கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் - அத்தியாயம் 23(இறுதி)

Aathirai

Active member
Episode 23(Final)

அவன் சொன்ன கற்பனைக் கதையைக் கேட்ட அஞ்சலி, “ஜீவா, நீங்க சொல்றது நிஜமாலுமே உங்க கற்பனைனு என்னால நம்ப முடியல. உண்மையா நடந்ததா.? ப்ளீஸ் சொல்லுங்க.” என்று கெஞ்சியவளைப் பார்த்து, புதிராய் ஜீவா சிரித்துக்கொண்டிருக்க, அவனது செல்போன் மணி ஒலித்தது.

அதை எடுத்து பேசியவன், “ம்ம்.. இப்போ வந்தா கரெக்டா இருக்கும்.. வாங்க.” என்றான். இங்கே தனக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று நடக்கிறது என்பதை மட்டும் புரிந்துகொண்டாள் அஞ்சலி.

அவன் பேசி முடித்ததும் அஞ்சலியைப் பார்க்க, அவளோ இவனை முறைத்துக்கொண்டிருந்தாள். “நீங்க என்னங்க என்னை முறைக்கறிங்க. நான் என்ன பண்ணேன்.?” என்றவனிடம் எதுவும் பேசப் பிடிக்காமல், திரும்பி நின்றாள்.

அவள் திரும்பி நின்ற ஒரு நிமிடம், அவள் நின்றிருந்த இடம் இருளில் மூழ்கியது. அப்போது வரை அங்கே இருந்த சிறு வெளிச்சமும் காணாமல் போனது. “ஹே.. என்னாச்சு.? ஏன் இந்த இடம் இவ்ளோ இருட்டாயிடுச்சு. ஹலோ, ஜீவா நீங்க இருக்கிங்களா, இல்லையா.?” என்று அவள் கைகளாலேயே அவனைத் தேடினாள். ஆனால், அவன் தட்டுப்படவில்லை.

அந்தக் கடற்கரை ஓசை அவளை இன்னும் பயமுறுத்தியது. என்ன செய்வதென்று தெரியாமல், அவள் கண்களைத் தன் கரங்களைக் கொண்டு மூடியபடி நின்றாள்.

திடீரென்று ஒரு சத்தம், அதைக் கேட்டு கரங்களை விடுவித்து தன் அழகிய விழிகளை அஞ்சலி திறந்து பார்த்த போது, வானத்தில் வானவேடிக்கைகள், பல விதங்களில் வெடித்து “ஹேப்பி வேலண்டைன்ஸ் டே..” என்று கத்தியபடி கூச்சலிடும் சத்தம் கேட்டது.

காதலர்கள் பலர் தங்கள் காதலை வெளிப்படுத்தி கொண்டாடிக்கொண்டிருக்க, அந்த இடத்தில் உள்ள அனைத்து விளக்குகளும் எரிந்து இதய வடிவ அலங்கார விளக்குகள் மின்னியபடி அந்த இடத்தையே ரம்மியமாகக் காட்டியது.

அப்போதுதான், ஜீவாவிடம் பேசிக்கொண்டே அது காதலர் தின கொண்டாட்டத்திற்கான இடம் என்று தெரியாமலேயே வந்தது தெரிந்தது. மணி 12 ஆனதும், அங்கே கொண்டாட்டம் ஆரம்பமாயிருந்தது. அனைத்தையும் ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்தபடி நின்றுகொண்டிருந்தவள், அப்போது தான் தனக்கு முன் நின்றவனைப் பார்த்தாள். பார்த்தவளுக்கு திக்கென்றது.

அவனோ இவளருகில் வந்தான். அவள் கண்களை ஆழமாய்ப் பார்த்தவன், “ஹாய். அஞ்சலி. என்னைத் தெரியுதா.?” என்றான். அவனை ஒரு நிமிடம் நன்றாகப் பார்த்தவளுக்கு, இது அவன் தானென்று கண்டுபிடிக்க சில நிமிடங்களானது.

“நீ.. நீ.. இனியன் தானே.?” என்று அவள் திக்கிதிக்கி சொல்லும் அழகைக் கண்டு, அவன் இதழில் புன்னகை சிந்த அப்போது தான் அவனை நன்றாக தெரிந்துகொண்டாள்.

அது இனியனே தான். பத்தாம் வகுப்பில் அவளுடன் படித்தவன். அந்தப் பள்ளியில் அதிக மாணவிகளைத் தன் பின்னால் சுற்ற வைத்தவன். அழகன் என்ற திமிர் கொண்டவன். தமிழ் வாத்தியாரின் மகன் என்பதால், அடங்காமல் அனைத்து ஆசிரியர்களிடமும் திட்டு வாங்குபவன். தன் பெயரில் கொண்ட இனியன் என்ற சொல்லிற்கும், அவனுக்கும் சம்பந்தமே இல்லை என்று அஞ்சலியே பலமுறை சொன்னதுண்டு. இவை அனைத்தையும் மனதில் நினைத்துக்கொண்டிருந்தவளை அவள் கண்முன் சொடக்கு போட்டு நினைவுக்கு கொண்டுவந்தான் அவன்.

கண்ணைச் சிமிட்டிப் பார்த்தவள், “நீ எங்க இங்க.? உன்ன முதல்ல அடையாளமே தெரியல. உன் சிரிப்பப் பார்த்துதான் கண்டுபிடிச்சேன். அது இன்னும் எனக்கு நல்லா நியாபகம் இருக்கு.” என்று சொல்ல, அவன் திரும்பவும் சிரிக்க, இந்தச் சிரிப்பை வைத்து எத்தனை பேரை மயக்கியிருப்பான் என்று தோன்றியது.

“ஓ.. பரவாலையே என் சிரிப்புக்கு ஒரு ரசிகை இருக்கான்னு இன்னைக்கு தான் எனக்குத் தெரிஞ்சது. நான் உன்னப் பார்க்க தான் வந்தேன் அஞ்சலி.” என்றான் அவன்.

அவளோ விழிக்க, அவளின் தோள்பட்டையைத் தட்டியவாறு சிரித்துக்கொண்டே வந்து நின்றாள் மைதிலி. கூடவே வந்த அருணும், ஜீவாவும் இனியனின் இருபக்கமும் வந்து அவனைப் பிடித்துக்கொண்டு நிற்க, அவளுக்கு அப்போது தான் பொறி தட்டியது.

“அப்படின்னா, எனக்கு ஹெல்ப் பண்ணது நீ தானா.? உன்னப் பார்க்க தான் என்னை இவங்க வெயிட் பண்ண சொன்னாங்களா.? ஆனா, ஏன்.?” என்று அனைவரையும் பார்த்து கேட்க,

அவர்களோ, “அஞ்சலி, இன்னும் நீ தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு.” என்று புதிர் போட்டார்கள்.

“ஹையோ.. தயவுசெய்து எனக்கு யாராவது உண்மைய சொல்றிங்களா.? போதும் இந்த சஸ்பென்ஸ் எல்லாம்.” என்று சற்று எரிந்து விழ.

“ஏங்க, கூல் கூல்.. நான் என்ன சொன்னேன்.? உன்னுடைய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒருவன் உனக்கு பின்னாடி இருக்கான்னு சொன்னேன். நீ அது என்னோட கற்பனையா, இல்ல உண்மையான்னு கேட்ட தானே.? அது நிஜம் தான். அது இனியன் தான்.” என்றான் ஜீவா.

“நீ காலேஜ் படிக்கும் போது ஃபீஸ் கட்டினது, ஐ.ஏ.எஸ் அகாடமில சேர்ந்தப்போ கூட அவன் தான் ஃபீஸ் கட்டினான். அதுவும், அவனே சுயமா, சம்பாதிச்சு தான் கட்டினான். யார்கிட்டயும் வாங்கல. இது எனக்கு அப்போவே தெரியும்.” என்றாள் மைதிலி.

இவர்கள் சொல்லும் அனைத்தையும் கேட்ட அஞ்சலி, “ஆனா, இதெல்லாம் எதுக்கு பண்ணனும்.? நான் ஸ்கூல் படிக்கும் போது இவன் எந்தப் பொண்ணையுமே மதிக்க மாட்டான். அப்படி இருக்கும் போது என் மேல என்ன தனியா அக்கறை.?” என்றாள்.

“ஏன்னா அவன் உன்ன லவ் பண்றான் அஞ்சலி. சும்மா சொல்றேன்னு நினைக்காத, எல்லாரும் பார்த்து பொறாமைப்படற அளவுக்கு ரொம்ப சின்சியரான லவ். ” என்றாள் மைதிலி.

“ஆமாங்க, இவன் லவ் பண்றதப் பார்த்தே, நான் ஒரு பொண்ண லவ் பண்ண ஆரம்பிச்சேன்னா பாருங்களேன். என் லவ்வர் அப்படியே அசல் உங்கள மாதிரியே இருப்பா. அதனால தான் இவங்க ரெண்டு பேர் கூட லவ்வர்ஸ் மாதிரி இருக்குன்னு கிண்டல் பண்ணாங்க. நானும் விளையாட்டுக்குத் தான் உங்ககிட்ட அப்படி நடந்துகிட்டேன். ஸாரி.” என்றான் ஜீவா.

“நீ இருந்த இடத்துல எல்லாமே அவன் இருந்தான். ஆனா, உனக்கு அது தெரியாது. நீ காலேஜ்ல நிம்மதியா படிக்கக் காரணமே இவன் தான். காலேஜ்ல உன் பின்னாடி சுத்தி வந்த ரெண்டு பேர பின்னி பெடலெடுத்துட்டான் தெரியுமா.? சும்மாவா கராத்தேல பிளாக் பெல்ட் வாங்கிருக்கான்ல.” என்றான் அருண். ”

“ஆனா, இதெல்லாம் ஏன் தெரியாம பண்ணனும்.? அதுக்கு என்ன அவசியம்.? ” என்றாள் அஞ்சலி.

“ஏய். நீ என்ன ஏதோ லாயர் மாதிரி கேள்வி கேட்டுட்டிருக்க.? நாங்கல்லாம் இவ்ளோ தூரம் சொல்றோம், ஏதோ நம்பிக்கை இல்லாத மாதிரி பேசற.” என்று மைதிலி எரிந்து விழ, அஞ்சலி மௌனமானாள்.

“மைதிலி, அவ ஏன் அப்படி கேக்கறான்னு எனக்குத் தெரியும்.” என்றான் இனியன்.

“அப்படியா மச்சான். என்ன.?” என்று அருண் அவன் தோள் மேல் கை போட்டு கேட்க, அதை எடுத்து விட்டவன்,

“டேய், புரிஞ்சுக்கோங்க டா, அவகிட்ட நான் கொஞ்சம் பேசணும். இவ்ளோநேரமும் நீங்க தானடா பேசிட்டிருந்திங்க, போங்கடா.” என்று கெஞ்ச

“ஆமாடா அருண், பாவம் கிளைமேக்ஸ் வந்துதான் ஹீரோக்கு சான்ஸே கிடைச்சிருக்கு. அதையும் நாம கெடுக்கக் கூடாது. வா போலாம் ” என்று அவனை இழுத்துக்கொண்டு போக, அவர்களைப் பார்த்து கண்ணடித்து சிரித்துக்கொண்டே அவர்கள் பின்னால் சென்றாள் மைதிலி.

அவர்கள் போன பின், “இவங்கள எப்படி உனக்கு தெரியும்?” என்றாள் சந்தேகத்துடன்

“அப்பறம் ஒரே காலேஜா இருந்ததுட்டு, எப்படி தெரியாம போகும்.” என்றவனை ஆச்சர்யமாய் பார்த்தாள்.

“ம்ம். ஆமா, பி. ஏ பொலிடிகல் சயின்ஸ். நான், அருண், ஜீவா எல்லாரும்.” என்றான்.

“நீ பொண்ணுங்க பக்கமே போகமாட்டியே. அப்பறம் எப்படி என் மேல லவ்? நம்பற மாதிரி இல்லையே”

“அது, நாம டென்த் படிக்கும் போது, ஒரு நாள் எக்ஸாம் முன்னாடி நமக்கு மட்டும் மீட்டிங் வைச்சாங்களே தெரியுமா?” அப்போ, நம்ம எல்லார்கிட்டயும் ஒரே கேள்வி, நீங்க என்ன ஆகணும்னு நினைக்கறீங்க, ஏன்னு.? அப்போ நீ சொன்னயே “எந்த ஒரு வேலைய நாம செஞ்சாலும், அதுல மத்தவங்களுக்கு நம்ம மேல ஒரு மரியாதை, நம்பிக்கை, சந்தோஷம், மனத்திருப்தி வருதோ, அதுதான் உண்மையான வேலை. அப்படிப்பட்ட வேலைய ஒரு அதிகாரத்தின் மூலமா செய்யணும். அதனால, நான் ஒரு கலெக்டராகனும்னு நினைக்கிறேன்னு சொல்லி முடிக்கும் போது, அந்த அரங்கமே உனக்கு கை தட்டுச்சு. அதுவரைக்கும் எந்த ஒரு பொண்ணையும், மதிக்காதவன் உனக்கு அடிபணிஞ்சேன். வாத்தியாரான என் அப்பா பேச்சைக் கேட்காதவன், நீ சொன்ன ஒரு வார்த்தைக்கு கட்டுப்பட்டேன். நீ சொன்ன அதே அதிகாரத்துடன் வேலை செய்யணும்னு அதுக்கு நிகரான துறைய தேர்ந்தெடுத்தேன். இப்போ, நான் ஒரு ஐ.பி.எஸ் ஆஃபீஸர் ஆஃப் காஞ்சிபுரம் டிஸ்ட்ரிக்ட். உனக்கு மட்டும் காவலனா இருக்கணும்னு நினைச்ச என்னை ஊருக்கே காவலனா ஆக்கிட்ட. அந்தப் பெருமை உனக்கே சேரும்.” என்று அவன் ஒரே மூச்சில் சொல்லி முடிக்க, ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்றாள் அஞ்சலி.

எதுவும் பேசாமல் மௌனமாய் தலை குனிந்து நின்றவளிடம் நெருங்கி வந்தான் இனியன். வந்தவன், அவள் இரு கைகளையும், தன் கைகளால் பற்றிக்கொண்டு அவன் மார்பினில் வைத்துக்கொண்டு சொன்னான், “இதோ பாரு அஞ்சலி, நீ ஏன் பயப்படறன்னு எனக்குத் தெரியும். வாழ்க்கைல உனக்கு ஏற்பட்ட முதல் காதல் ஏமாற்றம் தந்திருக்கலாம். ஆனா, அதுவே நிரந்தரம் இல்ல. அதுக்கு மருந்தா நான் உனக்கு காலம் பூராவும் இருப்பேன். நீ உலகத்துல அதிகமா, நேசிச்ச உன் அப்பா, அம்மாவுக்கு நிகரா உன்ன நேசிப்பேன். எத்தனையோ கஷ்டங்கள அனுபவிச்ச உனக்கு, இனி வாழ்க்கைல எப்பவும் சந்தோஷத்த மட்டுமே குடுக்கணும்னு நினைக்கறேன். என்னை ஏத்துப்பியா அஞ்சலி.” என்று அவன் இதயத்தில் கை வைத்து சொல்ல அவளின் கண்களில் கண்ணீர் கரகரவென வழிந்துகொண்டிருந்தது.

தனக்கென உலகத்தில் யாருமே இல்லை என நினைத்தவளுக்கு, யாதுமாகி நின்றவனை எப்படி மனம் ஏற்றுக்கொள்ளாமல் போகும். அவனிடம் பேச தியானியற்றவள், அவன் மார்பினில் தன் முகம் பதித்தாள் அஞ்சலி. அதுவே சம்மதம் என நினைத்தவன் அவளை ஒரு சேர அணைத்துக்கொண்டான் இனியன்.

இனி அஞ்சலியின் வாழ்வில் எல்லாம் இன்பமயம்...


(சுபம்)

 
Top