அத்தியாயம் - 11
சங்கீதாவை போகவிடாமல் தடுத்து நிறுத்திய பெருமை மங்ளத்தையே
சாரும். படகு ஒன்று சமுத்திரத்தை கடந்து கரையேறிய மாதிரி இருந்தது
ஆண்டாளுக்கு. கப்பல்களால் மட்டுமே முடிந்த சாதனையை ஒரு சிறு படகு
நிகழ்த்திக் காட்டிவிட்டது. மங்களத்திடம் வலிமை இருக்கிறது என்று புரிந்துகொண்ட நேரம் அது. அன்பு தான் ஒருத்தருக்கு ஆற்றலைத் தருகிறது.
“சங்கீதா...எங்கே நீ எங்களை விட்டுப் போய்விடுவியோ என்று பயந்துவிட்டேன். அவன் பேசிய பேச்சுக்கு நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேனம்மா. என்னை நம்பு...எல்லா பிரச்சனையும் தெளிவாகும் வரை நீ எங்கும் போகாமல் இருப்பது நல்லது. உன் அம்மாவை நீ அம்மாவாகப் பார்க்கவேண்டாம். ஒரு நல்ல மனுஷியாப் பாரு. இபோதைக்கு அது போதும். இருபத்திரண்டு வருஷமா ஒரு பொம்மை வாழ்க்கை வாழ்ந்திட்டிருந்தவ உன்னைப் பார்த்த பிறகு தான் தன் நிலை அடஞ்சிருக்கா. சிரிக்கிறா, கனிவா உன்னைப் பார்கிறா...ரசிச்சு சாப்பிடறா. உள்ளுனர்வுன்னு சொல்வாங்க...அது அவளுக்கு உணர்த்தியிருக்கு போல....நீதான் அவள் மகள்ன்னு....அது தான் அவளிடம் இவ்வளவு பெரிய மாற்றம். கூடிய சீக்கிரம் பேசிடுவான்னு நினைக்கிறேன்...அப்ப எல்லாம் தெளிவாயிடும். அவ கண்டிப்பா குணமாயிடுவா அதுவரை கொஞ்சம் பொறுமை காட்டும்மா.” ஆண்டாள் கேட்டுக் கொண்டாள்.
வடித்து வைத்த சிலை போல் அமர்ந்திருந்த மங்களம் சத்தியம் செய்து கொடு போக மாட்டேன்னு....செய்கை செய்து காண்பித்துவிட்டு கையை சத்தியத்துக்காக நீட்டினாள். சங்கீதா தன் கையை அந்தத் தாயின் கைமேல்
வைத்து “சத்தியம் இனி நான்..உங்களை விட்டுப் போகமாட்டேன்..” என்றாள்.
முதியவள் கண்ணில் ஆனந்தக் கண்ணீர். இளையவள் அவளைக் கட்டிக் கொண்டாள். இருவருக்குள்ளும் ஒரு அன்னியோன்யம் முளைத்திருந்தது.
“சங்கீதா...இவங்க தான் உன் அம்மான்னு இப்பவாவது நீ நம்பறியா? என்னையே அவள் இன்னும் அடையாளம் தெரிந்து கொள்ளவில்லை.
ஆனால் உன்னை மகள் என்று அடையாளம் கண்டு கொண்டாள். அவள் பல்லாண்டு ஏங்கிவிட்டாள்....கண் திறந்து பாரம்மா. சந்திரன் முரடன் தான்.
ஆனால் நல்லவன். புரிந்து கொள் தாயி. அவனைப் பார்த்தால் கொலை செய்கிறவன் மாதிரியா தெரிகிறது? அவன் நல்லவன்மா.”
“பெரியம்மா..நீங்க எல்லாம் நினைப்பது போல் நான் வீம்புக்காக எதையும் நம்பாமல் இல்லை. இருபத்திமூணு வருஷமா யாரை என் அம்மா..என் அப்பா
என் தம்பின்னு நினைச்சேனோ...அவங்க எல்லாம் போலி உறவுகள்னு சொன்னா எப்படி பெரியம்மா ஜீரணிகிறது! அவங்க எல்லாம் என் மேல் எவ்வளவு அன்பு வச்சிருந்தாங்க. நானும் அவங்க மேல் உயிரா இருந்தேன்.
உலகத்திலேயே இப்படிபட்ட பெற்றோர்கள் யாருக்கும் கிடைக்காதுன்னு பெருமிதமா வாழ்ந்தேன்....தீடீரென அவங்க என்னை சதி வேலை செய்து
துரத்திட்டாங்கன்னு சொன்னா எப்படி பெரியம்மா நம்பறது?”
“சொர்ணா நல்ல மனசுக்காரி தான் சங்கீதா. அவ செஞ்சுக்கிட்ட கல்யாணம் தான் தப்பாப் போச்சு. அவன் சொர்ணாவை நேசிச்சானான்னு எனக்குத் தெரியாது. ஆனா அவன் உன்னை வெறுத்தான். அதை வெளிக்காட்டாமல்
வில்லத்தனம் பண்ணிட்டு இருந்திருப்பான் போல. சொர்ணா உன்னை விட்டுவிட தயாராக இல்லை. எப்படிப்பட்ட சூழ்நிலையில் அவள் உன்னை
வாங்கினாள்...மூணு மாசத்திலிருந்து உன்னை வளர்த்தாள். அந்த பாசம் போகுமா? நீயும் அவர்கள் மேல் உயிராக இருந்தே. எப்படி உன்னை கழற்றி விடுவது? அதான் வலுக்கட்டாயமாக பிரிச்சிட்டான். உன் அப்பா வெங்கடேசனுக்கு போன் பண்ணி “உன் மகளை நீ வச்சுக்கோ. சொர்ணா விடமாட்டாள். உன் பெண்ணிடமும் என்னால் எடுத்துச் சொல்லி புரியவைக்க முடியாது. அதனாலே உன் மருமகன் சந்திரனை விட்டு எப்படியாவது அவளை கடத்திக் கொண்டாவது போய்விடச் சொல். இனிமே அவ இங்கே இருக்கக் கூடாது....”வெட்டு ஒன்று துண்டு இரண்டாக சொல்லிவிட்டான் அந்த ஆனந்தன்...அதான் உன் அருமை அப்பா. அதன் பிறகுதான் சந்திரன்...” ஆண்டாள் நிறுத்தினாள். அதன் பின் நடந்தது எல்லாம் தான் சங்கீதாவுக்குத் தெரியுமே. உன்னை பெற்ற அப்பாவை நீ எலும்பும் தோலுமாய் வியாதியின் பிடியில் பார்க்கவேண்டிய துர்பாக்கியம்....ஏதோ அவர் சாகும்போதாவது நீ அருகில் இருந்தாயே..’
“என்னை கடத்திக் கொண்டு வந்து....இது தான் உங்க அப்பான்னு சொன்னதும் நான் எவ்வளவு ஷாக் ஆயிட்டேன் தெரியுமா? சந்திரனையே எனக்கு முன்பின் தெரியாது. இதில் அவர் சொல்லவதை நான் எப்படி நம்புவது?”
இதயெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சந்திரன் சங்கீதாவின் அப்பா ஆனந்தன் தன்னை அழைத்துப் பேசிய வார்த்தைகளை நினைவு கூர்ந்தான். இப்படியும் ஒரு மனிதனா என்று கசந்து போனான். ஆனந்தனின் மிடுக்கும் அதிகாரமும் வெறுப்பைத் தந்தது.
அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது மாமா வெங்கடேசன்
சந்திரனுக்கு போன் பண்ணினார். அவர் குரல் நடுங்கியது. அவருக்கு அப்போது வியாதி இல்லை. விஷயம் அவரை வாட்டியது. சொன்னார்.
“சற்று நேரத்தில் சங்கீதாவின் அப்பா ஆனந்தன் அங்கு வருவார்..”
“எதுக்கு மாமா? பெண் கொடுக்க சம்மதித்து விட்டாரா?”
“ஏறக்குறைய அப்படித்தான். அதாவது அவருக்கு சங்கீதா இனி வேண்டாமாம்.
அழைத்துப் போக சொல்லிவிட்டார்...அவரிடம் நேரில் பேசு. சங்கீதா பாவம்.
தீடீரென அப்பாவிடமிருந்து பிரித்து கூட்டி வந்தால், அவள் அதிர்ச்சி அடைவாள். எனவே அந்த எண்ணத்தை விட்டுவிடச் சொல்...சரியா?”
அதற்கு மேல் பேசாமல் மாமா போனை வைத்துவிட சந்திரன் வெலவெலத்து உட்கார்ந்துவிட்டான். அவனும் மாமாவும் இரண்டு வருஷம் முந்தி ஆனந்தனைப் போய் பார்த்து பெண் கேட்டு வாங்கி கட்டிக் கொண்டது அவன் ஞாபகம் வந்தது. ஆனந்தன் பேசிய பேச்சு இன்னமும் காதில் ஒலிக்கிறது. எப்படி அவரால் அப்படி பேசமுடிந்தது? அவன் மனம் பின்னோக்கி சென்றது. ஜாலியாக கிளம்பி காலியாக வந்த அந்த நாட்கள்....
ஒரு பையில் பூவும் பழங்களும் எடுத்துக் கொண்டு சந்திரனும் வெங்கடேசனும் போனார்கள். ஜாதகமும் ரெடியாக இருந்தது. அவர்கள் பொருத்தம் பார்த்துவிட்டார்கள். பத்துக்கு எட்டு பொருத்தம் இருப்பதாக ஜோஸ்யர் சொல்லிவிட்டார். உற்சாகத்துடன் போனானர்கள். ஆனந்தனுக்கு தகவல் சொல்லிவிட்டுத் தான் போனார்கள். ஆனால் அங்கு சொர்ணாவும் இல்லை சங்கீதாவும் இல்லை. ஆனந்தன் மட்டும் மிடுக்காக பெரிய மனுஷ தோரணையில் வந்து வரவேற்றார். முதல் முதலாக ஆனத்தனை பார்க்கிறார்
வெங்கடேசன். சந்திரனை கீழ் கண்ணால் பார்க்கிறார் ஆனந்தன்.
“இது தான் உங்க மருமகனா? பெயர் என்ன சொன்னீங்க?...ஒ..சந்திரன்..”
“ஆமா மிஸ்டர் ஆனந்தன். இது தான் என் மருமகன்...ஜாதகப் பொருத்தம் பார்த்திட்டோம். நல்ல பொருந்தியிருக்கு. நீங்களும் வேணா பார்த்துக்கோங்க.”
இருவர் ஜாதகத்தையும் டீபாயில் எடுத்து வைத்தார் வெங்கடேசன்.
“நல்ல விஷயம் பேச வந்திருக்கீங்க..உங்க மனைவியை அழைத்து வரவில்லையா? இல்ல நீங்க மட்டும் முடிவு பண்ணாப் போதுமா?”
இதற்கு மௌனமாக இருந்தார் வெங்கடேசன். சந்திரனும் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தான். மங்களம் புத்தி சுவாதீனம் இல்லாமல் இருக்கிறாள் என்று சொல்ல இருவருக்கும் விருப்பமில்லை.
“எனக்குத் தெரியும் அந்தம்மா பயித்தியமா இருக்காங்க. அப்படித்தானே?”
அவர் குரலில் குத்தல் இருந்தது. அவர் கூர்ப்பான பார்வை வெட்டுவது போல் இருந்தது. ஏதோ திருடனைப் பார்க்கும் போலிஸ் பார்வை...
“மிஸ்டர் ஆனந்தன்...நான் என் பெண்ணை உங்க சம்சாரத்திடம் கொடுக்கும் போது அவளை எக்காரணத்தைக் கொண்டும் வந்து பார்க்க மாட்டேன். மகளை திருப்பிக் கேட்கமாட்டேன்னு வாக்கு கொடுத்தேன். நான் அது போலவே நடந்துக்கிட்டேன். என் மருமகனுக்குத் தான் என் மகள் என்று என் மகள் பிறக்கும் முன்பே நான் என் தங்கைக்கு வாக்கு கொடுத்துவிட்டேன். அந்த வாக்கை காப்பற்றவேண்டிதான் உங்க கிட்டே வந்து பெண் கேக்றேன்.
என் மனைவி இதெல்லாம் புரிந்துகொள்கிற மன நிலையில் இல்லை. குழந்தை மாதிரி இருக்கிறாள். பைத்தியம் என்றெல்லாம் சொல்ல வேண்டாம்.” வெங்கடேசனின் நிதானமான பேச்சு கேட்டு ஆனந்தன்
சிரித்தார். சொல்லக் கூடாததை வெங்கடேசன் சொல்லிவிட்ட மாதிரி
பார்த்தார். சங்கீதாவின் புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொடுத்தார்.
“உங்க நேர்மையை நான் பாராட்டறேன். அதுக்காக உங்களுக்கு ஒரு சலுகை.
உங்க பெண்ணை நீங்க இதுவரை பார்த்திருக்க மாட்டேங்க தானே? போட்டோவில் பார்த்துக்கோங்க....”
வெங்கடேசன் முதல் முதலாக தன் பெண்ணின் உருவத்தை பார்க்கிறார்.
அவருக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. சமீபத்திய புகைப்படம் தான்.
அழகிய லட்சணமான முகம். கண்கள் இரண்டும் இரு நட்சத்திரங்கள் மாதிரி
ஜொலித்தன. பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது.
“இதை நான் வச்சுக்கவா? என் மனைவியிடம் காட்டவேண்டும்.”
“நோ..” போட்டோவை வாங்கி வைத்துக் கொண்டார் ஆனந்தன்.
“உங்க கிட்டே ஒண்ணு தெளிவா சொல்லிடறேன். உங்க மருமகனுக்கு பெண் கேட்டு நீங்க வந்திருப்பதன் மர்மம் எங்களுக்குப் புரிகிறது. குழந்தையை அன்று கொடுப்பது போல் கொடுத்து இன்று வளர்ந்த பின் சொந்தமாக்கிக் கொள்ள திட்டம் போட்டிருக்கீங்க. சரிதானே.? உங்க வீட்டுக்கு போன பின் அவளை நாங்க பார்க்க விடாம செய்திடுவீங்க...சொர்ணாவும் அப்படித் தான் நினைக்கிறா. அதனாலே எங்க பெண்ணை உங்கள் மருமகனுக்கு நாங்க கொடுக்க தயாரில்லை. நீங்க போலாம்...” ஆனந்தன் அதே மிடுக்குடன் எழுந்து கொண்டார். கையை வாசலுக்கு காட்டினார்.
“சங்கீதா என் முறைப் பெண். எங்கம்மா இறக்கும் போது மாமா தன் தங்கையிடம், சங்கீதாவை உன் மகனுக்கே கட்டிக் கொடுப்பேன்னு வாக்கு கொடுத்தாங்க. நானும் அந்த நினைப்பில் சங்கீதாவை பார்க்காவிட்டாலும் அவள் மேல் ஆசை வச்சிட்டேன். அவளை கண்கலங்காமல் பார்த்துக்குவேன். நீங்க உங்க மகளை எப்ப வேணா வந்து பார்த்துக்கலாம். நாங்க தடை சொல்லமாட்டோம். ப்ளீஸ் எங்களை பிரிச்சிடாதீங்க..” என்று சந்திரன் வினயமாக சொன்னான். நம்பிக்கையுடன் அவரைப் பார்த்தான்.
“சரி கொடுக்கிறேன்..ஒரு கண்டிஷன். நீங்க வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கத் தயாரா? கல்யாணத்துக்கப்புறம் உங்க மாமாவோ உங்க அத்தை மங்களமோ வந்து பார்க்கக் கூடாதுன்னு வாக்கு கொடுங்க....அப்ப
கன்சிடர் பண்றேன். என்ன சொல்றீங்க?.”
“அதெல்லாம் வாக்கு கொடுக்க முடியாது....” என்றான் சந்திரன்.
“டேய்..நீ சும்மா இருடா. சரிங்க மிஸ்டர் ஆனந்தன். நான் வாக்கு கொடுக்கிறேன்...நானோ என் மனைவியோ வந்து பார்க்கமாட்டோம். ஆனா
வீட்டோடு மாப்பிள்ளை என்று மட்டும் கண்டிஷன் போடாதீங்க..’
“நான் சொன்னது சொன்னது தான் அதுக்கு..”
“சம்மதிக்க மாட்டோம். மாமா தெரியாம சொல்றார். உங்க கண்டிஷன் எதுக்கும் ஒத்துக்க முடியாது...” என்று படபடத்தான் சந்திரன்.
“நானும் என் பெண்ணை, யாருக்கு வேணா கட்டிக் கொடுப்பேனே தவிர
உங்கள் மருமகனுக்கு கட்டாயம் கொடுக்க மாட்டேன். வந்த வழியே போங்க.”
என்று உரக்க கோபமாக சொன்னார் ஆனந்தன்.
“என் மகளின் புகைப்படமாவது கொடுங்க..”
“ஸாரி...என் மகளின் புகைப்படம் உங்களுக்கு எதுக்கு? ஏதாவது மிஸ்யூஸ் பண்ணிட்டா? முகநூலில் இரண்டு பேர் போட்டோவையும் போட்டு என் வருங்கால மனைவி என்று போட்டு ப்ளாக் மெயில் பண்ணிட்டா?..ப்ளீஸ் கோ” என்று தெளிவாக சொன்னார் ஆனந்தன்.
கொண்டு போன பூவும் பழங்களும் மஞ்சள் பையிலேயே கிடந்தது.
அழுகிப் போய் ஒரு வாரம் கழித்து தூரப் போட்டார்கள்.
அந்த கருப்பு நாளை மறக்கமுடியாமல் தவிக்கும் போது இப்ப வந்து என்ன புது கலாட்டாவை ஆரம்பிக்கப் போகிறார் இந்த ஆனந்தன்? சந்திரன் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவர் வந்தார். அன்று கண்ட அதே மிடுக்கு. உதட்டில் ஒரு அலட்சிய புன்னகை.
“உக்காருங்க மிஸ்டர் ஆனந்தன்...”
வேண்டாவெறுப்பாக உட்கார்ந்தார். முகம் சுளித்தார்.
“ஏ.சியை ஆன் பண்ணக் கூடாதா?”
“நீங்க சொல்லப் போகும் விஷயம் குளுகுளுப் பானது இல்லை.
அப்புறம் ஏஸி எதுக்கு?”
“ஒரு கம்பெனி நடத்தற திமிர் உனக்கு. மரியாதை தெரியாத காட்டு மிராண்டி. போகட்டும் சுருக்கமா சொல்லிட்டுப் போயிடறேன்.”
“அதைத் தான் நானும் விரும்பறேன் மிஸ்டர் ஆனந்தன்.”
“வெட்டிப் பேச்சு எதுக்கு? எங்களுக்கு சங்கீதா வேண்டாம். உங்களுக்கு குளுகுளுப்பான விஷயம் தானே! கூட்டிக் கொண்டு போங்க..”
“அவ என்ன பொம்மையா? நீங்க பாட்டுக்கு ஹான்ட் ஓவர் பண்றதுக்கு?”
“அன்னைக்கு சங்கீதா வேணும்னு ஓடி வந்தவங்க தானே. இப்ப என்ன? இத பாருங்க எனக்கு இப்ப வேலையில்லை. கல்ப் வேலை எல்லாம் இனி நிரந்தரம் இல்லை. சங்கீதாவை படிக்க வச்சுட்டேன். அவ்வளவு தான் என்னால் முடிந்தது. அவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க என்னால் பணம் செலவழிக்க முடியாது. என் பையனை படிக்க வைக்கவேண்டும். நல்ல விஷயம் தானே கூட்டிட்டுப் போங்க கல்யாணம் பண்ணிக்கோங்க. எப்ப
கூட்டிட்டுப் போகப் போறீங்க? நான் சீரியஸ்சா சொல்றேன்.”
“இந்த பாருங்க...அப்படியெல்லாம் இழுத்திட்டு வரமுடியாது. வேணா சொல்லுங்க முறைப்படி நாங்க வந்து பெண் கேட்டு முடிவு பண்ணி
கல்யாணம் பண்ணி கூட்டிப் போறோம். சொல்லுங்க என்று வர?”
“அதெல்லாம் சரிபட்டு வராது. சொர்ணா உங்களுக்கு பொண்ணை தரவே மாட்டா. அவள் சம்மதமில்லாமல் சங்கீதாவை நீங்க அழச்சிட்டு போக முடியாது. இதுக்கு அவ சம்மதிக்கவே மாட்டா. சங்கீதாவும் எங்களை விட்டுப் போக மாட்டா. ஏதாவது ஒரு சாக்கை சொல்லி உன் பெண் யாருடனோ ஓடிப் போவிட்டாள் என்று சொர்ணாவிடம் சொன்னால் தான் அவள் சும்மா இருப்பாள். பெஸ்ட்..அவளை நீங்க கடைத்திக்கிட்டு போவது தான்...”
“நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனாடா? இப்படி பேச உனக்கு வெக்கமாயில்லை? இந்த மாதிரி கேவலமான முறையில் நாங்க சங்கீதாவை
எடுத்துக்க மாட்டோம். சொர்ணா தான் அவ கிட்டே பிரியமா இருக்காங்களே.
அவளுக்கும் அவங்க தான் அம்மான்னு நினச்சு சந்தோஷமா இருக்காளே.
எனவே இந்த மடத்தனமான பிளான் எல்லாம் உளறிக் கிட்டு இனி இங்கே வந்தே போலீசிடம் போவேன். மரியாதையா போயிடு...போ..”
“அப்படியா? ஒ.கே நானும் என் மனைவியும் மகனை கூட்டிக்கிட்டு துபாய்
போயிடறோம். சொர்ணாவிடம் நான் ஏதாவது சொல்லி சமாளிக்கிறேன். உங்க சங்கீதா சங்கீதம் பாடி பொழச்சுக்கட்டும. கூட்டி போங்க இல்லே அனாதையா கிடக்கட்டும். நான் போலீசுக்கு பயந்தவன் இல்லை.”
“கெட் அவுட். உன்னை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. சொர்ணா சங்கீதாவை அனாதையா விட மாட்டாங்க..போடா உன்னால் ஆனதை பார்த்துக்கோ...” வெறுப்புடன் பதில் சொன்னான் சந்திரன்.
மாமாவிடம் விஷயத்தை சொன்னான் சந்திரன்.
“இப்படி சொன்னதும் ஆனந்தன் வேகமாகப் போய்விட்டான். இவனுக்கு மரியாதை ஒரு கேடு. மாமா..சங்கீதாவை நீங்க கொடுத்தது எவ்வளவு பெரிய தவறுன்னு இப்ப புரியுது. இப்ப என்ன செய்யறது?”
“பிரச்சனையை ஆறப் போடுவோம். என்ன தான் நடக்கிறது பார்க்கலாம்.
சந்கீதாவை பெண் கேட்டு வரட்டுமான்னு நான் அவனிடம் போனில் சொல்லிட்டேன். அது ஒண்ணு தான் வழின்னு சொல்லிட்டேன்..”
பத்து நாள் போயிற்று. ஆனந்தன் சந்திரனுக்குப் போன் செய்தார்.
“நான் அருமையான ஐடியா வச்சிருக்கேன். அதன் படி நீங்க சங்கீதாவை
உங்க கூட கூட்டி வச்சுக்கலாம்.”
“என்ன ஐடியா?” என்று கேட்டான் சந்திரன்.
அவர் சொன்ன ஐடியா கேட்டு “இவ்வளவு கீழ்த்தரமா யோசிக்க உங்களால் தான் முடியும்.” என்று சீறினான் சந்திரன்.
ஊஞ்சல் ஆடும்...