கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அன்பென்னும் ஊஞ்சலாட்டம் - அத்தியாயம் 13

sankariappan

Moderator
Staff member
அத்தியாயம்—13



வீட்டிற்கு வந்த சங்கீதா யார் கூடவும் பேசாமல் தன் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள். வெளியே கதவை தட்டித் தட்டி ஒய்ந்து போனார்கள். எதையும் சங்கீதா சட்டை பண்ணவில்லை.

அவள் செல் கூப்பிட்டது. இது வேற...என்று எரிச்சலுடன் எடுத்து ஹலோ சொன்னாள். அவளின் மனநிலை புரியாமல் யார் இது? சந்திரன் தான்.

“சங்கீதா என்ன நடந்தது? கதவு திற சங்கீதா. எங்களுக்கெல்லாம் பயமா இருக்கு. உன் அம்மா குறுக்கும் நெடுக்கும் பரிதவித்து அலஞ்சிட்டிருக்காங்க.”

“யாரும் கவலைப் படவேண்டாம். நான் ஒன்றும் கோழை இல்லை. உயிரை போக்கிக்க மாட்டேன். சில உறவுகளை நெஞ்சிலிருந்து பிடுங்கி எரிய முயற்சிக்கிறேன். கொஞ்ச நேரம் தனியா விடுங்க.”

அதன் பின் வெளியே அமைதி நிலவியது. சங்கீதாவின் கண்களிலிருந்து கண்ணீர் வரவில்லை. ரத்தமே மனசுள் வடிந்தபடி இருந்தது.

என்னெவெல்லாம் பேசிவிட்டார்? நீயெல்லாம் ஒரு மகளா? ஓடுகாலி...

மாமா மகனை கட்டிக்க அவங்களை ஏமாத்திட்டு ஓடியவள்...என்னென்ன

பட்டம்? எப்படி கேட்க முடிந்தது? கிஷோரின் கல்யாண பத்திரிகை அங்கே தானே கிடக்கிறது...பார்த்துமா புரிந்துகொள்ளவில்லை? வீட்டை வித்திட்டாரா?

மனசாட்சியை வித்திட்டாரா? என்னை விரட்டுவிட எப்படியெல்லாம் நாடகம் நடத்தியிருக்கார்! சந்திரன் சொன்னதெல்லாம் கதையல்ல நிஜம். எதிரிகளை விட நண்பர்களாய் இருந்து துரோகம் செய்கிறவர்களே மனசை அறுத்துவிடுவார்கள். அப்பா உங்களிடம் எப்படி இவ்வளவு வில்லத்தனம் வந்தது? நம்பவே முடியவில்லையே. இந்த முகம் தான் உங்கள் நிஜ முகமா?

“டிவிங்கிள் டிவிங்கிள்..லிட்டில் ஸ்டார்...”சொல்லிக் கொடுத்த வாய் தானா அது! மூன்று சக்கர சைக்கிள் வாங்கிக் கொடுத்து மகிழ்ந்தவர் தானா அவர்?

“என் குட்டி தேவதைக்கு தங்கத் தேர் இது. ஒட்டு மகளே..” என்று துதித்தது இவர் வாய் தானா? பள்ளியில் ப்ராகிரஸ் ரிப்போர்ட் சைன் பண்ணிவிட்டு,

“கிளாசில் எப்பவும் என் மகள் பஸ்ட். என் மனசிலும் எப்பவும் பஸ்ட்...”

என்று கொஞ்சிய வாய் தானா வசை பாடியது?

அவள் வயசுக்கு வந்தபோது ஒரு அம்மாவாக மாறி சொன்னாரே...

“என்கிட்டே என்னடா பயம்? வெட்கம்? வழக்கம் போல் இரு. நான் உன் அப்பாடா...நீ என் மகள்டா...” நிழல் தந்த ஆலமரம் எப்படி இலையுதிர் கால

மரமாயிற்று? இன்னும் எத்தனை எத்தனை சந்தர்ப்பங்களில் என் மகள் என் மகள் என்று கொண்டாடியிருப்பார். எல்லாம் வேஷம் தானா? எதுக்கு இந்த வேஷம்? அப்பவே, நீ என் மகள் இல்லை என்று விலகி இருக்கலாமே!

அப்ப இவ்வளவு வலி வந்திருக்காதே! நெஞ்சில் முள் தைத்து விட்டதே!

நான் அன்பு செலுத்த சொன்னேனா? மகள் மகள் என்று கொண்டாட சொன்னேனா? பார்வையை கொடுத்துவிட்டு இப்பொழுது அதை பறித்துக் கொண்டு குருடியாக்கி விட எப்படி மனசு வந்தது?

“அம்மா...அப்பா ஸ்டெப் பாதர் மாதிரியே நடந்துக்கலையே.ம்மா. பெற்ற அப்பா மாதிரியே அன்பு காட்றார்...நான் எவ்வளவு லக்கி!...” எத்தனை முறை அம்மாவிடம் சொல்லியிருப்பேன்.! ஒரு மனிதன் என்ன வேஷம் வேண்டுமானாலும் போடலாம்...பணக்காரனாக...பெரிய உத்தியோகம் பார்ப்பவனாக...பக்தி மானாக...ஒழுக்க சீலனாக...ஆனால் அன்புள்ள அப்பாவாக வேஷம் போடுவது எவ்வளவு பாவம்? அன்பற்ற மனசில் அன்பு இருப்பதாக வேஷம் போடுவது...என்னய்யா நியாயம்? ஏமாற்ற பிஞ்சு

மனசு தானா கிடைத்தது? உங்களை கடவுள் கூட மன்னிக்கமாட்டார் மிஸ்டர் ஆனந்தன்....எப்படியோ நீங்க என்னை கடைசியில் விரட்டிவிட்டதுக்கு நன்றி.

பாலைவனத்தை சோலைவனம் என்று நினைத்து நீர் அருந்தினேனே. அவ்வளவும் விஷம். போலி அன்பில் நனைவதை விட, அன்பற்ற பாலைவன மனமே தேவலை. அன்பு செலுத்தியவர்கள் சடாரென்று நிந்திக்கத் தொடங்கினால்...அப்பப்பா அது மாதிரி வலி வேறு எதுவுமே இல்லை. அந்தக் காயத்தின் தழும்பு மறையவே மறையாது. பழயன கழிதலும் புதியன புகுதலும் என்பதை கற்றுக் கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருந்தாள்.

சந்திரனின் அன்பும், ஆண்டாள் மங்களம் இவர்கள் காட்டும் அன்பும்—இதுவாவது உண்மையாக இருக்கவேண்டும் கடவுளே! இனியும் ஏமாற்றப் பட்டால் நொறுங்கிக் போய்விடுவேன். ஏமாத்தமாட்டீங்களே..? இனி ஒரு ஏமாற்றத்தை தாங்கும் சக்தி எனக்கு இல்லை. கதவு திறந்து வந்தாள் சங்கீதா. ஒரு புதிய மனுஷியாக வந்தாள்.



ஈதல் தாய்மைக்கு அழகு. சாய்ந்த கொடி கிளையைக் கண்டால் தாவி அணைத்துக் கொள்வது போல் சங்கீதா வெளியே வந்ததும் மங்களம் மகளை தாவி அணைத்து மலர்ந்தாள். அடேயப்பா எவ்வளவு பெரிய மலர்ச்சி! சூரிய காந்தி பூ மாதிரி! “அம்மா...” என்று மனசார வாயார சொல்லி சங்கீதாவும் அணைத்துக் கொண்டாள். அந்த சங்கமம் ஒரு அற்புத தருணத்தின் விடியலாக அமைந்தது. கிளிக் என்று அந்த விலைமதிப்பில்லாத வினாடியை

தன் போனில் பதிவு செய்துவிட்டான் சந்திரன் .இதுக்காகத் தானே காத்துக் கொண்டிருக்கிறான். அவன் விரும்பிய நேரம் வந்துவிட்டது.

“என்ன நீங்க? இதெல்லாம் போய் படம் எடுத்துக்கிட்டு?” என்று சிணுங்கினாள் சங்கீதா. அவள் முகத்தில் பட்டாம் பூச்சியின் மலர்ந்த படபடப்பு.

“பாரு..எவ்வளவு அழகா இருக்குன்னு? அம்மாவும் பெண்ணும் உணர்வால் உயிரால் ஒன்றுகிற அதி அற்புத காட்சி. திரும்பக் கிடைக்காத நிகழ்வு.

என்னைப் பொறுத்த வரை இது ஒரு சரித்திர நிகழ்ச்சி..”

பிளாஸ்டிக் பூக்கள், வாசம் வீசும் குண்டு மல்லிகை பூக்களாக விகசித்தது

போல் சங்கீதாவின் மனம் இனிமை கண்டது. ஆண்டாளுக்கு ஒரே மகிழ்ச்சி!

“அன்பின் ஆழம்” அப்படின்னு தலைப்பு கொடுத்து பத்திரிகைக்கு அனுப்புவேன். அட்டைப் படத்தில் வரும் பார்...” சந்திரன் சூரியனாக மாறியது போல் இருந்தது. அவ்வளவு பிரகாசம்.!

“உண்மைதான்...ரவி வர்மா ஓவியம் போல் இருக்கு. மங்களம் முகம் எத்தனை அழகாக இருக்கு! எவ்வளவு பெரிய மாற்றம்! கோஹினூர் வைரம் போல் அவள் கண்கள் ஜொலிக்கிறதே...” ஆண்டாளுக்கு வாயெல்லாம் பல்.

“ஆண்டாள் என் மகள் எனக்கு கிடச்சிட்டா...நான் கொடுத்து வைச்சவள்.”

மங்களம் தன் சகோதரியிடம் பேசியதை ஆச்சர்யத்தோடு அனைவரும் பார்த்தனர். நீண்ட அமாவாசை இருளுக்குப் பிறகு முழு மதி உதயமானது போல் அந்த வீட்டில் ஒளி திரும்பிற்று. சங்கீதாவின் நிஜமான மாற்றத்தை

மங்களம் கண்டுபிடித்த தருணம் அவளுக்கு பேச்சு வந்துவிட்டது.



மங்களம் உடம்பு தேறிற்று. இப்பொழுது அவள் பூரண தெளிவோடும் புதிய

அழகோடும் தாய்மை சிந்த பொற்குடம் போல் ஆகிவிட்டாள். பத்து வயது குறைந்து விட்டது போல் பட்டது.

“அம்மா..என்னை மூன்று மாதக் குழந்தையாக இருக்கும்போதே அவர் தூக்கிக் கொடுத்துவிட்டாரே......எப்படிம்மா? அவரின் அன்பின் ஆழம் அவ்வளவு தானா? என்னை தூக்கிக் கொடுக்க அப்படி என்ன அவசியம்?

கல் மனசா அவருக்கு?” சங்கீதா கேட்டாள்.

“அப்பா...என்று சொல்லக் கூட உனக்கு மனசு வரவில்லை. அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. அந்தளவுக்கு நீ பாதிக்கப்பட்டிருக்கே. ஆனால்

ஒன்றை புரிந்துகொள் மகளே, அவர் தான் என்னை விட உன்னை அதிகமா நேசித்தார். மனு நீதி சோழன் பசுவிற்கு கூட நியாயம் கிடைக்கவேண்டும் என்று மகனையே தேர்காலில் இட்டு பலி கொடுத்தார்...ஏன்? பசுவின் துக்கத்தை கூட அவர் மதித்தது தான். அது போலத்தான் உன் அப்பாவும் சொர்ணாவுக்கு நியாயம் வழங்கினார். அதே போன்ற மதிப்பை சொர்ணாவும் வைத்திருந்தால்...உன்னை அந்த ஆனந்தன் விரட்டிவிட சம்மதித்திருக்க மாட்டாள். ஆனா உன் அப்பாவிடம் அந்த சோழப் பரம்பரையின் ரத்தம் ஓடுகிறதோ என்னவோ..சொர்ணாவின் கண்ணீர் அவர் மனசை பிசைந்துவிட்டது. அவள் சாபம் பலித்துவிடுமோ என்ற பயமும் அவருக்கு இருந்தது. நீ இறந்துவிடுவாயோ என்று நடுங்கினார். எங்காவது நீ உயிரோடு இருந்தால் சரி என்று தூக்கிக் கொடுத்துவிட்டார்...தன்னலம் கருதாத தூய மனம் அவருக்கு. என்னால் அந்த அளவு உயர முடியவில்லை. தோற்றுப் போனேன். அதான் பேதலிப்பு வந்துவிட்டது. ஒரு விதவையின் ஒரே பிடிப்பை அஜாக்கிறதையால் கொன்று விட்டோமே என்று அவர் துடித்த துடிப்பு! நான் சம்மதிக்கவில்லை என்றால் அவர் மனம் பேதலித்திருக்கும்....”

“இந்தனை வருஷங்கள் என்னை பிரிந்ததால் சுயநினைவு இல்லாமல் இருந்தீர்களே..உங்க அன்பின் ஆழம் தான் எனக்கு உசத்தியா தெரியுது.”

“சரி...சரி...அப்படியே இருக்கட்டும். நல்லவர்கள் துன்பப்படுவதை இறைவன்

பொறுக்கமாட்டான். அதான் உன் அப்பா சாகும் பொழுது நீ அருகில்

இருந்தாய். இதோ என் மகளாய் என்னிடமே வந்துவிட்டாய். நடந்ததெல்லாம் மறந்துவிடு சங்கீதா...உன்னை நன்றாக வளர்த்திருக்கிறார்கள்...ஏனோ கடைசியில் பாரமாக நினைத்துவிட்டார்கள்....”

“அவர்களா நன்றாக வளர்த்திருக்கிறார்கள்? சங்கீதாவுக்கு நல்ல மனசு.”

என்று சொன்னான் சந்திரன். உண்மை தான் என்றாள் ஆண்டாள்.
“பெற்றவர்களுக்குத் தானே பிள்ளையின் அருமை தெரியும்? அவர்கள் பெற்ற சித்தார்த்தை பாரமாக நினைப்பார்களா? விரட்டிவிடுவார்களா? அன்பானவர்கள் அம்பாக மாறியதற்கு என்ன சமாதானம் சொல்ல முடியும்? எனக்கு தான் கொடுத்து வைக்கவில்லை..அவமானம் ஆகிவிட்டது.” என்றாள் சங்கீதா.

“அவமானம் இல்லாமல் வெகுமானம் வராது. இன்று புதிதாய் பிறந்தோம். அவர்களை மன்னித்துவிடு மகளே..”

சங்கீதா ஆச்சர்யப்பட்டாள். எப்படி இவர்களை அம்மா மன்னிக்கிறாள்?

மன்னிக்க எவ்வளவு பெரிய மனசு வேண்டும்? மங்களம் தன் அம்மா என்ற நினைப்பே சங்கீதாவுக்கு பெருமையாக இருந்தது. அம்மாவின் மடியில் புதைந்து போனாள். அவள் காயங்கள் ஆறியது. தன் நினைவு இல்லாமல் இருக்கும் போதே அம்மாவுக்கு அவளை அடையாளம் தெரிந்திருக்கிறது.

சொர்ணாவுக்கு தன் நினைவு இருக்கும்போதே கூட அவள் அருமை தெரியவில்லை. அவள் நினைத்திருந்தால் ஆனந்தனை தடுத்திருக்க முடியாதா? பெற்ற பெண்ணையே தூக்கி கொடுத்த வள்ளலை அவர்கள் எள்ளல் செய்ய காரணமென்ன? சிறிய மனசு....சுயநல நோக்கு...தேவை என்ற போது வரும் பாசம்...தேவையில்லை என்று ஆகிவிட்டதால் செய்யும் மோசம். சுயநலப் பாசம் சூரியனைக் கண்ட பனி போல் நீங்கிவிட்டது.





வீட்டில் மாவிலை தோரணம் கட்டியிருந்தாள் ஆண்டாள். வாசலில் மாக்கோலம் இட்டிருந்தாள், தாம்பாளத்தில் மஞ்சள் குங்குமம் பூச்சரம்

எடுத்து வைத்தாள். வெள்ளி கும்பாவில் சந்தனத்தைக் கரைத்தாள். வருகிறவர்களை வரவேற்க முகத்தில் புன்னகையுடன் நின்றிருந்தாள்.

மங்களம் மகளுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். சர்வ அலங்கார

பூஷிதையாக சங்கீதா பூரண சந்திரனின் ஒளியுடன் களங்கமற்ற வதனத்துடன்

நின்றாள். சந்திரன் அவள் முன் பிறைச் சந்திரனாய் நின்றான்.

“என் பெயர் தான் சந்திரன்...ஆனால் நீ என்னை திருடிக் கொண்டு பவுர்ணமி

ஆகிவிட்டாய்...நான் தேய்ந்த நிலவாகிவிட்டேன்..உன் அழகின் முன்..” என்று குறை கூறிய நிறை மனதுடன் தன் மனைவி ஆகப்போகிற மாமா மகள் சங்கீதாவிடம் வம்பு செய்து கொண்டிருந்தான் சந்திரன். அவள் கன்னம் சிவந்தது. “சந்தனக் கிண்ணத்தில் தவிறி விழுந்த குங்குமம் போல் உன் முகம் இப்ப இருக்கு...” என்றான்.

“அவள் கவிஞன் ஆக்கினாள் என்னை....என்று கவியரசர் சொன்னது சரிதான். உங்க கிரிமினல் புத்தி கூட மாறிவிட்டதே!” கிண்டலடித்தாள் சங்கீதா.

“ஏய்...கிண்டலா பண்றே? இரு உன் காலை உடைக்கிறேன்..”

“உடச்சு தானே காரியத்தை சாதிச்சிக்கிட்டீங்க...”

“அப்ப உனக்கு விருப்பமில்லையா இந்த நிச்சயதார்த்தத்தில்?”

“இல்லைன்னு சொன்னா என்ன செய்வீங்க? நிலவை பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதேன்னு...பாடப் போறீங்களா?”

“இல்லை..நீயே தான் எனக்கு மனையாட்டி…”

“அந்தப் பாட்டு கூட கவியரசரோடது தான் அவர் பாடின பாட்டின் வரிகள் யாவும் அன்றாடம் மக்கள் சந்திக்கும் உணர்வு போராட்டங்களை பிரதிபலிக்கும் எளிய ஆனால் பொருள் பொதிந்த கருவூலங்கள் இல்லையா?

ஒரு வருஷமா என் மனதில் என்ன பாட்டு ஓடிட்டிருந்தது தெரியுமா?

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி....அங்கே எனக்கோர் இடம் வேண்டும்..”

“இன்னும் அந்த பாட்டு தான் ஓடிட்டிருக்கா?”

“இல்லை...இனி எப்பவும் அந்த பாட்டு நான் பாடவேண்டிய அவசியமில்லாமல்

போயிடுச்சே...நீங்க தான் என்னை சுகமா தாங்கப்போறீங்களே...”

“ஏய்...சங்கீதா..இன்னுமா நீ ரெடியாகலை? சீக்கிரம் வா அய்யர் காத்திட்டிருக்கார்...?” பரபரப்புடன் ஆண்டாளோடு சில பெண்கள் வர...சங்கீதா

ஹாலுக்கு வந்தாள். சடங்குகள் மங்களமாக நடந்தன. கைகளைக் கட்டிக் கொண்டு மனம் நிறைந்த குதூகலத்துடன் பார்த்துக் கொண்டிருந்த சந்திரன்,

சாடரென்று வாசலைப் பார்த்தான்...யாரோ நுழைந்தது போல் இருந்ததே...

விரைந்து போய் பார்த்தான்...மாமரத்துக்கடியில் ஆனந்தன் நின்று கொண்டிருந்தார். “நீங்க எதுக்கு இங்கே வந்தீங்க? காரியத்தை கெடுக்கவா?”

“நான் ஏன் கெடுக்கப் போறேன்? நல்லபடியாக நடக்குதான்னு நோட்டம் போட வந்தேன். தேங்க்ஸ் சந்திரன். என் பாரம் குறைந்தது. எங்கே அவள் திரும்ப ஓடி வந்திடுவாளோன்னு ஒரு சின்ன பயம்...வரேன்...”

“ஒரு நாளும் என் சங்கீதா உன்னிடம் வந்துவிடமாட்டாள். நீயும் அந்த சொர்ணாவும் பண்ணிய துரோகத்துக்கு...நீங்க ஒரு நாள் அனுபவிப்பீங்க.

உங்க பிம்பம் கலைஞ்சு போச்சு. ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு...டும் டும் டும்...கெட் லாஸ்ட். உன்னை கொல்றதுக்குள்ளே ஒடிடு...பாவி...”

அவரை விரட்டிவிட்டு உள்ளே வந்தான்.

“யாருப்பா வந்தது?” என்று யாரோ கேட்க...”அதுவா தெரு நாய்...இனிமே வராது...நீங்க உள்ளே போங்க...”

ஆனந்தன் முகம் மலர்ந்தது. அப்பாடா...கடத்தல் பிளான் வெற்றி. இனி சங்கீதாவின் காலடி கூட படாத துபைக்கு போய் நிம்மதியாக இருக்கலாம்.



சங்கீதாவின் திருமணம் சிறப்பாக நடந்தது. மங்களம் மணப்பெண்ணின் அம்மா என்ற முறையில் பட்டுப் புடவையும், சங்கீதாவின் வற்புறுத்தலின் பேரில் குங்குமப் பொட்டும், தலையில் சிறு இனுக்கு பூச்சரமும் சூடியிருந்தாள். ஆடி ஓடி மகள் கல்யாணத்தில் கலகலப்பாக கலந்து கொண்டாள். அவள் பொட்டும் பூவும் சூடியிருப்பதை சிலர் ஜாடையாக பழித்தனர். அவர்களுக்கு அதனால் என்ன வந்ததோ? மங்களம் சொன்னாள்.

“அவர் என் மனசிலேயே தான் இருக்கார். உருவம் இல்லை என்பதால் அவர் இல்ல என்றாகுமா?” தைரியமான பதில். அதற்கு மேல் கேள்வி

கேட்க யாருக்கும் உரிமையில்லை. ஆண்டாள் பக்கபலமாக இருந்தாள்.

மங்களளம் குணமான பிறகு அவள் பார்க்கும் முதல் சந்தோஷமான நிகழ்ச்சி இது. சங்கீதாவின் மணப் பெண் அலங்காரத்தை அவள் நிறைந்த கண்ணோடு பார்த்தாள். மூன்று மாதக் குழந்தையாக அவள் தூக்கிக் கொடுத்த குழந்தை இன்று அவளிடமே வந்திருப்பது ஆண்டவன் அவள் நல்ல மனசுக்கு கொடுத்த கொடை. மணமேடையில் வந்து அமர்ந்தாள் சங்கீதா.

“மங்களம் கொடுத்து வச்சவ. தங்க கட்டி மாதிரி பொண்ணு. என்ன அதிசயம் காணாமல் போன மகள் தேவதை மாதிரி வந்திட்டா...” கல்யாணத்திற்கு வந்த உறவினர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தினார்கள்.

“பொண்ணுக்கு இந்த நீல நிற பட்டுப் புடவை வெகு ஜோர்..”

“ரோஜா புஷ்பம் மாதிரி அழகு...”

“எல்லாம் மங்களம் கொடுத்த சீதனம். அவள் சின்ன வயசில் இப்படித்தானே இருப்பாள். மூக்கும் முழியும் அபூர்வமான சிற்ப அழகு..”
“என்ன எல்லோரும் பொன்னையே புகழ்ந்தா எப்படி? எங்க பையனுக்கு என்ன குறைச்சல்? அவனும் மன்மதனாட்டம் இருக்கான்...” இது சந்திரனின் சொந்தகளின் அங்கலாய்ப்பு. மணமேடையில் அலையலையாக சிரிப்பு பொங்கியது. எல்லா முகங்களும் வெள்ளி குத்துவிளக்கு போல் மிளிர்ந்தது.

மாங்கல்யதாரணம் முடிந்தபோது ஆண்டாளின் கண்ணும் மங்களத்தின் கண்ணும் ஆனந்தக் கூத்தாடியது. வெங்கடேசனின் ஆசீர்வாதமும் தம்பதிகளுக்கு கிடைத்திருக்கும். அவர் ஆத்மா சாந்தி அடைந்திருக்கும்.



சங்கீதாவும் சந்திரனும் தனிமையில் கணவன் மனைவியாக சந்தித்த நாள்

அவர்களுக்கு அது மறக்க முடியாத நாளாக அமைந்து போனது. பூச்சரங்கள்

அந்த அறையில் தென்றலில் விளையாடியது. அதை பார்த்து சந்திரன் சொன்ன முதல் வார்த்தை அவன் மாமாவைப் பற்றிய நினைவு தான்.

“மாமாவுக்கு பூக்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும். அவர் மனசும் பூ மாதிரி தான். ரொம்ப இளகிய மனசு. அப்படி மனமுடையவர்களை பார்ப்பது அபூர்வம். நான் மாமாவால் வளர்க்கப்பட்டேன் என்பது எனக்கு பெருமையான விஷயம். எனக்கு அப்பா அம்மா இல்லை என்ற ஏக்கம் வராமல் பார்த்துக் கொண்டார்...அவர் தான் எனக்கு அப்பா....”

சங்கீதாவுக்கு தன் அப்பாவின் ஞாபகம் வந்தது. ஆனந்தன் தான் அவளுக்கு அப்பாவாகத் தெரிந்தார். என்னதான் கடைசியில் மாறினாலும் அவர் அவளை தங்கத் தட்டில் தான் தாங்கினார். சிறுமியாக அவர் மடியில் அமர்ந்து கதை கேட்ட நாட்களை மறக்க முடியுமா? சந்திரன் கேட்டான்.

“என்ன யோசனை சங்கீதா? உன் பால் போன்ற இன்சொல்லை கேட்க ஆசையாயிருக்கு. உன் பவள வாய் திறந்து பேசேன். செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்....தித்திக்கும் தேன் குடமே..செண்பக பூச்சரமே...” அவன் பாடியதும் அவள் சிரித்துவிட்டாள். பிறகு அவள் முகம் மாறியது.

“என்ன? ஏதாவது கோபமா? வருத்தமா? உன் முகம் வாடவே கூடாது.”

“ஒன்றுமில்லை ஒரே ஒரு பயம்.”
“பயமா? என்னிடமா? வேடிக்கையா இருக்கே...நான் நீ பயப்படும்படியா

ஒண்ணுமே செய்யலையே? சங்கீதா நீ என் உயிர்...சொல்லு என்ன விஷயம்?”

“நீங்க உங்க மாமாவை ஆராதிக்கிறீங்க சரி. ஆனா அவர் போல் ஒரு காரியத்தை செய்திடுவீங்களோன்னு ஒரு பயம்.”

“அப்படியென்ன அவர் போல் நான் செய்யப் போறேன்? ஏன் அவர் போல் வியாதி எனக்கும் வந்திடும்னு பயமா?

“வியாதி என்பது விதி வசம். அதை யார் தடுக்க முடியும்? அவர் போல் முட்டாள்தனம் பண்ணி நிம்மதி இழக்கக் கூடாது இல்லையா?”

“எனக்கு புரியலை சங்கீதா. என்ன சொல்ல வர்றே ?”

“எனக்கு ஒரு சத்தியம் பண்ணிக் கொடுங்க.”

“ஏன்னு கேக்கமாட்டேன். சத்தியம்...போதுமா?”

“நமக்கு பிறக்கப் போகும் எந்தக் குழந்தையையும் உங்க மாமா மாதிரி

யாருக்காவது எந்த சந்தர்ப்பமாக இருந்தாலும் தூக்கி கொடுத்திட மாட்டீங்களே? சத்தியம் பண்ணியிருக்கீங்க..”

சந்திரன் அவளை இறுக அணைத்து முத்தமிட்டான்.

“மாட்டவே மாட்டேன் சங்கீதா. நீ எந்த அளவு பாதிக்கப்பட்டிருந்தால்

இப்படி ஒரு சத்தியத்தை வாங்கி இருப்பே?...நம் குழந்தை நமக்கு மட்டும் தான்.” அவன் சொல்லி முடித்ததும் சங்கீதா சந்தோஷமானாள்.

அந்த இரவு விடிந்தது. சங்கீதாவின் மனமும் விடிந்தது.



சங்கீதா குழந்தை உன்டான போது முதலில் சந்தோஷப்பட்டது மங்களமும் ஆண்டாளும் தான். மசக்கை என்று அவள் வருந்திய போது அவளுக்கு இரண்டு அம்மாக்கள் கவனித்துக் கொள்ள இருந்தார்கள். அவ்வளவு சுகமா இருந்தது. இரண்டு கண்கள் போல் கவனித்து பேணினார்கள். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு அழகுடன் திகழ்ந்தாள். சூல் அழகு என்பது இது தானோ!

அவளுக்கு வேண்டிய நாக்குக்கு ருசியானதை செய்ய இரண்டு அம்மாக்களும் போட்டி போட்டார்கள். “அம்மா..எனக்கு மாங்காய் சாதம்...” இருவரும் மாங்காய் சாதாம் செய்து தட்டோடு நின்றார்கள். திக்கு முக்காடிப் போனாள் சங்கீதா. அவள் வளைகாப்பு ஜாம் ஜாமென்று நடந்தது. தங்கக் காப்பும் விதவிதமான கண்ணாடி வளையல்களும் போட்டுக் கொண்டு சங்கீதா தாய்மை கனிவில் கனிந்து நின்றாள். மங்களம் சுற்றிப் போட்டாள். அறை மணி கழித்து ஆண்டாள் சுற்றிப் போட்டாள். சந்திரன் பொய்யாக கோபித்தான்.

“பொம்பளையா பிறந்திருக்கணும். இப்படி விழுந்து விழுந்து அவளை கவனிச்சிட்டு இந்த அப்பாவி மகனை மறந்து விட்டீங்களே..”

குழந்தை பிறந்த அன்று அந்த வீடே சொர்கலோகம் போல் ஆயிற்று. பிஞ்சுக் குழந்தை கையை காலை உதைத்துக் கொண்டு அழுதபோது சந்திரன் ஆனந்தக் கண்ணீர் விட்டான். சங்கீதா மனம் முழுக்க சந்தோசம்.

இருவரும் முருக பக்தர்கள் ஆதலால் பிறந்த மகனுக்கு கார்திகேயன் என்று பெயரிட்டார்கள். அவன் பிறந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு பிரியமாகப் பிறந்த பெண் குழந்தைக்கு பிரியங்கா என்று பெயரிட்டார்கள். குழந்தைகள் அடி ஓடி விளையாடுவதை பாட்டிகள் ரசித்தார்கள். இது தான் சொர்கமோ என்று நினைக்கத் தோன்றியது. அவளுக்கு வாழ்வு சுகப்பட்டாலும் சங்கீதாவுக்கு அவ்வப்போது அம்மா சொர்ணாவின் நினைவும் அப்பா ஆனந்தனின் நினைவும் வராமல் இல்லை. ரோஜாவில் முள் இருப்பது போல் ஒரு நெருடல். எப்படி மறக்க முடியும்? அப்பொழுது வெறுத்துவிட்டதாக அவள் நினைத்தாள். ஆனால் அது அப்படி இல்லை. அலைகடல் அலைகள் கரை தொட்டு மீண்டும் கடலுக்கே வருவது போல் வளர்த்த பாசம் நெஞ்சில் ஊறிக் கொண்டே இருக்கிறது. அவர்கள் போலியாக இருக்கலாம் ஆனால் அவள் அன்பு போலி இல்லையே!



சங்கீதாவும் சந்திரனும் கடற்கரை மணலில் உட்கார்ந்திருந்தார்கள்.

மாலை சூரியனின் பொன் ஒளியில் கடல் தங்க நகை அணிந்துகொண்டது போல் ஜொலித்தது. அலைகள் கரையை தொட்டுத் தொட்டு விளையாடியது.

அவர்கள் மனசும் காதலில் கட்டுண்டு விளையாடியது. ரம்மியமான

சூழ்நிலை. சர்க்கஸில் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் பார் விளையாடும்

பெண்கள் போல் சங்கீதாவின் மனம் அல்லாடிக் கொண்டிருந்த நேரம் என்றோ முடிந்துவிட்டது. இந்தக் குடும்பம் நிஜமா? அந்தக் குடும்பம் நிஜமா?

எது என் இடம்? எது என் பிறப்புரிமை பெற்ற ஸ்தலம்? எல்லாம் பழைய கதையாகிவிட்டது. வானவில் போல் தோன்றித் தோன்றி மனதை ஊஞ்சலாட வைத்த நாட்கள்...அப்பப்பா..என்ன கஷ்டம்! ஒரு சமயம் வானவில்லாய் தெரிந்த ஆகாயம் மறு நிமிஷம் கருமேகம் மூடிய ஆகாயமாக தெரிந்தது. இப்பொழுது அவள் ஆடிக் கொண்டிருப்பது அன்பென்னும் ஊஞ்சலில்....காதல் என்னும் ஊஞ்சல். மன ஊஞ்சல்.....மன உளைச்சல் ஊஞ்சல் இல்லை.

“என்ன யோசனை சங்கீதா?”

“ஒன்றுமில்லை..”

“எனக்குத் தெரியும்.”

“என்ன தெரியும்?

“நமக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷங்கள் ஓடிவிட்டன. முத்துப் போல் இரண்டு குழந்தைகள் இருக்காங்க. நீ என்ன நினைக்கிறேன்னு எனக்குத் தெரியாமலா போய்விடும்?”

“அப்படியா? என்ன நினைக்கிறேன் சொல்லுங்க பார்ப்போம். நிச்சயம் தப்பாத் தான் சொல்லப் போறீங்க.” சவால் விட்டாள் சங்கீதா.

“போன வாரம் நாம் ஒரு கல்யாணத்துக்குப் போனோமே...”

“அங்கே என் பழைய அப்பா அம்மாவை பார்த்தோம்..”

“ஆமா...நாம டின்னர் முடிச்சிட்டு டைனிங் ஹாலிலிருந்து வரோம்..அவங்க

உள்ளே நுழையறாங்க. எதிர் எதிரே சந்தித்தோம். நீ அவங்களை விஷ் பண்ணினே சங்கீதா. ‘எப்படி இருக்கீங்கன்னு’ கேட்ட. ஆனா அவங்க முகத்தை திருப்பிக் கொண்டு போனாங்க. அந்த வலி உன் மனதை பிசைகிறது

இல்லியா? எப்படி கரெக்டா சொல்லிட்டேனா?”

“இல்லை சந்திரன். முழுக்க தப்பு. நான் பகை பாராட்ட விரும்பலை.

அதான் பேசினேன்....ஜஸ்ட் விசாரிச்சேன். அவங்களுகுத் தான் குற்ற உணர்வு. பதில் பேசாம போயிட்டாங்க. கல் பேசும்னு நான் எதிர்பார்க்லை.

ஆனா அந்தக் கல்லால் நான் நசுங்கிப் போகலைன்னு காட்டத் தான்

பேசினேன். நான் சந்தோஷமா இருக்கேன். அதை அவங்களுக்கு உணர்த்தினேன். எனக்கு என்ன குறை? ரெண்டு அம்மா...ஒண்ணு பெரியம்மா இன்னொன்னு எங்கம்மா. பத்தாததுக்கு அப்பா மாதிரி ஒரு கணவன்...என் வானத்திலே நிறைய வானவில்கள். அதுவும் நிரந்தரமான வானவில். நான் ஏன் கலங்கப் போறேன் சந்திரன்? சொல்லுங்க...”

“எல்லாம் சரிதான். ஒத்துக்கோ சங்கீதா..எங்கோ அவர்களின் புறக்கணிப்பு உன்னை தாக்கி இருக்கும். ஏன்னா நீ இன்னும் அவங்களை நேசிக்கிறே.

மனசை அதன் போக்கில் விடு. காயத்தை மறைச்சு, ரகசியமா வச்சே,

அது புரையோடிவிடும். உன் அன்பின் ஆழத்தை புரிந்து கொள்கிறவர்களிடம்

காட்டு. இப்படி அருகதை இல்லாதவர்களிடம் காட்டி...நீ ஏன் அவமானப்படணும்? உனக்கு எவ்வளவோ அழகழகான தருணங்கள் காத்திட்டிருக்கு..உனக்காக மகன் கார்திக் இருக்கிறான். மகள் ப்ரியா இருக்கிறாள்...அன்பு வட்டம்..அதில் ராட்டினம் ஆடு. நீ சோபிக்கணும்.

சாம்பிவிடக் கூடாது. உனக்காக வாழ கற்றுக் கொள் சங்கீதா.

பொய்களை மற...அது மாறாது. கடல் எவ்வளவு அழகாக இருக்கிறது!

ஆனால் தாகத்துக்கு ஒரு சொட்டு நீர் குடிக்க முடியுமா? அப்படித்தான்

சொர்ணா—ஆனந்தன் உறவு. இன்றோடு தலை மூழ்கிவிடு.”

சங்கீதாவுக்கு உண்மையில் இப்ப தாகம் எடுத்தது. சந்திரன் சொல்வது போல் ஓடி போய் குடிக்க முடியுமா? சந்திரன் சொல்வது உண்மை தான். அவன்

தோளில் அவள் சாய...அவன் அணைத்துக் கொண்டான். எந்த உறவுக்காகவும் ஏங்கக் கூடாது. கடைசியாக கொஞ்சம் புலம்பிவிடலாம்..

“அவ்வளவு தானா சந்திரன்? இருபத்திமூன்று வருஷத்தின் பந்தம் வெறும் சீரோ தானா? ஒரு சிறு புன்னகை எனக்காக காத்திருக்கும் என்று எண்ணுவது தவறா? நான் என்ன செய்தேன்? எதற்காக இந்த தண்டனை? அன்பு செலுத்துவது தவறா? காலம் அவர்களுக்கு பெருந்தன்மையை

கற்றுக் கொடுக்கவில்லையா? அவர்கள் அன்பு பொய்த்துப் போக அப்படி என்ன தவறு செய்தேன்?”

“சிலரின் அன்பு காரியார்த்தமானது சங்கீதா. அவர்கள் தேவை முடிந்ததும் தூக்கிப் போட்டுவிடுவார்கள். பழியையும் எதிராளி மேல் போடுவார்கள். அவர்கள் தவறை மறைக்க அவர்கள் கையாளும் யுக்தி இது தான். சங்கீதா செல்வ செழிப்பில் இருக்கும் போது எதுக்கு தரித்திரத்தை எண்ணுகிறாய்?”

சூரியன் மறைந்து இளம் இருட்டு கவிந்தது. நட்சத்திரங்கள் மினுக்கிக் கொண்டு வந்தன. அவள் இப்பொழுது நிஜமானவர்களின் நிஜமான அன்பில் நனைந்து செழிப்பாக இருக்கிறாள். அன்பை போனால் போகிறது என்று பிச்சையாகக் கூட போட முடியாத சொர்ணா—ஆனந்தன் தரித்திர மனங்களால்

ஏன் காயப்படவேண்டும்? நினைத்தால் மனம் ஆறாது.



எத்தனை வேஷங்கள் போட்டார்கள்! கிஷோருடன் ஓடிப்போனதாக சொன்ன குற்றச்சாட்டு நெஞ்சை பிளந்தது. பிசுபிசுத்த அந்த கேவல பழியையே தனது பலமாக்கி விரட்டியது...தான் கொலை செய்யப் பட்டதாக செட்-அப் செய்து..பின் ஏதும் நடக்காதது போல் போனில் பேசி அவளை பைத்தியமாக்கியது...எல்லாம் எதற்கு? “எங்களை விட்டுப் போய்விடு.’

என்று நேரடியாகச் சொன்னால் அவர்கள் பேர் கெட்டுவிடுமாம். ஓடுகாலி

என்ற பழி சௌகரியமானது...யாரும் இவர்களை குறை சொல்ல மாட்டார்கள்.

அவ்வவளவு தான். அவர்கள் தலை நிமிர்ந்து நடக்க, அடுத்தவர்களை கூனி குறுக வைத்துவிட்டால் மாட்டர் ஓவர்! வானத்தை அண்ணாந்து பார்த்தாள்.

“நட்சத்திரங்கள் சிரிக்கின்றன. நீயும் சிரியேன்...” என்றான் சந்திரன்.

சங்கீதா ஒரு வழியாக துரோகங்களை மறந்து சிரித்தாள். கடற்காற்று

அவர்களை தாய் போல் தழுவிக் கொண்டது.


ஊஞ்சல் ஆடும்...
 
Top