Aathirai
Active member
Episode 11
“சரி அஞ்சலி, நாம இங்கேயே உட்கார்ந்து இருக்காம, அப்படியே காலார நடந்துட்டே போய் பேசினா என்ன.?” என்றான் ஜீவா அவளைப் பார்த்து.
அவளுக்கும் அதுவே சரி என்று பட்டது. “சரி போலாம்.” என்று எழுந்தவாறே அவனுடன் நடந்தாள். நடந்து சிறிது தூரம் சென்ற பிறகு, அவளுக்கு யாரோ தன் பின்னால் வருவதைப் போன்ற உணர்வு. திரும்பிப் பார்த்தபடியே நின்றாள். ஆங்காங்கே சிலர் போய்க்கொண்டிருந்தனர்.
அதை கவனித்துவிட்டான் ஜீவா. “என்னாச்சுங்க. அப்படியே நின்னுட்டீங்க.” என்றான்.
“இல்ல. ஒண்ணும் இல்ல.” என்றவாறே நடந்தாள். இருவரும் கடற்கரை பக்கமாக நடந்து சென்றார்கள்.
நடந்துகொண்டே கேட்டான் ஜீவா, “சரி உங்க கடந்த கால வாழ்க்கை எப்படி இருந்தது. நீங்க என்னென்ன போராட்டங்களை சந்திச்சீங்கன்னு சொல்லுங்க. அதோட, நான் என்னோட கற்பனைகளையும் கொஞ்சம் கலந்துப்பேன். அத நீங்க முழுசா சொல்லி முடிச்சதும், உங்ககிட்ட சொல்றேன். நீங்க தான் எப்படி இருக்குன்னு சொல்லணும், சரியா.?” என்றான்.
அப்போது தான் அஞ்சலி முகத்தில் ஒரு பொலிவு, “ம்ம்.. கண்டிப்பா சொல்றேன்.” என்றாள் புன்னகைத்தவாறே.
தன் கதையை சொல்ல ஆரம்பித்தாள். தனக்கு விவரம் தெரிந்த வரை தன் சிறு வயதில் அவள் எப்படி வளந்தாள், என்பதைச் சொல்ல ஆரம்பித்து கடைசியாக அவள் அப்பா தென்னை மரத்தடியில் பேசிய வார்த்தைகள் வரை சொன்னாள்.
அப்போது ஜீவா, “ம்ம்.. இண்ட்ரெஸ்டிங்க். உங்க அக்கா ரொம்ப ஓவர் தான். சொல்லப்போனா, உங்க லைஃப்ல ஒரு வில்லி உங்க கூடவே இருந்திருக்கான்னு சொல்லுங்க.” என்றவனை முறைத்தாள் அஞ்சலி.
“ஹே.. ஓகே. கூல், கூல் மா.. சும்மா விளையாட்டுக்குத் தான் சொன்னேன். அப்பறம் உங்க அம்மா, அப்பா லவ் சூப்பர். சான்ஸே இல்ல. எனக்கு ரொம்பப் பிடிச்சுது. அத வச்சி நான் இன்னொரு கதை கூட எழுதலாம் போலவே. சரி, அதெல்லாம் விடுங்க. உங்க ஃபர்ஸ்ட் லவ்வப் பத்தி சொல்லுங்க. அது எப்படி இருக்கும்னு கேட்க எனக்கு ரொம்ப ஈகரா இருக்கு..” என்று கேட்டான் ஜீவா. அஞ்சலி தொடர்ந்தாள்..
(இனி வரும் கதை அனைத்தும், நான் உங்களிடம் சொல்வதை, அஞ்சலி, ஜீவாவிடம் சொல்வதைப் போல் எண்ணிக் கொள்ளுங்கள்.)
அப்போது அஞ்சலி பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். பொதுத் தேர்வு ஆரம்பிக்க இன்னும் இரண்டு வாரங்களே இருந்தது. விடுமுறையில் இருந்தாள். அவளுக்கு அது தேர்வுக்கு முன்னர் அவர்களுக்கு படிப்பதற்காக அளிக்கப்பட்ட விடுமுறை (ஸ்டடி ஹாலிடேஸ்).
ஆனாலும், அவள் தன் தோழிகளோடு, அவர்கள் தோழி ஒருத்தியின் வீட்டிற்குச் சென்று அங்கிருந்த தென்னை மரத் தோப்பில் அமர்ந்துகொண்டு, அனைவரோடும் சேர்ந்து ஒன்றாகப் படிப்பாள். அப்போது தான், அன்று கணேசன் சொன்னதை நினைவு கூர்ந்து, இன்னும் அதிக கவனமாகப் படிக்க முடியும் என்று நினைத்தாள்.
எப்பொழுதும் போல பள்ளிக்கூடம் செல்வதைப் போலவே, மதிய உணவையும் எடுத்துக்கொண்டே சென்று விடுவாள். பிறகு, பள்ளி முடிந்து செல்வதைப் போல் அதே நேரத்திற்கே வீடு வந்து சேருவாள். அவள் பெற்றோரிடம் சொல்லி சம்மதம் வாங்கிய பிறகே செல்லத் துவங்கினாள்.
எதனால் இந்த முடிவை எடுத்தாள் என்றால், ஜானகி அந்த வருடம் பணிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிக் கொண்டிருந்தாள். அவளும் மிகக் கடின முயற்சியுடன் படித்துக்கொண்டிருந்தாள். ஏற்கனவே, பத்தாம் வகுப்பு படிக்கும் போது நடந்த கதை தான் தெரிந்ததாயிற்றே. அதனால், இந்த முறையும் தன்னால் எந்த விதமான தொந்தரவும் ஜானகிக்கு வரக் கூடாது என்பதால், அவள் அந்த முடிவுக்கு வந்தாள்.
அன்றும் எப்பொழுதும் போலவே, அவள் தோழி வீட்டுக்குக் கிளம்பினாள் அஞ்சலி. அவள் சைக்கிளில் போவதைக் கடைத்தெருவில் இருக்கும் டீக்கடையில் நின்று கொண்டிருந்த கதிரேசன் பார்த்து விட்டான். அவளை எதிர்பார்த்துக் காத்திருந்தான் போலும். அவசர, அவசரமாக டீயைக் குடித்தவன் தன் சட்டைப் பாக்கெட்டில் இருக்கும் 10 ரூபாய்த் தாளை எடுத்து கடைக்காரரிடம் நீட்டிவிட்டு, மீதி சில்லறைக்குக் கூட காத்திருக்காமல், தன் டி.வி.எஸ் 50 வண்டியில் பறந்தான் அவள் பின்னே.
இதை கவனிக்காத அஞ்சலி, அவளாக எதையோ வாயில் வந்த பாட்டைப் பாடிக்கொண்டே தன் சைக்கிளில் மெயின் ரோட்டிற்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ரோட்டில் போய்க்கொண்டிருந்தாள். அப்போது ரோட்டில் அவளைத் தவிர யாருமே இல்லை.
தனக்குப் பழக்கமான வண்டியின் திடீர் சத்தத்தில், ஒரு நிமிடம் திரும்பிப் பார்த்தவளுக்கு திக்கென்றது. பின்னால் கதிரேசன் வருவதைப் பார்த்தவள் இன்னும் வேகமாக தன் சைக்கிளை அழுத்தினாள்.
ஆனால், கதிரேசனோ அவள் வேகத்தைத் தெரிந்தவனாக அவள் முன்னே முந்திச் சென்று தன் வண்டியை அவளுக்கு எதிர்ப்புறமாக நிறுத்தினான். அஞ்சலி, சைக்கிளில் இருந்து இறங்கி சுற்றும், முற்றும் பார்த்தாள். கண்ணுக்கெட்டும் தூரம் வரை ஒருவரும் இல்லாததால், இன்னும் அவளுக்கு படபடத்தது.
ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “கதிர் மாமா.. ஏன் இப்படி வண்டியக் கொண்டுவந்து நிறுத்திருக்கிங்க.? நான் படிக்கப் போகணும். அப்பறம் என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் தேட ஆரம்பிச்சிடுவாங்க. ப்ளீஸ் மாமா. வழிய விடுங்க.” என்றாள் கெஞ்சல் மொழியில்.
அவளது கெஞ்சலை ரசித்துக்கொண்டே, அவள் அருகில் வந்தான் கதிரேசன். அஞ்சலி அதை எதிர்பார்க்கவில்லை. அவன் அருகில் வந்ததும் சற்று தள்ளி நின்றாள்.
“ஏன் அஞ்சலி, என்கிட்ட இருந்து தள்ளிப் போற.? ஏன் எப்பவும் எதுவுமே பேச மாட்டிங்கற.? என்கிட்ட பேச புடிக்கலையா உனக்கு.” என்றான் கதிரேசன்.
அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. இன்னும் இதயம் படபடத்துக்கொண்டு தான் இருந்தது. தனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே அவனைப் பிடிக்கும். ஆனால், அதிகம் பேச மாட்டாள்.
அவன் குடிசை கட்டியபோது பார்த்த பார்வையிலே, அவளும் சற்று தடுமாறித்தான் போனாள். அதிலிருந்து, இன்னும் அவனுடன் பேச முடியாமல் தவித்தாள். மனது அவனுடன் பேசச் சொன்னாலும், ஏதோ ஒரு தயக்கம் அவளைத் தடுத்துவிடும். இப்பொழுதும் அப்படித்தான். இதையெல்லாம் அந்த நிமிடமும் யோசித்துக்கொண்டிருந்தாள்.
“அஞ்சலி.. அஞ்சலி..” என்று அவளை நினைவுக்கு கொண்டுவந்தான் கதிரேசன்.
“ம்ம்... மாமா.. எனக்கு நேரம் ஆகுது. என்னப் போக விடுங்க.” என்று திரும்பவும் கெஞ்சினாள்.
“பாரு.. திரும்பவும் அதே தான பண்ற. ஏன் என்னப் பாத்து இப்படி பயப்படற.? நான் என்ன உன்ன கடிச்சா திங்கப் போறேன். ஒரு நிமிஷம் நான் சொல்றதக் கேளு.” என்று அவள் சைக்கிளைப் பிடித்து நின்றவாறே கூறினான்.
இவன் விடுவதாய் தெரியவில்லை என்று நினைத்தவள், தலையை கீழே குனிந்தவாறே, “சரி, சீக்கிரம் சொல்லுங்க மாமா.” என்றாள்.
அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தவன், “எனக்கு உன்னப் புடிச்சிருக்கு அஞ்சலி. நான் உன்னை விரும்பறேன்.” என்று பட்டென்று தன் மனதில் இருந்ததைப் போட்டு உடைத்தான் கதிரேசன்.
அதுவரை கீழே குனிந்து கொண்டிருந்தவள், ஒரு கணம் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் கண்களில் காதல் தெரிந்தது. அதை நீண்ட நேரம் பார்க்க முடியாதவளாய், வேறுபுறமாக தலையை திருப்பிக் கொண்டாள்.
அவள் எதுவுமே பேசாமல் இருப்பதைக் கண்டவன், “ஏன் அஞ்சலி. என்னப் புடிக்கலையா உனக்கு.? எதுவுமே பேசாம வேற எங்கயோ பாத்துட்டிருக்க.” என்றான்.
“இல்ல மாமா. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல.” என்று சமாளித்தாள்.
“ம்ம்.. நான் சொல்லவா.? நீயும் என்னை விரும்பறேன்னு எனக்குத் தெரியும். ஆனா, நீ சொல்ல மாட்டிங்கற. உன் பார்வையே அத சொல்லுது.” என்று கதிரேசன் சொன்னதும், தான் மனதில் நினைத்ததை இவன் எப்படி கண்டுபிடித்தான் என்று நினைத்தாள்.
பேசிக்கொண்டிருக்கும் போதே தன் வண்டிக்குத் திரும்பிச் சென்றவன், ஏதோ ஒரு கவரை எடுத்து வந்தான். அதனுள்ளே இருந்த ஒரு சின்ன பரிசுப் பொருளையும், கூடவே ஒரு அழகான சிகப்பு ரோஜாப் பூவையும் எடுத்து அவளிடம் நீட்டினான்.
“இந்தா இத வாங்கிக்கோ. உனக்காகத் தான் தேடிப் பிடிச்சு வாங்கினேன்.” என்றான்.
“இல்ல. மாமா. எனக்கு இதெல்லாம் வேண்டாம்.” என்று வாங்க மறுத்தாள்.
“ஏய்.. பாரு.. நான் உனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு தேடி இத வாங்கிட்டு வந்தா, நீ வேணான்னு சொல்ற. இன்னைக்கு ஒரு சிறப்பான நாள் தெரியுமா.? என் நண்பன் தான் சொன்னான். இன்னைக்கு பிப்ரவரி 14 காதலர் தினம்னு. இன்னைக்கு தான் நிறைய பேர் அவங்க மனசுல இருக்க காதல சொல்வாங்க. அதோட பரிசும் குடுப்பாங்கன்னு சொன்னான். அதான், இன்னைக்கு என் காதலை உன்கிட்ட சொல்லணும்னு வந்தேன். அதோட இதையும் உனக்காக வாங்கினேன். ப்ளீஸ் வாங்கிக்கோ அஞ்சலி.” என்று கெஞ்சலானான்.
அவன் கெஞ்சுவதை நினைத்து அவளுக்குப் பாவமாக இருந்தது. ஆனாலும், அதை வாங்க மனம் ஏனோ தயங்கியது. அப்பொழுதும் எதுவுமே பேசாமல் நின்றாள். அவனுக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை.
“அஞ்சலி நீ ஏன் இப்படி இருக்க.? முதல்ல மனசில என்ன இருக்கோ அத வெளிப்படையா பேசிப் பழகு. நான் இவ்ளோ தூரம் கெஞ்சறேன். நீ இப்படி எதுவுமே பேசாம இருந்தா நான் என்னன்னு நினைக்கறது.? என்னப் புடிச்சிருக்கா, புடிக்கலையா.? அத மட்டும் சொல்லிட்டு நீ கிளம்பு.” என்று சற்று கடுப்புடன் பேசினான்.
அப்போது தான் வாயைத் திறந்தாள் அஞ்சலி. “மாமா. உங்கள எனக்கு எப்பவுமே பிடிக்கும். ஆனா, அது காதலான்னு எனக்குத் தெரியல. ஏன்னா, என்னோட வயசு அப்படி. இந்த வயசுல எல்லாமே அழகா தான் தெரியும். ஆனா, இப்போ எதையுமே என்னால முடிவெடுக்க முடியாது. என்னொட கூட படிக்கறவங்க சில பேரு இது மாதிரி காதல்னு நினைச்சு, படிப்பயும், அவங்க குடும்பத்தையும் மறந்து தப்பு பண்றாங்க. ஆனா, நான் அப்படி இல்ல. எனக்கு எல்லாமே, அப்பா, அம்மா தான். அவங்க விருப்பம் இல்லாம நான் எதுவும் செய்ய மாட்டேன். இப்போ எனக்கு படிப்பு தான் முக்கியம். பப்ளிக் எக்ஸாம் வருது. நான் படிக்கணும் மாமா. ப்ளீஸ் என்ன விட்ருங்க. நீங்களும், நானும் சேரணும்னா அத, அப்பா, அம்மாவே முடிவெடுக்கட்டும். நானா எதுவும் பண்ண மாட்டேன்.” என்று சொல்லி முடித்தாள்.
கதிரேசனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த வயதிலேயே இவள் இவ்வளவு தெளிவாக இருக்கிறாள் என நினைத்து அவனுக்கு ஒருபுறம் சந்தோஷமாக இருந்தது.
“இங்க பாரு அஞ்சலி. நீயும், நானும் முறைப் பசங்க தானே. அதனால, வீட்ல எதுவும் சொல்ல மாட்டாங்க. அதுவும், அத்தையும், மாமாவும் கண்டிப்பா என்ன ஏத்துக்குவாங்க.” என்றான்.
அஞ்சலி அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “அவங்க ஏத்துப்பாங்க. ஆனா, பெரிய மாமா என்ன ஏத்துக்குவாறா.? சொல்லுங்க.” என்றாள்.
அப்போது தான் அவனுக்கு உரைத்தது. ஆம், அவ்ன் தந்தையை அவன் யோசிக்கவே இல்லை. ஆனால், அதை அவன் பெரிதுபடுத்த விரும்பாமல், “அதெல்லாம் இல்ல அஞ்சலி. அப்பாவுக்கும் உன்னப் பிடிக்கும். அவர் கண்டிப்பா உன்ன ஏத்துக்குவார்.” என்றவனிடம் ஒருவாராக சிரிப்பை உதிர்த்தாள்.
“அதெல்லாம் அப்பறமா பாக்கலாம் மாமா. நான் கிளம்பறேன்.” என்று பட்டென்று சொல்லிவிட்டு கிளம்ப எத்தனித்தவளைத் திரும்பவும் தடுத்தான் அவன்.
“இப்போ இந்த பரிச வாங்கிப்பியா.? இல்லையா.?” என்றான்.
இவன் இப்போதைக்கு விடமாட்டான் என எண்ணியவள், “சரி குடுங்க.” என்று கடனுக்காக வாங்கி அதை தன் பேக்கில் வைத்து விட்டு எதுவும் சொல்லாமல் கிளம்பினாள்.
கதிரேசன் அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான். இவள் தன்னை ஏற்றுக்கொள்வாளா.? என்ற சந்தேகம் எழுந்தது அவனுக்கு.
(தொடரும்...)