கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அன்பென்னும் ஊஞ்சலாட்டம் - அத்தியாயம் 17

sankariappan

Moderator
Staff member
அத்தியாயம் - 17



டி.வி நிகழ்ச்சி ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தான் சந்திரன். உணச்சிகரமான மனித போராட்டங்கள் நிறைந்த படம். படம் முடிந்தபோது அவன் கண் கலங்கி இருந்தது. அதை கவனித்தாள் சங்கீதா. பால் கப்புடன் வந்தவள் அவன் அருகில் உட்கார்ந்து கொண்டாள்.

“என்ன உங்க கண் கலங்கி இருக்கு?”

“இதுவரை சினிமா வெறும் கதாசிரியர்களின் கற்பனைன்னு நினைச்சிருந்தேன்

ஆனா இந்தப் படத்தைப் பார்த்த பிறகு தோணுது கதையில் நிஜங்களும் கலந்து இருக்கு...அதான் ஆடியன்ஸ் மனசை அது தாக்குது. கண் கலங்குது.”

“உண்மைதான். இப்ப நீங்க பார்த்த படத்தோட ஸ்டோரி லைன் நம்ம குடும்பத்திலே நடந்தது போல இருக்கு. அதான் உங்க மனசை அது தொட்டிருக்கு...” சங்கீதா சரியான நேரத்தில் துருப்புச் சீட்டாக வார்த்தைகளை செருகினாள். பிரிந்து போன மகள் அப்பாவை தேடும் கதை. கிளைக் கதையாக மாமனை பறிகொடுக்கும் மருமகன்...நல்ல கதைக் களம் தான்.

“நம்ம வாழ்க்கையில் நடந்த கதை மாதிரி இருக்கு இல்லே...” என்றான்.

அதில் ஈடுபாடு இல்லாதவள் போல் காட்டிக் கொண்டாள் சங்கீதா.

“ஆயிரம் கதைகள் இருக்கு. அதையே நினைச்சுக்கிட்டு. உங்க மாமா வெங்கடேசன் மரணம் உங்களால் மறக்க முடியாத துயரம். அதை இந்த படம் கிளறி விட்டிருச்சு....பாலை குடிச்சிட்டு தூங்குங்க. கண்டதையும் நினைச்சுக்கிட்டு...” சங்கீதா பிள்ளைகளை படுக்க வைத்துவிட்டு வந்திருந்தாள். அவர்கள் இடையில் விழித்தால் மங்களத்தம்மாளும் ஆண்டாளம்மாளும் பார்த்துக் கொள்வார்கள். கணவனின் மார்பில் லேசாக சாய்ந்து கொண்டு சங்கீதா சொன்னாள்.

“மாமா..நினைவு உங்களுக்கு வருதா?”

“அவர் எனக்கு மாமா இல்லை. என்னை வளர்த்தவர் அப்பா மாதிரி. எப்படி மறக்க முடியும்? அவர் கடைசியில் உடல் ரீதியாக எவ்வளவு கஷ்டப்பட்டுட்டார்....மனுஷ வாழ்வு கடைசியில் ஒன்றுமில்லை...பகை கோபம் வெறுப்பு...இதெல்லாம் நகங்கள் மாதிரி. வெட்டி விடணும். ஆனா நாம என்ன செய்யறோம்? அதை விஷ நீர் ஊற்றி வளர்கிறோம்...”

சங்கீதா பேசாமல் இருந்தாள். அவன் அடுத்து என்ன சொல்லப் போகிறான் என்று அவள் யூகித்துவிட்டிருந்தாள். அவனும் அப்படியே சொன்னான்.

“சங்கீதா..உனக்கு உன் அப்பாவின் நினைவு வருதா?”

“அதெல்லாம் இல்லேங்க. எதுக்கு அந்த துரோகி மனுஷன் பத்தி...”

“அப்படி சொல்லாதே. என்ன இருந்தாலும் உன்னை வளர்த்தவர்.”

“உண்மை தான். சமயத்திலே எனக்கும் அவர் நினைவு புடுச்சு ஆட்டும்.”

மெல்ல மெல்லிய அன்பின் உணர்வை வெளிப்படுத்தினாள்.

“என் மாமா வெங்கடேசன் உயிரோடு இல்லை. வேறு வழி இல்லை நான் என்னை சமாதானப்படுத்திக் கொள்கிறேன். உனக்கு அப்படி இல்லை. உன் அப்பா ஆனந்தன் உயிரோடு இருக்கார். நீ அவருடன் பேசி சிரித்து....அவர் பாசத்தை அனுபவிக்கலாமே.” அவன் நிறுத்தினான். அவள் சிரித்தாள்.

“எதுக்கு ரிஸ்க்? அவர் என் மேல் காட்டிய வெறுப்பை மறந்திட்டீங்களா?”

“மறக்கணும். ஒற்றுமையும் அன்பும் கொன்ட நாம் இது கூட செய்யலைன்னா, அப்புறம் நாம் உயிர் வாழ்ந்து என்ன பிரயோஜனம்?”

“நான் ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே?”

“என்ன சொல்லப் போறே? அவர் சங்காத்தமே வேண்டாம்னு சொல்லிட்டு, இத்தனை வருஷம் கழித்து எதுக்கு மறுபடியும் அந்த வைரஸை ஓப்பன் பண்ணணும்னு தானே சொல்ல வரே?.”

“அவர் உன்னைத் தேடவே இல்லையா? வளர்த்த பாசம் அவ்வளவு தானா? நான் அவர் கூட பேசப் போறேன். சந்கீதா பெற்ற அவள் அப்பாவை, அவர் அன்பை அனுபவிக்காமலே பறிகொடுதிட்டா. அதுக்காக அவளுக்கு வளர்த்த தந்தையான உங்கள் பாசமும் மறுக்கப் படவேண்டுமா? பகையை மறந்து நாம் ஒன்று சேருவோம். சங்கீதா உங்கள் பாசத்தை அனுபவிக்கட்டும். அப்படின்னு சொல்லப் போறேன்...”

சங்கீதா உள்ளூர பெருமகிழ்ச்சி அடைந்தாள். அந்த சினிமாவுக்கு நன்றி சொன்னாள். ஊடகங்கள் சில சமயம் நன்மையும் செய்கின்றன. வாழ்க்கையை காண வைக்கிறது. உணர்வுகளை புரிய வைக்கிறது. அன்பை வளர்க்கச் சொல்கிறது. புரிகிற நல் மனம் படைத்த எல்லோருக்கும் அது உள்ளே ஊடுருவி மனசை வெளுக்கிறது. அப்பாடா...எப்படி அவனுக்கு எடுத்துச் சொல்வது என்று அவள் தயங்கிக் கொண்டிருந்தாள்.

“எல்லாம் எனக்குத் தெரியும்...நீ ஒன்னும் அட்வைஸ் பண்ண வேண்டாம்...” என்று அவன் சொல்லிவிட்டால்?....தானே உணர்கிற விஷயங்கள் எப்பொழுதும் நிலைத்து நிற்கும். அவளுக்கு இதில் பெரிய விருப்பம் இருப்பது போல் காட்டிக் கொள்ள விரும்பாதவள் போல் பாசாங்கு செய்தாள்.

“உங்க இஷ்டம்....பேசிப் பாருங்க. எனக்கு என்னவோ இதெல்லாம் சரிப்பட்டு வரும்னு தோணலை...”

“நெகடிவ்வா பேசாதே சங்கீதா. எனக்கு என்னவோ நிலைமை மாறும்னு தோணுது...” அவன் தீர்மானமாகச் சொன்னான்.

எஸ்...என்று துள்ளி குதிக்க வேண்டும் போல் பட்டது அவளுக்கு.



நினைத்தவுடன் அதை செயலாற்ற சந்திரன் விரும்புவான் என்று சங்கீதாவுக்குத் தெரியும். மேஜிக் தாத்தா என்று பிள்ளைகள் அவனிடம் சொல்லி இருக்கிறார்கள். அவர் தான் ஆனந்தன் என்று தெரிந்தால் அவன் எவ்வளவு மகிழ்ச்சி அடைவான்! அவனே தெரிந்து கொள்ளட்டும்....அது ஒரு தனி த்ரில். சங்கீதா அந்த நல்ல தருணத்துக்காக காத்தித்திருக்கிறாள். எதிர்பாராத விதமாக அகல்யா திடுதிப்பென்று வீட்டுக்கு வந்துவிட்டாள். சந்திரன் திகைத்துப் போனான். இவள் ஆனந்தனின் மருமகள் அல்லவா?

“வாம்மா...நீ ஆனந்தன் மாமாவோட மருமகள் தானே?”

“பரவாயில்லை...தெரிஞ்சு வச்சிருக்கீங்களே. நான் வந்தது உங்களுக்கு சங்கடம் இல்லையே?” அவளைப் பார்த்ததும் சந்திரன் மனம் சந்தோஷப் பட்டது. இது நல்ல அறிகுறி என்று தோன்ற

“நானே உங்க மாமனாரோடு பேசணும்னு நினைச்சிருந்தேன்...” என்றான்.

ஆண்டாளும், மங்களமும் வந்து வரவேற்றார்கள்.

“யாரு இது?” என்று சங்கீதாவிடம் ரகசியமாக கேட்டார்கள். அவள் யார் என்று சொன்னதும் அவர்கள் முகம் சுருங்கியது.

“என்ன கெடுதல் பண்ண வந்திருக்காளோ?” என்று ஆண்டாள் சொன்னாள்.

அதற்குள் சந்திரனின் குரல் நீண்டு வந்தது.

“அத்தை...கொஞ்சம் காப்பி கொண்டு வர முடியுமா?”

இவளுக்கு இது ஒரு கேடா? என்று முணுமுணுத்த வண்ணம் காப்பி கலந்து கொண்டு வந்து கொடுத்துவிட்டு விருட்டென்று உள்ளே போய் விட்டாள்.

“அம்மா...ரொம்ப கோபமா இருக்காங்க போலிருக்கு. நான் உங்களையெல்லாம் என் மகனின் பிறந்த நாளுக்கு அழைக்க வந்திருக்கேன்.....”

சங்கீதா ஏதும் தெரியாதவள் போல் சத்தமின்றி நின்று கொண்டிருந்தாள்.

மங்களத்தம்மாள் மெல் வெளியே வந்து

“அம்மாடி...தப்பா நினைக்காதே. நீ நல்ல காரியமாத்தான் வந்திருக்கே. ஆனா உன் மாமனாருக்கு இது தெரியுமா? ஒட்டாமல் போன உறவை எதுக்கு ஓட்ட வைக்கப் பாக்றே? இப்ப தான் எல்லாம் மறந்து எங்க வண்டி ஓடிட்டு இருக்கு. திரும்ப சிக்கலும், தவிப்பும், அவமானமும் எதுக்கு? எங்க ஆசீர்வாதம் குழந்தைக்கு என்றும் உண்டு. நீ எங்களை எதிர்பார்க்க வேண்டாம்...”

சந்திரன் என்ன சொல்வது என்று தயங்கி பார்க்க சங்கீதா சொன்னாள்.

“ஆமாம். அம்மா சொல்றதிலும் ஒரு பாயிண்ட் இருக்கு. அப்பாவுக்கு தெரிஞ்சா அவர் உன்னை திட்டினாலும் திட்டுவார். அகல்யா....குழந்தை ரவிக்கு எங்க ஆசீர்வாதம் என்றும் உண்டு. நீ கிளம்பு....” என்றாள் சங்கீதா.

ஆற்றின் போக்கில் போவது போல் போனால், சந்தேகம் வராமல் ஒரு திருப்பம் வரலாம் என்று இருவரும் ஜாக்கிரதையாக நடந்து கொண்டார்கள்.

“சரி...நான் வரேன். நாளை மாலை ஃபங்க்ஷன். வந்திடுங்க. பகையும் கோபமும் குழந்தையின் ஃபங்ஷனில் காட்ட வேண்டாமேன்னு நினைக்கிறேன்.”

அவள் ஃபங்க்ஷன் நடக்கும் ஹோடேலின் பெயரச் சொல்லிவிட்டு கிளம்பினாள். போகிற போக்கில் “அம்மா...உங்க காப்பி சூப்பர்...” என்று பாராட்டிவிட்டுச் சென்றாள். ஆண்டாளும் மங்களமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவள் போனதும் இருவரும் சந்திரனிடம் பேச வந்தார்கள். “என்னடா சந்திரா இது? புதுப் பிரச்சனையா இருக்கே? எதுக்கு இவ வந்து அழைச்சிட்டுப் போறா? அங்கே போய் நிற்க அந்த ஆனந்தன் எங்கே வந்தீங்கன்னு கேக்கவா? இதுக்கெல்லாம் ஒன்றும் போக வேண்டாம்.”

சந்திரன் யோசனையுடன் தன் முகவாயை தடவியபடி சொன்னான்.

“அத்த....எனக்கும் அந்த டௌட் இருக்கு. ஆனந்தன் மாமாவை கூட சேர்த்துக்கலாம்....சொர்ணா அத்தை நம்மை விரட்டியே விடலாம்..”
சங்கீதா மெல் இடையே புகுந்தாள்.

“இந்த ஃப்ங்ஷனுக்கு நீங்க எல்லாம் வரவேண்டாம். நான் மட்டும் குழந்தைகளுடன் போறேன். அவமானப் படுத்தினால் அது என்னோடு போகட்டும். நல்லபடியாக பேசினால் அது உறவுக்கு ஒரு பாலமாக இருக்கும். என்ன சொல்றீங்க?...” மூவரையும் பார்த்தாள். கொஞ்சம் தாமதித்த பின் மூவரும் ஒரே குரலில் “சரி...பார்ப்போம்.” என்றார்கள்.



சங்கீதா நேர்த்தியாக அலங்கரித்துக் கொண்டு பிறந்தநாள் விழாவுக்கு கிளம்பினாள். குழந்தைகளும் குதித்துக் கொண்டு வந்தனர். ஒரு வயது குழந்தைக்கு என்ன வாங்குவது? காலுக்கு தன்டையும் பூக்கள் போட்ட வெள்ளை உடுப்பும் வாங்கினாள். பார்சிலை நெஞ்சோடு அணைந்துக் கொண்டு விழா நடக்கும் இடத்துக்கு வந்தாள். கலர் கலர் பலூன்கள் உயர்ந்தும் தாழ்ந்தும் ஜாலம் காட்டின. மெல்லிய இசை அந்த இடத்தை நிறைத்தது. விருந்தினர் வந்துகொண்டிருந்தனர். எங்கும் கோலாகலம்.

குழந்தைகள் ‘மேஜிக் தாத்தா..” என்று சொல்லிக் கொண்டு அவரிடம் ஓடிவிட்டன. அவர்ம அவர்களை தூக்கி சிரித்து விளையாடினார்.

அகல்யா ஓடி வந்தாள். அவள் கைகளை பிடித்துக் கொண்டாள்.

“வாங்க...வாங்க....” என்று வாய் நிறைய வரவேற்றாள். “இந்த விழாவுக்காக உங்க தம்பி சித்தார்த் அமெரிக்காவிலிருந்து வந்திருகார்” அவனும் ஓடி வந்து அக்காவை வரவேற்றான். ஆனந்தன் பார்க்காத மாதிரி வேறு யாருடனோ பேசும் பாவனையில் இருந்தார். சொர்ணா பேரனை கையில் வைத்துக் கொண்டு திண்டாடிக் கொண்டிருந்தாள். அவளிடம் அவன் இருக்க பிடிக்காமல், இறங்குவதற்கு அடம் பிடித்து அழுது கொண்டிருந்தான். அவள் சங்கீதாவை பார்த்ததும் புன்னகைத்தாள். நம்ப முடியாமல் சங்கீதா திகைத்தாள். சொர்ணா அவளைப் பார்த்து சிரித்து உண்மையா?

“அத்த உங்களைப் பார்த்து சிரிக்றாங்க ஏன் தெரியுமா?”

“ஏன்? ஆச்சர்யமா இருக்கே. கோபமா வந்து விரட்டுவாங்கன்னு நினச்சேன்.” என்றாள் சங்கீதா. அகல்யா உதட்டில் நமட்டு சிரிப்பு.

“ஒரு பதினைந்து நாளாக உங்க அம்மாவை படாத பாடு படுத்தி அவமானப் படுத்தினேன். அதன் விளைவு தான் உங்க கிட்டே அவங்க மனம் ஒட்டுது.

சங்கீதா சங்கடமாக உணர்ந்தாள். அகல்யா அவளுக்காக அப்படி செய்திருக்கிறாள் என்றாலும் அம்மா மனம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும் என்று அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஆறுதலாக ஏதேனும் சொல்லலாம் என்று அங்கு விரைந்தாள் சங்கீதா. அகல்யாவும் கூடவே வந்தாள். ஸந்கேஎத இளகி பேசினால் காரியம் கெடும். எனவே....மாமியாரிடம்

“அத்த....குழந்தையை அழாம வசுக்குத் தெரியலை. இவ்வளவு வயசாகி என்ன பிரயோஜனம்? உள்ளத்திலே நிஜமான அன்பு வேணும். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே....இப்படி கொடுங்க...” பிள்ளையை வாங்க கைநீட்டினாள். குழந்தை அவளிடம் செல்லாமல் ஆர்வமுடன் சங்கீதாவிடம் தாவியது. அவள் அணிந்திருந்த பளிச் பிங்க் கலர் உடை ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது அவள் கழுத்தில் தவழ்ந்த சிவப்புக் கல் நெக்லஸ் ஆக இருக்கலாம். குழந்தை அவளைப் பார்த்து சிரித்தது.

“பெத்த தாயிடம் போகாமல் பார்க்காத பழகாத சங்கீதாவிடம் போகிறது உன் பிள்ளை. உன் மனசிலே தாயன்பு இல்லே....என் மகளின் அன்பு மனம் புரியுதா? அவள் கால் தூசு நீ பெறமாட்டே...” சொர்ணா ஆக்ரோஷத்துடன், கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மருமகள் காலை வாரிவிட்டாள். இந்த தர்மசங்கடமான சூழ்நிலையில் தான் ஆனந்தன் அங்கு வந்தார். பேரர்கள் விருந்தினருக்கு ஜூஸ் கோப்பைகளை கொடுத்துக் கொண்டிருந்தனர். யாரோ பெரிய கேக்கை அலங்கார மேஜையில் கொண்டு வந்து வைத்தார்கள். எங்கும் உல்லாசம்.

“ஏய்...நீ எதுக்கு இங்கே வந்தே?” ஆனந்தன் சங்கீதாவைப் பார்த்து கேட்க, பாய்ந்து கொண்டு வந்தாள் சொர்ணா.

“அவளை நான் தான் அழைத்தேன்...” பெரிய டூப் விட்டாள் சொர்ணா. அகல்யாவே திகைத்தாள். எந்த அளவு தன் அலட்சிய போக்கு சொர்ணாவை காயப்படுத்தி இருக்கிறது என்று புரிந்து கொண்டாள்.

“சங்கீதா...நீ வந்ததிலே எனக்கு ரொம்ப சந்தோஷம்மா. என்னை மதிச்சு வந்தியே....வா வா...” என்று முன்னால் கூட்டிப் போய் நாற்காலியில் உட்கார்த்தி வைத்தாள் அவள். “சங்கீதா விழா முடிந்ததும் போயிடாதே உன்கூட பேசணும்...” என்று அவள் காதில் கிசுகிசுத்தாள்.



கேக் வெட்டப்பட்டது. கைதட்டல்கள். பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்கள் என்று பத்து நிமிடம் அமர்களப்பட்டது. பிறகு விருந்து...விளையாட்டு பரிசு வழங்குதல்...கடைசியில் விடை பெறுதல் என்று விழா இனிதே முடிவடைந்தது. ஒவ்வொருவராய் விடை பெற்று சென்று விட சங்கீதா அம்மாவிடம் வந்து விடை பெற்றாள்.

“அம்மா...போயிட்டு வரேன்...”

சொர்ணா சங்கீதாவை கட்டி அனைத்துக் கொண்டாள்.

“சங்கீதா...நீ அடிக்கடி வீட்டுக்கு வரணும். உன்னைப் பிரிந்து இத்தனை வருடங்கள் நான் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை....என்னை மறந்திட்டியா மகளே...” உருக்கமாக பேசினாள் சொர்ணா. அத்தோடு அவள் கண்களிலும் கண்ணீர் பெருக்கு. சங்கீத மனம் இளகியது.

“அம்மா..உங்களை எப்படி மறப்பேன்? என்னை ஆளாக்கியது நீங்க தானே.”

“கொடுமைப்படுத்தியது நீங்க தானேன்னு சொல்லுங்க மதனி...”

“அகல்யா...ஒரு குடும்பத்தை ஒண்ணு சேர்க்க பாடுபடணும். இப்படி பிரிக்க பார்க்ககூடாது. சங்கீதா உன்னை மாதிரி இல்லை. அவள் அன்பே உருவானவள். என்னை அவள் இன்னும் அம்மான்னு தான் நினைச்சிருக்கா.

நீ என்னை இனிமே அலட்சியப்படுதினே..ஏன்னு கேக்க என் மகள் இருக்கா...தெருஞ்சுக்கோ...” சின்னப் பிள்ளை போல் சொல்லிவிட்டு சவால் பார்வை ஒன்றை பார்த்தாள் சொர்ணா. அகல்யாவுக்கு சிரிப்பு வந்தது. “இவ்வளவு நாள் எங்கே போச்சு இந்த பாசம்? நாடகம் ஆடாதீங்க. மதனியை எவனோ ஒரு போக்கத்த பயலுக்கு கல்யாணம் பண்ணி அவங்களை வீட்டோடு வேலைக்காரியா வச்சிருக்க நினைச்சவங்க தானே நீங்க..” படபடன்னு அகல்யா சொன்னது கேட்டு பெருங்குரலெடுத்து கத்தினாள் சொர்ணா. “எல்லோரும் வேடிக்கை பார்த்திட்டு இருக்கீங்களே. அவளை கேப்பாரில்லையா? அபாண்டமா பழி போடறா...” சொல்லக் கூடாத வார்த்தைகளால் அகல்யாவை அர்ச்சனை செய்தாள். ஆவேசம் வந்தவள் போல்...பேய் பிடித்தவள் போல்....சாமி வந்தவள் ஆடுவது போல் ஆடி மயங்கி விழுந்தாள் சொர்ணா. சங்கீதா மெல்ல அவளை அனைத்துக் கொண்டு உள்ளே அறையில் படுக்க வைத்து தண்ணீர் தெளித்தாள். சொர்ணா கண்விழித்ததும் சங்கீதா அவளைப் பார்த்து கேட்ட கேள்வியில் அயர்ந்து விட்டாள் சொர்ணா. சங்கீதாவா அப்படிக் கேட்டாள்.? அவளால் நம்பவே முடியவில்லை. வாயடைத்துப் போனாள்.

“சரியா கேட்டே சங்கீதா....அது தான் உண்மை.” சொன்னது சொர்ணாவின் தம்பி அஸ்வின். சொர்ணா முகம் தக்காளியாக சிவந்தது.


ஊஞ்சல் ஆடும்...
 
Top