கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அன்பென்னும் ஊஞ்சலாட்டம் - அத்தியாயம் 18

sankariappan

Moderator
Staff member
அத்தியாயம்-18



எந்த ஒரு நிழலுக்கும் ஒரு நிஜம் உண்டு. அந்த நிஜம் மிக மெதுவாக வெளிவருவது தான் பல சிக்கலுக்கு காரணம். சொர்ணாவை தன் அம்மாவாகவே மதித்து போற்றிய சங்கீதா அந்த நிஜத்தை இப்பொழுது

வெளிக் கொணர்தாள். அது சொர்ணாவின் முகத்தில் அறைந்தது.

“அம்மா...இப்படி அழுது ஆர்பாட்டம் பண்ணித் தான் எங்க அப்பாவிடமிருந்து என்னை பிடுங்கிக்கிட்டீங்களா?” சங்கீதாவின் நோக்கம் குத்திக் காட்டுவதல்ல. அவள் ஆதாங்கம் தான் வார்த்தைகளாக அவளையும் அறியாமல் வந்தது.

சொர்ணாவின் முகம் சுண்டியது. அஸ்வின் வேறு வக்காலத்து வாங்குகிறான். என்னாச்சு எல்லோருக்கும்? அவள் கண்மூடி மௌனமானாள்/ அவள் கத்துவாள் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவளுக்கு நெஞ்சடைத்தது. உண்மை மேகத்தை விட்டு வெளியே ஓடி வந்த முழு நிலவு மாதிரி வந்துவிட்டது. அவமானத்தில் அவள் முகம் சிவந்தது. எல்லோர் முன்னும் போட்டு உடைத்துவிட்டாளே சங்கீதா. தன்னை சுதாரித்துக் கொண்டு சொன்னாள்

“நான் உன்னை பிடுங்கலை சங்கீதா. உன் அப்பா தான் என் மேல் இரக்கப்பட்டு உன்னைக் கொடுத்தார்.” சொர்ணாவின் கர்வம்...அகம்பாவம் எல்லாம் காணாமல் போயிற்று. நிஜம் சில சமயம் மனிதர்களை உலுக்கிவிடும். சங்கீதா மெல்ல சுதாரித்துக் கொண்டாள்.

“ஸாரி அம்மா.....நான் அப்பாவையும் அம்மாவையும் பிரிய நேர்ந்தது. அவங்களும் என்னைக் கொடுத்துவிட்டு எவ்வளவு அவஸ்தைப் பட்டிருக்காங்க? அம்மா நினைவு இழந்து....அப்பா என்னை தூரத்தில் நின்று நின்று பார்த்து ஏங்கி...எவ்வளவு துன்பம் அனுபவித்தார்கள். அதான் என்னையும் அறியாமல் அப்படி கேட்டுவிட்டேன். எதையும் மனசிலே வச்சுக்காதீங்க அம்மா. நீங்க என்னிடம் பிரியமாகத் தானே இருந்தீங்க. எனக்கும் உங்களை விட்டு போகப் பிடிக்காமல் தான் இருந்தது...மன்னிச்சிடுங்க ப்ளீஸ்....”

சங்கீதா ரொம்ப அழகாக தன் மனசை படம் பிடித்துக் காட்டினாள். அவள் அன்று பார்த்த சிறுமி இல்லை என்று சொர்நான் உணர்ந்தாள். எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் விடை பெற்று கிளம்பினார்கள்.

“அம்மா...உடம்பை நல்ல பார்த்துக்கோங்க. தவறாம உங்க பிபி மாத்திரையை போட்டுக்கணும். நீங்க என்னை மறுமடியும் உங்க மனசிலே இடம் கொடுத்ததுக்கு நன்றிம்மா...”

அதே அன்பான வார்த்தைகள் தான். ஆனால் அந்தக் கண்களில் வித்தியாசம் தெரிந்தது. இருபது வயது சங்கீதா மறைந்து அங்கே இரண்டு குழந்தைகளுக்கு அம்மா சங்கீதா தெரிந்தாள்.

“சரிம்மா....பார்த்துக்கிறேன். அடிக்கடி வந்து போயிட்டு இரு...”

கைஅசைத்து விட்டு அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டுவிட்டு சங்க்கீதா குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றாள்.

“என்ன அத்த? உங்க மகள் எப்படி?”

“அவள் என் மகள் மட்டும் இல்லேன்னு புரிஞ்சுது. அவள் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா...அதான் ஒரு அம்மாவின் உணர்வை...அவள் அம்மாவின் உணர்வை புரிந்து கொண்டாள்...சரி அகல்யா வீட்டுக்கு கிளம்பலாம். நீ என் மருமகள்....உன்னை மகளாக நினைக்க நான் கற்றுக் கொள்ள வேண்டும்...” அகல்யா வியப்புடன் மாமியாரைப் பார்த்தாள். அடம் பண்ணும் சண்டிப் பெண்ணாக மன முதிர்வு இன்றி இருந்தவளிடம் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தாள். நல்ல மாற்றம் என்பதில் ஒரு சந்தோசம் இருந்தது.

“அப்ப நானும் உங்களை அம்மாவா நினைக்கிறேன்...”

இருவரும் சிநேகமுடன் சிரித்ததை ஆனந்தன் மகிழ்ச்சியுடன் பார்த்தார்.



அன்றிரவு வெகு நேரம் ஆகியும் சொர்ணா தூங்கவில்லை. ஆனந்தன் அவளிடம் வந்து அவள் கையை எடுத்துக் கொண்டார்.

“என்னாச்சு சொர்ணா? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?”

“எப்படி கேட்டிட்டா அந்த சங்கீதா....பார்த்தீங்களா? எனக்கு பக்குன்னு ஆயிடுச்சு. என்னை ஒரு குருர கோணத்தில் நானே பார்த்தேன். அந்த காலத்தில் எனக்கு அப்படித் தோணலை. சங்கீதா சொன்னதில் எந்த தவுறும் இல்லை....எனக்கு ரொம்ப குற்ற உணர்வா இருக்கு...”

சொர்ணா என்றோ தான் செய்த பெரிய தவறை இப்பொழுது தான் உணர்கிறாள் என்று அவருக்குத் தோன்றியது. எல்லோரையும் மிதித்துக் கொண்டிருந்தவள் இன்று தான் மிதிபடுகிறாள்.

“சங்கீதாவை தப்பா நினைக்காதே சொர்ணா. அந்த குழந்தை மனம் எப்படியெல்லாம் ஊசலாடியிருக்கும்? நீ தான் அம்மா, நான் தான் அப்பான்னு, அவளுக்கு நாம் தான் உலகமா இருந்தோம். ஒரே இரவில் அது நொறுங்கிப் போனது. கிஷோரோடு ஓடிப் போனதாக அபாண்ட பழி சுமத்தி, அவளை மனசை விட்டு விரட்டினோம். அவளைக் கடத்தி அறிமுகம் இல்லா இடத்தில அவளை ஓட்ட வைத்தோம்....அந்தப் பாவத்துக்கு பிராயச்சித்தமாகத்தான் அவளுக்கு அவள் நிஜ பாச உலகத்தை கொடுத்துவிட்டோம். சந்தோஷப் படணும் சொர்ணா...”

“நான் ரொம்ப அரக்கியா தான் இருதிருக்கேன் இல்லே?”

“நானும் தான்...”

“இல்லே...நீங்க அவளுக்கு நன்மை செய்யத் தான் கடத்திப் போகச் சொல்லியிருக்கீங்க...இப்ப புரியுது. நான் ரொம்ப சுயநலமா யோசிச்சிருக்கேன்.”

“சொர்ணா...எப்படி நீ இந்த நிஜத்தை ஒத்துக்கிட்டே ஆச்சர்யமா இருக்கு.”

“சங்கீதா சொன்ன வார்த்தைகள் என் உள் மனசில் ஊடுருவி என்னை என் அழுக்கு மனதை எனக்கே புரிய வைத்தது. என்னங்க...நான் ஏன் அப்படி நடந்துக்கிட்டேன்? நான் நினைக்கிறேன் என்னோட இன்செக்கியோரிட்டி தான் அதுக்கு காரணம்...உங்க கிட்டே நான் மனம் விட்டுப் பேசலாமா?”

“இந்த அமைதியான இரவு முழுக்க நமக்காகத் தான். சொல்லு. மனதில் போட்டு அழுத்தியது தான் உன் சுயநலத்துக்கு காரணம்.”

“நீங்க தப்பா நினைக்க கூடாது. இறந்து போன என் கணவர் மோகனை நான் கல்யாணம் செய்து கொன்ட போது எனக்கு வயசு பதினெட்டு தான். அவர் என்னை உள்ளங்கையில் வைத்து தாங்கினார். அவருக்கு முப்பது வயது. எனக்கு அவர் கொடுத்த அன்பை, காதல் என்று சொல்வதை விட ஒரு தகப்பனின் அன்பு என்று சொல்லலாம். எங்க வீட்டில் நான் தலைப் பிள்ளை. ரொம்ப செல்லம். கேட்டது கிடைக்கும். தரையில் நடக்கக் விட மாட்டாங்க...”

“நீ வளர்ந்த சூழ்நிலையை வச்சு பார்க்கும் போது...உன்னோட குணத்தின் போக்கு புரியுது. அன்பை பெறுவது தான் வாழ்க்கை. கொடுப்பதுன்னு இன்னொரு மறுபக்கம் இருப்பது உனக்கு தெரியலை.”

“ஆமா...அப்பா எனக்கு எது வேணா வாங்கித் தருவார். அம்மா எனக்கு பிடித்த உணவைத் தான் சமைப்பார். தம்பி என்னை ஓகோன்னு பாராட்டுவான். ஒரு தலைவலின்னு சொன்னாப் போதும் மூணு பெரும் தவியாத் தவிப்பாங்க. கடைக்குப் போய் மாத்திரை வாங்கி வருவான் தம்பி. அம்மா தலையை விக்ஸ் வச்சு தேச்சு விடுவா. அப்பா...என்னவோ எனக்கு கான்சர் வந்தா மாதிரி தவித்துப் போவார்....எனக்கு மோகனை பார்த்தபோது வயசு வித்தியாசம் முதலில் பெரிய தடையா இருந்தது. யாருக்கும் விருப்பமில்லை. நான் தான் அவரோட பேசிப் பாக்கறேன். பிடிச்சா பார்க்கலாம்னு சொன்னேன்...வேண்டாம் அவர் அரைக் கிழவர் என்றனர்....நான் பேசினேன்.”

“அவர் கிட்டே என்ன பேசினே? பஞ்சு மிட்டாய் வாங்கித் தருவீங்களான்னு

கேட்டியா? இல்லே ஜெயின்ட் வீலில் சுத்தணும்னு சொன்னியா?”

“கிண்டல் பண்ணாதீங்க. நான் என்ன கேட்டேன் தெரியுமா?”

ஆனந்தனுக்கு சுவாரஸ்யம் தட்டியது. “அப்புறம் சொல்லு...சொல்லு..”

“நீங்க எனக்கு அப்பாவா இருப்பீங்களா அப்படின்னு கேட்டேன்..”

“என்னது? நீ என்ன கிராக்கா? புருஷனாகப் போகிறவன் கிட்டே யாராவது இப்படி சொல்வாங்களா? அதுக்கு அவர் என்ன சொன்னார்?.”

“வெயிலுக்கு மர நிழலாவும்...பனிக்கு போர்வையாவும் மழைக்கு குடையாவும் நான் இருப்பேன்னு சொன்னார். சொன்னபடி செய்தார். என் அப்பா அம்மா தம்பியை போலவே என்னை தாங்கித் தாங்கி பார்த்துக் கொண்டார். நான் பெற்றுக் கொண்டே இருந்தேன். கொடுக்கணும்னு தோணவேயில்லை. ஒரு வருஷம் அவர் அன்பை அனுபவிச்சேன். குழந்தை உண்டான போது அவர் அவ்வளவு சந்தோஷப்பட்டார். பொண்ணு தான் பிறக்கணும். அதுவும் உன்னை மாதிரியேன்னு சொன்னார். நான் நாலு மாசம் கர்பமா இருக்கும் போது அநியாயமா ஒரு விபத்தில் போயிட்டார். அவரைப் போலவே பொண்ணு பிறக்கணும்னு ஆசைப்பட்டேன். பிறந்தது...இறந்தே பிறந்தது. அதுக்கு காரணம் சங்கீதாவின் அப்பாதான். அவரால் ஏற்பட்ட விபத்தில் என் குழந்தை ஷாக்கில் வயிற்றிலேயே இறந்துவிட்டது....எனக்கு ஏற்பட்ட ஷாக் சாதாரணமானதில்லை. அதான் அவர் குழந்தையை வாங்கிக் கிட்டேன். அவருக்கு புரியணும் என் வலி. அந்த வெறியில் எனக்கு புரியாமல் போனது அந்தக் குழந்தையின் கதி பத்தி. சங்கீதா வளைஞ்சு வளைஞ்சு கொடுத்தா. அம்மா அம்மான்னு உயிரையே விட்டா....அப்ப புரியலை அவள் பாசமும் அன்பும்...எப்ப அவள் அந்தக் கேள்வியை கேட்டாளோ அப்ப தான் அந்த இன்னொரு பக்கத்தை நான் பார்த்தேன்....என்னை மன்னிச்சுடுங்க.”

ஆனந்தன் அவளை பரிவுடன் அணைத்துக் கொண்டார். ஆறுதல் சொன்னார்.

“மழை தான் பூமிக்கு ஆதாரம். நமக்கு ஆதாரம் அன்பு மழை தான். மழை இல்லயேல் நதி ஏது? மனித நாகரிகம் ஏது? அன்பு மழை இல்லயேல் மனித வாழ்க்கைக்கு அர்த்தம் ஏது? உனக்கு கௌதம சித்தார்த்தின் கதை தெரியும். ஒரு நள்ளிரவில் சித்தார்த் தன் மனைவி மகனைப் பிரிந்து அரண்மனை வாழ்வை துறந்து போனார்ன்னு தானே நாம் அறிந்த கதை....”

“அதிலென்ன சந்தேகம்...அது தானே வரலாற்று உண்மை.”

“இல்லை...அம்பேத்கார் என்ன பதிவு பண்ணியிருக்கார் தெரியுமா? ரோகினி ஆற்றின் பயன்பாட்டில் வந்தது சர்ச்சை. சித்தார்த் நியாயத்தின் பக்கம் நின்றார். அதனால் அவர் கபிலவச்துவை விட்டு நாடு கடத்தப்பட்டார். இது தான் உண்மை. “பௌத்தமும் அதன் தர்மமும்” என்ற புகழ்பெற்ற புத்தகத்தில் அம்பேத்கார் இதை பதிவு செய்துள்ளார். தண்ணீருக்காக வஞ்சம் செய்த மனிதன் அன்றே தோன்றிவிட்டான். நதி பங்கீட்டிலேயே பகை மூண்டது என்றால் பிள்ளை பங்கீட்டில் பகை மூண்டதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது? சங்கீதா என்ற பச்சிளம் குழந்தையை அவளின் சம்மதம் இல்லாமல் கடத்திவிட்ட கொடுமையின் பலன் தான் இத்தனை வருடங்களுக்குப் பின் சங்கீதா கேட்ட கேள்விக்கு காரணம். சங்கீதாவின் தந்தையை பழி வாங்கவே நீ அவர் குழந்தையை எடுத்துக் கொண்டே. தப்பு செய்ததை செஞ்சே...அதில் உனக்கு ஒரு தார்மீகப் பொறுப்பு எப்படி இல்லாமல் போனது? அவளிடம் நீ தாயன்பு காட்டினியா? உன் சுயநல அன்பு உன்னை மகிழ்விக்கவில்லை. அதனால் தான் இன்செக்குரிட்டி இப்ப புரியுதா?”

“புரியுது...”

அதன் பிறகு அவர் அகல்யாவின் பெரிய மனசை விவரித்தார். அவரும் சங்கீதாவின் நல் வாழ்வு வேண்டி வில்லனாக மாறியதை சொன்னார்.

“எல்லாம் என்னால் வந்த வினை. என்னை மன்னிச்சுடுங்க. அகல்யாவின் மனசை புரிசுக்கிட்டேன். சங்கீதாவின் வலியும் எனக்கு புரியுது. எல்லாத்துக்கும் நானே தான் காரணம்....இனிமே ஒரு குழந்தையா இருக்கறதை விட்டிட்டு பெரிய மனுஷியா ஆலமரமா இருக்க கத்துக்கிறேன். என் வயசுக்கு அது தான் பொருத்தம். ”



சொர்ணாவிற்கும் ஆனந்தனுக்கும் திருமணமாக்கி முப்பத்து வருடம் ஆகிவிட்டது. சொர்ணா கணவனிடம் சொன்னாள்.

“அடுத்த வாரம் நம்மோட முப்பதாவது வெட்டிங் ஆனிவெர்சரி.”

“ஆமா....நாம கோவிலுக்குப் போய் ஒரு அர்ச்சனைப் பண்ணிட்டு வருவோம்.”

“அவ்வளவு தானா? சித்தார்த்திடம் போன் போட்டு சொல்லுங்க அவன் அமெரிக்காவிலிருந்து வரட்டும். நம் மகனோடு கொண்டாடுவோம். மகள் சந்கீதாவிடமும் சொல்வோம். எல்லோரையும் அழைத்து ஒன்றா கொண்டாடலாம்..”

“உன் யோசனை சரி தான்...”

ஆனந்தன் சித்தார்த்திடம் போன் பண்ணி சொன்னார்.

“அடுத்த வாரம் எங்களோட முப்பதாவது வெட்டிங் அனிவேர்சரி வருது சித்தார்த். நீயும் அகல்யாவும் குழந்தைகளும் வரணும்னு ஆசைப்படறோம்.”

“அப்பா...இப்ப தான் மகனோட பிறந்த நாளுக்கு வந்தோம். இப்ப லீவ் இல்லப்பா. இப்ப தான் கொண்டாடனுமா என்ன...நாங்க அடுத்து அவரும் லீவில் கொண்டாடலாம்...ஒ.கேயா அப்பா.”

“சொர்ணா...சித்தார்த்துக்கு லீவு இல்லையாம்...”

“நினச்சேன் அந்த அகல்யா பண்ணும் வேலை இது. சரி நீங்க சங்கீதாவையும் மாப்பிள்ளையையும் கூப்பிடுங்க. என் மகள் வர மாட்டேன்னு சொல்ல மாட்டா...” ஆனந்தன் சங்கீதாவுக்கு போன் செய்தார்.

“சாரிப்பா....நாங்க டெல்லி டூர் போறோம். முன்னாடியே பிளான் போட்டது. இப்ப கேன்சல் பாணன் முடியாது. வேணா சித்தார்த்தை அழையுங்கள். நாங்க பின்னாலே வந்து ஆசீர்வாதம் வாங்கிக்கிறோம்..”

சொர்நாவிடம் சங்கீத சொன்னதை சொன்ன போது அவர் குரலே உடைந்திருந்தது. சங்கீதா கூட இப்படி சொல்லிவிட்டாலே என்று வருத்தம் வந்தது. சொர்ணா முகம் வாடி விட்டது.



கல்யாண நாளன்று இருவரும் சீக்கிரமே குளித்துவிட்டு தயாரானார்கள். சொர்ணா குங்குமக் கலரில் ஜரிகை நிறைந்த பட்டு உடுத்திக் கொண்டிருந்தாள். ஆனந்தன் பட்டு வேட்டி, கிரீம் கலர் முழுக்க் கை ஷர்டுடன் மாப்பிள்ளை போல் வந்து நின்றார்.

“என் கண்ணே பட்டிடுட்ம் போல் இருக்கு. பிளளிகள் இல்லாமல் கொண்டாட வேண்டியிருக்கு. என்ன செய்வது எல்லாத்துக்கும் கொடுத்து வச்சிருக்கணும்.”

இருவரும் கொஞ்சம் வாட்டமுடன் கிளம்பும் நேரம் அவருக்கு போன் வந்தது.

“ஹலோ....யாரு?”

“நீங்க மிஸ்டர் ஆனந்தன் தானே?”

“ஆமா...நீங்க...”

“சார்....நீங்க உடனே புறப்பட்டு ஹோட்டல் ஆராதியாவுக்கு வர முடியுமா?”

“எதுக்கு சார்?”

“உங்களைப் பார்க்கணும்னு ரெண்டு பேர் இங்கே கதிடிருக்காங்க.”

“ஸாரி...நாங்க கோவிலுக்கு போயிட்டு இருக்கோம்....பத்து மணிக்கு மேல் வரோம்....அவங்க பேர் என்ன? வேற விவரங்கள் என்ன?”

“தெரியலை சார். நீங்க அப்புறமா கோவிலுக்கு போகலாம். ரொம்ப அவசரம். உடனே வாங்க. ப்ளீஸ். கொஞ்சம் கோப்பரேட் பண்ணுங்க...”
குழப்பத்துடன் சரி என்று சொன்னார்.

“என்னங்க? யாரு போனிலே...”

“தெரியலை. ஹோட்டல் ஆராதியாவுக்கு வரச் சொல்றார். யாரோ ரெண்டு பேர் என்னை சந்திக்க காத்திருக்காங்களாம். ரோமப் அர்ஜென்ட்டாம். என்னன்னு புரியலையே. இப்ப என்ன செய்றது?”

“என்னங்க...எனக்கு புரிஞ்சு போச்சு..”

“என்ன?”

“நீங்க போன வருஷம் துபாய் போக ஒரு ஏஜென்டிடம் சொல்லியிருந்தீங்களே. யாராவது துபையிலிருந்து இண்டர்வியுவுக்கு வந்திருப்பாங்க. ஏங்க...நமக்கு நல்ல நேரம் தான். நான் துபாய் போனதே இல்லை. கொஞ்ச நாள் அங்கேயே இருக்கலாம். மனசுக்கு ஆறுதலா இருக்கும்...கிளம்புங்க போலாம்...”

“என்ன சொல்றே...அப்ப இருந்த மன நிலையில் ஏதோ அப்ளை பண்ணினேன். அதுக்கு இப்ப போய் ரெஸ்பான்ஸ் வருமா என்ன? எனக்கு என்னவோ..”

“இதோ பாருங்க. எனக்கு பிறந்தும் சரியில்லை. வளர்த்ததும் சரியில்லை. நான் மனசாலே ஒடிஞ்சு போயிருக்கேன். எனக்கு ஒரு மாறுதல் வேணும். இது நிச்சயமா அவங்க தான். நீங்க தான் சொல்லியிருக்கீங்களே ஒரு வருஷம் கழிச்சு கூட வருவாங்கன்னு...”

கிட்டத்தட்ட ஆனந்தனை ஹோட்டல் ஆராதியாவுக்கு இழுத்துக் கொண்டு போனாள் சொர்ணா...”



காரை விட்டு இறங்கியதும் ஹோட்டல் ஸ்டீவர்ட் ரெண்டு பேர் பெரிய மாலையுடன் வந்து வரவேற்றனர்.

“ஹாப்பி வெட்டிங் டே சர்,,,,” என்றனர். மற்றும் சிலர் கைதட்டி வாழ்த்து

சொன்னபடி வரவேற்றனர். இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. யார் இவர்கள்? இவர்களுக்கு எப்படித் தெரியும் நம் வெட்டிங் அனிவேர்சரி?

உள்ளே அழைத்துச் சென்றனர். மனமேடை அலங்கரிக்கப் பட்டிருந்தது.

மல்லிகை பூச்சரம் மனமேடை சுற்றி ஊஞ்சலாடியது. கலர் கலர் பலூன்கள், ஜரிகை பேப்பர் அலங்காரம் என்று இடமே பூத்துக் குலுங்கியது.

“மை காட்...யார் இந்த வரவேற்பு கொடுப்பது?”

என்று குழப்பத்துடன் கேட்டார் ஆனந்தன்.

“நாங்க தான்....” அவர் குடும்பம் மொத்தமும் ஸ்க்ரீன் பின்னிருந்து ஓடி வந்தது. பேரப்பிள்ளைகள்...ஓடி வந்தனர்.

“தாத்தா...ஹாப்பி வெட்டிங் டே...”

அவர்களைத் தொடர்ந்து சித்தார்த்--அமிர்தா, சங்கீதா—சந்திரன் புன்னகை பூக்க வந்தனர். “ஹப்பு வெட்டிங் டே அம்மா அப்பா...” சங்கீதா

“ஹாப்பி வெட்டிங் டே...” சந்திரன்.

சித்தார்த்தும் அமிர்தாவும் அதே சொன்னார்கள். ஜோடிகள் அவர் காலில் தங்கப் பூக்கள் போட்டு ஆசீர்வாதம் வாங்கினர்.

கண்களில் ஆனத கண்ணீர் பூக்கள் பூக்க சொர்ணாவும் ஆனந்தனும் பூரிப்புடன் நின்றனர்.

“அப்பா...உங்களுக்கு சர்ப்பரைஸ் கொடுக்கத் தான் வரலைன்னு சொன்னோம். எப்படி? உங்க வெட்டிங் அனிவேர்சரியை கொண்டாடாமல் விட்டுவிடுவோமா? அப்புறம் நாங்க என்ன பிள்ளைகள்.? இதுக்கு எல்லாம் காரணம் சங்கீதா அக்கா தான். அவங்க தான் இந்த ஐடியா சொன்னது.” என்கிறான் சித்தார்த்.

அப்புறம் அங்கு வியாபித்த குதூகலத்துக்கு யார் தடா போடா முடியும்?

அன்பென்னும் ஊஞ்சல் சுகமா ஆடிக் கொண்டிருந்தது.


சந்தோஷம், பிரிவு, வலி, வேதனை எல்லாம் தான் வாழ்க்கை. என்ன பிரச்சனை என்றாலும் அன்பென்னும் ஊஞ்சல் ஆடிக் கொண்டே தான் இருக்க வேண்டும். இவர்கள் வாழ்க்கையில் ஊசலாட்டம் போய் ஊஞ்சலாட்டம் துவங்கியது. சங்கீதா இப்பொழுதும் பெருமையாகச் சொல்கிறாள். எனக்கு ரெண்டு அம்மா. தங்கமான அப்பா.... சரி சரி எங்களை மறந்துடாதே என்று பிள்ளைகளும், சந்திரனும் விளையாட்டாக விண்ணப்பிக்கிறார்கள். அகல்யா போட்ட கோலப் புள்ளிகள் இன்று அழகாக இணைக்கப்பட்டு பெரிய பூக் கோலமாக மனசை நிறைக்கிறது.



இந்த பூமியில் அனைவரும் இருப்பது வாடகைக்கு தான். கடவுளுக்கு சொந்தமான இந்தப் பெரிய வீட்டை தூசு தும்பு இல்லாமல் பார்த்துக் கொண்டு....மனசை வழிபட்டுக் கொண்டு வாழணும் என்பது தான் தெய்வத்தின் ஆசை. போகும் போது அன்பை விட்டுச் செல்லுங்கள். பழியையும் பாவத்தையும் எரித்தோ புதைத்தோ விடுங்கள் என்று ஆனந்தன் தன் பேரன் பேத்திக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்.





நிறைந்தது

சங்கரி அப்பன்.
 
Top