கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

அப்பென்னும் ஊஞ்சலாட்டம் - அத்தியாயம் 6

sankariappan

Moderator
Staff member
அத்தியாயம் – 6





வீட்டிற்கு வந்தவுடன் பயங்கர ரகளை பண்ணிவிட்டான் சந்திரன். கண்களில் நெருப்பின் தகிப்பு. எரிச்சலுடன் கூறினான்.


“உன்னக் கண்கானிக்கறதே என் வேலையாப் போச்சு. நீ பல்லைக் காட்டிட்டு திரிஞ்சபோதே உன் திட்டம் புரிஞ்சு போச்சு. நர்ஸ் கோகிலா நீ கிளம்பி போனதும் என்கிட்டே போன் பண்ணி நீ கம்பி நீட்டிவிட்ட விஷயத்தை சொன்னாங்க. ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருந்தேன். உடனே புறப்பட்டு வர முடியலை. என்ன உங்க அம்மாவைப் பார்க்கப் போனியா? அவங்க துபாய் போயிட்டாங்கன்னு அங்கே ஒரு ஆள் சொல்லியிருப்பானே..”


“இவ்வளவு தெரிஞ்சிருக்கு உனக்கு. முன்னாடியே சொல்லி தொலைப் பதற்கென்ன? கல்லூளி மங்கன்...”


“ஆமா...நீ உடனே என்னை நம்பிடுவே பாரு. சரி எதுக்கு அழுதிட்டே பேய் அறைஞ்சா மாதிரி ஓடி வந்தே?”


“அந்தாள்...என் கிட்டே தப்பா நடக்கப் பார்த்தான்.”


“அப்படியா...ராஸ்கல்...அவன் கொத்தனார். உங்க வீட்டின் பின்புறம் தொட்டி கட்டிவிட வந்தவன். அவனை நான் பார்த்துக்கறேன்...”


“என்ன பார்த்துக்கறேன்?....என் நல்லகாலம் தப்பிச்சேன். நீ ஏற்பாடு பண்ண ஆளா அவன்? “


“பார்த்தியா என்னை நம்பித் தொலையேன். இங்கே உனக்கு என்ன குறை?


அப்பா அம்மா தம்பின்னு உருகிக்கிட்டு ஓடறே. அவங்க தான் உன்னை தூக்கி எறிஞ்சிட்டாங்களே.”


“இல்லே..அவங்க அப்படி பண்ணமாட்டாங்க. நீ தான் ஏதோ சதி பண்ணி எங்களை பிரிக்கப் பார்க்கிறே. ஏண்டா என்னை இப்படி சித்திரவதை பண்ணறே? என்னை என் அம்மாக்கிட்டே கொண்டு விடு.”


அழ ஆரம்பித்தாள். அவன் மண்டியிட்டு அவள் அமர்ந்திருந்த சோபா அருகே


அமர்ந்தான். வருத்தமுடன் சொன்னான்.


“சங்கீதா..நீ இப்படி அழறது எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. என் உயிரை பிசையறா மாதிரி இருக்கு. ப்ளீஸ் சங்கீதா...உன்னை தூக்கிப் போட்டவங்களை நீ ஏன் இன்னும் நெஞ்சிலே சுமந்திட்டு இருக்கே?”


“அவங்க தூக்கி எறிய மாட்டங்க. என் மேலே அப்பா கொள்ளை பிரியம் வச்சிருக்கார். நீ யாரு? எதுக்கு எங்களை குறி வச்சு பிரிக்கப் பாக்கறே?


கிஷோர் கல்யாண பத்திரிகை வந்திருந்தது. பதட்டத்திலே விட்டிட்டு வந்திட்டேன். அதை காட்டினா போதும் அம்மா ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடிச்சுப்பாங்க. எனக்கு பெரிய கம்பெனியில் இன்டெர்வியூ கார்ட் வந்திருந்தது. அதுவும் முடிஞ்சு போன டேட். என் எதிர்காலத்தையே நாசம் பண்ணிட்டியே. நீ ஒரு அயோக்கியன். உன்னை நான் நம்பனுமா? ஐ ஹேட் யூ...” சங்கீதா கதறிக் கொண்டு சொன்னாள்.


“வேற வழி இல்லை. உங்கப்பா சொன்னா மாதிரி செஞ்சிட வேண்டியது தான்.


“அப்பா என்ன சொன்னார்?”
“அப்பா சொன்னதை கேப்பியா?”


“கேட்பேன். நிச்சயம் கேட்பேன்.”


“அவர் என்னிடம் உன்னை சீக்கிரம் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கச் சொன்னார். பிறகு எல்லாம் சரியாயிடுமாம். இனி நீ என் உடைமையாம்.”


“நோ....அப்பா அப்படி சொல்லியிருக்கவே மாட்டார்..” என்று பொங்கி கத்தினாள். எப்படியெல்லாம் பொய் சொல்றான்!


“சங்கீதா அடம் பண்ணாதே.”


“முடியாது. கட்டாயக் கணவன்..கட்டாயக் குடும்பம். என்னை நீ அடையவே முடியாது சந்திரன்...நீ ஒரு ப்ராட்..”


“நாளைக்கே நாம் கல்யாணம் பண்ணிக்கறோம்.”


“நான்சென்ஸ்...நடக்கவே நடக்காது.”


“அப்படி நாளையே நடக்கக் கூடாதுன்னா உனக்கு ஒரு சாய்ஸ் இருக்கு.”


“சொல்லித் தொலை.”


“மாமாவின் கடைசி மூச்சு வரை நீ இங்கே தான் அவரை அன்போடு கவனிச்சிட்டு இருக்கணும். அதுவரை கல்யாணப் பேச்சை எடுக்கமாட்டேன்.


ப்ராமிஸ் பண்ணு ஒடமாட்டேன்னு..”


சங்கீதா முடியாது என்று சொல்ல நினைத்தாள். பிறகு இவன் ஒருவேளை சொன்ன மாதிரியே கட்டாயக் கணவன் ஆகிவிட்டால்?...


“சரி பெரியவர் இறுதி மூச்சுவரை இருக்கேன்...” சந்தியம் பண்ணிக் கொடுத்தாள். அவன் வலையில் சிக்க வைத்துவிட்டான்.





ஆயிற்று...அப்படி இப்படி என்று மூன்று மாசம் ஓடிவிட்டது. திக்கி திக்கி பேசிக் கொண்டிருந்த மாமா இப்பொழுது எதுவும் பேச முடியாமல் அடங்கிவிட்டார். இந்த நிலையில் அவரைப் பார்க்க கஷ்டமாக இருந்தது


சந்திரனுக்கு. சங்கீதாவின் மனநிலையும் அவனுக்குப் புரிந்தது. இனியும் அவளிடம் உண்மையை மறைக்க வேண்டாம் என்று நினைத்தான். சங்கீதா


பெரியவரை கவனித்துவிட்டு தன் அறைக்குச் சென்றாள். ஜன்னல் வழியே நிலாத் தெரிந்தது. நிலா சாப்பாடு என்று அம்மாவும்..அப்பா ஊரில் இருந்தால் அவரும், தம்பியும் என நால்வரும் மொட்டை மாடியில் அம்மா உருட்டிப் போட சாப்பிட்ட நாட்கள் ஞாபத்திற்கு வந்தது. சுட்ட அப்பளமும் சுண்ட வைத்த காரக் குழம்பும் தேவாமிர்தமாக இருக்குமே! அம்மா எங்கே இருக்கே?


அப்பா துபாயிலிருந்து அவளுக்கு என்னவெல்லாம் வாங்கி வருவார்! பெர்பியும், எலெக்ட்ரானிக் வாட்ச், மொபைல் போன்...டூ இன் ஒன் பிளேயர்...


விதவிதமான சாக்லேட்ஸ்....டேனிஷ் பிஸ்கட்ஸ்...அய்யோ...ஒரு பெட்டி நிறைய பொருள்கள். பார்க்கப் பார்க்க பெருமையாக இருக்கும். அந்தப் பொருட்களை கண்டு அல்ல...அதை வாங்கி வந்த அன்பான அப்பாவின் இதயம் கண்டு....மனம் நிறைந்த அன்புடன் வாங்கி வருவார். அது தான் சிறப்பு. அவரா அவளை கடத்தச் சொல்லி இருப்பார்? இந்த ரௌடியை


ரெஜிஸ்டர் கல்யாணம் பண்ணிக்கச் சொல்வார்? அவளால் நம்பவே முடியவில்லை. எதுவோ தப்பாய் இருக்கிறது. இந்தக் குள்ளநரி ஆட்டம் போடுகிறது. இவனை வெட்டி போடவேண்டும் போல் இருந்தது.


“சங்கீதா..” சந்திரனின் குரல் மிருதுவாக ஒலித்தது. வந்துவிட்டான்


கடன்காரன். பேசணும்னு சொன்னானே...என்ன புதுப் பொய் சொல்லப் போகிறானோ. பொய்கள் சொல்ல அவனுக்கு கூசவில்லையா?


“சங்கீதா..ரொம்ப நாளா நான் உண்மையை மறைப்பதா சொல்லிட்டு இருந்தியே...இப்ப சொல்லலாம்னு வந்திருக்கேன்.”


பால்கனிக்கு வந்தார்கள். நிலா அற்புதமாக தோழமையுடன் காய்ந்தது.


“இந்த நிலவையே சாட்சியாக வச்சு சொல்றேன். நடந்ததெல்லாம் உண்மை.


சங்கீதா...வாழ்க்கை ரொம்ப அழகானது. நாம் வாழும் நீர்க்குமிழி வாழ்க்கையை, கவலைப் பட்டும் அழுதும் வீணாக்குவதில் என்ன லாபம்?


சாகிற வரை ஆங்காங்கே கிடைக்கிற தேன் துளிகளைப் பருகி...தேனீக் கொட்டலான துன்பத்தினை மறப்போம்....”


“போதும் உன் லெக்சர்....கவித்துவ வார்த்தைகளை சொல்லி உன் தவறுகளை மறைக்க வேண்டாம்...சொல்லு உண்மைகளை..”


“இவ்வளவு அழகான சூழலில் உன்னுடன் டுயேட் பாடத்தான் ஆசை.


அட்லீஸ்ட் “வாராயோ வென்னினாலவே கேளாயோ எங்கள் கதையே..”


என்றாவது பாட ஆசை. ஆனால் என்னை பஸ்பமாக்கிவிடுவாய்...”


“வீண் பேச்சு வேணாம்..”


“சரி...நிகழ்ந்து முடிந்த துன்பியல் சரித்திரத்தை உனக்குச் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. இருபத்திமூன்று வருஷங்களுக்கு முன் மாமா ஒரு பூமாலையோடு ஒரு சாவிற்கு இறுதி மரியாதை செலுத்தப் போனார்.


அது அவர் வாழ்கையையே தடம் புரள செய்துவிட்டது. அதன் விளைவு தான் நீ இப்பொழுது அனுபவிக்கிற சோகம்.....”


“என்ன..விசித்திரமா இருக்கே...”


அவன் சொல்ல ஆரம்பித்தான்.





கட்டிலில் செயலற்று கிடந்த வெங்கடேசனின் மனம் மட்டும் செயலிழக்க-


வில்லை. அது இருபத்திமூன்று வருஷம் பின்னோக்கி பயணித்தது. அப்போது அவர் முப்பத்திரண்டு வயது இளைஞன். மங்களம் என்ற அழகான அருமையான மனைவியை பெற்ற பாக்கியவான். சந்தோஷமான வாழ்க்கை.


போதுமான பண வசதி. சொந்த வீடு. ஆசைக்கு ஒரு மகள். பிறந்து மூன்று மாதமே ஆன சிசு. பொறுப்பான அன்பான ஆறு வயது சந்திரன். தங்கையின் மகன். தங்கையும் அவர் கணவரும் மரணித்து இவர் பொறுப்பில் விட்டுச் சென்ற பொக்கிஷம். வாழ்க்கை அப்படி இனித்துக் கொண்டிருந்தது.





ஒரு நாள் காலை சுமார் பத்து மணிக்கு குழந்தைக்கு ஜுரம் என்று ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று மங்களம் சொல்ல,


வெங்கடேசனே காரை செலுத்திச் சென்றார். நன்றாகத் தான் ஒட்டிக் கொண்டு சென்றார். கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அதே சமயம் சொர்ணாவும் காரில் ஹாஸ்பிடலுக்கு பயணித்துக் கொண்டிருந்தாள். அவள் தம்பி காரோட்ட அவள் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். பின் சீட்டில்


சொர்ணத்தின் அம்மா காவேரி அமர்ந்திருந்தாள். “பார்த்து ஓட்டுடா...நிறை மாத கர்ப்பிணி உன் அக்கா. அதை மனசிலே வச்சுக்கிட்டு ஒட்டு.”


“எல்லாம் தெரியும்மா...தொன தொனக்காதே.” என்று அஸ்வின் சொன்னான்.


“தம்பி அஸ்வின்....நீ டிரைவிங் லைசன்ஸ் வாங்கி ஒரு மாசம் தான் ஆகுது


அதான் அம்மா பயப்படறாங்க..” என்றாள் சொர்ணா.


“இந்த அம்மாவுக்கு வேறு வேலை இல்லை....எல்லாம் எனக்குத் தெரியும்.”


இருபது வயது இளைஞன் வேறு எப்படி பதில் சொல்வான்? அந்த நேரம் பார்த்து சொர்ணா வலியில் துடித்தாள். விட்டு விட்டு வலித்தது.


“பிரசவத்துக்கு இன்னும் ஒரு வாரம் இருக்குன்னு டாக்டர் சொன்னாரே.


செக்-அப்புக்குத் தானே போறோம். சொர்ணா ரொம்ப வலிக்குதா? அஸ்வின் வேகமா போப்பா...பயமா இருக்கு.” என்றாள் காவேரி.


“அஸ்வின் சீக்கிரம் போப்பா..ரொம்ப வலியாயிருக்கு..” சொர்ணா வலியில் துடிக்க ஆரம்பித்தாள். எல்லோருக்கும் டென்ஷன் ஆகிவிட்டது. அஸ்வின் வேகமெடுக்க முயற்சித்தான். இவர்கள் முன்னால் காரோட்டி சென்று கொண்டிருந்த வெங்கடேசன் நிதானமாக கார் ஒட்டி சென்று கொண்டிருந்தார். பின்னால் வரும் காருக்கு அவசரம் என்று அவருக்குத் தெரியவில்லை. அஸ்வின் ஹார்ன் அடித்து ஓவர்டேக் பண்ண முயற்சித்தான். பல முறை ஹாரன் அடித்தான் அஸ்வின். ஓவர்டேக் பண்ண வழி விடமாட்டேங்கறான் அந்தப் பயல் இந்தப் பயல் என்று ஏசிக் கொண்டிருந்தான்.


சொர்ணா வீல் என்று கத்திக் கொண்டிருந்தாள்.


“மெரீனா பீச்சில் போவது போல் ஜாலி ரைட் பண்ணிட்டிருக்கான்....ச்சே.


சைடு கொடுக்காம ஆமை வேகத்திலே ஓட்டறான் பார்..” மேலும் ஹார்ன் ஒலித்தது. சுத்தமாக முந்திக்கொள்ள இடம் கிடைக்கவில்லை.


“என்ன தலை போற அவசரம்? ரெண்டும் கெட்டான் வாலிப பசங்களுக்கு இது ஒரு விளையாட்டு..நான் சைடு கொடுக்கப் போறதில்லை.” வெங்கடேசன் பிடிவாதமாக நிதானமாக ஓட்டிக் கொண்டிருந்தார்.


“இந்த ஆள் ஏன் இப்படி சைடு கொடுக்க மாட்டேங்கறார்? அக்கா வேறு வலியில் துடிச்சிட்டிருக்கா. பிரசவம் காரிலேயே ஆயிடும் போலிருக்கே..”


மனதில் எண்ணிக் கொண்டே அஸ்வின் ஒரு காரியம் செய்தான். ராங் சைடில் ஓவர்டேக் செய்தான். அவ்வளவு தான்..அதிகம் அனுபவம் இல்லாததால் அஸ்வின் செய்த காரியத்தால் சடன்பிரேக் போட்டு இரு கார்களும் உரசிக் கொண்டு க்ரீச் சத்தத்துடன் முன் பின்னாக இடித்தபடி நின்றது. கூச்சல் குழப்பம்....கூட்டம்....போலிஸ் என்று ஒரே நிமிஷத்தில் அந்த இடமே அமளி துமளி பட்டது. சடன்பிரேக் போட்டதில்..சொர்ணா சீட் பெல்ட் போடாததால் சீட்டின் முன் உள்ள டாஷ் போர்டில் மோதி பலமாக காயப்பட்டு மயங்கிவிட்டாள். வெங்கடேசன் இறங்கி வந்து அஸ்வினைத் திட்டினார். “ஏண்டா அறிவிருக்கா உனக்கு? என்ன தலை போற அவசரம்? தலைதெறிக்க ஒட்டி ஓவர்டேக் பண்ணணுமா? அதுவும் ராங் சைடில் வர்றே...” கார் உள்ளே எட்டிப் பார்த்தவர் திடுக்கிட்டார். நிறை மாத கர்ப்பிணி . அதிர்ச்சியில் மயங்கிவிட்ட நிலைப் பார்த்து தன் இதய துடிப்பு ஒரு கணம் நின்றுவிட்டதை உணர்ந்தார். அஸ்வின் அவரை வாய்க்கு வந்தபடி திட்டினான். சேதம் ஏதும் இல்லாதபடியால் வண்டியை எடுத்துக் கொண்டு வேகமாக ஒட்டி மறைந்தான். போலிஸ் இவரை எச்சரித்து அனுப்பியது.





வெங்கடேசன் ஸ்தமித்து நின்றார். குற்ற உணர்வுடன் ஸ்டார்ட் செய்தார்.


“தெரியாமல் போச்சே..நிறை மாத கர்பிணி வேறு. நல்ல படியாக பிரசவம் ஆகணுமே...” என்று வாய் விட்டு அரற்றினார். மங்களம் பயந்து போயிருந்தாலும் கணவனுக்கு ஆறுதல் சொன்னாள்.


“கவலைப்படாதேங்க எல்லாம் நல்லபடியாக பிரசவம் ஆகும். நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டது. பயப்பட வேண்டாம். களேபரத்தில் குழந்தை


விழித்துக் கொண்டு அழுகிறாள்...” குழந்தையை சமாதானப்படுத்தி தோளில் சார்த்திக் கொண்டாள் மங்களம். பாலூட்டினாள். ஜுரம் குறையவில்லை குழந்தை சோர்வுடன் மீண்டும் கண் அயர்ந்தது. வெங்கடேசன் கார் ஓட்டினாலும் அவர் மனசெல்லாம் அந்த கர்ப்பிணி பெண்ணின் நிலைமை பற்றியே சிந்தித்தது. ஹாஸ்பிடல் வந்துவிட்டது. குழந்தையை டாக்டரிடம் காட்டினார்கள். டாக்டர் பார்த்துவிட்டு ஒன்றும் பயப்படவேண்டாம் சாதாரண ஜுரம் தான் என்று சொல்லி மருந்து கொடுத்து அனுப்பிவிட்டார். அதே ஹாஸ்பிடலில் தான் சொர்ணாவும் டெலிவரிக்காக சேர்க்கப்பட்டாள். அஸ்வின் இவரை பார்த்துவிட்டான். வேகமாக வந்தான்.


“உங்களாலே எங்க அக்கா இன்னும் மயக்கம் தெளியாம இருக்கா. எங்க அக்காவுக்கோ ...குழந்தைக்கோ ஏதாவது ஒண்ணு ஆச்சு...உங்களை சும்மா விடமாட்டேன்.” என்று ஆவேசமாக கூறினான்.


“ரொம்ப சாரிப்பா...நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. மனசே சரியில்லை.


மன்னிச்சுக்கோப்பா...” காலில் விழாத குறையாக கெஞ்சினார்.


“யாருக்கு வேணும் உங்க மன்னிப்பு? உங்களைப் பார்த்தாலே வெறுப்பா இருக்கு. இங்கிருந்து போயிடுங்க. பிரசவம் எப்ப ஆகும்? என்ன ஆகும்னே


டாக்டர்கள் சொல்ல மாட்டேங்கறாங்க...நீயெல்லாம் ஒரு ஆளு.”


“தப்புதானப்பா...இது என்னோட விசிடிங் கார்ட். பிரசவம் நல்லபடியா ஆகும்.


எனக்கு போன் பண்ணி சொல்லுப்பா.”


கார்டை வாங்கி அவர் முகத்தில் விட்டெறிந்தான் அஸ்வின்.


“உங்களுக்கு சொல்ல நீங்க என்ன மாமனா மச்சானா? கொல்ல வந்த யமன்.


கொலை வெறியில் இருக்கேன். போயிடுங்க. எங்க முகத்திலே இனி விழிக்காதீங்க...கெட் லாஸ்ட்...” கத்தினான். குழுமி இருந்தவர்கள் திரும்பிப் பார்த்தனர். வெங்கடேசன் அவனை எப்படி சமாதனப் படுத்துவது என்று தெரியாமல் குற்ற உணர்வுடன் நின்றார். மங்களம் குழந்தையுடன் செய்வதறியாது கண்ணீர் மல்க நின்றாள். அவளுக்கு வேறு ஒரு டெஸ்ட் பண்ணவேண்டியிருந்தது. அதை பண்ணிவிட்டு இப்பொழுது தான் வந்து நின்றாள். வெங்கடேசன் தன் குழந்தையைப் பார்த்தார். அது நிச்சல்யமாக தூங்கிக் கொண்டிருந்தது. தன் குழந்தைக்கு ஏதாவது நேர்ந்தால் அவர் எப்படி துடிதுடித்துப் போவார்! அஸ்வினுக்கும் அப்படித்தானே இருக்கும்! அவன் எத்தனை முறை ஹாரன் அடித்தான். நான் ஒரு மடையன் ஒதுங்கி வழி விட்டிருந்தால் இப்படி ஆகியிருக்காது. “தம்பி...” என்று ஏதோ சொல்ல வாயெடுத்தார். “போங்கன்னு சொல்றேன்லே...போங்க..” கத்தினான்.


“வாங்க..போலாம். தம்பி கவலைப்படாதேப்பா நல்லமுறையில் பிரசவம் ஆகும்.” என்று மங்களம் சொல்லிவிட்டு கணவனை இழுத்துக் கொண்டு வந்தாள். அவளுக்கும் மனசு எனவோ போல் தான் இருந்தது. வேண்டுமென்றே செய்த செயல் இல்லை என்றாலும் அவர்கள் மேல் பழி வந்துவிட்டது. கனத்த மனதுடன் காரில் ஏறினர். வெங்கடேசன் சுத்தமாக


ஆடிப் போய்விட்டார். கவனமாக காரை செலுத்த கஷ்டப்பட்டார்.


“என்னங்க...டாக்டர் கன்பர்ம் பண்ணிட்டார்..”


“என்ன கன்பர்ம் பண்ணிட்டார்?..’


“நான் மாசமாத் தான் இருக்கேனாம். திட்டினாங்க. கையில் மூணு மாசக் குழந்தை..அதுக்குள்ளே வயத்தில் குழந்தை. என்னம்மா நீங்க? படிச்சவங்க தானேன்னு சத்தம் போட்டாங்க டாக்டர் ஜானகி..”


“சரி...என்ன பண்றது? எதிர்பாராமே நடந்துடுச்சு.”


“இவ்வளவு சீக்கிரம் கர்ப்பம் நல்லதில்லை.....உங்க ஹெல்துக்கு நல்லதில்லை


அதனாலே...வந்து வந்து..”


“அதனாலே...என்ன?”


“க..லை..ச்சி...சி..ரலாம்னு....” மென்று விழுங்கினாள்.


“அவள் சொன்னாள்ன்னு நீயும் என்கிட்டே வந்து சொல்றே? பல்லை உடைப்பேன். அவ சொன்னா இவ சொன்னான்னு ஏதாவது செஞ்சே இருக்கு


உனக்கு. நானே டென்ஷன்லே இருக்கேன். நீ வேற அபசகுனமா பேசிக்கிட்டு.


நல்லபடியா குழந்தை பிறக்கணுமேன்னு அங்கே அல்லாடிக்கிட்டு இருக்காங்க. இங்கே நீ கலச்சிரலாம்னு பேசறே...உனக்கு அறிவிருக்கா?”


என்றுமே இப்படி எல்லாம் திட்டாத கணவர் இப்படி சரமாரியாக திட்டுகிறார் என்றதும் மங்களம் அழுதுவிட்டாள். மெல்லிய குரலில் சொன்னாள்.


“நான் ஒன்னும் கலைக்கணும்னு நினைக்கலை. டாக்டர் ஜானகி சொன்னதை சொன்னேன். உங்களுக்கு கோபம் வரும்னு எனக்குத் தெரியும். அதுக்குத்தான் பயந்து மெல்ல சொன்னேன்...எனக்கு தெரியாதா குழந்தையின் அருமை!.”


“சரி சரி...வருத்தப்படாதே. நானும் ஏதோ கோபத்திலே திட்டிட்டேன். சாயங்காலம் கோவிலுக்குப் போய் அந்தம்மாவுக்கு பிரசவம் நல்ல ஆகணும்னு வேண்டிக்கறேன். எல்லாம் கடவுள் செயல்..”


வீட்டுக்கு வந்தும் கூட வெங்கடேசன் பொலம்பிக் கொண்டே தான் இருந்தார்.


“எல்லாம் என் தப்பு தான். நான் சைடு விடாததால் தான் விபத்து நடந்தது.


வயிற்றில் உள்ள உயிருக்கு ஆபத்து வந்திடுமோன்னு கலக்கமா இருக்கு.”


“அந்த பையன் மட்டும் ஒழுங்கா? வாலிப வயசு, ஒட்டத் தெரியாம கார் ஒட்டிட்டான். உங்களையே குத்தம் சொல்றான். எல்லாம் நல்லபடியா புள்ளை பிறக்கும். நாம யாருக்கும் கெடுதல் நினைக்கலை. நவீன மருத்துவ வசதி மிக்க காலத்திலேயே புள்ள பேரு பத்தி எதுக்கு பயப்படணும்? மயக்கமா இருக்கா வேறு ஒண்ணுமில்லை. மனசை போட்டு உழப்பிக்காதீங்க...நீங்க ஒழுங்காதான் ஒட்டி வந்தீங்க. ராங் சைடிலே வந்தது அவன் தப்பு. என்ன கொள்ளை போகுது...கர்ப்பிணி பெண் இருக்கும் போது இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். விடலைப் பையன்...அவன் மேலே தான் தப்பு. டோன்ட் வொர்ரி...”


மனைவி சொன்னது மனதிற்கு ஆறுதலாக இருந்தாலும் அவர் மனம் சமாதானம் அடையவில்லை. குழந்தை நல்லபடியாக பிறந்துவிட்டது என்று கேள்வி பட்டாலே போதும். வேறு ஒன்றும் வேண்டாம். என்னாகுமோ!


ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று மனசு ஆருடம் சொல்லிற்று.


ஊஞ்சல் ஆடும்...
 
Top