Aathirai
Active member
Episode 2
அஞ்சலியின் சொந்த ஊர் திருப்பத்தூர். அவளின் அப்பா கணேசன், அம்மா மகேஸ்வரி மற்றும் அக்கா ஜானகிதேவி. இதுதான் அவளின் அழகிய குடும்பம்.
கணேசனுக்கு ஒரே ஒரு அக்காள். கணேசன் பிறந்த போதே அவரது அன்னை இறந்துவிட்டாள். தாய்க்கு தாயாக இருந்து அவரை வளர்த்தது அவள் அக்கா மணிமேகலை தான். அவரை விட மூன்று வயது பெரியவள் தான் என்றாலும் அவரை நன்றாகப் பார்த்துக் கொண்டாள்.
அதனால் அக்காவின் மீது எப்பொழுதுமே கணேசனுக்கு தனி பாசம். தந்தை இருந்தபோதிலும் அவரிடம் அவ்வளவு கரிசனமாக இருக்க மாட்டார். ஏனென்றால், கணேசன் பிறந்ததும் தன் அன்பு மனைவி இறந்து விட்டாள் என்ற கோபத்தால் அவரை சரியாக கவனிக்கத் தவறினார்.
வேறொரு திருமணம் செய்ய மனமில்லாமல் மனைவியின் நினைவிலேயே வாழ்ந்தார். மணிமேகலைக்கு பதினெட்டு வயதானதும் சொந்தம் வழியாக சம்பந்தம் பார்த்து திருமணத்தை நடத்தினார்.
மணிமேகலை திருமணம் செய்து போனபோது கணேசன் குமுரி குமுரி அழுததை அந்த ஊரே வேடிக்கை பார்த்தது. அத்தான் சதாசிவமோ சரியான பணத்தாசை பிடித்தவர், கறார் பேர்வழி. அரசு உத்யோகம், தாசில்தார் அலுவலகத்தில் வேலை. போதுமான அளவு நல்ல சம்பளம், அவ்வப்போது கிம்பளம். இருந்தாலும், எப்பொழுதும் பணம் பணம் என்றே இருப்பார்.
அவரைப் பார்த்து பேச அவர்கள் பெற்றோரே பயப்படுவர். அந்த வீட்டில் அவர் வைத்தது தான் சட்டம் என நினைப்பார். அவர் செய்யும் எந்த ஒரு காரியத்திலும் சுயநலம் இருக்கும், தனக்கு அதனால் பிற்காலத்தில் பயன் இருக்குமா, இருக்காதா என அனைத்துமே யோசிப்பார்.
கல்யாண செலவுகள் பாதி, பாதியே என்றாலும் அதிக செலவு பெண் வீட்டாருக்கே. அதுமட்டுமில்லாமல், அரசு உத்யோகம் என்பதால் வசதியான இடத்துப் பெண் தான் வேண்டும் என்று சற்று கர்வத்துடன் இருந்தார். ஆனால், இவரின் குணம் தெரிந்தே யாரும் இவருக்கு பெண் தர மறுத்தனர்.
இதற்கிடையில், அவரது பெற்றோர் எப்படியோ சமாளித்து மணிமேகலையை இவருக்கு திருமணம் செய்து வைத்தனர். அவர் வீட்டிற்கு ஒரே பெண். இவர் ஒருவருக்கே அனைத்தும் செய்வர் என்று இதையெல்லாம் முதலில் தெரிந்த பிறகே அவர் திருமணத்திற்கு சம்மதித்தார்.
கணேசனின் அப்பா சம்பாதித்த அனைத்துமே மணிமேகலை திருமணத்தில் செலவானது. அதன் பிறகு அவளின் வளைகாப்பு மற்றும் குழந்தை பிறந்த போது, பிறகு காதுகுத்து என இதர சடங்குகளில் மீதி இருந்ததும் போனது. வீட்டை விற்க வேண்டிய சூழ்நிலை உருவானது. இதற்கிடையில் கணேசனின் அப்பாவும் இறந்து விட்டார்.
படிப்பும் இல்லாத கணேசனுக்கு அந்த ஊரில் இருந்த மில்லில் பியூன் வேலை மட்டுமே கிடைத்தது. கிடைத்த வேலையை செவ்வனே செய்தார் கணேசன். எதுவுமில்லாமல் இருப்பவனுக்கு யார் பெண் தருவார் என்று ஊரே கேலி செய்தது.
ஆனால் மாறாக, சதாசிவத்தின் தங்கை மகேஸ்வரி கணேசனை விரும்பினாள். மிகவும் நல்லவரான அவரின் குணம் அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இதற்கிடையில் வீட்டில் அவருக்கு சம்பந்தம் பார்க்க ஆரம்பித்தனர். மகேஸ்வரிக்கோ தான் கணேசனை விரும்புவதை எப்படி வீட்டில் தெரிவிப்பது என்ற குழப்பத்தில் இருந்தார். எப்படியாவது சொல்லித்தானே ஆக வேண்டும். இருவரும் சமையல்கட்டில் வேலையாக இருக்கும் போது தனது அண்ணியிடமே ஆரம்பித்தார்.
“அண்ணி.. உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். தப்பா நெனைக்க மாட்டிங்களே..?” என்று புதிர் போட்டாள் மகேஸ்வரி.
“சொல்லு மகேஸு.. என்ன சொல்லணும்..?” என்று குழப்பத்துடன் கேட்டார் மணிமேகலை.
“அது எப்படி சொல்றதுன்னு தெரியல.. ஆனா, இதுக்கு மேல இத சொல்லாம விட்டா என் வாழ்க்கை என்னாகுமோன்னு பயமா இருக்கு..” என்றாள்.
“என்னம்மா, ஏதேதோ சொல்ற. அப்படி என்ன உன் வாழ்க்கை பறிபோற விஷயம்.?” என்றாள் மணிமேகலை.
“நான், நான்... உங்க தம்பிய விரும்பறேன் அண்ணி.. அவர் இல்லாம என்னால வாழ முடியாது.. நீங்க தான் எப்படியாவது அண்ணாகிட்டயும், அப்பா, அம்மா கிட்டயும் பேசி சம்மதிக்க வைக்கணும்.. எனக்கு எப்படியாவது உதவி செய்யுங்க..” என்றாள் மகேஸ்வரி கெஞ்சலாக.
மணிமேகலை இதைக் கேட்டதும் அப்படியே சிலை போல் நின்றாள். அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதை நினைத்து சந்தோஷப்படவா, இல்லை வருத்தப்படவா என்று புரியாமல் நின்றார்..
மகேஸ்வரி அவரை உலுக்கினாள்.. “அண்ணி.. அண்ணி.. என்னாச்சு..? எதுவுமே பேசமாட்டிங்கறிங்க..?”
சுதாரித்த மணிமேகலை கூறினார்..“மகேஸு.. நீ சொன்னத நெனச்சு நான் ரொம்ப சந்தோஷப்படறேன்.. ஏன்னா, என் தம்பி ரொம்ப நல்லவன். செம்பே கலக்காத சுத்த தங்கம்.. அதனாலதான்., அவன எதுக்கும் உதவாதவனா எல்லாரும் பாக்கறாங்க.. அவனை யாருமே மதிக்கறதில்லை. இவனுக்கெல்லாம் யாரு பொண்ணு தருவாங்கன்னு அத்தையும், மாமாவுமே என் காதுபட பேசிருக்காங்க.. அப்படி இருக்கும் போது இது எப்படி சாத்தியமாகும்னு தெரியல.. இது எல்லாத்தையும் தாண்டி உங்க அண்ணன யோசிச்சு பாரு.. அவர் எப்படி சம்மதிப்பார்..? இதையெல்லாம் நெனச்சு தான் நான் வருத்தப்படறேன்..” என்றாள் சோகத்துடன்..
“அண்ணி.. எனக்கு என்ன பண்ணறதுன்னு தெரியல.. இப்போ எனக்கு இருக்கற ஒரே நம்பிக்கை நீங்க மட்டும் தான். நான் அண்ணாகிட்ட இதுவரைக்கும் ஒரு சின்ன விஷயம்னா கூட பேச பயப்படுவேன். அப்படி இருக்கும்போது இது எவ்வளவு பெரிய விஷயம்..! ரொம்ப பயமா இருக்கு..” என்று சொல்ல சொல்ல கண்களில் கண்ணீர் வந்துவிட்டது மகேஸ்வரிக்கு..
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென பாத்திரம் உருட்டும் சத்தம்.. திரும்பிப் பார்த்த இருவருக்கும் தூக்கிவாரிப் போட்டது. அங்கே, மகேஸ்வரியின் அம்மா தெய்வானை நின்றிருந்தார்.. அவர்கள் பேசிக்கொண்டிருந்த அனைத்தயும் கேட்டிருக்க வேண்டும்.
தடதடவென கோபத்தில் திரும்பிச் சென்றார்.. மணிமேகலையும், மகேஸ்வரியும் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றனர். சிறிது நேரத்திற்கெல்லாம் மகேஸ்வரியின் அப்பா முருகப்பன் அவளை அழைத்தார். மகேஸ்வரிக்கு கை,கால்கள் நடுங்கின. கூடவே மணிமேகலையையும் அழைத்தார். இருவரும் வந்து அவர் முன் நின்றனர். அருகில், தெய்வானை கோபத்தில் அமர்ந்திருந்தார்..
அவர்கள் இருவரையும் ஏற, இறங்க ஒரு பார்வை பார்த்துவிட்டு, “சமையல்கட்டில் ரெண்டு பேரும் என்ன பேசிட்டிருந்தாங்க.??” என்றார்..
“அதுவந்து.. மாமா.. மகேஸு..” என்று இழுத்தவரை தெய்வானை ஒரு முறை முறைத்துவிட்டு சொன்னாள்.
“ம்ம்.. சொல்லு. உன் தம்பிய என் பொண்ணு தலைல எப்படி கட்டி வைக்கறதுன்னு திட்டம் போட்ட கதைய உன் மாமாகிட்ட தைரியமா சொல்லு..” என்றாள் வாய்க்கு வந்தபடி..
“அய்யோ அத்தை.. அப்படியெல்லாம் எதுவும் இல்ல..” என்று பதறினாள் மணிமேகலை..
“அம்மா.. அண்ணிக்கு எதுவும் தெரியாது.. நான் தான் அவங்க தம்பிய விரும்பறேன். அதை தான் அண்ணிகிட்ட சொன்னேன். இது கணேசனுக்கு கூட தெரியாது. நீயா எதுவும் கற்பனை பண்ணி பேசாத..” என்றாள் மகேஸ்வரி சற்று கோபத்துடன்..
“ஏய்.. எடுபட்ட சிறுக்கி.. உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா அந்த வெட்டிப்பயல போய், விரும்பறேன்னு சொல்லுவ..? உன்னையெல்லாம்..” என்றபடி மகேஸ்வரியை அடிக்கவே சென்றுவிட்டாள் தெய்வானை.
மணிமேகலையும், முருகப்பனும் அவரைத் தடுத்தனர். பிடித்து இழுத்து அவரை உட்கார வைத்தனர். தெய்வானை தலையில் அடித்துக்கொண்டு அழுதார். மகேஸ்வரி அழுதுகொண்டே இருந்தாள்..
வீடே இரண்டு பட்டது.. “இரு இரு உங்க அண்ணன் வருவான்.. அப்பறம் இருக்கு உனக்கு சங்கதி..” என்று மிரட்டினாள் தெய்வானை.. அவர் சொல்லி வாயை மூடவில்லை. அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்தார் சதாசிவம்.
வீட்டில் எதோ நடந்திருப்பதை அவரால் உணரமுடிந்தது. என்ன நடந்தது என்பதைப் போல் மணிமேகலையைப் பார்த்தார் அவர்.. மணிமேகலைக்கு மயக்கம் வரும் போல் இருந்தது.
(தொடரும்...)