கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆசை நொடிகள் 12

Rithi

Moderator
Staff member
அத்தியாயம் 12

"வெல்கம் டு சிங்கார சென்னை டார்லிங்!" சூர்யாவைக் கட்டிக் கொண்டு வரவேற்றாள் சந்தியா.

"ஹாய் அண்ணி! என்ன சென்னைவாசியா மாறிட்டிங்க போல? யுவா அண்ணா கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்களா?" சீண்டினாள் சூர்யா.

சூர்யாவை பொருத்தவரை சந்தியாவிற்கு அண்ணனை கட்டி கொள்ள ஆர்வம். அண்ணாவிற்கு அது பிடிக்கவில்லை.

'உன் அண்ணா ஓகே சொல்லாத வரை தான் எனக்கு சந்தோஷம்' நினைத்துக் கொண்டவள் பெரிய கும்பிடிட்டு சூர்யாவோடு வந்து சேர்ந்தாள் லக்ஷ்மி காலனி.

கல்பனா கண்ணில் படாதவாறே சூர்யாவை அழைத்துச் சென்றாள் சந்தியா.

"அண்ணா எப்ப வருவாங்க அண்ணி?" சூர்யா கேட்டுக் கொண்டே படிகளில் ஏற, சமையல் அறையில் நின்ற கல்பனாவிற்கு நன்றாகவே கேட்டது அந்த குரல்.

நேற்று தானே சந்தேகம் கொண்டாள் இருவரும் கணவன் மனைவியாய் ஒன்றாய் பார்க்கவில்லை என்று அதை கலையவே வந்தது போல இருந்தது சூர்யாவின் குரல்.

சந்தியாவை அண்ணி என்றழைத்தவளை நினைத்து மனதில் சிரித்துக் கொண்டாள. ஒரு நாள் கூட தன்னை அண்ணியாய் ஏற்று அவள் நினைத்து பார்க்கவில்லையே என்று.

"சிறிது நேரம் சூர்யாவுடன் பேசிக் கொண்டிருந்த சந்தியா பின் அவளிடம் சொல்லிக்கொண்டு தன் அறைக்கு வந்தாள்.

வந்ததும் சுதாகருக்கு தான் அழைத்தாள். நீண்டநேர அழைப்பிற்கு பின் தான் அழைப்பை ஏற்றான் அவன்.

"தியா! முக்கியமான வேலையா இருக்கேன். ஒரு ஹால்ப் அன் ஹவர்க்கு அப்புறம் கூப்பிடுறேன் ஓகே!" அவளை பேச விடாமல் அவன் பேசி சம்மதம் கேட்க, அவனின் தியா என்றழைப்பை இன்று கண்டு கொண்டாள் சந்தியா.

அதை மனதில் மட்டும் வைத்துக் கொண்டு அடுத்த கேள்விக்கு தாவினாள்.

"லாயர் சார்க்கு அப்படி என்ன முக்கியமான வேலை ஊர்ல?"

"ப்ச்! பொண்ணு பார்க்க வந்திருக்கேன். எல்லாரும் என்னையே பார்க்குறாங்க. அப்புறமா பேசுறேன் பை" வெட்கப்பட்டு பேசுவது போல பேசி அவன் வைத்துவிட,

'பொண்ணு பார்க்கவா? அடப்பாவி! அம்மாக்கு உடம்பு சரியில்லைனு பொய் சொல்லிட்டு பொண்ணு பார்க்க போயிருக்கியா? ஆனால் வக்கீலு நீ என்னை தியான்னதும் ஒரு நிமிஷம் உன்னை தப்பா நினச்சுட்டேன். சாரி பா' தனக்குள் சொல்லிக் கொண்டவளுக்கு பெண் பார்க்கும் படலம் பற்றி அறிய ஆர்வம் இருந்தாலும் அவன் வெட்கப்பட்டு பேசியதை நினைத்து சிரித்துக் கொண்டவள் மாலை அழைத்து பேசலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.

ஆனால் அவன் வேண்டுமென்றே தான் அவ்வாறு பேசினான் என்பதை அவள் அறியவில்லை.

சுதாகர் சம்மதம் சொல்லியது தான் தாமதம் என்பதை போல அடுத்தநாள் காலையிலேயே வீட்டில் அறுபது எழுபது பேர் கூடியிருந்தனர் பெண் வீட்டிற்கு செல்ல.

பானுமதி, சிவலிங்கம் இருவரும் தயாராய் இருக்க சுதாகர் எழுந்து வந்தது என்னவோ பத்து மணிக்கு தான்.

அதுவரையும் அவனை யாரும் எழுப்ப அனுமதிக்கவில்லை பானுமதி. அவன் மனதை மாற்றிக் கொள்வதற்குள் திருமணத்தை முடித்திட வேண்டும் என்பது அவரது எண்ணம்.

"என்னம்மா காலையிலே இவ்வளவு கூட்டம்? என்னை பார்க்கவா?" பல்லை விலக்கிக் கொண்டே சாதாரணமாய் அவன் கேட்க, நெஞ்சில் கைவைத்து விட்டார் பானுமதி.

மறந்துவிட்டானா இல்லை விளையாடுகிறானா இல்லை முடிவை மாற்றிக் கொண்டானா என்று நொடியில் உலகை சுற்றி வந்தது அவர் மனம்.

"டேய்! நீ தானே இன்னைக்கு பொண்ணு பார்க்க போகலாம்னு சொன்ன? அதுக்கு தான் நம்ம சொந்தக்காரங்க எல்லாம் வந்திருக்காங்க" கண்களை கூர்மையாய் அவன்மீது வைத்து அன்னை சொல்ல,

"அட ஆமா இல்ல! மறந்தே போச்சு மா! ஒரு அஞ்சு நிமிஷம் குளிச்சிட்டு வந்துடுறேன்" என்றவன் உள்ளே சென்றதும் தான் மூச்சைவிட்டு நெஞ்சில் இருந்து கையை எடுத்தார் பானுமதி.

"இவன் சரி இல்லை டி. ஏதோ பண்றான்" சிவலிங்கம் மனைவி காதில் சொல்ல,

"சும்மா இருங்க. அவனுக்கு இருக்குற வேலைல இதை மறந்துட்டான். அதுக்கு போய் சந்தேகப்பட்டுகிட்டு.. ஒழுங்கா மாப்பிள்ளைக்கு அப்பாவா கிளம்பி நில்லுங்க" மகனை இன்று ஒரு வார்த்தை கூட பேசிவிட கூடாது என்று முடிவுடன் இருந்தவர் தன் கணவனிடம் தான் அதை காட்டிக் கொண்டிருந்தார்.

"ம்மா ரெடி! போலாமா?" பட்டு வேஷ்டி சட்டையில் அனைவரும் அவனை எதிர்பார்த்து நிற்க, அவனோ கோர்ட்டுக்கு செல்வதை போல அதே வைட் ஷர்ட்டை பேண்டின் உள்ளே மடித்துவிட்டு டிப்டாப்பாய் கிளம்பி வந்தான்.

"என்னப்பா பொண்ணு பார்க்க வேஷ்டி..." பெரியவர் ஒருவர் ஏதோ சொல்லவர,

"சித்தப்பா! நீங்க முன்னாடி போய் வண்டில ஏறுங்க" என்று அனுப்பிவிட்ட பானுமதி மகன் அருகே யாரையும் விடவில்லை.

சுதாகர் கல்பனாவிற்கு அழைத்து பேசியவன் நடப்பதை அப்படியே அவளிடம் சொல்ல, அவளுக்கு அவனை நினைத்து கஷ்டமாய் போனது.

அதுவும் பானுமதி செயல்களை அவன் சொல்லவும் ஊரில் இருந்து வந்த அந்த இறுதிநாள் மண்டையை சுற்றி வந்தது.

அன்னையை பார்த்து சிரிப்பு தான் வந்தது சுதாகருக்கு. எப்படி எதுவுமே நடவாதது போல இப்படி சாதாரணமாய் இருக்க முடிகிறது அன்னையால்? நினைக்காமல் இருக்க முடியவில்லை அவனுக்கு.

சுதாகருக்கும் கல்பனாவை போல இந்த நிமிடம் அந்த தினம் கண்முன் வந்து போனது.

"அத்தை! அத்தை! நான் தப்பு பண்ணல அத்தை.. அவங்ககிட்ட சொல்லுங்க அத்தை... நான் போய் அப்படிலாம் பண்ணுவேனா? நான் இங்கேயே இருந்துடுறேன் அத்தை.. வீட்டுக்குள்ள கூட வரமாட்டேன்.. ப்ளீஸ் அத்தை!" கல்பனா பானுமதி காலில் கிடந்தாள் மூன்று மாத கர்ப்பிணியாய்.

"குடும்ப மானத்தையே வாங்கிட்டு வந்து என் மகனை ஏமாத்தி ஒரு வாரமா இங்கே தங்கியிருந்திருக்க.. உனக்கு எவ்வளவு திமிர் இருக்கணும்... நீயெல்லாம் ஒரு பொண்ணு... நீயா இந்த வீட்டைவிட்டு போய்டு.. கழுத்தை புடிச்சு தள்ளுறதுக்கு முன்ன போடி வெளில ராசி கெட்டவளே" பானுமதி கால்களால் அவளை உதறிட அப்போது தான் வீட்டிற்குள் வந்திருந்தான் சுதாகர்.

"ம்ம்ம்மா! என்ன பண்றீங்க நீங்க?" கோபத்தில் வார்த்தைகளை ஆத்திரமாய் தான் விட்டான் அவன்.

"வா டா... இவ என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்கா தெரியுமா?" பானுமதி.

"இல்லை மாமா! நான் எந்த தப்பும் பண்ணல மாமா.. என்னை நம்புங்க மாமா.. அத்தைகிட்ட சொல்லுங்க மாமா" அவன் சட்டையை பிடித்துக் கொண்டு கதறினாள் கல்பனா.

"கல்ப்! என்ன நீ? இப்ப ஏன் இப்படி அழுற? இந்த மாதிரி நேரதுல அழலாமா? டாக்டர் என்ன சொன்னாங்க நீயாபகம் இருக்குல்ல?"

தன் குடும்பத்தில் தன்மேல் பாசம் கொண்ட ஒரே ஜீவன். கொஞ்சமும் அன்னை பேச்சை சட்டை செய்யாமல் அவள் கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தான் சுதாகர்.

"டேய் டேய்! அறிவு கெட்டவனே! அவ உன்னை கைக்குள்ள போட்டுக்க பார்க்குறா.."

"ஷட்டப் மா! நீங்கல்லாம்... ஆமாம் கைக்குள்ள தான் போட்டுகிட்டா.. இவளை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன். இவ இங்கே இருந்தால் தானே உங்களுக்கு பிரச்சனை?"

முதலில் அவன் பேசியதை கவனியாமல் "ஆமா அவ தான் பிரச்சனை.. அவ மட்டும் தான் பிரச்சனை" என்று கோபத்தில் கத்திவிட,

"இப்பவே இந்த நிமிஷமே போயிடுறோம். சந்தோஷமா இருங்க" என்றவன் அன்னை தந்தை மட்டும் அல்ல கல்பனாவின் பேச்சையுமே கேட்கவில்லை

அங்கிருந்து நேராய் சுந்தரத்திடம் தான் அடைக்கலம் புகுந்திருந்தனர்.

நினைத்து பார்த்த சுதாகர் ஒரு தலைக் குலுக்களுடன் வாசலுக்கு வர, அங்கே வருகை தந்தனர் ஜீவிதனின் அன்னை தந்தையான வசந்தா செல்லதுரை. சிவலிங்கத்தின் தங்கை தான் வசந்தா.

"எப்படி இருக்க சுதா? எவ்வளவு நாள் ஆச்சு உன்னை பார்த்து? இப்பவாச்சும் அம்மா அப்பா பேச்சை கேட்கணும்னு தோணிச்சே! எங்கே உன் வாழ்க்கைலையும் மண் அள்ளி போட்டுடுவாளோனு நினச்சேன்" என்ற வசந்தா மேல் அவ்வளவு கோபம்.

கண்களை இறுக மூடித் திறந்தவன் எதுவும் சொல்லாமல் அவர்களைத் தாண்டி வெளியே சென்றான்.

சாந்தி பானுமதிக்கு தூரத்து சொந்தம். வசதியும் கூட.. கேட்டதெல்லாம் நிச்சயம் கிடைக்கும். அதனாலேயே மகனுக்கு சாந்தியின் மகளை கேட்டு கடந்த இரண்டு வருடங்களாக வேறு மாப்பிள்ளையையும் பார்க்க விடாமல் வைத்திருக்கிறார் பானுமதி.

சொந்தம் என்ற ஒரே காரணத்திற்காக தான் மகனும் இப்போது வருகிறான் என்பதை அவர் அறியவில்லை. இங்கு தான் பேசினால் அடுத்து வெளியில் கூட பெண் பார்க்க அழைக்க மாட்டார்கள் என்பது சுதாகருக்கு உறுதி.

சொந்தங்கள் அனைத்தும் வேனில் ஏறிவிட மகனுடன் பெற்றோரும் கல்பனாவின் குடும்பமும் காரில் ஏறிக் கொண்டது.

ஒரு வார்த்தை கூட அவர்களிடம் பேசிடவில்லை சுதாகர். அதை கேட்பதற்கான நேரம் இதுவல்ல என அமைதியாய் வந்தார் பானுமதி.

பக்கத்து ஊரில் இருக்கும் சாந்தியின் வீட்டை இருபது நிமிடங்களில் அடைந்தவர்களை வாசலிலேயே வரவேற்றனர் சாந்தியும் அவரது கணவரும்.

மரியாதைக்காய் புன்னகை செய்த சுதாகர் வீட்டை கண்களால் சுற்றிவர, சந்தியாவின் குரல் காதில் கேட்டது 'வீட்டை விலைக்கு வாங்க போறியா என்ன?' என்று.

அருகில் இருந்திருந்தால் நிச்சயம் அப்படி தான் கேட்டிருப்பாள். நினைத்தவன் சிரித்துக் கொண்டே உள்ளே சென்று அமர, பானுமதி அதை கண்டவர் அவனுக்கு இந்த திருமணத்தில் முழு சம்மதம் என்பதாய் நினைத்து பூரித்துக் கொண்டார்.

அப்போது தான் சந்தியாவும் சரியாய் அவனுக்கு அழைத்திருந்தாள். "வேவ்லென்த் சரியா தான் போய்ட்டு இருக்கு போலயே" என்று நினைத்து மீண்டும் சிரித்தவன் உண்மையை கிண்டலாய் அவளிடம் சொல்லி போனை அனைத்திருந்தான்.

"பொண்ணை கூட்டிட்டு வாங்க" பெரியவர் சொல்ல அழைத்து வரப்பட்டாள் சாந்தியின் மகள் ரஞ்சனா.

அனைவருக்கும் ரஞ்சனா காபி கொடுக்கும் போதும் அவனும் ஒன்றை எடுத்துக் கொண்டானே தவிர போனை குனிந்து பார்த்துக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து அவளை பார்த்தான் இல்லை.

அதையுமே அனைவரும் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர்.

மாப்பிள்ளைக்கு சம்மதம் தானே? அதே பெரியவர் கேட்க, மகனுக்கு முன் "அவனுக்கு முழு சம்மதம்" என ஆஜர் ஆனார் பானுமதி.

"பொண்ணுக்கு புடிச்சிருக்கா மா?" என்கின்ற கேள்விக்கும் சாந்தியே "அவளுக்கும் முழு சம்மதம்" என்றார்.

"அப்ப பூ வச்சிடலாம்ல? நிச்சயம் ஒரு நாள் வச்சுக்கலாம். ஆவணி மாசத்துல கல்யாணத்தை வச்சுக்கலாம்" பெரியவர் அடுத்தடுத்த நிகழ்வுகளை உறுதி செய்து கொண்டிருக்க,

"பொண்ணு வீட்டுல எல்லாம் சொல்லிட்டிங்க தானே?" என்று மங்களகரமாய் ஆரம்பித்து வைத்தான் சுதாகர்.

ஆசை தொடரும்..
 
Top