**படித்து கருத்துகளை கீழே எழுதுங்கள்!**
------- x --------
அத்தியாயம்—2
------- x --------
அத்தியாயம்—2
இரவு மணி ஒன்பது அடித்து ஒய்ந்தது. சொர்ணா தோசை வார்த்துக் கொண்டிருந்தாள். +டூ படித்துக் கொண்டிருக்கும் சித்தார்த் கவலையுடன் கேட்டான். “ஏம்மா...அக்கா இன்னும் வரலை?”
“தெரியலையேடா....எனக்கு ஒன்னும் புரியலை.”
“அப்பாவிற்கு போன் போட்டு விஷயத்தை தெரிவிக்கலாமா? பயமா இருக்கும்மா. அக்காவிற்கு என்னாச்சோ?”
“பயமுறுத்தாதேடா. எனக்கு கையும் ஒடலை காலும் ஓடலை. அப்பாவை
எதுக்கு கலவரப்படுத்தணும்? இப்பதான் லீவு முடிஞ்சு துபாய் போயிருக்கார்...”
“அழுதிட்டே இருந்தா என்னம்மா அர்த்தம்? அப்பாவுக்கு போன் பண்ணி சொன்னா, இங்கே இருக்கிற அவர் ப்ரெண்ட்ஸ் கிட்டே சொல்லி தேடச் சொல்வாரில்லே.? அதவிட்டிட்டு ஏன் திகைச்சு திகைச்சு நிக்கிறே?”
“வயசு பொண்ணு வரலைன்னா கண்டபடி கதை கட்டுவாங்களே.”
“அப்ப என்னதான் வழி? அக்கா போன் ஸ்விட்ச் ஆப்விலே இருக்கு. போலீசிலே கம்ளைன்ட் கொடுப்...”
“என்னது?...அதெல்லாம் வேண்டாம். கொஞ்சம் வெயிட் பண்ணுவோம். வழியில் என்ன பிரச்சனையோ?”
“அஞ்சு மணியிலிருந்து நீ தான் புலம்பிட்டே இருக்கே. ஒரு வழி சொன்னா வேண்டாம்கற. நான் வேணா அக்கா இன்டர்வியூக்கு போன கம்பனியிலே
விசாரிக்கவா? அதையும் வேண்டாம்னு சொல்லிடாதே...”
“அதெல்லாம் கேட்டுட்டேன். மாலை அஞ்சு மணிக்கெல்லாம் ஆபிஸ் விட்டு கிளம்பிட்டாளாம். அங்கே உள்ள கிளார்க் சொன்னான்.”
“அப்படியா? அப்ப அக்கா எங்கம்மா போயிருக்கா?”
“நீ புலம்ப ஆரம்பிக்காதே. நானே டென்ஷனில் இருக்கேன்.” சொர்ணா அழதுக்கொண்டே பீரோ கதவு திறந்தாள். பரபரவென்று தேடினாள்.
“என்னம்மா தேடறே?
“ஒண்ணுமில்லை...அவளுடைய எல்லா உடையும் இருக்கான்னு பார்க்கிறேன்.”
நகைப் பெட்டியை ஆராய்ந்தாள்.
“புரிஞ்சு போச்சு. நகை, பணம், உடை எடுத்திட்டு ஓடிட்டாள்னு சந்தேகப்படறியா? ச்சே..நீயெல்லாம் ஒரு அம்மாவா?”
“தப்பு தான் அவளை நம்பலாம். அவள் வயசை நம்பமுடியாதே! கிஷோருன்னு
ஒரு வளர்ந்த பையன், சிவப்பா லட்சணமா வருவானே..”
“அவன் கூட ஒட்டிட்டான்னு கணக்கு போடறயா? ச்சே..புத்தி போகுதே.”
இரவு முழுக்க திகலுடன் விழித்திருந்தார்கள்.
கட்டிலில் கிழிந்த நாராக கிடக்கும் உருவத்தைக் காட்டி சந்திரன்
“இது தான் எங்க பிக் பாஸ்.” என்று சொன்னபோது கொதித்துவிட்டாள் சங்கீதா. மனதில் திகில் பரவியது. இவன் சைக்கோவா? நன்றாக மாட்டிக் கொண்டோம் என்று உணர்ந்ததும் சொரேர் என்று வயிறு கலங்கிற்று. பயத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல் பொரிந்தாள்.
“என்ன மிஸ்டர் கிண்டலா? மரியாதையா என்னை போக விடுங்க. இல்லை போலிசுக்கு போன் போட்டு உங்க முகத் திரையை கிழிப்பேன்.”
வெடுக்கென்று அவள் செல்லை பிடுங்கிக் கொண்டான்.
“ஏய்.....என்ன விளையாடறியா? உனக்கு இங்கே தான் வேலை. இது தான் உன் ஆபிஸ். இவரை கவனிக்கறதுக்கு தான் உனக்கு நாற்பதாயிரம்.”
“ரொம்ப தேங்க்ஸ். உங்க வேலையும் வேண்டாம் சம்பளமும் வேண்டாம். அதுக்கு வேறே ஆளைப் பாருங்க...வந்திட்டாங்க. என்னை இளிச்ச வாயின்னு
நினைச்சியா? சும்மா சீன் போடாம வழியை விடு.”
சங்கீதா அறையை விட்டு பாய்ந்து வெளியேறி மாடிப் படிகளை கடகடவென்று கடந்தாள். இன்னும் இரண்டே படிகள் இருக்கும் பொழுது
அவன் அவள் கால் இடையே தன் காலை வைத்து இடறிவிட்டான்.
அவள் முன்பக்கம் குப்புற விழ தாங்கிக் கொண்டான். ஆனால் மாடிப் படியின் கைப்பிடி கம்பிக்குள் அவள் வலது கால் மாட்டி விர்ரென்று வலி உயிர் போக அவள் “அம்மா..” என்று அலறினாள். கண நேரம் ஸ்மரணையற்று பின் மெல்ல தன்னிலை அடைந்தாள். ச்சே..இவன் சைக்கோ தான். மிருக ஜென்மம்....எப்படிப்பட்ட குரூரன்! கண்களாலேயே எரித்துவிடுபவள் போல்
பார்த்தாள். “பாவி...ச்சே போடா..’ மிகுந்த வலியையும் மீறி இச்சொற்கள் தீப்பொறியாய் அவளிடமிருந்து பறந்து வந்தது. அவள் எழுந்து கொள்ள முடியாமல் சுளுக்கிய காலை பரிதாபமாக பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள்.
அவன் அவளருகே மண்டியிட்டு அமர்ந்தான்.
“மன்னித்துவிடு சங்கீதா...எனக்கு வேறு வழி தெரியலை.”
புஸ்சென்று வலது கால் பன் மாதிரி வீங்கிவிட்டது. காலின் வலியை விட மனதின் வலி அதிகமாக இருந்தது. அவள் குரல் நடுங்க கேட்டாள்.
“உனக்கு என்னடா தீங்கு செய்தேன்.? எதுக்கு இப்படி கொலை வெறியோட என்னை இங்கு தக்க வைக்க பார்க்கிறே? ஒரு நோயாளியை கவனிக்க ஒரு நர்ஸ் கூடவா உன்னால் அமர்த்திக்க முடியாது? இவ்வளவு பெரிய மாளிகையில் இவ்வளவு சின்ன மனசோட இருக்கியே வெக்கமாயில்லே?”
சங்கீதாவின் வார்த்தைகள் தீ பூக்களாய் அவன் இதயத்தில் எரிந்தது.
அவள் அழவில்லை ஆனால் வார்த்தைகளை கண்ணீர் வடிக்கச் செய்துவிட்டாள். அவன் கண்கள் குற்ற உணர்வுடன் பனித்தன.
“சங்கீதா..ஸாரி. வெரி ஸாரி. நிர்பந்தம். இது நிர்பந்தம். நீ இங்கு இருந்து மாமாவைப் பார்த்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம். இது அவசியம். என்ன நம்பு. உனக்கு ஒருபோதும் தீங்கு செய்ய மாட்டேன்.”
“நம்பிட்டேன். உன் உத்தமமான குணம் தான் தெரியுதே.”
“கோபப்படாதேம்மா..”
“போதும் கனிவு நாடகம். என் செல்லை பிடுங்கிக் கொண்டே. திருப்பிக் கொடு. என் அம்மாவிற்கு போன் பண்ணி சொல்லணும். அவங்க என்னை தேடிட்டு இருப்பாங்க. தம்பியும் கவலைபட்டிட்டிருப்பான்.”
அவன் முகம் உடனே மாறிற்று. அவனுள் மறுபடியும் விலங்கு—மதயானை
புகுந்து கொண்டுவிட்டதோ! அவளை அப்படியே இருகைகளாலும் தூக்கிக் கொண்டான். “ஏய்..ஏய்...விடுடா என்னை...” என்று அவள் கத்த கத்த மாடிப்படிகளில் ஏறினான். பொத்தென்று கட்டிலில் போட்டான்.
“உன்னால் இப்ப நடக்க முடியாது. அதான் அறைக் கதவை திறந்து வச்சிட்டுப் போறேன். கூச்சல் போட்டே வாயை கட்டிடுவேன். இந்தா வலிக்கு மாத்திரை எடுத்துக்க. டி.வி பார். யார் யாரை கடத்தறா...விஷம் வைக்கறா...பழி வாங்கறான்னு பாரு. நான் எவ்வளவு உத்தமன்னு புரியும். சரியா ஒன்பது மணிக்கு டாக்டர் வருவார். இப்ப சாப்பாடு வரும். சப்பாத்தி ஒ.கே தானே?”
விருட்டென்று அகன்றான். “சந்திரன்..” என்று அவள் குழைவாக கூப்பிட்டதும் திரும்பினான். அவள் குரலின் குழைவு அவனுக்குப் பிடித்தது. “என்ன?”
என்றான் வியப்புடன். இவ்வளவு மிருதுவாக ஒரு காதலனைக் கூப்பிடுவது போலல்லவா கூப்பிடுகிறாள். அவன் முகம் மலர்ந்தது. “சொல்லு சங்கீதா..’
“ஒண்ணுமில்லை..உனக்கு அமாவாசைன்னு பேர் வச்சிருந்தா பொருத்தமா இருந்திருக்கும்.. ஒளி சிந்த தெரியாத உனக்கு சந்திரன் என்ற பேர் எதுக்கு? நான் வேணா உன்னை அமாவாசைன்னு கூப்பிடட்டுமா?’”
“இடியட்..” என்று அவன் சீறினாலும் அவள் சொன்னதை அவளின் குறும்பாக எடுத்துக் கொண்டான் என்று தெரிந்தது. அவளின் கேலியான நக்கலை அவன் இப்படியா எடுத்துக் கொள்ள வேண்டும்? அவள் எரிச்சலடைந்தாள்.
“நான்..போணும் அமாவாசை. என்னைத் தேடுவார்கள்.”
“தேடிவிட்டு மறந்துவிடுவார்கள். நீ கிஷோரோடு ஓடிப் போய்விட்டதாக முடிவு கட்டுவார்கள். உன் கிழக்கு இன்றிலிருந்து விடிகிறது. நான் நிரந்தர
பௌர்ணமி சந்திரன் என்று அன்று நீ உணர்வாய்.” வார்த்தைகளை வீசிவிட்டு மறைந்தான். திமிர் பிடித்தவன் என்று தெளிவாகப் புரிந்தது.
இரவு ஒன்பது மணிக்கு அவள் அம்மாவும் தம்பியும் அவளைக் காணோம் என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தபோது இவள் சந்திரன் கொண்டு வந்த சப்பாத்திகளை தின்றுவிட்டு டாக்டருக்காக காத்திருந்தாள். வலி உயிர் போயிற்று. டாக்டர் வந்தார். கால் வீக்கத்தைப் பார்த்துவிட்டு
“ஏம்மா...சந்திரன் சொன்னார்...அவர் கட்டிக்கப் போற பொண்ணு நீதானாமே.?
இப்படியா வருங்காலக் கணவனை கவனிக்க படிகளில் தாவி ஓடி வந்து விழுவே? நல்ல பொண்ணும்மா நீ. நல்ல வேளை ப்ராக்சர் ஏதும் ஆகலை.
மசாஜ் பண்ணிவிடுங்க சந்திரன். ஆயில் தரேன். இன்றிரவு தூங்க தூக்க மாத்திரை தரேன். வருங்கால மனைவி காலைப் பிடிங்க சந்திரன், தப்பில்லை”
என்று ஜோக் அடித்தார். சங்கீதா அவசரமாகச் சொன்னாள்.
“டாக்டர்...இந்தாள் ரீல் விடறார். பிடிச்சு தள்ளியதே இவர்தான். என்னை கிட்னாப் பண்ணி கொடுமைப் படுத்தறார்.” என்று கோபமாக பொரிந்தாள்.
டாக்டர் கண்சிமிட்டி சிரித்தார். “ஊடலா? புரியுது...புரியுது. இளம் காதலியை சமாதனப்படுத்துங்க.” என்று சிரித்துவிட்டு கிளம்பிவிட்டார். அவள் மறுப்புக் கத்தல், கடலில் விழுந்த மழைத் துளி போல் கரைந்து போயிற்று.
ச்சே...இந்தக் கிழம் இந்த வயசிலும் ரொமான்ஸ் ஞாபகமா இருக்கே...எல்லாம்
என் தலையெழுத்து. என்று பொருமிக் கொண்டாள்.
“காலை உருவி விடவா?” என்றான் விஷமப் புன்னகையுடன்.
“காலை வாரி விடவான்னு கேளு. இன்னும் என்னென்ன செய்ய காத்திருக்கியோ. இங்கிருந்து போயிடு. என்ன...வருங்கால மனைவி மண்ணாங்கட்டின்னு கதை கட்டி விட்டிருக்கே. உனக்கு ரொம்பத் தான் திமிர். உன்னை மனுஷி கல்யாணம் பண்ணிப்பாளா?”
“மாட்டாள். உன்னைப் போல் தேவதை தான் பண்ணிப்பாள். கண்ணை மூடிட்டு தூங்கு. கனவிலே கூட நான்தான் வருவேன்..” சிரித்தான்.
எவ்வளவு ஏத்தம்? இப்படியொரு கெட்டவனுக்கு குறும்பு பேச்சு ஒரு கேடு.!
இவனுக்கு ஜால்ரா அடிக்கிற ஒரு டாக்டர்...
“நீ சகாரா பாலைவனத்திலே தண்ணி கிடைகாமே அலையறதா கனவு வரும்.”
என்றாள். அவள் முகமெல்லாம் சிவந்து போனதை அவன் கவனித்தான்.
“கோபத்திலே கூட நீ அழகாத்தான் இருக்கே. சும்மா சொல்லக் கூடாது பிரமன் உனக்கு நிறையவே சலுகை கொடுத்து படைச்சிருக்கான்.”
மறுநாள் காலை டூத்பேஸ்ட் டூத்பிரஷ் சகிதம் வந்தான். அவள் கால் வீக்கம் குறைந்து அவளால் விந்தி விந்தி நடக்க முடிந்ததால் காலைக் கடன்களை முடித்துவிட்டு உட்கார்ந்திருந்தாள்.
“ஒ...ஸ்மார்ட் லேடி ப்ரெஷ் ஆயிட்டே போல. இரு காபி கொண்டு வரேன்.”
“எனக்கெதுவும் வேண்டாம். வீட்டுக்கு போணும்.”
அவள் எழுந்து கொண்டு விந்தி விந்தி வாசல்வரை நடந்து வந்தாள்.
“ஒரு நிமிஷம்..”
“என்னைத் தடுக்காதே. இப்படியே நொண்டிக்கிட்டே கூட என் வீட்டுக்குப் போயிடுவேன். இனிமே என்னை நீ இங்கே அடச்சு வைக்க முடியாது.”
“சரி போ. உன் இஷ்டம். ஆனா அதுக்கு முன்னாடி பெரியவர் கிட்டே ஆறுதலா இரு வார்த்தை பேசிட்டுப் போயிடு.”
“அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? உன்கிட்டே கூட நான் சொல்லிக்க வேண்டிய அவசியமில்லை. நான் யார் கிட்டவும் போய் விடை பெற வேண்டியதில்லை. தகராறு பண்ணினா நான் போலீசுக்குப் போவேன்.”
“சங்கீதா...உன்னை கெஞ்சிக் கேட்டுக்கிறேன். தயவு செய்து பெரியவர்கிட்டே
இரண்டொரு வார்த்தை பேசிவிட்டுப் போ. ப்ளீஸ்....சாகப் போகிறவர்.”
அதெல்லாம் முடியாது என்று சொல்ல நினைத்தவள், அவனின் கடைசி சொற்கள் கேட்டு நின்றாள். மனசில் இரக்கம் வந்தது.
“இந்த உலகத்தில் யாரும் நிரந்தரமா வாழப் போறதில்லை. இப்ப அவர் சாவை நெருங்கிட்டிருக்கார். மூன்று மாசமோ...ஆறு மாசமோ...யார் கண்டது?
ஆறுதல் சொல் சங்கீதா..”
“அவருக்கு என்ன கான்சரா? பராலடிக் அட்டாக்கா?”
“இரண்டுமில்லை. எம்.என்,டி அதாவது மோட்டார் நியூரான் டீஸீஸ். இதுக்கு
குயூர் எதுவும் கிடையாது. அவரோட நரம்புகள் பலமிழந்து கொண்டே போகும்
நடக்கவும்...கைகளால் எதையும் பிடிக்க முடியாமலும் போயிடும். நாளடைவில் உணவினை சவைக்கவும் விழுங்கவும் கஷ்டமாகிவிடும்.
இறுதியில் செஸ்ட் மசில்ஸ் வீக்காகி மூச்சு விடுவதும் சிரமம் ஆகிவிடும்.
கடைசி வரை அவர் மூளைப் பகுதி மட்டும் பாதிக்கப்படாது. அது தான் நோயின் சாபம். தன் பரிதாப நிலை அவருக்குத் தெரியும். மனதால் சோர்ந்து விடுவார். தன்னால் எதுவும் செய்ய முடியாமல் இருப்பது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா? ஒரு மனுஷனுக்கு இதைவிட பெரிய தண்டனை வேறு என்னவாக இருக்க முடியும்?” சொல்லிவிட்டு அவன் அழுதுவிட்டான். அந்த அழுகையில் செயற்கை தனம் இல்லை என்று அவள் புரிந்துகொண்டாள். அவளுக்கே மனது சங்கடமாக இருந்தது. ரொம்ப நாள் அவன் துக்கத்தை அடக்கி வைத்துக் கொண்டிருப்பவன் போல் பட்டது.
அவள் திகைத்து நின்றாள். அடுத்த அடி எடுத்து வைக்க தயங்கினாள்.
“உன்னை பார்க்கணும்னு ஆசையா இருக்கார் தெரியுமா? அவர் கடைசி காலத்தில் நீ அருகில் இருக்கணும்னு ஏங்கறார் தெரியுமா?”
“சரி..சொல்லிட்டுப் போறேன். அதுக்காக அவர் கடைசி மூச்சுவரை இருக்க முடியுமா என்ன? அவருக்கு நெருங்கிய உறவுகளை வரவழையுங்க.”
“நீ தான் அவரின் நெருங்கிய உறவு. அதான் உன்னை வரவழைச்சிட்டேன்.
தங்கறதும் தங்காததும் உன் விருப்பம்.”
“பேஷ்..பேஷ்..இந்த நாடகம் சூப்பர். அவரோட மகள்ன்னு சொல்லுங்க நாடகம் சூப்பரா ஓடும்.”
“நீயே யூகிச்சிட்டியே. அவரோட மகள் தான் நீ. அது தான் உண்மை.”
“வாட் நான்சென்ஸ்.? ஏதோ விளையாட்டுக்கு சொன்னேன். இதுதான் சாக்குன்னு அதையே புடிச்சிகிட்டு...”
“கதையல்ல நிஜம்...” என்று அவன் சொன்ன போது அவள் அவன் ஒரு ப்ராடு
தான் என்ற முடிவுக்கு வந்தாள்.
ஊஞ்சல் ஆடும்...
------
கீழே உங்கள் கருத்துக்களை பரிமாருங்கள்!