கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அன்பென்னும் ஊஞ்சலாட்டம் - அத்தியாயம் 16

sankariappan

Moderator
Staff member
அத்தியாயம்-16

சங்கீதா கிளம்பி நிற்க மங்களத்தம்மாள் அனுமதி கொடுக்காமல் இருந்தாள்

“அம்மா...சீக்கிரம் வந்திடுவேன்...பெர்மிஷன் கொடுங்கம்மா.”

“குழந்தை போயிட்டு வரட்டும் மங்களம்....நீ போயிட்டு வாம்மா.” என்று வழி அனுப்பி வைத்தாள் ஆண்டாள். பெரியம்மாவுக்கு மனதுள் நன்றி சொல்லிக் கொண்டே கிளம்பினாள் அவள். அகல்யா எப்படி இருப்பாள் என்று அவளுக்குத் தெரியாது. சிவப்பு பூக்கள் போட்ட மஞ்சள் சூடிதார் அணிந்திருப்பேன் என்று சொன்னாள். அதை வைத்து கண்டுபிடித்துவிட முடியுமா? பார்க்கை அணுகினாள். அவள் அகல்யாவை தேட ஆரம்பிக்கும் முன் அவளே முன் வந்து நின்றாள். “நீங்க தானே சங்கீதா?”

“ஆமா....நீ என் தம்பியின் மனைவி என்று நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு...” அகல்யாவின் எழில் வதனத்தை திருப்தியுடன் பார்த்தாள்.

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க கிட்டே பேசணும். என்னை நீங்க நம்பினால்.....என் மாமியார்...அதான் உங்க அம்மா சொர்ணா பத்தி பேசணும்.”

அவர்கள் பார்க் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டார்கள். மேலே நீல வானம் கூடாரம் போல் குடை பிடித்திருந்தது. சுற்றி பூச்செடிகள், மலர்கள், மரங்கள் என்று இடம் குளுமையாக இருந்தது. மாலை நேரத்து பொன் ஒளி அகல்யாவின் முகத்தில் பரவி அவளை மேலும் அழகாக்கியது.

“நீங்க என் மாமியார் மேல் எவ்வளவு பாசம் வச்சிருந்தீங்கன்னு உங்க தம்பி சொல்லியிருக்காங்க. உங்களுக்குத் தெரியுமா? அவங்க சித்தார்த்துக்கு நல்ல கவனிப்பை கொடுத்திட்டு உங்களை வீட்டு வேலைக்காரி மாதிரி ட்ரீட் பண்ணினாங்கன்னு....அவர் சொல்லியிருக்கார்...”

“அப்படி எல்லாம் இல்லை. அவன் ஆண் பிள்ளை....”

“நீங்க சப்பை கட்டு கட்றீங்க. அந்த வயதில் உங்களுக்கு அந்த வித்தியாசம் புரிஞ்சிருக்காது...இப்ப புரிஞ்சிருக்கும்....”

“அகல்யா....இப்ப அது பத்தி என்ன? அவங்க எல்லோரும் நல்லா இருக்காங்க தானே? உன் குழந்தைகளை நான் எப்ப பார்க்கறது?”

“அதுக்கு முன்னாடி நீங்க தெருஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் இருக்கு. உங்க அப்பா பத்தி...அதாவது என் மாமனார் பத்தி....அவரை நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க...”

சங்கீதா மெளனமாக இருந்தாள். தப்பா நினைக்க என்ன இருக்கு? அவரே போனில் பேசிய பின் வேறு எப்படி நினைக்க முடியும்?

“அவங்க தான் உங்களை கடத்த சொன்னது. அது உண்மை தான். ஆனா அது உங்க நன்மைக்குத் தான். அவர் ரொம்ப நல்லவர். உங்க நலனுக்காக அவர் வில்லன் பட்டம் ஏத்துக்கிட்டார்...”

“நீ என்ன சொல்றே அகல்யா? எனக்கு ஒன்னும் புரியலை.”

அகல்யா எல்லாவற்றையும் விலா வாரியாக சொன்னாள்.

“உங்களை ஒரு ஆட்டோ டிரைவருக்கு கல்யாணம் பண்ணி வச்சு வீட்டோட மாப்பிள்ளையா ஆக்கணும்னு பிளான் போட்டாங்க உங்க அம்மா. நீங்களும் அம்மா சொன்னதே வேத வாக்குன்னு சம்மதிச்சாலும் சம்மதிப்பீங்கன்னு உங்க அப்பா பயந்தார். உங்க கண்மூடித்தனமான அன்பை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை கெடுக்க பார்த்த மனைவியிடமிருந்து உங்களை பிரித்து உங்க அப்பா அம்மாவோட சேர்த்து விடணும்னு தான் மாமா உங்களை கடத்திக் கொண்டு போகச் சொன்னாராம். இதெல்லாம் என் மாமியாரோட தம்பி சொல்லித் தான் எனக்குத் தெரியும். சுயநலமே உருவான என் மாமியாரின் தந்திரம் தெரிந்த பின்....அவங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கனும்னு தான், நான் அவங்களிடம் கடுமையா நடந்துக்கிட்டேன். பிள்ளைகளை பார்க்கக் கூடாது...ஏன் தொடக் கூடாதுன்னு தடை போட்டேன். மனுஷங்கன்னா என்னன்னு அவங்களுக்கு தெரியணும். அன்புன்னா என்னென்னு அவங்களுக்குப் புரியணும். அடிபட்ட பிறகு, இப்ப உங்களை பார்க்கணும் பேசணும்னு ஆசைப் படறாங்க. அவங்களோடு பேசறதும் பேசாததும் உங்க விருப்பம். ஆனா அவங்க சதி திட்டம் பத்தி உங்களுக்கு தெரியணும்னு தோனுச்சு. அதான் வந்தேன்....உங்க அப்பா ஆனந்தன் தங்கமான மனிதர். அவரைப் பத்தி நீங்க தப்பா நினைக்கக் கூடாதுன்னு எனக்கு தோனுச்சு.”

பிரமித்து நின்றாள் சங்கீதா. அவள் கண்களில் ஈரம் கசிந்தது. எப்படிப்பட்ட உயர்ந்த மனிதர் அவள் அப்பா!. அவளுக்கு இரண்டு அப்பா. பெற்ற அப்பா அவளை தூக்கி கொடுத்தது வருத்தமான விஷயம் தான். ஆனால் எந்தளவு அவர் அப்பழுக்கற்றவர் என்று புரிந்ததும் அவள் மனம் சிலிர்த்தது. அதே சமயம் ஆனந்தன் அப்பா இன்னும் ஒரு படி மேலே போய் அவளை நேசித்திருக்கார். அவள் மேல் அளவு கடந்த பாசம் இருந்தும் அவள் சொர்ணாவிடம் கஷ்டப்படக் கூடாதுன்னு தன் அன்பையே தியாகம் செய்திருக்காரே! அவள் எவ்வளவு கொடுத்து வைத்தவள்!

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. என்னதான் ஆனந்தன் அப்பா என்னை புறக்கணிச்சதா நான் கோபப்பட்டாலும் அவர் என்னிடம் காட்டிய அன்பும் பரிவும் ரொம்ப ஆழமானதுன்னு எனக்கு தோணிக்கிட்டே இருந்தது. இப்ப மனசு அமைதி ஆயிடுச்சு. அவர்கிட்டே நான் எப்படி நன்றி சொல்றது? நீ சொல்றதை நான் நம்பறேன். ஆனா என் கணவர் நம்புவாரா தெரியலை...”

“நீங்க எனக்கு மதனி. நீங்க நல்லாயிருக்கணும்னு உங்க தம்பி நினைக்கிறார். இதை எல்லாம் உங்க கிட்டே சொல்லச் சொன்னதே அவர் தான். அவர் உங்க கூட பேச ஆசைப்படறார். ஒரே ஒரு தரமாவது பேசணுமாம்...”

சந்தோஷமாக தலை ஆடினாள் அவள். “நான் கொடுத்து வச்சவ. தம்பியின் பாசமும் எனக்கு கிடச்சிடுச்சு....”

“அப்ப இப்பவே பேசுங்க. அவருக்கு இப்ப காலை ஆறு மணி இருக்கும்..”

போன் போட்டுக் கொடுத்தாள்.

“ரிங் போவுது பேசுங்க..” செல்போன் கை மாறியது.

“ஹலோ....அகல்யா என் அக்காவிடம் எல்லாம் சொன்னியா? அவங்க என்ன சொன்னாங்க? அவங்க என்னோடு பேச சம்மதிச்சாங்களா?”

அவனுடன் கொஞ்சம் விளையாட எண்ணினாள் சங்கீதா.

“அவங்க உங்களோடு பேசத் தயாரா இல்லையாம். கிஷோரோடு ஓடிப் போனவள்ன்னு நீங்க பட்டம் கட்டியதை அவங்களால் மறக்க முடியலையாம். இதுக்கு நான் என்ன செய்ய?” முடிந்தவரை அகல்யாவின் குரலைப் போல் பேசினாள் சங்கீதா. பதட்டத்தில் அவன் நம்பிவிட்டான்.

“அப்ப எனக்கு சின்ன வயது. தப்பா நினச்சேன் தான். அக்காவை என்னோடு பேச வை. நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். அவங்க காலடியில் வேணா விழறேன்...பேசச் சொல்லு அகல்யா...”

“சித்தார்த்.....அவசியமில்லை. காலடியில் எல்லோம் விழ வேண்டாம். நான் உன்னை மன்னித்தேன்...” சங்கீதாவின் குரலை அடையாளம் கண்டு கொன்ட சித்தார்த், ஒரு கணம் மகிழ்ச்சியில் பேச முடியாமல் திணறினான்.

“என்ன சித்தார்த்? நான் அக்கா தான் பேசறேன்....நீ என்ன தப்புடா செஞ்சே? உன்னை நான் மன்னிக்க?. உன் மன திருப்திக்காக நான் மன்னித்தேன்னு சொன்னேன்....நீ என் செல்ல தம்பி அல்லவா? உன் மேல் எனக்கு எந்த கோபமும் இல்லை. எப்படிடா இருக்கே? இத்தனை வருஷம் என்னுடன் பேசாமல் எப்படி உன்னால் இருக்க முடிந்தது?”

“அக்கா...அக்கா. எப்படி இருக்கீங்க? அம்மாவின் கெடுபிடியில் சிக்கி வெகு நாள் தைரியம் இல்லாமல் உங்களோடு பேசாமல் இருந்தேன். அகல்யாவிடம் புலம்பிக் கொண்டே இருப்பேன். என் ஒரே அக்கா...கடவுள் கொடுத்த வரம்.

எனக்கு கொடுத்து வைக்கலைன்னு...அவ தான் ஸ்டெப் எடுத்து மாமா அஸ்வின் கூட பேசி சிக்கல்களை புரிந்து கொண்டு....இதுக்கெல்லாம் காரணம் அம்மா தான்னு கண்டுபிடித்து சொன்னாள். அப்பா மேல் உள்ள பழியை தீர்க்கணும்னு எனக்கு ஆசை. நான் அக்காவிடம் பேசறேன்னு அகல்யா சொன்னா....அக்கா உன் குரலைக் கேட்டு எவ்வளவு நாளாச்சு?...”

அவன் குரல் கரகரத்தது. அழுதுவிட்டான் போலிருக்கு. சங்கீதாவுக்கு நிலைகொள்ளாத பெருமை. அப்பாடா தம்பியை அவள் எவ்வளவு நேசித்தாள்! இப்படி ஒரு பெரிய விரிசல் ஏற்பட்டுவிட்டதேன்னு அவள் மனதுள் மறுக்கிக் கொண்டே இருந்தாள். இன்று தான் அவளுக்கு இனிய நாள்.

“அக்கா...இனிமே உன்னோடு போனில் நான் பேசலாமா?” இறைஞ்சுவது போல் கேட்டான். சங்கீதாவுக்கு தலை கால் புரியவில்லை.

“ரொம்ப ரொம்ப சந்தோசம் சித்தார்த். கண்டிப்பா பேசலாம். நான் ரொம்ப சந்தோஷப் படறேன்....நீ எப்ப யூ.ஸ்சிலிருந்து வரே?”

“மகன் பிறந்தநாள் வருது. அதை உங்களோடு கொண்டாட வரேன்.”

“உன்னோட வரைவை நான் ஆவலோடு எதிர்பார்கிறேன்..”

அவன் போனை வைத்துவிட்டான். அக்கா தம்பி இருவர் மனசிலும் அவர்கள் இதுவரை காணாத அமைதியை கண்டனர். அகல்யாவிடமிருந்து விடை பெற்றுக் கொண்டாள் சங்கீதா.

“அகல்யா...உனக்கு ரொம்ப நன்றி. மருமகள்கள் குடும்பத்தை பிரிக்கத் தான்

பாடுபடுவாங்க. நீ சேர்க்க பாடு படறே. உன்னை நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு....எப்படி சந்திரன் கிட்டே பேசி மீண்டும் துளிர் விட்டிருக்கும் இந்த உறவை புரிய வைப்பேன்னு எனக்குத் தெரியலை.”

“அதுக்கு கொஞ்சம் நாளாகும். நீங்க பொறுமையா இருக்கணும்.”

“பத்து வருஷம் பொறுமையா இருந்திட்டேன். இன்னும் கொஞ்ச நாள் இருக்க மாட்டேனா?”

அவர்கள் பேசிவிட்டு பிரிவதை ஆனந்தன் பார்த்தார். என்ன நடக்கிறது இங்கே? அகல்யா ஏன் சங்கீதாவை பார்த்து பேசிக்கொண்டிருக்கிறாள்?

என் ரகசிய சந்திப்பு நின்று போய்விடுமோ?





சங்கீதா அவசரப்படவில்லை. மீண்டும் மனங்கள் இணைய அவகாசம் தேவை. காயை நிதானமாக நகர்த்தாவிட்டால் எல்லாம் பாழாகிவிடும். அப்பாவின் ரகசிய சந்திப்பு தொடரட்டும். சந்திரனின் மனதை மாற்றியப் பிறகே அப்பாவிடம் சொல்லவேண்டும். கடைசியாக அம்மாவிடம் பேசி புரிய வைக்க வேண்டும். ஏற்கனவே அகல்யா ரோடு போட்டுவிட்டாள். கடுமையாக பேசி புறக்கணித்ததில் அம்மா ஆடிப் போயிருப்பது தெரிந்தது. தொடர்ந்து இப்படியே நடித்தால் அம்மாவின் மனசு மாறும். அதுவரை அப்பாவுக்கு எதுவும் தெரிய வேண்டாம். என்று தீர்மானித்தாள் சங்கீதா. ஒட்டாத உறவு மீண்டும் ஒட்டுமா? அவளுக்கு ஆசையாக இருந்தது. கடவுளே கொஞ்சம் கருணை காட்டு என்று வேண்டிக் கொண்டாள். நெஞ்சின் காயங்கள் ஏதோ ஆறுவது போல் இருந்தது. அகல்யா மனோ தத்துவ டாக்டர் தான். “அப்பா..அப்பா...உங்கள் அன்பு தொடரட்டும். நானும் அதை தூரத்திலிருந்தே

அனுபவித்துக் கொள்கிறேன். இந்த அன்பின் விளையாட்டு எனக்கு பிடிச்சிருக்கு. கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும் போல் இந்த அன்பு கற்பூர தீபம் மாதிரி. தேங்க்ஸ் அப்பா...” சங்கீதா மனம் நிறைந்தது.

மேகங்கள் அற்ற நீல வானம் போல் தூய்மையான அன்பை ரசித்துக் கொண்டே இருக்க அவளால் முடியும். ஏனென்றால் அவளுக்கு சந்திரன், அம்மா, பெரியம்மா என்ற அன்பு வட்டம் இருக்கிறது. அன்புக்காக அவள் ஏங்கித் தவிக்கவில்லை. அன்பால் அவள் வர்ஷிக்கப்படுகிறாள். அதனால் அவளால அப்பாவின் பழைய சுடு சொற்களை மறக்க முடிந்தது. பகை கொன்ட மனம் அவளுக்கு இல்லை. சங்கீதா வாழ்க்கையில், சங்கீதம் என்றும் இருந்தது. அதற்கு காரணம் அவள் அன்பு மனம் தான். பனிமூட்டம் போல் அப்பொழுது விளங்காமல் இருந்ததெல்லாம் இப்பொழுது விளங்கிற்று. அப்பா அவள் மேல் கொன்ட கோபம் பெயிண்ட் கோட்டிங் மாதிரி—நிஜமில்லை. அதை நன்கு புரிய வைத்தது அகல்யா தான்.



மொட்டை மாடியில் நிலவை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அவளுக்கு ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.

“நிலவே என்னிடம் நெருங்காதே...நீ நினைக்கும் நிலையில் நான் இல்லை..”

உண்மைதான். அவளால அப்பாவை உருவத்தால் நெருங்க முடியாது. அதற்கு இன்னும் கொஞ்சம் காலம் காத்திருக்க வேண்டும். இப்போதைக்கு

மனசால் நெருங்க முடியும். அவர் அவளின் சின்ன வயதில் நிலாவை காட்டி சோறூட்டி இருக்கிறார். நிலவைப் பற்றி கவிதைகள் சொல்லியிருக்கிறார்.

“கனவு காணுங்கள். கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும். சிந்தனைகள் செயல்களாகும்...” என்று அப்துல் கலாம் சொன்ன வைர வரிகளை ஒரு பௌர்ணமி இரவில் தான் சொன்னார்.

“நீங்க சூரியனைப் போல் பிரகாசிக்க வேண்டுமென்றால், முதலில் சூரியனை போல் எரிய வேண்டும்...” என்று கலாமின் இன்னொரு பொன் மொழியையும்

சொன்னார். இந்த மொட்டை மாடி நிலா எவ்வளவு பாச பரிமாறல்களை பார்த்து ரசித்திருக்கும்! “அப்பா நிலா நம்ம வாழ்க்கையைப் பார்த்து பொறாமை படுது நமக்கு இப்படியொரு அப்பா இல்லையே என்று..” என்று அவள் சொல்வாள். இப்பொழுது மொட்டை மாடியில் நிலா இருக்கிறது...அப்பா இல்லையே....சங்கீதா ஒரு காகிதத்தில்

“அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்

எந்தையும் உடையேம். எம் குன்றும் பிறர் கொளார்

இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்

வென்நெறி முரசின் வேந்தர்தம்

குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே!”

பாரி மகளிர் அங்கவை சங்கவை தங்கள் தந்தையை பறிகொடுத்து பாடிய சங்கப் பாடல் தான் இது. ஒரு நாள் நிலா காய்ந்த இரவில் தந்தை பாரி அருகில் இருந்தார். அவர்கள் பரம்பு நாடும் அவர்களுக்கு இருந்தது. இன்று

நிலவு காயும் இரவு இருக்கிறது. தந்தை இல்லை....மூவேந்தர்களால் கவரப்பட்டு நாடும் போயிற்று என்று வருந்திப் பாடுகிறார்கள்.

சங்கீதாவுக்கும் அதே நிலைமை தான் அன்று அப்பா இந்த நிலவொளியில் சிரித்துப் பேசினார். இன்று அவர் அருகில் இல்லை. அவர்கள் வீடும் இல்லை.

மறுநாள் பிள்ளைகளைக் கூப்பிட்டு அந்தக் கவிதை எழுதிய காகிதத்தை

உறையிலிட்டு கொடுத்து. “உங்க மேஜிக் தாத்தாக் கிட்டே, அம்மா கொடுத்தாங்கன்னு சொல்லிக் கொடுங்க.” என்றாள்.

பார்க்கில் விளையாடி முடித்ததும் கார்த்திக் அம்மாவிடம் அந்த உரையை கொடுத்தான். “அவர் பிரித்துப் பார்க்கவே இல்லையா?”

“பார்த்தாரம்மா...படிச்சிட்டு அப்படியே திருப்பிக் கொடுத்திட்டார்.”

அவன் ஓடிவிட்டான். அவர் ஏதாவது காகிதத்தில் எழுதியிருப்பாரோ? அவசரமாக உரையிலிருந்து காகிதத்தை உருவிப் பார்த்தாள்.

எதுவம் எழுதியிருக்கவில்லை. ஆனால் ஒரு மூலையில் கண்ணீர் துளி ஒன்று பட்டு எழுத்து அழிந்திருந்தது. அது ஒரு நிசப்த பதில் கவிதை என்று நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். “தேங்க்ஸ் அப்பா..” அவள் வாய் முணுமுணுத்தது. அது போதும். கவலைப் படாதீங்க அப்பா கூடிய சீக்கிரம் நம் கனவு நிறைவேறும். நான் முன் போல் பேசி மகிழலாம்.



சொர்ணா இன்னமும் யார் மேல் ஏறி சவாரி செய்யலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறாள். தந்தையின் அன்பின் ரகசியம் இப்போதைக்கு அவளுக்குத் தெரியாமல் இருப்பதே மேல் என்று சங்கீதா நினைக்கிறாள். சங்கீதாவுக்கும் கொஞ்சம் சாமர்த்தியம் வந்துவிட்டது. உறவுகளை காப்பாற்ற அன்பு மட்டும் இருந்தால் போதாது சாமர்த்தியமும் வேண்டும்....எப்பொழுது அவள் சந்திரனிடம் பேசப் போகிறாள்? நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறாள். பட்டென்று உடைத்து விடக் கூடிய விஷயமில்லையே!



ஊஞ்சல் ஆடும்...
 
Top