கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் - அத்தியாயம் 19

Aathirai

Active member
Episode 19

நாட்கள் இத்தனை மோசமானதாக மாறும் என்று அப்போது நினைத்தே பார்க்கவில்லை. ஜானகி சென்று ஒரு மாதமாகி விட்டது. எங்கு சென்றாள்.? என்ன ஆனாள்.? என்றே தெரியவில்லை.

அஞ்சலி, மைதிலியிடம் சொல்லி ஜானகி முதலில் தங்கியிருந்த ஹாஸ்டலில் விசாரித்த போது, அவள் எப்பொழுதோ அதைக் காலி செய்து விட்டாள் எனத் தெரிந்தது. முடிந்த வரை, அவளைத் தேடிப் பிடிக்க முயன்றாள் அஞ்சலி. ஆனால், முடியவில்லை.

ஜானகி சென்றதன் பிறகு, கணேசனின் உடலில் பல பிரச்சினைகள் உருவானது. போதாக் குறைக்கு இரவு பணிக்கு வேறு சென்று வந்ததால், எப்பொழுதும் அசதியாகவே இருப்பார். பகலில் கூட நல்ல உறக்கம் இல்லாமல் திரிந்தார்.

கொஞ்சம், உடல்வலி என்று தெரிந்தால், அவருக்குத் தெரிந்த மருந்துக்கடையில் மாத்திரை வாங்கி அடிக்கடி சாப்பிடத் துவங்கினார். அதன் பிறகுதான் அவரின் உடல்நிலை இன்னும் மோசமானது. இது எதுவும் மகேஸ்வரிக்கும், அஞ்சலிக்கும் தெரியாது.

ஒரு நாள், எப்பொழுதும் போல் இரவு பணியில் இருந்து காலை வீடு வந்தவரின் உடல் முழுதும் வேர்த்து நனைந்திருந்தது. அதைப் பார்த்த மகேஸ்வரி பயந்து விட்டாள். ஒரு துண்டை எடுத்து வந்தள், “என்னங்க இப்படி வேர்த்திருக்கு. என்னாச்சு உங்களுக்கு.?” என்றபடி துடைத்து விட்டாள்.

“தெரியல மகேஸூ, ஒரு மாதிரியா இருக்கு. என்னன்னு தெரியல.” என்றபடியே மார்பைப் பிடித்தவாறு மயங்கி சரிந்தார். அவரைப் பிடித்தவாறே மகேஸ்வரி கூச்சலிட்டாள். சத்தம் கேட்டு பறந்தடித்து ஓடி வந்தாள் அஞ்சலி. அதோடு அக்கம், பக்கத்தினரும் அவளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தனர்.

அவசரமாக சென்று ஒருவர் ஆட்டோ பிடித்து வர, அவரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர் இருவரும். கூடவே, அருகில் இருப்பவர்கள் இருவர் வண்டியில் சென்றனர்.

மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் கணேசன். வராண்டாவில் நின்று மகேஸ்வரியும், அஞ்சலியும் அழுது கொண்டே கடவுளை வேண்டினர்.

பெரிய போராட்டத்திற்குப் பிறகு வெளியே வந்த மருத்துவர், கையை விரித்தவர், “அவருக்கு மாரடைப்பு வந்திருக்கு மா. ரொம்ப முயற்சி பண்ணோம். முடியல. இறந்துட்டாரு.” என்றார்.

அதைக் கேட்டதும், மகேஸ்வரி மயங்கி சரிந்தாள். அஞ்சலி, “அம்மா, அம்மா.. என்னாச்சு மா. எழுந்திரி மா. எனக்கு நீயாவது வேணும் மா..” என்று அழுதாள்.

உடனே, மருத்துவர் அவளையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து அவளுக்கு சிகிச்சை அளித்தார். அதற்குள் தெரிந்தவர் மூலமாக விஷயம் கேள்விப்பட்டு ஓடி வந்தனர், மணிமேகலை மற்றும் குடும்பத்தார்.

கணேசன் இறந்து விட்டதை நினைத்து, மணிமேகலை மார்பில் அடித்துக் கொண்டு அழுதார். அஞ்சலியைப் பிடித்துக்கொண்டு அழுதார்கள் அனைவரும். அவளுக்கு உலகமே தலைகீழாய் சுற்றுவதைப் போல் இருந்தது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த மகேஸ்வரிக்கு ரத்த அழுத்தம் காரணமாக, மயக்கம் வந்ததால் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. அதற்குள், அவர்கள் வீட்டிற்கு சென்ற முருகப்பனும், சதாசிவமும் ஆக வேண்டிய காரியங்களைப் பார்த்தனர்.

மணிமேகலையும், அஞ்சலியும் தான் அவளைத் தாங்கிப் பிடித்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். இன்னும் மயக்க நிலையிலேயே தான் இருந்தாள் மகேஸ்வரி. அவ்வப்போது அவளுக்கு குளுக்கோஸ் கொடுத்துக்கொண்டே இருந்தார் தெய்வானை.

கதிரேசன், அம்சா, தமிழ் வாத்தியார் என அனைவருமே விஷயம் தெரிந்து அவர்கள் குடும்பம் சகிதமாக வந்தனர். மீள முடியாத துன்பம் அஞ்சலிக்கும், மகேஸ்வரிக்கும். எப்படி அவர்களுக்கு ஆறுதல் சொல்லப் போகிறோம் என்று தோன்றியது அனைவருக்கும்.

அப்போது தான், ஜானகி வந்து இறங்கினாள். கூடவே, ஒருவனும் வந்தான். அனைவரும் அவர்களை ஏற, இறங்கப் பார்த்தனர். கழுத்தில் இன்னும் நிறம் மாறாத மஞ்சள் கயிறும், அவள் நெற்றி வகிட்டில் வைத்திருந்த குங்குமமும் அவளுக்கு திருமணம் ஆகிவிட்டதை உறுதிப்படுத்தியது.

அவள் உள்ளே வந்ததும் அவளைப் பார்த்த அஞ்சலி, “அக்கா, பாரு கா. அப்பா, நம்மளயெல்லாம் விட்டுட்டு போயிட்டாரு.” என்று அவளைப் பிடித்துக்கொண்டு அழுதாள்.

ஆனால், ஜானகியின் கண்களில் மொத்தமாக இரண்டு சொட்டு கண்ணீர் விழுந்திருக்கும். அத்தனை வருடங்களாக, அவர் வளர்ப்பிற்கும், காட்டிய பாசத்திற்கும் அவ்வளவு தான் மரியாதை போலும். இரும்பு இதயம் படைத்தவள் என்றே அனைவரும் பேசிக்கொண்டனர்.

காரியம் முடிந்து அனைவரும் ஒவ்வொருவராகக் கிளம்ப, இரண்டு நாட்களாக, மணிமேகலை குடும்பமும், ஜானகியும் மட்டுமே அவர்களோடு இருந்தனர்.

“மகேஸூ. நான் எப்படி இத சொல்றது.? போதும், நீயும், அஞ்சலியும் பேசாம அங்க வீட்டுக்கு வந்துடுங்க. இங்க தனியா என்ன பண்ணுவீங்க.?” என்றாள் மணிமேகலை.

“ஆமா, மகேஸூ. நீ இங்க தனியா இருக்க வேண்டாம். நம்ம வீட்டுக்கே வந்துடுங்க. அஞ்சலி நம்ம வீட்ல இருந்து போய் படிக்கட்டும்.” என்றார்கள் தெய்வானையும், முருகப்பனும்.

மகேஸ்வரியால் எதுவும் பேச முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்துக்கொண்டிருக்க, என்ன பேச முடியும் அவளால். ஒன்றும் பேசாமல் இருந்தாள்.

மணிமேகலை, சதாசிவத்தைப் பார்த்து கண்களாலேயே வாயில் முனகியபடி கெஞ்சினாள், “நீங்க வந்து சொல்லுங்க” என்று.

அவளை முறைத்தவர், வேறு வழியில்லாமல் அவளிடம் வந்து, “சரி, வீட்டுக்கு அப்பப்போ வந்துட்டு போ.” என்று மட்டுமே சொன்னார்.

அதிலேயே அவர்களை வர வேண்டாம் என்று சொன்னது, அவர்களுக்குப் புரிந்து விட்டது. அதற்கு மேல் அவமானப்படுத்த முடியுமா.? மணிமேகலை அழுதார். “என்ன இந்த மனுஷன், சொந்தத் தங்கச்சியக் கூட பாரமா நினைக்கிறாரே. ஏன் இப்படி இருக்கிறார்.? இரக்கமே கிடையாதா.?” என்று மனதிற்குள் அவரை நினைத்து வருந்தினார்.

முருகப்பனும், தெய்வானையும் பேச முயற்சிக்க, விருட்டென்று அங்கிருந்து வெளியேறினார். என்ன பேச முடியும் அவர்களால்.? அவ்வப்போது வருவதாகச் சொல்லி, அவர்களை விட்டுப்போக மனமில்லாமல் கிளம்பினர்.

மகேஸ்வரி, அவரது மாலை போட்ட படத்தின் அருகேயே அவரைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அஞ்சலி, அவளது மடியில் இன்னும் அழுதுகொண்டே படுத்திருந்தாள்.

மாலை வரை அமைதியாய் இருந்தாள் ஜானகி. அதன் பிறகு தான் அவர்களிடம் வந்து பேசினாள்.

“இங்க பாருங்க, நடந்தது எதையும் மாத்த முடியாது. இனி அடுத்து என்ன செய்யணும்னு பாருங்க. அத்தை, தாத்தா, பாட்டி எல்லாரும் அவங்க வீட்டுக்கு வரச் சொல்றாங்க. ஆனா, மாமா என்ன சொன்னாருன்னு பார்த்தீங்கல்ல, அப்பறம் எப்படி அங்க போவீங்க.? பேசாம வேலூர்ல என் வீட்டுக்கு வந்துடுங்க. அஞ்சலியும் காலேஜ்க்கு தினம் போய் வர கஷ்டமாவும் இருக்காது. அதனால, இங்க பார்த்து பண்ண வேண்டிய விஷயம் என்னவோ அதெல்லாம் முடிச்சுட்டு வந்துடுங்க. வரதுக்கு முன்னாடி எனக்கு ஒரு போன் பண்ணிட்டு வந்துடுங்க. என்னோட நம்பர் எழுதிக்கோ அஞ்சலி.” என்று அவள் பேசி முடிக்க.

அதுவரை பேசியது ஜானகி தானா.? என்றே தோன்றியது இருவருக்கும். ஒருவேளை, கல்யாணம் ஆனதும் திருந்தி விட்டாளா.? என்ற ஒரு சந்தேகம். எதுவானாலும் சரி நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று தோன்றியது.

அவள் பேசிவிட்டு கிளம்பியும் விட்டாள். ஆனாலும், மகேஸ்வரிக்கு அவள் மேல் உள்ள கோபம் குறையவே இல்லை. அதே போல் நம்பிக்கையும் ஏற்படவில்லை. அஞ்சலி தான் பேசினாள்.

“அம்மா, அக்கா சொல்ற மாதிரி நாம வேலூருக்கே போயிடலாமா.?” என்றவளை அழுது, அழுது சிவந்து போய் வீங்கி இருந்த மகேஸ்வரியின் கண்கள் ஒரு மாதிரி பார்த்தன.

“ஏம்மா, இப்படி பார்க்கற. நான் என்ன தப்பா சொல்லிட்டேன். இனி, நமக்கு வேறு வழியில்லை மா. இது கூட நான் சொல்றது, என்னோட படிப்பு முடியற வரைக்கும் தான். அதுக்கப்பறம் நாம வேற வீடோ, இல்ல எனக்கு எங்க வேலை கிடைக்குதோ அங்க போயிடலாம்.” என்று மன்றாடினாள் அஞ்சலி.

“சரி அஞ்சலி. உன்னோட இஷ்டம். ஆனா, எனக்கு அங்க வர இஷ்டம் இல்ல. ஜானகி மேல இன்னும் எனக்கு நம்பிக்கை வரமாட்டிங்குது. நாம இப்போ இந்த நிலைமைக்கு வரக் காரணமே அவதான். உங்க அப்பாவ அன்னைக்கு உயிரோட சாகடிச்சா. அவர், இப்போ நம்மள இந்த நிலைமைல விட்டுட்டு போயிட்டார். அவளப் பார்க்கவே எனக்கு புடிக்கல. இதுல அவ கூட போய் இருக்கலாம்னு சொல்ற.” என்றாள் மகேஸ்வரி வரண்டு போன கட்டை குரலில்.

“அம்மா, அப்பா நம்மள விட்டுப் போகல. ஏதோ ஒரு ரூபத்தில கண்டிப்பா நம்ம கூட வாழ்ந்துட்டு தான் இருப்பார். என் படிப்பு முடிய இன்னும் ரெண்டரை வருஷம் ஆகும் மா. இப்போதைக்கு நாம பாட்டி வீட்டுக்கும் போக முடியாது. அதனால தான் சொல்றேன். என்னால இதுக்கு மேல யோசிக்க முடியல மா.” என்றவளைக் கட்டிக்கொண்டாள் மகேஸ்வரி.

“சரி அஞ்சலி மா. நான் உனக்காக மட்டும் தான் வரேன். அவ சொன்னதுக்காக இல்ல. எனக்கு இப்போ இருக்கற ஒரே சொந்தம் நீ மட்டும் தான். அப்பா, அம்மா, அண்ணன் எல்லாருமே இப்போ அந்நியமாயிட்டாங்க. இந்த உலகத்துல உன்ன மட்டும் தான் நம்பறேன்.” என்று அவளைப் பிடித்துக்கொண்டே அழுதாள்.

அம்மாவின் நிலையை நினைத்து இன்னும் அழுகை அதிகமானது. ஆனால், இப்போது தான் தைரியமாக இருக்க வேண்டும். அம்மாவின் ஒரே ஆறுதல் தான் தான். தானும் அழுது அம்மாவை இன்னும் கஷ்டப்படுத்தக் கூடாது என்று, வரும் அழுகையைக் கூட கஷ்டப்பட்டு அடக்கினாள்.

தன் அப்பாவின் படத்தைப் பார்த்தாள். “அப்பா, நீங்க இல்லாம எங்களால என்ன பண்ண முடியும்னு தெரியல. ஆனா, நீங்க தான் எங்களுக்கு வழிகாட்டியா இருக்கணும். அந்த தைரியத்துல தான் நான் அம்மாவ வேலூருக்கு கூட்டிட்டு போகப் போறேன். எங்கள கை விட்றாதிங்க பா.” என்று நினைத்தவாறு மகேஸ்வரியை ஆறுதல்படுத்தினாள்.

கணேசனுக்கு கொஞ்சம் கடன் இருந்தது. அவர்கள் இருந்த வீடு, ஒரு காலத்தில் கணேசனுடைய அப்பாவின் சொந்த வீடாக இருந்தாலும், மணிமேகலையின் திருமணத்தில் விற்றதால், அப்போதிலிருந்தே அந்த வீட்டில் குத்தகைக்குத் தான் இருந்தார்கள்.

குத்தகைக்கு கொடுத்திருந்த பணமும், அவருடைய பி.எஃப் பணமும் அந்தக் கடனை அடைக்கவே போதவில்லை. நகை சேமிப்பு பணமும் அன்று அம்சாவுக்காக செய்து விட்டார்கள். இப்போது அவர்களிடம் எதுவும் இல்லை.

மகேஸ்வரியின் கையில் இருந்த வளையல், மற்றும் அவள் அணிந்திருந்த கம்மலை வைத்து தான் மீதி கடனை அடைத்தனர். எதுவும் இல்லாமல் நிற்கதியாய் நிற்கும் நிலையை ஏன் ஆண்டவன் கொடுத்தான் என்று மனதிற்குள் நினைத்தாள் மகேஸ்வரி. அதைக் காணச் சகிக்காமல் தனக்குள்ளேயே அழுதாள் அஞ்சலி.

அடுத்து, அவருக்கு முப்பதாம் நாள் சாமி கும்பிட்டு விட்டு அதற்கு அடுத்த நாள் வேலூர் கிளம்ப ஏற்பாடு செய்தனர். அப்போது அனைவரும் வந்திருந்தனர். ஜானகி தனக்கு வேலை இருப்பதாய் சொல்லி வரவில்லை. அப்போதும் மகேஸ்வரி நினைத்தாள்.

சாமி கும்பிட்டு முடித்து அனைவரும் உணவருந்திச் சென்ற பிறகு, சதாசிவமும் சென்று விட்டார். அதுதான் சமயம் என்று மணிமேகலை அவர்களிடம் வந்தாள். சேலை மடிப்பில் எதையோ மறைத்து வைத்திருந்தவள், “மகேஸூ. இந்தா புடி.” என்று கொஞ்சம் பணத்தைத் திணித்தாள்.

“அண்ணி, என்ன இது. எனக்கு வேண்டாம்.” என்று திரும்ப கொடுக்க நினைத்தவளின் கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினாள் மணிமேகலை. “இதோ பாரு மகேஸூ. நீ அத பேசாம வை. இது உனக்கு கண்டிப்பா தேவைப்படும். உனக்காக இல்லைன்னாலும், அஞ்சலிக்கு வேணுமில்ல. தம்பி செய்யறதா நினைச்சுக்கோ மகேஸூ. ஏதோ என்னால முடிஞ்சது.” என்று கெஞ்சினாள்.

மகேஸ்வரி ஒன்றும் பேசவில்லை. தெய்வானையும், முருகப்பனும் வந்தனர். “அம்மாடி மகேஸூ. இந்தா, இந்தப் பணத்த வைச்சுக்கோ.” என்று அவர்களும் தந்தனர்.

அதை வாங்க மறுத்த மகேஸ்வரி, “அப்பா, என்ன எல்லாரும் ஆளாளுக்கு பணம் கொடுக்கறிங்க.? எனக்கு சங்கடமா இருக்கு.” என்று அழுதாள்.

“அய்யோ, மகேஸூ. ஏன் இப்படி சங்கடப்படற.? நாங்க யாரு.? உன்னப் பெத்த அம்மா, அப்பா தானே.? எங்க கிட்ட வாங்க உனக்கு என்ன சங்கடம்.? இது நாங்க, ஜானகிக்கும், அஞ்சலிக்கும் நாளைக்கு விசேஷம் வரும் போது செய்யறதுக்காக சேர்த்து வைச்ச பணம். ஜானகிக்கும் செய்ய முடியல. அஞ்சலிக்கு கல்யாணம் நடக்கறதுக்குள்ள எங்களுக்கு ஏதாவதுன்னா, எங்களால என்ன பண்ண முடியும் சொல்லு. அதனால தான் அத உன்கிட்ட இப்போ கொடுக்கறோம். இத பேன்க்ல டெபாசிட்டா போட்டு வை. பின்னாடி உதவும். அஞ்சலி படிப்புக்காகவாது இத நீ வாங்கித்தான் ஆகனும்.” என்று கையில் திணித்தார் முருகப்பன்.

“அப்பா, சொல்றாருல்ல. வாங்கிக்கோ மகேஸூ..” என்று தெய்வானையும் கெஞ்ச வேறு வழியில்லாமல் அதை வாங்கிக் கொண்டாள் மகேஸ்வரி.

“மகேஸூ, இனிதான் நீ தைரியமா இருக்கணும். அஞ்சலிக்காகவாது நீ சரியாகணும். ஏன்னா, இப்போ அவளுக்கு உன்ன விட்டா வேற யாரும் இல்ல. ஜானகிய எந்த விதத்துல நம்பறதுன்னு தெரியல. ஆனாலும், நீங்க போகணும்னு முடிவெடுத்துட்டிங்க. நல்லபடியா போயிட்டு வாங்க. எப்போ வேணும்னாலும் போன் பண்ணுங்க. அப்பப்போ ஊருக்கு வந்துட்டு போங்க.” என்றாள் மணிமேகலை.

இருவரும் தலையாட்டினர். எதுவும் பேச மனம் வரவில்லை. அவர்கள் கிளம்பினர். அடுத்த நாள் வேலூர் செல்ல அனைத்தையும் மனதே இல்லாமல் மூட்டை கட்டினர். விதியின் விளையாட்டில் இருவரும் ஆடிக் கொண்டிருந்தனர்.

(தொடரும்...)




 
Top