கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அன்புவலி ---- +அது - அத்தியாயம் 21

sanchumahen

New member
அன்று

அழகன் சிகிச்சை முடிந்து வந்து மூன்று வருடங்கள் கடந்திருந்தது. அவனது அன்றாட வாழ்க்கையை வாழ முடியாது துன்பப்பட்டுக் கொண்டிருந்தான். தீ புண்ணினால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் அவனை சாதாரண வாழ்வு வாழ அனுமதிக்காதது ஒரு புறம் என்றால் தனது முகத்தை கண்ணாடியில் பார்ப்பதை அவனே வெறுத்தான்.

டாக்டர்கள் அவன் பிழைத்தது தெய்வ செயல் என்றே சொல்லிக் கொண்டனர். உணர்ச்சி வசப்படும் போது தசை இறுக்கம் ஏற்பட்டு மயங்கிவிழும் மகனைப் பார்த்து மனம் நொந்து போன கந்தவேள் அழகரும் வள்ளியம்மையும் தமது தோற்றப் பொலிவு எல்லாம் இழந்து வயோதிப தோற்றத்தை அடைந்திருந்தனர்.

மகனின் எதிர்காலம் கண்முன்னே நின்று அவர்களை மிரட்டிக்கொண்டு இருந்தது. வாழ்க்கையில் எந்தவித பிடிப்பும் இன்றி அவன் தனது உயிரை தங்கள் இருவருக்காகவுமே பிடித்து வைத்துக் கொண்டிருக்கின்றான் என்பதை புரிந்து கொண்டிருந்த இருவருமே தாம் அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்வதாகவே மனம் வருந்திக் கொண்டிருந்தனர்.

தமது காலத்தின் பின் தம் மகனை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற வருத்தம் ஒருபுறம் என்றால் மகன் தன்நம்பிக்கை அனைத்தும் இழந்து வாழ்வதைக் கண்டவர்களுக்கு மென்மேலும் வேதனை பெருகிக் கொண்டிருந்தது.

அழகன் எதற்காக தென்னந்தோட்டத்திற்கும் போனான் என்பதைப் பற்றியும் அந்த தோப்புவீட்டில் தீ பற்றிய பின்னரும் ஏன் வெளியில் வராதிருந்தான் என்பது பற்றியும் பலவாறாக விசாரித்தும் அவனிடமிருந்து எந்தவிதமான பதிலையும் அவர்களால் பெற்றுக் கொள்ள முடியாமல் போனது.

அதுவும் வைத்தியர்கள் அவன் போதையில் இருந்திருக்கிறான் என்று சொன்னது முதல் தங்கள் மகனா அப்படி? என்று அதிர்ந்து போனவர்களுக்கு இப்பழக்கத்தை எப்படித் தொடங்கினான்? யாருடன் சேர்ந்து மது அருந்தினான்? இப்படி ஆயிரம் வினாக்கள் மனதில். பதில்தான் பூஜ்ஜியமாகப் போயிருந்தது.

அழகனின் துயரமோ தாய் தந்தையின் துயரத்தைப் போன்று பன்மடங்காக இருந்தது. அதுவும் அவனது சித்தப்பூ தன்னைக் காப்பதற்காகத்தான் உயிரைவிட்டிருந்தான் என்பதைத் தெரிந்த நொடி அனலிடைப்பட்ட புழுவெனத் துடித்துப் போனான்.

தாத்தா தனது நிலையைப் பார்த்து உயிரைவிட்டது சகிக்க முடியாததாகிப் போக தன் கூட்டினுள்ளே ஒடுங்கும் நத்தையைப் போல ஒடுங்கிப்போனவனுக்கு தன்மீது தாங்கொணா ஆத்திரமாக இருந்தது.

தன்னைவிட சிறிய பெண் ஒருத்தியின் உள்ளத்தை அறிந்து கொள்ளமுடியாது அவள் தன்மீது கொண்டது காதல் என்று தப்பார்த்தம் செய்து தன் குடும்பத்தையே ஆறாரணத்திலும் மீளா துயரிலும் ஆழ்த்திய தன்னை மன்னிக்க அவன் தயாராக இல்லை.

தான் உயிர் துறந்து தனது தந்தை தாயின் மீதி வாழ்வையும் நரகமாக்கக்கூடாது என்று முடிவு செய்தவன் தான் வாழ்ந்தே தனக்கு தண்டனை தரவேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டான்.

மூர்த்தியைப் பற்றியோ அவனது நட்பைப் பற்றியே நினைத்துப்பார்ப்பதைத் தவிர்த்தவன் முனைந்து தன்னை தேற்றத் தொடங்கியிருந்தான்.

உணர்ச்சி வசப்படும் போது தனக்கு வரும் தசையிறுக்கத்தையும் வலிப்பையும் குறைக்க தியானத்தில் ஈடுபடத் தொடங்கியவன் அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருந்தான்.

தன் மகனின் கல்யாணம் பற்றி ஆயிரம் கனவுகண்டிருந்த வள்ளியம்மை அவன் விரும்பியதாக நம்பிய புனிதாவின் திருமணத்திற்கு வந்த அழைப்பிதழைப் பார்த்து அழுதது இப்போது அறிவியல்நகரில் இவர்கள் வீட்டில் வேலைக்காக வந்திருக்கும் காத்தாயியையும் வேதனைப்படுத்த

வள்ளிம்மா சின்னய்யாவுக்கும் பொண்ணு பாருங்கம்மா காலம்மூச்சுடும் வரைக்கும் கூட வர அவருக்கும் ஒரு துணை வேணாமா?

வள்ளியம்மைக்கும் இந்த ஆசை இல்லாமல் இல்லை. ஆனாலும் மகனினது தோற்றம், நோய் இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு பெண் அவனை அவனுக்காகவே மணக்க முன்வருவாளா? நிச்சயமாக வரப்போகும் பெண்ணோ அவளின் குடும்பமோ தங்களது சொத்துக்காக வந்தாலும் தமது மகனைக் கண்ணும் கருத்துமாகப் பார்ப்பார்களா? சொத்தைப் பிடுங்கியபின் அவனை அநாதையாக விட்டுவிட்டால் இந்த தோற்றத்துடனும் நோய்களுடனும் அவன் என்ன ஆவான்?

தன் கணவரிடம் இது பற்றி அவர் பேச அவரும் இதே பயத்துடன் இருப்பது புரிந்தவர் மௌனமாகக் கண்ணீர் வடித்தார். எத்தனை குடும்பங்களை எங்களது சந்ததி வாழ வைத்திருக்கும் அதில் ஒருவர்கூடவா மனதார எங்களை வாழ்த்தவில்லை? எதற்கு இப்படி ஒரு துன்பம் வந்தது? என்று வருந்தி வருந்தி தனது உடல் நலத்தை கெடுத்துக் கொண்டார் வள்ளியம்மை.

தனக்காக தாயும் தந்தையும் அளவிற்கு அதிகமாக துன்பப்படுவதைக் கண்டு கொண்ட அழகன் மெல்ல மெல்ல தன்துயரத்தை மறைத்துக் கொண்டு சாதாரணமாக இருப்பதைப் போல காட்டிக் கொண்டான்.

நீண்ட நாட்களாக ஊருக்கு வராததால் கணவனையும் பிள்ளைகளையும் பார்க்க ஆசைப்பட்ட காத்தாயி ஊருக்கு வந்தவளிடம் கந்தவேள் அழகர் குடும்பத்தைபற்றி விசாரித்து அறிந்து கொண்டான் மாணிக்கராசன்;.

சpல நாட்களாக அவனது பேராசை அளவைக் கடந்து கொண்டிந்தது. அதுவும் பெரியவீட்டைப் பார்க்கும்போதெல்லாம் அவன் தன்னை வடிவேல் அழகர் போல கற்பனை பண்ணிக் கொண்டிருந்தான்.

பூட்டியிருக்கும் பெரிய வீட்டின் தலைவாசலில் இருக்கும் திண்டில் இருந்து கொண்டு வேலைக்காரர்களை ஏவுவதுபோல கனவுகண்டு கொண்டிருந்தவனுக்கு அழகனது நிலையை கவலையுடன் காத்தாயி சொன்னது எப்படியாகிலும் இந்த வீட்டின் பராமரிப்பு பொறுப்பை ஏற்றுக்கொண்டால் அந்த வீடு தனது உடமையாகிவிடும் என்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருக்க தளர்ந்து போய் இருக்கும் கந்தவேள் அழகரை கரைத்து அதைப் பெற்றுக் கொள்ள திட்டம் போட்டான்.

காத்தாயி ஊர் மக்களைப்பற்றி அத்துப்படியாக அறிந்தவள் என்பதால் அவள் தன்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி அதை தனக்கு தருவதைத் தடுத்துவிடக்கூடும் என்று நினைத்தவன் அவள் ஊரில் நிற்கும்போதே அறிவியல் நகருக்குச் சென்று நினைத்ததைச் சாதிப்பதற்காகப் புறப்பட்டுப் போனான்.

பாவம் அவனுக்குக் கந்தவேள் அழகரைப் பற்றித் தெரியவில்லை. ஒரு மனிதனின் கண்களைப் பார்த்தே அவனது அகத்தைப் படிக்கக்கூடிய வல்லமை பெற்றவர் அவர்.

தனது வீட்டின் முகவரி அறியாமலே அறிவியல் நகருக்கு தன்னைத் தேடிவந்து விசாரித்து வீட்டைக் கண்டுபிடித்து வந்ததில் இருந்தே மாணிக்கராசன் சாதாரணமானவன் இல்லை என்பதை அவர்கண்டு கொண்டார்.

இவனிடம் வீட்டுப் பொறுப்பைக் கொடுக்க விரும்பாதவர் வீடு பூட்டியிருப்பதால் பிரச்சினை ஏதும் இல்லை என்றதுடன் வீட்டை மேம்போக்காக பார்க்கும் பொறுப்பை காத்தாயியின் கணவனிடம் கொடுத்து விட்டதாக வேறு சொல்லிவிட ஆத்திரத்துடன் ஊர் திரும்பியிருந்தான் அவன்.

அதுவும் வீட்டின் பராமரிப்பை தரமுடியாது என்று சொன்னதும் அழகனை ஒருதடவையாவது பார்க்க வேண்டும் என்று நின்றது கந்தவேள் அழகருக்கு எரிச்சலைத் தந்திருந்தது.

அழகனைப் பார்த்து குரூர திருப்தியடைய இவன் நினைக்க இவன் நினைத்து வந்த அத்தனைக்கும் முட்டுக்கட்டையை கந்தவேள் அழகர் போட்டது இவனுக்கு எரிச்சலைத்தர வரும்போது இலவச ஆலோசனையாக அழகனுக்கு கல்யாணம் முடித்துக் கொடுக்கும்படியும் சொல்லிவிட்டிருக்க வந்திருப்பவன் பவதியின் மாமன் என்பதை அறிந்து ஆத்திரப்பட்ட அழகன் வலிப்பு வந்து மயங்கி விழுந்திருந்தான்.

வந்தவனால் மகன் உணர்ச்சி வசப்பட்டு மயக்கம் அடைந்ததால் வந்தவனுக்கும் அழகனுக்கும் இடையில் ஏதோ நடந்திருக்கின்றது என்பதைப் புரிந்து கொண்ட கந்தவேள் அழகர் இவைபற்றி யாரிடம் விசாரிக்கலாம் என்று யோசித்துப் பார்க்க மூர்த்தி அவர் நினைவில் வந்தான்.

மகனையும் மனைவியையும் தனியே அறிவியல் நகரில் விட்டுவிட்டு மூர்த்தியைத் தேடிச் சென்றவருக்கு அவனதொழில் நிமித்தம் வடக்கே சென்றது தெரியவர போன காரியம் கைகூடாது திரும்பி வந்திருந்தார்.

பாடசாலையின் குவார்ட்டஸில் வாணி ரீச்சர் அழைத்ததால் அதனைக் கூட்டித் துப்பரவு செய்வதற்காக வந்திருந்த பூரணி வரும் வழியில் காத்தாயியைக் கண்டு வள்ளியம்மா, சின்னவர் எல்லோரது நலன்களையும் அக்கறையாகக் கேட்டவள் அழகனின் நிலை கேட்டு வருந்தி அழுதாள்.

லக்ஷ்மியிடம் காத்தாயி சொன்ன விபரங்களைப் பகிர்ந்து பூரணி அழுதது மாணிக்கராசன் மனதில் பெருந்திட்டங்களைத் தோற்றுவித்திருந்தது.

குறிப்பாக அழகன் அதிககாலம் வாழ்வதற்கான சாத்தியங்கள் குறைவு என்பது போல பூரணி சொல்லி அழுதது புதிய திட்டங்களை உருவாக்க மீண்டும் ஒரு தடவை அறிவியல் நகரை நோக்கி சென்றான் மாணிக்கராசன்.

இம்முறை அவன் கொண்டு சென்ற விசயம் அவ்வளவு முக்கியமானதாக இருக்க கந்தவேள் அழகருக்கு மட்டுமல்ல வள்ளியம்மைக்கும் அது பெரும் ஆறுதலைத் தந்திருந்தது.

மாணிக்கராசனின் மனதில் உள்ள திட்டங்களுக்கு மாற்றுத் திட்டங்களை வகுத்த கந்தவேள் அழகர் மாணிக்கராசனுக்கு சாதகமான பதிலைத் தந்தாலும் வீட்டை பராமரிக்கும் பொறுப்பை இவனிடம் தர மறுத்துவிட்டார்.

தனது மகளுக்கு என்ன காரணத்தைக் கொண்டும் மாணிக்கராசன் திருமணம் செய்து வைக்கமாட்டான் என்ற ஆதங்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் லக்ஷ்மிக்கு ஆச்சரியத்தைத் தருவதுபோல அவளுக்குத் திருமணம் பேசிவந்த மாணிக்கராசனை நம்பமுடியாவிட்டாலும் அவனுக்கு ஆதரவு தர அவன் உடன் அழைத்து வந்த காத்தாயி சொன்ன எதையும் அவளால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

அதிலும் மாணிக்கராசனிடம் கந்தவேள் அழகர் பூரணியைப் பெண்கேட்டார் என்பதை கேள்விப்பட்ட நேரம் முதல் சந்தேகப்புழு லக்ஷ்மியை அரித்துக் கொண்டிருந்தது.

அழகனது உடல்நிலை சரியாகாதபடியால் தனது மகளை அவனுக்கு கட்டிக்கொடுத்து பெரிய வீட்டவர்களது சொத்துக்களையும் அவன் கொள்ளையிடப் பார்க்கின்றான் என்பது புரிந்தாலும் இந்த கொடிய நரகத்திலிருந்து பூரணிக்கு விடுதலை கிடைக்கட்டும் என்று லக்ஷ்மி நினைத்தாள்.

பூரணியோ சின்னவருக்கு யாரால் துன்பம் நேர்ந்திருக்கக்கூடும் என்பதை ஓரளவிற்கு அனுமானித்திருந்தாலும் இதுவரை யாரிடமும் தான் அறிந்தவற்றை அவள் பகிர்ந்து கொண்டாளில்லை.

அதிலும் அழகனின் இன்றைய நிலையைக் கேள்விப்பட்ட நேரத்திலிருந்து மனம் வெதும்பிப் போயிருந்தவளுக்கு மாணிக்கராசன் தன்னை அறிவியல் நகர் சென்று சின்னவரையும் வள்ளியம்மையையும் பார்த்துவர அனுப்பமாட்டான் என்ற எண்ணமே இருந்தது.

இன்று அவளது தாயே அவளை அழைத்து அழகனைத் திருமணம் செய்ய சம்மதம் கேட்க முழுமனத்துடனேயே சம்மதித்திருந்தாள். அவள் மறுத்திருந்தாலும் மாணிக்கராசன் ஒரு அடியிலேயே அவளைச் சம்மதிக்க வைத்து இந்த திருமணத்தை நடத்தியிருப்பான் என்பது வேறு விசயம்.

அவனுக்கு அழகர் வீட்டுச் சொத்துக்களை அடைய கிடைத்த துருப்புச் சீட்டுத்தான் பூரணி. அதை வைத்து ஆடிப்பார்த்துவிடுவதென்று நினைத்தவன் ஆட்டத்தை தொடக்கி வைக்க ஒரு சுபயோக சுபதினத்தில் பூரணி பழநிவேல் அழகரது மனைவியாக அவன் கையால் தாலி வாங்கி பூச்சூடி அறிவியல் நகரில் அவன் வீட்டில் வலது கால் எடுத்து வைத்து வாழ வந்தாள்.

அழகனின் மனம் முழுவதும் குற்ற உணர்ச்சியில் தகித்திருக்க இவளோ மனங்கொள்ளா புன்னகையுடன் தன் சின்னவருக்கு சேவை செய்ய கிடைத்த வரப்பிரசாதமாக இந்த திருமணத்தை எண்ணி எண்ணி மகிழ்ந்து போனாள்.

அவளது வறுமையே தன்னைப்போல ஒருவனுக்கு அவளை மனைவியாக்கி விட்டிருக்கின்றது என்பதை வருத்தத்துடன் அழகன் நினைக்க அவனது தீயில் கருகிப்போன முகத்தையோ அவனது நோயையோ மனதாலும் அவள் பார்த்தாளில்லை. அவள் மனம் முழுவதும் அழகர்புரத்தில் அவளுக்கு புது உடுப்பு வாங்கிக் கொடுக்கும்படி சொன்ன அந்த அழகனின் அழகான மனத்தையே கண்டு கொண்டிருந்தது.

இவன் என் கணவன் என்ற எண்ணமோ, தான் இந்த திருமணத்தின் மூலம் வசதியான வாழ்க்கையை வாழப்போகின்றேன் என்ற கனவோ அவளிடம் இல்லை.

அவளுக்குப் பிடித்த வள்ளியம்மாவுடன் அவள் இனிமேல் இரவு பகலாக பிரியாது இருக்கப் போகிறாள். சின்னவரை இனி எந்த தீமையும் கஸ்டமும் அணுகாது பார்க்கப்போகிறாள் அது மட்டுமே அவளின் சிந்தனையாக இருந்தது.

இன்று

ஆலத்தூர் அறிவியல் நகரிலிருந்து ஆறு மணிநேரம் பயணிக்கும் தூரத்தில் இருக்கும் ஒரு மெட்றோசிட்டி. அங்கிருக்கும் ஒரு பிரபலமான பைக் உற்பத்தி நிறுவனத்தின் பிரதேச தலைமை அலுவலகம் நோக்கி லயா, விஷ்ணு இவர்களுடன் குருவப்பாவும் பயணித்துக் கொண்டிருந்தனர்.

தனியார் பேரூந்தில் ஒரு வயதான பெண்மணிக்குப் பக்கத்தில் இவளும் அவனுக்குப் பக்கத்தில் குருவும் அமர்ந்திருக்க இவளுக்குப் பக்கத்தில் இருந்த பெண்மணி யானைக்குட்டி சைஸில் இருக்க யன்னல் ஓரம் இருந்த இவளுக்கு பெரும் துன்பமாகப் போயிருந்தது.

அவன் இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்திருப்பான் என்று அவள் மட்டுமல்ல குருவப்பாகூட நினைத்திருக்கவில்லை என்பது அவர் இவளைப் பரிதாபமாக பார்த்து கொடுப்புக்குள் சிரித்ததில் இருந்து தெரிந்தது.

இங்குதான் இப்படியென்றால் அவனும் குருவப்பாவும் தங்குவதற்கு ஹொட்டலில் ஒரு அறையும் இவள் தனியே இருக்கும்படி ஸிங்கிள் அறையும் புக் செய்து தான் ஒரு அறிவுஜீவி என்பதை அவன் காட்டியிருக்க வீட்டில் தனிமையில் இருக்க பயந்து இவனுடன் சண்டைபோட்டுக் கிளம்பி வந்தது எவ்வளவு தப்பு என்பதைப் புரிந்து கொண்டவளுக்கு இவனைப் போட்டுச் சாத்தினால் என்ன? என்ற எண்ணம்தான் வந்திருந்தது.

அதுவும் இவன் ஏதோ குருவப்பாவை கல்யாணம் முடித்து ஹனிமூன் கூட்டிவந்தவன் போல பார்த்துப் பார்த்து வேண்டியது எல்லாம் செய்வதும் இவளை மகளும் மருமகனும் ஹனிமூன் போகும்போது கூடவே ஒட்டிக்கொண்டு போன மாமியாரை போல நடத்துவதும் அவளுக்குச் சகிக்க முடியாமல் இருந்தது.

அவன்தான் தீர்மானம் எடுத்திருந்தானே தனக்கு மாமா சொத்து எழுதித் தந்ததில் இருக்கும் இரகசியத்தை இவரிடமிருந்து கறப்பது என்று. இவளைப் பார்த்துக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகுமா என்ன?

அவளது அகத்தில் எரிச்சல் பொங்கி வழிந்து கொண்டிருக்க அது முகத்தில் அப்படியே பிரதிபலித்தித்துக் கொண்டிருந்தது.

அவளின் எதிர்பார்ப்பு ஏமாற்றம் அத்தனையையும் குருவப்பா புரிந்து கொண்டிருந்த போதும் அந்த ஞானசூனியம் எதையும் புரிந்து கொண்டான் இல்லை. தன் கருமமே கண்ணாக குருவப்பாவை பேணிக் கொண்டிருந்தான்.

இவனுக்கு கல்யாணம் ஒரு கேடு! பெண்டாட்டி ஒரு கொசுறு!! பன்னாடை---பன்னாடை என்று மனதால் அவளை வறுத்துக் கொண்டவள் சில சமயம் தன்னைமீறி பல்லைக் கடித்து பேச "ஏதோ சொன்ன மாதிரி இருந்தது ஏதாவது சொன்னனீயா?" என்று குருவப்பாவிற்கு முன் கேட்டு அவளின் இரத்த ஓட்டத்தை எகிற வைத்துக் கொண்டிருந்தான்.

அவன் செய்தவைகளைப் பார்த்து காதல்---- காதல் என்று உருகிய அப்பனுக்கு இப்படி ஒரு விபரம் இல்லாத பிள்ளையா? என்ற ஆச்சரியம் குருவையும் தொத்திக் கொண்டது.

இவன் செய்யும் அலப்பறைகள் தாங்க முடியாது நொந்து போனாள் லயா.

என்னடா இப்டி இருக்கிறான்? வேணும் என்றுதான் செய்கிறானா? இல்லை என்னை வேண்டாம் என்று செய்கிறானா? என்று புரியாது குழம்பிப் போனாள்.

அதுவும் பஸ்ஸினுள் அவளது சீட்டிற்கு அருகே இருந்த சீட்டிலிருந்த புதிதாக திருமணம் முடித்த ஜோடிகள் அப்படி ஒரு நாடகத்தை நடாத்திக்கொண்டிருக்க தன்னைத் திரும்பிக்கூடப் பார்க்காது நித்திரா தேவியின் அரவணைப்பில் அந்த பயணநேரம் முழுவதும் இருந்தவனை "கல்லானாலும் கணவன் என்று சொன்னார்களே என் தலைவிதி எனக்கு ஒரு கருங்கல்லே கணவனாக வந்திருக்குது" என்று திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள்.

ஊர் திரும்பி வரும் போது மீண்டும் இன்னொரு கிழவிக்குப் பக்கத்தில் அவன் இவளை உக்கார வைத்திருக்க இவளுக்குப் பக்கத்தில் இருந்த கிழவி யன்னல் கம்பியைப் பிடிக்கிறேன் பேர்வழி என்று இவளது கழுத்தைச் சுற்றி கைபோட சாய்ந்திருக்கவும் முடியாமல் தொடர்ந்து நிமிர்ந்திருக்கவும் முடியாமல் பெரும் அவஸ்த்தையில் அவளிருக்க இவன் தானிருந்த சீட்டை வசதியாக அட்ஜஸ்ட் செய்து கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான்.

அவள் பக்கம் ஒரு பார்வைகூட பார்த்தான் இல்லை. விளக்கெண்ணை---- விளக்கெண்ணை இப்போது இவனை வைதது லயா இல்லை. குருவப்பாதான். அவரும்தான் இவன் நடத்தும் நாடகத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றாரே!

அவள் மனம் இவன்புறம் சாய்ந்து விட்டது என்பதையும் இவன் விட்டேத்தியாக இருக்கின்றான் என்பதையும் அவர் புரிந்து கொண்டார்.

ஒரு இளம் மனைவியின் எதிர்பார்ப்புகளைப் புரியாதிருக்க அவர் என்ன காட்டில் இருந்த துறவியா? அதுவும் கனடாவில் இத்தனை வருடங்கள் வாழ்ந்தவருக்கு யாரும் சொல்லிக் கொடுத்து தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லையே.

இவளது மனமாற்றத்தில் அவருக்கும் சில சந்தேகங்கள் இருந்தன. அதுவும் இவள் பெரியம்மாவின் நாத்தனார் மகன் கருணாகரனை திருமணம் செய்ய விரும்பியிருந்ததாக இவர்களுக்குத் திருமணம் நடந்த அன்று பார்வதி அம்மாள் சொன்னது அவர் மனதில் உறுத்திக் கொண்டிருந்தது.

வேறொருவனை விரும்பிய பெண் இவனைத் திருமணம் செய்ய தகுதியற்றவள் என்ற எண்ணம் எதுவும் அவரிடம் சிறிதளவும் இல்லாத போதும் இவளது குடும்பத்தினர் சொத்து என்ற ஒன்றுக்காக எதுவும் செய்வார்கள் என்பதை நிரூபித்ததுக் கொண்டிருந்தது அவரை யோசிக்க வைத்ததால் இவளது ஏக்கத்தையோ அவனது பாரா முகத்தையோ தான் புரிந்து கொண்டபோதும் எந்த ஒரு அடியும் இவர்களை நோக்கி வைக்க முயலவில்லை.

இவள் அன்பு உண்மை என்றால் அதை அவனுக்கு புரிய வைக்கட்டும்! முடியாதென்றால் காலம் அவனுக்குப் புரிய வைக்கட்டும்!! என்ற சிந்தனையே அவரிடம் மேலோங்கியிருந்தது.

ஆலத்தூர் போன விசயம் வெற்றிகரமாக முடிவடைந்திருக்க ஷோரூம் அமைக்கும் முயற்சிகளில் அவன் பிஸியாக இருந்தான். இவளுக்கும் இன்ரேண்ஷிப் தொடங்கியிருக்க அறிவியல் நகரிலிருந்து ரயில் மூலம் இவள் அந்த கம்பனிக்கு சென்று வந்து கொண்டிருந்தாள்.

ரயிலில் இரண்டு மணி நேர பயணம். பேரூந்தில் போவதென்றால் மூன்று பேரூந்து மாறியே செல்ல வேண்டும். காலையில் 6 மணிக்கு போகும் ரயிலை பிடித்துப் பயணம் செய்து கொண்ருந்தாள். போக்குவரத்து மிகவும் சிரமமாக இருந்தது.

தனியே அறை எடுத்து தங்குவதற்கு அவளுக்கு விருப்பம் இல்லை என்பதால் இந்த சிரமத்தை சகித்துக் சகித்துக் கொண்டாள்.

ரயில் நிலையம் இவர்களது வீட்டிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்திலிருக்க தினமும் நடந்து போய் வருபவளுக்கு சில சமயங்களில் ஆட்டோ கிடைக்கும் பல சமயங்களில் நடை தான்.

கழுத்தில் தாலி கோர்த்த செயின் அணிந்திருந்தவள் காலையில் செல்லும் போது சனநடமாட்டம் குறைவாக இருக்க இவளிடம் வழிப்பறி செய்ய வசதியாக ஒருவன் காத்திருக்க அவனிடம் இவள் தாலியைக் காப்பாற்றப் போராடி காயப்பட்ட வந்து சேர்ந்திருந்தாள்.

அன்று அவளுக்கு மாதாந்திர நாளாக வேறு இருக்க வயிற்றுவலியுடன் தான் வேலைக்குச் சென்றிருந்தாள்.

திருடனுடன் எதிர்பாராமல் ஏற்பட்ட போராட்டத்தால் பயந்து போனவளுக்கு மனஅழுத்தம் கூடியதில் உதிரப்போக்கு வழமையைவிட அதிகரித்திருந்தது.

தான் யாரும் இல்லாது தனித்துப் போனதைப் போல் உணர்ந்தவளுக்கு அழுதால் தேவலாம் போலிருக்க ரயிலில் அதற்கும் வழியில்லை என்பதால் அனைத்தையும் சகித்துக் கொண்டாள். மனமும் உடலும் சோர்ந்த நிலையில் தாயின் மடியை மனம் தேடியது.

ஆலத்தூருக்கு அழைத்துச் சென்றவன் நடந்து கொண்ட முறை அவளை அறியாது அவனிடமிருந்து ஒதுங்க தூண்டியிருந்தது. நான் அவனுக்கு ஒரு பொருட்டே இல்லையா? இந்த கேள்விதான் அன்றிலிருந்து இன்று வரை அவள் மனதில்.

இவள் ரயிலில் வேலை செய்யும் கம்பனிக்குச் செல்வதைப்பற்றி அனைத்தும் தெரிந்திருந்தும் தானே வலியச் சென்று அவளை பைக்கில் ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்து விடவேண்டும் என்ற எண்ணமோ அல்லது மீண்டும் மாலையில் வரும் அவளை ரயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரவேண்டும் என்ற எண்ணமோ அவனிடம் இல்லை.

அவள் காலையில் ரயிலில் வேலைக்குப் போகிறாள் மாலையில் ரயிலில் வருகிறாள் தட்ஸ் ஆல். இவ்வளவுதான் அவளது பயணம் பற்றிய எண்ணமாக இருக்க அவளது எதிர்பார்ப்புகள் பற்றி அவனுக்கு எதுவும் புரியவில்லை.

அவன் குடும்பம் என்ற அமைப்பில் இருக்காததாலும் பெண்களுடன் பேசி பழகாததாலும் அவர்களின் மனதில் என்ன ஓடும் எத்தகைய எதிர்பார்ப்புகள் இருக்கும் என்பவை எதுவும் அவனுக்கு விளங்கவில்லை.

மிகுந்த சோர்வுடன் ரயில் நிலையத்தில் வந்து இறங்கியவள் ஆட்டோ ஒன்றை அழைத்து ஏற முற்பட்ட சமயத்தில் பைக்கில் வந்து இறங்கினான் விஷ்ணு.

வந்த ஆட்டோகாரரிடம் நீங்க போங்கோ ப்றோ நான் பைக்கில் கூட்டிட்டு போறன் என்றபடி “ஏறு” என்று அவளை ஏற்றிக் கொண்டு வீட்டில் விட வந்தவன் அவள் அணிந்திருந்த லாங் ஸ்கார்டில் இருந்த இரத்த கறையைப் பார்த்து அதிர்ந்து போனான்.

உண்மையில் அவனுடன் பைக்கில் வர அவளுக்கும் விருப்பம் இல்லைத்தான். ஆனாலும் தன்நிலை உணர்ந்ததாலேயே அவனுடன் பைக்கில் ஏறியிருந்தாள்.

பைக்கில் இருந்து இறங்கியவள் அவனைத் திரும்பியும் பாராது வீட்டின் பின்புறமாக பாத்றூம் இருக்கும் பக்கம் ஓடிப்போக யோசனையுடன் நின்றவன். மீண்டும் திரும்பி கடைக்குப் போகாது உள்ளே வந்து அவள் டீ போட வைத்திருக்கும் ஹீற்றரை எடுத்து தண்ணீரைக் கொதிக்க வைத்து டீயைத் தயாரித்து வைத்தான்.

தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு உள்ளே வந்தவளிடம் “ப்ரியா டீ இருக்கு குடி” என்று அவளது கையில் டீ
யை வைக்க அவன் தந்த டீயை பார்த்த மட்டிலும் இதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை எல்லாம் மேலெழும்ப வெடித்து அழுதாள்.

வழமையாக அவளது அழுகையை ஒருவித ஒவ்வாமையுடன் பார்ப்பவனுக்கு இன்று அவள் அழுதது பெரும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அதுவும் காலையில் அவளுக்கு நடந்ததை விமலின் அண்ணா வந்து சொல்ல அப்போது அங்கே நின்ற குருவப்பா தன்னை மீறி கத்திவிட்டிருந்தார்.

இந்த காலை வேளையில் சனநடமாட்டம் இல்லாத வழியில் அவளை தனியே நடந்து போகவிட்டுட்டு பார்த்துக் கொண்டிருக்கிற நீ என்ன மனுஷன்யா? உன்னை அவளுக்கு புருஷனாக இரு என்று சொல்லயில்ல நல்ல மனுஷனாக முதலில் இரு.

என்னைக் கேட்ருந்தா பைக்கில் கொண்டு போய் விட்டிருந்திருப்பேன் தானே என்பது அவனது நியாயமாக இருக்க இது எல்லாம் சொல்லியா தெரிய வேணும் என்று அவள் நினைக்க இருவருக்கும் இடையில் இருக்கும் பள்ளத்தை யார் நிரப்புவார்?






































 
Last edited:
Top