கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அன்பென்னும் ஊஞ்சலாட்டம் - அத்தியாயம் 15

sankariappan

Moderator
Staff member
அத்தியாயம்-15



சித்தார்த் திருமணமாகி மனைவி அகல்யாவுடன் அமெரிக்கா சென்றுவிட்டான். சொர்ணாவுக்கு எல்லாமே தன் கைவிட்டுப் போய்விட்டது போல் பிரமை ஏற்பட்டது. கணவனிடம் சொன்னாள்.

“நான் சொல்லலை...சித்தார்த் கூட்டை விட்டு பறந்துவிடுவான்னு? சங்கீதா மட்டும் அந்த மாமா மகனோடு ஓடாமல் இருந்திருந்தால் நமக்கு துணையாக இருந்திருப்பாள்...எல்லாம் உங்களால் வந்தது. அதிக செல்லம் கொடுத்து கெடுத்திட்டீங்க....அவளை கோட்டை விட்டுவிட்டோம். இப்ப அனாதையா இருக்கோம்.” இப்பவும் சங்கீதாவைத் தான் குறை சொல்கிறாள். சித்தார்த்தை அல்ல. ஆனந்தன் சிரித்தார். இவள் மாறவே இல்லை. மாறவும் மாட்டாள். தவறு அவள் மேல் தான் என்று அவள் உணரவே இல்லை.

“என்ன சிரிப்பு வேண்டி இருக்கு? உங்களுக்கு என்ன உங்களை கவனிக்க நான் இருக்கேன். எனக்கு ஆதரவு யார்? பெண் குழந்தை இருந்தால் எவ்வளவு சௌகரியம் தெரியுமா? அக்கடா என்று இருக்கலாம்...”
“உனக்கு ஒன்று சொல்லட்டுமா சொர்ணா? பிள்ளைகள் மகிழ்ச்சியாக அவரவர் வாழ்க்கையை வாழ விடணும். உனக்கு துணை நான். எனக்குத் துணை நீ.

எப்பவுமே சுயநலமா யோசிக்காதே. சங்கீதாவுக்கு பொருத்தமானவன் தான் சந்திரன். மங்களத்தம்மாள் மகளுடன் சேர்ந்த பிறகு தான் மன நலம்

பெற்றார்கள். போய் சேரவேண்டிய இடத்துக்கு சங்கீதா போய் சேர்ந்துவிட்டாள். சந்தோஷப்படு.”

“எப்படி சந்தோஷப்பட முடியும்? லாட்டரி அடித்தது. ஆனால் பணம் கைக்கு வரவில்லை. காரணம் லாட்டரி டிக்கெட் தொலஞ்சு போச்சு. அப்படி ஆகிவிட்டது என் கதை. சங்கீதாவை நான் எப்படியாவது தக்க வைத்துக் கொண்டிருக்கவேண்டும். அந்த சேகர்---அதான் சங்கீதாவுக்கு நான் பார்த்த மாப்பிள்ளை---வேறு பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொண்டு மாமியார் வீட்டோடு இருக்கிறான். மாமனாருக்கு முதுகு தேச்சி விடறான். மாமயாருக்கு எடுபிடியாக இருக்கிறான். எவ்வவளவு நல்ல பையன்.

சங்கீதா ஓடாமல் இருந்திருந்தால்...இன்று அவன் நம் மாப்பிள்ளையாக இருந்திருப்பான்...எல்லாம் போச்சு...நன்றி கெட்ட ஓடுகாலி...”

இவளுக்கு பதில் சொல்லி தன்னை அசிங்கப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று ஆனந்தன் அமைதி காத்தார்.



சங்கீதாவை அவர் பல முறை ஒளிந்து ஒளிந்து பார்ப்பது தொடர்கிறது. பார்க்கிற்கு அடக்கடி வருகிறாள். குழந்தைகளை விளையாட விட்டு, அவள் பார்க் பெஞ்சில் உட்கார்ந்து சினேகிதிகளுடன் பேசிக் கொண்டிருப்பாள். மரத்தின் கிளை பரந்து விரிந்து இருக்கும். அந்த மறைப்பை பயன்படுத்திக் கொண்டு ஆனந்தன் குழந்தைகளுடன் விளையாடுவார். அப்பொழுது அவருக்கு கிடைக்கும் ஆனந்தமே தனி. அது ஒரு தனி உலகம்...பேரன் பேத்தியோடு...

“கார்த்திக்...இந்தா புதுப் பந்து. நீ உன்னோடதை தொலைச்சிட்டே தானே?”

“தேங்க்ஸ் தாத்தா...எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. உங்க பெயரென்ன?” ஆர்வமுடன் கேட்டான்.

“என் பெயரா? உலகநாதன்...” அப்பொழுது வாய்க்கு வந்த பெயரை சொன்னார்.

ப்ரியாவுக்கு போர்டு கேம்ஸ் வாங்கித் தந்தார்.

“ப்ரியா...இது உனக்கு..”

“தேங்க்ஸ் தாத்தா. அம்மா கேக்றாங்க யார் அந்த வள்ளல்? எனக்கு தெரியாம நீங்க அவர் கிட்டே பழகறீங்க...எனக்கு அறிமுகப் படுத்துங்க...என்கிறாங்க.”

“அவர் ஒரு அன்பான மனுஷர். எல்லோர் கண்ணுக்கும் தெரியமாட்டார்.

மேஜிக் மேன்...அப்படின்னு சொல்லுங்க...”

நம் பிள்ளைகள் மேல் வைக்கும் பாசத்தை விட நம் பேரப் பிள்ளைகளின் மேல் வைக்கும் பாசம் பெருசு தான். ஆனந்தன் அவருக்கு கிடைத்த இந்த அரிய ரகசிய சந்தோஷத்தை யார் குறுக்கீடும் இல்லாமல் ரசித்தார்.





சித்தார்த்துக்கு குழந்தைகள் பிறந்தது. சொர்ணா அமெரிக்கா சென்று பார்த்து வந்தாள். ஆறு மாசம் இருப்பேன் என்று சொன்னவள் மூன்று மாசத்திலேயே திரும்ப வந்துவிட்டாள். அவள் முகம் வாடி இருந்தது.

“என்ன சொர்ணா அதுக்குள்ளே வந்திட்டே? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?”

என்று ஆனந்தன் கேட்டபோது கோவென்று அழது கொண்டு அவர் மார்பில் சாய்ந்தாள் அவள். அவர் கொஞ்சம் பதறினார்.

“ஏன் என்னாச்சு சொல்லு? உனக்கு உடம்புக்கு முடியலையா?”

“எனக்கு ஒரு கேடும் இல்லை. நம்ம மருமக என்னை விரட்டிவிட்டிட்டா. பிள்ளையை தொடக் கூட விடலை. சித்தார்த்தும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். என்னங்க என் பேரப் பிள்ளையை தொட எனக்கு உரிமை இல்லையா?” நீ செய்த பாவம்டி அதான் உன்னை துரத்தி அடிக்குது என்று சொல்ல நினைத்தவர் வாயை மூடிக் கொண்டார்.

“சொர்ணா....எல்லாம் சரியாகிவிடும். பொறுமையா இரு...”

எதுவும் சரியாகவில்லை. சொர்ணா மகனிடம் மெசெஞ்ஜரில் பேசும்போது

“டேய்..கிருத்திகை வருதுடா. உன் பெண்டாட்டியை விளக்கெல்லாம் விளக்கி தீபம் ஏத்தச் சொல்லு. பொறி உருண்டையும் அப்பமும் செய்யச் சொல்லு. நான் வேணா எப்படி செய்யறதுன்னு சொல்லவா?”

“என்ன நீ, என் பொண்டாட்டின்னு சொல்றே? உன் மருமகள்ன்னு சொல்ல மாட்டியோ?” அவன் குற்ற பத்திரிகை வாசித்தான். வழக்கமாக அவள் தான் வாசிப்பாள். குற்றம் சொல்லத் தான் அவளுக்குப் பிடிக்கும். குற்றம் சாட்டப்பட்டால் அதை கேட்கப் பிடிக்காது.

“அதுவா முக்கியம்? பண்டிகை நல்லபடியா கொண்டாட வேண்டும். மறக்காம சொல்லு...” அவளுக்கு மருமகளின் பெயரை சொல்லக் கூட பிடிக்கலை.

“உனக்கு வீம்பு ஜாஸ்தி. சங்கீதா அக்காவை துரத்தின. இப்ப என் பொண்டாட்டியை அலட்சியப்படுத்தறே. போதும் உன் அக்கறை. என்ன செய்யனும்னு எங்களுக்கு தெரியும்.” தொடர்பை துண்டித்தான். சொர்ணாவின் இதயம் துண்டானது. பெற்ற மகன் இப்படி பேசுகிறானே! சங்கீதாவா இருந்தால் இப்படியா பேசுவாள்? அம்மா...அம்மா என்று உருகுவாளே! எல்லாம் எனக்கு வேணும். மகன் உசத்தி உசத்தி என்று சங்கீதாவை மட்டம் தட்டியதுக்கு நல்ல தண்டனை.



சித்தார்த்துக்கு அடுத்து பிறந்ததும் ஆண் குழந்தை தான். அதை பார்க்க ஆவலோடு ஓடினாள் சொர்ணா. ரோஜாப்பூ போல் பிறந்த குழந்தையை கையில் எடுக்க பார்த்தாள் அவள்.

“அத்த....டோன்ட் டச். உங்களுக்கு குழந்தைகள் அருமை தெரியாது. தூக்கவும் தெரியாது. சும்மா கண்ணால் பார்த்தால் போதும்.” என்றுவிட்டாள் அகல்யா.

“ஒரே ஒரு தரம் கையில் எடுத்து கொஞ்சணும். விடு ப்ளீஸ்...அகல்யா..”

“பரவயில்லையே என் பெயர் கூட ஞாபகம் இருக்கே. சரி ஒரே ஒரு தரம் தூக்கி கொஞ்சிட்டு விட்டிடணும்...”

சொன்னது போல் ஐந்து வினாடி தூக்கி வைக்க அனுமதி கிடைத்தது.

“குழந்தைக்கு ராஜான்னு பேர் வை. ராஜாவாட்டம் இருக்கான்.” என்றாள்

பெரிய ஜோக்கை கேட்டது போல் சிரித்தாள் அகல்யா.

“ராஜா கூஜான்னு நீங்க விரும்பியபடி பேர் வைக்க இது ஒன்னும் உங்க குழந்தை இல்லை. சங்கீதாவை பிடுங்கிக் கொண்டு ஓடின மாதிரி என் குழந்தையையும் எடுத்துக்கிட்டு ஓடிடாதீங்க...என்ன பாக்றீங்க?...எனக்கு எல்லாம் தெரியும். உங்க சுயநல குணம் தெரிஞ்ச உங்க தம்பி தான் உங்க சரித்திரத்தையே சொன்னார்...”

பெரிய குண்டைத் தூக்கி போட்டு விட்டாள் அகல்யா. ஆனந்தனுக்கு என்ன தான் அவளைப் பிடிக்காது என்றாலும் அவர் அவளின் ரகசியம் பற்றி யாரிடமும் சொன்னதில்லை. ஆனால் இந்த அஸ்வின், பாவிப் பயல் எல்லாவற்றையும் போயும் போயும் மருமகளிடம் சொல்லியிருக்கானே! இடிந்து போனாள் சொர்ணா. அவள் கண்ணே அவளைக் குத்தி விட்டது. இஷ்டம் போல் ராணி ஆட்டம் ஆடி சங்கீதாவை ஆட்டிப் படைத்தது எல்லாம் கூட சொல்லியிருப்பானோ? அவன் அப்பப்ப அவளிடம் போனில் பேசுவதுண்டு. சமயத்தில் நேரில் வந்ததும் உண்டு. பழைய பாசத்தில் அவளும் உண்மைகளை அவனிடம் சொல்லியிருக்கிறாள்.

சங்கீதாவுக்கு சேகரை கல்யாணம் பண்ணி வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்துக் கொள்ளும் பிளான் கூட சொல்லியிருக்கிறாள். துரோகி....எல்லாம் என் மருமகளிடம் சொல்லிவிட்டான் போலிருக்கே! சும்மாவே மதிக்க மாட்டாள். இப்ப இது தெரிந்தால் விடுவாளா? அவமானத்தில் கூனிக் குறுகினாள். “வாய்க்கு வந்தபடி பேசாதே..” என்று முணுமுணுத்தாள்.

“தன் வினை தன்னைச் சுடும். யாரிடமிருந்தோ குழந்தையை பிடுங்கி. அதை வேலைக்காரி போல் நடத்தி...படிக்காதவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சு உங்களுக்கு தொண்டு செய்ய திட்டம் போட்டீங்களே...என்னாச்சு? புட்டுக்கிச்சா? அடுத்தவங்க பொருளுக்கே ஆசைப்படக் கூடாது. நீங்க அடுத்தவங்க பிள்ளை மேலே ஆசைப்பட்டு வலுக் கட்டாயமா எடுத்தீங்களே...உங்களுக்கு குழந்தை அருமை எப்படித் தெரியும்?. என் பிள்ளைகளை தொடாதீங்க. போனாப் போவுது வேணா கண்ணாலே பார்த்துகோங்க. அது கூட ஒரு மனிதாபிமானத்தில் தான் விடறேன்.”

சொர்ணாவுக்கு கிடைத்த இந்த சாட்டையடி தான் அவள் மனதை திறந்தது.

சங்கீதாவின் நல்ல குணத்தை புரிய வைத்தது. அவள் எவ்வளவு அருமையானப் பெண். ஒரு தரம் கூட அவள் அம்மா என்ற சொல்லுக்கு மறு சொல் சொன்னதில்லை. எப்படி பாசம் காட்டினாள்? அவளைப் போய் அலட்சியப்படுதினதுக்கு எனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். அமெரிக்க ஆசையை விட்டாள். சித்தார்த் மேல் உள்ள வாஞ்சையையும் விட்டாள். பேரப் பிள்ளைகள் மேல் உள்ள ஆசையும் பாசமும் தான் அவளால் தவிர்க்க முடியவில்லை.

“இனிமேல் உன் வீட்டு வாசல் படி மிதிக்க மாட்டேன்..” மகனிடமும் மருமகளிடமும் சபதம் செய்துவிட்டு அமெரிக்காவிலிருந்து வந்தாள்.



சித்தார்த்தும் அவனுடைய பிள்ளைகளும் மின்னலைப் போல் பத்து நாட்கள் இருந்துவிட்டு ஓடிவிடுவார்கள். அகல்யா அவள் அம்மா வீட்டில் தங்கிக் கொள்வாள். அமெரிக்கா போகும் வரை அவள் வீட்டுக்கு வரமாட்டாள். ஒரு குழந்தையை பெற்றோரிடமிருந்து பிரித்த பாவமோ என்னவோ...தன்னிடம் பேரப் பிள்ளைகள் ஒட்டவே இல்லை என்று முதல் முறையாக தோன்றியது சொர்ணாவிற்கு. ஒரு வேளை அவர்களிடமும் அவள் எதையோ எதிர்பார்க்கிறாளோ என்னவோ?—என்று நினைத்துக் கொள்வார் ஆனந்தன். சித்தார்த்தின் குழந்தைகள் ஆனந்தனிடம் ஒட்டிக் கொள்வார்கள்.

“பாபுவும் ரவியும் என்னிடம் ஓட்ட மாட்டேங்கறாங்க. உங்க கிட்டே இஷிக்கிறாங்க...நான் என்ன பாவம் செய்தேன்? பேத்தியாக இருந்திருந்தால்

ஒட்டி இருக்குமோ என்னவோ? நமக்கு ரெண்டும் பேரனாப் போச்சு..”

சொர்ணா எப்பொழுதும் புலம்பிக் கொண்டே வாழ, கார்த்திக்

ப்ரியா...பாபு, ரவி என்று நாலு குட்டி பொக்கிஷங்களுடன் ஆனந்தன் அன்பு ஊஞ்சலில் சுகமாக ஆடிக் கொண்டிருந்தார்.



ப்ரியாவுக்கும் கார்த்திக்குக்கும் ராமாயணக் கதை சொல்வார். அதை சங்கீதாவிடம் வந்து சொல்வார்கள் பிள்ளைகள்.

“அம்மா ஜடாயு பறவை பத்தி நான் ஒரு கதை சொல்லவா?”

“அட...அதெல்லாம் தெரியுமா உனக்கு? எங்கே சொல்லு கார்த்திக்...”

“ஜடாயு பறவை வானத்திலே உயர உயர பறந்ததாம். அதுக்கு சூரியனை பார்க்கணும்னு ஆசையாம். சூரியனின் வெப்பம் தாங்காமல் அதன் உடல் கருகிப் போக இருந்ததாம். அப்போ அது தன் சகோதரன் சம்பாதியிடம்

தன்னை காப்பாத்தும்படி வேண்டுச்சாம். உடனே சம்பாதி வந்து காப்பாத்துச்சாம். எப்படி தெரியுமா? சம்பாதி தன்னோட இறக்கைகளை ஜடாயுக்கு மேல் பறந்து கேடயமாக்கி ஜடாவு எரிந்துவிடாமல் காப்பாத்துச்சாம். அதன் பிறகு அது சாகும் வரை இறக்கைகளை இழந்து தான் வாழ்ந்ததாம். கூடப் பிறந்தவங்கன்னா ஒருத்தருக்கு ஒருத்தர் இப்பிடித்தான் இருக்கணும்னு உலகநாத மேஜிக் தாத்தா சொன்னாரும்மா.”

சங்கீதாவுக்கு அன்று சந்தேகம் வந்தது. இந்தக் கதை மட்டுமல்லாமல் ராமாயணத்திலிருந்து நிறைய கதைகளை அவளுக்கு சொன்னது அப்பா ஆனந்தன் தான். அது ஆனந்தன் அப்பாவாக இருக்குமோ? ச்சே எதுக்கு இந்தக் கற்பனை? அது வேறு யாராவதாகக் கூட இருக்கலாம். எத்தனையோ பேர் இந்தக் கதையை தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லியிருப்பார்கள்.... சந்தேகத்தை புறம் தள்ளினாள்.



இன்னொரு நாள் ப்ரியா ஒரு கதையோடு வந்தாள்.

“ராமன் நாணை இழுக்கிறான். அப்போ அவரோட இடது கை முன்னே போறது. வலது கை காதருகே வருது. இடது கை வலது கையிடம் சொல்லுச்சாம். நீ ஒரு அநியாயக்காரன். எப்பொழுதும் நல்ல பேர் வாங்கிக்கிறே. ராமன் கொடை கொடுக்கறதா இருந்தா நீ முன்னாலே வர்றே, ஆசீர்வாதம பண்றதா இருந்தா நீ முன்னாலே வர்றே. யாரையாவது கொல்லனும்னா மட்டும் நைசா நீ பின்னாலே போறே. என்னை முன்னாலே

விட்டுடறே. என் மேலே தானே பழி வருது என்று வலது கையிடம் கம்ளைன்ட் பண்ணுச்சாம். அப்போ வலது கை சொல்லுச்சாம்.

நான் ராமனின் காதருகே போய்...நீ செலுத்தும் அம்பை கொல்லப் பயன்படுத்தவா இல்லை சும்மா மண்ணில் போய் விழுந்திடவான்னு கேக்கத்தான் பின்னே போறேன்னு சமாளிச்சுதாம்...கஷ்டத்திலே கூட கம்பர் நகைச்சுவையை காட்டுகிறார் அப்படின்னு சொன்னாரும்மா. எப்பவும் நகைச்சுவை உணர்வை கைவிடக் கூடாதுன்னு சொன்னாரும்மா...”

ராமாயணத்தின் மிக நுணுக்கமான உணர்வுகளை கூட குழந்தைகள் புரிந்து கொள்கிற மாதிரி சுவாரஸ்யமாக சொல்ல சிலரால் தான் முடியும். அதில் அவள் அப்பா ஆனந்தனும் ஒருவர். அந்த தாத்தா அவராகத் தான் இருக்குமோ? அவள் சந்தேகம் வலுத்தது. அப்பா அவளிடம் அடிக்கடி சொல்வார்...”சோகம் வந்தால் அதோடு எல்லாம் முடிஞ்சிடுச்சு

நம்மை இருள் கவ்விடுச்சுன்னு நினைக்கக் கூடாது. அது தான் இனி நல்ல செய்தி வருவதற்கான ஆரம்பம்”. எவ்வளவு பிரகாசமான வார்த்தைகள். அவருக்கு ராமாயணம் ரொம்பப் பிடிக்கும். அதற்கும் ராமாயணத்திலிருந்து ஒரு சம்பவம் சொல்வார். தம்பி இலக்குவனை திடீரென காணவில்லை. ராமன் பதறிப் போனார். சோகம் நிறைந்த மனதோடு, தற்கொலைக்கு கூட துணிந்துவிட்டாராம். தோல்விகள் ராமனையும் தாக்குகிறது. விவேகம் அந்த

சமயம் வருகிறது. அப்பொழுது ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறுகிறது. அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்று சொல்வது தான் ராமாயணம் என்று அவர் சொல்லிக் கொடுத்த வாழ்க்கை பாடம் தான் அவளை நிமிரத்தி இருக்கிறது. தன் பிள்ளைகளுக்கும் அவர் தான் சொல்கிறார் என்று சங்கீதாவுக்கு சந்தேகமற புரிந்துவிட்டது.



ஒரு நாள் அவள் ஒளிந்து இருந்து பார்த்தாள். அவர் தான். இத்தனை வருஷங்கள் அவர் இப்படி தன்னை மறைத்துக் கொண்டு, தன் குடும்பத்தோடு கலந்து பாசம் காட்டியிருப்பதை இப்பொழுது தான் கண்டுபிடித்தாள் சங்கீதா. தான் பார்ப்பதை அவர் பார்த்துவிடக் கூடாது என்று அவள் மீண்டும் வந்து தோழிகளோடு உட்கார்ந்து கொண்டாள். அவள் மனம் மிருதுவாயிற்று. நிறைய விஷயம் அன்று புரியாதது இன்று புரிந்தது.

இருபத்திரண்டு வயதில் சொன்னாலும் புரியாத நுண்ணுணர்வுகள் இன்று சொல்லாமலே புரிந்தது. அவர் அவள் வாழ்க்கைக்கு கேடயமாக இருந்திருக்கிறார். அவள் சரியாக யூகிக்கிறாள். சொர்ணாவின் மனசு புரிகிறது.

ஆனந்தன் ஏன் தன்னிடம் கடுமையாக நடந்து மனம் புண்படும்படி ஏசினார், எல்லாம் தெளிவாயிற்று. அவர் உண்மையில் கெட்டவராக இருந்திருந்தால் இப்படி ஒளிந்து கொண்டு பாசம் காட்டியிருக்க மாட்டார். சொர்ணாவைப்

போல் அவள் வாழ்விலிருந்து காணாமல் போயிருப்பார்.



ஒரு நாள் சித்தார்த்தின் மனைவி அகல்யா அவளுக்கு போன் செய்தாள்.

“எப்படியிருக்கீங்க?”

“நல்லா இருக்கேன். நீங்க யாரு?”

“உங்க தம்பி மனைவி அகல்யா...”

சந்தோஷத்தில் சங்கீதாவின் மனம் குதித்தது.

“அப்படியா? தம்பி எப்படி இருக்கான்? உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? அமெரிக்காவில் எங்கே இருக்கீங்க? அம்மா நலமா? அப்பா எப்படி இருக்காங்க?” கேள்விகளால் அவளை திணற அடித்தாள்.

“இத்தனை கேள்விகளுக்கு நான் எப்படி போனில் பதில் சொல்ல முடியும்?

நாம் நேரில் சந்திக்கலாமா?”

சட்டென்று சரி சொல்லிவிட்டாள் சங்கீதா. எங்கே சந்திக்கலாம் என்று இடம் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள் அகல்யா. அடடா சந்திரனிடம் ஒரு வார்த்தை கேட்காமல் சம்மதித்து விட்டோமே..அவர் ஏதாவது நினைத்துக் கொண்டால்?......வேண்டாம் சந்திரனுக்குத் தெரிய வேண்டாம். இந்த வீட்டோடு நான் தொடர்பு கொள்வதை அவர் விரும்பப் போவதில்லை. அவர்கள் சங்காத்தமே வேண்டாம் என்று ஆணித்தரமாக சொன்னவர் ஆயிற்றே. அவளும் அப்படித் தானே நினைத்திருந்தாள். அப்புறம் எப்படி சம்மதித்தாள்? அடி மனதில் உறங்கிக் கொண்டிருந்த பாசம் தலை தூக்கிவிட்டது. அப்பாவோ அம்மாவோ ஏன் சித்தார்த்தோ கூட அவளிடம் இத்தனை வருஷத்தில் பேச முயற்சி எடுத்ததில்லை. அகல்யா பேசவும் அவளுக்கு மனம் நெகிழ்ந்தது. பகை மறந்து போனது. சரி சந்தித்து தான் பார்ப்போமே...என்னதான் சொல்கிறாள் என்று தோன்றியது. மாலை நெருங்க நெருங்க அவளுள் ஒரு படபடப்பு ஏற்பட்டது. பிள்ளைகளை வீட்டில் அம்மாவிடம் விட்டுவிட்டு கிளம்பினாள். எங்கே போறே என்று கேட்டால் என்ன செய்வது?

“அம்மா...முக்கியமான ஒரு தோழியை சந்திக்கப் போகிறேன். வர லேட்டாகும் என்றாள்.” யார் அந்த தோழி என்று அவள் சொல்ல விரும்பவில்லை.

“அவசியம் போணுமா சங்கீதா? மாப்பிள்ளை வந்தால் நான் பதில் சொல்லணும்....” தயங்கியபடியே அம்மா சொல்ல சங்கீதா சிரித்து மழுப்பினாள் .”அதெல்லாம் வந்துடுவேன்மா. பழைய நட்பு. பள்ளியில் என்னுடன் படித்தவள். பார்த்திட்டு வந்திடறேன்மா...”

அகல்யா என்ன சொல்லப் போகிறாளோ என்று அச்சம் கொண்டாள் சங்கீதா.



ஊஞ்சல் ஆடும்...
 
Last edited:
Top