கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆசை நொடிகள் 25

Rithi

Moderator
Staff member
அத்தியாயம் 25

"யாரு டா நீ? ஏன் என்னை பார்த்தாலே இவ்வளவு எக்ஸைட் ஆகுற? அதைவிட உன்னை பார்த்தாலே எனக்கு என்னென்னவோ தோணுது... உனக்கும் எனக்கும் சம்மந்தம் இருக்கா? வேணாம் டா இல்லைனு சொல்லிடு... உன்னை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒரு பீல் வருது. ஆனா அந்த பீல் எனக்கு இன்னும் பயமா இருக்கு டா"

சூர்யாவை சில நிமிடங்கள் தேடிய யுவா அவளை காணாது குழம்பிய நேரம் ஜீவா மீண்டும் தனக்குள் கொண்டு வந்தான் யுவாவை.

"யுவா" என்று அழைத்ததோடு ஜீவா இழுத்ததும் அவன் முகமருகில் யுவா செல்லவும் அவன் கன்னத்தில் ஜீவா முத்தம் வைத்து முகம் பார்த்து சிரிக்க அவ்வளவு தான் அங்கேயே முழுதாய் தொலைந்துவிட்டான் யுவா.

தயங்கி மென்று விழுங்கி ஒவ்வொரு படியாய் பயந்து எறிய கல்பனா பார்த்ததும் இந்த காட்சியை தான். பார்த்தவள் அப்படியே நின்றுவிட கண்களில் வழியும் கண்ணீரையும் அப்படியே விட்டுவிட்டாள்.

அதன்பின் தான் யுவா ஜீவாவிடம் பேச ஆரம்பித்திருந்தான்.

நிஜமாகவே பயந்து தான் போயிருந்தான் யுவா. கல்பனாவை போல இருக்கும் ஜீவா... யுவாவை கண்டு ஏன் அவ்வளவு மகிழ்ச்சி அடைய வேண்டும்? குழந்தைகள் ஒருவரை பார்த்ததும் சிரிப்பது என்னவோ இயற்கை தான். ஆனாலும் ஜீவாவின் முகத்தில் தோன்றிடும் வர்ண ஜாலங்களில் இவனுமே அல்லவா வேறு உலகத்திற்கு சென்று வருகிறான். யோசித்தால் அவனுக்கு பதில் கிடைக்காமல் போகுமா என்ன? அந்த பதில் தான் அவனின் பயமே!

அந்த பயத்தை ஜீவாவிடமே கூறிவிட்டு இவன் கண்மூடி மூச்சு விட வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தவளிடம் இருந்து ஒரு பெரும் கேவல் வெளிவந்து அவளிருப்பதையும் காட்டிக் கொடுத்தது.

கண்களை திறந்து பார்த்தவனும் அவளை பார்த்தது பார்த்தபடியே தான் இருந்தான்.

அதற்கு மேல் அங்கு எதுவுமே நடக்கவில்லை. ஜீவாவின் மழலை பேச்சு மட்டுமே கேட்க அழுதபடி கல்பனாவும் ஏதேதோ எண்ணங்களில் அவளை பார்த்தபடி யுவாவும்.

"வக்கீலு சும்மா தானே சொல்ற?" காலனி உள்ளே வந்த பின்பும் காரினுள் இருந்தே சந்தியா சந்தேகமாய் கேட்க,

"ஹேய் என்ன நீ? எதுல விளையாடுறதுனு இல்லையா? அதுவும் நானெல்லாம் பொய்யே சொல்ல மாட்டேன்.. நிஜமாவே நான் லவ் பண்ற அந்த அன்லக்கி கேர்ள் யூ தான்" இன்னும் உண்மையை அவள் பாணியிலே பேசிக் கொண்டிருந்தான் சுதாகர்.

"இந்த விஷயம் மட்டும் வித்தார்த்துக்கு தெரிஞ்சது என்னை கூண்டுக்குள்ள எல்லாம் அடைக்க மாட்டாரு... ஸ்ட்ரையிட்டா பரலோகம் தான்..." அவன் சொன்னதை உள்வாங்கி யோசிக்கவெல்லாம் இல்லை சந்தியா.

அவன் சொன்னதுமே இவளின் தந்தை நினைவு தான் வந்தது.

"அது சரி! அப்பாக்கு கூட அவ்வளவு தான் மரியாதையா? அதெல்லாம் அப்புறம் யோசிக்கலாம்.. நீ என்ன நினைக்குற? ஐ மீன்... எப்படியும் யாரையாவது கல்யாணம் பண்ண தானே போற? அந்த யாரோவா என்னை நினைச்சு பாரு.. ஓகேன்னா கல்யாணம் பண்ணிக்கலாம்"

"யோவ்! எதனா சொல்லிட போறேன்... கல்யாணம் புடிக்காம தான் ஊரை விட்டே ஓடி வந்தேன்" சந்தியா சொல்ல,

"ஹை! நடிக்காத தியா.. உனக்கு யுவாவை கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல.. அதுனால பொய் சொல்லி ஓடி வந்த... ஏன் உன்னை நீயே பெரிய தைரியசாலினு ஏமாத்திக்குற?" அவன் கேட்க,

"ஆமால்ல! ச்ச!" என தலையில் தட்டிக் கொண்டவள் "என் அப்பா எவ்வளவு பெரிய அப்பாடக்கர்னு உனக்கு தெரியாது வக்கீலு.. அவருக்கு மட்டும் விஷயம் தெரிஞ்சுது...." சந்தியா இன்னும் இழுக்க,

"உளராத தியா! முதல்ல நீ என்ன நினைக்குறனு யோசிச்சு சொல்லு... அப்புறம் சித்தார்த், வித்தார்த் எல்லாம் என்ன சொல்வாங்கனு யோசிக்கலாம்" என்றவன் அதற்கு மேல் அவளை பேச விடாமல் யோசிக்கவிட்டு வண்டியை விட்டு இறங்கிவிட்டான்.

"சரி நீ போய் அந்த உம்முனா மூஞ்சி என்ன பண்ணுதுன்னு பாரு... நான் மேடைமை சமாளிக்கிறேன்" என்றவன் முன்னே செல்ல,

'இப்ப இவன் ப்ரொபோஸ் பண்ணினான் தானே? இல்லையோ? கனவா இருக்குமா?' என நொடிக்குள் அவளை குழப்பிவிட்டு சென்றுவிட்டான் அவன்.

இவள் யோசித்து படியேறி வாசலை அடைந்தபோது அங்கே அமைதியாய் யுவா கல்பனாவோடு ஜீவாவும் இருந்தான். இன்னும் ஜீவா கல்பனாவிடம் வராமல் யுவா கைக்குள் தான் இருக்கிறான்.

நொடியில் சுதாரித்தவள் அந்த நொடி கூட யோசிக்காது இருவரும் பார்க்காதவாறு வேகமாய் இறங்கி சுதாகர் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினாள்.

"சொல்லு தியா! என்னாச்சு? விரட்டி விட்டுட்டானா? கல்பனாவை வேற காணும்" சுதாகர்.

"அய்யோ வக்கீலு! அண்ணலும் நோக்கி அவளும் நோக்கினு மேல ஒரு சீன் நடக்குது.."

"ஓஹ் ரெண்டு பேரும் மேல தான் இருக்காங்களா இன்னும்... சரி நீ போய் பேசு"

"எனக்கு என்ன வேண்டுதலா? இன்னும் அஞ்சு நிமிஷத்துல அந்த எலி அண்ணா அண்ணானு அங்க நடந்த கதைய சொல்ல ஓடி வரும்... அது போய் பேசி தீர்த்துக்கட்டும்" என்றாள் சந்தியா.

"ஹ்ம்ம் அதுவும் சரி தான்.. பட் அதுக்குள்ள யுவா எதாவது கத்தி இவ அழுதுட்டு ஓடி வந்துட போறா. ஸ்ட்ரையிட்டா பேசி பார்க்கலாம் வா.." என்றவன் முன்னே படியேற,

"என்ன தைரியம் பாரேன்! நீ போ நான் இங்கேயே இருக்கேன்" என கைகட்டி சந்தியா நின்றுவிட அவளை வற்புறுத்தாது இவன் மட்டும் சென்றான்.

"கல்ப் இங்கே என்ன பண்ற?" கல்பனாவின் அழுத முகத்தையும் யுவாவின் வெறிச்சோடிய பார்வையையும் கண்டும் காணாமல் சுதாகர் கேட்க, ஜீவாவைப் பார்த்தாள் கல்பனா.

சுதாகர் சத்தம் கேட்டதும் இருக்கும் கொஞ்ச பற்களையும் காட்டி அவனிடம் ஓடி வர முயற்சித்தான் ஜீவா. யுவா விட்டால் தானே?

"இங்கே என்னடா பண்ற பட்டுக்குட்டி?" என சுதாகர் ஜீவாவிடம் செல்லவும் "அண்ணா!" என ஓடி வந்தாள் சூர்யா. அவள் பின்னே சந்தியா.

வந்தவள் வாசலிலேயே கல்பனாவை பார்த்து அதிர்ந்து முறைத்து அழுது அண்ணனிடம் வர,

"தோ டா! பேச வேண்டிய ரெண்டும் வாய திறக்க மாட்டுது.. ஜானகி மக மட்டும் என்ன வரத்து வருது பாரேன்" நினைத்து ஓரமாய் ஒதுங்கி ஒன்றும் தெரியாதவளாய் நின்று கொண்டாள் சந்தியா.

"ண்ணா! இந்த சுதாகரும் சந்தியாவும் சேர்ந்து உனக்கு எதிரா திட்டம் போடுறாங்க.. ஏமாந்துடாத ண்ணா! எல்லாமே கூட்டு களவாணிங்க" சூர்யா சொல்லவும் கண்களை சுருக்கி புரியாமல் யுவா விழிக்க,

"குட்டச்சி போட்டுக் கொடுத்துட்டா... இன்னைக்கு நைட்டு தெருவுல தான் அலையனும் போலயே சந்தியா!" தனக்குள் பேசும் வேலையை அவள் தொடர,

"உன் அண்ணாக்கு எதிரா திட்டம் போட்டது அவனை ஏமாத்த இல்ல... அவனுக்கு நல்லது செய்ய தான்.." சுதாகர் அமைதியாய் எடுத்து சொல்ல,

"மாமா என்ன சொல்றிங்க?" வெடித்தாள் கல்பனா.

"உன்கிட்ட நான் அப்புறம் பேசுறேன் கல்ப். ப்ளீஸ்" என்றவன் சூர்யா பக்கம் திரும்பவும் யுவாவோடு ஒட்டி நின்ற குழந்தையை பார்த்த சூர்யா,

"ஏமாத்துறாங்க ண்ணா! நீ ஏன் லண்டன்லேர்ந்து இங்கே வந்த? உன்னை மறுபடியும் இல்லாமல் ஆக்க பாக்குறாங்க.. என்கிட்டயே உன்னை பத்தி சொல்றாங்க.. அய்யோ!" என சூர்யா அழ, சந்தியாவிற்கு அவ்வளவு கோபம் வந்தது. ஆனாலும் பல்லைக் கடித்து அமைதியாய் நின்றாள்.

அப்பா முன் பேச எவ்வளவு பயமோ அதே போல தான் உர் என சுற்றி வரும் யுவா முன் சத்தமாய் பேசவும் பயம். ஏற்கனவே அவன் கை ஓங்கி நூலிழையில் தப்பித்த அனுபவத்தில் மனம் ஆறாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சந்தியா.

"என்ன சூர்யா இப்படி பேசுற.. நான் சொன்னதுல ஒரு வார்த்தை கூடவா உனக்கு புரியல? உன் அண்ணா வாழ்க்கையை அழிக்க ஒன்னும் நான் வர்ல.. என் கல்பனா நல்லா இருக்கணும்னு தான் உங்களை தேடி வந்தேன்.." சுதாகர் சந்தியாவை உள்ளே இழுக்காமல் பேச,

"மாமா! நீ என்ன பண்ணிட்டு இருக்குற? நான் கேட்டேனா? நான் உன்கிட்ட கேட்டேனா?" என கல்பனாவும் கத்திவிட,

"என் அண்ணா முன்னாடியே ட்ராமா போடுறிங்களா?" என்றவளை அவ்வளவு எரிச்சலாய் பார்த்து நின்றாள் சந்தியா.

"ண்ணா! இவங்க பேச்சை எல்லாம் கேட்காத! கிளம்பு ஊருக்கு போலாம்.. நான் அம்மாகிட்ட சொல்லி இவங்களை பார்த்துக்குறேன்... உங்களை எல்லாம்..." என்ற சூர்யா சந்தியாவை பார்த்து இன்னும் கோபம் கொண்டவள்

"உன்னையும் சேர்த்து தான் சொல்றேன்.. சும்மா விட மாட்டேன். வா ண்ணா போலாம்.." என யுவா கையைப் பிடிக்க,

"சூர்யா! உன் அண்ணாக்கு மட்டும் பாதிப்பு இல்ல.. எங்க கல்பனாவும் பாதிக்கப்பட்டிருக்கா! அதுனால தான் பொறுமையா பேசிட்டு இருக்கேன்.. தப்பு பண்ணிட்டேன்.. தியா பேச்சை கேட்டு உன்னை வச்சு காயை நகர்த்தி பெரிய தப்பு பண்ணிட்டேன்" சுதாகர் கோபமாய் இருந்த போதும் அமைதியாய் அழுத்தமாய் சொல்ல,

"அடப்பாவி! எவ்வளவு நேக்கா நான் தான் காரணம்னு போட்டு கொடுத்துட்டான்... போச்சி... இன்னைக்கு இவங்க பிரச்சனை முடியுதோ இல்லையோ... சந்தியாக்கு வீதில சனி சந்தோசமா ஆடிட்டு இருக்கு" சந்தியா சுதாகரை முறைத்து நினைத்து நின்றாள்.

"சூர்யா! நான் உன்கிட்ட என்ன சொன்னேன்? இதுக்காகவா ஊர்லேருந்து வந்த? ட்ராமாவெல்லாம் நம்புற பழைய யுவா எப்பவோ செத்து போய்ட்டான்" - யுவா.

"யோ! என்னயா ட்ராமா பண்ணாங்க? உன் வீட்ல என்ன பிரச்சனை? ஏன் கல்பனா வீட்டை விட்டு வந்தா? எதாவது தெரியுமா உனக்கு? இதுநாள் வரை இதோ நிக்கிறாளே! வாயை திறந்து இது தான் என் பிரச்சனை... இவன் தான் என் புருஷன்னு ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்லல.. இன்னும் ஏன் உன்கிட்ட நான் நடிக்கணும்.. கல்ப் என் அத்தை பொண்ணு தான்.. அவளுக்கு காவலா மட்டும் தான் நான் இருக்கேன்.. எப்பவும் இருப்பேன்.. சூர்யாக்கு தெரியாம இருக்கலாம்.. இவனுக்கு ரெண்டு வயசு ஆக போகுது... இப்ப சொல்லு இவன் யார் குழந்தை? இப்ப பேசு.. இப்ப நீ பேசி தான் ஆகணும்.." எந்த பிரச்சனையும் செய்யாமல் அமைதியாய் பேசி முடிக்கவெல்லாம் இந்த சூர்யா யுவராஜ் ஒத்து வரமாட்டார்கள் என புரியவே இவ்வளவு நாள் ஆகியிருந்தது சுதாகருக்கு.

அவ்வளவு தான்... சந்தேகம் தீர்ந்தது தானே? இதை தானே யுவா நினைத்து மருகி இருந்தான்.. கூடவே கல்பனா இன்னும் கல்பனா யுவராஜ் தான்.

ஆனாலும் அவ்வளவு தானா? இதற்காக தானா கல்பனாவை தேடாமல் வீட்டிற்கு செல்லாமல் ஊரை மாற்றி யாரும் இல்லாத் தனிமையில் இவன் வாழ்ந்து வருகிறான்? அம்மா மேல் இருக்கும் அதே கோபம் கல்பனா மேலும் இருக்கிறது தானே அவனுக்கு?..

அதுவும் ஜீவா யுவராஜ் என்ற அடையாளத்தை அல்லவா அவள் கையில் வளர்த்து வைத்திருக்கிறாள்? அதை கூட மறைத்திருக்கிறாள் தானே?

ஆசை தொடரும்..
 
Top