கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் - அத்தியாயம் 16

Aathirai

Active member
Episode 16

காலை முகூர்த்தம் முடிந்து, மாப்பிள்ளை வீட்டார் மற்றும் பெண் வீட்டார் இருவரும் கோவிலுக்கு கிளம்ப ஆயத்தமாயினர். எப்படியாவது அஞ்சலியிடம் பேசி விட வேண்டும் என்ற எண்ணம் திரும்பத், திரும்ப கதிரேசனிடம் வந்துகொண்டே இருந்தது.

எப்படியாவது, கோவிலில் அவளிடம் பேசிவிட வேண்டும் என்று தீர்மானித்தான். அனைவரும் வேனில் கிளம்ப, கதிரேசன் அவன் நண்பனை அழைத்துக்கொண்டு வேனைப் பின் தொடர்ந்தான்.

அதை அஞ்சலியும் பார்க்காமல் இல்லை. இரவு, கதிரேசன் அவளைத் தாங்கிப் பிடித்த போது ஏற்பட்ட உணர்வு அவளுக்குப் புதியதாய் இருந்தது. அதுவரை எந்த ஒரு ஆண்மகனின் ஸ்பரிசமும் காணாத அவளுக்கு அது வித்தியாசமாக இருந்தது.

ஆனாலும், இரவிலிருந்து உள்ளூர சற்று பயமாகத்தான் இருந்தது அவளுக்கு. பெரிய மாமா பார்த்தது மட்டும் இல்லாமல், அக்காவும் வேறு பார்த்து விட்டாள் என்பதால், அவளால் வேறு எதையும் யோசிக்க முடியவில்லை. வீடு போய்ச் சேரும் வரை, கதிரேசனைப் பார்ப்பதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும் என்று நினைத்தாள்.

திருப்பத்தூர் பிரமேஸ்வர் கோவில் வளாகம், அனைவரும் இறங்கி நடந்து கோவிலுக்குள் நுழைந்தனர். கதிரேசனும், அவசர அவசரமாக கோவிலுக்குள் சென்றான்.

அனைவரும் தீபாராதனை காட்டிய பின்பு, கருவறை பிரகாரத்தில் சுற்றிக்கொண்டிருந்தனர். அனைவரும் முன்னே செல்ல, அஞ்சலியின் காலில் ஏதோ நூல் போல் மாட்டிக்கொண்டதை உணர்ந்து அவள் அங்கேயே குனிந்து அவள் அதை எடுத்து விட்டுக்கொண்டிருந்தாள்.

இதுதான் சந்தர்ப்பம் என்று, பின்னாலேயே வந்து கொண்டிருந்த கதிரேசன் ஒருவரும் இல்லை என்று அறிந்து, அவளிடம் வந்தான். குனிந்து காலில் மாட்டியதை எடுத்தவள், நிமிர்ந்த போது கதிரேசன் அவள் அருகில் நின்றான். அவனைப் பார்த்ததும், தன் அழகிய விழிகளை விரித்தவள், பயத்தில் செய்வதறியாது நின்றாள்.

அங்கே இருந்து தப்பிக்க நினைத்தவளின் கைகளைப் பிடித்தவன், “ஏய். இரு. எங்க ஓடற.? நானும், உன்கிட்ட பேசணும்னு நாலு நாளா ட்ரைப் பண்றேன், நீ பிடி கொடுக்க மாட்டிங்கற. நேத்தும் அப்படி தான். என்ன ரொம்ப அலைய விடறயா என்னை.?” என்றான்.

“மாமா, ப்ளீஸ். புரிஞ்சுக்கோங்க. எனக்கு பயமா இருக்கு. யாராவது பாத்தா பிரச்சனை. எல்லாரும் போயிட்டாங்க. நான் போறேன்.” என்று திரும்பவும் போக முயன்றவளை விடாமல்,

“இப்போ, என்னாச்சு.? ஏன் அஞ்சலி பயப்படற.? நாம கல்யாணம் பண்ணிக்க போறவங்க தானே.? அப்பறம் எதுக்கு பயப்படணும். பாத்தா பாக்கட்டும், பாத்து தெரிஞ்சுக்கட்டும்.” என்றான் தெனாவெட்டாக.

“அத நாம எப்படி முடிவு பண்ண முடியும்.? இன்னும், பெரிய மாமா எதுவும் சொல்லல இல்ல. நீங்களா எதையும் தீர்மானிக்க முடியாது. எல்லாமே, கடவுள் கைல தான் இருக்கு.” என்றாள்.

“ஏய். நீயே பார்த்த இல்ல. நேத்து நைட் அப்பா, நம்ம ரெண்டு பேரையும் பார்த்தாலும் அதுக்கப்பறம் எதுவும் சொல்லல. அவருக்கு அது இஷ்டம் இல்லன்னா, இந்நேரம் அத எவ்ளோ பெரிய விஷயம் ஆக்கிருப்பாரு தெரியுமா.? ஆனா, அவரு அப்படிப் பண்ணல. அப்போன்னா, அவருக்கு இதுல சம்மதம்னு தான அர்த்தம்.?” என்றான்.

அதை யோசித்தவள், எங்கோ, எதுவோ ஒன்று சரியில்லை என்றே உணர்ந்தாள். ஆனால், அவனோ திடமாக இருந்தான். இவனிடம் எப்படிப் பேசி புரிய வைப்பது என்றே தெரியவில்லை அவளுக்கு.

“ஏய். அஞ்சலி உனக்கொன்னு தெரியுமா.? நேத்து நைட் நீ அந்த ட்ரெஸ்ல ரொம்ப அழகா இருந்த. நான் உன்னையேதான் பார்த்துட்டு இருந்தேன் தெரியுமா.?” என்று அவளிடம் சொல்ல,

தன் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றவள், அவன் பேச்சில் சற்று கிறங்கித்தான் போனாள். எதுவும் பேசாமல், மனதினுள் சிரித்துக்கொண்டிருந்தாள்.

“சரி, நான் அன்னைக்குக் கொடுத்த கிப்ட்ட பிரிச்சி பார்த்தியா, இல்லையா.? அதப்பத்தி நீ எதுவுமே சொல்லல” என்றான்.

அப்போதுதான், அவளுக்கு அது நியாபகம் வந்தது. அந்தப் பரிசை அவள் இதுவரை பார்க்கவே இல்லை என்பதே உண்மை. அதை எப்படி சொல்வாள். உண்மையைச் சொன்னால், அவன் வேறு கோபப்படுவானே என்று விழித்துக்கொண்டிருந்தாள்.

அந்த சமயம் பார்த்து, மகேஸ்வரியின் குரல், “அஞ்சலி, அஞ்சலி” என்றபடியே தேடிக்கொண்டு வந்தாள். அவளைப் பார்த்ததும், அதுவரை அங்கே நின்று கொண்டிருந்த கதிரேசன் அப்படியே வேறு பக்கம் போய் மறைந்து கொண்டான்.

“அப்பாடா. ஒரு வழியாகத் தப்பித்தேன். ரொம்ப நன்றி கடவுளே.” என்று மனதிற்குள் நினைத்தவாறே மகேஸ்வரியிடம் சென்றாள்.

“அம்மா. நான் இங்க இருக்கேன்.” என்றபடியே வந்தவளின் மண்டையில் ஒரு குட்டு குட்டியவள், “நீ மட்டும் எங்கடி தனியா போன.? நாங்க எங்க எல்லாம் தேடிட்டு இருக்கோம் தெரியுமா.? உங்க அப்பா உன்னத் தேடிட்டு கோயிலுக்கு வெளியவே போயிட்டார்.” என்று திட்டினாள்.

“இல்லம்மா, நான் விநாயகர சுத்தி வந்துட்டிருந்தேன். அதான்.” என்றாள்.

“சாமிய சுத்தறதுக்கு இதுவா நேரம்.? வா, எல்லாரும் கிளம்பியாச்சு.” என்று அவள் கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றாள். திரும்பி கதிரேசனைப் பார்த்துக் கொண்டே சென்றாள் அஞ்சலி. அவனுக்கோ எப்போது பார்த்தாலும் யாராவது இடையில் வந்து விடுகிறார்களே என்று எரிச்சலுடன் சென்றான்.

அனைவரும் மண்டபம் வந்து சேர்ந்ததும், மாப்பிள்ளை, பெண்ணிற்க்கு செய்ய வேண்டிய முறைகளை அனைவரும் செய்ய ஆயத்தமாயினர். அப்போது, பெண்ணின் தாய்மாமனான கணேசன் முன் வந்து அம்சாவின் கைகளில் வளையலைப் போட்டு விட்டார்.

சபையே ஆச்சர்யப்பட்டது. எப்படியும் குறைந்தது மூன்று பவுன் இருக்கும். மணிமேகலை மிகவும் சந்தோஷப்பட்டாள். அம்சாவிற்கு அது அழகாக இருந்தது. மாப்பிள்ளை வீட்டார் அவரிடம் நன்றாக இருக்கிறது என்று உரைத்தனர்.

அதை அனைவரும், சந்தோஷத்துடனும், ஆச்சர்யத்துடனும் பார்த்துக்கொண்டிருக்க, இருவர் மட்டும் அதைப் பிடிக்காமல் கோபத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். (வேறு யாராக இருக்க முடியும்.) ஜானகியும், சதாசிவமும் தான்.

ஜானகிக்கு இந்த விஷயம் தெரியாது. எதற்கு இவளுக்குப் போய் இத்தனை செய்கிறார்கள் என்று எரிச்சலில் நின்றாள். தனக்காக சேர்த்து வைப்பதாய் ஒருமுறை மகேஸ்வரி சொல்லக் கேட்டிருக்கிறாள். ஆனால், இப்போதோ அது அம்சாவுக்கு என்றாகிவிட்டதால் அவளால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

சதாசிவத்திற்கோ, ஒன்றும் இல்லாதவன் என்று தான் மட்டம் தட்டியவனே இன்று சபையின் முன்னே தன் முகத்தில் கரியைப் பூசி விட்டான் என்ற கோபம். மாப்பிள்ளை வீட்டாரிடம் கூட, அவரைப் பற்றி மிகவும் கீழ்தரமான எண்ணங்களை விதைத்திருந்தார். ஆனால், இன்று அது பொய் என்று அவர்கள் முன்பாகவே கணேசன் நிரூபித்து விட்டார் என்ற எரிச்சல்.

அதற்க்குக் காரணம் மகேஸ்வரி. ஆம், அவளின் உந்துதலால் மட்டுமே கணேசன் அதைச் செய்தார். எப்பொழுது தன் அண்ணன் “உன் தம்பி என்ன செய்துவிடப் போகிறான்” என்று வாசலில் நின்று கேட்டாரோ, அப்போதே எடுத்த முடிவு தான் இது.

ஜானகியின் திருமணத்திற்காக சிறுகச், சிறுக சேர்த்துவைத்திருந்ததை எடுத்து தான் வளையல் செய்தனர் இருவரும். அவளுக்கு மறுபடியும் எப்படியாவது சேர்த்து விடலாம் என்ற நம்பிக்கையில் அதைச் செய்தனர். ஆனால், கணேசனின் கௌரவம் எந்த விதத்திலும் பறிபோகக்கூடாது என்று மட்டுமே நினைத்தாள் மகேஸ்வரி.

திருமண நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்து அனைவரும் கிளம்பி விட்டனர். வீட்டிற்கு வந்த ஜானகி, தன் துணிப்பையை எடுத்துக்கொண்டு எதுவும் பேசாமல் அன்று சாயங்காலமே கிளம்பி விட்டாள். அவளின் கோபம் எதற்க்காக என்று மூவருமே அறிந்திருந்தனர். எதையாவது சொல்லப் போனால் கண்டிப்பாக அதை அவள் ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்பதால் எதுவும் பேசவில்லை.

அன்று இரவு, கணேசனும், மகேஸ்வரியும் தூங்கிய பிறகு அஞ்சலி அன்று கதிரேசன் கொடுத்த பரிசுப் பொருளைத் தேடினாள். அதை மகேஸ்வரி பரணில் வைத்திருந்ததை கவனித்தவள் மெல்ல எடுத்தாள். சத்தமில்லாமல், அதைப் பிரித்தாள். ஒரு அட்டைப் பெட்டி இருந்தது. அதைத் திறந்தவள், அதனுள்ளே இருந்ததை எடுத்தாள்.

எடுத்தவளுக்கு ஒரே சந்தோஷம். அழகான பரிசுதான். ஒரு இதய வடிவ சிலைக்கு முன்னே, ஒரு ஆண் பொம்மையும், ஒரு பெண் பொம்மையும் கைகோர்த்து நிற்பதைப் போன்று இருந்தது. அது, அவர்கள் இருவரையும் குறிப்பதாக நினைத்தாள். அப்போதுதான் கதிரேசனின் காதலை உணந்தாள் அஞ்சலி.

அதன் பிறகு, அடுத்தடுத்து நாட்கள் வேகமாக நகர்ந்தன. அஞ்சலி பணிரெண்டாம் வகுப்பு சென்று விட்டாள். பத்தாம் வகுப்பை விட, இந்த முறை மதிப்பெண் எடுப்பதில் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முழு முயற்சியில் இருந்தாள். அவ்வப்போது கதிரேசனின் நியாபகம்.

சில முறை இருவரும் எவரும் அறியாமல் சந்தித்து பேசிக்கொள்ளவும் செய்தனர். கதிரேசனின் காதலிலும், பேச்சிலும் அஞ்சலி திளைத்தாள் என்றே சொல்ல வேண்டும். ஆனாலும், படிப்பில் கவனமுடன் தான் இருந்தாள் அஞ்சலி.

அன்று வரை ஜானகி வீட்டிற்கு வரவேயில்லை. ஒரு போன் கூட செய்து பேச வேண்டும் என்று தோணவில்லை அவளுக்கு. ஒரு முறை பார்த்து விட்டு வருதற்க்காக சென்ற கணேசனைக் கூட, அவள் சரியாக பேசாமல் அனுப்பிவிட்டாள். தான் தவறு செய்து விட்டோமோ என்ற மனஉளைச்சலுக்கு ஆளானார் கணேசன். ஆனால், அதை மகேஸ்வரியிடம் சொல்லவில்லை.

இதற்கிடையில் மில்லில் அவருக்கு நைட் ஷிப்ட்டிற்கு வரச் சொன்னார்கள். மறுத்தால், எங்கு வேலை போய்விடுமோ என்ற பயத்தில் அவரும் சென்று வந்தார். அப்போதிலிருந்து சற்று உடல்நிலை சரியில்லாமல் போனது அவருக்கு.ம் ஆனால், எதையும் அவர் வெளிக்காட்டிக்கொள்ளாமல் எப்பொழுதும் போலவே இருந்தார்.

கதிரேசனின் நடவடிக்கைகளை அவ்வப்போது நோட்டமிட்டுக்கொண்டே தான் இருந்தார் சதாசிவம். அவன், சில முறை அஞ்சலியை சந்திப்பதை அவர்கள் அறியாமல் பார்க்கவும் செய்தார். மணிமேகலையோ, மகேஸ்வரி வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் இவர்கள் இருவரைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பாள். கண்டிப்பாக இருவரையும் சேர்த்து வைப்பதாகச் சொல்லி வாக்குறுதி கொடுத்துவிட்டு வருவதால், மகேஸ்வரிக்கும் மனதின் ஏதோ ஒரு மூலையில் நம்பிக்கை வந்தது.

வீட்டில் உள்ளவர்களிடம் பேசி எப்படியாவது சதாசிவத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்று எண்ணினான் கதிரேசன். எப்படியும் ஒத்துக்கொள்வார் என்ற எண்ணத்தில் இருந்தான். இடையில் அம்சா வீட்டிற்கு அவ்வப்போது வந்து சென்றாள். அவளின் சிரிப்பிலேயே, அவள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறாள் என்று அனைவரும் தெரிந்து கொண்டனர்.

அப்படியே ஒன்பது மாதங்கள் கரைந்தது. அன்று ஒரு நாள் அனைவரும் வீட்டில் இருக்கும் சமயமாகப் பார்த்து சதாசிவத்திடம் பேச, கதிரேசன் அனைவரிடமும் சொல்லி வைத்திருந்தான். ஆனால், சதாசிவம் வெளியே கிளம்பத் தயாரான போது அனைவரும் என்ன செய்வதென்று குழம்பினர்.

“டேய். சதா, என்ன திடீர்னு கிளம்பிட்ட.? இன்னைக்கு லீவு தானே. அப்பறம் என்ன.? உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். வா..” என்றார் முருகப்பன்.

அவரைப் பார்த்த சதாசிவம், “இல்ல பா. எனக்கு ஆரணி பக்கத்துல ஒரு முக்கியமான வேலை இருக்கு. கண்டிப்பா போயே ஆகணும். எதுவானாலும் அப்பறமா பேசிக்கலாம். சரியா.?” என்றபடி நடந்தார்.

அதற்குமேல் அவரால் எதுவும் பேச முடியவில்லை. அதைக் கண்ட தெய்வானை, “ஹூம்ம். எனக்கு அப்பவே தெரியும், இவன் எதுக்கும் பிடிகொடுக்க மாட்டான்னு. நீங்க தான் கேக்கல.” என்று சலித்துக்கொண்டார்.

கதிரேசன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த சதாசிவம், “டேய் கதிரு, கிளம்பி நீயும் வா.” என்றார் திடீரென்று.

அவர் அப்படிச் சொல்வார் என்று எதிர்பார்க்காத கதிரேசன், என்ன செய்வதென்று தெரியாமல் நின்றான். அதைப் பார்த்தவர், “ என்ன முழிக்கற.? வா. ஒரு முக்கியமான வேலை இருக்கு. நேரம் பண்ணாதே.” என்றார்.

அதற்கு மேல் நிற்க முடியாதவன், அனைவரையும் பார்த்துவிட்டு தன் சட்டையை மாட்டிக்கொண்டு அவருடன் கிளம்பினான். அவர்கள் அனைவரும் சற்று மிரட்சியுடன் தான் பார்த்துக்கொண்டு நின்றனர். தாம் ஒன்று நினைத்தால், அது ஒன்று நடக்கிறதே என்று.

காலையில் சென்றவர்கள் திரும்ப, இரவாகி விட்டது. வரும் போது கதிரேசன் ஒரு மாதிரி இருப்பதை அனைவரும் கண்டனர். அவன் முகமே சரியில்லை. எதையோ யோசித்துக்கொண்டே வந்தான். சதாசிவம் அவனைத் தட்டினார். அப்போதே நினைவுக்கு வந்தான்.

அதைப் பார்த்து மணிமேகலை, “ஏங்க கதிரு ஒரு மாதிரி இருக்கான். என்னாச்சு.? டேய். என்னடா, ஏன் இப்படி இருக்க.” என்றாள் அவர்கள் இருவரையும் பார்த்து.

அவர் கதிரேசனைப் பார்த்து, “நீ போ.” என்று அவனை அனுப்பி வைத்து விட்டு, சோஃபாவில் வந்து அமர்ந்தவர், இவர்களிடம் பேசினார்.

“உங்க எல்லார்கிட்டயும் நான் ஒரு விஷயம் சொல்லணும். ஆனா, அதுக்கு முன்னாடி கதிர் கிட்ட பேசினா சரியா இருக்கும்னு தோணுச்சி. அதான் அவனக் கூட்டிட்டு போனேன்.” என்று புதிர் போட்டார்.

தாங்கள் அனைவரும் சொல்ல நினைத்ததை இவர் சொல்கிறாரே என்று நினைத்தனர். “அப்படி என்னடா விஷயம். சொல்லு.” என்றார் அருகில் இருந்த முருகப்பன்.

“எனக்குத் தெரிஞ்ச நண்பர் மூலமா, நம்ம கதிருக்கு நல்ல வரன் வந்திருக்கு. நம்ம அம்சா மாதிரியே, அவங்களும் நல்ல வசதியான குடும்பம். ரெண்டு பொண்ணுங்க. ஏகப்பட்ட சொத்து. அந்த ஊரிலேயே ரொம்ப மரியாதையான குடும்பம். மூணு ரைஸ் மில் வைச்சிருக்காங்க. ரெண்டு பொண்ணுங்களுக்கும் தனித்தனியா ரைஸ் மில்ல எப்பவோ அவங்க பேர்லயே எழுதி வைச்சுட்டாங்க. அதே மாதிரி அவங்க இருக்கற வீடு இல்லாம, ரெண்டு பொண்ணுங்களுக்கும் தனியா வீடும் இருக்காம். அவங்கள கல்யாணம் பண்றவங்களுக்கு தான் அது சேரும். முதல் பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அந்தப் பொண்ணுக்கு சேர வேண்டிய வீடும், மில்லும் கொடுத்துட்டாங்க. அதப் பாத்துட்டு அவங்க ஒரு பக்கம் இருக்காங்க. இப்ப, ரெண்டாவது பொண்ணுக்குத் தான் நம்ம கதிர கேக்கறாங்க. எனக்கு அவங்க குடும்பத்தை ரொம்ப புடிச்சிருக்கு. எல்லாம் பேசிட்டோம். அவங்க உங்க எல்லாரையும் கேட்டுட்டு சொல்ல சொன்னாங்க. என்ன சொல்றீங்க. பேசி முடிச்சிடலாம் தானே.?” என்றார் எந்தவித பதட்டமுமில்லாமல்.

அவர் ஒவ்வொன்றையும் சொல்லிக்கொண்டிருக்க, அவர்களோ அதிர்ச்சியில் உறைந்தனர். மணிமேகலைக்கு தலை சுற்றுவதைப் போல் இருந்தது. “கதிர முதல்ல கேட்டீங்களா.?” என்றாள் மணிமேகலை.

அவள் அப்படிக் கேட்பாள் என எதிர்பார்த்தவறாக, “இன்னைக்கு நான் எதுக்கு அவனக் கூட்டிட்டு போனேன்னு நினைச்ச.? நாங்க அவங்க வீட்டுக்குத் தான் போனோம். அவனுக்கு எல்லாத்தையுமே காமிச்சாங்க. அவங்களுக்கு எல்லாத்துக்குமே அவன ரொம்ப புடிச்சிருச்சு. பொண்ணுக்கும் தான். அவனுக்கும் போகப் போக புடிச்சிரும். இந்த மாதிரி ஒரு வாய்ப்பு யாருக்கு அமையும் சொல்லு.?” என்று தன் சொல்லை நியாயாப்படுத்த முயற்சித்தார் சதாசிவம்.

“அதுக்காக அவனை வீட்டோட மாப்பிள்ளையா அனுப்ப சொல்றியா டா.?” என்றார் முருகப்பன்.

“அப்பா, கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. அவங்க வீட்டோட மாப்பிள்ளையா ஒண்ணும் வரச் சொல்லல. அவன் அந்த ஊருக்குப் போய் அவங்களுக்கான தனி வீட்ல தான் இருக்கப் போறான். அதோட ஒரு மில்லுக்கு அவன் ஓனராவும் ஆயிடுவான். இத்தனை நாள் மில்லுல ஒரு தொழிலாளியா வேலை செஞ்சிட்டு இருந்தான். இப்போ, ஒரு மில்லுக்கே ஓனராகப்போறான். அதுல சந்தோஷம் தான. இதுல என்ன பிரச்சினை சொல்லுங்க.?” என்று அவர் சொன்னதும் முருகப்பனால் எதுவும் பேச முடியவில்லை.

“டேய். சதா, ஒருமுறைக்கு இன்னொரு முறை யோசிச்சுக்கோ. நீ செய்யறது சரிதானா.?” என்றார் தெய்வானை.

“அம்மா. நீங்க எத மனசுல வைச்சுட்டு இப்படி சொல்றீங்கன்னு எனக்குத் தெரியும். அதுமட்டும் இந்த ஜென்மத்துல நடக்காது. அந்தக் கனவையெல்லாம் மூட்டை கட்டி வைச்சுடுங்க. என் பசங்களுக்கு என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும்.” என்றபடியே உள்ளே சென்றார் சதாசிவம்.

அவர் அப்படிச் சொன்ன பிறகு, அனைவருக்கும் வேறு ஒன்றும் பேசத் தோன்றவில்லை. மணிமேகலை தான் பாவம் அழுதுகொண்டிருந்தாள். எந்த முகத்தை வைத்துக்கொண்டு தான் மகேஸ்வரியையும், தன் தம்பியையும் பார்ப்பது, அவர்களிடம் என்ன சொல்வது என்று கவலைகொண்டார். இறைவனின் சோதனையை எண்ணி, என்ன செய்வதென்று தெரியாமல் நின்றனர் மூவரும்.

(தொடரும்...)
 
Top