கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அன்பென்னும் ஊஞ்சலாட்டம் - அத்தியாயம் 4

sankariappan

Moderator
Staff member
எல்லோருக்கும் வணக்கம்!
அத்தியாயம் 4 இன்று வெளியீடு! இதை படித்தபின் மறக்காமல் கீழே கமெண்ட் போடுங்கள்!

----

அத்தியாயம்—4





சொர்ணா முழுவதுமாக உடைந்து போனாள். என் துக்கிரி மனசு சந்தேகித்தது போல் நடந்துவிட்டதே! இருபத்திரெண்டு வயது வரை கண்ணிலும் நெஞ்சிலுமாக பொத்திப் பொத்தி வளர்த்த பெண், தூக்கி எறிந்துவிட்டு போய்விட்டாளே! சொர்ணாவால் தாங்க முடியவில்லை. வீரிட்டு அழ வேண்டும் போல் இருந்தது.


“என்னங்க நீங்க சொல்றது உண்மையா? உங்களுக்கு யார் தகவல் கொடுத்தா?


“என் கேரள நண்பன் கேசவன் சொன்னான். கிஷோர் அவனின் உறவாம். அவன் மெனக்கட்டு துபாயிலிருக்கும் எனக்கு போன் பண்ணிச் சொன்னான்.


உங்க பெண்ணை நான் பஸ் ஸ்டாண்டில் கிஷோரோடு பார்த்தேன் என்கிறான். எனக்கு வேலை கிடச்சிடுச்சுன்னு அவள் அந்த கிஷோரிடம் மகிழ்ச்சியோடு சொன்னாளாம். அதுக்கு அவன் அவளிடம்,


அப்ப..நம்ம பிளான்படி ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னானாம். ஒ..டபிள் ஒ.கே. நான் ரெடி என்றபடி எதிர்த்திசையில் உள்ள காரில் ஏறிப் போய்விட்டாளாம் சங்கீதா. கிஷோர் சட்டையை பிடிச்சு கேள்வி கேக்க நினைச்சேன், அதுக்குள்ளே வந்த பஸ்லே ஏறி போயிட்டான்....என்றான் கேசவன். என்னடா இதெல்லாம்? உன் பெண்ணை கண்டிச்சு வைன்னு


போனிலே சொல்றான். மானம் போகுது சொர்ணா. நாம் என்ன பாவம் செஞ்சோம்? இப்படியெல்லாம் நடக்குது. போலிசுக்குப் போனால்...பேப்பரிலே


எல்லாம் போட்டு நாறடிச்சிடுவாங்களே.”


“அக்கம் பக்கத்தை எப்படி சமாளிக்கறது?” என்றாள் சொர்ணா கவலையுடன்.


“அவங்க அப்பா துபாயிலே வேலைக்கு ஏற்பாடு பண்ணி இருக்கார். அதான் துபாய் போயிருக்கான்னு சொல்லி வை.”


“சரி...நெஞ்சு வெடிச்சிடும் போல இருக்கு...”


“மனசை திடப்படுத்திக்கோ. அவ ஏதாவது போன் பண்றாளா பாரு. நான் அங்கே என் ப்ரெண்ட்ஸ் மூலமா அவளை ட்ராக் பண்ணமுடியுமா பார்க்கிறேன்....கேசவன் மறுநாளே இங்கு வந்துவிட்டான். அதனாலே அவனால் கிஷோரை பார்க்க முடியலை..போன் பண்ணப்ப அவன் எடுக்கலையாம். சங்கீதா இப்படி பண்ணுவாள் என்று நான் கண்டேனா?”


பேசி முடித்ததும் பிரமை பிடித்தவள் போல் உட்கார்ந்துவிட்டாள் சொர்ணா.





மறுநாள் சித்தார்த்திடம் அவள் சொன்ன போது அவன் நம்பவில்லை.


“யாரோ ஒரு கேசவன் சொன்னதை வைத்து எதையும் தீர்மானிக்க முடியாதம்மா. அக்கா அப்படியெல்லாம் செய்யக் கூடியவள் இல்லை..”


“அப்படியா சொல்றே? அப்ப நீ தேடிப் பாரேண்டா.”


“தேடத்தான் போறேன்மா. அக்காவுக்கு என்னாச்சோ? கண்டுபிடிக்காம விடமாட்டேன்.” என்றான். அவன் முகத்தில் தீவிரம் தெரிந்தது.





சங்கீதா மறுநாள் சுறுசுறுப்பாக எழுந்து பெரியவருக்கு காபி கலந்து எடுத்துக் கொண்டு போனாள். அவர் முகம் மலர்ந்தது. சந்திரன் அங்கு வந்தான்.


“ஒரு வழியா உங்க மகள் இருக்க சம்மதிச்சிட்டா மாமா. மெல்ல எழுந்துக்கோங்கோ, உங்களுக்கு ஸ்பாஞ் பாத் கொடுக்கிறேன்.”


சங்கீதா காலி டம்பளரை எடுத்துக் கொண்டு போக...வெந்நீரில் டர்க்கி டவலை நனைத்து உடம்பு முழுக்க துடைத்துவிட்டு வேறு ஷர்ட் வேட்டி அணிவித்தான். சங்கீதா மீண்டும் வந்து படுக்கை விருப்புகளை மாற்றினாள்.


அதுவரை வீல் சேரில் உட்கார்த்தி வைத்திருந்தான். புது விரிப்பில் படுக்க வைத்து அவரிடம் “ரைட் மாமா...படுத்துக்கோங்கோ. முதுகு புண்ணுக்கு பௌடர் பூசியிருக்கேன். சங்கீதா...காலை டிபன் கொண்டு வா. நான் வேலைக்கு போறேன். ரெஸ்ட் எடுங்க சரியா?” அவன் இதமாக பேசினான். அவர் உற்சாகத்துடன் தலை ஆட்டினார். சங்கீதா கையை பிடித்து வருடியபடியே “ரொம்ப ஹாப்பி..” என்றார். சங்கீதா நெகிழ்ந்து போனாள். படுகிற துன்பம் இந்த மலர் சிரிப்பால் மாறிவிட்டது.





சமலறையில் சுந்தரம் அய்யர் சூடான இட்டிலிகளை எடுத்து வைக்க சங்கீதா கொத்தமல்லி சட்னியுடன் இட்டிலிகளை தட்டில் வைத்து பெரியவருக்கு எடுத்துப் போனாள். மாடிப்படிகளில் சந்திரனை சந்தித்தாள். ஒதுங்கி நின்றாள்.


“பயப்படாதே...தள்ளி விட மாட்டேன்.”


“ஒரு மாசம் வரை தள்ளி விட மாட்டீங்கன்னு தெரியும்.”


“நீ அவசியம் ஒரு மாசம் கழித்து போகத்தான் வேண்டுமா?”


“நான் என்ன புக்ககம்மா வந்திருக்கேன்?...இங்கேயே குடித்தனம் இருக்க?


இடத்தைக் கொடுத்தால் மடத்தை பிடுங்காதே...”


“இல்லில்லே...ஒரு மாசமாவது இருப்பது நிச்சயம் தானே? எதுக்கு சொல்றேன்னா...நான் வேலைக்கு கிளம்பி அந்தண்டை போனதும்..நீ


இந்தண்டை ஓடிப் போயிட மாட்டியே? கால் சரியாயிடுச்சில்லே அதான்.”


“வாக்கு கொடுத்தா தலை போனாலும் அதை காப்பாத்தற டைப் நான். உன்னை மாதிரி ப்ராட் இல்லை. இன்டர்வியூவில் வேலை கொடுப்பதா சொல்லி இந்த மத்திய சிறையில் கொண்டு வந்துவிட்ட பொறுக்கி பார்டி தானே நீ.” என்ற அவள் கூர்மையான தாக்குதலை அவன் ஏதோ புகழ் மாலை போல் எடுத்துக் கொண்டது அவளுக்கு வியப்பாக இருந்தது.


“நான் ரௌடி தான்...ஆனால் நல்ல ரௌடி. போகப் போக தெரியும்...இந்த ரௌடியின் வாசம் புரியும்...’


“சகிக்கலை...நிப்பாட்டு உன் பாட்டை. வழியை விடு. படியில் நின்று வம்பு...”


“வம்பு இல்லை அன்பு. ஒ.கே பாட்டை நிப்பாட்டிட்டேன். இன்று உனக்கு உடைகள் வாங்கப் போறேன். உனக்கு என்ன கலர் பிடிக்கும்?”


“எனக்கா? கருப்பு கலர் தான் பிடிக்கும். துக்கம் கொண்டாட அது தான் சரியான நிறம். போதுமா? எதையாவது வாங்கித் தொலை. ஒரு மாசக் கூத்துக்கு எந்தக் கலர் இருந்தா என்ன?”


“உண்மைதான். உனக்கு எந்தக் கலரும் பொருத்தமா இருக்கும். நீ எப்படி இவ்வளவு அழகா பொறந்தே?”


“ஏன்னா நான் அம்மா மாதிரி...”


“யாரு? சொர்ணத்தம்மாவா? அது உன் அம்மாவே இல்லை...”


வலது கையில் இருந்த நீர் நிறைந்த டம்ளரை அவன் மேல் வீசினாள். நீர்


முகமெல்லாம் வழிந்து உடை ஈரமாயிற்று. “இன்னொரு தரம் சொன்னே....


அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்.”


“குற்றால அருவியிலே குளித்தது போல் இருக்குடி.”


“இருக்கும் இருக்கும். உன் திமிருக்கு அனுபவி ராஜா அனுபவி...இன்னும் ஸ்டாக் இருக்குடா...” அவள் மேலே போய்விட்டாள். அவனுக்கு கோபம்.


அழகான ராட்சசியா இருக்காளே! இருடி உன் கொட்டத்தை அடக்கறேன்.


“பூவா தலையா போட்டாத் தெரியும் நீயா நானா பார்த்துவிடு..”என்ற பாட்டு வரியை அவளுக்கு கேட்கவேண்டும் என்பதற்காகவே உரக்கப் பாடினான்.


உடை மாற்றிக் கொண்டு அலுவலகம் சென்றான்.





பெரியவர் சற்று கண் அயர்ந்ததும் சங்கீதா மெல்ல நழுவி...பூப் போல் கேட்டைத் திறந்து கொண்டு தெருவிற்கு வந்தாள். வாட்ச்மேன் ஆறுமுகம்


“அம்மா...ஏதாவது வேணுமா?” என்றான் பவ்வியமாக.


“துப்பாக்கி வேணும் முதல்லே உன் முதலாளியை ஷூட் பண்ண..” என்று மனதிற்குள் திட்டிக் கொண்டாள்.


“தெரு திரும்பினதும் ஒரு சின்ன பிள்ளையார் கோவில் இருக்கே...அங்கே போறீங்களாம்மா?” நல்ல ஆழம் பார்க்கிறானே..ப்ராடுக்கு ஏத்த காவல்காரன்.


“ஆமாப்பா...பெரியவருக்கு குணமாகனும்னு வேண்டிட்டு வரேன்.” என்றாள் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு.


“சரீங்கம்மா..போயிட்டு சுருக்கா வாங்கம்மா.”


சரிடா...சொட்டைத் தலையா என்று கவுண்டமணி ஸ்டைலில் மனதில் சொல்லிக் கொண்டு தெரு திரும்பினாள். பிள்ளையாரை வணங்கிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒரு டீனேஜ் போய்க் கொண்டிருந்தாள்.


“எக்ஸ்கியூஸ் மீ...ப்ளீஸ் ஒரு நிமிஷம் உங்க செல்போனை தரமுடியுமா?”


“ஸாரிக்கா..சார்ஜ் இல்லை..” என்றபடி போய்விட்டாள். இரண்டு மூன்று பேரிடம் கேட்டு ஏமாந்த பின் ஒரு இளைஞனிடம் கேட்டாள்.


“தாராளமாங்க...”; என்று தந்தான் இளித்தபடி. அப்பாடா வாழ்க.


“தேங்க்ஸ்..” என்று மொழிந்துவிட்டு அம்மாவுக்கு அவசரமாக போன் போட்டாள். அம்மா சீக்கிரம் எடு..சீக்கிரம் எடு..என்று பிரார்த்தித்தாள்.


ரிங் போயிற்று. யாரும் எடுக்கவில்லை. இன்னொரு முறை முயன்றாள்.


“ஐயோ...பஸ் வருது..” செல்போனை பிடுங்கிக்கொண்டு பஸ் நோக்கி ஓடினான். பஸ் நம்பரையும் வாசகங்களையும் பார்த்து அது வேளச்சேரி என்று புரிந்து கொண்டாள். ஒரு அம்மா காய் வாங்கிக் கொண்டு போக


“அம்மா ப்ளீஸ்...ப்ளீஸ்..” என்று கெஞ்ச, அந்தம்மாள் ஒரு நிமிஷம் தான் என்று கெடு வைத்து, சொத்தையே எழுதிக் கொடுப்பது போல் செல்போனைக் கொடுத்தாள். இம்முறை “ஹலோ..” என்று அம்மாவின் குரல் கேட்டது. துள்ளி குதித்துவிட்டாள் சங்கீதா. அப்பாடா...படபடவென்று பேசினாள்.


“அம்மா...நாந்தானம்மா சங்கீதா பேசறேன். பத்திரமா இருக்கேன்மா. ஒரு மாதத்தில் வந்திடறேன்மா. அந்த இன்டர்வியூ பண்ண ஆள் என்னை கடத்திட்டு வந்து வச்சிருக்கான்மா....நான் அவன் கண்ணில் மண்ணைத் தூவிட்டு உனக்கு போன் பண்றேன்மா..வந்து ஒரு சிக்கல்மா..”


“என்னடி கதை விடறே? அந்த கிஷோரோடு ஒரு மாசம் குடித்தனம் பண்ணிட்டு...நாங்க வேறு வழி இல்லாம உன்னை ஏதுக்குவோம்னு கனவு


கான்றயா? பத்திக்கிட்டு வருது.”


“அய்யோ அம்மா என்னை நம்பு. கிஷோர் என் நல்ல பிரண்டு மட்டும் தான்மா. இங்கே சந்திரன்னு ஒரு ரௌடி என்னை கடத்தி வச்சிருக்கான்மா.”


“அடி பாவி...அம்மாக்கிட்டியே பொய் சொல்றியா? உங்க அப்பா ப்ரெண்டு கேசவன், நீங்க ரெண்டு பேரும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்க ப்ளான் போட்டதை கேட்டாராமே. பாவி…..ஓடுகாலி...இப்படி பண்ணிட்டியேடி.. அம்மா


வயிறு கலங்குதடி.. எவ்வளவு பெரிய அவமானம்? “


அவள் பதிலளிக்கும் முன் “ஒரு நிமிஷம் முடுஞ்சிடுச்சு.” என்ற எச்சரிக்கை வந்தது. “சொல்றதை கேளுமா...அப்படியெல்லாம் இல்லை. தப்பானா தகவல்.


நான் போய் அப்படி செய்வேனா? யாரோ சொன்னதை நம்புவியா?”


“மார்பிலும் தோளிலும் போட்டு வளர்த்தேனேடி. இப்படி பண்ணிட்டியே. நான் என்ன செய்வேன்? அவமானம் தாங்காமல் தூக்கிலே தான் தொங்கணும்.” அழுது கொண்டே சொன்னாள் சொர்ணா.


“நேரமாச்சு...செல்போனைக் கொடுங்க..” உரியவள் கேட்டாள்.


அம்மாவின் கதறலான புலம்பலோடு செல்போன் அந்தம்மாள் கையில் போய்


உயிரற்று போனது. பொங்கிய துக்கத்தை அடக்க முடியாமல் ஒரு மரநிழல்


தேடிச் சென்று வாய்விட்டு அழுதாள். நடுத் தெரு...ஜனங்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் என்று மறந்து...அம்மா அம்மா என்று துடித்து அழுதாள்.


ஒரு ஆதரவு கரம் அவள் தோளைத் தொட்டது. “என்னாச்சு சங்கீதா? ஏன்


இப்படி நடுரோட்டில் அழுதிட்டு நிக்றே?” கிஷோர் நின்றிருந்தான்.


“கிஷோர்...செத்திடலாம்னு தோனுதடா..” அவன் அவள் முகம் நிமிர்த்தி ஆறுதல் சொல்லி கண் துடைத்தான். எதிர் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த சித்தார்த் இந்தக் காட்சியை பார்த்துக் குமறினான்.


“ச்சே..இந்த அக்காவைத் தேடி நான் தெரு தெருவா சுத்திட்டு இருக்கேன்.


இவளானா அப்பா சொன்னது போல் அந்த கிஷோரோடு வெட்கமில்லாமல் நடுத் தெருவில் நின்று கொஞ்சிட்டிருக்கா...அப்பா சொன்னதெல்லாம் நிஜம்”


டீன் ஏஜுக்கே உரிய அவசர புத்தியுடன் கோபமாக பைக்கை கிளப்பிக் கொண்டு சுனாமி போல் சீறிக் கொண்டு போய்விட்டான். இங்கே கிஷோர் சங்கீதாவிடம் சொன்னான்.


“சங்கீதா...இது நாலு பேர் கூடி நிக்றே இடம்...வா ஹோடேலில் காபி


சாப்டிட்டே பேசலாம்.” அவள் மனமே வெறுமையாய் இருந்தது.


அவன் பின் ஆட்டுக்குட்டி போல் போனாள். இவனாவது அவள் சொல்வதை நம்புவானா? காபி வந்தது. எதிர் எதிரே உட்கார்ந்து கொண்டனர்.


அவள் வாய் திறக்கும் முன் காவல்காரன் ஆறுமுகம் அங்கே ஆஜாரானார்.


“அம்மா...போனிலே அய்யா..” நீட்டினான். வாங்கி காதருகே வைத்தாள்.


“சங்கீதா...உன் தம்பி உன்னை கிஷோரோடு பார்த்துவிட்டு கோபமாக போய்விட்டானாம். இனி ஒரு நிமிஷம் கூட அங்கே கிஷோரோடு இருந்தே,


உன்னை ஓடுகாலின்னு பட்டமே கட்டிடுவாங்க. உடனே எழுந்து ஆறுமுகத்தோட வீட்டுக்குப் போ. புரிகிறதா?” லைன் கட்டாயிற்று. அவள் பதில் பேசும் நிலையிலும் இல்லை அவன் அதற்கு அவகாசமும் கொடுக்கவில்லை. மனம் நிறைய அதே துக்கத்துடனும் குழப்பத்துடனும் ஆட்டுக்குட்டி போல் ஆறுமுகத்துடன் சென்றாள். அம்மாவே அவளை ஓடுகாலி என்று சொல்லிவிட்ட பின், அந்த அதிர்ச்சி அவளை யோசிக்கவிடாமல் செய்துவிட்டது. கிஷோரிடமிருந்து விலகுவது தான் ஒரே வழியாகத் தோன்றியது. இந்த அபாண்டத்தை அவள் எப்படி சரி செய்யப் போகிறாள்? கால்கள் நடந்தன, ஆனால் புத்தி நின்று விட்டது.


“சங்கீதா...சங்கீதா சொல்லிவிட்டுப் போ. என்னாச்சு? எதுக்கு அழறே?”


“கவலைப் படாதே...வீட்டுக்குப் போறேன் கிஷோர். என் பின்னால் வராதே


ப்ளீஸ்.” என்றுவிட்டு ஓட்டமும் நடையுமாகப் போகும் சங்கீதாவை அவன்


அதிர்ச்சியுடன் பார்த்தான். என்னாச்சு அவளுக்கு?





மாலை சந்திரன் விசலடித்தபடி வந்தான். முகரையைப் பார் என்று எண்ணிக் கொண்டாள் சங்கீதா. பிராடுக்கு விசில் அடிக்கும் துணிவு எப்படி வந்தது?


“சங்கீதா பார்...உனக்கு நான் வாங்கியிருக்கிற உடைகளை.”


அட்டைப் பெட்டிகளை மேஜையில் வைத்தான். அவற்றை எட்டி உதைத்தாள்.


“வேவு பார்க்றே...என்னை தனிமை படுத்தறே. நீ ஒரு கிரிமினல். உனக்கு என்னடா வேணும்?”


“உன் சந்தோசம் வேணும். உன் மன நிம்மதி வேணும்.”


“என் அம்மா என்னை நம்பலை தெரியுமா? நான் எப்படி சந்தோஷமா இருப்பேன்? என் நிம்மதியை குலைக்கறதே நீ தானே.”


“அழாதே சங்கீதா...நீ அழுதா என் நெஞ்சிலே உதிரம் கொட்டுது. உன் அம்மா உன் அப்பா சொல்ற பொய்யைத் தான் நம்புவாங்க. அவர் தான் கிரிமினல்.


புரிஞ்சுக்கோ. நான் தான் ரட்சகன். தெரியுமா?”


“ரட்சகன் இல்லை ராட்சசன். அப்பா மேலே வீண் பழி போடாதே. உனக்கென்ன தெரியும்? என் அம்மா அப்பா இப்படியெல்லாம் நடந்துக்குவாங்களா? அவங்களை நீ ஏதோ பிளாக் மெயில் பண்ற.


அவங்க ஏன் பெத்த பொண்ணை சந்தேகிக்கணும்?”


“ஏன்னா...அவங்க உன் அப்பா அம்மா இல்லை. உன்னை இண்டர்வியூ


பண்ணச் சொல்லி அப்படியே கடத்திட்டு போய் வச்சுக்கச் சொன்னது..உன் ஸோ கால்ட் அப்பா தான். ‘ஐ வான்ட் டு கெட் ரிட் ஆப் ஹர்’...என்றார்.


நம்பறதும் நம்பாததும் உன் இஷ்டம். நல்லதுக்கு காலமில்லை.”


சங்கீதா அவனை வெறித்துப் பார்த்தாள். அவள் முகத்தில் சோகம் அப்பியிருந்தது. திரும்பத் திரும்ப பொய் சொல்லி அதை நிஜமாக்கப் பார்க்கிறான். இவன் லேசுபட்டவன் இல்லை...
 
Top