கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் - அத்தியாயம் 20

Aathirai

Active member
Episode 20

வேலூர் நகரம். நிறைய சிறப்பான இடங்களைத் தன்னுள் கொண்டுள்ள மாவட்டம். ஆனால், இந்த ஊர் இவர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்றுதான் தெரியவில்லை. முதலில் வரும் போது, மகேஸ்வரிக்கு கொஞ்சம் தயக்கம் இருக்கத்தான் செய்தது.

வீடு மாறி வருவதால் அன்று ஒரு நாள் மட்டும் கல்லூரிக்கு விடுப்பு எடுத்திருந்தாள் அஞ்சலி. பஸ் ஸ்டேண்டில் இருந்து ஆட்டோ பிடித்து, ஜானகி சொன்ன விலாசத்தைக் கேட்டு அங்கே பயணித்தனர்.

ஆட்டோக்காரர் வந்து அவர்கள் சொன்ன இடத்தில் வண்டியை நிறுத்தினார். அவர்கள் இறங்கிய இடத்தின் முன்பு ஒரு இரும்பு கேட் இருந்தது. அதனுள் பல வீடுகள் இருப்பதைப் போல் தெரிந்தது. இருவரும் கேட்டைத் திறந்து உள்ளே வந்தனர்.

கீழேயே மூன்று போர்ஷன்கள். மேலே, இரண்டு போர்ஷன்கள். இதில் எது ஜானகி குடியிருக்கும் வீடு என்று தெரியாமல் நின்றனர். அப்போது, கீழே இருக்கும் ஒரு வீட்டில் இருந்து ஒரு அம்மா வெளியே வந்தார். புதிதாய் இருவர் பையுடன் நிற்பதைப் பார்த்ததும், “யாரு மா.? யாரு வேணும்.?” என்றார்.

“இங்க ஜானகின்னு, டீச்சர் வீடு எதுங்க.?” என்றாள் அஞ்சலி.

“ஜானகியா.? அதோ அந்த வீடு தான்” என்று தனக்கு எதிரில் இருக்கும் பூட்டியிருந்த வீட்டைக் காட்டினார்.

“வீடு பூட்டியிக்கு. சாவி எதுவும் குடுத்துட்டு போனாங்களா.?” என்றாள் அஞ்சலி.

“இல்லையே மா. அவங்க ரெண்டு பேருமே, காலைல வீட்ட பூட்டிட்டு போனா, சாயங்காலமாயிடும் வரதுக்கு. எதுவும் சொல்லிட்டும் போகலையே. ஆமா, நீங்க ரெண்டு பேரும் யாரு.?” என்றார் அந்த அம்மா.

“நான் ஜானகியோட அம்மா, இது என் ரெண்டாவது பொண்ணு அஞ்சலி. ஜானகிகிட்ட இன்னைக்கு வரதா சொல்லிருந்தோமே.” என்றபடி யோசனையுடன் நின்றனர் இருவரும்.

“ஹூம்ம். இப்படியா யாராவது வரச் சொல்லிட்டு, வீட்ட பூட்டிக்கிட்டு போவாங்க. சாவியாவது குடுத்துட்டு போயிருந்தா பரவாயில்ல.” என்று அவரும் தன் பங்குக்கு பேசினார்.

இருவரும் செய்வதறியாது நிற்க, “அவங்க வர வரைக்கும், என் வீட்ல வந்து இருங்க.” என்றார்.

“இல்ல மா. பரவால்ல. எங்க பைகள மட்டும் உங்க வீட்ல வைச்சுட்டு போறோம். அத மட்டும் பாத்துக்கோங்க. நாங்க கொஞ்சம் கடை வரைக்கும் போக வேண்டியிருக்கு. அப்பறமா வேணும்னா வரோம்.” என்று அவரிடம் சொல்லி விட்டு இருவரும் வெளியே வந்தனர்.

அப்படியே அந்த வீதியில் இருந்து அடுத்த வீதிக்கு வந்த போது, அது சற்று கடைகள் நிறைந்த இடமாக இருந்தது. அதன், வளைவில் ஒரு சின்ன பிள்ளையார் கோவில். அங்கிருந்து சிறிது தூரத்தில் தான் பேருந்து நிறுத்துமிடம். சரியான இடத்தில் தான் வீடு பார்த்திருந்தாள் ஜானகி.

கடைகள் நிறைந்த தெருவில், மெஸ் ஒன்று இருந்தது. அங்கே சென்று சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர். மணி அப்போது 1 மணி தான் ஆகியிருந்தது. எங்கே செல்வது என்று யோசித்துக்கொண்டிருக்கையில் அஞ்சலி, வளைவில் இருந்த பிள்ளையார் கோவிலைப் பார்த்தாள். அங்கே செல்லலாம் என்று தோன்றியது. மகேஸ்வரியை அழைத்துக்கொண்டு போனாள்.

அது, பொதுவான கோவில் என்பதால் கேட் எதுவுமில்லாமல் திறந்த நிலையிலேயே இருந்தது. அங்கே, பிள்ளையார் அரச மர நிழலின் கீழே, நாகர் சகிதமாக இருந்து அருள்பாளித்துக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றியும், உட்கார வசதியாக திண்னை போல் கட்டப்பட்டு இருந்தது.

சாலையின் வெளியே இருந்து பார்த்தால் யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும். இருவரும் உள்ளே நுழைந்து பிள்ளையாரை வணங்கினர். மகேஸ்வரிக்கு, கணேசனின் நியாபகம் வந்தது. “எங்களைக் காப்பாற்று பிள்ளையாரப்பா, இவளுக்காக நான் வாழ வேண்டும்.” அழுது கொண்டே வேண்டினாள் மகேஸ்வரி.

அரசமர நிழலில், நல்ல காற்று வீசிக்கொண்டிருக்க, சிறிது நேரம் கண்ணயர்ந்தாள் மகேஸ்வரி. அஞ்சலி பிள்ளையாரைப் பார்த்தவாறே, எதை எதையோ யோசித்துக்கொண்டிருந்தாள். மணி 4 ஆனதே தெரியாமல் கோவிலிலேயே இருந்தவள், அப்போது தான் அதை கவனித்து, மகேஸ்வரியை எழுப்பினாள்.

நீண்ட நாட்களாக, தூங்காமல் இருந்த மகேஸ்வரி அப்போது தான் நன்றாக தூங்கி எழுந்தாள். “அம்மா, அக்கா ஒரு வேளை வந்திருக்கப் போறா, வா போலாம்.” என்றாள்.

இருவரும் அங்கே போன போது, அப்போதும் வீடு பூட்டியே இருந்தது. எதிர்த்த வீட்டு அம்மாவோ, “உங்க பொண்ணு வரதுக்கு 5 மணி ஆகும். அவங்க வீட்டுக்காரர் 7 மணிக்கு தான் வருவார். அதுவரைக்கும் இங்கயாவது வந்து இருங்க.” என்று திரும்பவும் அழைக்க, மேலும் அவரை சங்கடப்படுத்த வேண்டாம் என்று உள்ளே சென்றனர்.

அவரிடம் சிறிது நேரத்திலேயே வெகு இயல்பாக பேச ஆரம்பித்தனர். அவரும் நன்றாகப் பேசினார். அவரிடம் அனைத்து கதையையும் ஒரு கட்ட்த்தில் சொல்ல வேண்டியதானது. அதைக் கேட்டதும் அவருக்கு மிகவும் சங்கடமாகிப் போனது. அதற்குள், யாரோ கேட்டைத் திறக்கும் சத்தம் கேட்டது.

ஜானகி தான் வந்தாள். வரும் போதே, இவர்கள் இருவரும் அந்த அம்மாவின் வீட்டில் இருப்பதைப் பார்த்தவள், முகத்தைச் சுருக்கியவாறே அவள் வீட்டிற்குச் சென்று சாவியை எடுத்து பூட்டைத் திறந்தாள். அவர்களை வாங்க என்று கூட சொல்லவில்லை. அவர்களாகவே, அவரிடம் சொல்லி விட்டு பைகளை எடுத்துக்கொண்டு அவள் வீட்டில் நுழைந்தனர்.

“அக்கா, சாவிய பக்கத்து வீட்ல குடுத்துட்டு போயிருக்கலாமே.? நாங்க எவ்ளோ நேரமா உனக்காக காத்துட்டிருக்கோம் தெரியுமா.?” என்றாள் அஞ்சலி.

அவளை ஒரு முறை முறைத்தவள், “ம்ம். ஆமா, கண்டவங்ககிட்ட எல்லாம் சாவிய குடுத்துட்டு போயிட்டு, கடைசில ஏதாவது காணோம்னா என்ன பண்றது.? நீ வாங்கித் தருவியா.? இப்போ என்ன அதான் அங்க உட்கார்ந்து நாட்டு, நடப்பெல்லாம் பேசிட்டு தானே இருந்தீங்க. அப்பறம் என்ன.?” என்று திமிராகப் பேசிக்கொண்டே ஒரு துண்டை எடுத்துக்கொண்டு சென்றாள்.

அப்படி அங்கே எடுத்துச் செல்லும் அளவுக்கு எந்தப் பொருளும் இல்லை. ஒரு வேளை நகை, பணம் என்று இருந்தால் கூட எடுத்துச் செல்ல வாய்ப்பு உண்டு. ஆனால், அதற்கான அறிகுறி எதுவும் அங்கே தெரியவில்லை.

வந்ததும், வராததுமாக இப்படிப் பேசுகிறாளே, என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தனர். முகம் கழுவிக் கொண்டு வந்தவள், தான் வாங்கி வந்த பொருட்கள் அனைத்தையும் கொண்டு போய் சமையலறையில் வைத்தாள்.

நுழைந்தவள், பாத்திரங்களை தொடர்ந்து உருட்டிக் கொண்டே இருக்க, மகேஸ்வரி உள்ளே நுழைந்தாள். பால் பாக்கெட்டையும், அவள் கையில் இருந்த ஒரு பாத்திரத்தை வாங்கிக் கொண்டவள், “ஏன், இப்படி வந்ததுமே கோபப்படற.?” என்றாள் பாலைப் பிரித்து ஊற்றியவாறே.

“நான் நல்ல விதமா நடந்துக்கலாம்னா கூட, நீங்க தான் விடமாட்டிங்கறிங்க. எதுக்கு எதிர்க்க வீட்ல இருக்கறவங்ககிட்ட எல்லாம் பேசறிங்க.? இங்க யாரும் நீங்க நினைக்கற மாதிரி இல்ல. எல்லார்கிட்டயும் சும்மா போய் பேசிட்டு இருக்காதீங்க. வந்த இடத்துல எப்படி இருக்கணுமோ, அப்படி இருங்க.” என்று சற்று காட்டமாய் பேசினாள் ஜானகி.

“அப்படி நினைக்கறவ, சாவி குடுத்துட்டு போகணும். நாங்க வருவோம்னு நேத்தே போன்ல சொன்னோம் தானே.?” என்றாள் மகேஸ்வரி சற்று கோபமாக.

“உனக்கு வேற தனியா சொல்லணுமா, அவகிட்ட சொன்னதுதான். நாங்க இங்க இருக்கறவங்ககிட்ட அவ்வளவா வைச்சிக்கறதில்ல. காலைல போனா, சாயங்காலம் தான் வருவோம். எனக்கு யார் மேலயும் சாவி குடுத்துட்டு போற அளவுக்கு நம்பிக்கை இல்ல.” என்றாள்.

“ம்ம்.. ம்ம்.. சொன்னாங்க. சொன்னாங்க.” என்றாள் காபியை ஆற்றிக்கொண்டே.

கோபத்துடனே, அவள் நீட்டிய காபியை வாங்கியவள் நேரே வந்து சோபாவில் உட்கார்ந்தாள். பின்னாடியே வந்த மகேஸ்வரி அஞ்சலிக்கும் காபியைக் கொடுத்துவிட்டு, தானும் குடித்துக்கொண்டே கேட்டாள்.

“வீட்டுக்கு எந்தப் பொருளும் வாங்கிப் போடலையா.?” என்றார் வீட்டைச் சுற்றிப் பார்த்தவாறே. கேட்டவளை முறைத்தவள், “ஹூம்ம். எனக்கு அந்த அளவுக்கு வசதியில்ல. எங்க அம்மா, அப்பாவும் எதுவும் செய்யல. என்ன அநாதை மாதிரி என்னமோ பண்ணுன்னு விட்டுட்டாங்க. நான் ஒருத்தியும் என்ன பண்ண முடியும்.?” என்றாள் அவளைக் குத்திக்காட்டியவாறே.

அஞ்சலிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. மகேஸ்வரியோ, காபியை குடித்து முடித்து கீழே வைத்து விட்டு, தனது பர்சைத் திறந்து பணத்தை எடுத்தவள், அவளின் கையில் திணிக்க, ஜானகியோ அதிர்ச்சியாய் பார்த்தாள்.

“இதுல ஐம்பதாயிரம் பணம் இருக்கு. உன்னோட அப்பா, அம்மாக்கு எல்லாம் பண்ற அளவுக்கு வசதியில்ல. ஆனா, என்னோட அப்பா, அம்மாக்கு அந்த மனசு இருக்கு. அவங்க பேத்திகளுக்கு கல்யாணம் வந்தா பண்றதுக்காக வைச்சிருந்த பணம் தான் இது. உங்க ரெண்டு பேருக்கும் குடுத்தது. உன்னோட பங்க நீ எடுத்துக்கோ. அதே மாதிரி நாங்க இங்க தங்கறதுக்கு என்ன செலவாகுமோ, அத எடுத்துட்டு மீதிய அஞ்சலி பேர்ல பேங்கல அக்கவுண்ட்ல போட்டு வைச்சிடு. அந்தப் பொறுப்ப உன்கிட்டயே கொடுத்துட்டேன். ஏன்னா, எனக்கப்பறம் நீ தான் அவளுக்கு எல்லாம் செய்யணும்.” என்று அழுத்தமாகச் சொன்னாள் மகேஸ்வரி.

ஏனோ, எதுவும் சொல்லவில்லை ஜானகி. அதை வாங்கி வைத்துக்கொண்டாள். கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை அவள் வேலையை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் சொன்ன மற்றொரு சின்ன படுக்கையறையில் அவர்களை இருக்கச் சொன்னாள்.

அஞ்சலி, அந்த அறையில் சென்று கொண்டு வந்த துணிமணிகள், அவளின் புத்தகங்கள் அனைத்தையும் அடுக்கி வைத்தாள். அதே அறையில் இருந்த ஒரு ஆணியில் தன் அப்பாவின் படத்தை மாட்டினாள்.

திரும்பவும், மகேஸ்வரி தான் ஆரம்பித்தாள். “அவர் இன்னும் வரலையா.?” என்றாள்.

“அவர் வரதுக்கு 7 மணி ஆகும். அவருக்கு ராணிப்பேட்டைல நான் படிச்ச இன்ஸ்டியூட்ல தான் வேலை. அதனால, டெய்லியும் பஸ்ல போய் தான் வந்துட்டிருக்கார். அஞ்சலி படிக்கற கவர்மெண்ட் காலேஜ்க்கு தான் ட்ரை பண்ணிட்டிருக்கார். ஆனா, அதுக்கு கொஞ்சம் பணம் கேட்கறாங்க. அதனால தான், சரின்னு அங்கயே போயிட்டு வந்துட்டிருக்கார்.” என்று கவலையுடன் சொன்னாள்.

அந்தக் கவலையைப் பார்ப்பது மிக அரிது. ஒரு நாள் கூட இவர்களை நினைத்து இப்படி கவலைப்பட்டிருப்பாளா, என்றால் அது சந்தேகம் தான். மகேஸ்வரியின் எண்ணத்திலும் அது தான் ஓடிக்கொண்டிருந்தது.

“சரி, அவரோட பேர் என்ன.?” என்றாள் மகேஸ்வரி.

“ஹூம்ம்.. இப்போவாது அதத் தெரிஞ்சுக்கணும்னு தோணுச்சே.” என்று சலித்துக்கொண்டவள், “செல்வம்.” என்று சொல்லி முடிக்க, அப்போதே வீட்டினுள் நுழைந்தான் செல்வம்.

அவர்களைப் பார்த்ததும், “வாங்க.” என்று மரியாதை நிமித்தமாக சொன்னான். உள்ளே இருந்து வந்த அஞ்சலியைப் பார்த்து தலையாட்டினான். அவ்வளவுதான். அவர்களது அறைக்குச் சென்று விட்டான். “ஜானு..” என்று அவன் உள்ளிருந்து அழைக்க, உள்ளே ஓடினாள் ஜானகி.

அவள் தங்களிடம் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால், கட்டியவனிடம் அடங்கித்தானே ஆக வேண்டும் என்று நினைத்து சிரித்தவாறே, இரவு உணவைச் சமைக்க உள்ளே சென்றாள் மகேஸ்வரி.

அடுத்த நாளில் இருந்து எப்பொழுதும் போல கல்லூரிக்குச் செல்ல காலை 8 மணிக்கெல்லாம் தயாரானாள் அஞ்சலி. அதற்கு முன்னரே செல்வம் 7 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டிருந்தான்.

அதற்காகவே, ஜானகி 5 மணிக்கெல்லாம் எழுந்து சமைத்தாக வேண்டும். அவன் கிளம்பிய பிறகே, இவள் குளித்து முடித்து அனைத்தையும் எடுத்துக்கொண்டு பள்ளிக்கு 8.30 மணிக்கு கிளம்பிச் செல்வாள். ஆட்டோ ட்ரைவரிடம் பேசி வைத்திருந்தாள். பள்ளி அங்கிருந்து நாலைந்து தெரு தள்ளி தான் இருந்தது.

அதை அறியாமல், மகேஸ்வரி செல்வம் கிளம்பும் போதே எழுந்து வந்தாள். அவனை அனுப்பி வைத்து விட்டு வந்தவள், அவளை முறைத்துக்கொண்டே சென்றாள். அதைப் புரிந்து கொண்டவள், இனிமேல் நேரத்திலேயே எழுந்திருக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

அவர்கள் இருவரும் தயாராக உதவினாள் மகேஸ்வரி. அஞ்சலி பேருந்து நிறுத்துமிடத்திற்கு செல்லும் போது, வழியில் இருந்த பிள்ளையாரைக் கும்பிட்டு விட்டு, அங்கிருந்து நடந்து சென்று பஸ் ஏறி அவள் கல்லூரிக்குச் சென்றாள்.

அதன் பிறகு, சரியாக 8.30 மணிக்கு ஆட்டோ வர, ஜானகி கிளம்பிவிட்டாள். அதன் பிறகு, வீடே வெறிச்சோடிருந்தது. அதுவே, மகேஸ்வரிக்கு ஒரு மாதிரி ஆனது. அது தெரியாமல் இருக்க, மிச்சம் மீதி வேலைகள் அனைத்தையும் செய்து முடித்தாள். அப்படிச் செய்தும் அவளுக்கு நேரம் போகவில்லை.

அதற்குள், எதிர்த்த வீட்டு அம்மா வந்தார். அவரிடம் பேசிக்கொண்டிருந்தாள். சாயங்காலம் அவர் வீட்டுக்குச் சென்று மகேஸ்வரி பேசிக்கொண்டிருக்க, மாலை 5 மணி ஆனதும் ஜானகி வந்தாள். அவள் வரும் போது வீடு அப்படியே திறந்திருந்தது. அதைக் கண்டதும் அவளுக்கு கோபம், கோபமாக வந்தது. “அம்மா..” என்று கத்தினாள்.

அவளின் சத்தம் கேட்டு என்னவோ என்று ஓடி வந்தாள் மகேஸ்வரி. “என்னாச்சு. ஏன் இப்படி கத்தற,?” என்றாள்.

“உள்ள வா.” என்று ஆவேசமாக சொல்லிக்கொண்டு போனவள் பின்னேயே சென்றாள் மகேஸ்வரி.

“உனக்கு கொஞ்சமாவது ஏதாவது இருக்கா.? நான் நேத்தே என்ன சொன்னேன்.? அங்க போக வேண்டாம்னு சொன்னேன்ல. இப்படி வீட்ட திறந்து வைச்சிட்டு போயிருக்க. ஏதாவது காணோம்னா என்ன பண்றது.?” என்று கத்தினாள்.

“நான் ஒண்ணும் வேணும்னு அப்படியே திறந்து வைச்சுட்டு போகலடி. எதுக்கால தான இருக்கோம். அப்படியே எட்டிப் பாத்துக்கலாம்னு தான் இருந்தேன். நீ வரதுக்கு கொஞ்சம் முன்னாடி தான் போனேன்.” என்றாள் மகேஸ்வரி.

“நீ தயவு செய்து எதுவும் சொல்லாத. இனிமேல் நீ அங்க போகாத. அவ்ளோதான்.” என்று சொல்லிவிட்டு தன் கைப்பையை எறிந்து விட்டு உள்ளே போனாள் ஜானகி.

தனக்கென்று எதுவும் இல்லை என்றால், இந்நிலை தான் ஏற்படும் என்று நினைத்தவள், வரும் அழுகையைக் கூட அடக்கினாள்.

(தொடரும்...)
 
Top