அத்தியாயம்—3
வெறுப்பும் பச்சாதாபமும் கலந்த மனநிலையோடு சங்கீதா பெரியவரிடம் சொல்லிக் கொண்டு புறப்பட முடிவு பண்ணினாள்.
“அய்யா...உடம்பை பார்த்துக்கோங்க. நான் கிளம்பறேன். அம்மாவும் தம்பியும் தேடுவாங்க. நான் ரொம்ப நாள் இங்கு இருக்க முடியாது.”
அப்பொழுது அவர் கொஞ்சமாக பேசும் நிலையில் இருந்தார். அதுவும் சிரமப்பட்டு தான். அவர் கையெடுத்து கும்பிட்டு
“என் இறுதி மூச்சுவரை என்னை விட்டுப் போகாதேம்மா....என் மகளே..”
என்று வேண்டினார். இது என்ன சோதனை! அவர் மகள் யாராவது காணாமல் போய்விட்டாளோ.? அவள் மாதிரி நான் இருக்கேனோ? இப்படி உருகுகிறார்!
“என்ன சொல்றே? இருக்கியா என் மகளே சங்கீதா...”
“ஒரு வாரம் இருக்கேன். அதுக்கு மேல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது.
என்னை மன்னியுங்கள் பெரியவரே...என் அம்மா தேடுவார்கள்.”
சந்திரன் மேல் அவளுக்கு ஆத்திரம் வந்தது. மனுஷங்களோட இரக்கத்தை
சம்பாதிக்க நொண்டியாகவோ குருடாகவோ நடித்து பிச்சை எடுப்பவர்கள் போல், இவன் தன்னை தக்க வைத்துக் கொள்ள பெரியவரை பயன்படுத்திக் கொள்கிறானோ என்று ஐயுற்றாள். இவன் நோக்கம் தான் என்ன? அவன் தன் பெண்மையை பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்யவே இல்லை. தன்னை ஆபாசமாகப் பார்க்கவே இல்லை என்பதை அவள் சந்தேகமற புரிந்து கொண்டிருந்தாள். பிறகு எதற்காக அவன் கண்டபடி பொய் எல்லாம் சொல்லி அவளைத் தடுக்கிறான் என்பது தான் புதிராக இருந்தது. அவள் பெண்மைக்கு ஆபத்து இல்லை, அது தான் அவளுக்கு ஒரே ஆறுதல்.
ஒரு வாரம் என்பது மூன்று மாதமாக நீண்டுவிட்டது. அவன் பேசப் போகிறேன் என்றது அவளுக்கு கிடைத்த வரம் என்று நினைக்கவேண்டியதாகி
விட்டது. இரவெல்லாம் தூக்கம் வராமல் தவித்தாள். மனசு எங்கேயோ வழுக்கிக் கொண்டு போயிற்று. தன் வீட்டைப் பற்றி நினைத்தாள்.
அவளுக்கு ஐந்து வயதாகும் போது தான் சித்தார்த் பிறந்தான். அவனுக்கு எத்தனை விளையாட்டுச் சாமான்! எத்தனை உடைகள்!
“சிங்கக் குட்டி...செல்லக் குட்டி...புஜ்ஜி பையா...” என்று விதவிதமான கொஞ்சல்கள்.! சங்கீதாவின் சின்னஞ் சிறு உலகம் ஏக்க மழையில் நனைந்து தவித்தது. அவன் தத்தி தத்தி நடந்தபோது சொர்ணா கைதட்டி ரசித்தாள்.
“அம்மா...நானும் குட்டிபாப்பாவா இருந்தப்ப இப்படித்தான் நடந்தேனாம்மா?”
என்று அம்மா தன்னையும் புகழனும் கொஞ்சனும் என்று ஆர்வமாக கேட்பாள் சிறுமி சங்கீதா. பதிலுக்காக அம்மா வாயை பார்ப்பாள்.
“ஆமாண்டா செல்லம்....நீயும் அல்லித் தண்டு காலெடுத்து ஓவியம் நடந்து வருவது போல வருவியே...” அம்மா சொல்ல உச்சி குளிர்ந்துவிடும் சிறுமி சங்கீதாவுக்கு. இப்பொழுது நினைத்தால் சிரிப்பாகத் தான் இருக்கிறது. சின்னக் குழந்தையை தனக்கு போட்டியாக நினைத்தாளே! இப்பொழுது அம்மாவும் தம்பியும் அவளைத் தேடி எங்கெல்லாம் அலைகிறார்களோ! இங்கே சிக்கிக் கொண்டாளே. என்ன செய்வது விதி! பெரியவரிடம் விடை பெற வந்தாள்.
“உங்களுக்காக ஒரு வாரம் இருக்கேன் அய்யா..”
“சந்தோஷம். நீ இருக்கவேண்டியது உன் கடமை சங்கீதா.” என்றான் சந்திரன்.
“கடமையா? எனக்கென்ன கடமை?” வெங்கடேசன் குறுக்கிட்டார்.
“சாகப் போறவன் நான்...நான் பொய் சொல்லமாட்டேன். நீ என் மகள்மா.”
“நீங்களும் ப்ளாக்மெயில் பண்றீங்களா பெரியவரே.?”
“அம்மாடி...இன்னும் கொஞ்ச நாளில் என் இதய தசைகள் வலு இல்லாமல் போயிடும். இப்படி திக்கித் திக்கி கூட பேசமுடியாது....”
“தைரியத்தை கைவிடாதீங்கய்யா.”
“என் தைரியமே நீ தானேம்மா. என் கடைசி மூச்சு வரை..”
“அய்யா...எங்கம்மாவும் தம்பியும் என்னைத் தேடிட்டு இருப்பாங்க. உங்க மருமகன் வேறு என் போனை பிடுங்கி வச்சிருக்கார்.”
“அவங்க உன்னைத் தேட மாட்டாங்கம்மா..”
“உங்க மருமகன் தான் பொய் சொல்றாருன்னா, நீங்க, வயசிலே பெரியவங்க இப்படி பேசறீங்களே...என் காலை இடறிவிட்டு விழ வச்சார். எப்படிப்பட்ட
அரக்கன்! ஒரு வாரம் தான்...அதுவும் உங்க உடல் நிலையை பார்த்து...”
“பரிதாப்பப்பட்டு இருக்கேங்கறையா?” அழுதார். பின் மெதுவாக
“அவன் செஞ்சது தப்பு தான். இனிமே அப்படி பண்ணமாட்டான். நான் பொறுப்பு. அம்மாடி என் கூடவே என் கடைசி மூச்சுவரை இருக்கேன்னு சொல்லும்மா...சாகப் போகிறவனின் கடைசி ஆசை...”
“ப்ளீஸ்..புரிஞ்சுக்கோங்க. என் குடும்பம் என்னைக் காணாம எப்படி தவிக்கிறாங்களோ? ஒரு வாரம் தான்..”
அவள் விருட்டென்று திரும்பினாள். அவர் அவள் கையை பற்றிக் கொண்டார்.
“என்னை மாதிரியே பிடிவாதம் உனக்கு. உன்னை விடமாட்டேன்.” அவரின்
பலகீனமான பிடியை உதறிவிட்டு நடந்தாள். தடாலென்று கட்டிலை விட்டு தரையில் விழுந்தவர் அவள் காலை பற்றி “போ...போ..போகாதேம்மா.” என்றார்
அவர் திணறி திணறி, வாய் கோணி...நா குழறி..எச்சில் வழிய பரிதாபமாக கெஞ்சியபோது சங்கீதா அதிர்ந்துவிட்டாள். இப்படி கிடுக்கி பிடி போடறாரே!
“என் தம்பியை, அம்மாவைப் பிரிந்து எப்படியய்யா நான் இருக்கிறது.?”
அவர் முகம் கோணிற்று...கைகால்கள் வெட்டி வெட்டி எடுத்தது. டாக்டர் வரவழைக்கப்பட்டார். அவர் பரிசோதித்துப் பார்த்தார்.
“பிட்ஸ் வந்திருக்கு. பயப்பட வேண்டாம். ஊசி போட்டிருக்கேன். அவருக்கு அதிர்ச்சி தரும்படி எதுவும் பேசவேண்டாம். அவர் மரணம் நோக்கிப் போகிற இந்த வேளை உங்களால் முடிந்தவரை அன்போடு கவனித்து அனுப்புவது தான் முறை. மனசை அவர் அமைதியா வச்சிருக்கணும். இல்லை மீண்டும் பிட்ஸ் தான் வரும். ப்ளீஸ் ஹெல்ப் ஹிம் வித் ஏ பீஸ்புல் டெத்..”
என்றுவிட்டுப் போனார். சந்திரன் முகம் வெளிறிவிட்டது. இறுகிய முகத்துடன் பேசினான். அவளை புழு போல் பார்த்தான்.
“உன்னை மனுஷியா நினைச்சு கேட்டார் பார்...தப்புதான். இனிமேலும் உன்கிட்டே கெஞ்சி பிரயோஜனமில்லை. சரி..உன் விருப்பப்படி கிளம்பு.
ஆனது ஆகட்டும். ஒரு ஆறு மாசமாவது உயிருடன் இருக்கப் போகிறவரை இப்பவே அனுப்பிடு. உன்னை மாதிரி சுயநலப் பிறவியை நான் பார்த்ததே இல்லை. டிரெஸ் மாத்திட்டு வரேன். கிளம்பத் தயாரா இரு.”
என்ன சோதனை இது! என்ன மர்மம் இது! யார் இப்பொழுது பரிதாப நிலையில் இருக்கிறார்கள்? அவளா? பெரியவரா? கடவுளே..எதை நம்புவது?
எதை நம்பாமல் இருப்பது? பெரியவரை பார்த்தாள் சங்கீதா. ரொம்ப பரிதாபமாக இருந்தது. ஆண்டவன் ஏன் இப்படி மனிதர்களை சோதிக்கிறான்.!
இவர் ஏன் இப்படி உருக்குலைந்து மனம் நொந்து மரணம் என்கிற இறுதியை கொடூரமாக சந்திக்க வேண்டும்? அவரின் மகள் நான்தானாமே! என்ன அபத்தம் இது? அப்பாவுக்கு மட்டும் தெரிந்தால் கொதித்து விடுவார்...அப்பா உன் கூட பேசணும்...அம்மா உன் கூட பேசணும்...தம்பி என்னை தேடறயா? இங்கே மாட்டிட்டு இருக்கேன்டா...மனதிற்குள் பேசிக் கொண்டாள்.
லுங்கியை மாற்றிவிட்டு கிரீம் கலர் ஷர்ட்டும் அதே கலர் பாண்ட்டுமாக
வந்து நிட்றான் சந்திரன். அவன் முகமே வெளுத்து கிரீம் கலரை அடைந்து
விட்டிருந்தது. ரத்தம் சுண்டிய முகம். பார்க்க பயமாக இருந்தது.
“வா..உன் அருமை அம்மாவிடம் கொண்டு போய் விட்டுவிடுகிறேன். உன்னை மாதிரி பேய் இந்தக் கோவிலில் இருக்க முடியாது.” என்றான் வெறுப்புடன்.
“நீங்க இரண்டு பேரும் நான் அவரின் மகள் என்று சொல்வது நிச்சயம் பொய் தான். ஆனால் அவர் மரணத்திற்கும் மூச்சிற்கும் போராட்டம் நடந்து கொண்டிருப்பது நிஜம். பாவம்...அந்த காரணத்துக்காக, அவர் கேட்கிற ஒரு சின்ன ஆசையை நிறவேத்த முடிவு பண்ணிட்டேன்....போதுமா? ஆனா நல்லா கேட்டுக்கங்க, ஒரு மாசம் தான். இப்ப என்னை வீட்டிலே கொண்டு விடுங்க, நான் அம்மாக்கிட்டே பர்மிஷன் வாங்கிட்டு வந்திடறேன்...” என்றாள் சங்கீதா.
அவன் முகம் லைட் போட்டது போல் பிரகாசமாயிற்று. அவன் ஓடி வந்து அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டான். நெற்றியில் முத்தமிட்டான்.
“தேங்க்ஸ்..தேங்க்ஸ் எ லாட்...” சொல்லிக் கொண்டே இருந்தான். அவள் அவனை தள்ளி விட வேண்டியதாயிற்று.
“இப்படியெல்லாம் நடந்து கொண்டால் நான் இருக்க மாட்டேன். ச்சே
கொஞ்சம் கூட நாகரிகமே தெரியலை. முன்பின் தெரியாத பெண்ணை இப்படித்தான் கட்டிப்பிடிப்பதா? இன்னொரு தரம் இப்படி செய்தால் நான் சும்மா இருக்கமாட்டேன்...உன் அராஜகம் அதிகமாயிட்டிருக்கு”
“ஸாரி...ஸாரி...சங்கீதா. கோவிச்சுக்காதே.”
“ஸாரி..தேங்க்ஸ்...ஆங்கிலத்தில் சௌகரியமான வார்த்தைகள். என்னை ஒழுங்கா ட்ரீட் பண்ணு. கட்டிப் பிடிப்பதுக்கும் முத்தமிடுவதுக்கும் யார் உனக்கு அனுமதி கொடுத்தது? ஆர் யூ மாட்? இது பரிதாபத்தில் வந்த முடிவு..
பாசத்தால் அல்ல. ரொம்ப ஓவரா சந்தோஷப் பட்டுட வேண்டாம்.”
“புரியுது. சந்தோஷத்தில் என்ன செய்றதுன்னு தெரியாம நேர்ந்த தவறு.
இப்போ உன் அம்மா வீட்டுக்கு உன்னை கூட்டி போகமுடியாது. கேள்வி கேட்காதே...ப்ளீஸ். எல்லாம் விளக்கறேன். கொஞ்சம் பொறுமை காட்டு.”
அவன் குழைந்து தன்மையாக கேட்டதும் அவளால் மறுக்கமுடியவில்லை.
“அப்ப அம்மாக்கிட்டே பேசவாவது விடேன்..”
“இப்ப வேண்டாம். காயப்பட்டு போயிடுவே. வெயிட்.”
“என்ன புதிர் போடறே? உனக்கு உன் மாமா மேல் பாசம் இருக்கா மாதிரி நான் என் அம்மா மேல் பாசமா இருக்கக் கூடாதா? பேசக் கூடாது...பார்க்கக் கூடாதுன்னு சொன்னா எப்படி? நீ நல்லவனா கெட்டவனா? புரியலை.”
“ஒரு மாசம் தான். இது ஒரு நல்ல காரியம்...உனக்கு புண்ணியமா போகும்.”
இவனிடம் இனி பேசிப் பயனில்லை என்று புரிந்து சரி என்று தலை
ஆட்டினாள். சந்தர்ப்பம் அமைத்துக் கொண்டு அம்மாவிடம் பேசிவிட வேண்டியது தான். இவனிடம் என்ன அனுமதி வேண்டிக் கிடக்கிறது.
“ஒ.கே சங்கீதா தேவதையே...இப்படி வா..’
எதிர் அறைக்கு அழைத்துச் சென்றான். அது விஸ்தாரமாக இருந்தது.
“மாமாவை கவனிச்சுக்க இந்த ரூம் உனக்கு வசதியாக இருக்கும். உனக்கு உடைகள் வாங்கித் தருகிறேன். சுடிதார் ஒ.கே தானே? சமையல் செய்ய சுந்தரம் அய்யர் வருவார். சூப்பரா சமைப்பார். துணி துவைக்க வாஷிங் மிசின்
இருக்கு...மாமாவோட துணிகளை அடிக்கடி மாத்தவேண்டி இருக்கும். கிளீனா இருக்கணும் இல்லையா?”
“அதுக்குத் தான் புதுசா சங்கீதா மிஷின் வாங்கி இருக்கீங்களே. கவலைபடாதீங்க நல்லா வேலை செய்யும்.”
“உன்னை மிஷினா நான் நினைக்கலை சங்கீதா. ஒரு நாள் என்னை புரிந்துகொண்டு நீ பாராட்டத்தான் போறே.”
“நீ இப்ப என் செல்போனை கொடுத்தா நான் உன்னை பாராட்டுவேன்.”
“நோ..” இவ்வளவு நேரம் குழைந்து பேசியவன் கோபத்துடன் விழித்தான்.
“அந்தப் பேச்சை மட்டும் எடுக்காதே.”
“ப்ளீஸ் சந்திரன் கொடு. என் வீட்டுக்கு நான் இன்பார்ம் பண்ணனும். சில்லியா பிகேவ் பண்ணாதே. இந்நேரம் எத்தனை மிஸ்ட் கால் வந்திருக்கோ?”
“எதுவும் வரலை. அவங்க உன்னை தேடமாட்டாங்க.”
“பொய் சொல்லாதே. நீ தரலை நான் இப்பவே போறேன்.”
“பயமுறுத்திறியா?”
“உன்னை பயமுறுத்த முடியுமா? நீ தான் யமனாச்சே. என் உரிமையை
ஞாபகபடுத்தறேன்.”
“உரிமையில்லாத இடத்திலிருந்து இப்ப தான் உரிமையுள்ள இடத்துக்கு
வந்திருக்கே.” அவன் சொன்னதும் அவளுக்கு எரிச்சல் வந்தது.
“பொய் மேல் பொய் சொல்றியே...”
“பொய் அல்ல கண்ணே...இத தெரிஞ்சுக்கோ. உங்க வீட்டிலிருந்து உன்னை துரத்திட்டாங்க. உன் ஆருயிர் அப்பா தான் உன்னை கடத்திட்டுப் போகச் சொன்னது. அவருக்கு நல்ல சாவே வராது.”
பளாரென்று அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டாள் சங்கீதா.
“என் அப்பா பத்தி தப்பு தப்பா பேசாதே. கொன்னுடுவேன். ஆத்திரம் ஆத்திரமா வருது. கண்ணே மணியேன்னு கூப்பிட்டே பல்லை பேத்துடுவேன்.”
“பரவாயில்லை என்னை அடிச்சது என் ஹனி தானே? தாங்கிக்கறேன்.
“நீ வலி கொடுத்தாலும் தாங்கிடுவேன்.” என்று பாட வேறு ஆரம்பித்தான்.
“உன் மாமாவை பார்த்துக்கணும்கறதுக்காக நான் அடிச்சதை கூட தாங்கிக்கிட்டே இல்லே.? உன் மாமா மேலே உனக்கு இருக்கிற பாசம் மாதிரி தானே எனக்கும் என் அப்பா மேல் இருக்கும். புரிஞ்சுக்காத மாதிரி நடிக்காதே.” தந்திரம் இவன் முகமெல்லாம் வழிகிறது. அவளை போக விடாமல் தடுக்க குப்புற விழ வைத்தவன் தானே...இடியட்...
“எதுக்காக நீ இப்படி அடம் பண்ணணும்? உன் காரியம் ஆகணும்கறதுக்காக
எங்க அப்பாவே என்னை கடத்த சொன்னதா சொல்லுவியா? இதை நான் நம்பணும்ன்னு வேறே எதிர்பார்க்கிறே. ச்சே..”
அத்தோடு விருட்டென்று அறைக்குள் சென்றுவிட்டாள். வாக்கியத்தை முடிக்காமல் கண்களாலேயே அவனை எரித்து விடுவது போல் பார்த்தாள். அவள் தூங்கத் தொடங்கிய போது மணி நள்ளிரவு இரண்டு மணி!
அதே இரவு இரண்டு மணிக்கு துபாயிலிருந்து ஆனந்தன் தன் மனைவி
சொர்ணாவை கூப்பிட்டார். அவள் படக்கென்று எடுத்தாள்.
“ஹலோங்க...”
“தூங்கிட்டியா?”
“எப்படி தூக்கம் வரும்? நேத்து காலையில் இன்டர்வியூவிற்கு கிளம்பிப் போன சங்கீதா இன்னும் வீடு வந்து சேரலை. போனை வேறு ஸ்விட்ச்
ஆப் பண்ணி வச்சிருக்கா. என்ன பண்றதுன்னே தெரியலைங்க.”
“சொர்ணா...நான் சொல்லப் போற செய்தி கேட்டு மிரண்டு விடாதே. நான் வேலை பார்க்கிற கம்பனியை மூடிட்டாங்க. எனக்கு வேலை போயிடுச்சு. பயப்படாதே....வேறே வேலைக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.”
“பட்ட காலிலேயே படும்ன்னு சொல்வாங்க....அது சரியாத்தான் இருக்கு. இங்கே மகளைக் காணும். வேலை கிடைச்சுதுன்னு போன் பண்ணினா. நீங்க வேலை போயிடுச்சுன்னு போன் பண்றீங்க. அவள் இன்னும் வரலை. பயமாயிருக்குங்க. போலீசுக்கு..”
“சொர்ணா..நம்ம பொண்ணு நம்மை ஏமாத்திட்டா. எனக்கு தகவல் கிடைச்சிருக்கு. அவ கிஷோர் என்கிற பையனோடு ஓடிட்டாளாம். எப்படியெல்லாம் பொத்தி பொத்தி வளர்த்தோம்! வேலை கிடச்ச திமிரிலே
காதலனோடு ஓடிட்டா. நமக்கு வந்த சோதனையை பார்த்தியா?”
“அடிப் பாவி...இவளெல்லாம் ஒரு மகளா? வெடித்துவிட்டாள் சொர்ணா.