கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அன்பென்னும் ஊஞ்சலாட்டம் - அத்தியாயம் 14

sankariappan

Moderator
Staff member
அத்தியாயம்-14





சொர்ணா கோபத்தின் உச்சியில் இருந்தாள். சித்தார்த் அழுது கொண்டிருந்தான். அவன் கண்ணீர் மெல்ல இறங்கி டைனிங் டேபிளை நனைத்துக் கொண்டிருந்தது. ஆனந்தனின் தட்டில் சாம்பாரை ஊற்றிக் கொண்டிருந்தாள் சொர்ணா. அவள் கண்களோ கோவைப் பழமாக இருந்தது.

“இவனை என்னன்னு கேளுங்க...போன வாரம் அந்த சங்கீதாவை அந்தக் கல்யாண வீட்டில் பார்த்ததிலிருந்து புலம்பிக் கொண்டிருகிறான்.”

“என்னடா பிரச்சனை? சொல்லு...சொன்னாத் தானே தெரியும்?”

“அப்பா...சங்கீதா அக்கா என்னை பார்த்ததும் பார்க்காதது மாதிரி போயிட்டா.”

“இதே பாட்டைத் தான் பாடிட்டு இருக்கான். அவ என்ன கூடப் பொறந்தவளா?

எப்படி தந்திரம் பண்ணி கிஷோரோடு ஓடிப்போனது போல் போய், அந்த

கழிசடை வீட்டுப் பையனை போய் கல்யாணம் பண்ணிக்கிட்டா? மனசே ஆறலை. அந்த சந்திரன் ஜகஜாலக் கில்லாடி. அவ மனசை மயக்கி கூட்டிட்டுப் போயிட்டான். பத்து வருஷம் போயிருச்சு இன்னும் மனசு கொதிக்குது...இவன் அவள் தன்னைப் பார்த்து இளிக்கலைன்னு கவலைப்படறான்.” வெடித்தாள் சொர்ணா.

“அவ பேச்சு எதுக்கு? அவ தான் ஓடிப் போய் செட்டில் ஆயிட்டாளே. நல்லது தானே...திரும்ப வரமாட்டாள். சித்தார்த் நீ வீணா கவலைப்படறே. கிட்டாதாயின் வெட்டென மற...சும்மா ஒப்பாரி வச்சுக்கிட்டு....எதுக்கு மனசை

புண்ணாக்கிக்கிறே? தண்ணியும் எண்ணையும் ஒட்டுமா?”

இன்னும் இரண்டு இட்லியை எடுத்துப் போட்டுக் கொண்டார்.

“அதில்லப்பா...நான் ஒன்னும் பிரிந்த உறவை ஒட்ட வைக்க நினைக்கலை.

குறைந்த பட்சம் பார்க்க நேர்ந்தால் ஒரு புன்னகை கூடவா செய்யக் கூடாது.?

லெட் அஸ் பார்ட் அஸ் ப்ரெண்ட்ஸ்சுன்னு சொல்வாங்க....அது கூடவா முடியாது.? என் கல்யாண பத்திரிகையை கொண்டு போய் கொடுக்கலாம்னு

நினச்சேன்....இப்படி கண்டுக்காம இருக்காங்களே...அதான் வருத்தம்...”

“என்னது கல்யாண பத்திரிகையை கொண்டு போய் கொடுக்கப் போறியா?

பயித்தியமா உனக்கு?...நாமே கல்யாணம் முடிந்து துபாய் போயிடுவோம்.

அவ்வளவுதான்.. இவ உறவு தேவையேயில்லை. ஏதோ...அந்த கல்யாணத்தில் பார்த்து தொலைக்க வேண்டியதாகிவிட்டது...இதுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கணும்...” என்று ஆனந்தன் மகனிடம் கடுமையாகப் பேசினார். சொர்ணா அதற்கு மேல் பொரிந்தாள். “உண்மையில் அந்த வெங்கடேசன் பெரிய தியாக மனப்பான்மையுடன் குழந்தையை தூக்கிக் கொடுக்கவில்லை. பின்னால் தன் கைக்குள் இருக்கும் மருமகனுக்கே கட்டி வைத்து மகளை இழுத்துக் கொள்ளலாம் என்ற பெரிய பிளானோட தான் கொடுத்திருக்கார். அந்த சந்திரன் பயலை அவள் கல்யாணம் பண்ணிக்கிட்டா நாம உரிமை கொண்டாட முடியுமா? பழிக்குப் பழி. படே கில்லாடிடா அவர். அந்தக் கெட்ட எண்ணத்துக்கு தான் மகள் கல்யாணத்தை பார்க்காமலே போய் சேர்ந்துட்டார்.

நல்லா வேணும்...என் வைத்தெரிச்சலை கொட்டிகிட்டா நல்லா இருக்க முடியுமா? சித்தார்த் உன் கல்யாண பத்திரிகையை அவ கிட்டே நீட்டினே

நான் உன் கல்யாணத்தில் இருக்க மாட்டேன்...என்னங்க சொல்லுங்க.”

“ஆமா...அவ மட்டுமல்ல நானும் இருக்கமாட்டேன்...”

அவர் எழுந்து கை கழுவ போய்விட்டார். அப்பாவும் அம்மாவும் சங்கீதாவை கை கழுவி விட்டதை இப்போ தான் அவனுக்கு நன்கு புரிந்தது. ஏதோ ஒரு நப்பாசை மனதில் வைத்திருந்தான். அவனுக்கு கசப்பாக இருந்தது.

“எப்படியோ போய் தொலைங்க. அக்கா எங்கிருந்தாலும் நல்லா தான் இருப்பாங்க..” என்று முணுமுணுத்துவிட்டு எழுந்து கொண்டான்.

“ஏய்...என்னடா இரண்டு இட்டிலியோட எழுந்திட்டே...” சொர்ணா மகன் பின்னால் ஓடி வந்தாள். சித்தார்த் சட்டை செய்யாமல் போய்விட்டான்.

“அவன் கிடக்கிறான் விடு...” ஆனந்தன் சொல்லிவிட்டு தன் அறைக்குப் போய்விட்டார். அன்று இரவு அவருக்கு தனிமை தேவைப் பட்டது.

“ஒரு முக்கியமானவரை பார்க்கணும் சொர்ணா...நான் இரவு நேரம் கழித்து தான் வருவேன்..எனக்காக காத்திருக்காதே..நீ தூங்கு...என்னுடன் மாற்று சாவி எடுத்துப் போகிறேன்...” என்று சொல்லிவிட்டு அவர் வெளியே சென்றார்.



ஆனந்தன் தன் பண்ணை வீட்டுக்குத் தான் போனார். அங்கே அவர் எதிர்பார்த்த தனிமை அவருக்கு கிடைத்தது. அங்கே அவர் அவராக யோசிக்க முடிந்தது. எப்படிப்பட்ட போலி இல்லறம் நடத்துகிறார் என்று அவருக்குப் புரிந்தது. சில நன்மைகள் கருதி அவர் எடுத்த முடிவு தான் சங்கீதாவின் கடத்தல். அவரை எது அப்படி செய்யத் தூண்டியது? சொர்ணாவின் நடவடிக்கை தான்...சொர்ணாவை சந்தித்ததுக்காக அவர் இன்று வருத்தபட்டார். மிகவும் வருத்தப்படுகிறார்.





சொர்ணாவை அவர் சந்தித்தபோது அவள் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தாள். தெருவில் இவர் கார் முன் மயக்கம் வந்ததாலோ அல்லது வேண்டுமென்றோ தெரியவில்லை...வந்து விழுந்தாள். பதறிப் போனார் ஆனந்தன். வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவருடன் அப்பொழுது அவர் அம்மா இருந்தார். சொர்ணாவை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டு வந்து கட்டிலில் படுக்க வைத்தார். அம்மா பாக்கியம் பதறிவிட்டாள்.

“யாருடா இது? என்னாச்சு? நீ இவ மேல் காரை இடிச்சிட்டியா?”
“இல்லேம்மா...இவங்க என் கார் முன்னாடி விழுந்திட்டாங்க. சடன் பிரேக் போடாவிட்டால் விபரீதம் நடந்திருக்கும்.” இரு நல்ல உள்ளங்களும் இவளால் ஏற்படப் போகும் விபரீதம் தெரியாமல் இரக்கப்பட்டன.



சொர்ணாவுக்கு பால் குடிக்கக் கொடுத்து, தெம்பு அளித்து உட்கார வைத்தாள்

பாக்கியம். “என்னாச்சு குழந்தே? மாசமாயிருக்கியா அதான் மயங்கிட்டியா?”

வெடித்து அழுதாள் சொர்ணா. பாக்கியமும் ஆனந்தனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். சொர்ணாவைப் பார்க்க பாவமாக இருந்தது.

“அதெல்லாம் இல்லை. என் தம்பி என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டுட்டான்...என் குழந்தையோடு ஒரு தெரிஞ்சவங்க வீட்டில் அடைக்கலம் புகுந்தேன். குழந்தையை அவங்க பாதுகாப்பில் விட்டுட்டேன்.

நான் செத்துப் போகத் தான் கார் முன் விழுந்தேன். என் குழந்தையை அவங்க பார்த்துப்பாங்க. வேறு வழி? என்னை ஏன் காப்பாத்தினீங்க?”

இந்த பதில் அவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. பாவம் என்று பரிவு ஏற்பட வைத்தது. அது தானே அவளின் நோக்கம். அவளுக்கு வெற்றி.

சொர்ணா அன்று அவர்களிடம் முழு உண்மையையும் சொல்லவில்லை.

தன் மேல் இரக்கம் வரும்படி பேச அவளுக்குத் தெரியும். அடுத்தவர் மேல் பழி போட்டு இரக்கம் சம்பாதிப்பவள். அப்பாவி என்று பிறர் எண்ணும்படி

பேசுவாள். அவளுக்கு ஏற்பட்ட இழப்புகள் அவள் சுபாவத்துக்கு கை கொடுத்தது. அப்பாவி பெண் என்று ஆனந்தனுக்கும் அவர் அம்மா பாக்கியத்துக்கும் தோன்றும்படி பிழிந்து பிழிந்து அழதாள்.

உயிருக்கு உயிராக இருந்த தம்பி அவன் கல்யாணம் ஆனதும் மனைவி பேச்சை கேட்டுக் கொண்டு அவளிடம் கேட்ட கேள்விகளை அவளால் தாங்க முடியவில்லை. அதிர்ச்சியடைந்தாள். அஸ்வின் எப்படி மாறிப் போய்விட்டான்! அன்பான தங்கத்தம்பி இப்பொழுது பழுக்க காச்சிய கம்பியை அவள் மனதில் செருகிவிட்டானே! அவளால் நம்ப முடியவில்லை.

“அக்கா...எவ்வளவு நாள் நான் உன்னை காப்பாத்த முடியும்? நீ ஏதாவது உத்தியோகம் பார். நீ தனியா இருக்கறது தான் நல்லது...”

“என்னடா சொல்றே? நான் எங்கே போவேன்? எனக்கு யார் வேலை தருவா?”
தம்பி மனைவி பத்மா சொன்னாள்.

“மன்னி....யாரும் யாருக்கும் பாரமா இருக்கக் கூடாது. உங்களுக்கு நாலு தையல் மிஷின் வாங்கித் தர்றோம்...உங்களுக்கு தையல் தெரியுமே.

அப்புறம் என்ன...அழகா சுய தொழில் பண்ணலாமே...”

மருமகள் பத்மாவை கண்டிக்காமல் அப்பாவும் அம்மாவும் அவள் சொல்வதில் நியாயம் இருக்கிறது என்றார்கள். திடுக்கிட்டுப் போனாள் சொர்ணா. விதவையாகி குழந்தையையும் அவள் இழந்து தவித்த போது ஆதரவாக நின்ற அவர்களா இப்படி கழற்றி விடுகிறார்கள்? இது தான் உலகமா?

“என்னம்மா இப்படி சொல்றே? நீயாவது தம்பியிடம் சொல்லக் கூடாதா?

உங்களையெல்லாம் நம்பித்தானே நான் அந்த வெங்கடேசனின் குழந்தையை வாங்கிக் கொண்டேன். அந்தக் குழந்தைக்கு மூன்று வயசு. நானா எங்கே போய் குழந்தையுடன் வாழ்வேன்? சொல்லும்மா அவனிடம்..”

அவர்கள் மகனை அண்டி வாழ்கிறவர்கள். அவர்கள் எந்த முடிவை எடுக்க முடியும்? மகனோடு இருந்தால் சோத்துக்கு வழி கிடைக்கும். மகளோடு போனால் ஒரு வாய் கஞ்சி கூட கிடைக்காது. அவள் இங்கு இருக்கட்டும் என்று சிபாருசு பண்ணினால், அவர்களுக்கும் கெட் அவுட் தான். அவர்கள் மெளனமாக இருக்க...சொர்ணா கதி கலங்கிப் போனாள்.

“வீடு பார்த்து தையல் மிஷின் வாங்கிப் போடறோம். பயப்படாதேங்க நிறைய பேர் இப்ப பாஷன் டிசைனராக ஆகி கொடி கட்டிப் பறக்ராங்க..”

பத்மா முடிவே பண்ணிவிட்டாள். சொர்ணாவிற்கு தம்பி தன்னை அவமானப்படுத்திவிட்டான் என்று தாங்க முடியாத கோபமும் துக்கமுமாக தொண்டையை அடைத்தது. பிரச்னைகள் வந்தால் எப்படி சமாளிப்பது என்று அவள் யோசிக்கவே மாட்டாள். உடனே டென்ஷன் ஆகிவிடுவாள். விபரீதமான முடிவுகள் தான் அவளுக்கு தீர்வாகத் தோன்றும். பத்மாவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசமுடியாது. தம்பியை நெருங்கி பேசவே விட மாட்டாள் அவள். தையல் வேலை செய்து தானா தான் பிழைக்க வேண்டும்? அவ்வளவு மோசமான நிலைமையா எனக்கு? அன்று இரவே குழந்தை சங்கீதாவை தூக்கிக் கொண்டு சொர்ணா வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டாள். தெரிந்தவர் வீட்டில் இரண்டு நாள் தங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி தங்கினாள். குழந்தையை கொண்டு போய் வெங்கடேசனிடம் சேர்த்துவிடுங்கள் என்று அவர் விலாசம் எழுதி வைத்துவிட்டு குழந்தையையும் விட்டுவிட்டு தற்கொலை செய்ய ஆனந்தனின் கார் முன் வந்து விழுந்தாள். இது தான் அவளுக்குத் தெரிந்த தீர்வு. ஆனால் அவள் முன் ஜென்ம செய்த புண்ணியம் அவளுக்கு கை கொடுத்தது. ஆனந்தன் மூலம் அவளுக்கு நல்ல தீர்வை கொடுத்தார் கடவுள். அவளுக்கு அதிர்ஷ்டம் ஆனந்தன் ரூபத்தில் வந்தது. அவள் கதையைக் கேட்டு இரக்கப்பட்டு அவளை அன்புடன் நடத்தினார் ஆனந்தன். சங்கீதா தன் குழந்தை இல்லை என்று அவள் ஆனந்தனிடம் சொல்லவேயில்லை. மெல்ல மெல்ல சொர்ணா ஆனந்தனின் மனதில் இடம் பிடிதாள். அது விரைவில் கல்யாணத்தில் முடிந்தது. சங்கீதாவை கூட்டி வந்துவிட்டாள். அவள் எழுதிய கடிதத்தை அவர்கள் பார்க்கவே இல்லை. அது கிழிந்து போயிருந்தது. நல்லது தான். இல்லை இந்நேரம் சங்கீதா அவள் அப்பா வெங்கடேசனுடன் சேர்ந்திருப்பாள். அந்த சமயம் சொர்ணாவிற்கு சங்கீதாவை பிரிய மனமில்லை.



ஆனந்தனுக்கு சங்கீதா மேல் அளவற்ற பிரியம் வந்தது. குழந்தை துருதுரு வென்று புத்திச்சாலித்தனம் நிறைந்த அழகான குழந்தையாக இருந்தது.

அந்தக் குழந்தைகாகவே சொர்ணாவை ஆனந்தன் கல்யாணம் பண்ணிக் கொண்டார் என்று சொல்லலாம்.



சின்ன நடையும்...மழலை பேச்சும்...அளித்த இன்பத்தை பாக்கியமும் ரசித்தாள். சொர்ணாவும் குழந்தையை நேசித்தாள். அவளுக்கு வாழ்க்கை நிம்மதியாகப் போய்க்கொண்டிருந்தது. எல்லாம் சித்தார்த் பிறக்கும் வரை தான். அவன் பிறந்த பிறகு சொர்ணாவுக்கு சங்கீதா இரண்டாம் பட்சமாக

போய்விட்டாள். ஆனந்தனுக்கு அது புரிந்தது. சிலர் பையன் பொறந்ததும் பெற்ற பெண்ணை இப்படித்தான் இரண்டாம் பட்சமாக நடத்துவார்கள். நிறைய வீடுகளில் அதை அவர் பார்த்திருக்கிறார்.

“தம்பியை கவனி.....அவன் முதலில் சாப்பிடட்டும்...நீ அப்புறம் சாப்பிடு..” என்று பையனுக்கு ஏகப்பட்ட சலுகை தருவார்கள். சொர்ணாவும் அவர்களில் ஒருத்தியாக மாறிவிட்டாளே என்று வருந்தினார்.

“ஏய்...சொர்ணா சங்கீதாவும் உன் பிள்ளை தானே? எதுக்கு இருவருக்குள்ளும் வித்தியாசம் காட்றே?” என்று தனிமையில் கண்டித்தார். சொர்ணா கேட்கவில்லை. அன்புக்கு ஏங்கிய குழந்தை சங்கீதாவிடம் ஆனந்தன் கூடுதல் அன்பை காட்டினார். அவளை புறக்கணிக்கப்பட்ட குழந்தை என்று உணராதவாறு கவனித்துக் கொண்டார். அவளை ஒரு ராஜகுமாரி போல் பார்த்துக் கொண்டார். துபாயில் வேலை பார்த்தாலும், விடுமுறையில் வரும்பொழுதெல்லாம் சங்கீதாவை தான் பெற்ற குழந்தையைப் போல் பார்த்துக் கொண்டார். சித்தார்த்திடம் நீ அக்காவை நேசிக்கணும் அவளை

தனி கவனத்துடன் பார்த்து அன்பு செலுத்தணும் என்ற எண்ணத்தை ஊட்டி ஊட்டி வளர்த்தார். சொர்ணாவுக்கு அவரின் இந்த நடவடிக்கை பிடிக்கவில்லை. தன் அதிருப்தியை காட்டினாள்.

“சித்தார்த் நமக்கு பிறந்த குழந்தை. நீங்க பெற்ற பிள்ளை. அப்படியிருந்தும்

ஏதோ சங்கீதா தான் உங்கள் மகள் போல் அதிக பாசம் காட்றீங்க. நீங்க தான் வித்தியாசம் காட்றீங்க.. இது நியாயமா?.”

“நியாயத்தைப் பத்தி நீ பேசறயா? சொர்ணா, சங்கீதாவும் நீ பெற்ற பிள்ளை தானே? ஏன் இந்த பாரபட்சம்? பெற்ற பிள்ளைகளில் ஆண் பிள்ளை என்ன உசத்தி பெண் பிள்ளை என்ன குறைச்சல்? இது உனக்கு நியாயமா படுதா?”
“சங்கீதா ஒன்றும் என் பெண் இல்லை...” என்று வாய் தவறி ஆத்திரத்தில் சொல்லிவிட்டாள். திடுக்கிட்டுப் பார்த்தார் ஆனந்தன். இது தான் விஷயமா?

இந்த உண்மையை அவள் இத்தனை வருஷங்கள் மறைத்திருக்கிறாள்.

“என்ன...உன் குழந்தை இல்லையா? நினச்சேன். பெத்தவளா இருந்தா இப்படி

நடந்துப்பாளா? அப்ப யார் குழந்தை அவள்? நீ எதுக்கு எடுத்து வளர்கிறே?”

“என் உயிர் ஸ்நேகிதி கமலாவின் குழந்தை. அவள் இறந்துவிட்டாள்.

குழந்தையை பார்த்துக்க யாருமில்லை. என்னை வளர்க்கும்படி சாகும்போது கேட்டுக் கொண்டாள். அதான் நான் எடுத்து வளர்க்கிறேன்.” என்று கூசாமல் பொய் சொன்னாள். அது அவளுக்கு கை வந்த கலை.

சொர்ணா பொய் சொல்கிறாள் என்று அவர் நினைக்கவேயில்லை.

“அப்படியா? அப்ப நிச்சயம் உன்னை பாராட்டணும். அதுக்காக நீ சித்தார்த் பிறந்த பிறகு சங்கீதாவை அலட்சியமா நடத்துவதை என்னால் அனுமதிக்கமுடியாது. இது நியாமே இல்லை.”

“இத பாருங்க...சித்தார்த் நம்ம குழந்தை. அவனுக்கு நாம் கொடுக்கிற அதே கவனிப்பை நாம் சங்கீதாவுக்கு கொடுக்க முடியாது. புரிஞ்சுக்கோங்க.”

அடிக்கடி அவர்களுக்குள் இந்த சண்டை நடந்துகொண்டே இருந்தது.



ஆனந்தன் குழந்தை சங்கீதாவை பார்த்து பிடித்துப் போய் தான் சொர்ணாவையே அவர் கல்யானம பண்ணிக் கொண்டார். அவரின் அக்கா பார்வதிக்கும் இப்படி ஒரு குழந்தை இருந்தது. மின்சாரம் தாக்கி இருவரும் கருகி இறந்த கொடுமை நடந்தது. சங்கீதாவை பார்க்கும் போது தன் அக்காவின் குழந்தையே நேரில் வந்துவிட்டது போல் அவருக்கு ஒரு

பரவசம். அது ஒரு ஆழ்ந்த பிடிப்பாக மாறிவிட்டது. சொர்ணாவின் அக்கிரமங்களை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சித்தார்த்துக்கு விலை உயர்ந்த உடைகள் வாங்குவாள். உணவும் தின்பண்டமும் அவனுக்கு பெரிய கடைகளிலிருந்து வரும். சங்கீதாவுக்கு ரோட்டு கடைகளில் கிடைக்கும் சீப்பான தின் பண்டங்கள் வாங்கித் தருவாள். பெரும்பாலும் கடலை மிட்டாயும்...தெருவில் விற்றுக் கொண்டு போகும் ஸோன் பப்டியும் தான். மணியடித்துக் கொண்டு விற்கப்படும் ஐஸ்கிரீம், வெஜிடபிள் பப்ஸ். வேர்கடலை...இது தான் கிடைக்கும். சித்தார்த்தை மட்டும் தனியே அழைத்துக்

கொண்டு போய் ரகசியமாக பால் அல்வா, முந்திரி கேக்,,,பாதாம் கீர் என்று வாங்கித் தருவாள். ஒளித்து வைத்து சாப்பிடச் சொல்வாள். சித்தார்த் அம்மாவுக்குத் தெரியாமல் அக்காவுக்கு கொடுத்து

“அம்மா கொடுக்கச் சொன்னா...சாப்பிடு அக்கா..:” என்று சொர்ணா இல்லாத போது தருவான். சில சமயம் சொர்ணா அவளுக்குத் தெரிந்தே அப்படி செய்வாள். ஆப்பிள் துண்டங்களை நறுக்கி அவனுக்கு மட்டும் தட்டில் கொடுப்பாள். மாதுளையை பிரித்து முத்துக்களை தட்டில் வைத்து அவனிடம் மட்டும் நீட்டுவாள். “சங்கீதா..சித்தார்த்த் ஆண்பிள்ளை இல்லையா? உன்னை பார்த்துக்க வேண்டியவன் அவன் தான். அதுக்கு ஸ்ட்ரென்த் வேணுமில்லையா. அதான் இதெல்லாம் தரேன்.” பாதாம் பிஸ்தா கொடுத்து இதையே தான் சொல்வாள். “அப்பா இன்னும் நிறைய சம்பாதிக்கட்டும் உனக்கும் வாங்கித் தாரேன்...சரியா..” என்பாள் அன்பொழுக.

“சரிம்மா...தம்பி நல்லா ஸ்ட்ராங்கா ஸ்பைடர் மேன் மாதிரி வளரட்டும்.”

என்று அதனை இயல்பாக எடுத்துக் கொண்டாள் சங்கீதா. அவள் ஸ்நேகிதிகள்

பலரும் தங்கள் வீட்டில் அம்மாக்கள், அண்ணனையோ தம்பியையோ இப்படி பாரபட்சமாக நடத்துகிறார்கள் என்று புலம்புவதை கேட்டிருக்கிறாள்.. எனவே இது தான் இயல்பு என்று எண்ணிக் கொண்டாள்.



ஒரு நாள் சித்தார்த் காலில் அடிபட்டுக் கொண்டு வர...காலில் ரத்தம் வழிந்தது. சொர்ணா பதறிவிட்டாள். அப்பொழுது ஆனந்தனும் இருந்தார்.

அம்மாவுக்குத் தெரியாமல் கிரிக்கெட் விளையாடிய குட்டு வெளிப்பட்டுவிடும் என்ற பயத்தில் சித்தார்த் அக்கா மேல் பழியைப் போட்டான்.

“அக்கா தான் தள்ளிவிட்டாள் அம்மா..”

தம்பி கிரிக்கெட் விளையாடி அடி பட்டுக் கொண்டான் என்று சொன்னால் அவனுக்கு அடி விழும். அதனால் சங்கீதா மறுப்பு தெரிவிக்காமல் நின்றாள்.

தம்பியை அவள் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை.

“சங்கீதா...செய்யற தப்பையும் செஞ்சிட்டு....மன்னிப்பு கூட கேக்காம நிக்றயே.”

சங்கீதாவுக்கு அடி விழுந்தது. ஆனந்தன் வந்து தடுக்காவிட்டால் அவளுக்கு

செமத்தியாக அடி விழுந்திருக்கும்.

“இத பார் சொர்ணா.....உன் பையன் முழிக்கிற முழியே சரியில்லை. உன் பேச்சை மீறி கிரிக்கெட் விளையாடியிருப்பான். அடிபட்டுகிட்டு வந்து நிக்றான்.

கிரிக்கெட் விளையாடியது தெரிஞ்சா நீ அடிப்பே அதான் பொய் சொல்றான். இன்னொரு முறை என் பெண் மேல் கை வச்சே கொன்னுடுவேன்..”

“என்னது? உங்க பொண்ணா? அப்ப சித்தார்த் யாரு? தெருவிலே போறவனா?

உன் பையன்னு சொல்றீங்க..”



தனிமையில் சொர்ணாவுக்கு நிறைய அட்வைஸ் பண்ணினார் ஆனந்தன்.

“அவங்க ரெண்டு பெரும் நம் குழந்தைகள் சொர்ணா. வித்தியாசம் காட்டாதே.

சங்கீதா நல்ல பெண். அதான் அதை குற்றமா எடுத்துக்கலை. அதை உனக்கு சாதகமா பயன்படுத்திக்காதே...நீ உன் இறந்த சிநேகிதிக்கு செய்யற துரோகம் இது. உன்னை நம்பி தானே விட்டிட்டு போயிருக்கா?”

“துரோகம் அது இதுன்னு சொல்லி சின்ன விஷயத்தை பெருசு படுத்தறீங்க.”

ஆனந்தனுக்கு வருத்தமாக இருந்தது. அடிக்கடி துபாய் வேறு போய்விடுவதால் சங்கீதா இவளிடம் என்ன பாடு படுகிறாளோ என்று கலங்கி

தவித்தார். துபையிலிருந்து அடிக்கடி ஈமெயில் பண்ணுவார் சந்கீதாவுக்கு.



ஒரு முறை விமான நிலையத்துக்கு வெங்கடேசன் துபாய் போகும் தன் நண்பனை வழி அனுப்ப போயிருந்தார். அங்கு ஆனந்தனும் துபாய் போக லவுஞ்சில் உட்கார்த்திருந்தார். வெங்கடேசனும் அவர் நண்பரும் பேசுவது அவர் காதில் விழுந்தது. இவர் உட்கார்ந்திருப்பதை அவர்கள் பார்க்கவில்லை. அவர்கள் பேசுவது அங்கே உட்கார்ந்திருந்த ஆனந்தனுக்கு கேட்டது. காது கேட்கும் தூரத்தில் தான் அவர் அமர்ந்திருந்தார். அவருடன் வெங்கடேசன் பேசிக் கொண்டிருந்தார். அகஸ்மாத்தமாக ஒரு பெரிய உண்மை அப்பொழுது ஆனந்தனுக்கு தெரிய வந்தது. ஆனந்தன் வெலவெலத்துப் போனார்.

“என்ன வெங்கடேசன் உன் மனைவிக்கு இப்ப எப்படி இருக்கு? “

“அதே நிலைமை தான். எவ்வளவோ வைத்தியம் பார்த்தாச்சு...”

“நீ செய்தது ரொம்ப தப்பு வெங்கிடு. யாராவது பெற்ற மூணு மாச குழந்தையை தூக்கி கொடுப்பாங்களா?...அந்த சொர்ணா ஒரு ராட்சசி. இப்படி கூட சுயநலமா ஒரு பொம்பளை இருப்பாளா?”

“என்ன செய்யறது? விபத்து என்னால் நடந்தது. அந்த அதிர்ச்சியில் சொர்ணாவின் குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டது. அவள் விதவை வேறு. அவளுக்கு இருந்த ஒரே ஆதரவை நான் கொன்னுட்டேன். அந்த குற்ற உணர்வு என்னை இப்படி செய்ய வச்சிடுச்சு.”

“உனக்குத் தெரியுமா அந்த சொர்ணா ஆனந்தன் என்ற ஆளைக் கல்யாணம் பண்ணிக் கொண்டது.? சித்தார்த்துன்னு ஒரு பிள்ளையை பெத்துக்கிட்டது?...வேஸ்ட்டா ஒரு தியாகம் பண்ணியிருக்க. இதனாலே உன் மனைவி புத்தி பேதலிச்சு வருஷக் கணக்கா குணமாகாம இருக்காங்க....தேவையா உனக்கு?...வயத்தெரிச்சலா இருக்கு. போய் பிள்ளையை பிடுங்கிட்டு வரவேண்டியது தானே?”

“எப்படி முடியும்? எக்காரணத்தை கொண்டு குழந்தையை கேக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணியிருக்கேனே?”

“பெரிய சத்தியம். அந்த போக்கத்தவளாவது...எனக்கு பிள்ளை பிறந்துடுச்சு இந்தாங்க உங்க குழந்தைன்னு கொடுக்க வேண்டாம்? மனசாட்சி இல்லாதவ.”

அந்த நண்பன் விலாவாரியாக நடந்ததை சொல்ல...ஆனந்தனுக்கு அந்த சொர்ணா தன் மனைவி தான் என்று புரிந்தது. வெங்கடேசன் ஏன் குழந்தையை கொடுத்தார்? அதனால் அவர் மனைவி மங்களத்துக்கு நேர்ந்த கதி என்ன?....மங்களத்துக்கு பிறக்க இருந்ததாக கருதப்பட்ட குழந்தை முத்துப் பிள்ளை ஆகிவிட்ட அவலம்.....எல்லாம் அவர்கள் பேச்சில் வெளிவந்தது.

“நீ போய் பார்க்கவே இல்லையா உன் மகளை?” என்று கேட்டார் நண்பர்.

“பார்த்திருக்கேன். வெகு தூரத்தில் நின்னு பார்ப்பேன். அவளுக்கு சந்தேகம் வந்திடக்கூடாது இல்லையா?”

வெகு தூரத்தில் நின்று பார்த்திருக்கிறார். ரசித்திருக்கிறார். ஆனால் அது அவருக்கு திருப்தியை தந்ததில்லை. ஜாடை கூட சரியாகத் தெரிந்ததில்லை.

“அருகில் நின்று பார்த்தது இல்லை...பார்த்தால் மனசு தடுமாறும். வாக்கு மீற தோணும்..அதான் பாசத்தை அப்படியே அடக்கி வச்சிருக்கேன்...” வெங்கடேசன் சொல்லிவிட்டு குலுங்கி அழுதார். பிறக்கப் போவதாக எண்ணிய குழந்தையை நம்பி சங்கீதாவை தூக்கி கொடுத்துவிட்ட அவர் உயர்ந்த மனசை புரிந்து கொண்டார் ஆனந்தன். சொர்ணாவின் சின்ன புத்தியும் புரிந்தது. மனம் கனத்துப் போயிற்று. வெங்கடேசனின் பெருந்தன்மையை பயன்படுத்திக் கொண்டு சொர்ணா பண்ணிய அநியாயத்தை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால் சங்கீதா அவருக்கு செல்லப் பிள்ளை ஆனாள்.



நாளுக்கு நாள் சங்கீதாவை சொர்ணா உள்ளூர வெறுப்பதை புரிந்து கொண்டார் ஆனந்தன். அதுவும் அவர் அம்மா பாக்கியம் இறந்து போனது இவளுக்கு சௌகர்யமாகப் போயிற்று. ஏன் என்று கேட்க பெரியவர்கள் யாருமில்லை. இவரும் காடாறு மாசம் நாடாறு மாசம் என்கிற நிலை.

சங்கீதாவுக்கு என்ன தலையெழுத்தா...இப்படிப்பட்ட அன்பற்றவளை தாய் என்று எண்ணி அவமானங்களை ஏற்பதற்கு? அழகாய் அவள் மேல் உயிரையே வைத்திருக்கும் தாய் தந்தை இருக்கிறார்கள். இந்தப் போலி குடும்பம் அவளுக்கு எதுக்கு? சங்கீதாவோ சொர்ணாவின் வெறுப்பை புரிந்து கொள்ளவில்லை. அது சொர்ணாவின் சாமர்த்தியமா? இல்லை சங்கீதாவின் கண்மூடித்தனமான அன்பா? எது என்று சொல்வதற்கில்லை .இரண்டுமே என்று தான் தோன்றியது. அன்பு செலுத்தும் மனம் படைத்தவள் சங்கீதா.



வெங்கடேசன் பெண் கேட்டு வந்தபோது இது நல்ல சந்தர்ப்பம் என்று மகிழ்ந்தார் ஆனந்தன். சங்கீதாவை சந்திரனுக்கு கட்டிக் கொடுத்துவிடலாம். சங்கீதாவுக்கு இந்த போலி அம்மாவிடமிருந்து விடுதலை கிடைக்கும். அப்பாவி வெங்கடேசன் தன் மகளுடன் இப்பவாவது சேர்ந்து வாழட்டும். அவர் மனைவி மனநலம் பெற்று மகிழட்டும் என்று எண்ணினார்.

“சொர்ணா...சங்கீதாவை சந்திரனுக்கே கட்டிக் கொடுத்திடலாம். உனக்கும் பிரச்சனை இல்லை. அவளுக்கும் நல்ல மாட்ச் கிடைத்த மாதிரி இருக்கும்.” என்றார். பொங்கி எழுந்துவிட்டாள் சொர்ணா.

“என்ன...ப்ளான் போட்டதே நீங்க தானா? எப்படியாவது சங்கீதாவை அவங்க கிட்டே கொடுத்திடணும்...அது தானே உங்க ஆசை. எனக்கு சங்கீதா வேணும். மகள் என்ற முறையில் அவள் தான் என்னை பிற்காலத்தில் பார்த்துக்குவா. அங்க கல்யாணம் பண்ணிக் கொடுத்திட்டா அவ்வளவு தான் அவள் மேல் நமக்கிருக்கும் பிடிப்பு போயிடும். நான் இதுக்கு சம்மதிக்கவே மாட்டேன்.”

“உன்னை பார்த்துக்குவா சரி.....நீ அவளை வேலைக்காரி மாதிரி தானே பார்த்துப்பே. சொர்ணா...இது தான் நல்ல சந்தர்ப்பம். நீ செய்த பாவத்துக்கு பரிகாரமா அவங்க மகளை அவங்க கிட்டே கொடுத்துடு.”

“அவ நான் கொண்டு வந்த குழந்தை. எனக்குத் தான் உரிமை அதிகம். நீங்க இதிலே தலையிட வேண்டாம். சங்கீதா நான் சொன்னதை தான் கேப்பா.”

“உன் கிட்டே பேசிப் பிரயோஜனம் இல்லை. நான் இதுக்கு சம்மதிக்கப் போறேன். உன் ஒப்பினியன் தேவையில்லை.”

“அபப்டியா...நான் செத்துப் போவேன். என் பிணத்துக்கு மேல் தான் இந்தக் கல்யாணம் நடக்கும்.” என்று பயமுறுத்தினாள். தீக்குளிப்பேன் என்றாள். சிதார்த்தை தூக்கிக் கொண்டு ஓடிப் போய்விடுவேன் என்று நாடகம் ஆடினாள். எனவே இந்த விஷயத்தை ஆறப் போடுவோம் என்று தான் வெங்கடேசனிடமும் சந்திரனிடமும் கடுமையாக நடந்து சொர்ணாவை ஆதரிப்பது போல் விரட்டிவிட்டார். சில சமயம் வெளிப்படையாக பேசுவது சரி வராது. அதுவும் சொர்ணா மாதிரி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களிடம் பிடிவாதம் அதிகம் இருக்கும். அவர்கள் போக்கில் போய் தான் காரியத்தை சாத்தித்துக்கொள்ள வேண்டும்.



அதற்குள் வெங்கடேசன் வியாதி பற்றி தெரிந்து கொண்டார். இனி தாமதிக்க

கூடாது என்று செயலில் இறங்கினார். சாகப் போகும் தந்தையோடு அவள் இருக்க வேண்டும். அவள் தாய் குணமாக வேண்டும். இனி சங்கீதா இங்கு இருக்கக் கூடாது. சொர்ணா சங்கீதாவைப் பற்றி வைத்திருந்த அபிப்பிராயம் கேட்டதும் அந்த எண்ணம் வலுப்பட்டது.

“ஏங்க...சங்கீதா படிப்பை முடித்துவிட்டாள். அவளை கைக்கு அடக்கமா உள்ள மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்து வீட்டோடு வச்சுக்கலாம். சேகருன்னு ஒரு பையன் இருக்கான். சொந்தமா ஆட்டோ ஓட்டறான்...ஜாதகம் லொட்டு லொசுக்கு எல்லாம் பார்த்திட்டேன்...அவனுக்கு உறவுன்னு யாரும் இல்லை. நீங்க துபாயிலே எவ்வளவு நாள் இருக்க முடியும்? இங்கு வந்ததும் நமக்கு ஆதரவா சங்கீதா இருப்பா. நாம முதியோர் இல்லம் எல்லாம் செல்லவேண்டியதில்லை....என்ன சொல்றீங்க?”

“ஏன்? உன் அருமை மகன் இருக்கும் போது எதுக்கு சங்கீதாவை வீட்டோடு மாப்பிள்ளையுடன் கட்டி போட வேண்டும்? உன் மகன் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா?”

“இருக்கு.....ஆனா வர்ற மருமக எப்படி இருப்பாளோ? இப்பவெல்லாம் மகன் இருந்தாலும் அனேக பெற்றோர் மகளுடன் தான் செட்டில் ஆகிறார்கள்.”

அவளின் கெட்ட எண்ணம் தெரிந்தபின் இவளோடு பேசி பிரச்சனையை சமாளிக்க முடியாமல் திண்டாடுவதை விட, சத்தமில்லாமல் சங்கீதாவை அவள் இருப்பிடத்தில் கொண்டு போய் விட்டுவிட வேண்டும் என்பது தான் நல்ல முடிவு என்று ஆனந்தன் தீர்மானித்தார். அதற்கு ஒரே வழி---தான் வில்லனாக ஆகிவிடுவது தான். சந்கீதாவிடமும் போய் திடீரென மொத்த கதையும் சொன்னால் அவள் எப்படி அதை எதிர்கொள்வாள் என்று தெரியவில்லை. எல்லோரிடமும் அன்பாய் இருக்கும் சங்கீதா சொர்ணாவின் ரெட்டை முகத்தை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது போகும். மனசை திடப்படுத்திக் கொண்டு சந்திரனைக் கூப்பிட்டு கடத்தல் நாடகத்தை தொடங்கி வைத்தார். சங்கீதாவுக்கு நல் வழி பிறக்கட்டும்.

“சங்கீதா எங்களுக்குத் தேவையில்லை. கடத்திக் கொண்டு போய்விடு.” என்று சந்திரனிடம் கடுமையாகக் கூறி அவன் முன் வில்லனானார். சங்கீதா தன்னை வெறுக்கவேண்டும் என்று பல வேஷங்கள் போட்டார். கிஷோரோடு தொடர்புபடுத்தி அவனுடன் ஓடிவிட்டாள் என்று சொல்லி சொர்ணாவை சமாளித்தார். சங்கீதாவை வரவழைத்து தான் கொலை செய்யப் பட்டுவிட்டது போல் நாடகமாடி பின் அவளுடன் பேசி அவளைக் குழப்பி.....இப்படி பல நிகழ்ச்சிகள் நடத்தி வெற்றி பெற்றார். சங்கீதாவுக்கு வெறுப்பு வரணும்.

அவர் நினைத்தபடி சங்கீதாவுக்கு அவர்கள் மேல் உள்ள ஒட்டுதலை வெட்டினார். அவருக்கு கஷ்டமாகத் தான் இருந்தது. ஆனால் வேறு வழியில்லை. ஒரு சின்னப் பெண் நன்றாக வாழ வேண்டுமானால் தந்திரம் செய்தாவது அவளை அனுப்பிவிட வேண்டும். பசுவிடம் கன்றை சேர்த்து விட வேண்டும். அவர் நினைத்தபடி நடந்தது.



தனிமையில் இதற்காக நிறைய அழுதார். பச்சைக் குழந்தை சங்கீதா. அவளை உயிருக்கு உயிராக மகளாகவே நேசித்தார். இப்படி இந்த ராட்சசியால் பிரிய வேண்டியுள்ளதே என்று மறுகினார். அவர் இந்த நடவடிக்கை எடுக்கா விட்டால் அந்த சேகருக்கு அவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிடும் அபாயம் இருக்கிறது. வீட்டோடு வைத்துக் கொண்டு சித்திரவதை செய்வாள்.

“எல்லோருக்கும் கெட்டவனானேன். பரவாயில்லை...என் மகள் உரிய

இடத்தில் இப்பொழுது பாதுகாப்பாக சந்தோஷமாக இருக்கிறாள். அதுவே போதும். என் மனசு நிறைந்துவிட்டது. கல்யாண வீட்டில் அவளைப் பார்த்து

சிரிக்காமல் முகத்தை திருப்பிக் கொண்டேன். அவளுக்கு எப்பொழுதும் அப்பா ஆனந்தன் ஒரு வில்லன் என்றே தோன்றவேண்டும். சொர்ணாவின் விஷக் காற்று அவள் மேல் படவேண்டாம். அவள் சித்தார்த்துக்கு நல்ல தாய். எல்லா சலுகைகளும் அவனுக்கு. பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை உணர்வு என்கிற சுமை மட்டும் சங்கீதாவுக்கு. இப்படி பேதம் பார்க்கும் சுயநல

சொர்ணாவின் எண்ணம் துளிக் கூட சங்கீதாவுக்கு வரவேண்டாம். இதில் அன்பிருந்திருந்தால் கூட மன்னிக்கலாம்....” பலவாறாக சிந்தித்த ஆனந்தன் பண்ணை வீட்டில் தனக்குத் தானே ஆறுதல் தேடிக் கொண்டிருந்தார்.



“நமக்கு மகள் இல்லை என்ற கவலையில்லை. சங்கீதா நம் வயசான காலத்தில் நம்மை தாங்கிப் பிடிப்பாள். அவளை அப்படி ட்ரெயின் பண்ணியிருக்கேன்....’” என்று எத்தனை முறை பெருமைபட்டிருக்கிறாள்.

சொர்ணா! அவளுடைய தப்பான நோக்கம் கண்டு வெகுண்டார்.

இதற்குத் தானா பெற்றவரிடமிருந்து, அவர் இரக்கத்தை சம்பாதித்து

குழந்தையை பிரித்தாள்? அதை பற்றி அவள் துளியும் கவலைப்படவில்லை. இப்படிப்பட்ட புல்லுருவிகள் உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனந்தனுக்கு மட்டும் உண்மை முதலிலேயே தெரிந்திருந்தால் எப்போதோ

சங்கீதாவை அவள் பெற்றோரிடம் ஒப்படைத்திருப்பார்.



ஆனந்தன் சங்கீதாவின் சின்ன வயசிலிருந்து எடுத்த புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த ஆல்பமும் இனிய நினைவுகளும் தான் அவருக்கு துணை. நீரில் தெரியும் நிலா போல் அழகான நினைவுகள்.

“சங்கீதா..என் செல்லமே, நான் உன் அப்பா இல்லை தான். ஆனால் என் மனதில் ஒரு தந்தைக்குரிய பாசம் வெள்ளமாக இருக்கிறதம்மா. நீ என்னை மறக்கணும்...வெறுக்கணும். அப்ப தான் உன் வாழ்க்கையை நல்லபடியாக ஆரம்பிப்பாய் என்று தான் இப்படி செய்தேன் அம்மா. குடை ராட்டினம் போல் உன் மனம் என் அன்பை நினைத்து சுற்றி சுற்றி வரக்கூடாது. நீ இங்கிருந்தால் சொர்ணாவின் சுயநல அன்பால் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் காயப்பட்டுப் போவாய். அந்தக் காயம் லேசில் ஆறாது. அது தான் உன்னை உரிய இடத்தில் சேர்ப்பிக்க, என் தூய அன்பை ரகசியமாக வைத்து உன்னை காப்பாற்றி இருக்கிறேன். நீ நல்லாயிருக்கணும் குழந்தே. சந்திரனிடம் உன்னை ஒப்படைத்துவிட்ட போது என் மனம் எல்லையில்லா நிம்மதி அடைந்தது தெரியுமா?” தனக்குள் பேசிக் கொள்வார்.

சந்திரனுடன் அவருக்கு ஏற்பட்ட அந்த மனதை உலுக்கிப் போட்ட சந்திப்பை அவர் மறக்கவேயில்லை. சந்திரன் முகத்தில் தான் எவ்வளவு கோபம்!

“இத்தனை வருடங்கள் அவளை மகளாக வளர்த்து பாசம் காட்டிவிட்டு அவளை கடத்திக் கொண்டு போகச் சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வந்தது? நீங்க என்னதான் நினச்சிட்டிருக்கீங்க? அவள் என்ன பொம்மையா?”

“அவள் இப்போது எனக்கு சுமை. புரிகிறதா? நீ கடத்திக் கொண்டு போகிறாயா இல்லை அவளை அநாதை ஆஸ்ரமத்தில் சேர்த்து விடவா?”

ஆனந்தனுக்கு தெரியும் இந்த கொடூர வார்த்தைகள் சந்திரனை எவ்வளவு காயப்படுத்தும் என்று. ஆனாலும் சொல்ல வேண்டிய கட்டாயம்.

“சீ..நீயெல்லாம் ஒரு மனுஷனா? “ என்று வார்த்தைகளை துப்பினான்.

அவர் அதை துடைத்து விட்டுக் கொண்டார். முகத்தில் துப்பியது போல் தான் இருந்தது. சந்கீதாவுக்காக பொறுத்துக் கொண்டார்.

“உன் விமர்சனம் பற்றி எனக்கு கவலை இல்லை. நீ மனுஷனாக இருந்தால் அவளை நன்கு பார்த்துக் கொள்ளேன் யார் வேண்டாம் என்றது?”

“கண்டிப்பாக. நீ காட்டிய போலி அன்பிலிருந்து அவள் மனம் விடுபடுவது அவ்வளவு சுலபமில்லை. இரண்டு வருடம் முன் அவளை எனக்கு கட்டிக் கொடுக்க முடியாது என்று ஆட்டம் போட்டது நிஜமா? இல்லை இன்று அவளை இழுத்துக் கொண்டு போய்விடு என்பது நிஜமா? நாங்கள் பெண் கேட்டு வந்ததை அவளுக்குத் தெரியாமல் மறச்சிட்டீங்க. இப்ப துரத்தி விடுவதையும் அவளுக்குத் தெரியாம செய்றீங்க...என்னைத் தான் அவள் வில்லன்னு நினைப்பாள்...நல்ல வேஷம்..”

“உன் கூட நான் பேசத் தயாரில்லை. சொன்னதை செய்..”

கடுமையாக சொல்லி முறைத்தார் ஆனந்தன். சந்திரன் அவளை எவ்வளவு தூரம் நேசிக்கிறான் என்று தெரிந்த பின் தான் தைரியமாக இந்தக் காரியத்தில் இறங்கினார் அவர். அவன் தாயும் தந்தையுமானவன். சங்கீதா அவனிடம் பத்திரமாக இருப்பாள்..அந்த நம்பிக்கை அவருக்கு இருந்தது.



வீட்டுக்கு வந்த பின்னும் சங்கீதாவின் ஆல்பத்தை அவர் பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்தாள் சொர்ணா. அவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. முகம் சுளித்தாள். கத்தினாள்.

“போதும் அந்த துரோகிப் பெண்ணின் ஆல்பத்தை நீங்க பார்த்தது.”

“கல்யாண ஆல்பம்டீ...சும்மா தான் பார்த்திட்டிருக்கேன். ஒரு ஞாபகார்த்தமா இருக்கட்டும் என்று சந்திரன் முன்பு கொடுத்தான். ஒரு இதுக்கு பார்க்கிறேன்..”

“எதுக்கும் பார்க்க வேண்டாம். கிஷோரோடு ஓடிப் போனா. அவன் அவளை நட்டாத்தில் விட்டிட்டுப் போயிட்டான். பிறகு சந்திரனை கவுத்திட்டா. போயும் போயும் அந்த குடும்பத்தில் போய் ஒட்டிக்கிட்டா. பாசம் காட்டி வளர்த்தேனே...நன்றி கெட்டவள். மோசம் பண்ணிட்டா. என் தம்பி அஸ்வினைக் கூட இவளுக்காக விட்டேனே..” ஒப்பாரி ஆரம்பமாயிற்று.

“எத்தனை தரம் இதே சொல்வே? ஒ...பாசம் காட்டி வளர்த்தே. இன்நேரம் ஒரு வேலையில்லா பட்டதாரிக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்து...அவளை வேலைக்காரியா வச்சிருந்திருப்பே. அஸ்வினை நீ விட்டியா? இல்லை அவன் உன்னை விட்டானா? அப்படியே உண்மைகளை புட்டு புட்டு வைக்கிறே...எவ்வளவு நல்ல மனசு உனக்கு....சொர்ணா உன்னோடு நான் எதுக்கு தெரியுமா இருக்கேன்? சித்தார்த்துக்காக. சீ நீ ஒரு மொம்பளையா?” என்று நான்கு நுனி வரை வந்த வார்த்தைகளை உள்ளே தள்ளினார் ஆனந்தன். உண்மையற்றவர்களிடம் போய் எதையும் நிரூபிக்க முடியாது. அவர்களை கன்வின்ஸ் பண்ணவும் முடியாது. அவள் பேச்சை ஒரு காதில் வாங்கி மறு காதில் விட கற்றுக் கொண்டார். பாரத போரில் சில நல்லது நடக்க கிருஷ்ணன் பல தந்திரம் செய்கிறார். அதில் ஒன்று தான் பொழுது சாய்ந்துவிட்டது என்ற மாயையை உண்டு பண்ணி தர்மரை காப்பாற்றினார். அது போல் தந்திரம் செய்து சங்கீதாவை காப்பாற்றிவிட்டார். சங்கீதா என்னும் சின்னஞ் சிறு பறவை சங்கீதம் பாடவேண்டும் என்று பல தந்திரங்கள் செய்தார். தான் செய்தது சரிதான் என்று அவர் மனம் திருப்தி அடைகிறது. வானவில்லை கருப்பு மேகங்கள் கொண்டு மூடலாமா?

“என் மகள் வாழ வேண்டுமென்று நான் வில்லனாகி விட்டேன். பரவாயில்லை...இட்ஸ் எ ப்ளேஷர்..” என்று சொல்லிக் கொள்கிறார்.



மகள் சங்கீதாவின் முகத்தை பார்க்காமல் இருக்க முடியுமா? அவள் குழந்தைகளோடு கடற்கரைக்கு வரும்போது அங்கே ஆனந்தன் ஆஜார்.

அவள் குடும்பத்தோடு சிரித்து விளையாடுவதை ரகசியமாக நின்று ரசிக்கிறார். முன்பு வெங்கடேசன் ஒளிந்து நின்று மகளைப் பார்த்த மாதிரி இன்று ஆனந்தன் மகளை ஒளிந்து நின்று பார்கிறார். சுண்டல் வியாபாரியாக முண்டாசை சுற்றிக் கொண்டு அரை இருட்டில் வந்து அவளுக்குப் பிடித்த தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டலை விற்கிறார். மகள் கொடுக்கும் காசை கை தொட்டு வாங்குகிறார். மகளின் பாச ஸ்பரிசம் அவருக்கு ஆனந்தத்தை தருகிறது. தேங்க்ஸ் பெரியவரே....என்று சொல்கிறாள். முண்டாசால் மறைக்கப்பட்டுள்ளது அவர் முகம். அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. சிலர் வெளிச்சத்தில் இருக்க வேண்டுமென்றால் சிலர் இருட்டில் தான் இருக்க வேண்டி வரும். யாரோட மொபைலிலிருந்தோ அந்தப் பாடல் கேட்கிறது. அவருக்கு பொருத்தமான பாட்டு. அந்தப் பாட்டு அவர் சிந்தையை குளிர்விக்கிறது

“அவள் எனக்கா மகளானாள்.? நான் அவளுக்கு மகனானேன்.

என் உரிமைத் தாயல்லவா....

அவள் பறந்து போனாளே...”

கண்ணதாசன் பாட்டு அவருக்காகவே ஒலித்தது. கண்ணில் நீரும். உதட்டில் புன்னகையும் ஒரு சேர தோன்ற அந்த அன்பின் ஊஞ்சலாட்டத்தில்

அவர் மனம் சுகம் காண்கிறது.


ஊஞ்சல் ஆடும்...
 
Top