அத்தியாயம் – 7
வெங்கடேசன் நினைத்தது போல் விபரீதம் நிகழ்ந்துவிட்டது. வீட்டிற்கு வந்து இரெண்டு நாள் கழித்து பேப்பரில் வந்த செய்தி அவரை நிலைகுலைய வைத்துவிட்டது. சொர்ணாவிற்கு குழந்தை இறந்தே போய்விட்டது. இன்று தகனம் என்று அந்தச் செய்தி அறிவித்தது. ஆடிப்போய்விட்டார்.
வெங்கடேசனுக்கு பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் வீட்டின் பின் மிகப் பெரிய தோட்டத்தை உருவாக்கியிருந்தார். ஒரு நாள் மட்டுமே வாழ்கிற
பூக்கள் மனிதர்களுக்கு எவ்வளவு அற்புதமாக பயன்படுகிறது! பூக்கள் கற்றுக் கொடுக்கும் வாழ்க்கை பாடம் எவ்வளவு அழகானது.!
“பல வருடங்கள் வாழ்கிற மனிதர்களில் சிலர் பிளாஸ்டிக் பொருள்கள் போல் மண்ணிலும் மக்காமல், மண் மேல் வாழவும் தகுதி இல்லாமல் சமுதாயத்திற்கே ஆபத்தாக இருக்கிறார்கள். ஆனால் இந்த பூக்களின் ஆயுளைப் பார்...ஒரே நாள்! குறுகிய ஆயுள். ஆனால் அதற்குள் என்னவெல்லாம் ஜாலம் செய்துவிட்டுப் போகிறது.” என்று மங்களத்திடம் வியப்பார். பரவசத்தோடு அவர் சொல்வதைப் பார்க்க வியப்பாக இருக்கும்.
“அப்படி என்ன ஜாலம் செய்கிறது?” அவளுக்குப் புரியவில்லை.
“மலர்ந்தவுடன் தேன் அள்ளித் தருகிறது தேனிக்களுக்கு. தென்றல் சுவாரஸ்யமில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் பொழுது....இதோ என் வாசத்தை சுமந்து வீசு, உன்னை அலங்கரித்துக் கொள் என்கிறது. உயிர் கொடுத்த செடிக்கும் வேரிற்கும் மலர்ந்து தேங்க்ஸ் சொல்கிறது. இந்தனை அழகாக மணமாக என்னை படைத்தாயே என்று நன்றி கலந்த பணிவுடன் மாலையாகி இறைவனையே அலங்கரிக்கிறது! தன்னையே சமர்பிக்கிறது. நீயும் என் ஜாதி என்று வாஞ்சையுடன் பெண்களின் கூந்தலில் ஏறிக் கொண்டு கௌரவம் தேடிக் கொள்கிறது. மனிதனின் இறுதி ஊர்வலத்தில் பெரிதும் சிறிதுமாக மாலையாகி அவனை நல்லவிதமாக வழியனுப்பி வைக்கிறது .நம்மை விட பூக்கள் சிறப்பான வாழ்க்கை வாழ்கிறது....ஒரே நாளில் அது பல நன்மைகள் செய்துவிட்டுப் போகிறது. எவ்வளவு கிரேட் இல்லே மங்களம்? நம்மால் அப்படி முடிகிறதா? பாதி பேர் வாழ்க்கை என்பது என்னவென்றே தெரியாமல் தூங்கிக் கழிக்கிறார்கள். இதில் பூக்கள் போன்ற பெண்களை நசுக்கும் வேலையைத் தான் செய்கிறார்கள். நினைச்சா அவமானமா இருக்கு. மனிதப் பிறவி என்ற வரப் பிரசாதத்தை சாபமாக மாற்றுகிறார்கள். பூக்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கு. என்று நாம் மாறப்போகிறோம்? உபயோகமா இருக்கப் போறோம்?
“அடேயப்பா...பூக்களே உங்களை ஆராதிக்கிறேன்னு கவிதைகள் எழுதிடுவீங்க போலிருக்கே...” என்று வியந்தாள் மங்களம்.
“கவிதை எழுத தெரிந்திருந்தால் ஒரு புத்தகமே வெளியிட்டிருப்பேன். என்னால் முடிந்தது முகநூலில் பூக்களின் புகைப்படங்களைப் போடுவது, பூக்களைப் பற்றிய கவிதைகளை அப்லோட் பண்ணுவது போன்றவை தான்.
பூக்கள் என்னும் சாமிக்கு என் சிறிய காணிக்கை.”
“நீங்களே ஒரு மென்மையான மனசுடைய பூ தான். பெரிய பூ...” என்று பெருமை பொங்க சொல்வாள் மங்களம். கணவனின் அடிப்படை குணங்களை
அவள் தெரிந்து வைத்திருந்தாள். அதை பாராட்டவும் செய்தாள். அது பெரிய
விஷயம்! உனக்கு வேறே வேலை இல்ல ஏதாவது பினாத்திக்கிட்டு என்று சொல்லியிருந்தால் அவர் பூ மனம் ஒடுங்கிப் போயிருக்கும். மங்களம் கணவன் அருமை தெரிந்தவள். ஆனால் அதுவே ஒரு விபரீதத்துக்கு
அஸ்திவாரமிடும் என்று அவள் நினைக்கவே இல்லை...
வெங்கடேசன் இயற்கையை ரசிப்பவர். மனித மனங்களின் உணர்வுகளை மதிப்பவர். ஒரு பூ கசங்கினாலும் வருந்துவார். ஒரு மனம் வாடினாலும் வாடிவிடுவார். அழகான மனமுடைய வெங்கடேசன் இதனால் அழகற்ற
முடிவினை எடுக்க வேன்டியதாகி விட்டது.
இந்த மென்மையான உணர்வு போராட்டம் தான் அவர் வாழ்கையின் அஸ்திவாரத்தையே பலகீனமாக்கியது. அஸ்வின் பேப்பரில் கொடுத்திருந்த விளம்பரச் செய்தி பார்த்து திடுக்கிட்டார். அந்தக் குழந்தை இறந்ததற்காக கண்ணீர் மல்க துடித்தார். அந்தப் பெண் எவ்வளவு ஆசை ஆசையாக பிறக்கப் போகும் குழந்தையைப் பற்றி கனவு கண்டிருப்பாள்! எல்லாம் சுக்கு நூறாக
நொறுங்கிவிட்டதே! அதற்கு அவர் ஒரு காரணமா? அல்லது அவர் மட்டும் தான் காரணமா? புரியாமல் திகைத்தார். யாரை சொல்லி என்ன பயன்! அவர்
மனம் சோகத்தில் மூழ்கியது. மற்றவர்கள் போல் கண்ணீர் விட்டு விட்டு எல்லாம் மறந்துவிடுகிற சுபாவம் அவருக்கு இல்லை. நெஞ்சில் ஆழப் பதிந்த வலி. அவர் வாழ்வில் பாலைவனம் வர அவரே காரணம். அவர் தான் வித்தியாசமானவராயிற்றே! விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்த போன் நம்பருக்கு போன் பண்ணினார். அஸ்வின் தான் போனை எடுத்தான். பேசுவது அவர் என்று தெரிந்ததும் எரிமலை ஆனான்.
“ஆக்சிடென்ட் ஆன அதிர்ச்சியில் குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டது என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். அதுக்கு நீங்க தான் காரணம். இப்ப திருப்திதானே? சைடு கொடுத்து நீங்க விட்டுக் கொடுக்காததால் நாங்க யமனுக்கு குழந்தையை விட்டுக் கொடுக்க வேண்டியதாப் போச்சு. நீங்க ஒரு கொலை செஞ்சிட்டீங்க....என்ன விசாரிப்பு வேண்டி இருக்கு? வைங்க போனை.” அவன் கத்தியது அந்த யமனுக்கே கேட்டிருக்கும். கோபமும் சோகமும் அவன் குரலில் தெரிந்தது. வெங்கடேசன் பிரமை பிடித்து நின்றார்.
“மங்களம்...ஒரு பெண்ணின் இனிய கனவுகளுக்கு மங்களம் பாடிட்டேன்டீ.”
மங்களத்திடம் விஷயத்தை சொன்னார். அவள் வருத்தப்பட்டாலும் யதார்த்தமாகப் பேசினாள். “இது தான் விதி. அதுக்கு நீங்க என்ன செய்வீங்க?
தப்பான முறையில் காரை ஓவர்டேக் பண்ணினான். அதற்குரிய பலனை அவன் தானே சந்திக்கணும்? குழந்தை இறந்தது வருத்தம் தான்...விடுங்க.”
“இல்லே மங்களம்...அவன் மேல் எந்த தப்பும் இல்லை. அக்கா பிரசவ
வலியில் துடிக்கும் போது வேகமாக போகத்தானே முயற்சிப்பாங்க? நான்தான் அந்த அவசரமும் அவசியமும் புரியாமல் சைடு கொடுக்காம வீம்பாக இருந்தேன். அய்யோ..ஒரு குழந்தையை கொன்னுட்டேன்.” மடேர் மடேர் என்று தலையை கதவில் மொத்திக் கொண்டார். மங்களம் பதறிவிட்டாள்.
“என்ன இது உணர்ச்சி வசப்படாதீங்க. அறிஞ்சா செய்தீங்க. விடுங்க..’
மங்களம் சொன்ன சமாதானங்கள் எடுபடவே இல்லை.
“வா மங்களம். இறந்தே பிறந்த அந்தக் குழந்தைக்கு அஞ்சலி செலுத்திட்டு வருவோம். இறுதி மரியாதை செலுத்துவது நம் கடமை. அப்ப தான் என் பாரம் குறையும். கிளம்பு....”
“நான் எதுக்குங்க ? நீங்க மட்டும் போயிட்டு வாங்களேன்.”
“சொன்னாக் கேளு.....காரில் நீயும் தானே இருந்தே?” பிடிவாதம் பிடித்தார்.
ஒரு ரோஜா மாலையை வாங்கிக் கொண்டு போனார்கள். அவர் மட்டும் அந்தப் பூமாலையை வாங்கி கொண்டு போகாமல் இருந்திருந்தால்...
அது சாவு வீடு என்பதற்கு அடையாளமாக முகப்பில் பந்தல். நாற்காலிகளில் சோக முகங்களுடன் மனிதர்கள். செருப்புகளின் குவியல்கள். சங்கின் ஒலி.
பிஞ்சுக் குழந்தையின் ரோஜா முகம் தூங்குவது போலவே இருந்தது. தன் உயிர் துடிப்பை குழந்தைக்கு கொடுக்க துடியாக துடித்தார் வெங்கடேசன்.
கதறி அழும் சொர்ணாவை யாராலும் சமாதனப்படுத்த முடியவில்லை.
மாலையை குழந்தை உடல் மேல் போடப் போன போது தான் அஸ்வின் ஓடி வந்தான். தடுத்தான். அவரை பிடித்து தள்ளினான்.
“உங்க பாபக் கரங்களால் நீங்க மாலை போட்டு அஞ்சலி செலுத்த வேண்டாம். கெட் அவுட். யார் உங்களை வரச் சொன்னது? இத பாருங்க எங்க அக்கா மனசு சுக்கு நூறா உடைஞ்சுப் போச்சு. உங்களுக்கு தெரியுமா இரண்டு முறை அதுக்குள்ளே அவள் தற்கொலைக்கு முயற்சி செஞ்சிட்டா. போயிடுங்க. எல்லாம் உங்களாலே. எந்த தைரியத்திலே வந்தீங்க?”
“ஆமாங்க...அஸ்வின் சொல்றது நிஜம். எங்க பொண்ணு ஏற்கனவே புருஷனை இழந்த சோகத்திலே இருக்கா. அவர் சாகும் போது இவள் நாலு மாசம் கர்ப்பம். இந்தக் குழந்தை தான் அவளுக்கு துணையாக இருக்கப் போறதுன்னு ஆறுதல் அடைஞ்சா. இப்ப...கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாம போச்சே..”
என்று சொர்ணாவின் தாய் காவேரி கண்ணீர் சிந்தினாள். வெங்கடேசன் மனதில் அது நெருப்பாக விழுந்தது. அஸ்வின் கோபமாக கத்தினான்.
“கெட் அவுட்ன்னு சொல்லியும் மானமில்லாம நிக்றீங்களே. உங்க மேலே கேஸ் கூட பைல் பண்ண முடியாது. ஏன்னா வயிற்றில் குழந்தை இறந்ததுக்கு அதிர்ச்சி தான் காரணம் என்று சொல்லலாமே ஒழிய அது
விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி என்று அறுதியிட்டு சொல்லமுடியாதுன்னு வக்கீல்கள் சொல்றாங்க. ஒரு கொலையை பண்ணிட்டு தப்பிச்சிட்டீங்க. போயிடுங்க. எங்க கண்முன்னால நிக்காதேங்க...புரியலை? எந்த பாஷையில் சொன்னா புரியும்?” அஸ்வினின் கத்தலை கேட்டு பேசாமல் திரும்பி இருக்கலாம். ஆனால் வெங்கடேசன் மனசு கேக்காமல் மன்னிப்பு கோரி நின்றார். துடித்து அழுதார். தலையில் அடித்துக் கொண்டார்.
“மன்னிச்சிடுங்க...அறியாமல் நடந்த தப்பு.”
“ஓகோ...அப்படி சொல்லி தப்பிச்சுக்கலாம்னு பார்கறீங்க இல்லே. இந்தப் பாவம் உங்களை சும்மா விடாது. உங்களுடைய குழந்தையை நீங்க பறிகொடுக்கணும். அப்பதான் உங்களுக்கு எங்க வலி தெரியும்.”
“தம்பி...அப்படியெல்லாம் சபிக்காதேப்பா. நாங்க வேணும்னு செய்யலை.”
என்று மங்களம் கெஞ்சுவது போல் சொன்னாள். நீரில் மிதந்தன கண்கள்.
“பலிக்கும்...பலிக்கும். நான் சொன்னது பலிக்கும். மனசு குமறி சொல்றேன்.”
மங்களம் குலுங்கி அழுதாள். அவள் கண்ணீர் அவள் ஏந்தியிருந்த குழந்தையின் முகத்தில் வழிந்தது. குழந்தை அழ ஆரம்பித்தது. சொர்ணத்தின் தாய் காவேரிக்கு இளகிய மனசு. இது கண்டு அவள் மனம் இளகியது.
“அழாதம்மா...நடந்தது நடந்து போச்சு. எதையும் மனசிலே வச்சுக்காதீங்க.
நீங்க கிளம்புங்க. இருக்க இருக்க சண்டை தான் வளரும்.”
“ஏங்க...வாங்க போலாம். நாம இங்கு வந்ததே தவறு. வீண் பழி போடறாங்க
சாபம் இடறாங்க. குழந்தை எதனால் இருந்துச்சோ? காக்கை உக்கார பனம்
பழம் விழுந்த கதையாப் போச்சு. இதெல்லாம் நமக்கு தேவையா?”
அஸ்வின் சாபம் இட்டது தாங்க முடியாமல் மங்களம் சொன்னதே பிரச்சனை
ஆகிவிட்டது. எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியது போலாயிற்று.
அழுது கொண்டிருந்த சொர்ணா தலைவிரி கோலமாக ஓடி வந்தாள். வெங்கடேசன் கையில் இருந்த பூமாலையைப் பிடுங்கி மங்களத்தின் குழந்தை மேல் சாத்தினாள். நொடியில் நடந்துவிட்டது. அவள் சொன்ன வார்த்தைகள் அதை விட அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
“உங்க குழந்தை இப்ப செத்துப் போச்சு...போய் எரிச்சிடுங்க....ஹா ஹா ஹா..”
என்று சிரித்தாள். “பாவம் குழந்தை இறந்த துக்கம் தாங்காமல் பயித்தியம் பிடிசிட்டது...” என்று கூட்டம் உச்சுக் கொட்டியது.
“என்னை மன்னிச்சிடு தாயி...மன்னிச்சிடு.” தலைக்கு மேல் கைகூப்பி கும்பிட்டார் வெங்கடேசன். அஸ்வின் குதித்து மீண்டும் சண்டைக்கு வர,
கூட்டம் அவரை இழுத்துக் கொண்டு போனது.
“எதையும் மனசிலே வச்சுக்காதீங்க சார். துக்கத்திலே பேசறதை பெருசா எடுத்துக்காதேங்க. நீங்க வந்திருக்கவே வேண்டாம். இப்ப அமைதியா போங்க.”
சொர்ணாவின் உறவு முறை ஒருவர் வெங்கடேசனை மெதுவாக சமாதானம் சொல்லியவாறே அழைத்துக் கொண்டு போய் வாசல் வரை விட்டார்.
காரில் ஏறிய வெங்கடேசன் மீண்டும் தன் தவறு தான், என்று புலம்பினார்.
“போதும் நீங்க அடிக்கிற கூத்து. தாங்கலை. நான் தான் வரவேண்டாம்னு சொன்னேனே கேடீங்களா? நம்ம குழந்தைக்கு சாபம் இடறாங்க..”
அவள் கொதித்துப் போய் சொன்னாள். பூமாலையை கார் ஜன்னல் வழியே தெருவில் வீசினாள். “சாபகேடுக்கு இது ஒரு சாட்சி...”
பூமாலை கலையிழந்து தெருவோர சாக்கடையில் விழுந்தது.
“பூமாலையே நீ என்னால் அவமானப்பட்டுட்டே. ஸாரி...ஸாரி...”
என்று அரற்றினார். வெங்கடேசனின் பூ மனம் அந்த மாலையைப் போல் வாடிவிட்டது. அவர் நினைத்தது என்ன? நடந்தது என்ன!
“ச்சீ...நல்லா வருது வாயிலே. புத்தி கெட்டுப் போய் உங்க கூட வந்தேன் பாருங்க. அதுவும் குழந்தையோட....என்னை சொல்லணும். போதும் உங்க இரக்க குணம். அந்த பிள்ளையோட ஆயுசு அவ்வளவு தான். பட்டுன்னு போயிடுச்சு. அதுக்கு நாம என்ன பண்ணமுடியும்? மரியாதை தெரியாத பிசாசு. மாலையை என் குழந்தை மேலே போட்டு உங்க குழந்தை செத்துப்
போச்சு போ எரிச்சிடுங்கன்னு சொன்னாளே....பாதகத்தி. நல்லா இருப்பாளா?
பொம்பளையா அவ...துக்கம்னா என்ன வேணா பேசிடறதா?” மங்களம்
பொரிந்துவிட்டாள். வெங்கடேசன், மனைவி சொல்வதிலும் ஒரு நியாயம்
இருக்கிறது என்று புரிந்து மௌனமானார். எப்படி விபத்து ஏற்படுத்தாமல் வீடு வந்து சேர்ந்தார் என்று அவருக்கே ஆச்சர்யமாக இருந்தது.
மங்களம் வீடு வந்ததும் குழந்தைக்கு திருஷ்டி சுற்றிப் போட்டாள். சாமி படத்தின் முன் அமர்ந்து மனம் உருக வேண்டினாள்.
“கடவுளே நடந்த சம்பவத்துக்கு இந்த பச்சிளம் குழந்தை என்ன செய்யும்? நாங்க தப்பு செஞ்சிருந்தா எங்களை தண்டித்து விடு. குழந்தையை ஒன்றும் செய்துவிடாதே. உன் சன்னதிக்கு நடந்தே வரேன்.” பழனி முருகனிடம் வேண்டினால் வேண்டியபடி நடக்கும் என்பது அவள் அசைக்க முடியாத நம்பிக்கை. மாலை மாலையாக கண்ணீர் வழிந்து ஓடியது. எந்த துக்கமும் கை மீறி போய்விட்டால் நாம் அடைக்கலம் தேடுவது பரம்பொருளிடம்
தானே! ஆண்டவன் நீதிபதி. என்ன தீர்ப்பு வைத்திருக்கிறார் இந்த வழக்கிற்கு?
முடிவு மங்களத்தின் மனதுக்கு சாதகமாக இருக்குமா?
“இதோடு இந்த விவகாரம் முடிந்தது. எழுந்து சாப்பிட வாங்க...”
மங்களம் சொன்னதை வெங்கடேசன் ஏற்கவில்லை. இந்த விவகாரம் முடியவில்லை என்பது அவர் கருத்து. சில சமயம் மனிதர்களே தங்களுக்கு
தீர்ப்பு எழுதிக் கொள்ளும் நீதிபதிகளாக மாறிவிடுகிறார்கள். வெங்கடேசன்
அப்படித்தான் செய்தார். அவர் மங்களத்திடம் புலம்பினார்.
“அந்தப் பெண் வயித்தெரிச்சலோடு உன் குழந்தையும் செத்துப் போச்சு என்று மாலையை போட்டு சாபமிட்டாளே. அது உண்மையாகிவிடுமோ?”
“பயமுறுத்தாதீங்க. அப்படியெல்லாம் நடக்காது.”
“இல்லே மங்களம்...பலிச்சிடுமோன்னு தோணுது. தசரத சக்கரவர்த்தி அறியாமல் யானை என்றெண்ணி குருட்டுப் பெற்றோர்களின் மகனைக் கொன்ற போது அவர் அப்படியே போகாமல் பெற்றோரைத் தேடிப் போய் உண்மையைச் சொல்லி ஆறுதல் வழங்கப் போனார். என்னாச்சு? நாங்கள் மகனை இழந்து தவிப்பது போல் நீயும் உன் மகனைப் பிரிந்து துடிப்பாய் என்று சாபமிட்டார்களே...அது பலித்ததே! ஆனால் இந்தப் பெண் உங்க குழந்தை செத்தே போச்சுன்னு சொல்லிட்டாளே! ஈஸ்வரா...பிரிந்தாவது வாழலாம். ஆனால் சாகக் கொடுத்திட்டு எப்படி வாழ்வது? நம் குழந்தை அவள் சாபத்தால்...செத்துப் போனால் எப்படி தாங்கிக் கொள்வேன்? நான் ஒரு
முடிவுக்கு வந்துவிட்டேன் மங்களம்.”
தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை வெகு நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். மங்களத்திற்கு பயமாக இருந்தது. மனுஷன் என்ன செய்யக் காத்திருக்கிறாரோ! மங்களத்துக்கு அடி வயிறு கலங்கியது.
“இத பாருங்க...நம்ம குழந்தைக்கு ஒன்றும் ஆகாது. அவள் ஏதோ குழந்தையை இழந்த துக்கத்திலே பேசிட்டா....நீங்க பழியை உங்க மேலே போட்டுக்கிட்டு அவஸ்த்தை படுறீங்க....”
வெங்கடேசன் ஆழ்ந்த மௌனத்தில் இருந்தார். பத்து நாட்கள் சென்றது.
தீர்ப்பு சொல்லப்பட்டது. மனிதன் சொன்ன தீர்ப்பா இல்லை மனிதன் மூலம் ஆண்டவன் சொன்ன தீர்ப்பா?