கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அன்புவலி------+ அது -அத்தியாயம் 8

sanchumahen

New member
அன்று

கோயில் வருடாந்த கும்பாபிஷேக தினத்தில் அபிஷேக ஆராதனைகளை முடித்து விட்டு வள்ளியம்மையும் கந்தவேள் அழகரும் அறிவியல் நகர் திரும்பி மாதம் ஒன்று ஓடியிருந்தது.

பூரா பெரியவளான அந்த மாதம் மட்டுமே அவளை வீட்டில் இருக்க அனுமதித்த மாணிக்கராசன் பழையபடி அவள் வேலைக்குப் போக வேண்டும் என்று நச்சரி;க்கத் தொடங்கியிருந்தான்.

ஏன்டி! எவனோ பெத்த அநாதை நாய்க்கு வடிச்சுக் கொட்டுறதுக்காடி என்னை கட்டினனீ? விசப்பூச்சி மகாராணி ஆயிடிச்சா? வீட்டுக்குள்ளே வச்சு அழகு பார்க்கிறாய்? நாளைக்கு வேலைக்குப் போகயில்லை என்றால் சோறு தண்ணி கிடைக்காது சொல்லி வை என்று வார்த்தைகளால் கொட்ட

அவளை வேலைக்கு வரச்சொல்லி அழகர் ஐயாவீட்டிலிருந்து தகவல் வரவில்லையே என்ன செய்வது? என்று புரியாது லக்க்ஷ்மி நின்றிருந்தாள். பெரிய வீட்டில் காத்தாயியைத் தவிர பெண்கள் யாரும் இல்லை. அவளைக் கேட்கலாமா?

பெரியவளாகி ஒரு மாதம் மட்டுமே ஆனவளைத் தான் வயலுக்கும் தோட்டங்களுக்கும் வேலைக்கு அனுப்;பினால் காத்து கறுப்பு அடிச்சா என்ன செய்வது?

பாக்கிறவங்க காறி துப்புவாங்களே. அடுத்தவங்க பேசுற பேச்சை கேட்கிற நிலையிலையா நானும் அவளும் இருக்கிறோம்? கவலைப்படுவதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்?

இவளது கவலையைத் தீர்ப்பது போல அழகர்புரம் ஆரம்ப பள்ளிக்கு மாற்றலாகி வந்தார் வாணி ரீச்சர். வாணி ரீச்சரும் அவரது அப்பாவும் ஊர் தலைவர் வடிவேல் அழகர் ஐயாவால் கட்டிக்கொடுக்கப்பட்ட குவாடர்ஸில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கு வழங்கப்பட்ட அந்த தங்குமிடத்தில் நிறைவே மரங்கள் இருப்பதனால் முற்றத்தைப் பெருக்கித் தெளிக்க வாரம் இரு நாட்கள் வேலையாட்கள் வடிவேல் அழகர் ஐயா வீட்டிலிருந்து வருவர்.

இம்முறை பூரணியை இந்த வேலைகளைப் பார்த்துச் செய்து கொடுக்கும்படி சின்னான் வந்து சொன்னது லக்க்ஷ்மிக்கு பெரும் ஆறுதலைத் தந்திருந்தது.

தனது பெயரை மட்டும் தட்டுத்தடுமாறி குண்டு குண்டான எழுத்தில்; எழுதத் தெரிந்தவளுக்கு அந்த ஆசிரியர் படிக்கும் புத்தகங்களைப் பார்க்க மலைப்பாக இருக்;க ரீச்சர் அம்மா எதுக்கு இவ்ளோ புத்தகங்கள் படிக்க வேணும்? என்று பெரியவிழிகளை உருட்டியபடி கேட்கும் அந்த வயதுக்கு வந்த அப்பாவிக் குழந்தையை வாணி ரீச்சருக்குப் பிடித்துப் போனது.

குவாடர்ஸில் தனது வேலைகளைச் செய்து முடித்தபின் வீட்டிற்கு வர அன்று அதிசயத்திலும் அதிசயமாக இரண்டு வருடங்களுக்கு முன் ஊரைவிட்டுப் போன பவனம் தனது கடைசி மகளுடன் லக்க்ஷ்மியைப் பார்க்க வந்தவர் மாணிக்கராசனின் வாயில் விழுந்து சின்னா பின்னப்பட்டுக் கொண்டிருந்தார்.

என்ன மாமி மகளுக்குச் சீர்வரிசை கொண்டு வந்திருக்கிறியோ? அறுத்து கட்டினவளுக்கு எதுக்கு அதெல்லாம் என்று கைகழுவியாச்சுப் போல என்று தொடர

தம்பி----அது----வந்து----

பாவம் பவனம் லக்க்ஷ்மியின் முதல் தங்கைக்கு திருமணம் கூடிவந்திருந்தது. பையன்கூட இவர்கள் வேலை செய்யும் ஆலையில் தான் வேலை பார்க்கிறான். அவனாகத்தான் விருப்பப்பட்டுப் பெண் கேட்டிருந்தான்.

என்னதான் வசதி வாய்ப்பு இல்லையென்றாலும் சின்னதாக ஒரு செயின் போடலாம் என்று கணக்குப்போட்ட பவனத்திற்கு ஒரு சின்ன செயின் வாங்க முடிந்திருந்தது. கல்யாணச் செலவிற்கு பணம் தேவைப்பட மூத்தமகளிடம் ஏதாவது கேட்டுப் பார்க்கலாம் என்று தயங்கித் தயங்கி வந்தவர் கேட்பதற்கு முதலே மாணிக்கராசன் முந்திக் கொண்டான்.

அவன்தான் இவர் தனது இரண்டாவது மகளுக்குக் கல்யாணம் செய்யப்போவதாக லக்க்ஷ்மியிடம் பேசிக்கொண்டிருந்ததை வீட்டிற்கு உள்ளேயிருந்து கேட்டிருந்தானே.

இவர்கள் வந்திருக்கும் காரணத்தைச் சுலபமாக ஊகித்தவன் இவர் வாயைத் திறப்பதற்கு முன்பே தான் முந்திக் கொண்டான்.

ஒரு பொங்கல் சீர் இல்லை. தீவாளி சீர் இல்லை.

சரி-----விடு இரண்டு வருஷம் கழிச்சுத்தான் மகள் நினைவு வந்திருக்கு.

அட சரசுவும் வந்திருக்குது என்று அப்போதுதான் பார்த்தது போல இவன் நடிக்க பவனம் மட்டுமல்ல சரசுவும் கையைப் பிசைந்து கொண்டு நிற்கத்தான் முடிந்திருந்தது.

பின்னே இவன் குத்தகைக்கு விட்டிருக்கும் அந்த சிறிய அளவிலான வயல் வேலுமணியின் பரம்பரைச் சொத்து. அவன் இறந்தபின் யாரும் அதில் வேளாண்மை செய்யாது தரிசாகக் கிடந்த நிலம். வேலுமணியின் சொத்துக்களைப்பற்றிய விபரங்களை அறிந்தவன் அந்த நிலத்தை குத்தகைக்கு கொடுத்து இந்த இரண்டு வருடங்களிலும் குத்தகைப் பணத்தை வாங்கிக் கொண்டிருக்க அதுக்கு வேட்டு வைக்கிற மாதிரி கல்யாணம் கருமாதி என்று வந்து நின்றால் தூக்கிக் கொடுத்திடுவாங்களா என்ன?

உன்னையும் உம்மவளையும் பின்னங்கால் பிடரியிலை படுறமாதிரி ஓடவைக்கிறேன் கிழவி என்று நினைத்தவன் அதற்கேற்ற வகையில் பேசத் தொடங்கியிருந்தான்.

மகளைத் தேடி வந்தவருக்கு ஒருவாய் தண்ணீர் கொடுக்காது அனுப்ப இவன் திட்டம் போட லக்க்ஷ்மி மனம் கேட்காமல் அம்மா உள்ளே வா ---சமைக்கிறேன் சாப்பிடலாம் நாளைக்கு போகலாம் என்று சொல்ல ஆத்திரம் கொண்டவன்

அட நீ வேற--- அந்த ஊரிலை பிள்ளைகளை தனிய விட்டிட்டு வந்திருக்குது மனுசி நீ இங்கினைக்க மறிச்சா அதுகளுக்கு யார் துணை? உன்ரை அம்மா என்ன விவரம் இல்லாத பொம்பளயா மருமகன் வீட்டில தங்க----

என்னது மருமகன் வீடா? இந்த வீடு பவனத்தின் வீடு. சின்னதாக இருந்தாலும் ஓட்டு வீடு. லக்க்ஷ்மியின் தந்தை கட்டியது. ஊரில் பிழைப்பதற்கு வழி இல்லையென்று ஊரைவிட்டு வெளியூருக்குப் பிழைப்பைத் தேடிப் போனதால் இது இவனது வீடாகிவிடுமா? கறையான் புற்றுக்குள் பாம்பு குடியேறி கறையான்களை புற்றிலிருந்து வெளியேற்றிவிட்ட கதைபோல தான் நடந்து முடிந்திருந்தது. பத்திரம் எல்லாம் பவனத்தின் கணவன் தம்பிஐயாவினது பெயரில் தான் இன்னமும் இருக்கின்றது இதற்கு மேல் எதுவும் பேசமுடியாத பவனம் இல்ல லக்க்ஷ்மி நாங்க ராத்திரிக்கு போயிடவேணும் என்று சொல்லத்தான் முடிந்திருந்தது.

சரிம்மா கைகாலை அலம்பிட்டு வா சாம்பார் வைச்சா சமயல் ஆயிடும் என்று இவள் சொல்ல வாசலைப் பார்த்த பவனத்தின் கண்களில் முற்றத்தில் குவித்திருந்த வைக்கோல்போரின் மறைவில் நின்றபடி இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த பூரணி தென்பட்டாள்.

பிள்ளை வயசுக்கு வந்திட்டாள் என்று கேள்விப்பட்ட பவனம் அவளுக்கு உண்ணக்கொடுக்க என சில தின்பண்டங்களை வாங்கியிருந்தாள். மாணிக்கராசனின் பேச்சைக் கேட்டபின் அதை பூரணியின் கையில் கொடுக்க தயக்கமாக இருந்தது. தவிரவும் ஊரில் பலரும் மாணிக்கராசன் பூரணிக்குச் செய்யும் கொடுமைகளைப் பற்றி பலதும் சொல்லியிருக்க இவள் மறைந்து நின்றது அதை உறுதிப்படுத்த அவளது தோற்றம் கண்களிலிருந்த ஏக்கம் பவனத்தின் கண்களைக் கலங்க வைத்திருந்தது.

வாடாம்மா என்று வாயால் அழைக்கப் பயந்தவர் தலையை ஆட்டி அவளைத் தன்னருகே அழைக்க மெல்ல மெல்ல வந்தவள் அருகில் இருப்பவர்களுக்கே கேட்கா வண்ணம் “அம்மா” என்று அழைத்தாள்.

அவளைக் கட்டிக்கொண்ட பவனம் தன்னை மீறி அழுதுவிட---

எந்த ஆம்பள வீட்டிலை மூத்ததாரத்தின் பிள்ளையை வைச்சிருக்க விடுவான்? எதுக்கு மாமி கண்மாயில இருக்கிற தண்ணியை எல்லாம் கண்ணிலை விடுறாய் நீ?

அவளுக்கு என்ன குறை? சித்தப்பன்ரை உழைப்பில சிறப்பா தான் இருக்கிறா என்று சொல்ல இவனது பேச்சுக்கள் அத்தனையும் விசம் தோய்ந்த அம்புகள் மட்டுமல்ல இவன் வாயிலிருந்து பொய்யைத் தவிர வேறெதுவும் வராது என்பதையும் புரிந்து கொண்டவர் இவனைக் கட்டிவைச்சு இரண்டு பெண்களது வாழ்க்கையும் தனது கணவர் நரகமாக ஆக்கிவிட்டார் என்பதனைப் புரிந்து கொண்டார்.

கவலை, கோபம் போன்ற உணர்வுகள் இருக்கும் போது முடிவுகளை எடுக்கக்கூடாது என்பது எவ்வளவு உண்மை.

தம்பிஐயா பிழையான தீர்மானம்தான் எடுத்துவிட்டார் என்பதை இவன் பேசிய அடுத்த பேச்சுக்கள் நிரூபித்தன.

அம்மா என்று பவனத்துடன் பேசிக்கொண்டிருக்கும் பூரணியை அசூயையுடன் பார்த்திருந்தவன் உனக்கு என்ன மாமி அம்மாவென்று கூப்பிட போற இடமெல்லாம் பிள்ளைகளிருக்கு. நான் தான் ஒரு மலடியை வைச்சுக்கொண்டு சந்ததிக்கு வழியில்லாதவனா இருக்கிறேன் என்று சொன்னதும் மட்டுமன்றி ஏய் பூரான் ஓடிப்போய் என்ரை வீட்டிலை முருங்கைக்காய் நிறைய காச்சிருக்கு பறிச்சு வா என்று சொல்ல---

விசயம் புரியாத பவனம் ஏன் தம்பி வீடு வாங்கியிருக்கிறியளா? என்று கேட்க அந்த கேள்வியில் உசுப்பி விடப்பட்டவன் விஸ்வரூபம் எடுக்க தெய்வமே என்ன சோதனையிது இப்படியுமா மனிதர்கள் இருப்பர் என்று நொந்து போனார் பவனம்.

அவனோ மூத்தான் பிள்ளையை நான் வளர்க்க வேணும் வீடு உங்களுக்கா? என்று கேட்டு அதிர்ச்சி வைத்தியம் மாமியாருக்கு மட்டுமல்ல மனைவிக்கும் சேர்த்தே பார்த்தான்.

அடபாவி மூத்தான் பிள்ளையை நீ வளர்க்கிறியா? நீ அவளை வளர்க்கிற லட்சணத்தைதான் நான் வந்த நேரம் தொடக்கம் ஊர் முழுவதும் சொல்கிறதே.

அவளின்ரை உழைப்பை அப்படியே உறிஞ்சிறது மட்டும் அல்லாது அவளின்ரை தகப்பனின் வீட்டை கண்முன்னே ஆட்டய போட திட்டம் போடும் இவனை கடவுள்கூட கேட்க மாட்டுதாமே என்று மனம் நோகத்தான் முடிந்திருந்தது.

பூரணியைத் தன்னுடன் வைத்திருக்க மாணிக்கராசன் சம்மதித்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று வேலுமணியின் வீடு மற்றும் வயல் மற்றையது அவரது பெயரில் இருக்கும் பிராவிடன்ட் ஃபண்ட் தொகை.

அந்தபணம் கைக்கு வரும்போது பூரா கைக்குழந்தையாக இருக்க மொத்த தொகையில் ஒரு பகுதி பூரணியின் பெயரில் போடப்பட்டிருக்க அவள் மேஜர் ஆகாமல் அதனை எடுக்க முடியாததால் அதுவரை அவளை பவனத்துடன் அனுப்ப இவன் விரும்பவில்லை.

மாணிக்கராசனின் பேராசையின் அளவைப் பார்த்தவர் கடவுளே இந்த பிள்ளைக்கு ஒரு வழிகாட்டப்பா என்று வேண்டத்தான் முடிந்திருந்தது.

அந்த வேகாத வெய்யிலில் தனது தந்தையின் வீட்டிற்குச் சென்று முருங்கைக்காய் பறித்து வந்த பூரணி மீண்டும் வந்து பவனத்திற்கும் சரசுவிற்கும் நடுவில் இருந்து கொண்டு சரசுவின் கையைப் பிடித்து சின்னக்கா நானும் உங்ககூட வரவா? என்று கேட்டுவிட

ஏய் விசப்பூச்சி! உன்ரை புத்தியைக் காட்டுறியா? இப்போ எதுக்கு இவங்ககூட கிளம்புறாய்? என்று கத்தத்தொடங்க பயந்து திரு திரு வென முழித்தபடி நின்றிருந்தவள் தலையில் ணங் என்ற சத்தத்துடன் கொட்டு விழுந்திருந்தது.

ஐயோ என்ன தம்பியிது? அது பிறந்தநாளில் இருந்தே என்ரை மடியிலைதான் வளர்ந்தது. அந்த பாசத்திலை விபரம் தெரியாமல் கேட்குது. அதுக்கு இப்படியா செய்வீங்க? என்று தன்னையறியாது கேட்டுவிட

ஏய் கிழவி! என்ன குடும்பத்துக்குள்ள சண்டை மூட்ட வந்திருக்கிறியா? இப்படிப் பேசுற நீ இந்த வீட்டிலை ஒரு நிமிசம்கூட நிற்கக்கூடாது என்று கத்தியபடி பவனத்தையும் சரசுவையும் வீட்டை விட்டுத் துரத்திவிட்டான்.

வேலுமணியின் வீட்டில் இருக்காது அவன் லக்க்ஷ்மியின் தாய் வீட்டில் வந்து இருப்பதற்குக் காரணமே இந்த வீட்டை அமுக்குவதற்குத் தான்.

வேலுமணியின் வீட்டில் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அது எப்படியும் இந்த விசப்பூச்சிக்குத்தான் வரும். அவள் மேஜர் ஆனதும் ஒரு அடியிலேயே அவனால் அதனைத் தனது பெயருக்கு மாற்றுவிக்க முடியும். ஆனால் தம்பிஐயாவினது வீடு எல்லா பெண்மக்களுக்கும் சொந்தம். தான் அந்த வீட்டில் இருந்தால் அதனை அப்படியே அமுக்கலாம் இப்படியெல்லாம் யோசித்து யோசித்து அவன் செயற்பட திடீரென வந்து நின்ற பவனமும் அவருடன் போக ஆசைப்பட்ட பூரணியும் அவனது திட்டங்களுக்கு தடங்கல் ஏற்படுத்த அதைப் பார்த்துக் கொண்டு இருக்க மாணிக்கராசன் என்ன மடையனா?

தாய்க்கு தன்ரை வீட்டில் ஒருவாய் தண்ணீர்கூட கொடுக்காது அவன் துரத்திவிட்டது தாங்கொணா வேதனையை தர நீயெல்லாம் ஒரு மனுஷனா? இது அவங்க வீடு. அவங்க வீட்டில இருந்தே அவங்களை விரட்டுறியா நீ?

நீ நினைக்கிறதெல்லாம் இப்போ நடக்கலாம் ஆனா எல்லா நேரமும் நடக்காது. இதுக்கு நியாயம் கேட்க ஒருத்தன் வருவான். அப்போ நீ படப்போற துன்பத்தை இந்த ஊர் உலகம் எல்லாமே பார்க்கும் என்று சாபம்விடத்தான் அவளால் முடிந்திருந்தது. இந்த சாபம் பலிக்குமா?

பெற்றவர்கள் பட்டகடன் பிள்ளைகளை மட்டுமல்ல பேரப்பிள்ளைகளையும் சேரும் என்பது போல லக்க்ஷ்மியின் சாபம் பலித்துத்தான் இருந்தது.


இன்று

இவளது விரிவுரைகள் மாலை 4 மணிக்கு முடிவடைய பஸ்க்கு வந்து நின்றவள் முன்னே வந்தாள் இவளது அறைத்தோழி சுதாயினி.

ஹேய் என்ன மேடம் ஹாஸ்டலில் ஸ்டே பண்ணவில்லையா? கிளம்பிவிட்டியா? என்க பொதுவாக தலையசைத்தவளினது முகம் இருண்டு கிடந்ததைப் பார்த்த சுதாயினி ஏதும் பிரச்சினையா லயா என்க ---

ஒரு தப்பு பண்ணிட்டேன்டி அதுதான் பயமாக ரொம்ப உறுத்தலாக இருக்கு என்று சொல்ல

என்னடி செய்தாய்? என்றவளுக்கு தான் செய்தவைகளைக் கூற---

முட்டாளாடி நீ? கோபம் வந்தா இப்படி எல்லாம் செய்வியா? உன்ரை கல்யாணத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதும் நானே நினைச்சேன் இந்த கல்யாணம் உனக்குச் சரிவராது. நீ எதுக்கு சம்மதிச்சியோ என்று?

அப்பா உன்னிலை அவ்வளவு பாசம் வைச்சிருந்தார் தானே. உனக்கு இந்த கல்யாணத்திலை விருப்பம் இல்லை என்கிறதை நீ சொல்லியிருக்கலாம் தானே-------

இல்லை சுதா---அப்பாவின்ரை ஹெல்த் கண்டிசன் என்னைப் பேசவிடவில்லையடி. அதுவும் ரொம்பவே கெஞ்சிக் கேட்டார்டி. இது தான் தன்ரை கடைசி ஆசையென்று------மறுக்க முடியாம போச்சுதடி---

சரிடி பிடிச்சுதோ--- பிடிக்கலையோ----இது நீ ஏற்றுக்கொண்ட வாழ்க்கை----

நீ சொல்லுறபடி பார்த்தாலும் கோபத்திலை தான் உன்ரை தாத்தா சொத்து எதுவும் கொடுக்காமல் விட்டு விட்டார் போல. என்ன இருந்தாலும் நியாயமா பார்த்தா இது அவனுக்கும் உரிமையான சொத்துத்தானே------

ஏய் என்ன தெரிஞ்சு பேசுறாய் நீ? தாத்தா அப்பாவுக்குக் கொடுத்ததாக இருக்கலாம் ஆனால் இதை இவ்வளவிற்கு வளர்த்தது என்ரை அப்பா-----உனக்கு என்ன தெரியும்?

சட்டம் நியாயம் எல்லாத்தையும் விடு----------

இப்போ நீ அவன்கூட தினமும் சண்டைபோட்டு எதை சாதிக்கப்போறாய்?

பதில் சொல்ல முடியாத நிலையில் லயா நிற்க அவளுக்கான பஸ் வந்து தரிப்பிடத்தில் நிற்க ---

நாளை பார்க்கலாம்டி என்றபடி பஸ்ஸில் ஏறி சிந்தனையுடன் அமர்ந்திருந்தாள் அவள்.

இங்கோ போலீஸ் முதற்கட்ட விசாரணையை முடித்துச் சென்றிருக்க விஷ்ணு தவம் அண்ணாவின் மெஸ்க்கு வந்தான். நேரம் மாலை 4 மணியாகியிருந்தது. மதிய உணவை உண்ண அப்போது தான் நேரம் கிடைத்திருந்தது.உணவை முடித்தவன் மீண்டும் ஹாட்வெயர் ஸ்ரோஸ்க்கு வர வேலை மலை போல குவிந்திருக்க தன்னை அதில் மூழ்கடித்துக் கொண்டான்.

தனது மூன்று மணிநேர பயணத்தை முடித்துக் கொண்டு லயா அறிவியல் நகர் வந்து சேர இரவு ஏழு மணிக்கு மேல் ஆகியிருந்தது. வீட்டிற்கு வந்தவளுக்கு பூட்டப்படாமலிருந்த வீடும் வாசலில் இருந்த இவர்களது வீட்டு வேலையாள் முத்துவும் ஏதோ விபரீதம் என்று எச்சரிக்க முத்து சொன்ன செய்தியோ-----

கோபத்தில் என்ன முட்டாள்தனம் செய்திட்டேன் என்று தன்னைத் தானே நொந்து கொள்ள வைக்க பாமதிக்கு அழைப்பை விடுத்தாள்.

இவள் கேள்விகளை அடுக்க எதற்கும் பதில் சொல்லாதவர் அந்த மனுஷன் உன்னை நம்பினாரே—நீ செய்தது எல்லாம் போதும்------நீ செய்ததைதான் உன்ரை பெரியக்காவிற்கு சொல்லியிருக்கிறாயே------இன்னும் என்ன?? என்று போனை கட் பண்ண விஷ்ணுவை நேருக்கு நேர் சந்திக்கும் தைரியம் அவளைவிட்டுப் போயிருந்தது.

காலையில் இவளது யூனிக்குச் செல்லும் பஸ்ஸிற்காக வீட்டிலிருந்து வந்தவள் அருகில் இருந்த பஸ் ஸ்ராண்டில் பஸ்க்குக் காத்திருக்கும் போது தனது அக்காவை அழைத்து தான் செய்துவிட்டுப் போகும் புத்திசாலித்தனமான வேலையைப் பற்றிச் சொல்லி இவளுடன் பஸ்ஸிற்காகக் காத்திருந்த ஒரு பயணியையும் அவனது சகாக்களையும் பல லட்சங்களுக்கு அதிபதியாக்கி இருந்தாள்.

இவளை அவன் விசாரணை வட்டத்திற்குள் கொண்டு வராது தவிர்த்ததற்கான காரணங்களை புரிந்து கொள்ளாது வழமையைப் போல திமிராக அதற்கான காரணங்களைக் கற்பித்தும் கொண்டாள்.

நீண்ட நேரம் கழித்து வீட்டிற்கு வந்தவனோ எதுவும் பேசாது ஹாலில் இருந்த தனது கயிற்றுக் கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான்.

லயாவிற்கு அவளது செய்கையின் வீரியம் இப்போது பன்மடங்காகப் பெரிதாகத் தெரிந்தது ஒரு புறம் என்றால் ஏதாவது கேட்பான் என்று இவள் நினைத்திருக்க அவன் இவளிடத்தில் ஏதும் கேட்டானில்லை.

அவன் கடைப்பிடித்த அந்த மௌனம் புயலுக்கு முன்னுள்ள அமைதியை நினைவுபடுத்த தனது குத்தல் பேச்சுகளை கைவிட்டு இருந்தவளோ வீட்டில் நடந்த திருட்டைப் பற்றி எதையும் அவனிடம் கேட்டாளில்லை. இதற்கு பயம் ஒரு காரணம் என்றால் அலட்சியம் மறுகாரணமாக இருந்தது.

கராஜ்ஜின் திருத்த வேலைகள் முடிவுக்கு வந்தபோதும் தொழிலின் பெருமளவு பகுதி அவனை விட்டுப் போயிருந்தது. குறுகிய காலத்தில் அதிகளவான முதலீட்டை அதில் போட அவனால் முடியவில்லை.

இவனது பொறுப்பற்ற செயல் என்று நினைத்த குருவப்பாவும் இவனுக்குச் சாதகமாக ஒரு துரும்பைத் தன்னிலும் நகர்த்தவில்லை. வங்கியில் கடன் எடுக்க இவன் க்லாற்றலாக மாமா தந்த சொத்தைத்தான் கொடுக்க வேண்டும். கைக்கு வந்து சில மாதங்களில் வங்கியில் பொறுப்பாக கொடுத்து கடன் பெறுவதை மனம் ஏற்க மறுத்தது.

மாமாவினது தொழில்களிலிருந்து மேலும் மேலும் பணத்தை எடுப்பது இவனுக்கு உறுத்தலாக இருக்க சேவீஸ் ஸ்ரேசனின் கட்டுமாணப்பணிகளை நிறுத்தியவன் கராஜ்ஜில் நாளாந்தமாக நடக்கும் வாகன திருத்த வேலைகளுக்கு மட்டும் அனுமதித்ததுடன் இன்ஜின் பொருத்தும் வேலைகள் யாவற்றையும் கைவிட்டு அதனை வேறு நபர்களிடம் ஒப்படைத்தான்.

இவையாவும் அவனுக்கு உயிர்வலியாக இருக்க தனக்குப் பிடித்த தொழிலில் ஏற்பட்ட சறுக்கல் தூங்கவிடாது அவனைக் கொன்று கொண்டிருந்தது.

வெளிப்பார்வைக்கு அவன் சாதாரணமாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும் உள்மனம் கூட்டில் அடைக்கப்பட்ட பசிகொண்ட வேங்கைபோல சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தது.

அவன் காலுன்ற முன்னரே கனவாகிப் போன சொந்த தொழில் ஒருபுறம் என்றால் இவளைக் காணும் ஒவ்வொரு நொடியும் ஏதாவது செய்யடா---- செய்யடா---- என்று மனம் கட்டளையிட்டுக் கொண்டிருக்க தனது பலத்தை அவளது பெண்மையைச் சூறையாடிக் காட்ட விரும்பாதவன் சரியான காலத்திற்காக காத்திருக்கத் தொடங்கினான்.

இவனிடம் திருடியவர்கள் தொழில் நுட்பத்தில் வல்லவர்களாக இருக்க வெத்து வேட்டென்று இவன் நினைத்த பாஸ்வேர்ட்டை அவர்கள் ட்றை பண்ணவில்லை என்பதுடன் இரண்டு மாதங்கள் சென்ற பின்னரும் இவனது மொபைல் ஆன் செய்யப்படாது இருந்ததால் சரியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

அதுவும் இவனது வீட்டின் எல்லைக்கு அப்பால் பின்புறம் முழுவதும் தோட்டங்களாகவும் மரஞ்செடி கொடிகளுடன் இருக்க நகர்ப்புறங்களில் சூப்பர் மார்க்கட் வைத்திருப்பவர்களின் ஏஜென்டுகள் வழமையில் வாகனங்களில் வந்து உட்புறமுள்ள குச்சு ஒழுங்கைகளில் நின்று காய்கறிகளை ஏற்றிச் செல்வதால் வந்து நின்ற டாட்டா ரக வாகனத்தைப்பற்றி யாருமே அக்கறை காட்டியிருக்கவில்லை.

இவளது நடவடிக்கைகளால் வெறுத்துப் போயிருந்தவன் மேலும் மேலும் விலகிப் போக விதி வேறுவிதமாக இருவரையும் இணைத்து வைக்க தனது விளையாட்டினை ஆரம்பித்திருந்தது.

அதிலும் தனது படிப்பிற்கான செலவுகளை அவனிடம் பணத்தினைப் பெற்றே செய்யவேண்டிய நிர்ப்பந்தம் லயாவிற்கு ஏற்பட்டிருந்தது.

இவனிடம் பணம் கேட்க வேண்டுமே என்று எண்ணியவுடன் அவளையறியாத தயக்கம் அவளைச் சூழ்ந்து கொண்டது. விஷ்ணு அவளை வீட்டில் இருக்கும் ஒரு நபர் என்பதற்கு மேல் கருத்தில் எடுப்பதில்லை என்பது அவளுக்குத் தெரியும்.

காலையில் எழுபவன் வழமைபோல தனது தோட்ட வேலைகள், வீடு பெருக்குதல் போன்ற எல்லாவற்றையும் தானே செய்தான். இவளிடமிருந்து எதனையும் எதிர்பார்ப்பதில்லை. லயா செய்யமாட்டாள் என்பதைவிட அப்படியொரு சந்தர்ப்பம் நேர அவன் அனுமதித்ததில்லை.

சரியாக காலை 5.45 க்கு அவன் தவம் அண்ணாவின் மெஸ்க்கு டீ குடிப்பதற்கு வந்துவிடுவான். இவளுக்கு எதுவும் வாங்கி வருவதில்லை. இவளுக்கான டீ முதல் உணவு வரை பாமதியே அனுப்பிக் கொண்டிருந்தார். மீண்டும் 6 மணிக்கு திரும்பி வருபவன் தனது புதிய ஆப்பிள் லாப்டாப்புடன் இருந்து கொள்வான். வாழ்க்கை அவனுக்கு நிதம் நிதம் புதிய அனுபவங்களைத் தந்து கொண்டிருந்தது.

லயா தயங்கித் தயங்கி லாப்டாப்பில் வேலை செய்து கொண்டிருப்பவனுக்கு அருகில் வர, அவள் வந்ததை உணர்ந்தும் கவனியாதது போல அவன் இருக்க, தொண்டையைச் செருமி தான் நிற்பதை இவள் உணர்த்தியும் இவள் இருப்பதை அவன் கருத்தில் எடுக்கவில்லை.

எனக்கு ஹாஸ்டல் பீஸ் கட்ட பணம் வேணும் என்று மொட்டையாக அங்கிருந்த சுவருக்குச் சொல்ல அவன் திரும்பியும் பார்த்தானில்லை.

மறுபடியும் இவள் எந்தவித விழிப்பும் இல்லாமல் எனக்கு ஹாஸ்டல் பீஸ் கட்ட பணம் வேணும் என்று சொல்ல அவனோ எந்தப் பதிலும் சொன்னானில்லை.

என்ரை அப்பாவின் சொத்தை வைத்துக்கொண்டு நீ எனக்கு ஆட்டம் காமிக்கிறியா? என்று கேட்கும் அளவிற்கு அவனது பாராமுகத்தால் ஆத்திரம் நிரம்பியிருந்தாலும் அவள் எதையும் கேட்டாளில்லை.

இந்த மாதிரியான பேச்சுகளுக்கு அவன் பதில் தரமாட்டான் என்பதைவிட அவனது காதில் விழுந்த மாதிரியே காட்டிக் கொள்மாட்டான் என்பதை அனுபவத்தில் அறிந்ததால் தனது சக்தியையும் நேரத்தையும் விரையம் செய்வதை அவள் நிறுத்தி பல நாட்கள் ஆகியிருந்தன.

விஷ்ணு எனக்கு பணம் வேணும்? என்று கேட்கலாம் என்று அவள் நினைத்தாலும் தன்னைவிட ஐந்து வயது பெரியவனை எப்படிப் பெயர் சொல்வது?? இவளுள் பலவாறான சிந்தனை ஓடிக்கொண்டிருக்க அவன் லாப்டாப்பை நிறுத்திவிட்டு கடைக்குப் போவதற்காக டிரஸ்பண்ண போக---

அவளது பொறுமை காற்றில் பறக்க ஓடிவந்து அவனது வழியை மறித்து நின்றவள் டேய்! விஷ்ணு உன்னோடை தான்டா பேசுறேன்---பெரிய இவனா நீ?? எனக்கு பணம் வேணும் குடு என்று சொல்ல-----

இவள் பேச்சில் ஒரு கணம் தயங்கி நின்றவன் எதுவும் பேசாது அறையினுள் சென்று கதவையடைக்க---

அவனது செயலைத் தாங்க முடியாதவள் அங்கிருந்த கதிரையில் அமர்ந்தபடி மௌனமாக கண்ணீர் உகுத்தாள். இவனிட்டையெல்லாம் பணம் கேட்கும் நிலை எனக்கு வந்திருக்கே என்ற ஆற்றாமை கண்ணீரைப் பெருக வைத்துக் கொண்டிருந்தது.

அறையினுள் சென்றவனை இனம் புரியாத மெல்லிய உணர்வொன்று ஆட்கொண்டிருக்க அதன் தாக்கத்தில் இத்தனை நாட்களாக இறுகியிருந்த முகம் மெல்லிய புன்னகையைத் தத்தெடுக்க

ஷப்பா--- ராட்சசிக்கு தலை முழுக்கவே கொழுப்புத்தான் ஆனால் இவளின்ரை வாய் இருக்கே இந்த அறிவியல் நகரை வித்து வாங்கிற அளவிற்கு இருக்கு-----

அன்றைக்கும் டேய் என்றுதான் சொன்னா இன்றைக்கும் அதேதான் சொல்றா—என்ரை பெயரை வேறை சொல்றா----

என்ரை அப்பன் வீட்டுச் சொத்தை ஆட்டையைப் போட்ட கடன்காரா என்று வழமையைப் போல சொல்லாமல் அராத்தாக அவள் பணம் கேட்டது அவனது மனதின் மூலையில் எங்கே ஓரிடத்தில் இருந்த மென்மைக்கான அலையினைத் தொட்டுச் செல்ல காற்சட்டைப் பாக்கெட்டிலிருந்த வலட்டை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவன் அழுது கொண்டிருக்கும் அவளது கையைப் பற்றி அதனை வைத்துவிட்டு எதுவும் பேசாது வெளியில் சென்றுவிட

போகும் அவனையும் அவன் கையில் வைத்துவிட்டுப் போன வலட்டையும் மாறி மாறிப் பார்த்தவள்----அவன் பின்னே ஓடிச் சென்று எனக்கு வலட் எதுவும் வேணாம் ஆறாயிரம் ரூபா வேணும்-----என்று சொல்ல நெற்றியைச் சுருக்கி யோசித்தபடி அவன் பார்த்த பார்வை சொன்னது "போடி லூசு நீ கேட்பதைவிட அதிகம் அதனுள் இருக்கு" என்று.

அந்த பார்வையைச் சரியாகப் படித்தவள் இல்லை ---இல்லை --- நீயே எடுத்துக் குடு---என்று வலட்டை மீண்டும் அவனிடம் நீட்ட அவனோ பார்த்துக் கொண்டு நின்றானே தவிர அதனைத் திரும்பவும் அவளின் கையிலிருந்து எடுக்கவில்லை.

அவனது தொடர் மௌனத்தில் தனக்கு பஸ்ஸிற்கு நேரம் ஆவதைக்கூட மறந்து நின்றவள் அவன் வாங்கப்போவதில்லை என்பதை உணர்ந்த நொடி அவனது கையைப் பிடித்து வலட்டை வைத்து ---நீயே கொடு என்க----

சிறுகுழந்தைபோல அடம்பித்துக் கொண்டிருக்கும் அவளை என்ன செய்வது உன்னை என்பது போல பார்த்து வைத்தவன் அதனுள் இருந்து அவள் கேட்ட தொகையை எடுத்துக் கொடுக்க—

உனக்கு தாங்ஸ் எல்லாம் சொல்ல மாட்டேன் போடா---என்று சொன்னவள்------பணத்தை எடுத்துக் கொண்டு உள்ளே ஓடிப்போக------சந்தோஷம், துக்கம், கோபம் எல்லாவற்றையும் உடனுக்குடன் பிரதிபலித்துக் காட்டும் அவள் முகம் அவன் மனதில் மெல்ல நேர்மறையான முதற் பதிவைப் போட்டுக் கொண்டது.

யாருக்குத் தேவை உன்ரை தாங்ஸ்சும் மண்ணாங்கட்டியும் போடி இவளே---என்று நினைத்தபடி பைக்கை நோக்கிப் போனான் அதற்கு பெற்றோல் போடவேண்டியிருந்ததால்.

அவன் கையைப் பற்றியதும் ஏற்பட்ட அதிர்வு அவளுக்குப் பிடித்திருந்ததா? என்பதைக்கூட உணரவிடாது அவன் வலட்டை தந்தது இதத்தை தந்திருந்தது அவளுக்கு.

கணக்கு எதுவும் கேட்கவில்லை-----முகத்தைச் சுழிக்கவில்லை—எதுவும் பேசவும் இல்லையே------

ஓஹ் நீ என்கூட பேச மாட்டியா? நான் கேட்ட கேள்விகள் எதற்கும் பதில் சொல்ல பிடிக்கவில்லையா?

ஏன் எதுவுமே பேசமாட்டேன் என்கிறான்??

திருட்டுப் போனபோதும்கூட பேசவில்லை---- நான் செய்த பொறுப்பற்ற வேலை அவனுக்குத் தெரிந்தும் இன்றுவரை அதைப்பற்றி ஏன் கேட்கமல், சண்டைபோடாமல் இருக்கின்றான்??

முதல் தடவையாக இவன் என்னைபற்றி என்னதான் நினைக்கிறான் என்று அறிய வேண்டும் என்ற சிந்தனை தோன்ற அவன் பற்றிய கரத்தையும் அவன் தந்த பணத்தையும் பார்த்தவள் அவனது கரத்தின் பிடியில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை மெல்ல உணர்ந்து கொண்டாள்.

அவளுக்குத் தெரியும் திருமணம் நடந்த அன்று அவன்தானே அவளது கையைப் பற்றியபடி கோயிலைச் சுற்றி வந்தான் அப்போது மிகவும் கரடு முரடாக இருந்ததே-----இப்போ—அவ்வளவு மோசமானதாக இல்லையே----

கை மட்டுமல்ல தோற்றம்கூட மாறித்தான் இருக்கு. முன்பு அணிந்தது போல ஜீன்சோ கைலியோ அணியாமல் வேட்டி, சட்டை அணிய தொடங்கியிருந்தான். அதுவும் நல்ல வெள்ளை வேட்டி கறுப்பு கரை போட்டது. அவன் அணியும் சட்டைகூட தனி நிறங்களில் இருக்க ஒரு வித்தியாசமான லுக்கைத்தான் அவை அவனுக்குத் தந்திருந்தன. எதுக்கு இந்த மாற்றம். ஆனால் சும்மா சொல்லக்கூடாது வேட்டி, சட்டை இவனுக்கு அழகாகத்தான் இருக்கு.

சீ---- என்ன இது? போயும் போயும் இவனை-------என்று தலையைக் குலுக்கி அவனது நினைவிலிருந்து விடுபட முனைந்தவள் அவனது அணுகுமுறைகளால் அவனை நேசிக்கத் தொடங்கியதை புரிந்து கொள்ளாமல் இருந்தாள்.

(தொடரும்)





 
Last edited:
Top