கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆசை நொடிகள் 26

Rithi

Moderator
Staff member
அத்தியாயம் 26

"கல்ப்! போதும் இத்தோட எல்லாத்தையும் நிறுத்திக்குறேன். யுவா இன்னும் யுவா தான்.. நீ நினைக்குற மாதிரி சந்தியாக்கும் யுவாக்கும் கல்யாணம் எல்லாம் ஆகல.. தியா இங்கே வந்தது அச்சிடேன்ட்லி நடந்தது தான்.. இப்ப சொல்லு.. உன் முடிவை சொல்லு.. உனக்கு யுவா வேணுமா? இல்ல வேண்டாம்னு நீ சொன்னாலும் நான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன்" யுவாவிடம் சொல்லிய அதே வேகத்தில் கல்பனாவிடம் உண்மையை சொல்லியிருந்தான் சுதாகர்.

'அடப்பாவி! அம்புட்டு உண்மையையும் உடைச்சுட்டானே! இதெல்லாம் நான் சொல்லி தான் தெரியும்னு என்னை இன்னைக்கு கைமா பண்ண போறாங்க' குடும்ப விஷயத்தில் தலையிடாமல் ஓரமாய் நின்ற சந்தியாவிற்கு உதறல் தான்.

கல்பனாவிற்கும் யுவா எந்த எக்ஸ்ட்ரீம் அதிர்ச்சியில் நின்றானோ அதே அதிர்ச்சி தான். என்ன! யுவா மனதில் துளியும் மாற்றம் இல்லை ஒன்றை தவிர ஆனால் கல்பனாவிற்கு அதிர்ச்சியோடு சிறு சந்தோஷமும் இருந்ததோ!

சூர்யா அங்கே அதற்கு மேல் நடப்பதை பார்க்க பிடிக்காமல் உடனே தன் மொபைலை கையில் எடுக்க வேகமாய் அதை பறித்தது யுவாவின் கைகள்.

சூர்யாவை முறைத்தவன் சுதாகர் பக்கம் திரும்பினான். "இப்ப என்ன எதிர்பாக்குறீங்க சுதாகர்? எனக்கு தேவை இல்லாத ஒரு உண்மையை தெரிஞ்சுக்கிட்டேன்.. அண்ட் என்னோட உயிர் என்கிட்ட வந்துடுச்சு.. அது போதும் எனக்கு.. ப்ளீஸ் நீங்க போலாம்"

ஜீவாவின் கைகளை இறுகப் பற்றியபடி அமர்த்தலாய் கூறிய யுவாவின் பேச்சில் அதிர்ந்துவிட்டாள் கல்பனா.

இதுவரையும் கூட அவளிடம் அவன் ஒரு வார்த்தை பேசவில்லை தானே? இப்போது அவன் கூறிய உயிர் இவளின் உயிரான ஜீவாவை என்னும்போது கண்களைக் கட்டிக் கொண்டு வந்தது கல்பனாவிற்கு.

யுவாவின் இப்படி ஒரு பதிலை அங்கிருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை என்பதை போன்ற முகபாவம். அதிலும் அண்ணன் ஜீவாவை பிடித்திருந்த பிடியே உண்மையை சொல்ல அதிலேயே பேச்சிழந்து நின்றுவிட்டாள் சூர்யா.

அங்கே முதலில் சுதாரித்ததும் சுதாகர் தான்.

"நான் இவ்வளவு சொல்லியும் உன்னால கல்பனாவை புரிஞ்சுக்க முடியலையா யுவா?" என்ற சுதாகரின் கேள்வியில் மரியாதை எல்லாம் தொலைந்து போயிருந்தது.

"இல்ல நீயும் மத்தவங்க பேச்சை நம்புறியா? எதுவா இருந்தாலும் இப்பவே சொல்லிடு.. கல்பனாக்கு மட்டும் இல்ல உனக்குமே இத்தனை பிரிவு தேவை இல்லாத வலி தான்.. ஆனா இவளுக்கு இருக்குற காரணத்தை உன்னால புரிஞ்சிக்க முடியும்னு தான் பேசிட்டு இருக்கேன்.. இல்ல உனக்கு வேண்டாம்னா அவ சம்பந்தப்பட்ட எதையும் நீ கேட்க கூடாது"

எதையும் என்ற போது சுதாகர் பார்வை ஜீவாவை தொட்டு மீண்டது.

"ஹோட்டல்ல உன்கிட்ட கல்பனாவை மயக்கத்துல போட்டுட்டு போனது அவளோட சித்தி.. எல்லாரும் கைவிட்டு அவ சித்தியும் விரட்டி விட்டு என்கிட்ட வந்து நின்னு நான் அவளுக்கு உதவியா நின்னதை பொருக்க முடியாமல் அந்த அம்மாவே எங்க முன்னாடி அந்த கேவலத்தை சொல்லுச்சு.. அதுக்கு என் அம்மா சப்போர்ட் வேற! அந்த நிமிஷம்.. அந்த நிமிஷம் தான் எல்லாரையும் தூக்கிப் போட்டு கல்பனாக்காக வந்தேன்.. உனக்கு அப்படி ஒரு நொடி கூட தோணலையா யுவா? அவ உன் மனைவி.. அவ மேலயே தப்பிருந்தாலும் அவக்கிட்ட ஒரு வார்த்தை நீ கேட்டியா?"

சுதாகர் கேட்க கேட்க கைகளை இறுக மூடி தன் கோபத்தை அடக்கி நின்றான் யுவா.

"உயிர்! அந்த உயிர் வேணும் ஆனா அதுக்கு காரணமான இவ உனக்கு வேண்டாமா? அவ என்ன தப்பு பண்ணினான்னு ஒன்னு சொல்லு பார்க்கலாம்.. உன் அம்மா, அவ சித்தி, என் அம்மான்னு எல்லாரும் அவ வாழ்க்கைல விளையாடி இருக்காங்க.. ஈஸியா தூக்கி போட்ட உனக்கும் அவங்களுக்கும் என்ன வித்யாசம்?"

யுவா வாயை திறக்க வைக்கவே அவ்வளவு பேசினான் சுதாகர். அவன் பேச்சு ஒவ்வொன்றும் நியாயமானதும் கூட. ஆனாலும் அந்த பிரபல வக்கீல் சுதாகரும் மறந்த விஷயம் ஒன்று உள்ளது.

நாணயத்துக்கு இரண்டு பக்கம் இருப்பது போல கல்பனா பக்கம் பேசிய சுதாகர் யுவா பக்கம் இருக்கும் நியாயத்தை மறந்து போயிருந்தான். அவன் மட்டும் அல்ல.. இங்கே இருப்பவர்களோடு யுவா அன்னையும் மகனை பற்றி துளியும் யோசிக்கவில்லையே!

"இவ்வளவுக்கு அப்புறமும் நீங்க ரெண்டு பேரும் உங்களோட இதே முடிவுல தெளிவா இருந்திங்கன்னா..." என்ற சுதாகர் திரும்பி தியாவை ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்துவிட்டு மீண்டும் இவர்கள் பக்கம் திரும்பினான்.

"நானே கல்பனாவை கல்யாணம் பண்ணி அவளை நானே பாதுகாப்பா பார்த்துப்பேன்" திருமணம் செய்து வாழ்வேன் என்று சொல்லாமல் பாதுகாப்பாய் வைத்து கொள்வேன் என்றதிலேயே சுதாகரின் பரிசுத்த அன்பு புரிந்தது அங்கிருந்தவர்களுக்கு.

இப்போது தான் கொஞ்சம் யோசிக்கவும் ஆரம்பித்திருந்தாளோ சூர்யா.. அவளும் அமைதியாய் நின்றது அப்படி தான் தோன்றியது சந்தியாவிற்கு.

சுதாகர் கூறியதை கேட்ட சந்தியாவிற்கு கொஞ்சம் சிலிர்ப்பு வந்து அடங்கியது உண்மையே! கல்பனாவை திருமணம் செய்து கொள் என்று இவள் சொல்லிய போது யுவாவை பார்ப்பதற்கு முன்னால் எப்படியோ இப்போது என்னால் அப்படி நினைக்க முடியாது என்றவன் பேச்சும் இன்று அவளை திருமணம் செய்து பாதுகாப்பேன் என்றவன் பேச்சும் சூழ்நிலையால் என்றாலும் அன்று அவனுக்குள் இருந்த குழப்பம் இன்று இருக்கும் சூழ்நிலை என எல்லாம் புரிய, கூடவே அவனின் அந்த ஆழ்ந்த பார்வை அவளுள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

"ப்ளீஸ் இப்பவாச்சும் உங்க மனசுல இருக்குறதை சொல்லுங்க.. வேற எதுவும் எங்களுக்கு தெரிய வேண்டாம்" என கும்பிட்டு நின்றான் சுதாகர்.

"அண்ணா" என சூர்யா யுவாவின் கைகளைப் பிடிக்க, யுவா பிடி நழுவியதில் சுதாகரிடம் ஓடி இருந்தான் ஜீவா.

அவனையே வைத்தக் கண் எடுக்காமல் பார்த்தான் யுவா.

"எனக்குன்னு யாராவது எதாவது பேச சான்ஸ் கொடுத்தாங்களா? இல்ல எனக்குன்னு பேச தான் யாராவது இருக்காங்களா?" இறுகிய முகமும் அதை தாடியில் மறைக்கும் விதமுமாய் இருப்பவன் கேட்ட கேள்வியில் அனைவரும் யுவாவின் பக்கம் திரும்ப, நிலம் நோக்கி முகம் தாழ்த்தி அழுது கொண்டிருந்த கல்பனாவும் மெல்ல அவன் முகம் பார்த்தாள்.

"ண்ணா!" இப்போதும் அவன் அருகே சூர்யா மட்டுமே!

"இவளுக்கு இவ்வளவு பேசுற சுதாகர்ன்ற லாயர்க்கு என் பக்க நியாயம் என்ன தெரியும்?" கண்களை பார்த்து யுவா கேட்க, ஒரு நிமிடம் தடுமாறித் தான் போனான் சுதாகர்.

"இப்ப பேசு யுவா! உன் மனசுல இருக்குறதை சொல்லு" சந்தியா.

"என்ன சொல்லணும்? மூணு மாசம் லண்டன்லேர்ந்துட்டு அதுவும் லண்டன் பார்ட்னர்ஷிப்ப முழுசா உதறிட்டு திரும்பி ஒருத்தியை பார்க்க ஆசையா வந்தேனே அதையா? இல்ல அவ உன்னைவிட்டு இன்னொருத்தன் கூட போய்ட்டான்னு சொன்ன அம்மாவை ஒரு மகனா அந்த நிமிஷமே என்ன கேட்கணுமோ கேட்டு இனி அம்மாவே இல்லைனு பிரிஞ்சு போனேனே அதையா? எதை சொல்லணும்?"

யுவாவின் பேச்சைக் கேட்டு பிடித்திருந்த கைகள் தன்னால் நீங்கிக் கொண்டது சூர்யாவிற்கு.

தான் அனுப்பிய மெயில் மூலம் தான் யுவாவிற்கு உண்மை தெரியும் என நினைத்த சந்தியாவும் அதிர்ந்து நிற்க, பேசும் மொழியை மறந்து உறைந்து நின்றது தான் கல்பனா.

உண்மைகளை வெளிக்கொணர எந்த உணர்ச்சியும் காட்டாது நின்றான் சசுதாகர்.

"அண்ணா நீ தப்பா புரிஞ்சுட்டு பேசுற! அம்மா பொய் சொல்லல" அன்னையை தவிர உலகம் அறியாத சூர்யா கூற, உள்ளே நுழைந்தாள் சந்தியா.

"சூர்யா ப்ளீஸ்! இதுக்கு மேல குழப்பம் பண்ணாத! உன் அம்மா எது பண்ணாலும் உனக்கு சரியா இருக்கலாம்.. ஆனா ஒரு ஹஸ்பண்ட்க்கு தன் வைஃப் பத்தி தெரியாமல் இருக்காது.. யுவா அந்த கதையை எல்லாம் நம்பல.. அது எனக்கு முன்னவே தெரியும்..ஆனா ஏன் கல்பனா அக்காவை தேடி வர்லனு தான் எனக்கு தெரியாது.. சோ யுவாவை பேச விடு" என சொல்ல, குழப்பமாய் நின்றது சூர்யா மட்டுமே!.

"ஏன் தேடணும் சந்தியா? ஒருத்தி என்கூடவே இருந்தா.. நான் சிரிச்சா சிரிப்பா! அழுதா அதைவிட அதிகமா அழுவா.. எனக்கு ஒன்னுன்னா துடிச்சு போவா.. நான் மட்டும் தான் உலகம்னு அந்த மூணு மாசமும் எங்களுக்குள்ள நாங்க வாழ்ந்தோம்... அவ பட்ட கஷ்டமெல்லாம் அவளே அறியாமல் என்கிட்ட சொல்லி மருகினப்ப இனி எப்பவுமே அவளை சந்தோஷமா மட்டும் தான் பாத்துக்கணும்னு நினைச்சுப்பேன். ஜென்ம பந்தம்.. அவளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு இது தான் தோணும்.. அவ என்னோட லைஃப்ல புதுசா வந்தவ இல்ல... என்னோட உயிர்ல ரத்தத்துலனு கூடவே இருந்தவன்னு தான் எனக்கு அவளை பார்க்கும் போதெல்லாம் தோணும்.. நான் அவளை சந்தோஷமா பார்த்துகிட்டதா தான் நான் நினைச்சுட்டு இருந்தேன்.. ஆனா போய்ட்டா... ஒரு பிரச்சனைனு வந்தப்ப இந்த யுவால்லாம் அவளுக்கு நியாபகத்துலயே இல்ல... அவனாச்சு அவன் சொந்தமாச்சுன்னு மொத்தமா தூக்கி எரிஞ்சுட்டு என் உயிர மொத்தமா கொன்னுட்டு போய்ட்டா.."

இவனுக்குள் இத்தனை வலிகளா? இதனை சுமந்து தான் எல்லாவற்றையும் கடந்தவன் போல சுற்றி வருகிறனா? அவன் பேசும் போது அவன் முகத்தில் வந்து போன வலிகள், ஏமாற்றம், வேதனை, இவற்றினூடே அனைத்தையும் மறைக்க போராடும் விழிகள் அப்பப்பா பார்த்த அனைவரும் ஸ்தம்பித்து தான் போயினர்.

அதிலும் கல்பனா விழி விரித்து யுவாவை பார்த்தவள் தான்.. இத்தனை நாள் தான்பட்ட கஷ்டங்கள் எதுவுமே இல்லை என்பதை போல அவனின் உணர்வுகளை அப்படியே உள்வாங்கியவள் வாய் மூடி அழ யாரிடம் பேசுவது என்றே தெரியவில்லை சுதாகர் சந்தியாவிற்கு.

மூன்றே மாதத்தில் தனக்குள் வந்த அந்த அழிக்க முடியாத காதல் அவனுக்கு வந்திருக்கவில்லை என நம்பியிருந்த கல்பனாவிற்கு அஸ்திவாரமே ஆட்டம் கண்டுவிட்டது.

"நான் என்னனு அவளை தேடி போறது? என் அம்மா பழி பேசினது மன்னிக்க முடியாத தப்பு தான்.. ஆனா அதுக்கு தண்டனை அவ எனக்கு கொடுத்துட்டு போயிருக்கா.. அதை நான் அனுபவிச்சு தானே ஆகணும்? அம்மா சின்ன சின்னதா அவளை பேசும் போதெல்லாம் நான் அதை சாதாரணமா கடந்து போனது தப்பு தான்.. அது அப்ப எனக்கு புரியல.. ஆனா புரிஞ்ச நேரம்...." என்றவன் கைவிரித்து கண் மூடி நின்றான்.

"அவளுக்கு நான் நம்பிக்கை கொடுக்கல.. அப்படி மட்டும் நம்பிக்கை கொடுத்திருந்தா.. இது தான் என் பிரச்சனைனு என் உயிர் என்னை தேடி வந்திருக்குமே! வர்ல.. பிறந்ததுல இருந்து அனுபவிச்ச சித்தி கொடுமையே பரவாயில்லைனு போனவ... ஒரு நொடி கூட இந்த யுவாவை தேடி வரணும்னு நினைக்கல.. அவளை நான் என்னனு தேடி போக?"

பேசி முடித்து கால்களை மடித்து அதில் கைவைத்து முட்டியிட்டவனுக்கு தன்னையும் மீறி அடக்கிய கண்ணீர் துளியாய் நிலத்தில் விழுந்தது.

கண்ணீர் விட்டு நின்றவனையும், "யுவா" என கதறி அவன் மீது பாய்ந்து சாய்ந்தவளையும் பார்த்தவறே நின்றனர் சந்தியா சூர்யாவுடன் சுதாகரும்.

ஆசை தொடரும்...
 
Last edited:
Top