கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆசை நொடிகள் 10

Rithi

Moderator
Staff member
அத்தியாயம் 10

"சுதா! அந்த பொண்ணு அப்பவே நம்ம ஜீவாவை எடுத்துட்டு போச்சி.. இன்னும்.. இன்னும் ஜீவா வரல.. கொஞ்சம் போய் கூட்டிட்டு வர்றிங்களா?" வீட்டிற்கு வந்த சுதாகரிடம் கல்பனா கேட்க, எதுவுமே தெரியாதது போல அவள் பேசுவதை கேட்டுக் கொண்டான் ஜீவி.

"ம்ம்! அன்னைக்கு இதுனால தான் பிரச்சனையே. கடைசி வர ஏன் அழுதன்னு சொல்லவே இல்ல.. இதுல மறுபடியும் வேற அனுப்புனீயா?" சுதாகர் கோபம் போல கேட்க,

"இல்ல இல்ல மாமா! சந்தியா தான் ஏதோ கேக் கட் பண்ண போறதா சொல்லி வாங்கிட்டு போனா. ப்ளீஸ் போய் பாருங்களேன். அழ போறான்"

"கேக்கா? ஏன் என்ன ஃபன்க்ஷன்?" தெரியாததாய் அவன் கேட்க, சாட்சி போல ஜீவி பார்த்துக் கொண்டிருந்தான்.

"அது.. அது.." தெரியாது என்று பொய் சொல்ல மனம் வரவில்லை.. ஆனாலும் எப்படி சொல்லிவிட முடியும்? அதுவும் சுதாகரிடம்?

"சரி சரி ஏன் டென்ஷன் ஆகுற? பார்த்துட்டு வர்றேன். இல்லை வேணாம்! எனக்கு கசகசனு இருக்கு.. குளிக்கணும். டேய்! நீ மேலே போய் ஜீவாவை கூட்டிட்டு வா" ஜீவியிடம் சொல்ல,

"நானா?" என அவன் அதிர்ந்த நேரம்,

"வேண்டாம்! வேண்டாம்! அவன் வேண்டாம்" என பதறினாள் கல்பனா. ஜீவிக்கு யுவா இங்கிருப்பது தெரியக் கூடாது என்பது அவள் எண்ணம்.

"ப்ச்! ஏன் எல்லாத்துக்கும் டென்ஷன் ஆகுற? சரி நானே போறேன்" என்றவன் ஜீவியை பார்த்து கண் சிமிட்டிவிட்டே சென்றான்.

யுவா வீட்டு வாசலில் நின்ற சுதாகர் பார்வையில் அழகாய் விழுந்தது அந்த காட்சி.

தன்னையும் மீறி ஜீவாவிடம் தொலைந்திருந்த யுவா சுற்றம் மறந்து சிரிப்புடன் அவனுடன் விளையாடி அவனுக்கு கேக்கையும் ஊட்டிக் கொண்டிருக்க, அதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தாள் சந்தியா.

சுதாகர் ஒரு மௌன சிரிப்புடன் அதை பார்த்து நிற்க, சந்தியா தான் முதலில் அவனைக் கண்டாள்.

உடனே தன் ஆக்ட்டிங்கை தொடர்ந்தவள் "வாங்க லாயர் சார்! ஜீவாவை கூப்பிட வந்திங்களா? ஜீவா பையா அப்பா வந்திருக்காங்க பாரு!" என்று வேறு சொல்லி வைக்க, சட்டென சுயம் வந்து ஜீவாவை கையில் இருந்து இறக்கி இருந்தான் யுவா.

"இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே?" என்பதை போல சந்தியாவை சுதாகர் முறைக்க, அவனைப் பார்த்து கண் சிமிட்டி வைத்தாள் சந்தியா.

யுவாவிற்கு ஏதோ ஒரு உலகத்தில் இருந்து குதித்த உணர்வு. மனம் பட் பட் என அடித்துக் கொண்டது. என்ன செய்து கொண்டிருந்தேன் நான்? என நினைத்தவனுக்கு இதே ஜீவாவை வைத்து கல்பனாவை அன்று கலங்கமாய் திட்டியதும் கண்முன் வந்து போனது.

"என்ன ஃபன்க்ஷன் சந்தியா?" வாசலில் நின்றே சுதாகர் அவளிடம் கேட்க,

'இவன் எனக்கு இன்னைக்கு சமாதி கட்டாமல் போக மாட்டான்' என நினைத்துக் கொண்டாள் அவள்.

"உள்ளே வாங்க மிஸ்டர் சுதாகர்" என்ற யுவாவின் குரலை நிச்சயம் சந்தியா எதிர்பார்க்கவில்லை.

ஆனால் சுதாகர் எதிர்பார்த்தான் போலும். எதிரியாய் இருந்தாலும் வாசலில் நிற்க வைத்து பேசுவது முறை அல்லவே! யுவாவின் குணத்தை அறிய முற்பட்டான் சுதாகர்.

"யாஹ் ப்ளஷர்!" என்று அவனும் உள்ளே வர, 'இதென்ன டா வம்பா போச்சு? இன்னைக்கு ஏதோ சம்பவம் இருக்கு போலயே!' என நினைத்துக் கொண்டவள் ஒரு பிளேட்டில் கேக்கை எடுத்து சுதாகருக்கு கொடுத்தாள்.

"இன்னைக்கு யுவா பர்த்டே சார்!" என்றும் சொல்ல,

"ஓஹ்! ஹாப்பி பர்த்டே சார்!" என்று எழுந்து கை கொடுக்க, யுவாவும் அதை பிடித்துக் குலுக்கினான். ஒரு சிறு முறுவல் இருவருக்கும்.

"தூக்கு! தூக்கு!" யுவாவிடம் ஜீவா சொல்ல, சுதாகர் முன் சாதாரணமாய் அவனை தூக்கிட முடியவில்லை யுவாவிற்கு.

சுதாகரே ஜீவாவிடம் வந்துவிட்டான் கேக்குடன்.

"அங்கிள் ஆன்ட்டிக்கு வேலை இருக்கும். நாம வீட்ல போய் இந்த கேக்கை சாப்பிடலாம் ஓகே?" என்று சொல்ல, "ஓகே ப்பா!" என்றான் அவனும்.

யுவா முகத்தில் எதையும் காட்டாமல் நின்றாலும் அவன் மனதின் ஓரத்தில் என்று இல்லாமல் மனம் முழுதுமே வலி. வாழ்க்கை வலிக்க வலிக்க கொடுக்கும் அடி.

ஆன்ட்டி என்று சொல்லி கொடுத்ததில் அருகில் கொலைவெறியோடு சந்தியா நிற்க, அதை கண்டும் காணாதது போல விடைபெற்று வந்துவிட்டான் சுதாகர்.

விடைபெறும் போதும் "கேக் கட்டிங் போட்டோஸ் இருந்தால் கல்பனா நம்பர்க்கு அனுப்பி வை சந்தியா" என்று சொல்லி அவளுக்கு ஒரு ஹார்ட் அட்டாக் வர வைக்கவும் மறக்கவில்லை அவன்.

'போற போக்குல சகுனி வேலை பார்த்துட்டு போறான் பாரு' என நினைத்தவளிடம் சுதாகர் நம்பர் இருந்ததே தவிர கல்பனா நம்பர் இல்லை. ஆனால் இது தான் யுவாவிற்கு தெரியாதே!

அவர்களுடன் இவள் தொடர்ந்து பழகி தான் வருகிறாள் என ஒரு அட்டம் பாம்மை கொளுத்தி போட்டு சென்றவனை சபித்தவள் கேக்கின் நான்கில் ஒரு பகுதியை அவனுக்கு வைத்து மீதி இருந்ததுடன் சமமாய் பங்கு வைத்த பெருமையில் தன் அறைக்கு சென்று பூட்டிக் கொண்டாள்.

சூர்யாவும் அதற்கு முன்பே வீடியோ தொடர்பில் இருந்து போயிருக்க தன்னை சுற்றி இருந்த ஏதோ ஒன்றை இழந்து தனிமையில் தவிப்பதாய் இவ்வளவு நாள் இல்லாத ஒரு எண்ணத்திற்கு ஆட்பட்டான் யுவா.

அந்த தனிமை உணர்வு ஜீவா விட்டுச் சென்றது என அவனிற்கு புரியவில்லை.

கேக்கை கொறித்த கையுடன் போட்டோஸ் வீடியோ என சந்தியா சுதாகர் நம்பருக்கு அனுப்பி வைக்க "நன்றி தியா" என்ற குறுஞ்செய்தியை படித்துவிட்டு மீண்டும் கேக்குடன் ஐக்கியம் ஆனவள் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.

"டேய்! பார்த்து டா... கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடு.. இரு இரு நான் ஊட்டுறேன்..." என்ற யுவாவின் குரல் தெளிவாய் காதில் கேட்க, சுதாகர் தன் மொபைலில் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இப்போது இதயம் வெளியே குதிப்பது போல இருந்தது என்னவோ கல்பனாவிற்கு தான்.

சுதாகரிடம் கேட்கும் தைரியம் இன்றி அவனுக்கு பின் சென்று அந்த வீடியோவை பார்க்க அதில் ஜீவா யுவா கையில் வாகாய் அமர்ந்திருக்க, அவனை அப்படிக் கொஞ்சிக் கொண்டிருந்தான் யுவா புன்னகை முகமாய்.

பார்த்ததும் கண்கள் குளமாய் கண்ணீர் கட்டிவிட, திரும்பி அவளை பார்க்காமலே அதை உணர்ந்திருந்தான் சுதாகர்.

"பாரேன் கல்ப்! இந்த சிரிக்க தெரியாதவன் கூட சிரிக்குறான்.. எல்லாம் நம்ம ஜீவா சார் வேலை" அவளை பார்க்காமலே இவன் சந்தியாவின் வார்த்தைகளை கூற இல்லை இல்லை தூண்டிவிட, இவள் கண்களில் கண்ணீர் நிற்காமல் வடிந்தது.

கூடவே "இவனா சிரிக்கத் தெரியாதவன்?" என்ற எண்ணமும் சேர்ந்து அழுகை அதிகமாக அதை மறைக்கும் பொருட்டு அறைக்குள் நுழைந்து கதவை மூடிக்கொள்ள, ஒரு ஆழ்ந்த மூச்சுடன் மூடியக் கதவுகளை பார்த்தான் சுதாகர்.

இன்னும் இரு வாரங்களில் சூர்யா வருவதாக சொல்லவும் சந்தியா அவளை பற்றி சுதாகரிடம் கூறி வைத்தாள்.

சூர்யா! அண்ணனின் பாசமான தங்கை. அண்ணன் எது செய்தாலும் சரி என்று சொல்லுபவள் தான். எவ்வளவு படித்தாலும் சிலர் சொல்பேச்சு கேட்பவர்கள் தானே? அப்படித்தான் சூர்யாவும்.

அன்னை ஜானகி சொல்வதை கண்மூடி செய்வாள். அவள் அன்னைக்கு எதிராய் நின்ற ஒரு விஷயம் என்றால் அது சந்தியா யுவா கல்யாணம் தான்.

அதுவும் யுவாவிற்கு பிடிக்கவில்லை என்றது தான் காரணம். கல்பனா விஷயத்தில் யுவா சொல்லாததும் ஜானகி மறைத்ததும் சூர்யா அறியாததும் என பல இருக்க சூர்யாவை பொறுத்தவரை கல்பனா அவளுக்கு துரோகி.

தன் அண்ணனுக்கு துரோகம் செய்தவள். கல்பனாவைப் பற்றி அண்ணனும் பேசுவதில்லை தாயும் எதுவும் இப்பொழுது சொல்வதில்லை என்பதாலேயே அவள் கல்பனாவை அடியோடு மறந்திருந்தாள்.

இப்போது சூர்யா கல்பனாவை சந்தித்தால்?

மொத்தையும் சந்தியா சொல்லி முடித்து போனை வைத்துவிட சுதாகரிடம் வந்தான் ஜீவி.

"நா கிளம்புறேன் மாமா. இனி வீக்கெண்ட்க்கு வர்றேன்" அவன் சொல்ல,

"சரி டா. பத்திரமா இருந்துக்கோ. எதுவும்னா கால் பண்ணு" என்ற சுதாகரிடம்

"அக்கா விஷயத்துல நா ஏதாச்சும் பண்ணனும்னா சொல்லுங்க மாமா.. கண்டிப்பா செய்யுறேன். அக்கா நல்லாருக்கணும்"

"ம்ம் இந்த அளவு உனக்கு அறிவு வந்ததே சந்தோஷம் தான். கண்டிப்பா உன் ஹெல்ப் தேவைப்படும். அப்ப சொல்றேன்" என்றவன் யுவா தங்கைப் பற்றியும் கூறினான்.

"மாமா! அது ஒரு பிசாசு மாமா. யாரையுமே மதிக்காது. இவங்களை கூட சமாளிச்சுடலாம் ஆனால் அவ எல்லாம்" என்று கோபத்தில் பொங்க,

"ஹேய் உனக்கு அவளை தெரியுமா?" என்று கேட்டவனிடம்,

"தெரியும் தெரியும்! அக்கா கல்யாணத்து அன்னைக்கு பார்த்த ஞாபகம்"

"அடப்பாவி! ஒரே நாளுக்கா இவ்வளவு கொலைவெறி அந்த பொண்ணு மேலே? சரி சரி வரட்டும் பார்த்துக்கலாம்"

"சரி மாமா. நா போய்ட்டு வர்றேன்" என்றவன் கல்பனா, ஜீவாவிடமும் விடைப்பெற்று கிளம்பினான்.

அடுத்தடுத்த நாட்களும் கல்பனாவினை பற்றி யுவா தெரிந்து கொள்ளும்படியும் யுவாவை பற்றி கல்பனா தெரிந்து கொள்ளும்படியும் என சுதாகர் சந்தியா மாற்றி மாற்றி ஏதோ ஒன்றை செய்து வைக்க, இருபக்க பலனும் பூஜ்ஜியம் தான்.

"லாயர்! சத்தியமா முடியலை.. கல்லு கூட கரையும் ஆனால் யுவா... ம்ம்ஹ்ம்ம்" என்று தலையசைத்தவள் "அந்த பக்கம்?" என்று கேட்க,

"அவன் பொண்டாட்டி ஆச்சே! கொஞ்சம் கஷ்டம் தான்" என்று சொல்லவும் தலையில் அடித்துக் கொண்டாள்.

அந்த காபி ஷாப்பில் கூட்டம் அதிகமாகவே இருக்க, கண்ணாடியோடு அமர்ந்து இருந்த சுதாகர் அவள் செயலில் புன்னகைத்துக் கொண்டான்.

"ஆனால் யுவாக்குள்ளயும் கொஞ்சம் ஈரம் இருக்கு லாயர். ஏதோ சொல்லுவாங்களே! கல்லுக்குள் ஈரம்னு... அப்படித் தான். ஜீவாகிட்ட யுவா பேசும்போது எவ்வளவு சாஃட்டா.. எப்படி சொல்றது.. அவன் முகமே அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு பா" சந்தியா சொல்ல,

"ம்ம்! கல்ப் கூட ஒரே அழுகை சந்தியா. எனக்கு தெரியக் கூடாதுன்னு ரூம் அடைச்சுட்டு அழுறா"

"இதுங்க வெளில சொன்னால் கூட பரவாயில்லை... மனசுக்குள்ளேயே வச்சு நம்ம சுத்தல்ல விடுதுங்க" சந்தியா அலுத்துக் கொள்ள,

"வேற ஏதாவது பண்ணனும் சந்தியா" என்றான் அவன்.

"இந்த மாதிரி சின்ன பசங்க பிளான் எல்லாம் விட்டுடலாம் லாயர். நான் சொல்றதை செஞ்சா ஸ்ட்ரயிட் சிக்ஸர் தான்"

"பார்றா! என்ன பிளான் மேடம்?".

"ம்ம் சொல்றேன்! சூர்யா வரட்டும். அப்ப தான் நமக்கே ஒரு க்ளாரிஃபை கிடைக்கும். இந்த சந்தியா இறங்கினால் எந்த பிளானும் சக்ஸஸ் தான். கலக்கிடுவோம்"

"ம்ம் சரிங்க மேடம்" என்றவன் இந்த முறை மீட்டிங் என்று சந்தியாவை அழைத்தது யுவா கல்பனாவிற்காக மட்டுமா?

அப்படியென்றால் கண்ணாடிக்குள் இருந்த இந்த லாயரின் பார்வை முழுதும் சந்தியா முகத்தில் இருந்ததும் யுவா கல்பனாவிற்காக மட்டும் தான் போல!

ஆசைகள் தொடரும்..
 
Top