கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆசை நொடிகள் 27

Rithi

Moderator
Staff member
அத்தியாயம் 27

"வார்த்தையில் சொல்ல முடியா வலிகள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது ஒவ்வொருவரின் இதயத்திலும்" எங்கோ யாரோ கூறிய வார்த்தைகள் தான் நியாபகத்திற்கு வந்தது சுதாகருக்கு.

கூடவே சிறு உறுத்தலும். கல்பனா விஷயத்தில் கூட தான் ஒரு வக்கீலாய் மட்டும் அவள்புறம் யோசித்து யுவராஜை மறந்துவிட்டோமே எனும் உறுத்தல்.

மௌனமாய் கண்ணீர் வடித்து யுவாவும் ஏங்கி கரைந்து கதறி கல்பனா அவன் காலடியிலும் இருக்க அதுவரை அவர்களைப் பார்த்து நின்ற சந்தியா தான் அவர்களருகே சமாதானமாய் செல்ல முயன்றாள்.

நகர்ந்த சந்தியாவின் கைகளைப் பற்றி இருந்தான் சுதாகர் வேண்டாம் எனும் விதமாய் தலையசைத்து.

இதில் சந்தியா சுதாகர் விட இன்னும் அதிகமாய் அதிர்ந்து நின்றது சூர்யா தான்.

அண்ணனை பிடிக்கும்.. அண்ணன் தான் எல்லாம்.. அண்ணனை ஏமாற்றி கல்பனா சென்றதால் தான் அதை அவமானமாய் நினைத்து அண்ணன் வீட்டிற்கு வரவில்லை. அம்மாவின் பேச்சு ஒரு காரணம் என்றாலும் அது எந்த விதம் என்று இவ்வளவு நாள் தெரியவில்லை.. இவ்வளவு தான் சூர்யாவிற்கு..

ஆனால் இன்று அவன் பேசிய வார்த்தைகள் அவளுக்கு அவனின் மொத்த உணர்வுகளையும் மொத்தமாய் விளக்கியது. கல்பனாவை எந்த அளவிற்கு விரும்பியிருக்கிறான் என்பதோடு அவன் வீட்டிற்கு வராத காரணம் அன்னை என்பதும் சேர்த்து அவன் வார்த்தைகளில் உணர்ந்து கொண்டாள்.

கல்பனா யுவாவின் வீட்டிற்கு வந்ததில் இருந்து ஜானகி அவளை வார்த்தைகளால் வதைத்துக் கொண்டிருந்தது உண்மை. அதற்கு சாட்சி சூர்யா மட்டுமே! இது எதையுமே யுவாவின் காதுகளுக்கு எட்டாது பார்த்துக் கொள்வார். அப்படித் தானே கல்பனாவையும் மிரட்டி வைத்திருந்தார்?

அன்னை பேசுவதை கேட்டு கேட்டு அதையே உண்மை என நம்பி அதை மட்டுமே கொண்டு கல்பனாவினை தன் மனதில் உருவகித்து.. இன்று அண்ணனின் வாய் வார்த்தைகளில் தன் முட்டாள்தனத்தின் மொத்தமும் கண்முன் வந்து நின்றது.

இப்போதும் அன்னை வார்த்தைகள் உண்மையா பொய்யா என்றெல்லாம் சூர்யா யோசிக்கவில்லை. அண்ணனுக்கு கல்பனாவை பிடிக்கும்.. இந்த உண்மையே இப்போதுதான் அறிந்து கொள்கிறாள்.

கூடவே ஜீவா? ஆகப்பெரும் அதிர்ச்சி தான். கல்பனாவின் முகச்சாயல் அச்சு அசலாய் ஜீவாவிடம். அண்ணனே அவன் குழந்தை என்பதை இவளுக்கு காண்பித்து விட்டபடியால் அதில் பொய் இருக்க முடியாது என்று தெரிந்து விட்டது.

சுதாகர் சந்தியாவை விரும்பவது அவன் வாய் வார்த்தையாலும் கண் அசைவுகளிலும் கண்டிருந்த சூர்யாவிற்கு அண்ணனின் காதல் அந்த வயதில் அறிந்து கொள்ள முடிந்திருக்கவில்லை.

இப்போதும் கல்பனாவை திருமணம் செய்து பாதுகாப்பேன் என்றவனை கயவன் என்று எப்படி நினைக்க முடியுமாம்? இங்கிருந்த அனைவரின் மேலிருந்த தவறுகள் எல்லாம் மொத்தமாய் தன்னைப் பார்த்து சிரிப்பதாய் தோன்றியது சூர்யாவிற்கு.

தனித்தனியே ஆராய்ந்ததில் இங்கிருக்கும் ஒருவரின் பேரில் கூட தவறு இல்லை என்றால் தான் பேசியது எவ்வளவு பெரிய பாவம்?

இந்த வயதில் இப்போது இந்த நிமிடம் வந்த பக்குவம் சுத்தமாய் அந்த நாட்களில் இல்லை சூர்யாவிடம்.

"சூர்யா! நான் உன்னை தப்பு சொல்லல.. எல்லா குழந்தைகளுக்குமே தன் அம்மா சொல்றது சரினு தான் தோணும்.. அதுவும் நீ அவங்க கைக்குள்ளேயே வளர்ந்த பொண்ணு.. உன்னை எனக்கு நல்லா தெரியும் சூர்யா.. நீ எந்த தப்பும் பண்ணல.. ஏன் இப்படி நிக்குற?"

சூர்யா தான் பெரிய தவறு செய்தது போல அங்கிருந்தவர்களை விட்டு ஒதுங்கி பலவற்றை யோசித்து கண் கலங்கி ஓரமாய் நின்ற கோலம் அவளருகே சென்று சந்தியாவை பேச வைத்திருந்தது.

"கிளி நாம சொல்றதை தான் திரும்ப சொல்லும்.. இந்த விஷயத்தில நீயும் கிளி தான்.. அப்ப உனக்கு இருந்த வயசுக்கு உன்னால அவ்வளவு தான் யோசிக்க முடிஞ்சிருக்கும்.. விடு! உன்னை யாரும் எதுவும் நினைக்கல." தப்பை அறிந்து அதற்கு மன்னிப்பு கேட்க முடியுமா என மருகி நின்றவளை சந்தியா போலவே சுதாகரும் கண்டுகொண்டான். பேச்சோடே அவளை ஒருநிலைக்கு கொண்டு வர முயன்றான்.

இவர்கள் பேச்சில் தான் கலைந்து தான் இருக்கும் நிலை புரிந்து எழுந்து கொள்ள முயன்றான் யுவா. அது முடியாதபடி அவன் கைகளை இறுக்கமாய் பற்றியபடி இன்னும் அழுது கொண்டு தான் இருந்தாள் கல்பனா.

இப்போது அனைவரின் பார்வையும் யுவாவிடம் தான். அவன் பக்க நியாயம் புரிந்தாலும் கல்பனா அவளின் தவறை அவளே அறியாமல் இருந்திருக்கிறாள் என்பதை அவன் புரிந்து கொள்ள வேண்டுமே என்கின்ற ஒரு பயம் சந்தியா சுதாகர் இருவரின் மனதிலும்.

தன் ஒற்றை கையால் தன் கைகளை அவளிடம் இருந்து விலக்கி எழுந்து கொண்டான் யுவா. அவன் முகத்தில் பெரிதாய் எந்த மாறுதலும் இல்லை. அதுவே அவனின் முடிவை சொல்லியது. ஆனாலும் அதை சுதாகர் அப்படியே விட்டுவிடுவானா என்ன?

"யுவா! ஐம் சாரி! நிஜமா கில்ட்டியா பீல் பண்றேன்.. உனக்குள்ள இவ்வளவு வலி இருக்கும்னு நான் யோசிக்காம போய்ட்டேன்.. ஆனா நீ நினைக்குற மாதிரி உன்னை..." சுதாகர் கல்பனாவிற்காக மீண்டும் பேச வர, கை நீட்டி தடுத்துவிட்டான்.

"என்கூட வாழ்ந்த போது உணர்த்தாத காதலை இந்த ஒரு நாள்ல நான் யாருக்கும் உணர்த்திடல.. இதுக்கு யாரும் கில்டியா பீல் பண்ண தேவை இல்ல.. ப்ளீஸ்.. அதுவும் இப்படி எனக்கு ஒரு மகன் இருக்கான்னு கூட... என்கிட்ட சொல்ல நினைக்கலல...அப்ப நான் எவ்வளவு பெரிய பாவி.." ஜீவாவை காட்டி மீண்டும் வந்த கண்ணீரை துடைத்தவன்

"இனி அவனை சொந்தம் கொண்டாட எனக்கு எந்த உரிமையும் இல்ல..." என்ற போதும் கல்பனாவும் எழுந்து அவனருகே ஓடிவிட்டாள்.

"வேண்டாம் யுவா! வார்த்தையாலேயே என்னை கொல்லாதீங்க.. நான்... அத்தைக்கு சத்தியம்.. பண்ணிட்டு தான் அந்த வீட்டைவிட்டே வந்தேன். உங்களை பார்க்கவோ பேசவோ முயற்சி கூட பண்ண கூடாதுன்னு சொல்லி தான் என்னை வீட்டைவிட்டே அனுப்பினாங்க.. அதுவும் நான் அங்கே இருந்தா உங்க உயிருக்கே ஆபத்துனு சொன்னதால தான் நான் போனேன் யுவா.." அன்று நடந்ததை அப்படியே கல்பனா சொல்லிக்கொண்டு இருக்க, தன் அன்னையின் மறுபக்கத்தை கேட்டு சிலையாய் நின்றாள் சூர்யா.

"சந்தியாவை கல்யாணம் பண்ணினா தான் நீங்க நல்லா இருப்பிங்கனு ஜாதகத்துல இருக்கிறதா அன்னைக்கு வந்த ஜோசியருமே சொன்னாரு.. அப்புறம் எப்படி நான் அங்கே இருப்பேன்? ஆனா நான் வீட்டுக்கு வர்றதுக்குள்ள அத்தை என்னை பத்தி இல்லாததை எல்லாம் சொல்லி எல்லாரையும் நம்ப வச்சு..."

எவ்வளவு பெரிய துரோகம் அன்னை செய்தது.. அதை கல்பனா வீட்டினரிடம் மட்டுமா சொல்லியிருந்தார் சூர்யா, யுவாவோடு சேர்த்து ஜானகியின் சொந்தங்கள் அனைவர்க்கும் கல்பனாவை பற்றிய பிம்பம் தவறானதாய் காட்டியதே அவர் தானே?

அந்த உண்மையை ஜானகி தன் அன்னையிடம் பேசுவதை கேட்டு சந்தியா யுவாவிற்கு மெயில் அனுப்பி இருந்தாள். ஆனால் யுவா அவள் அனுப்பாவிட்டாலும் தன் மனைவியை இந்த நொடி வரை சந்தேகத்தில் வைத்ததே இல்லை.

இப்போது வரை கூட சுதாகருடன் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றாள் என தான் நினைத்திருந்தான்... சுதாகர் உண்மையை சொல்லும் வரை.

அவள்மேல் இருந்த கோபம் ஒன்று அவனை தேடி வராதது என்பது மட்டுமே!

அன்னை செய்த துரோகதிற்கு அதை தட்டிக் கேட்காமல் விட்ட தனக்கு இந்த தண்டனை தேவை தான் என நினைத்துதானே வலிக்க வலிக்க சுதாகர் கல்பனாவை இவ்வளவு நாள் பார்த்துக் கொண்டு இருந்தான். அவளும் தன்னை மறந்து நிம்மதியாய் வாழ்கிறாள் என தான் நினைத்து இருந்தான்.

இதில் இவன் அறிய மறந்தது அன்னை வாங்கிய சத்தியம். அதற்கு யாரை குற்றம் சொல்வது? அன்னையையா? இல்லை இவள் போனதுமே நடை பிணமான அவனையேவா? தெரியாமல் தான் நின்றான் யுவா.

"லூசா கல்ப் நீ? சத்தியம் பண்ணினாளாம் அதுனால தேடி போகலையாம்! கொஞ்சமாவது அறிவு இருக்கா? யார் என்ன சொன்னாலும் செஞ்சிடுவன்னா பின்ன யார் தான் உன்னை நம்புவாங்க? உன் சித்தி அன்னைக்கு அவ்வளவு கேவலமா பேசும் போதே இழுத்து ஒரு அறை கன்னத்துல விட்டிருந்தேன்னா.. அன்னைக்கு அப்படி ஆதரவில்லாம நின்னுருக்க மாட்ட.. என் அம்மாகிட்ட கெஞ்சிட்டு நிற்காமல் அன்னைக்கு என்கிட்ட இது தான் நடந்ததுன்னு உண்மையை சொல்லியிருந்தன்னா உன்னை பத்தி அவங்களை ஒரு வார்த்தை பேச விட்டிருக்கமாட்டேன்.. இதெல்லாம் விட இவனை ஏண்டி இவ்வளவு தவிக்குற அளவுக்கு அவன்கூட வாழ்ந்துட்டு விட்டுட்டு போன?"

கல்பனா ஒவ்வொருவரின் முன்பும் தான் தப்பு செய்யாதவள் என காலில் விழுந்து கெஞ்சுவதை பார்த்து நின்ற சுதாகருக்கு அவளின் இந்த காரணம் அவ்வளவு கோபத்தை கொடுத்தது. ஒரு வார்த்தை தன்னிடம் சொல்லியிருந்தால் இத்தனை பேரின் விலகலும் தேவையே இல்லை என்று ஆற்றாமையாய் இருந்தது.

"இவ்வளவு பெரிய முட்டாளா நீ இருப்பனு கனவுல கூட நான் நினைக்கல.. உன்கூட இருந்து அவன் செத்திருந்தா கூட ஒரே நாள்ல போயிருப்பான்.. இத்தனை வருஷமா தினம் தினம் செத்துட்டு இருந்திருக்க மாட்டான்.."

சுதாகர் சொல்லி முடிக்கும் முன் "மாமா" என கத்தியிருந்தாள் கல்பனா.

சில நிமிடம் கல்பனாவின் அழுகை மட்டுமே அங்கே கேட்டது. "அண்ணி!" சூர்யா என்ற கல்லும் கல்பனாவின் இவ்வளவு அழுகையில் கரைந்து போயிருந்தது.

அண்ணி என்ற சூர்யாவின் அழைப்பில் சந்தியா அவள் பக்கம் திரும்ப, அவள் அழைத்தபடி போயிருந்ததோ கல்பனாவிடம்.

"சூர்யா! உன் அண்ணாவை என்கிட்ட பேச சொல்லு சூர்யா.. நான் பண்ணினது தப்பு தான்.. நான் இனி எங்கேயும் போக மாட்டேன்.. இந்த ஒருமுறை என்னை மன்னிச்சுட சொல்லு சூர்யா"

அண்ணியிடம் மன்னிப்பு கேட்க வந்த சூர்யாவின் தோளிலேயே சாய்ந்து அழுதாள் கல்பனா.

"அண்ணி!" என்றவளுக்கும் அதற்கு மேல் பேச முடியவில்லை.

"தியா! நீ வா.. இனி முடிவு எடுக்க வேண்டியது இவங்க ரெண்டு பேரும் தான்.." என்றவன் சூர்யாவின் மேல் நம்பிக்கை வைத்து ஜீவாவுடன் கீழிறங்க, சந்தியாவும் அவனுடன் இறங்கினாள்.

ஆசை தொடரும்..
 
Top