கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் - அத்தியாயம் 22

Aathirai

Active member
Episode 22

உலகமே இருண்டது போல் ஆனது அஞ்சலிக்கு. ஒரே ஆதரவாய் இருந்த அம்மாவும் போய்விட்டாள். இனி தனக்கு யார்தான் ஆதரவு என்றிருந்தது அவளுக்கு. அழுது, அழுது சலித்துப்போனது.

ஊரில் உள்ள அனைவரும் வந்து சென்றனர். மணிமேகலை அவளை அழைத்துச் செல்வதாய் சொல்ல, ஜானகியோ மறுப்பு சொல்லவில்லை. ஆனால், சதாசிவம் அவளை முறைக்க, புரிந்தவளாய் அஞ்சலி வர மறுத்தாள். அவர்களும் வேறு வழியில்லாமல் விட்டுச் சென்றனர்.

அதன் பிறகு, அடுத்த செமஸ்டர் வந்து விட்டது. நல்ல பெர்செண்டேஜையும் பெற்றிருந்தாள் அஞ்சலி. எப்படியாவது, படிப்பை முடித்துவிட்டு அங்கிருந்து போய் விட வேண்டுமென்று முடிவெடுத்தாள். அந்த செமஸ்டர் ஃபீஸ் கட்ட வேண்டும். ஜானகியிடம் வந்தாள்.

“அக்கா, இந்த செமஸ்டர் ஃபீஸ் கட்டணும். பணம் வேணும்.” என்றவளைப் பார்த்து புருவத்தைச் சுருக்கியவள்.

“அத எதுக்கு என்கிட்ட கேக்கற.? நான் எப்படி குடுக்க முடியும்.? என்கிட்ட எதுவும் இல்ல.” என்றாள் அசால்ட்டாக.

“என்னக்கா சொல்ற.? அம்மா, அன்னைக்கு என்னோட பேர்ல டெபாசிட் பண்ணச் சொல்லி குடுத்தாங்கல்ல, அத தான் கேக்கறேன்.” என்றாள்.

“ஓ.. அப்படியே அவங்க சொத்த நம்ம பேர்ல எழுதி வைச்சிருந்தாங்க பாரு. அடிப்போடி, அதெல்லாம் அம்மா இறந்தப்போ எல்லா காரியமும் செய்ய சரியா போயிடுச்சு. இப்ப என் கைல எந்தக் காசும் இல்ல.” என்று அப்பட்டமாக பொய் சொன்னாள்.

அவளால் அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. அத்தனை பணத்தில் ஒரு சிறிய அளவைக் கூடவா தர இயலாது.? இப்படி ஏமாற்றுகிறாளே, என்று நினைத்தாள். பணம் கட்டவில்லை என்றால், படிப்பைத் தொடர இயலாது. என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.

அடுத்த நாள், கல்லூரியில் மைதிலியிடம் இதைப் பற்றி சொன்னாள். “ஏன் உங்கக்கா, இப்படிப் பண்றாங்க.? கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம, கேவலமா நடந்துக்கறாங்க.” என்றாள்.

“ஹூம்ம். அவளப் பத்தி பேசிப் பயனில்ல. இப்போ, என் யோசனையெல்லாம் எப்படி ஃபீஸ் கட்டப் போறேன்னு தான்.” என்று கவலையாக சொன்னவளிடம், “ஸாரி, அஞ்சலி. நாங்களே எங்க மாமா தயவுல வாழ்ந்துட்டிருக்கோம். இல்லன்னா கூட நான் ஏதாவது உதவி பண்ணுவேன். அதுக்கும் வழியில்லாம போச்சு.” என்று வருத்தப்பட்டாள் மைதிலி.

“பரவால்ல மைதிலி. எங்கக்காவே ஃபீல் பண்ணல. நீ அட்லீஸ்ட் சொல்றியே. அதுவே சந்தோஷம். நான் ஆஃபீஸ்ல போய்க் கேட்டுப் பார்க்கறேன்.” என்று சொல்லிவிட்டு மதிய உணவு இடைவேளையில் சென்றாள்.

ஃபீஸ் கட்ட டைம் கேட்கலாம் என்று சென்றவளுக்கு, இன்ப அதிர்ச்சி. அவள் பெயரில் ஏற்கனவே ஃபீஸ் கட்டியிருந்தது கேட்டு ஒரு பக்கம் சந்தோஷம், ஆனால் மறுபக்கம் யார் என்ற சந்தேகம். அவள் கேட்டுப் பார்த்தவரை, அவளுக்குத் தெரிந்து யாரும் இல்லை. மைதிலியிடம் சொன்னாள்.

“யாரோ புண்ணியவான் கட்டிட்டாங்க. விடு, இனி நீ நிம்மதியா படிக்கலாம்.” என்றாள். அவள் சொன்னதை ஒருபுறம் ஏற்றுக்கொண்டாலும், மறுபுறம் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

அன்று வழக்கம்போல், கல்லூரி முடிந்து வீடு திரும்பிய போது, அங்கே செல்வம், சில ஆண்கள் மற்றும் பெண்களுடன் சோபாவில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தாள். அருகில் ஜானகி நின்றுகொண்டிருந்தாள்.

இவளைப் பார்த்ததும், “அஞ்சலி, கை, கால் கழுவிட்டு, எல்லாருக்கும் காபி போட்டு எடுத்துட்டு வா.” என்று ஜானகி சொல்ல, என்னவென்று தெரியாமல் விழித்துக்கொண்டே அவள் சொன்னபடி காபி போட்டு எடுத்து வந்தாள்.

அனைவருக்கும் கொடுத்து விட்டு நின்றாள். அவர்கள் அனைவரும் அவளையே பார்த்துக்கொண்டு நின்றனர். அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது. அவர்கள் கிளம்பும் போது, “சீக்கிரமே நாள் பார்த்துட்டு சொல்றோம்.” என்று சொல்லிவிட்டு கிளம்பினர்.

அவர்களை வழியனுப்ப செல்வம் பின்னாலேயே சென்றான். அவர்கள் கிளம்பும் வரை காத்திருந்த அஞ்சலி அதன் பின்னே ஜானகியிடம் கேட்டாள். “அவங்கல்லாம் யாருக்கா.? எதுக்கு நாள் பாத்து சொல்றோம்னு சொல்லிட்டு போறாங்க.?” என்றாள்.

அவளைப் பார்த்தவாறே, “அவங்க உன்ன பொண்ணு பார்க்க வந்தாங்க. கல்யாணத்துக்கு நாள் பார்த்து சொல்றோம்னு சொல்லிட்டு போறாங்க.” என்றாள் ஜானகி.

அதிர்ச்சியில் உறைந்தவள், “எனக்கெதுக்கு இப்போ கல்யாணம்.? நான் உங்களக் கேட்டேனா கல்யாணம் பண்ணி வைங்கன்னு.?” என்றாள் கோபத்துடன்.

“ஏய். எதுக்கு இப்போ கோபப்படற.? உனக்கு அவங்க எவ்வளவு வசதியானவங்கன்னு தெரியுமா.? உன் மாமாவுக்கு தெரிஞ்சவங்க தான். எதுவும் விசாரிக்கவும் தேவையில்ல. உன்ன போட்டோல பார்த்தே ரொம்ப புடிச்சதுன்னு சொன்னாங்க. அதான் நேர்ல வந்து பார்த்துட்டு போறாங்க.” என்றாள்.

“நான் இன்னும் படிப்பே முடிக்கல கா.” என்றாள்.

“ஆமா, அப்படியே படிச்சு பெரிய கலெக்டர் ஆகப்போற பாரு. போதும், நீ படிச்சது எல்லாம். ஒழுக்கமா கல்யாணம் பண்ணிட்டு குடித்தனம் நடத்தப் பாரு.” என்றாள்.

இனி இவளிடம் பேசிப் பயனில்லை என்று, அவர்கள் யார்.? என்ன.? என்ற தேடலில் இறங்கி, ஒரு வழியாக அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, துணைக்கு மைதிலியையும் அழைத்துக்கொண்டு சென்றாள்.

அதை வீடு என்று சொல்வதை விட, பெரிய பங்களா என்றே சொல்ல வேண்டும். கேட்டிற்கு முன்பு காவலாளி, யார்? என்று விசாரிக்க விஷயத்தைச் சொன்னதும் உள்ளே விட்டான்.

அங்கே செல்லும் போதே, முன்னே இருக்கும் கார்டனில் அனைவரும் அமர்ந்திருந்தனர். இவளைக் கண்டதும், “வாம்மா. என்ன கல்யாணப் பொண்ணு, தனியா இவ்ளோ தூரம் வந்திருக்க. அக்கா, மாமா வரலையா.?” என்றனர்.

“இல்லைங்க. அவங்களுக்கு நான் வந்தது தெரியாது. நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். எனக்கு இந்தக் கல்யாணத்துல எந்த விருப்பமும் கிடையாது. சொல்லப்போனா, எனக்கு இந்த விஷயத்தப் பத்தி அக்கா, மாமா எதுவுமே சொல்லல. நான் படிச்சு ஒரு நல்ல நிலைமைக்கு வரணும்னு நினைக்கிறேன். ப்ளீஸ். என்னைத் தப்பா நினைக்காதிங்க. எல்லாத்தையும் மறச்சுட்டு ஒரு பொய்யான வாழ்க்கைய வாழ முடியாது. அதான், உங்ககிட்ட பேசிப் புரிய வைக்கணும்னு வந்தேன்.” என்றாள் ஒரே மூச்சாக.

அவளது பேச்சு அவர்களை சற்று யோசிக்க வைத்தது. “பரவால்ல மா. எங்கள மதிச்சு எங்ககிட்ட முதல்லயே உன் விருப்பத்த சொன்னதே பெரிய விஷயம். உன் மாமாக்கு இங்க கவர்மெண்ட் காலேஜ்ல வேலை கிடைக்கணும்னு ரெகமெண்ட்டேஷன் கேட்டு வந்தார். எங்க பையனுக்கு ஒரு பிரச்சினையால டைவர்ஸ் ஆயிடுச்சு. ரெண்டாவது கல்யாணம் பண்ண நல்ல வரன் அமையலனு சொன்னதும், உன்னப் பத்தி சொன்னாரு. உனக்கும் விருப்பம்னு சொன்னாங்க. நல்லவேளை இத, கல்யாணம் வரைக்கும் கொண்டு போகல. எங்களுக்கு முழு மனசோட வர பொண்ணு தான் வேணும். இத, நாங்க பாத்துக்கறோம். நீ போயிட்டு வா.” என்று நல்லவிதமாகப் பேசி அனுப்பி வைத்தனர்.

பரவாயில்லை, சற்று நல்ல மனிதர்கள் போலும். “ஹூம்ம். பாரு அஞ்சலி. உன்ன ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ண பிளான் பண்ணிருக்காங்க. இத விடக்கூடாது.” என்று மைதிலி சொல்ல அவள் தீர்க்கமாய்த் தலையாட்டினாள்.

வீடு வந்து சேர்ந்த போது, வெளியில் அவளுடைய பைகள் அனைத்தும் இருந்தது. மைதிலியும் கூடவே வந்திருந்தாள். அவள் உள்ளே வந்தபோது, “ஏய். அங்கேயே நில்லு. எங்க ரெண்டு பேரையும் அவமானப்படுத்திட்ட இல்ல.? இதுக்கு மேல இந்த வீட்ல உனக்கு இடம் கிடையாது. வெளில போ.” என்றாள் ஜானகி, ஆவேசமாக.

அதைக் கேட்டு சிரித்த அஞ்சலி, “நீ என்ன சொல்றது. இனிமேல் உன்கூட சத்தியமா இருக்க மாட்டேன். எப்போ உன் சுயநலத்துக்காக என்னை ரெண்டாந்தாரமா கட்டி வைக்க நினைச்சியோ, அப்போவே நான் முடிவு பண்ணிட்டேன். அப்பாவும், அம்மாவும் மன வருத்தத்துல சாகறதுக்கு நீ தான் காரணம்னு தெரிஞ்சும், இவ்ளோ நாள் நீ பண்ண கொடுமையெல்லாத்தையும் தாங்கிக்கிட்டேன். ஆனா, நீயெல்லாம் என்னை என்ன வேணும்னாலும் பண்ணுவன்னு இப்போ தெரிஞ்சிடுச்சு. இனிமேலும் நான் அப்படியே இருக்க முட்டாள் கிடையாது. இனி ஜென்மத்துக்கும் உன்ன நான் பார்க்க மாட்டேன். நீயும் என் முன்னாடி வந்துடாதே.” என்று பட்டென்று கூறிவிட்டு அவள் பதிலையும் எதிர்பாராமல் வந்துவிட்டதோடு தன் கதையைக் கூறி முடித்தாள் அஞ்சலி.

அத்தனை நேரமும், அவள் கதையை பொறுமையாய்க் கேட்ட ஜீவா, “அப்பா, எவ்வளவு கஷ்டம்.? உங்க அக்காவ கடைசியா கேள்வி கேட்டிங்க பார்த்தீங்களா, சூப்பர். சரி, அதுக்கப்பறம் எப்படி நீங்க படிச்சீங்க.?” என்றான்.

“அது கடவுளுக்குத்தான் வெளிச்சம். யாரோ கட்டுன ஃபீஸ்ல டிகிரி முடிச்சேன். அப்பறம் ஐ.ஏ.எஸ் அகாடமில மைதிலி சேரும் போது எனக்கு கொஞ்சம் உதவி பண்ணா, அதை வைச்சுத்தான் என் வாழ்க்கையோட லட்சியத்த அடைஞ்சேன்.” என்றாள்.

“சரி, என்னோட கற்பனையக் கொஞ்சம் கோர்த்து விட்டிருக்கேன். கேக்கறீங்களா.?” என்றவன், அதைச் சொல்லக் கேட்டவள் அதிர்ந்தாள்.

(தொடரும்...)

 
Top