கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அன்புவலி ----+அது - அத்தியாயம் 5

sanchumahen

New member
அன்புவலி ----+அது - அத்தியாயம் 5

அன்று

கோயிலில் நின்றிருந்தாலும் மனம் நிலைகொள்ளாது தவித்துக்கொண்டிருந்தது அழகனுக்கு. மூர்த்தியை பார்த்திருந்தாலாவது மெல்ல பேச்சுக்கொடுத்து நிலவரம் அறிந்திருப்பான் அவன்கூட கோயில் வளாகத்தில் எங்குமில்லை. அதுவும் இந்த திருவிழாவிற்கு என்றே புறப்பட்டு வந்தவன்.

யாரிடம் கேட்பது என்றுதான் புரியவில்லை. தாத்தா வேறு இவனைக் கண்ணால் பார்த்த நேரம் முதல் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு ஏதாவது வேலை சொல்லிக் கொண்டிருக்க அபிஷேக ஆராதனைகள் தொடங்கியபின் எங்குமே நகர முடியவில்லை.

இவை போதாதென்று அந்த ஊரில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் தனது நுனிவிரலில் வைத்திருக்கும் சின்னானை அழைத்து இவன் மூர்த்தியைப் பார்த்தாயா? என்று கேட்க அவன் இவனைப் பார்த்த பார்வை தப்பாகத் தோன்ற அடுத்த தடவை அவனிடம் கேட்க முடியவில்லை.

அத்துடன் நிறுத்தாது தாத்தாவிடமும் இவனுக்கு முன் அவன் சொன்ன வார்த்தைகள் கலவரத்தை அழகன் மனதில் தோற்றுவித்தன. தாத்தா ஒரு விசயத்தை மறுத்து முதலில் சொன்னால் அப்பாவோ அம்மாவோ எக்காரணம் கொண்டும் செய்யமாட்டார்கள் என்பது இவன் அனுபவம் மூலம் அறிந்த உண்மை.

“ஐயா சின்னவரோடை முகமே சரியில்லை அந்த மூர்த்திப் பயலைக் காணவில்லை என்று கவலையில் இருக்கிறார் போல” அவன் சொன்ன த்வனியே அதிலும் மூர்த்தியை என்பதில் அழுத்தம் கொடுத்துச் சொல்ல அது மூர்த்தியைத் தானோ என்ற செய்தியை கேட்பது போல இருந்தது இவனுக்கு.

குற்றமுள்ள மனம் குறுகுறுக்க சட்டென பேச்சை நிறுத்தி மௌனமானவன் வீட்டிற்குப் போனதும் பைக்கை எடுத்துக்கொண்டு போய்ப் பார்க்கலாம் என்ற முடிவை எடுத்திருக்க இவனுக்கு அதிர்ச்சியளிப்பது போல பல சம்பவங்கள் காத்திருந்தன. முதலாவது இவனது பைக்கின் பின்பக்க ரயர் காற்றின்றி இருந்தது. வழமையாக இப்படி ஏதாவது நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டா? எனக்கேட்டால் பதில் நிச்சயமாக “இல்லை” என்பதாகத் தான் இருக்கும்.

இவன் ஊருக்கு வரும் காலங்களில் எடுத்து ஓடக்கூடிய நிலையில் தான் பைக் இருக்கும். சின்னானைப் பொறுத்தவரை சின்னவர் ஓடும் பைக்கும் சின்னவரும் ஒன்று. அதாவது இருவருக்கும் ஒரே மரியாதை.

இன்று என்ன நடந்தது? யோசித்தவனுக்கு இது உள்வீட்டு வேலை தான் என்பது முதல் எதுவும் புரியவில்லை .



ஒரே ஒரு நாள் பரீட்சை விடுமுறையில் கோயில் என்பதற்காகவே வந்தது போல காட்டிக்கொண்டவன் கட்டிக்கொள்ள நினைப்பவளுக்காகவே கோயிலையும் நினைத்தேன் என்பதைச் சொல்ல முடியவில்லை.

திருவிழா முடிந்த கையோடு ஊரைச்சுற்றவும் முடியவில்லை அன்றே ஹாஸ்டலுக்கும் புறப்பட்டுப்போகவும் முடியவில்லை. மனம் கிடந்து அல்லாடிக் கொண்டிருந்தது.

மௌனமாக வந்து அந்த நாற்சார வீட்டின் உள்முற்றத்தில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டான். காரணமின்றி பவதியினது வீட்டுப்பக்கம் நடைபவனியில் போகமுடியாது, கேட்பவர்களுக்கு பதில் சொல்லி மாளாது என்பதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டவனை அம்மாவின் அழைப்பு நடப்பிற்கு கொண்டுவந்தது.

“தம்பி இந்த பாலைக் குடி” என்றபடி ஒரு பித்தளை லோட்டாவில் வந்திருந்தது கற்கண்டு போட்டுக் காச்சிய பசும்பால்.

உண்மையில் ‘பாலும் கசந்ததடி’ என்று பாடும் நிலையிலிருந்தவன் பாலை ஒரு வாய்குடிக்க அது கசந்தது போல இருக்க முகத்தைச் சுழித்துக்கொண்டான். சாய்மணைக் கதிரையில் அமர்ந்திருந்த வடிவேல் அழகர் இப்போது உள் அர்த்தத்துடன் சின்னானைப் பார்க்க அவன் உண்மைதான் ஐயா என்பது போல பார்த்து வைக்க இவனுக்கு இவ்வுலக சிந்தனைகூட இல்லை என்பதை அவன் பித்தளை லோட்டாவைப் பாலுடன் தவறவிட்டது காட்டிக்கொடுத்தது.

இவன் படும் அவஸ்தைகள் தாத்தாவுக்கும் சின்னான் என்று அழைக்கப்படும் சின்னமணிக்கும் நன்றாகவே புரிந்திருந்ததுடன் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அத்திவாரம் இடவைத்திருந்தது.

நேற்றைய சம்பவத்திற்குப் பிறகு பவதி தொடர்பான விசயத்தை நேரடியாகக் கையில் எடுக்க விரும்பாதவர் மூர்த்தியின் மாமா இரத்தினத்துடன் பேசும் முடிவை எடுத்திருந்தார்.

இவன் தவறவிட்ட பால் நிரம்பிய பித்தளை லோட்டா காலைத் தப்பாது பதம்பார்க்க மந்திரித்து விட்ட கோழிபோல நின்றவனது காலில் கசிந்த இரத்தைப் பார்த்து கத்தியது இவர்களது வீட்டில் எடுபிடி வேலைக்கென வந்து செல்லும் பூரா என்று இவனது தாயால் அழைக்கப்படும் பன்னிரண்டு வயதான பூரணிதான்.

அம்மா---- ஓடி வாங்களேன் இங்கை சின்னவரின்ரை காலிலிருந்து இரத்தம் வருது என்று கத்தியவள் மற்றவர்கள் வருமுன் தான் கட்டியிருந்த நீளப் பாவாடையினால் அவனது காலைத் துடைத்திருந்தாள்.

இவளது செய்கையைப் பார்த்து ஏய் ----முட்டாள் என்ன வேலை இது----என்று உச்சஸ்தாயியில் சுரணைவர கத்தியவன் அவளுக்கிருந்த ஒரு சில கிளிசல் பாவாடையைக்கூட இப்படி பாழாக்குகிறாளே என்ற ஆதங்கத்தில் அம்மா பூராவிற்கு ஏதாவது புதுதுணி கொடுத்து அனுப்புங்கோ.

யோசனை இல்லாமல் தான் போட்டிருக்கிற துணியாலை இரத்தத்தை துடைச்சிட்டா----என்று தொடர இதையெல்லாம் சட்டை செய்யாது அடுக்களைக்கு ஓடிச்சென்றவள் மஞ்சளை நல்லெண்ணெய்யில் கலந்து சூடாக்கி எடுத்து வந்து அவன் தடுக்கத் தடுக்க பத்துப்போட்டு விட்டிருந்தாள்.

மீண்டும் அதே வேகத்துடன் ஓடியவள் ஈரத்துணியைக் கொண்டு இவன் சிந்திவிட்ட பால் முழுவதையும் துடைத்துவிட்டாள். மிகுந்த இரக்கத்துடன் இவள் செய்வது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த வள்ளியம்மை “பூரா இங்கை வா சாப்பிட்டிட்டு மீதி வேலைகளைப் பார்” என்று சொல்ல “இல்லம்மா சிவப்பிக்கு தீவனம் போட்டுவிட்டு சாப்பிடறேனே” என்க “அதெல்லாம் சாப்பிட்ட பின் செய்யலாம்” என்று அதட்டிய வள்ளியம்மை அவளைத் தன்னுடன் அடுக்களைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அவளுக்கும் அவளது எஜமானிக்கும் தெரியாத செய்தி ஒன்று இருந்தது அந்த சிவப்பி என்று அழைக்கப்படும் இளம்பசு அவர்களது பட்டியில் இல்லை என்பது.

அதுமட்டுமில்லை அதனுடன் சேர்த்து இன்னொரு சினைப்படும் பருவ வயதிலிருக்கும் பசுவும் இரண்டு நாட்களுக்கு முன் திருட்டுப் போயிருந்தது அதுவும் ஊர்ப்பெரியவரான வடிவேல் அழகரது தொழுவத்திலிருந்து.

சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பசுக்களும் காளைகளும் இருக்கும் இவர்களது மாட்டுத் தொழுவம் பலருக்கு குறைவில்லாது பால் தந்தது மட்டுமல்லாது போதிய இயற்கைப் பசளையையும் தர இவர்களது வீட்டில் பாற் பொருட்களுக்கு பஞ்சம் என்பது வந்ததில்லை.

எல்லா பசுக்களும் கொல்லையில் இருக்கும் தொழுவத்தில் இருந்தாலும் சிறு பராயம் முதல் இந்த சிவப்பி பசுமட்டும் தான் வீட்டுவாசலுக்கு வந்து தேவையான உணவை வாங்கியுண்ணும் பழக்கம் கொண்டிருந்தது

கடந்த சில நாட்களாக காய்ச்சல் வந்திருந்தவள் இந்தப்பக்கம் வராமல் போனதில் சிவப்பிக்கு நடந்த கொடுமை தெரியாமல் போயிருந்தது. சிவப்பி இங்கு மட்டுமல்ல இந்த உலகில்கூட இல்லை என்ற உண்மை தெரியும்போது அதை பூரா தாங்குவாளா? என்று கவலைப்பட்ட சின்னான் அவள் முகத்தில் இருக்கும் மலர்ச்சி இந்த வீட்டில் அவள் நிற்கும் சில மணித்துளிகளுக்கு மட்டும்தான் என்பதையும் அறியாதவன் அல்ல.

ஊ-----ஊ--- என்று காலைத் தடவியபடி மீண்டும் ஊஞ்சலில் வந்து அமர்ந்தவன் அவருகில் வந்து இருந்தார் பாட்டன். தம்பி தேர்வு வருது என்று சொன்னாயே எப்போ ஊருக்கு கிளம்புறாய்? என்று கேட்டவரை ஆச்சரியத்துடன் பார்த்தான். வழமையில் அவன் ஊருக்கு வரும்போது அவனை அனுப்ப விரும்பாதவர் இன்று அவனை நெட்டித்தள்ளுவது போல பேசியது ஆச்சரியத்தை தந்தாலும் தாத்தா வரப்போகும் வருஷ இறுதி தேர்வை மனதில் வைத்துப் பேசுவதாக எண்ணியவன் “நாளை காலையில்” என்று பதில் தந்தான். ஆனாலும் பவதியைப் பாராது போகவேண்டுமே என்று எண்ணிய மாத்திரத்தில் மனம் தவித்துத்தான் போனான்.

பவதியும் சொல்லொணா துயரத்தில் தானிருந்தாள். அவள் எண்ணியது போல பாற்குடம் எடுக்கமுடியாது போனது அபசகுனமாகப்பட்டது அவளுக்கு. அத்துடன் அவளது அன்புக்குரிய வேல் அத்தானைப் பார்க்க முடியாத துக்கமும் சேர்ந்து கொள்ள சோர்ந்துதான் போயிருந்தாள் அவள். ஊரில் அவனது நட்புக்களும் உறவுகளும் அவனை அழகன் என்று அழைத்தாலும் அழகன் அவளுக்கு வேல் அத்தான் ஆகியிருந்தான். அப்படியொரு மயக்கம் அவனது தோற்றத்திலும் வசதியிலும்.

இன்னும் ஓரிரு வருடங்களில் அவளும் அழகர் குடும்பத்தில் ஒருத்தியாகி விடுவாளே என்ற எண்ணம் தித்தித்தாலும் அப்பாவையும் சின்னண்ணாவையும் அவள் பார்த்த கோலம் பதற வைத்திருந்தது.

அம்மா காவேரி அழுதழுது ஓய்ந்து போயிருந்தாள். இரண்டு ஆண்களினது எல்லாத் தேவைகளையும் ஒரு பெண் எப்படிப் பார்த்துக் கொள்ள முடியும் அதுவும் சம்பாத்தியம் ஏதுமின்றி. கோயில் திருவிழாவிற்கு வந்திருந்த பெரிய அண்ணன் மூர்த்தி அப்பாவும் சின்ன அண்ணனும் செய்த வேலையால் வைத்தியசாலைப் பக்கமே வரவில்லை. ஊர் கொடுத்த தண்டனை அப்படியிருந்தது.

பின்னே பசுமாட்டை இறைச்சிக்கு வெட்டினால் சும்மா விடுவார்களா? அதுவும் துணிவாக வடிவேல் அழகரது தொழுவத்திலிருந்த பசுக்களை மேய்சல் தரையிலிருந்து கடத்தி வந்து வெட்டினால் என்ன நடக்கும் என்று தெரிந்தும் இருவரும் திருடியது ஒரு புறம் என்றால் பசுமாட்டை வெட்டியது ஊரையே ரௌத்திரம் கொள்ள வைத்திருந்தது. சின்னான் இவர்கள் இருவரையும் பசுக்களை இறைச்சிக்காக வெட்டிக்கொண்டிருந்த இடத்தில் வைத்து கையும் மெய்யுமாகப் பிடித்திருந்தான்.

ஊரே சேர்ந்து இருவருக்கும் சூடு வைத்திருந்தது இரண்டு கைகளிலும். கைகளிரண்டும தீய்ந்து போயிருந்தது மட்டுமல்லாது தீக்காயத்தால் படும் வேதனை ஒருபுறம் என்றால் ஊரவர்களது ஏச்சும் பேச்சும் தாங்கமுடியாத அவமானத்தைத் தருவதாயிருக்க வெளியில் யாராலும் நடமாட முடியவில்லை. எத்தனை தடவை புத்தி சொல்லியும் குறுக்கு வழியில் உழைக்க நினைத்த அப்பனையும் தம்பியையும் மன்னிக்க முடியாததனால் மூர்த்தி இவர்கள் இருவர் பக்கமுமே போகவில்லை. அவனும் வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போயிருந்தான்.

தங்களது கைகளைப் பார்த்து மனதில் புகைந்து கொண்டிருந்த பவதியின் சின்னண்ணன் கணேசனையும் அப்பா நாகராசனையும் பார்க்க வந்த இவளது மாமா மாணிக்கராசன் அந்த புகையில் பெற்றோலை உற்றி விட்டுப் போயிருக்க தாம் செய்த தவறை மறந்து காலம் முழுக்க தீக்காயத்துடன் தம்மை நடமாடவிட்ட வடிவேல் அழகர் குடும்பத்தை வஞ்சம் தீர்க்க இருவரும் துடித்துக்கொண்டிருக்க தனக்கு நடக்கப்போகும் பேரிடர் தெரியாத அழகன் யூனிக்குப் போக பேருந்தில் ஏறினான் துயரம் தோய்ந்த முகத்துடன்.

யாரிந்த மாணிக்கராசன் பவதியின் அம்மா காவேரியின் தம்பி மட்டுமல்ல பாவப்பட்ட பூரா எனப்படும் பூரணியின் அம்மாவின் இரண்டாவது கணவன். அவளின் அப்பா வேலுமணி இறந்தபின் அந்த இடத்திற்கு இவளது அம்மா லக்ஷ்மிக்கு பெற்றோரால் பார்த்து கொண்டுவரப்பட்டவன் மட்டுமல்ல பூராவைக் துன்புறுத்துவதற்கென்றே வந்த சித்தப்பன்.

இதுவரை உலகம் சித்தி கொடுமையைத்தான் பார்த்திருக்கின்றது. என்னமோ இரண்டாம் தாரமாக வரும் பெண்களுக்கு மட்டுமே கொடுமைப்படுத்துவது குத்தகைக்கு விடப்பட்டது போன்று இந்த உலகம் பேசுமே ஆனால் சித்தப்பா கொடுமை--------???????



இன்று

விஷ்ணு தனக்கு நேர்ந்த அவமரியாதை அனைத்தையும் புறங்கையால் துடைத்துவிட்டுப் போக ஆச்சரியப்பட்டு போவது இப்போது குருவப்பாவின் முறையானது.

அவரை அழைத்து வந்தது போலவே அழைத்துச் சென்று அவரது தங்குமிடத்தில் விடுவதையும் தனது கடமை என்று நினைத்தவன் -----

அவர் கையைப் பிடித்து அழைத்துவர மறுப்பேதும் சொல்லாது வந்து பைக்கில் ஏறிக்கொண்டதுடன் குருவப்பா ஏறுவதற்காக காத்திருந்து அவர் சரியாக சீட்டில் இருக்கின்றாரா என்பதையும் பொறுப்பாகத் திரும்பிப் பார்த்து உறுதிப்படுத்துக் கொண்டதும் அல்லாது “என்ரை தோளைப் பிடிச்சுக் கொள்ளுங்கோ” என்று அவரிடமும் கூறியபின்பே பைக்கை ஸ்ராட் செய்தான்.

அவனது இந்த செய்கை அவருக்கு இனம்புரியாத ஒரு உணர்வை ஏற்படுத்த கண்களில் நீர் நிறைந்து கொண்டது. அப்படியே அவனைப் போல-------- என்று எண்ண எண்ண நெஞ்சம் விம்மித் தணிந்தது.

குருவப்பாவிற்கு இந்த ஊரில் வீடு எதுவும் இல்லாதபடியால் கனடாவிலிருந்து வந்த நாள் தொடக்கம் அறிவியல் நகரில் இருந்த வாடகை வீடு ஒன்றிலேயே தங்கியிருப்பதால் அவரை அந்த வீட்டிற்கே அழைத்துச் சென்றான்.

அவனது பொறுப்புணர்ச்சி அடுத்தவர்மீது காட்டும் அக்கறை அவரின் நெஞ்சைத் தொட்டிருந்தது. அது தவிர லயா வீட்டில் நடந்தவைகள் பற்றி அவன் ஏதும் பேசுவான் என்று இவர் பார்த்திருக்க அவனோ வாயைத் திறந்தானில்லை.

அவனது இந்தப்போக்கு அவன் எவ்வளவு அழுத்தமானவன் என்பதைக் காட்ட நிச்சயமாக அவனுக்கு இந்த அழுத்தம் தேவைதான் என்பதைப் புரிந்து கொண்டவர் தான் நினைத்து மறுகும் அளவிற்கு அவனில்லை. அவன் எதையும் கையாளும் திறமைபடைத்தவன் என்பதைப் புரிந்து கொண்டவர் லயாவை நினைத்து வருத்தப்பட்டார்.

பாவம் அவளுக்குப் புரியவில்லை மனதை இவ்வளவு தூரம் வெளியில் காட்டாதவன் இவளுடன் சுலபமான வாழ்க்கை வாழமாட்டான் என்பதை.

ஒருபுறம் அவளது நிலை ஒரு குரூர திருப்தியைத் தந்தாலும் மறுபுறம் இரக்கம் வந்து சூழ்ந்து கொண்டது.

இதனால் தானே இந்த கல்யாணம் வேண்டாம் என்று சுப்புவிடம் தலைபாடாய் அடித்துக் கொண்டேன் அவன் தான் கேட்கவில்லையே----

அவர் தங்கும் வீடு வந்திருக்க இறங்குங்கோ என்றுகூட சொல்லாது பைக்கை நிறுத்தியபடி நின்றிருந்தவனைப் பார்க்க அவருக்கு ஆச்சரியம் கலந்த வேதனையாக இருந்தது. ஆக நடந்தவைகளை நினைத்து அவன் மனதுக்குள் மறுகியிருக்கிறான் அவற்றின் வெளிப்பாடுதான் இந்த திடீர் மௌனம் என்பதும் புரிந்தது.

உணர்வுகளைத் துடைத்து இறுகிப்போயிருந்த முகம் அவருடன் அதிகம் பேச விரும்பாத போக்கு இவனின் மனவோட்டத்தைப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமில்லை என்பதை அவருக்குக் காட்ட எதிர்வரும் நாட்கள் எவ்வாறு கழியுமோ என்று சிந்திக்கத்தான் தோன்றியது அவருக்கு.

வெளியில் பாமாவால் வைக்கப்பட்ட அவளது துணிமணிகள் அடங்கிய பேக்கை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தவள்

ஏம்மா! அப்பா தான் அக்கா மகனுக்கு எல்லாத்தையும் தாரை வார்த்துக் கொடுத்திட்டார் என்றால் அவனிட்டை இருந்து பிச்சை வாங்கவா என்னைத் துரத்தி விடுறீங்கள்?

பெத்த மகள் அவளது மனம்---- அவளது வாழ்க்கை---- கௌரவம்----- எல்லாத்தையும் விட பணம்தான் அவ்வளவு பெரிசா போச்சுதில்லை? என்று கேட்டுவிட மீண்டும் கன்னம் பழுக்க அடிவிழுந்திருந்தது.


அவள் அதிர்ந்து நின்ற அந்த கணத்தில் அவளது இரண்டு அக்காக்களும் ஓடிவந்து அவளை அணைத்துக் கொண்டனர்.

ஏன் அம்மா உங்களுக்கு இவ்வளவு ஆவேசம்??? உண்மை சுடுதா? என்று கேட்டவர்கள் தாய் கூறிய பதிலில் மௌனமாயினர்.

நீங்கள் எப்படியோ எனக்குத் தெரியாது. என்ரை புருஷன்ரை சொல் எனக்கு வேதவாக்கு. விஷ்ணு அவரின்ரை தெரிவு. இவள் வாழுறாள் இல்லை அவளின்ரை வாழ்க்கையை அவளே குழிதோண்டிப் புதைக்கிறாள் அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை ஆனால் இவள் இருக்க வேண்டிய இடம் இந்த வீடு இல்லை---அவன் இருக்கிற இடம்.

அம்மாவின் அறையின் வீரியத்தை தாங்காது கன்னம் எரிந்ததென்றால் பேச்சின் வீரியம் தாங்காது மனம் எரிந்தது. ஆனால் இந்த அம்மாவிற்கு பதில் சொல்லாதுவிட மனம் வரமாட்டேன் என்று அடம்பிடிக்க---

சரி---- அவன் இருக்கிற இடத்தில் இருக்க வேணும் அவ்வளவு தானே-----இருக்கிறேன். ஆனால்-----இந்த ஜென்மத்திலை அவனை என்ரை புருஷன் என்ற இடத்திலை வைச்சுப் பார்க்க மாட்டேன்-----எனக்கு அவ்வளவிற்கு விசாலமான மனம் இல்லை-----

ஓஹ்--- அவனைப் புருஷனாய் பார்க்க மனம் வராது என்ன??? இன்னமும் அந்த கருணாகரன் வந்து கல்யாணம் கட்டுவான் என்ற எண்ணமோ உனக்கு?? என்று நக்கலாக கேட்க

அம்மா----ஆ--- என்று அலறியவள் அப்பவும் சரி இப்பவும் சரி என்ரை மனம் எப்பவுமே தெளிவாகத் தான் இருக்கு. அதைப் புரிஞ்சு கொள்ளும் பக்குவம் தான் உங்களுக்கு இல்லை-----என்று சொல்ல

அப்ப ஏன்டி பெரியம்மா உன்ரை புருஷனுக்கு முன்னாலை காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போனது போல என்று சொல்ல மௌனமாக இருந்தனீ??? உண்மை என்றபடியால் தானே என்று பதிலுக்குக் கேட்க ஆத்திரத்துடன் உறுத்து விழித்தவள்



என்னைச் சொல்லாலை கொல்லாதையுங்கோ! நான் செத்தாலும் என்ரை பாடிகூட இந்த வீட்டிற்கு வராது. நான் போறேன் என்று அழுதபடி முற்றத்தில் வீசி எறியப்பட்டிருந்த பேக்கை எடுத்துக் கொண்டு நடக்க தாங்கொணா வேதனையுடன் அவளைத் தொடர்ந்து வந்த பாமா ஆட்டோ ஒன்றினை நிறுத்தி அவளையும் ஏற்றிக் கொண்டு விஷ்ணுவின் வீட்டினை நோக்கி சென்றார்.

அம்மாவுடனோ அல்லது அப்பாவுடனோ எதிர்த்துப் பேசியறியாதவள் அவள். இன்றைய நாள் தந்த மன அழுத்தம் தாங்கமுடியாது தவித்துப் போனாள். அந்த மன அழுத்தமே அவளை அம்மாவை எதிர்த்துப் பேச வைத்திருந்தது.

அப்பாவினது இரண்டு கார்களையும் அம்மா அப்பா இறந்து ஒரு வாரம் ஆகமுன்னரே விற்றது, அப்பா சொத்து முழுவதையும் விஷ்ணு பெயரில் மாற்றி எழுதியது, அக்காக்களின் கண்ணீர், அத்தான்களின் வெறுப்பை உமிழும் பார்வை, அம்மா அவளின் அன்பு பெரியம்மாவை வெளியில் துரத்தியது இவை எல்லாமே அவளின் நிம்மதியைப் பறித்திருந்தது.

இவ்வளவிற்கும் காரணம் விஷ்ணு அவன் மட்டும் தான்-----தாத்தா எதையுமே நடத்தைகெட்ட அவனது அம்மாவிற்குக் கொடுக்காதிருக்க அவனது தாயாரால் செய்ய முடியாததை நான்கு மாதத்தினுள் செய்து காட்டிய அவன்மேல் தாங்கொணா வெறுப்புத்தான் வந்திருந்தது.

அம்மா பாவம்----அடிச்தாலும் ஏசினாலும் அம்மாவை அவளால் வெறுக்க முடியாது மெல்ல சரிந்து தாயின் மடியில் படுத்தவளின் கண்களிலிருந்து வடிந்த கண்ணீர் தாயின் சேலையை நனைத்துக் கொண்டிருக்க ஏதோ நினைத்தவர் போல “தம்பி மணியம் ஹார்ட்வெயருக்குப் போங்கோ” என்றவர் விஷ்ணு அண்ணாவின்ரை கடைக்கா அம்மா என்ற கேள்வியில் ஆத்திரத்துடன் மடியிலிருந்து எழும்பிய மகளின் கையைப் பிடித்து அழுத்தி பேசாதே என்று மறைமுகமாக எச்சரித்தபடி “ஆமாம் தம்பி” என்றார்.

குறைந்து கொண்டு சென்ற வெறுப்பும் கோபமும் மீண்டும் பொங்கியெழ நான்கு மாதங்களில் அப்பாவின் கடை அவனது பெயரினால் அறிமுகப்படுத்தப்படுவதைத் தாங்காது தாயின் எச்சரிக்கையையும் மீறி அவங்கதான் தெளிவாய் மணியம் ஹார்ட்வெயர் என்று சொல்லுறாங்களே நீ என்ன விஷ்ணு அண்ணாவின் கடை என்று சொல்லுகிறாய் என்று சீறியவளை இரண்டும் ஒன்றுதான் தங்கைச்சி இப்போ விஷ்ணு அண்ணா தானே முதலாளி என்றபடி சிரித்தவன் அத்தானைவிட அப்பாவில்தான் பாசம்கூட போல என்க முகத்தை திருப்பி ஆட்டோவிற்கு வெளியில் பார்ப்பதைத் தவிர வேறுவழியேதும் இருக்கவில்லை.

வீட்டின் திறப்பை வாங்குவதற்காக பாமா ஆட்டோவிலிருந்து இறங்கி கடைக்குள் போக அவன் அங்கு இருக்கவில்லை லாரிகளில் வந்திருந்த ஸ்டாக்குகளை இறக்குவதற்கு குடோனுக்குச் சென்றிருந்தான். பாமா அதிகம் சுப்பிரமணியனது தொழில் தொடர்பான இடங்களுக்கு வந்து புழங்காததால் அவரைப் பெரியளவில் கடையில் பணிபுரியும் எல்லோருக்கும் தெரிந்திருக்கவில்லை.

அவரைத் தெரிந்திருந்த பழைய வேலையாட்கள் புன்னகையுடன் தலையை அசைத்து அவருக்கு மரியாதை தர அங்கு வந்த கணக்கர் சோமு தம்பி குடோன் வரைக்கும் போயிருக்கிறார்--- அண்ணா----நீங்கள் வருவீங்கள் என்றும் வந்தால் வீட்டுச் சாவியைக் கொடுக்கும்படியும் போனில் சொன்னவர் என்று சொல்ல இவரும் யார் என்று கேட்கவில்லை அவரும் யார் என்று சொல்லவில்லை.

இதைச் சொன்னது குருவப்பா என்பது புரிய ஒரு கசந்த புன்முறுவல் தோன்றி மறைந்திருந்தது.

இவருடன் வெளியே வந்த சோமு ஆட்டோ ஓட்டிவந்தவரை விஷ்ணு முதலாளியின்ரை வீட்டிலை விட்டுவிடுங்கோ என்று சொல்லியதுடன் ஆட்டோவிற்கான பணத்தையும் கொடுக்க அதைத்தடுக்கவோ மறுக்கவோ பாமா முன்வரவில்லை.

அந்த தோட்டவெளியை நினைத்த மாத்திரத்தில் மீண்டும் கண்ணீர்வரப் பார்க்க அதை அடக்கிக் கொண்டு இருந்த லயாவிற்கு ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியத்தை தருவதைப்போல மாற்றங்களை அந்த கட்டிடம் பெற்றிருந்தது.

அந்த இரண்டு ஏக்கர் தோட்டமும் சீமேந்து தூண்கள் நிறுவப்பட்டு முள்ளு கம்பி தகரம் போன்றவற்றினால் அடைக்கப்பட்டிருந்தது என்றால் பெரிய இரும்பு கேற் போடப்பட்டு சீ.சீ.ரீ.வீ கமெராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அந்த வீட்டிற்கு எதற்கு இந்த கமெரா “விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சம்” இருந்த கவலை எல்லாம் மறக்க இவள் கமெராவைப் பார்த்துச் சிரிக்க அந்த நக்கல் சிரிப்பை மட்டுமின்றி இவளது செய்கைகள் ஒவ்வொன்றையும் இறுகிப்போய் தனது மொபைலில் பார்த்தபடியிருந்தான் விஷ்ணு.

அவன் மொபைலில் பார்த்துக்கொண்டிருக்கக்கூடும் என்ற எண்ணம் சிறிதும் இன்றி இவள் தனது போக்கில் ஏளனம் செய்து விமர்சிக்க ஐயோ இந்த பெண் தன்ரை வாழ்க்கையைத் தானே அழித்துவிடுவாள் போல இருக்கே என்று நினைத்த பாமா “லயா! திரும்பவும் நீ வாங்கத்தான் போறாய். வாயை மூடு என்று சொன்னதுடன் வேகமாக நடந்து வந்து வீட்டின் முன்வாசலுக்கு வர--- அந்த வீட்டின் அமைப்பில் சிலமாற்றங்கள் நடந்திருப்பது தெளிவாகத் தெரிந்தது.

முன்பிருந்த இரும்பு நெற் அகற்றப்பட்டு செங்கற்களால் சுவரும் யன்னல்களுமாக வெளிப்புறம் மாற்றபட்டிருந்து என்றால் இரும்பு நெற் கதவுக்குப் பதிலாக மரக்கதவுகள் முன்புறமாகவும் அந்தவீட்டின் உட்புறத்திலிருந்து கிணற்றடி, டாய்லெட் ஆகியவற்றிற்குப் போகும்வழியிலும் பொருத்தப்பட்டிருந்தன.

அந்த எல் வடிவமான ஹாலில் பிரம்பு கதிரைகளுடன் சுவரில் ரீவீயும் இருந்தது. வீட்டின் கூரை சற்று உயரமாக்கப்பட்டு சீலிங் ஃபேன் பொருத்தப்பட்டிருந்தது. வீட்டின் உட்புறமும் கமெராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அந்த அறையினுள்ளும் கமெரா இருக்கும்போல என்று நினைக்க சிரிப்பு மீண்டும் வந்தது. இம்முறை வந்த சிரிப்புக்கு அவனுக்கு தான் கொடுத்த அடியும் கடியுமே காரணம் என்பது அவளுக்குத் தெரிந்தாலும் மொபைலில் பார்த்துக்கொண்டிருந்த அவனுக்குப் புரியவில்லை.

அவள் வீட்டின் உள்ளே வந்ததும் லயா பத்திரமாக இரு. வாயை அடக்கி வைச்சிரு----அப்பாவின்ரை பேச்சை மதிப்பாய் என்று நினைக்கின்றேன் என்று சொன்னபடி வெளியில் வந்த பாமா இங்கே சமைக்கிறதற்கு வசதி இல்லை போல இருக்கு. நான் சாப்பாடு டீ எல்லாம் இரவுக்கு அனுப்பிவிடுகிறேன்.

ஒரு நல்ல நாளாகப் பார்த்து அடுப்பு மற்றைய மளிகைச் சாமான்கள் வாங்கவேணும் என்க அம்மா நான் இரண்டு நாட்களில் ஹாஸ்டலுக்குப் போய்விடுவேன். இன்ரேர்ண்ஸிப் டிரெயினிங் வேறு தொடங்கப்போகுது. எல்லாமே போதும் நீங்கள் என்னை பத்திரமாக நீங்கள் ஆசைப்பட்ட இடத்தில் சேர்த்திட்டீங்கள் கிளம்புங்கோ என்றபடி அங்கிருந்த பிரம்பு கதிரையில் போய் அமர்ந்து கொண்டாள்.

என்ன டிறாமா இது? எதற்கு வந்திருக்கிறாள்? பேசாமல் தங்களின்ரை வீட்டில் இருக்க வேண்டியது தானே என்று எரிச்சல் பட்டவன் மொபைலை அணைத்துவிட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கினான். கம்பியூட்டர் கோர்ஸ் ஒன்றும் அக்கவுண்டிங் பக்கேஜ் ஒன்றும் இரவு 8 மணிக்குமேல் அவன் கற்றுவருவதால் வீட்டிற்கு அவன் வர இரவு 10 மணிக்கு மேலாகியிருந்தது. அவனது பழைய லொட லொடா சைக்கிள் அந்த வீட்டிற்கு பக்கத்தில் கட்டப்பட்டிருந்த தகர கொட்டகைக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதற்குப் பக்கத்தில் கொண்டு சென்று தனது பைக்கை நிறுத்தியவன் வீட்டினுள்ளே வர அங்கு யாரும் இருக்கவில்லை. அங்கிருந்த ஒரே ஒரு அறையினுள் இருந்த புதிய சிங்கிள் பெட்டில் தனது பெட்ஷீட்டை விரித்து அவள் தூங்கிக் கொண்டிருப்பது போல காட்டிக்கொண்டாள்.

தனது வழமையான குளித்தல் உடைகளைக் கழுவுதல் போன்ற சுத்தப்படுத்தல் வேலைகள் அனைத்தையும் முடித்தவன் தூங்குவதற்காக அறையினுள் இருந்த பழைய கயிற்றுக் கட்டிலை எடுத்துக்கொண்டு வந்து ஹாலினுள் போட்டுவிட்டு தனது லப்டாப்பை எடுத்து வேலை செய்து கொண்டிருக்க வெளியில் வந்த லயாவுக்கு என்னடா இது மதுரைக்கு வந்த வாழ்வு என்று அதிசயிக்கத்தான் முடிந்திருந்தது.

அங்கிருந்த மேசையில் இருவருக்கும் என்று பாமா அனுப்பியிருந்த இரவு உணவும் பாலும் இருந்தாலும் அவைகள் தொடர்பாக தனது கவனத்தைச் செலுத்ததாதவன் தனது வேலையில் ஆழ்ந்து போக---



அம்மாவின் முடிவுகளால் நொந்து போயிருந்த அவளுக்கோ இவர்கள் அனைவரது நடத்தைகளுக்கு காரணம் புரியாமல் இருந்தாலும் அடுத்தவர் வீட்டு உணவை உண்ணாத அவனுக்கோ அவை தேவைப்படாமல் போயிருந்தன.

அவன் ஏதாவது பேசினால் நன்றாக நாக்கைப் பிடுங்கிறமாதிரிக் கேட்கலாம் என்று காத்திருந்தவளுக்கு அவனது கண்டு கொள்ளாத போக்கு ஆத்திரத்தையும் ஏமாற்றத்தையும் தர விடியட்டும் என்று காத்திருந்தாள். இவள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விடியல் வருமா???

(தொடரும்)





















 
Last edited:
Top