கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஆதிரையின் யாதுமாகி நின்றாய் - அத்தியாயம் 9

Aathirai

Active member
Episode 9

தன் கண்களை திடீரென்று மூடிய கைகளைத் தொட்டுப்பார்த்த அஞ்சலி அப்பொழுதே அதைக் கண்டுபிடித்துவிட்டாள். அந்தக் கைகளைப் பற்றியவாறே திரும்பினாள்.

“ஹே.. மைதிலி. அப்பா ஒரு வழியா வந்துட்டீங்களா., உங்களுக்காக வெயிட் பண்ணி, வெயிட் பண்ணி நான் டயர்ட் ஆயிட்டேன். ஹூம்ம்.. என்னால முடியலப்பா.” என்றாள் அஞ்சலி அவள் வந்த உற்சாகத்தில்.

“ம்ம்.. ஆனா, உன்னப் பார்த்தா டயர்ட் ஆன மாதிரி தெரியலையே. ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கா கனவுல மிதந்துட்டு இருக்கற மாதிரி தான தெரிஞ்சுது.. நான் வரது கூட தெரியாம நீ கனவுல இருந்த. சரின்னு அப்படியே நைஸா பின்பக்கமா வந்து உன் கண்ண மூடினேன்.” என்றாள் மைதிலி குறும்புத்தனமாய் கண்ணடித்துச் சிரித்தவாறே.

“ஹூம்ம்.. ஆமா, நீ சொன்னது மாதிரி நான் என்னோட பிளாஷ்பேக்குக்கே போய் வந்துட்டேன்” என்று செல்லமாகப் பேசினாள் அஞ்சலி.

“சாரிப்பா, நான் என்ன பண்ண முடியும் பயங்கர ட்ராபிக் ஓஎம்ஆர்ல. அதான், மாட்டிக்கிட்டோம். எப்படியோ ஒரு வழியா அந்த ட்ராபிக்ல இருந்து தப்பிச்சு வந்துட்டோம்.” என்று சலித்துக்கொண்டாள் மைதிலி.

“ஹூம்ம்.. ஒரு வழியா வந்து சேர்ந்தீங்களே. அதுவே போதும் பா.. சந்தோஷம்.. சரி, அருண் எங்க காணோம்.?” என்றவள் தன் கண்களாலேயே அருணைத் தேடினாள்.

“அவன் பைக்க பார்க் பண்ணிட்டு வரேன்னு சொன்னான். நீ என்ன பண்றியோன்னு தான் நான் முன்னாடி வந்தேன்.” என்றாள் மைதிலி.

அப்படியே, அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க அங்கே அருண் யாருடனோ பேசிக்கொண்டே வருவதைப் பார்த்தாள் அஞ்சலி. கூட வருபவனைப் பார்த்ததும் புருவத்தைச் சுருக்கியவள் ஒரே யோசனையானாள்.

ஏனென்றால், அவனை இதற்கு முன்பு எங்கேயோ பார்த்த ஞாபகம். எப்படியும் ஆறடி உயரம் இருப்பான். மாநிறத்திற்கும் கொஞ்சம் மேலான வண்ணம். திருமண விழாவிற்கு உடையணிந்து செல்வதைப் போல், நல்ல ரசனையுடன் உடையணிந்திருந்தான். பார்க்கும் போதே மற்றவர் மனதை கொள்ளை கொள்ளும் அளவிற்கு இருந்தான்.

அதெல்லாம் இருக்கட்டும், இவன் யார்.? எதற்க்காக வருகிறான்.? ஒருவேளை தனக்கு இவன் தான் உதவி செய்திருப்பானோ.? ஆனால், உதவி செய்யும் அளவிற்கு ஒன்றும் வயது மூத்தவனாகத் தெரியவில்லை. மொத்தத்தில் அவன் யார் என்ற கேள்வியுடனேயே அஞ்சலி அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

வருபவனும் அஞ்சலியைப் பார்த்துக் கொண்டே தான் வந்தான். அடர்ந்த நீல நிற புடவையில், அழகாய், பாந்தமாய்த் தெரியும் அவளை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்றே தோன்றும். அதைத் தான் அவனும் செய்தான்.

அவன் அருகில் வர வரத்தான், அவளுக்கு திடீரென்று கதிரேசனின் ஞாபகம் வந்தது. ஆம், அவன் பார்ப்பதற்குக் கொஞ்சம் கதிரேசன் போலவே இருந்தான். ஆனால் என்ன, அவன் கிராமத்து ஆள். அதுவே, நகரத்து மனிதனாக இருந்தால் எப்படி இருக்கும், அது போல் தெரிந்தான் இவன். ஆனால், இவன் கதிரேசனை விடவும் கொஞ்சம் மெருகேறி இருப்பதைப்போல் தெரிந்தான். அதனால் தான், தனக்கு எங்கேயோ பார்த்த நினைவாய் இருப்பதை உணர்ந்தாள் அஞ்சலி.

“ஹே அஞ்சலி.. என்னாச்சு.?” என்றாள் மைதிலி அவளை உலுக்கியவாறே. யோசனையில் இருந்தவள், அவள் உலுக்கிய பின்னரே நினைவுக்கு வந்தாள்.

“ஹாய்.. அஞ்சலி. சாரி மா.. ரொம்ப வெயிட் பண்ண வைச்சுட்டோமா.?” என்றான் அருண்.

“ம்ம்.. ரொம்ப அதிகமாவே வெயிட் பண்ண வைச்சுட்டிங்க.” என்றாள் அஞ்சலி புருவத்தைத் தூக்கியவாறு.

“என்னமா பண்றது.? நம்ம சென்னை ட்ராபிக் அப்படி. அதுவும், ஓ.எம்.ஆர்ல கேக்கவா வேணும்.? எப்படியோ அப்படி, இப்படின்னு சந்து, புந்துல புகுந்து வந்தோம். அதுவும் உனக்காகத்தான் தெரியுமா.?” என்றான் அருண் பாவமாய்.

“இந்த மைதிலியா, சீக்கிரம் போ, சீக்கிரம் போ.. அவ பாவம் ரொம்ப நேரம் வெயிட் பண்றான்னு ஒரே டார்ச்சர்.. அய்யோ, இங்க வரதுக்குள்ள எவ்வளவு கஷ்டம் தெரியுமா.?” என்றான் திரும்பவும் சலித்துக்கொண்டே..

உடனே, மைதிலி அருணை முறைத்தாள். இவர்கள் ஒருபுறம் பேசிக்கொண்டிருக்க வந்தவன் மட்டும் அஞ்சலியைப் பார்த்தவண்ணமே இருந்தான். அதை அவளும் கவனிக்காமல் இல்லை. ஆனால், ஏனோ அந்தப் பார்வையில் எந்த விஷமமும் இல்லை. எந்த ஒரு நபரையும் உறுத்தாத பார்வை. அது அவனின் தனித்திறமை போலும்.

பொறுமை இழந்தவள், “சரி.. இவங்க யாருன்னு சொல்லவே இல்லையே.?” என்று அவர்களைக் கேட்டே விட்டாள் அஞ்சலி.

“ஓ.. சாரி அஞ்சலி.. நாங்க பாட்டுக்கு பேசிட்டே இருக்கோம். இது ஜீவானந்தம். நாங்க எல்லாரும் ஜீவான்னு கூப்பிடுவோம். மைதிலியோட அத்தை பையன். நானும், இவனும் காலேஜ்ல இருந்து ரொம்ப க்ளோஸ். என்னோட திக் ஃப்ரெண்ட்” என்றான் அருண்.

“ஹாய்..” என்று தன் கைகளை அவளிடம் நீட்டி புன்னகைத்தான் அவன். அய்யோ, என்ன ஒரு அழகான புன்னகை. அதைப் பார்த்தால் எந்தப் பெண்ணும் அவனிடம் மயங்கி விடுவாள். ஆனால், அஞ்சலியோ தன் கரங்களை குவித்து “வணக்கம்” என்றாள்..

அவன் ஒரு மாதிரி பார்த்துவிட்டு கைகளைத் தன்னகத்தே கொண்டுசென்றான். அதை, அவள் உணர்ந்தவளாய் சிறு புன்னகை ஒன்றை மட்டுமே உதிர்த்தாள்.

அவன் திரும்பவும், “உங்களுக்கு வாழ்த்துக்கள்.” என்றான்.

புரியாமல் பார்த்தவளை மைதிலி தான் விளக்கினாள். “ம்ம்.. ஒண்ணும் இல்ல உன்னப்பத்தி சொன்னோம். நீ ஐ.ஏ.எஸ் ஆனதுக்கு வாழ்த்துக்கள் சொல்றான்.” என்றாள்.

“ஓ..அப்படியா.. தேங்க்ஸ்.. அப்போ.. எனக்கு ஹெல்ப் பண்ணவங்க யாரு.? இவங்க இல்லையா.?” என்றாள் அஞ்சலி.

“ம்ஹூம்ம்.. அஞ்சலி.. அது வேற பா.. அவங்க இன்னும் வரல. உன்ன, அவங்க கரெக்டா டான்னு நைட் 12 மணிக்கு மீட் பண்றதா சொல்லிருக்காங்க..” என்றாள் மைதிலி.

அவள் அப்படிச் சொன்னதும், தன் புருவத்தைத் தூக்கி, தலையை சாய்த்து, தன் இடது கையில் கட்டியிருந்த கைகடிகாரத்தைச் சரி செய்தவாறே, “ஏன், அப்போதான் நேரம், காலம் எல்லாம் நல்லா இருக்காமா.?” என்று ஒருவித பாவனையுடன் கேட்டாள் அஞ்சலி.

அவள் அப்படிக் கேட்பாள் என எதிர்பார்க்காத மூவரும் அவள் செய்ததைப் பார்த்து சிரித்தனர்.

“ஏய்.. நாங்க என்ன பண்றது.? அவங்க அப்படித்தான் சொன்னாங்க. அதுமட்டுமில்ல, உன்ன ஸ்பெஷல்லா கவனிக்கனும்னு வேற சொல்லிருக்காங்க.. அவங்க உன் மேல காட்டுற அக்கறைய என்னன்னு சொல்றது.?” என்று கேலி செய்தான் அருண்.

அவன், கேலி செய்ததைப் பார்த்து தன் உதட்டைச் சுழித்து அவனை முறைத்தாள் அஞ்சலி.. அவள் செய்யும் ஒவ்வொன்றையும் அங்கே புதியவன் ரசித்துக் கொண்டிருந்தான்.

“சரி, சரி அவன ஏன் முறைக்கற.? அவன் சும்மா உன்ன கிண்டல் பண்றான். நிஜமாலுமே அவங்க அப்படித்தான் சொன்னாங்க. கண்டிப்பா 12 ஓ கிளாக் வந்துடுவாங்க. சரியா. அதுவரைக்கும் உனக்கு போர் அடிக்காம இருக்கணும்னு தான் நாங்க ஜீவாவ கூட்டிட்டு வந்தோம்.” என்று விளக்கமளித்தாள் மைதிலி.

ஆனால், அஞ்சலிக்குப் புரியவில்லை. “என்ன சொல்ல வர, எனக்கு என்ன போர் அடிக்கப் போகுது.?” என்று குழப்பத்துடன் கேட்டாள்.

“அது வந்து அஞ்சலி..” என்று அருண் ஆரம்பிக்க, புதியவனோ அவனைத் தடுத்தான்.

“நீங்க நான் எதுக்கு வந்தேன்னு தான ரொம்ப நேரமா யோசிச்சுட்டு இருக்கிங்க.?” என்று அவளைப் பார்த்துக் கேட்க.

அவளுக்கோ திக்கென்றது. தான் மனதில் நினைத்துக் கொண்டிருப்பதை இவன் எப்படி தெரிந்து கொண்டான் என யோசித்தாள். அவன் சொன்னதும் அதை ஆமோதிப்பதைப் போல் தலையாட்டினாள்.

“அஞ்சலி.. ஜீவா ஒரு ஸ்டோரி ரைட்டர். நீ இவனப்பத்தி கேள்விப்பட்டிருப்பியான்னு தெரியல. ஆனா, இப்போ ரெண்டு வருஷமா தான் நிறைய கதைகள் எழுதிருக்கான். நிறைய கதைகள் புக்ல பப்ளிஷ் ஆயிருக்கு. நல்லா வளர்ந்துட்டு வர ரைட்டர்ஸ்ல இவனும் ஒருத்தன்.” என மைதிலி அவனுக்குப் புகழாரம் சூட்ட, அவனோ எவ்வித சலனமும் இன்றி அவளைப் பார்த்தான்.

“அவனுக்கு அர்ஜெண்டா ஒரு கதை தேவைப்படுதாமா., எங்களுக்கு உன் நியாபகம் தான் வந்துச்சு. அதான், வாடான்னு கூட்டிட்டு வந்துட்டோம்.” என்றான் அருண்.

புரியாமல் தன் புருவத்தை சுருக்கியவள், “என்ன கதை.? எனக்கு ஒண்ணும் புரியல.” என்றாள் சந்தேகத்துடன்.

“எதையுமே தெளிவா சொல்ல மாட்டியா.? அவ முழிக்கறா பாரு..” என்றாள் மைதிலி. திரும்பவும் சொல்ல எத்தனித்தவளைத் தடுத்த ஜீவா அவனே சொல்ல ஆரம்பித்தான்.

“அது, ஒண்ணும் இல்லங்க. நான் ஒரு கான்டெஸ்ட்ல கலந்துக்கறேன். அதுல என்னன்னா, கதைக்கரு ஒரு சாமானியப் பெண் எப்படி வாழ்க்கையில சாதிச்சு, அசாதாரண நிலைக்கு வருகிறாள் என்பதுதான். அது நிஜமோ, கற்பனையோ ஆனா, அத முழுசா கதையா கொடுக்கணும். நானும் நிறைய யோசிச்சேன். ஆனா, எதுவுமே சரியா வரல. அதான், நிஜ கதைய எழுதுனா நல்லா இருக்கும்னு யோசிச்சேன். அப்போதான் அருணும், மைதிலியும் உங்களப் பத்தி சொன்னாங்க. நீங்க லைஃப்ல ரொம்ப கஷ்டப்பட்டு தான் இப்போ ஐ.ஏ.எஸ் ஆகிருக்கிங்கன்னு. அதான், உங்க ஸ்டோரியவே கதையா எழுதணும்னு முடிவு பண்ணேன்.” என்று முடித்தான் ஜீவா.

அவன் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தவள், இந்த அளவிற்கு அவன் பேசுவான் என அப்போதுதான் நினைத்தாள்.

“உங்க ஸ்டோரிய எழுதுறதுல உங்களுக்கு எந்த ப்ராப்ளமும் இல்லையே.?” என்றான் அவன்.

அவன் அப்படிக் கேட்கும் போது அதை அவளால் ஏனோ மறுக்க முடியவில்லை. “இல்ல.. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல.” என்றாள்.

“ஆனா, நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும். உங்க கதைய நீங்க தான் முழுசா சொல்லணும்.. அருணும், மைதிலியும் என்கிட்ட என்னதான் சொன்னாலும் அதெல்லாம் கொஞ்சம்னு தான் எனக்கு தோணுச்சு. அதனால, உங்க கோப்பரேஷன் இதுல எனக்கு ரொம்ப முக்கியம்.” என்றான் தீர்க்கமாக.

முதலில் யோசித்தவள், “சரி, நான் சொல்றேன்.” என்றாள்.

“நீங்க யோசிக்கறதப் பார்த்தா, எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. நீங்க ஒண்ணும் பயப்படவோ, தயக்கப்படவோ வேணாம். இவங்க ரெண்டு பேர்கிட்டயும் எப்படி ஃப்ரீயா பேசறிங்களோ, அதே மாதிரி என்கிட்டயும் பேசுங்க, உங்க கதைய சொல்லுங்க.. சரியா.” என்றான் ஒரு அழகான புன்னகையை உதிர்த்தவாறே..

அந்தப் புன்னகையில் எத்தனை ஒரு வசீகரம். அதை ரசித்தவள், சரியென்று தலையாட்டினாள்.

“ஜீவா, ஃபர்ஸ்ட் கேட்டப்போ நாங்களும் யோசிச்சோம். அதுக்கப்பறம் தான் ஓகேன்னு சொன்னோம். உடனே, உன்னப் பார்க்கணும்னு சொன்னான். அதான், சரின்னு கூட்டிட்டு வந்தோம்.” என்றாள் மைதிலி.

“நீங்க என்ன வேணும்னாலும் பண்ணுங்க. ஆனா, சாப்பிட்டதுக்கப்பறம் தான் எல்லாம். டின்னர் நமக்காக வெயிட்டிங் பா. இதுக்காக, மதியம் கூட நான் நிறைய சாப்பிடவே இல்ல தெரியுமா.?” என்றான் அருண் சாப்பிடும் இடத்தைப் பார்த்தவாறே.

அதைக் கேட்டு மூவரும் சிரித்தனர். “ஆமா, அஞ்சலி. நான் முன்னாடியே உன்கிட்ட சொன்னேன் இல்ல..” என்றாள் மைதிலி சிரித்தவாறே.

“ஹலோ சார். நீங்க ஒரு டிசிப்ளினான ஐ.பி.எஸ் நியாபகம் இருக்கா.?” என்றாள் அஞ்சலி.

“ஹூம்ம்.. சாப்பாடுன்னு வந்துட்டா, எனக்கு கடமையெல்லாம் அடுத்தது தான் அஞ்சலி.” என்றான் அருண் ஸ்டைலாக.

திரும்பவும் சிரிப்பலைகள். அதைக் கண்டுகொள்ளாதவன் போல், “நீ வாடா மச்சான் போலாம்.” என்று அருண், ஜீவாவின் தோள் மேல் கை போட்டவாறு இழுத்துக்கொண்டு சென்றான்.

செல்பவனோ, திரும்பி அஞ்சலியை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றான். அந்தப் பார்வையில் தான் ஆயிரம் அர்த்தங்கள். ஆனால், புரியாமல் நின்ற அஞ்சலிக்கோ அதன் அர்த்தம் விளங்கவே இல்லை.

(தொடரும்...)











 
Top