கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் - அத்தியாயம் 17

Aathirai

Active member
Episode 17

கணேசனின் வீடு, மனம் தாளாமல் மன்னிப்பு கேட்டு அழுது கொண்டிருந்தாள் மணிமேகலை. அவள் மட்டுமல்ல, கூடவே முருகப்பனும், தெய்வானையும் வந்திருந்தனர். சதாசிவத்தின் செயலால் அவர்களுக்கும் இதில் பெருத்த சங்கடம் ஆனது. எப்படி இருந்தாலும் இதை சொல்லித்தானே ஆக வேண்டும்.

கணேசனுக்கும், மகேஸ்வரிக்கும் வருத்தம் தான். ஆனால், அம்சாவின் கல்யாணத்திலேயே அவரின் நடவடிக்கைகளில் மனதில் இருந்த கொஞ்ச, நஞ்ச நம்பிக்கையும் போனது. எப்படி இருந்தாலும் இது நடக்கப்போவதில்லை என்று முன்னரே கணித்திருந்தார்கள்.

தன் அக்கா அழுவதைத் தாங்காமல், “அக்கா, நீ எதுக்கு இப்படி அழற. மன்னிப்பு கேட்டு தயவு செய்து எங்கள அன்னியம் ஆக்காதே. அந்த அளவுக்கு இப்போ ஒண்ணும் நடக்கல.” என்றார் கணேசன்.

“ஆமா அண்ணி, தயவு செய்து அழாதீங்க. நீங்க அழறதப் பார்த்தா எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நீங்க இப்போதானா அண்ணன பார்க்கறிங்க.? எனக்குத் தெரிஞ்சு, சின்ன வயசுல இருந்தே அண்ண, அவருக்கு என்ன தோணுதோ அதத்தான் பண்ணுவார். இத நாங்க முன்னாடியே எதிர்பார்த்ததால எங்களுக்கு இந்த விஷயம் ஒண்ணும் பெரிசா தெரியல.” என்றாள் மகேஸ்வரி.

“இல்ல, மகேஸூ. நீ என்ன சமாதானப்படுத்த இப்படி சொல்ற. ஆனா, என்னால தான் இத ஏத்துக்கவே முடியல. எவ்ளோ ஆசையா இருந்தேன் தெரியுமா.? அஞ்சலி நம்ம வீட்டுப் பொண்ணு. கோடி கொடுத்தாலும் அவள மாதிரி ஒரு பொண்ணு எந்த வீட்டுக்கும் கிடைக்கமாட்டா. ஆனா, உங்க அண்ணனுக்கு அவளோட அருமை தெரியல. வரப்போற பொண்ண விட, பணம் தான் ரொம்ப பெரிசா போச்சு. இப்போவெல்லாம், கதிர எங்க யார்கிட்டயுமே பேச விட மாட்டிங்கறார். எங்க பேசி மனச மாத்திடுவோமோன்னு அவன கூடவே வைச்சிட்டு சுத்தறார். கதிருக்கு என்ன மந்திரம் போட்டாருன்னு தெரியல, அவனும் இவர் சொல்றதக் கேட்டுட்டு தலையாட்டறான். மறு பேச்சே பேச மாட்டிங்கறான். எங்களுக்குத் தான் என்ன பண்றதுன்னு தெரியல.” என்று புலம்பினாள் மணிமேகலை.

“ஆமா, மகேஸூ. மணி சொல்ற மாதிரி உங்க அண்ணன் அப்படித்தான் பண்ணிட்டு இருக்கான். அவன கொஞ்ச நேரம் கூட எங்ககிட்ட பேசவே விடமாட்டிங்கறான்.” என்று பதிலுக்கு முருகப்பனும் சொன்னார்.

“அவன் அன்னைக்கு கதிர கூட்டிட்டுப் போய் என்ன சொன்னான்னு இப்போ வரைக்கும் எங்களுக்குத் தெரியவே இல்ல. நானும், என் பேரனும், பேத்தியும் கல்யாணம் பண்ணி சந்தோஷமா ஒரே வீட்ல நம்ம கூட வாழறதப் பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனா, அது நடக்காதுன்னு ஒரே முடிவா சொல்லிட்டு போயிட்டான் உங்க அண்ணன்.” என்று தெய்வானையும் புலம்பினார்.

“நீங்க எல்லாரும் இதப் பத்தி பேசிட்டே இருக்கறதால ஏதாவது மாறப் போகுதா.? சொல்லுங்க. கண்டிப்பா இல்ல. அதனால, அடுத்து என்ன நடக்க இருக்கோ அதப் பாத்துட்டு போக வேண்டியது தான்.” என்று நடைமுறையில் பேசினார் கணேசன்.

அவர் அப்படி சொல்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. “உனக்கு ரொம்ப பெரிய மனசுடா. ரொம்ப சாதாரணமா சொல்லிட்ட. ஆனா, எனக்குத்தான் என்ன பண்றதுன்னு புரியல.” என்று திரும்பவும் அழுகையுடன் சொன்னாள் மணிமேகலை.

“சரி அண்ணி, நான் ஒண்ணு சொல்லவா. அண்ண நம்ம எல்லாருக்கும் இப்படிப்பட்டவர்னா, அவரோட ரெண்டு பசங்களுக்கும் ரொம்ப நல்ல அப்பா. அதுல கொஞ்சம் சுயநலம் இருந்தாலும், அவங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் நல்லா இருக்கணும்னு தானே நெனச்சிருக்கார். நடைமுறை வாழ்க்கைய யோசிச்சு, அவங்க ரெண்டு பேருக்கும் பின்னால எந்த கஷ்டமும் வரக்கூடாதுன்னு நெனச்சிருக்கார். அதுல ஒண்ணும் தப்பில்லையே.?” என்றாள் மகேஸ்வரி.

“மகேஸூ, நீ சொன்னதும் ஒருவகையில் சரிதான். ஆனா, அதுக்காக மத்தவங்க மனச கஷ்டப்படுத்தறது சரியா.? எல்லார் மனசையும் கொன்னுட்டு, வெறும் ஜடமா இருந்து எல்லாத்தையும் பண்றதுக்கு பேர் என்ன சொல்லு. அதத்தானே உங்க அண்ண பண்றார். அதைத்தான் தாங்கிக்க முடியல.” என்றாள் மணிமேகலை.

அவள் சொல்வதும் நியாயம் தான். ஆனால், இனி எதுவும் பேசிப் பயனில்லை. எல்லாம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. வருத்தப்பட்டவர்கள், சிறிது நேரம் கழித்து கிளம்பியிருந்தனர்.

மற்றொருபுறம், அஞ்சலியைத் தனியாக சந்தித்துப் பேச முயற்சி செய்தான் கதிரேசன். அன்று அவள் பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பிக்கொண்டிருக்கையில், அதிகமாக நடமாட்டம் இல்லாத இடத்தில் சந்தித்தான்.

அவனைப் பார்த்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. அவனைப் பார்க்காமல் அந்த நாட்கள் ஏனோ அவளுக்கு ஒரு மாதிரி தான் இருந்தது. அவனைப் பார்த்ததும் உள்ளூர அத்தனை சந்தோஷம்.

“மாமா..” என்றபடியே அவனின் அருகில் வந்து தன் சைக்கிளை நிறுத்தியவள், “ஏன் மாமா, என்னாச்சு.? ரெண்டு வாரமா உங்களக் காணோம். நான் ஒவ்வொரு முறையும் இந்தப் பக்கமா வரும் போது பாத்துக்கிட்டே போவேன். இன்னைக்கு தான் என்னப் பாக்கணும்னு தோணுச்சா.? ஏன் வரல மாமா. எங்கயாவது ஊருக்குப் போயிட்டிங்களா.? போகும் போது சொல்லிட்டு போயிருக்கலாமே.?” என்று அடுக்கடுக்காய் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே போனவள் முகத்தில் அத்தனை ஏக்கங்கள்.

குழந்தைத்தனமான அவள் முகத்தைப் பார்த்தவனுக்கு எப்படி விஷயத்தை சொல்வது என்று தயக்கமாக இருந்தது. ஆனால், வேறு வழியில்லை சொல்லித்தான் ஆக வேண்டும் என்று நினைத்தவன், “அஞ்சலி, ஒரு முக்கியமான விஷயம் உன்கிட்ட சொல்லணும்.” என்று தயக்கத்துடன் நின்றான்.

“சொல்லுங்க மாமா.” என்று ஆர்வத்துடன் கேட்டாள் அஞ்சலி.

“அஞ்சலி, அப்பா எனக்கு ஆரணிக்கு பக்கத்துல பொண்ணு பார்த்திருக்கார். கிட்டத்தட்ட முடிவும் பண்ணிட்டார்.” என்று அவன் சொல்லும் போதே, அவளுக்கு முகம் ஒரு மாதிரி ஆனது.

“ரொம்ப வசதியான குடும்பம், கல்யாணத்துக்கு அப்பறம் எங்களுக்குன்னு தனி வீடு, அப்பறம் ஒரு மில்லையும் தராங்க. இத்தனை நாள் ஒரு மில்லுல வேலை செஞ்சேன். இப்போ, ஒரு மில்லுக்கே முதலாளி ஆகணும்னு அப்பா நினைக்கறார். அவரோட ஆசை சரிதானே. பசங்க வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைக்கிறார்.” என்றான் பெரிய நியாயவாதியாக.

எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள் அஞ்சலி.

“எனக்கு முதல்ல இஷ்டமில்ல. ஆனா, அப்பா என்னை ரொம்ப வற்புறுத்தறார். எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. என்னால ஒரு கட்டத்துக்கு மேல முடியல. என்னால அவர மீறி எதுவும் செய்ய முடியாது. அதான், உன்கிட்ட சொல்லணும்னு வந்தேன். என்ன மன்னிச்சிடு அஞ்சலி. உன் மனச நோகடிக்கறது என் எண்ணமில்ல. ஆனா, எனக்கு வேற வழியும் இல்ல.” என்று தலையைக் குனிந்து கொண்டே பேசினான் கதிரேசன்.

முட்டிக்கொண்டு வந்த அழுகையை அடக்க முயன்றாள் அஞ்சலி. தொண்டைக்குழி அடைத்தது. பேச்சே வரவில்லை.

“அஞ்சலி. ஏன் அமைதியாவே நிக்கற.? ஏதாவது சொல்லு.” என்று கேட்டான்.

சற்று முகத்தை எப்பொழுதும் போல் இருக்க முயற்சி செய்தவள், “சரி மாமா. பரவால்ல. எனக்கு அப்போவே தெரியும். பெரிய மாமா, என்ன ஏத்துக்க மாட்டாருன்னு. நான் என் மனச மாத்திக்க முயற்சி பண்றேன். நீங்க ஒண்ணும் கவலப்படாதீங்க. உங்க வாழ்க்கை நல்லபடியா, சந்தோஷமா இருந்தா, அதுவே போதும்.” என்றாள் அனைத்து உணர்வுகளையும் அடக்கியவாறு.

“ரொம்ப நன்றி அஞ்சலி. நீ இத எப்படி எடுத்துக்குவயோன்னு ரொம்ப கவலையா இருந்தது. ஆனா, நீதான் ரொம்ப தெளிவான பொண்ணாச்சே. அதனால தான், இத நீ ஈஸியா எடுத்துக்கிட்ட.” என்றான்.

மனசாட்சியே இல்லாமல் பேசுபவனிடம் வேறு என்ன சொல்ல முடியும். அதனால் தான் அப்படிச் சொன்னாள். அதன் பிறகு இருவரும் கிளம்பி விட்டனர். சைக்கிளில் வர வர அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. எங்கு யாரேனும் பார்த்து விடுவார்களோ என்ற பயத்திலேயே வந்தாள்.

வீடு வந்து சேர்ந்ததும், அவசரமாக, சைக்கிளை நிறுத்தியவள், உள்ளே நுழைந்தவுடன் உட்கார்ந்திருந்த மகேஸ்வரியின் மடியில் போய் படுத்து தேம்பித் தேம்பி அழுதாள். அத்தனை நேரம் அடக்கி வைத்த அழுகை அல்லவா.? அது மொத்தமாக வெளிப்பட்டது.

“ஏய்.. அஞ்சலி. என்னாச்சு.? எதுக்கு இப்படி அழற.?” என்று அவள் மடியில் இருந்த அவளது முகத்தைத் தன் கையில் ஏந்திக் கேட்டாள்.

அதற்குள் இவள் அழும் சத்தம் கேட்டு உள்ளே படுத்திருந்த கணேசன் ஓடி வந்தார். அவளது அருகில் வந்து அமர்ந்துகொண்டே, “என்னாச்சு டா மா.? எதுக்கு அழற.?” என்று அருகில் வந்து அமர்ந்தார்.

கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், “கதிர் மாமாவப் பாத்தேன்.” என ஆரம்பித்து அவன் சொன்ன அனைத்தையும் சொன்னாள்.

இதை அவர்கள் முதலிலேயே அறிந்திருந்ததால், அவர்கள் இருவரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

“இது எங்களுக்கு முன்னாடியே தெரியும் அஞ்சலி. இன்னைக்கு காலைல, அத்தை, தாத்தா, பாட்டி எல்லாரும் வந்து தான் விஷயத்த சொன்னாங்க.” என்றாள் மகேஸ்வரி.

“அம்மா. நான் பாட்டுக்கு தானே இருந்தேன். நீங்க எல்லாரும் சம்மதிச்சீங்கன்னு தான், நானும் மாமாவ விரும்ப ஆரம்பிச்சேன். இப்போ, எதுவும் நடக்காது, நான் வேற பொண்ண கல்யாணம் பண்ணப் போறேன்னு சொல்றது எந்த விதத்துல நியாயாம்.?” என்றாள் அஞ்சலி.

“சரி தான் டா மா. ஆனா, நம்ம என்ன செய்ய முடியும்.? உங்க பெரிய மாமா, கிட்டதட்ட முடிவு பண்ணிட்டு வந்து தான் எல்லார்கிட்டயும் சொல்லிருக்கார். அவர் பேச்ச யாரால தட்ட முடியும் சொல்லு. கதிரேசனையும் ஏதேதோ பேசி அவனோட மனச மாத்திட்டாருன்னு எங்க அக்கா வந்து புலம்பறா. இதுல நாம என்ன பேச முடியும் சொல்லு.” என்றார் கணேசன்.

“இங்க பாரு அஞ்சலி. நான் அன்னைக்கே உன்கிட்ட சொன்னது தான். திரும்பவும் சொல்றேன். எதுவா இருந்தாலும் அத ஏத்துக்க பழகிக்கோ. உனக்கானது உன்னத் தேடி வரும். அவ்ளோதான். இந்த விஷயத்த இதோட விட்ரு. இனிமேல் படிப்பு தான் உனக்கு. நீ என்னவாகனும்னு நினைச்சையோ, அத நீ அடையணும்னா படிப்பு தான் உனக்கு கை கொடுக்கும். அதனால, அதுல கவனத்த செலுத்து. தேவையில்லாத் எந்த விஷயத்தப் பத்தியும் யோசிக்காத. சரியா.” என்று அவளைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டே பேசினாள் மகேஸ்வரி.

அந்த நிமிடம் அவளுக்கு என்ன ஆறுதல் தேவைப்படுமோ, அதை மகேஸ்வரி தந்தாள். ஒரு தோழியைப் போல் பேசினாள். கணேசனும், அவளுக்கு ஆறுதல் வார்த்தைகள் தந்து விட்டு இரவு பணிக்கு செல்ல ஆயத்தமானார்.

அம்மாவும், அப்பாவும் தனக்கு ஆறுதல் சொன்னாலும் ஒவ்வொரு நாளும் அவளால் அதைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. தெளிவாய் இருந்தவளையும் குழப்பிவிட்டுப் போனது இந்த பொல்லாத காதல். அவளைப் பொறுத்த வரை அது நிறைவேறாக் கனவாகிப் போனது.

அடுத்து வந்த நாட்களில், கதிரேசனுக்கு முடிவானது. முதலில் மாசி மாதம் நிச்சயம் வைத்துக்கொள்ளலாம் என்றும், அதன் பிறகு நான்கு மாதங்கள் கழித்து வைகாசி மாதம் திருமணம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

நிச்சயதார்த்த நாளும் நெருங்கியது. அம்சா கல்யாணம் போல், கணேசனும், மகேஸ்வரியும் அத்தனை பெரிதாக எதுவும் அங்கே இருந்து செய்யவில்லை. வந்து அழைத்த கடமைக்காக, அப்போதைக்கு போய் வந்து விட வேண்டும் என்று முடிவு செய்தனர்.

பேசுபவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள் என்பதால், அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும், ஜானகிக்கு உள்ளூர சந்தோஷமானது. எத்தனை ஆட்டம் போட்டார்கள். இப்போது என்ன ஆனது, என்று அவள் மனதில் கேள்விகள் கேட்டுக்கொண்டாள்.

கதிரேசனின் நிச்சயதார்த்த விழா, ஒரு சின்ன திருமண நிகழ்ச்சி போல் அரங்கேறிக்கொண்டிருந்தது. நிச்சயம் முடிந்து, கடைசியாக அனைவரும் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தனர்.

கணேசனும், மகேஸ்வரியும் ஒதுங்கி நிற்பதைப் பார்த்த மணிமேகலை அவர்களை அழைத்து வந்து அவர்களுடன் தானும் சேர்ந்து நின்று போட்டோ எடுத்துக்கொண்டார்.

போட்டோ எடுத்து முடித்ததும், கதிரேசனின் அருகே வந்த அஞ்சலி “மாமா” என்று அழைக்க, திரும்பிய கதிரேசன் அஞ்சலியைப் பார்த்ததும் விழித்தான்.

அஞ்சலி, தன் கைகளில் வைத்திருந்த ஒரு பரிசுப் பொருளை அவனிடம் தந்தாள். “இத நீங்க பிரிச்சுப் பாருங்க. வாழ்த்துக்கள்.” என்று அந்தப் பெண்ணிடமும் சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

எப்போதும் திரும்பிப் பார்ப்பவள், அன்று திரும்பாமல் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தான் கதிரேசன். அதற்க்குள், அவன் நண்பர்கள் அதைப் பிரித்துப் பார்க்கச் சொல்லி வற்புறுத்த, அதைப் பிரித்தவனுக்கு அதிர்ச்சி, தான் அன்று காதலைச் சொன்ன போது அவளுக்காக வாங்கித் தந்த அதே பரிசு. அதை அப்படியே பத்திரமாக அவனிடம் தந்துவிட்டாள் அந்தக் காயம் பட்ட இதயமவள்.

வெட்கித்தலை குனிந்தான் கதிரேசன். அவளது வலியை அன்றே உணர்ந்தான் அந்தக் கயவன்.


(தொடரும்...)
 
Top