கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் - அத்தியாயம் 21

Aathirai

Active member
Episode 21

அடுத்த நாள், மகேஸ்வரி 5 மணிக்கெல்லாம் எழுந்து அனைத்தையும் தயார் செய்தாள். வழக்கம்போல் செல்வமும், அஞ்சலியும் கிளம்பிய பின், மகேஸ்வரியிடம் வந்தாள் ஜானகி.

“அம்மா, இனிமேல் நான் வீட்டைப் பூட்டிட்டு போயிடலாம்னு இருக்கேன். நைட் அவர்கிட்ட இதப் பத்தி பேசினப்போ, அவர் என்னத் திட்டறார். உங்களால நான் திட்டு வாங்கறேன். அதனால தான் சொல்றேன்.” என்றவளை ஒரு கேள்விக்குறியுடன் பார்த்தாள் மகேஸ்வரி.

“நீ எங்கயாவது போயிட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்தாலும் சரி, இல்லன்னா, வீட்டுக்குள்ளயே இருந்தாலும் சரி. எனக்கு வீடு பத்திரமா இருக்கணும். நீ இங்க உன் இஷ்டத்துக்கு பண்ணிட்டு இருந்தா, அப்பறம் என்னால நிம்மதியா என் வேலைய பார்க்க முடியாது.” என்றாள் மனசாட்சியே இல்லாமல்.

அவள் சொல்லி முடிக்க, மகேஸ்வரியிடம் பார்வையைக் கூட பொருட்படுத்தாமல், கிளம்பத் தயாரானாள். கிளம்பி விட்டு வெளியே செல்லும் போது, மகேஸ்வரியை ஒரு பார்வை பார்த்தாள்.

அதைப் புரிந்தவளாய் மகேஸ்வரி, “எனக்கு வெளில போயி பார்த்துட்டு வர அளவுக்கு இந்த ஊர்ல யாரையும் தெரியாது. நான் வீட்லயே இருக்கேன். நீ பூட்டிட்டு போயிடு. இல்லன்னா, திருடன் வந்து எல்லாத்தையும் தூக்கிட்டு போயிடுவான்.” என்று மகேஸ்வரி சொன்னதும் அவளை முறைத்தவாறே, வீட்டினுள் அவளை வைத்து பூட்டிக்கொண்டு சென்றாள் அந்த ராட்சசி.

மகேஸ்வரிக்கு இதயம் கணத்துப் போனது. எதுவும் செய்யத் தோன்றவில்லை. தனது அறைக்குச் சென்றவள், கணேசனின் போட்டோவைப் பார்த்து அழுதாள். அவளால் அது மட்டுமே முடிந்தது.

அன்று வார விடுமுறை. ஜானகி, செல்வம் இருவரும் வெளியே சென்று விட, அஞ்சலி வீட்டில் இருந்த போது, எதற்கோ வெளியே வந்த மகேஸ்வரியிடம், “எங்க போயிருந்திங்க.? நான் பார்க்கும் போதெல்லாம் வீடு பூட்டியே இருக்கு.” என்று எதிர்த்த வீட்டு அம்மா கேட்டார்.

மகேஸ்வரி எதுவும் பேசாமல், உள்ளே சென்று விட்டாள். அந்த அம்மாவுக்கோ சங்கடமாகி விட்டது. அஞ்சலி பேச்சு சத்தம் கேட்டு வெளியே வந்தவள், அம்மா அமைதியாக வருகிறாளே என்று நினைத்து, உள்ளே வந்ததும் கேட்டாள்.

“ஏம்மா, அவங்ககிட்ட பேசாமயே வர.? அவங்க என்ன நினைப்பாங்க.?” என்றவளிடம் எதுவும் பதில் பேச முடியாமல் இருந்தாள் மகேஸ்வரி.

“மா. உன்னதான் கேக்கறேன். சொல்லு.” என்று அவளை உலுக்கினாள் அஞ்சலி.

அப்போது அழுகை தான் வந்தது மகேஸ்வரிக்கு. என்னவோ என்று பதறிய அஞ்சலி வற்புறுத்திக் கேட்க, நடந்த விஷயத்தைக் கூறினாள். அவளுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. ஜானகி வந்த பிறகே அஞ்சலி வருவதால் அவளுக்கு இந்த விஷயம் தெரியாமலேயே போனது.

அக்கா, இத்தனை கொடுமைக்காரியா, எப்படி தன் தாய் என்று கூட பாராமல் இதைச் செய்யத் துணிவு வந்தது.? இதுவரை அவள் எத்தனையோ விஷயங்களைச் செய்திருக்கிறாள். ஆனால், அப்போது கூட கோபம் வரவில்லை. இப்போதோ, அனைத்திற்கும் சேர்த்து வைத்தாற் போல் கோபம் கோபமாக வந்தது அஞ்சலிக்கு.

“ஏம்மா, இத என்கிட்ட அப்போவே சொல்ல வேண்டியது தானே.? ஏன் சொல்லாம விட்டே. அக்கா வரட்டும். நான் கேக்கறேன்” என்றாள் அழுதுகொண்டே.

“கேட்டு மட்டும் என்னாகப்போகுது.? நாம பிழைக்க நாதியில்லாம அவகிட்ட வந்துட்டோம். நம்மால எதுவும் பேச முடியாது, பேசவும் கூடாது.” என்றாள்.

“அதுக்காக அவ என்ன வேணும்னா பண்ணட்டும்னு, எல்லாத்தையும் பொறுத்துக்கணுமா.? ரொம்ப தப்பா தோணுது மா.” என்று யோசித்தவள், “அம்மா, இல்லன்னா நீ எங்கயாவது வேலைக்கு போறியா.? நான் வேணும்னா விசாரிக்கறேன். அக்கா கிளம்பும் போதே நீயும் கிளம்பிட்டா, உனக்கு அந்தளவுக்கு தெரியாதில்ல மா. இந்தக் கொடுமைக்கு அது பரவாலயா இருக்கும் மா. சொல்லு.” என்றாள்.

“ஹூம்ம். எனக்கு இந்த ஊர்ல யாரையும் தெரியாது. அதுவுமில்லாம, அந்த மாதிரி வேலைக்கெல்லாம் போய் எனக்கு பழக்கமில்லையே அஞ்சலி. போற இடத்துல, அங்க இருக்கறவங்க கிட்டல்லாம் பேச்சு வாங்க வேண்டியிருக்கும். வேண்டாம் நான் இங்கயே இருக்கேன். விடு.” என்று ஒரே முடிவாக பேசினாள். அதே போல், அவளிடம் எதுவும் கேட்க வேண்டாம் என்று மகேஸ்வரி சொன்னதால் அவளும் எதையும் கேட்கவில்லை.

இப்படியாக மாதங்கள் சென்றன. ஒவ்வொரு நாளும், நரக வேதனையாக உணர்ந்தாள் மகேஸ்வரி. தனிமையால், பித்துப் பிடித்ததைப் போல் ஆனாள். எதுவும் சாப்பிட மாட்டாள், சரியாக தூங்க மாட்டாள், அஞ்சலியிடம் கூட சரியாக பேசுவதில்லை.

அம்மாவின் நிலையை நினைத்து அவள் வருத்தப்படும் போதெல்லாம், மைதிலி தான் அவளுக்கு ஆறுதல் சொல்வாள். வேறு என்ன செய்ய முடியும்.?

அவளுக்கு அப்பொழுது முதல் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அனைத்து தேர்வுகளும் முடிந்த நிலையில், அன்று அஞ்சலிக்கு கடைசி தேர்வு. அவசரமாக கிளம்பிக்கொண்டிருந்தாள்.

அன்று மகேஸ்வரி ஏனோ எழுந்திரிக்கவில்லை. அதனால், அவளே எழுந்து சமைத்து, மீதி வேலைகளையும் செய்து விட்டு, மதிய உணவை பேக் செய்துவிட்டு, அவசர, அவசரமாய் சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது மகேஸ்வரியிடம் வந்தாள். அவளால் எழ முடியவில்லை எனத் தெரிந்து, அவளிடம் சொல்லி விட்டு கிளம்பினாள்.

பஸ்ஸைப் பிடிக்கும் அவசரத்திலும், பிள்ளையாரைப் பார்த்து, “இறைவா, எப்படியாவது எங்களுக்கு நல்ல வழியக் காட்டு. இன்னையோட எனக்கு எக்ஸாம் முடிஞ்சிடும். நாளைக்கு அம்மாவ ஊருக்காவது கூட்டிட்டு போகணும். அவங்க இப்படி கஷ்டப்படறதப் பார்க்க முடியல. நீ தான் எல்லாத்தையும் பாத்துக்கணும்.” என்று மனதார வேண்டிவிட்டு வெளியே வந்தவள் பஸ்ஸைப் பிடிக்க விரைந்தாள்.

ஜானகி எப்பொழுதும் போல கிளம்பியவள், அம்மா இன்னும் எழுந்திருக்காமல் படுத்துக்கொண்டே இருப்பதைப் பார்த்து அருகே வந்தாள். அதற்குள் ஆட்டோ வந்து விட, மகேஸ்வரி அவளை சைகையால் கிளம்பச் சொன்னாள். அவளும் எப்பொழுதும் போல வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினாள்.

அன்று தேர்வு முடிந்த கையுடன் வீடு வந்து சேர்ந்த போது வீடு பூட்டியிருப்பதைக் கண்டு அதிர்ந்தாள் அஞ்சலி. அப்போது எதிர்த்த வீட்டு அம்மா வந்தார்.

“அஞ்சலி, அம்மாக்கு உடம்பு சரியில்ல. ஜானகி ஜி.ஹெச்க்கு கூட்டிட்டு போயிருக்கா. நீ வந்ததும் உன்ன அங்க வரச் சொன்னா.” என்று தகவல் சொல்ல, பறந்தடித்துக் கொண்டு கிளம்பினாள் ஜி.ஹெச்சுக்கு.

அவசர, அவசரமாக அவர்கள் எங்கே என்று தேடிக்கொண்டு சென்றவள். ஓரிடத்தில் அக்கா மட்டும் தனியே நிற்பதைப் பார்த்தாள். அங்கே சென்ற போது, அது அவசர சிகிச்சைப் பிரிவு என்று தெரிந்தது. அவளுக்கு பக்கென்றானது.

ஜானகி ஒரு மாதிரி இருந்தாள். “என்னாச்சு கா. அம்மா எங்க.?” என்றவளைப் பார்த்தவள், “தெரியல, நான் வந்து பார்க்கும் போது, காலைல எப்படி படுத்திருந்தாங்களோ, அப்படியே இருந்தாங்க. நான் அவங்களத் தொட்டு பார்த்தேன், உடம்பு சில்லுன்னு இருந்தது. பேச்சு, மூச்சே காணோம். அதான், உடனே நான் வர ஆட்டோலயே ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்துட்டேன். உள்ள ட்ரீட்மெண்ட் போயிட்டிருக்கு.” என்றாள்.

அவளுக்கு பயம் அதிகமானது. அப்போது ஒரு நர்ஸ் அவர்களை உள்ளே அழைத்தாள். இருவரும் அவசரமாக உள்ளே செல்ல, அங்கே அம்மா, அப்படியே படுத்திருந்தாள்.

அருகில் இருந்த டாக்டர், “நாங்க ரொம்ப ட்ரை பண்ணோம் மா. முடியல. இறந்துட்டாங்க. நீங்க கொண்டு வரும் போதே, ரொம்ப கிரிட்டிக்கலா இருந்திருக்காங்க. பல்ஸ் ரொம்ப லோவா தான் இருந்தது. அவங்களுக்கு லோ பி.பி இருந்திருக்கு.” என்று அவர் சொன்னதும், அதிர்ச்சியில் உறைந்தனர் இருவரும்.

(தொடரும்...)

 
Top