அத்தியாயம் — 9
சந்திரனின் முகத்தில் வியப்பும் சந்தோஷமும் போட்டி போட்டுக் கொண்டு வந்தது. மறுபடியும் மறுபடியும் அவன் கேட்டான்.
“நிஜமாத் தான் சொல்றியா சங்கீதா.?
“எது பொய்யான உறவு என்று தெரியவில்லை. ஆனால் உறவுகள் தேவை—
யாக இருக்கு.” கசப்புடன் சொன்னாள். காலம் அவள் கசப்பை மாற்றும்
என்று அவன் அமைதி அடைந்தான். இந்த அளவாவது அவள் இறங்கி வந்து சிந்திக்கிறாளே என்று சந்தோஷமாக இருந்தது. அவன் குளித்துவிட்டு வந்ததும் சங்கீதா காப்பியுடன் வந்தாள்.
“தேங்க்ஸ் சங்கீதா. ஒரு விஷயம். நான் வேலை விஷயமாக சிங்கப்பூர் போகணும். நீ தனியாக இருக்கணுமேன்னு கவலைப்பட்டேன்...”
“தனியாக இருக்கணுமேன்னு கவலைப்பட்டீங்களா? இல்லை ஓடிவிடப் போறேன்னு கவலைப்பட்டீங்களா? சந்திரன்.....என் கால்கள் பாதை தெரியாமல் நின்றுவிட்டது. எந்தப் பாதை எங்கு செல்லும் என்ற குழப்பம் காரணமாக இந்தத் தேர் ஒரு நிலைக்கு வந்துவிட்டது.”
“சங்கீதா என்னை மன்னித்துவிடு. உன் வளர்ப்பு தந்தை ஒரு நாள் போன் பண்ணி...சங்கீதா எங்களுக்கு வேண்டாம். என் வேலை நிரந்தரம் இல்லை. அவளை இனி பராமரிக்க என்னால் முடியாது. பெண் என்றால் எவ்வளவு செலவு இருக்கு! அவளை கட்டிக் கொடுக்க நான் காசு அழணும். என் பையனை நான் படிக்க வைப்பேனா இவளை கட்டிக் கொடுப்பேனா? எனவே இவள் எனக்கொரு பாரம், அழச்சிட்டு போய்டு....என்றுசொன்னார்.”
“அப்படியா சொன்னார் அப்பா?..” சங்கீதா கண்களில் அதை அவள் நம்ப கஷ்டப்படுவது தெரிந்தது. கனிந்த சுவையான மாம்பழத்தை கொடுத்துக்
கொண்டிருந்த மரம் தடீரென எட்டிக்காய்களைக் கொடுக்குமா? நம்பத்தான் முடியவில்லை. அன்பு காட்டியது எப்படி நாடகம் என்று நினைப்பது?
“நம்ப முடியலை இல்லே...ஆனால் அது தான் உண்மை. நான் அவர் கிட்டே கேட்ட முதல் கேள்வி...உங்க மனைவி இதுக்கு சம்மதிப்பாங்களா என்பது தான். அவளும் சித்தார்த்தும் இதுக்கு ஒரு நாளும் சம்மதிக்க மாட்டாங்க. அதனாலே தான் சொல்றேன், அவளை கடத்திக் கொண்டு போய்விடு. அதற்கான வழி முறையும் சொன்னார். நீயும் அவர்களை விட்டு பிரிய மாட்டேங்கறதாலே, உனக்கு அவர்கள் மேல் வெறுப்பு வரும்படி
செட்-அப் பண்ணப் போறதா சொன்னார்...அதில் முளைத்தது தான் கிஷோர் கூட நீ ஓடிப் போய்விட்டதா பரப்பச் சொன்ன ப்ளான். உன் அம்மாவிற்கு அதனால் ஏற்பட்ட கோபத்தை வெறுப்பாக மாற்றினார். உன் தம்பிக்கு போன் பண்ணி குரல் மாற்றி பேசி உன் அக்காவின் லட்சணத்தைப் பார்...கிஷோரோடு பேசிக் கொண்டு நீ அழுததை பார்க்க வைத்து அவன் மனதில் வெறுப்பை வளர்த்தார்....உன் அப்பா உனக்கு செய்திருக்கும் நன்மையை பார்த்தியா? உனக்கு இது அதிர்ச்சியா தான் இருக்கும்.
கடல் வற்றிவிட்டது என்று சொன்னால் யார் நம்புவார்கள்? உன் அப்பாவின் அன்புக் கடல் வற்றிவிட்டது பெண்ணே...அவர் வளர்ப்பு அப்பா தானே..”
“துபாயிலிருந்து கொண்டு எப்படி இதை எல்லாம் செய்யமுடியும்? நீங்க பொய்
சொல்றீங்க..”
“ஆரம்பிச்சிட்டியா....அவர் துபாயிலிருந்து எப்பவோ வந்துவிட்டார். அவருக்கு வேலை போய்விட்டதாம்.....என்ன தில்லு முல்லு பண்ணினாரோ?”
“அதை நீங்க சொல்றீங்களா? வேடிக்கை தான். தில்லு முல்லு பண்ணுவது தான் உங்க ரத்தத்தில் ஊறிய ஒன்றாச்சே...”
“நம்பாட்டி போ. சங்கீதா உன்னைப் பற்றி மாமா அடிக்கடி சொல்வார். அவர் உன்னை ரகசியமாக பார்த்துவிட்டு வருவார் போலிருக்கு. நீ அப்படி இப்படி என்று சொல்வார். உன்னை பார்க்காமலேயே உன் மேல் நான் அன்பு செலுத்த அரம்பித்துவிட்டேன். கடைசியில் மாமா முடிவு பண்ணினார். நான் உன்னை கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டுமென்று. இரண்டு வருடம் முந்தி உன்னை பெண் கேட்டுச் சென்றார் மாமா. என்னையும் கூட்டிக் கொண்டு தான் போனார். உன் அப்பா ஆனந்தன் அதற்கு சம்மதிக்கவில்லை. கொடுப்பது போல் பெண்ணை கொடுத்துவிட்டு நைசாக அவளை இப்ப உங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்னு பார்க்கிறீங்களா? இவ்வளவு வருஷம் பாசத்தோடு அவளை வளர்த்தோம். அவளை உங்களுக்கு தூக்கி கொடுத்து விட முடியாது. அவள் உங்க வீட்டுக்குப் போனா எங்களை பார்க்கவிடாம பண்ணிடுவீங்க. ஸோ யாருக்கு வேணா கட்டிக் கொடுப்போம், ஆனா நிச்சயம் உங்க சந்திரனுக்கு கட்டிக் கொடுக்க மாட்டோம்னு மாமாவை விரட்டி விட்டிட்டார். வேறு என்ன செய்வது? மாமா ஏமாற்றத்தோட திரும்பிட்டார்....உன் அப்பாவின் கெட்ட எண்ணத்தைப் புரிஞ்சுக்கோ.”
“புரிஞ்சுக்கிட்டேன் உங்க கெட்ட எண்ணத்தை. பெண் கொடுக்கலைன்னு தானே என்னைக் கடத்திக் கொண்டு வந்து கல்யாணம் பண்ண ப்ளான்
போட்டேங்க.? பிறகு அப்பா தான் கடத்த சொன்னார்னு பழி போடறீங்க.
அப்படித்தான் எனக்கு எண்ணத் தோன்றுகிறது மிஸ்டர் சந்திரன்.”
“அப்படியொரு சந்தேகம் உனக்கு வருவது நியாயம் தான். ஆனா நினைச்சுப் பார், அவங்க உன்னை சந்திக்காம டேக்கா கொடுப்பது ஏன்? பிரிய முடியாதுன்னு சொன்னவங்க ஏன் உன்னுடன் சுமுகமா பேசி ஏத்துக்கலை? இதுக்குப் பேர் தான் பாசமா? வேறு வீட்டில் இருந்துகொண்டு உன் சந்திப்பை தவிர்ப்பது ஏன்? நீ உன் அம்மாவை பார்க்கப் போனியே பார்க்க முடுஞ்சுதா? உன் வீட்டில் எவனையோ இருக்கச் சொல்லி உன்னை ஏன் துரத்தணும்? அவன் ஒரு படி மேலே போய் உன்னை அசிங்கப்படுத்தப் பார்த்தான். உனக்கு அப்ப கூட அவங்க மேலே உனக்கு சந்தேகமோ வெறுப்போ வரலை? எல்லாம் என் விதி. இருந்தாலும் இவ்வளவு தாய் தந்தை பாசம் ஆகாது.”
“விதியை வென்று விடலாம் சந்திரன். ஆனால் சதியை வெல்ல முடியாது.
முறியடிக்கலாம்...நான் அதைத் தான் செய்யப் போறேன். யார் குற்றவாளி? நீங்களா அப்பாவான்னு கண்டு பிடிக்காம விட மாட்டேன். அதனாலே இங்கிருந்து ஓடமாட்டேன். கவலைப் படாம நீங்க சிங்கப்பூர் போலாம்.”
“நீ ஒடமாட்டேங்கற ஆறுதல் ஒண்ணே எனக்கு இப்போதைக்குப் போறும்.
உன் அம்மா...மங்களத்தம்மாவை சொல்றேன்...உன் போலி அம்மாவை இல்லை...வந்ததும் டி.ன்.ஏ டெஸ்ட் பண்ணிப் பார்ப்போம். அப்ப உனக்கு உண்மை தெரியும். ரொம்ப சுலபமா புரிஞ்சுக்கலாம். உன்னை பெற்றது யாருன்னு? இப்போ இந்த வசதி எல்லாம் வந்திருப்பது வரப்பிரசாதம்.”
“ஆமா..ஆமா..புரிஞ்சுக்கலாம். இவ்வளவு தில்லு முல்லு பண்ற நீங்க டாக்டரை விலைக்கு வாங்கி பொய் ரிப்போர்ட் தயாரிக்க எவ்வளவு நேரம் ஆகும்?
கண்டுபிடிக்கிறேன். ப்ராடு நீங்களா? என் அப்பா ஆனந்தனா என்று?”
“எனக்கு எந்த பயமுமில்லை. நீதி தேவதை எனக்கு துணையிருக்கா. உன் அப்பா மனசு மாறிட்டார். அதை நீ விரைவில் புரிஞ்சுப்பே.”
அதோடு அவர்கள் பேச்சு நின்றது. சந்திரன் தன் பெட்டியில் தன் உடைகளை அடுக்கி வைத்துக் கொண்டான். அவன் கிளம்பும் போது அவளிடம்
“ஐ லவ் யூ...போயிட்டு வரேன்...ஒரு புன்னகையோடு விடை கொடு.” என்றான்.
அவள் புன்னகைத்தாள். “போயிட்டு பத்திரமாக திரும்பி வாங்க. நம்ம வழக்கு இன்னும் தீரலை.” அவள் எதிர்பாராத போது அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு கிளம்பிவிட்டான். ச்சே..என்று அவள் முணுமுணுத்தாள்.
மங்களமும் ஆண்டாளும் லாரியில் சாமான்களோடு வந்துவிட்டார்கள்.
மூன்று நாட்கள் எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்துவதில் கழிந்தது.
மங்களம் அவள் பாட்டுக்கு சோபாவில் உட்கார்ந்து கொண்டாள். சுற்றி என்ன நடக்கிறது என்று அவள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. மிக மெலிந்த உருவம். பார்க்க பாவமாக இருந்தது. சாயம் போன புடவை போல் உயிர்ப்பு போன தேய்ந்த முகம். கண்கள் மட்டும் பெரிதாக காரின் ஹெட்லைட் போல் பிரதானமாக துருத்தி நின்றது. அவளைப் பார்த்து அவ்வப்போது சிரித்தாள்.
ஒரு குழந்தைத் தனம் மின்னி மறைந்தது. அது அவளுக்கு ஒரு தனி அழகை கொடுத்தது. ஆண்டாளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
“பாரேன் சிரிக்கறதை...மகள் என்று அவள் உள்ளுணர்வுக்கு தெரிகிறது போல.
மங்களம்…..இந்த சிரிப்பை இதுவரை எங்கே ஒளிச்சு வச்சிருந்தே.?” என்று ஆண்டாள் வியந்தாள். மங்களத்திடம் சங்கீதாவிற்கு ஒருவித ஈர்ப்பு, பச்சாதாபம், கனிவு எல்லாம் வந்தது உண்மை தான். என்றாலும் இவள் தான் என் அம்மா என்று அவள் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. இவளையும் நடிக்க வைக்கிறார்களோ என்று ஒரு சதவிதம் எண்ணத் தோன்றியது. ஆனால் என்னதான் தத்ரூபமாக நடித்தாலும் நிஜம் விட்டு விலகிவிடுகிற சந்தர்ப்பம் வரும். இவள் கண்காணித்ததில் மங்களம் நடிக்கவில்லை என்றே பட்டது. அப்பவியான அவளைக் கூட சந்தேகிக்கும் படி நிலைமை இருக்கிறதே என்று அவள் வருத்தப்பட்டுக் கொண்டாள்.
சங்கீதாவின் தேவைகளை மங்களம் செய்ய ஆசைப்பட்டது ஒரு நல்ல அறிகுறியாக ஆண்டாளுக்குத் தோன்றியது. ‘என் சீப்பு எங்கே’ என்று இளையவள் தேடிக் கொண்டிருக்கும் போது சீப்போடு வந்து நிற்பாள் மங்களம். அவள் சாப்பிட உட்காரும் போது தண்ணீர் செம்புடன் வந்து நிற்பாள். தட்டைப் பார்த்து தேவையானதை பறிமாறுவாள். தலைக் குளித்துவிட்டு வந்தால், துண்டை எடுத்துக் கொண்டு வந்து துவட்டி விடுவாள். எவ்வளவு பெரிய மாற்றம் இந்த குறுகிய காலத்தில்! சந்கீதாவுக்கே மனசு நெகிழ்ந்தது. இவள் பெற்ற பிள்ளை எங்கிருக்கோ...நான் என்று நினைத்து ஓடி ஓடி கண்ணில் அன்பு வழிய பார்கிறாள்....பாவம் ஏமாறப் போகிறாள்...என்று நினைத்தாள்.
“சங்கீதா..பார் இனி உங்க அம்மா தேறிவிடுவாள். அவளிடம் நீ பிரியமாகப் பேசு. அவளுக்கு சாதம் ஊட்டிவிடு. கதைகள் சொல்லு. அவளுக்கு கதை கேட்க ரொம்ப பிடிக்கும். கையை பிடித்து தோட்டத்தில் சுற்றி வா....மெல்ல
மெல்ல அவள் பேச ஆரம்பிப்பாள் என்று நம்பறேன்...”
என்றாள் ஆண்டாள். அவள் முகத்தில் ஒரு புதிய சந்தோசம் தெரிந்தது.
வருஷக் கணக்கில் குணமாகாமல் கிடந்தவள்...இந்த சில நாட்களில்
பசேலென்று பயிர் தலை நீட்டுவது போல் மனுஷியாக முளைக்கிறாளே!
“சரி பெரியம்மா...நான் நீங்க சொல்றது போல் அம்மாவிடம் நடந்துக்கிறேன்.”
“இவள் தன்னிலை அடைந்தால் உனக்கும் நல்லது. அந்த ஆக்சிடென்ட் கதை நிஜமா பொய்யான்னு நீ சந்தேகப்படறயே அது தெளிவாயிடும்.”
“நீங்க சொல்றதிலும் உண்மை இருக்கு. முயற்சி பண்றேன்.”
நம்பிக்கை இல்லாமல் சொன்னாள் சங்கீதா.
கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்ளும் போதெல்லாம் சங்கீதாவுக்கு ஒன்று புரிந்தது. அவள் முகம் பொலிவு மங்கிக் கொண்டே வருவதை அது காட்டியதாக உணர்ந்தாள். அன்பென்னும் ஊஞ்சலில் வேகமாக முன்னும் பின்னும் ஆடும் இந்த இழுபறி நிலையில் அவள் மனதில் கரிய மேகங்கள்
மூண்டு அவள் உடல் நிலையை பாதித்தது. இவ்வளவு சின்ன வயதில் அவளுக்கு இப்படியொரு போராட்டம். கண்ணைக் கட்டி காட்டில் விட்டது மாதிரி.....யாரை நம்புவது? எதை நம்புவது? பல யோசனைகள் அவள் மனதில் ஓடியது. அப்பா தான் சந்திரனை கூப்பிட்டு இவளை கடத்திக் கொண்டு போ என்று சொன்னாரா? இல்லை இவன்தான் இவள் வேண்டும் என்பதால் கடத்திக் கொண்டு வந்து சதி பண்ணுகிறானா? எது உண்மை என்று தெரிந்து கொண்டே ஆகவேண்டும். இருபது வருஷம் அவள் அப்பாவிடம் வளர்ந்தவள்....அவர் குணம் அவளுக்குத் தெரியாதா? கேப்பையில் நெய் வழிகிறது என்றால் நம்பிவிட முடியுமா? அப்பா அப்படி அவளை துரத்த வேண்டிய அவசியம் என்ன? தடீரென அவளை பாரமாக நினைப்பாரா? சந்திரனை அவளுக்கு இந்த எட்டு மாதமாகத்தான் தெரியும். அவன் தில்லு முல்லு செய்யக் கூடியவன் என்று ஆரம்பத்திலேயே அவள் காலை இடறி விட்டதிலிருந்தே தெரிகிறது. எனவே அப்பா சொல்வதை நேரில் கேட்டு சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும். அவர் நிச்சயம் பொய் சொல்ல மாட்டார். சந்திரன் சிங்கபூரிலிருந்து வருவதற்குள் எப்படியாவது அப்பாவுடன் பேசிவிட வேண்டும். ஒரே ஒரு முறை பேச வாய்ப்பு கிடைத்தால் எல்லா உண்மையும் விளங்கிவிடும். சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கீதா.
ஒரு நாள் மதியம் சாப்பாடு முடிந்த கையோடு ஆண்டாளும் மங்களமும்
குட்டித் தூக்கம் போட்டுக் கொண்டிருந்தார்கள். உண்ட களைப்பு தொண்டர்க்கும் உண்டே! அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு சங்கீதா தன் அறையில் கதவடைத்துக் கொண்டு அப்பாவுக்கு போன் செய்தாள்.
நாலாவது ரிங்கிலேயே அப்பா எடுத்துவிட்டார். மகிழ்ச்சியாக இருந்தது.
“ஹலோ..சங்கீதா எப்படிம்மா இருக்கே? உன்னை பத்தி தான் நினச்சிட்டு தான் இருகேன். என்னென்னவோ நடந்து போச்சு..”
அப்பாவின் குரலைக் கேட்டதும் மனம் நிறைந்தது சங்கீதாவுக்கு. பேச்சே வரவில்லை. கண்ணீர் கரகரவென்று கன்னம் தாண்டி வழிந்தது.
“என்னம்மா...லைனில் இருக்கியா? பேசுமா. உன் குரலைக் கேக்க ஆசையாயிருக்கு....எவ்வளவு நாளாச்சு? எப்படிம்மா இருக்கே?”
“நல்லாவே இல்லை அப்பா. இங்கே சந்திரன்னு ஒரு தடியன் பெரிய ப்ராடுப்பா. நீங்க என்ன அவனுக்கு கட்டிக் கொடுக்க மாட்டேங்கன்னு சொன்னதும் உங்களை மிரட்டி என்னைக் கடத்திக் கொண்டு வந்துவிட்டான் அப்பா... சொல்லுங்கப்பா அவன் உங்களை மிரட்டி தானே ஒளிச்சு வச்சிருக்கான்?”
“போன்லே பேசறதை கூட ட்ராக் பண்ணுவாங்க. இரவு பத்து மணிக்கு நம்ம வீட்டுக்கு வந்திடு. இக்கட்டான சூழ்நிலையில் இருக்கேன். உன் கிட்டே மனம் விட்டுப் பேசணும். விலா வாரியா சொல்றேன். அப்புறம் நாம ஒரு முடிவு எடுப்போம். அப்பா இருக்கேன்டா உனக்கு...”
“சரிப்பா...ஸ்வீட் அப்பா. கண்டிப்பா வரேன். உங்க கூட பேசறதுக்குத் தான் காத்திட்டிருக்கேன். அம்மாவும் சித்தார்த்தும் நல்லா இருக்காங்களா? கிஷோர் கல்யாண பத்திரிகை பார்த்தீங்களா? அம்மா சந்தேகம் தீர்ந்ததா? எனக்கு நீங்கள்ளாம் வேணுமப்பா. நான் செத்திட்டிருக்கேன்ப்பா...”
“புரியுதும்மா...நானும் அதே நிலையில் தான் இருக்கேன். கண்டிப்பா பேசுவோம். நீ என் உயிரல்லவா கண்மணி...”
அப்பாவுக்கு அன்பு மிகுதியானால் கண்மணி என்று தான் சொல்வார். சங்கீதா சொர்கத்தையே எட்டிப் பிடித்தாள். எப்போ இரவு வரும் என்று துடியாகத் துடித்தாள். மங்களத்தை கட்டிப் பிடித்து முத்தமிட்டாள். ஆண்டாளுடன்
கலகலவென்று பேசி அவள் தயாரித்த தேங்காய் பர்பியை ஆசையுடன் சாப்பிட்டாள். “என்னாச்சு எங்க செல்லத்துக்கு..ஒரே குஷி தான் போலிருக்கு.”
என்று ஆண்டாள் மகிழ்ந்தாள். என் உலகம் அழகாகப் போகிறது...சங்கீதாவின் மனக் குரலை அவர்களால் கேட்க முடியுமா என்ன.?
இரவு வந்தது சங்கீதாவுக்கு விடிந்து விட்டது போல் தோன்றியது. சாப்பாட்டுக் கடையெல்லாம் முடிந்து அவரவர் படுக்கப் போகும் நேரம் வந்தது. இரவு விளக்கை எரிய விட்டு டியூப்லைட்டை அணைத்தாள் ஆண்டாள்.
“சங்கீதா...நான் எதிர் அறையில் தான் படுத்திருக்கேன். ஏதாவது பிரச்சனைன்னா எழுப்பு. உன் அம்மாவின் கையை பிடித்துக் கொண்டே தூங்கு. அவளுக்கு அப்படி பிடித்துக் கொண்டால் தான் தூக்கமே வரும்.
உன்னை எழுப்பினால் தண்ணீர் வேணும்னு அர்த்தம். குட் நைட்..”
“குட் நைட்..பெரியம்மா. நான் அம்மாவை பார்த்துக்கிறேன். நீங்க நிம்மதியா தூங்குங்க...” என்று சொல்லி சங்கீதா மங்களத்தின் அருகே படுத்துக் கொண்டாள். ஒரு கையால் அம்மாவின் கையை பிடித்துக் கொண்டாள்.
மறு கையால் அவள் முதுகை தட்டிக் கொடுத்தாள். சிறிது நேரத்தில் மங்களம் அயர்ந்து தூங்க ஆரம்பித்தாள். இது தான் சமயம். சங்கீதா நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. மெல்ல எழுந்து அரை இருட்டில் தடவி தடவி ஒரு வழியாக அறைக் கதவை சத்தமின்றி திறந்தாள். வெளி வாசல்
பூட்டைத் திறந்துகொண்டு தெருவில் இறங்கி நடந்தாள். அப்பாவுக்கு போன் செய்தாள். “அப்பா...” அவரின் அவசரக் குரல் கேட்டது.
“சீக்கிரம் வா...உனக்காகத்தான் காத்திட்டிருக்கேன்.” சங்கீதாவின் மனம் துள்ளியது. சந்திரன் சிங்கபூர் போகும் முன் அவர்களுக்குள் சண்டை மூண்டது. அவன் கோபத்துடன் சொன்னான்.
“என்னை நம்பவே மாட்டேங்கறே இல்லே. உன் கேடுகெட்ட அப்பாவுக்கு ஒரு முடிவு கட்றேன்.” என்று வெடித்தானே....டேய் சந்திரா, உன் பித்தலாட்டத்துக்கு ஒரு முடிவு வந்துவிட்டதடா...எங்கப்பாவுக்கா முடிவு கட்டப் போறே? எங்கப்பா பேசிட்டார்! நீ என் உயிர்மான்னு சொல்லிட்டார். போலீஸ் உன்னை தேடி வரும்டா...” சங்கீதாவின் உள்ளம் பொங்கி பூரித்தது.
ஒரு சைக்கிள் கடை திறந்திருந்தது. பீடி குடித்துக் கொண்டு சைக்கிள் டயரை சரி பண்ணிக் கொண்டிருந்தான் ஒரு ஆள். உள்ளே இருவர் டீ குடித்தபடி பேசிக் கொண்டிருந்தனர். சங்கீதா அவர்களை நெருங்கி கேட்டாள்.
“அண்ணே..சைக்கிள் வாடகைக்கு வேணும்.”
“ஏம்மா..நேரம் பத்தை நெருங்குது..இந்நேரம் எங்கே போறே? தனியா இருட்டிலே போகாதேம்மா. ரௌடிகள் நடமாடும் நேரம்....” என்றான்
பீடி குடித்துக் கொண்டிருந்த ஆள். கடையில் இருந்த வெளிச்சம் பத்தாமல் கண்ணை சுருக்கி கொண்டிருந்தான். இன்நேரம் என்ன ரிப்பேரோ?
“அவசரம் அண்ணே...அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். ஆஸ்பத்திரியில்
சேர்த்திருக்காங்களாம். ரத்தம் ஏத்தனுமாம். என் ரத்தம் கொடுக்கணும்...அதான்
அவசரம்.....ஆட்டோ ஒன்றும் இன்நேரம் இங்க வராது போலிருக்கே...”
“ஒ..அப்படியா? ஜாக்கிரதையா போம்மா...”
“சரிங்க அண்ணாச்சி. ‘” அவன் கொடுத்த சைக்களில் ஏறி வேகமாக மிதிக்கத் தொடங்கினாள். மனசு திக் திக்கென்று அடித்துக் கொண்டது. எப்பொழுது வீடு வரும் என்று ஏங்கியபடியே ஒட்டிக் கொண்டிருந்தாள். நாற்பது நிமிஷத்துக்கு பின் அவள் வீட்டின் கேட் தெரிந்தது. வானம் மேலும் இருட்டிக் கொண்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிறிய வெளிச்சம் தந்தபடி நட்சத்திரங்கள் வேண்டா வெறுப்பாக மின்னின. தெரு நாய் ஒன்று வள் வள் என்று குறைத்து ஊரைக் கூட்டியது. யாரோ கல் எடுத்து வீச அது பயந்து ஓடிவிட்டது . தன் வீடே ஏதோ ஒரு பேய் வீடு போல் நிழல்கள் விழுந்த மர்ம கட்டிடம் போல் காட்சியளித்தது. அக்கம் பக்கம் எந்த அரவமும் இல்லை. சங்கீதாவை லேசாக பயம் பிடித்துக் கொண்டது.
ஊஞ்சல் ஆடும்...