத்தில் காட்டாதவன் என்னை மட்டும் எதற்கு விட்டு வைத்திருக்கிறான்?? அதுவும் இத்தனை மாதங்களாக??

கணவன் என்ற உரிமையுடன் அவன் என்னை என்ன செய்தாலும் யாரும் எதுவும் கேட்க மாட்டார்களே-----

தாயையும் தந்தையையும் நினைத்த மாத்திரத்தில் அவர்கள் செய்தது எல்லாமே சுத்த அபத்தமாகப்பட முதற்தடவையாக அம்மா அப்பா மீது வெறுப்புத்தான் வந்தது. அவளுக்குத் தெரியவில்லை இந்த வெறுப்பு இன்னும் இமயம் அளவிற்கு வளரப்போகின்றது என்பது.

அவன் வைத்துவிட்டுப் போன எந்த ஒரு உணவையும் அவள் உண்டாளில்லை. பசி, ஆத்திரம், அழுகை என்று கலவையான உணர்வுகளை மாறி மாறி அனுபவித்துக் கொண்டு இருந்தவளுக்கு மாலை 6 மணி தாண்டி அவன் வந்தபோது அனைத்து உணர்வுகளும் மங்கியபோதும் ஆத்திரம் மட்டும் முன்னின்றது.

அவனோ ஒவ்வொரு கதவாக திறந்து வந்தவன் இவள் இருந்த அறைக்கதவைத் திறந்து விட்டபின் வீட்டின் மறுபக்கத்திலிருந்த வாழைத் தோட்டத்தில் போய் நின்று கொண்டான்.

கதவைத் திறந்தவன் உள்ளே வர ஒரு மூச்சுக்கு சண்டைபோடலாம் என்று காத்திருந்தவள் அவனது செய்கையால் பலத்த அதிர்ச்சிக்கு ஆளாகினாள்.

அதுவும் கதவைத் திறந்தவன் ஒரு நொடிகூட இவளைத் திரும்பிப் பாராது சென்றதை தாங்க முடியவில்லை அவளுக்கு.

அவனின் இந்த செய்கை மனதில் தீயை மூட்டிவிட ஓஹ்! அவ்ளோ அசண்டையா உனக்கு என்மேல-----

அப்போ நீ என்னை பழிவாங்கிக் கொண்டே இருக்கப்போறியோ?

நான் உசிரோடை இருந்தால்தானே நீ என்னைப் பழிவாங்குவாய்----

நீ என்னடா என்னைப் பழிவாங்கிறது? உன்ன கட்ட சம்மதிச்சதுக்கு என்னை நானே பலி வாங்கிறேன்டா---

என்னோட இவ்ளோ நாள் உழைப்பு, கனவு எல்லாத்திற்கும் சேர்த்து சமாதி கட்டிட்டாய் இல்ல---- என்ற நினைப்பு தோன்றிய மாத்திரத்தில் சடாரென்று கதவைத் திறந்து கொண்டு கிணற்றை நோக்கி ஓடினாள்

எனக்கு கண்போனாலும் பரவாயில்லை----உனக்கு மூக்காவது உடையணும் என்ற முட்டாள்தனமான எண்ணம் மேலோங்கி இருந்தவளுக்கு தன்மீது அக்கறையில்லாதவனுக்கு தன் மரணம் வலியைத் தரப்போவதில்லை என்ற உண்மை விளங்கவில்லை---

தற்கொலை எதற்கும் தீர்வில்லை என்று பக்கம் பக்கமாக பேசுபவளுக்கு இந்த ஆத்திரம்’செல்லா இடத்து சினம்’ என்பதும் புரியவில்லை.

இவளுக்கும் கிணற்றடிக்கும் சில அடிகளே தூரமாக இருக்க வாழைத்தோட்டத்தினுள் நின்றவன் ‘ஒரு நிமிஷம்’ என்று சத்தமாக் சொல்ல--- கவனம் திசை மாறியவள் அப்படியே நின்றபடி அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“போற வேகத்தை பார்த்தால் கிணத்துக்குள்ள குதிக்க போற மாதிரித்தான் இருக்கு----

அம்மா--- தாயே--- பரதேவதை உனக்கு போகிற வழிக்கு புண்ணியமாக போகும் இப்டியே நாலு எட்டு வெச்சு பின்பக்க கேற்றை திறந்து கொண்டு போனாய் என்றால் ஈசன் அண்ணாவின்ர தோட்டத்துக்கு பக்கத்தில ஒரு பாழடைஞ்ச கிணறு இருக்கு ----

குதிக்கிறது தான் குதிக்கிறாய் நீ ஏன் அதில குதிக்கக்கூடாது?

நான் குடிக்கிறதுக்கு இந்த தண்ணியைத் தானே நம்பியிருக்கிறன்--

நான் கிணற்றுக்குள்ள குதிச்சு சாகசம் எல்லாம் செஞ்சு யாரையும் காப்பாத்த மாட்டேன்---

அப்டி ஏதாவது உனக்கு நான் காப்பாற்றுவேன் என்ற நினைப்பிருந்தால் இப்பவே அதை விட்டிரு.

நான் உன்ன காப்பாத்த தொட்டால் உனக்கு கரப்பான் பூச்சியைத் தொட்டது போல இருக்கும்---நீயே சொல்லியிருக்கிறாய்--- எனக்கு ஏன் தேவையில்லாத பிரச்சினை.

போலீசுக்கு கடிதம் ஏதாவது எழுதி வெச்சிருக்கியா----இல்ல நீ பாட்டிற்கு பொசுக்கென்று போயிடுவாய் அவனுகள் நாயைக்கூட்டி வந்து பேயாப்போன உனக்காக என்னை பேயோட்டுவாங்கள்----எதுக்கு வம்பு?

அவன் நீளமாய் சொல்லி முடிக்க கிணற்றினுள் குதிக்கும் எண்ணத்தைக் கைவிட்டவள் அவனை நோக்கி ஓடினாள்.

பாவி ஏன்டா இப்டி பண்ணினே??என்ர கனவு இலட்சியம் அத்தனையையும் ஒரு நொடியில முடிச்சிட்டியே----உன்னை விடமாட்டேன்டா-----

நான் ஏன்டா சாகவேணும்??? உன்ன கொல்றேன்டா!! எதுக்கு நான் சாகவேணும்? நீ புதுமாப்பிள்ளையாக போகவா?

விடமாட்டேன்டா! என்றபடி அவனைத் தாக்கோ தாக்கென்று தாக்கியவளது அத்தனை அடிகளையும் எந்த வித பிரதிபலிப்பும் இல்லாது வாங்கியவன் ஒரு கட்டத்திற்கு அப்பால் அவளது கைகளை விலக்கிக் கொண்டு நகர முற்பட

மீண்டும் அவனது சட்டையைப் பிடித்து இழுத்து பாவி ----பாவி என்ர கனவு இலட்சியம் எல்லாத்தையும் அழிச்சிட்டியேடா மீண்டும் கத்தியவள்---தன்ர கண் முன்னமே கனவு கலைஞ்சு போறது எவ்வளவு வலியென்று தெரியுமாடா உனக்கு? எல்லாம் போச்சே---- ஐயோ!! எல்லாம் போச்சே----என்று அழ

உணர்ச்சிதுடைத்த பார்வை ஒன்றை அவள்மீது வீசியவன் ‘எனக்கு வந்தால் தக்காளி சட்னி உனக்கு வந்தால் இரத்தமாடி? தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாதான்டி தெரியும் என்று சொல்லிவிட உறைந்து போய் நின்றாள் லயா.
 
Last edited:
Top